Friday, January 29, 2010

சுவிஸ் ஊடகவியலாளரை வெளியேற இலங்கை உத்தரவு.

சுவிஸ் DRS எனப்படும் வானொலியின் தென்கிழக்காசிய நாடுகளுக்கான விசேட நிருபர் Karin Wenger க்கு வழங்கப்பட்டிருந்த வீசாவை ரத்து செய்த இலங்கை அரசாங்கம் அவரை எதிர்வரும் திங்கட் கிழமை அல்லது அதற்கு முன்னர் நாட்டை விட்டு வெளியேறவேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் உள்ளூர் ஊடகவியலாளர்களின் சுதந்திரமான நடமாட்டத்திற்கு இலங்கை அரசினால் பங்கம் ஏற்படுத்தப்படுவதாக பல தரப்பாலும் குற்றச்சாட்டப்பட்டுள்ள நிலையில் இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவரது வீசா ரத்துச் செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ள குடிவரவு-குடியகல்வு பிரதான கட்டுப்பாட்டாளர் பி.வி. ஆபயகோன், வீசா ரத்துச் செய்யப்பட்டதற்கான காரணம் தனக்கு தெரியாது எனவும் அரச தகவல் திணைக்களத்தின் இயக்குனரிடமிருந்து கிடைக்கப்பெற்ற அறிவுறுத்தலுக்கமைய வீசா ரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

அத்துடன், இலங்கையில் ஊடகவியலாளர் மாநாடுகளில் கலந்து கொள்வதற்கும் , சுந்திரமான செய்தி சேகரிப்புக்கும் Karin Wenger க்கு வழங்கப்பட்டிருந்த அனுமதிப்பத்திரம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17ம் திகதி வரை செல்லுபடியானதாக இருந்தபோதிலும், அது உடனடியாக ரத்துச் செய்யப்பட்டு செல்லுபடியற்றதாக்கப்பட்டுள்ளது.

தற்போது டெல்லியில் நிலைகொண்டுள்ள Karin Wenger, தான் கடைசியாக கலந்து கொண்ட அரச உடகவியலாளர் மாநாடொன்றில் தொடுத்த சௌகரியமில்லாத கேள்விகளே தன்னை வெளியே தள்ளுவதற்கு காரணமாக அமைந்திருக்கும் என தெரிவித்துள்ளார். 30 வயதுடைய Karin Wenger தென்கிழக்காசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ஊடகத் துறையில் குறிப்பிடத்தக்க அனுபவம் கொண்டவராவார்.

குறிப்பிட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அவர், நடைபெற்று முடிந்துள்ள தேர்தலில் இடம்பெற்றதாக பேசப்படும் மோசடிகள் தொடர்பாக குடைந்தபோது, அமைச்சர் ஒருவரால் வெளிப்படையாகவே விமர்சிக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றது. இவ்வாறே இலங்கையில் தற்போது ஊடகவியலாளர் ஒருவர் காணாமல் போயும், சிலர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டும் உள்ளதுடன் , சில இணையத்தளங்களை ரெலிகொம் பாவனையாளர்கள் உபயோகிக்க முடியாதவாறு தடுத்தும் வைத்துள்ளனர்.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com