Saturday, January 30, 2010

அரசின் ரகசியங்களை வெளிவிடுவேன் : மிரட்டுகின்றார் பொன்சேகா.

அரசாங்கம் தன்னை சொந்தரவு செய்வதை நிறுத்த வேண்டும் என சவால் விடுத்துள்ள முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் பொன்சேகா தனக்கு ஏதாவது இடம்பெற்றால் அரசின் இரகசியங்களை வெளிவிடுவேன் என சற்று முன்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் எச்சரித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்ததில் இருந்து தன்னை தொந்தரவு செய்த அதிகாரிகளின் ஒழுங்கீனத்தை விபரமாக பதிவு செய்து வைத்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், மேலும் பேசுகையில்,

எனக்கு ஏதாவது நடக்குமாக இருந்தால் என்னை மிரட்டியவர்கள் தொடர்பான விபரங்கள், தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்து தொகுத்து வைத்துள்ளேன். என்னை கொலை செய்யும் நோக்குடன் எனது பாதுகாப்பு 91 இராணுவ அதிகாரிகளிலிருந்து நான்கு பொலிஸ் அதிகாரிகளாக குறைக்கப்பட்டுள்ளது. எனக்கு நெருக்கமான அதிகாரிகள் வேலையிலிருந்து விலத்தப்பட்டும், கைது செய்யப்பட்டும், தொந்துரவு செய்யப்பட்டும் வருகின்றனர். எனக்கு நெருக்கமானவர்களான இராணுவத்திலிருந்து முறைப்படி ஓய்வு பெற்ற 3 ஜெனரல்கள் , 3 பிரிகேடியர்கள் , 2 கேணல்கள் கைது செய்யப்பட்டள்ளனர். அவர்களில் ஒருவர் மீது லசந்த விக்ரமதுங்கவின் கொலையுடன் தொடர்புள்ளதாக எவ்விதத்திலும் சம்பந்திமில்லா பொய்குற்றச்சாட்டு சுமத்தப்படுகின்றது. எனது காரியாலயத்திலிருந்த இருபது பேரை கைது செய்து சிஐடி யினர் நேற்று நீதிமன்றில் நிறுத்தி விளக்கமறியலில் வைத்துள்ளனர். அத்துடன் காரியாலயத்திலிருந்த 23 கணனிகளை எடுத்துச் சென்றுள்ளனர். இன்று நாட்டில் சட்டம் ஒழுங்கும் நடைமுறையில் இல்லை. நீதிமன்றிலோ பொலிஸிலோ முறையிடமுடியாத நிலை உள்ளது. எவரும் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம். ஊடக சுதந்திரமில்லை. அனைவரும் தமது கடமைகளை ஒழுங்கா செய்ய முடியாதவாறு ஒருவிதமான அழுத்தத்தின் கீழே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்றார்.

நாட்டை விட்டு ஓடும் எண்ணம் உள்ளதா எனக்கேட்டபோது. நான் நாட்டை விட்டு ஓடமாட்டேன். பாதுகாப்புக்காக ஒழிக்கவேண்டிய கட்டாயம் இருந்தால் அது வேறு விதமானது. எதுவாக இருந்தாலும் நானோ எனது மனைவியோ , வெளிநாட்டில் படிக்கும் எனது மகள் மாரோ நாட்டுக்கு வெளியே செல்லாதாவாறு எமது கடவுச் சீட்டுக்கள் முடக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

ஹோட்டலில் இருந்து ஜனாதிபதியை கொல்ல சதிசெய்ததாக வெளியாகியுள்ள செய்தி தொடர்பாக கேட்கப்பட்டபோது, எதிர்கட்சித் தலைவரை அல்லது தன்னை கொல்ல திட்டம் தீட்டப்படுவதாக தகவல்கள் கிடைத்ததை அடுத்து பாதுகாப்புக்காக 20 அறைகளை எடுத்து குறிப்பிட்ட ஹோட்டலில் தங்கியிருந்தோம். ஆனால் இன்று கதைகள் வேறுவிதமாக திசை திருப்பப்பட்டுள்ளது. அவர்கள் கூறும் விடயங்களுக்கான எவ்வித ஆதாரங்களோ அடிப்படை காரணங்களோ அவர்களிடம் இல்லை எனவும் கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com