Saturday, January 30, 2010

பொன்னான மார்க்கத்துக்காகவும் மாற்று ஊடகத்தின் தேவைக்காகவும்........! சதா. ஜீ.

'கொhடியவர்கள் இழைக்கும் தீங்குகளிலும் பார்க்க, அவற்றை நல்ல மனிதர்கள் என்போர் அதிர்ச்சியூட்டுமளவிற்கு மௌனமாய் சகித்துக்கொண்டிருப்பது பற்றியே நாம் இந்தத் தலைமுறையில் வருந்தமுறவேண்டும்' – மார்டின் லூதர் கிங்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அமோகவெற்றி பெற்றிருக்கிறார். இதை ஆரூடம் கூறியது மாற்று இணையத்தளங்களும் அதேபோல சில மாற்று சிங்கள ஊடகங்களும்தான். பெரும்பான்மையான தமிழ் ஊடகங்களும் அதேபோல சிங்கள ஊடகங்களும் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் செயற்பட மறுத்திருந்தன.

'அறியாத குதிரையைவிட அறிந்த கழதை மேல்' என்பதை சில மெத்தப் படித்தவர்கள் அறிந்திருந்திருந்தும் 'ஊழல்' அரசாங்கத்தை அகற்றவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டிருந்தார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக ஜனாதிபதி மகிந்தவுக்கு எதிரான பிரதான போட்டியாளர்கள் மேற்குலகின் செல்லப்பிள்ளைகள் என்பதையும் நன்றாகவே அறிந்திருந்தார்கள். இருந்தாலும் இவர்களின் முயற்சி சுயநலத்துக்கானதாகவே அமைந்திருந்தது.

'இன்றைய மனிதன் சுயநலத்தின் கைகளில் ஒரு பொம்மலாட்டப் பதுமையாக மாறிப் போயிருக்கிறான். எதைக் கோரினாலும் அது தனது சுயநலத்துக்காகவே என மனிதன் வாழ்கிறான்' என்பது கூத்தமைப்பின் பிரதான பாடுபொருளாகவே இன்றுவரை திகழ்கிறது.

வர்க்கம் வர்க்கத்தோடு சேரும் என்பதற்கிணங்க நடந்துமுடிந்த தேர்தலில் சரத்பொன்சேகாவை கூத்தமைப்பு ஆதரித்தது. இது வெறும் 'அவருடன் (சரத்பொன்சேகா) நடத்திய பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட திருப்தியல்ல. சரத்தரப்பு வழங்கிய நன்கொடைகளுக்காகவும் வழங்கப்படவிருந்த கொடைகளுக்காகவும்தான்.

இதே நன்கொடையை மகிந்த தரப்பும் வழங்கும் என்பது ஒன்றும் பெரிய விடயமல்ல. ஆனால் அது வாழ்நாள் நன்கொடையாக இருக்காது. ஆனால் சரத்தரப்பினால் வழங்கப்படவிருந்த நன்கொடை அதாவது பதவியில் சரத் இருக்கும் வரை அனுபவிக்கக்கூடியது. எது எப்படியோ பிலாக்கொட்டை நழுவி நெருப்புக்குள்ள விழுந்த கதையாகிவிட்டது.

ஆனால் 'குரங்கும் பூனையும் பிலாக்கொட்டை சுட்ட' கதையாக கூத்தமைப்பு வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்களின் கைகளைச் சுட்டுகொண்டு பிலாக்கொட்டையை எடுத்துச் சுவைக்கத்தான் போகிறார்கள். இதையிந்த மாற்று தமிழ் அரசியல் கொம்பர்களால் தடுத்துநிறுத்திவிட முடியாது.

'பசித்திருப்பவனுக்கு மீனைக் கொடுப்பதிலும் பார்க்க மீனைப் பிடிக்க கற்றுக்கொடுப்பது மிகச் சிறந்தது' என்பது ஜப்பானிய பழமொழி. எனவே உழைப்பதற்கும் உணவை பெற்றுக்கொள்வதற்கும் வழிசொல்லவேண்டும். ஆனால் கூத்தமைப்பு அவனிடம் சென்று உனக்கு தன்மானம் இருக்குதா? நமக்கு தேவை சுதந்திரம், நம்மை நாமே ஆட்சிசெய்யும் அதிகாரம் அது இது என்று சொல்லி ஏற்கனவே பலநாள் பட்டினிகிடந்தவனை சாகடிப்பதே கூத்தமைப்பின் பணி. இதற்கு புலன் பெயர்ந்த விசிலடிச்சான் குஞ்சுகளும் பெரும்பாலான தமிழ் ஊடகங்களும் பக்கபலமாக இருந்திருக்கின்றன. இனியும் அது தொடரும்.

நடந்துமுடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் யாரை ஆதரிக்கவேண்டும் என்பதை துணிந்து சொல்லி அதற்கான சப்புக்கட்டுக்களை தமிழ் மக்கள் தலைகளில் கட்டுவதற்கு கூத்தமைப்பினால் மட்டுமே முடிந்திருக்கிறது. அதேபோல இந்த நூற்றாண்டிலும் உலகின் வேறு எந்த சமூகத்திலும் வேகாத 'பருப்பு' தமிழ் சமூகத்தில் மட்டுமே வேகியிருக்கிறது என்பதை நாம் மறுப்பதற்கில்லை. மறப்பதற்கும் இல்லை.

'தேசியவாதம் என்பது முழு மக்களையும் குறுகிய முன்னுதாரணங்களுக்காகப் பயிற்றுவிப்பதாகும். தேசியவாதத்தால் மக்களின் மனம் கவரப்பட்டால், மானிடப் பண்புகளின் சீரழிவையும் அறிவுமட்டத்தில் குருட்டுத் தன்மையையும் நோக்கி அவர்கள் தள்ளப்படுவார்கள். எதுவிதத் தடையுமின்றி இனவாதம் வளர்ச்சியுற்றால் மனித நாகரிகத்தின் நற்பண்புகளின் அடிப்படை எம்மை அறியாமலேயே மாற்றமடையும். சமூக உறுப்பினனான மனிதனின் முன்னுதாரணம் சுயநலமற்ற பொதுநல நோக்கேயாகும். ஆனால் தேசிய வாதத்தின் குறிக்கோள் ஒரு வர்க்கத்தின் குறிக்கோளைப்போன்றே சுயநலம் கொண்டதாகும்' என சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த மகாகவி ரவீந்திரநாத் தாகூர் கூறினார். இந்த நூற்றாண்டிலும் இந்தப் புரிதல் சில மரமண்டைகளுக்குப் பிடிபடவில்லை என்பதை என்னவென்று சொல்வது?

மறுபுறத்தே மாற்று அரசியல் தலைமைகளின் முந்திச் செல்வதற்கான ஓட்டம். கூட வருபவர்களின் கூட வரக்கூடியவர்களின் இருத்தலை உதைந்துதள்ளிய ஓட்டம். இவர்களுடைய அர்ப்பணிப்பும் செயற்பாடும் வரலாற்றில் குறிப்பிடக்கூடியதாக இருந்தும் அது பதியப்படுவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. கட்சியைக் கட்டிக்காப்பதிலும் வளர்த்தெடுப்பதிலும் இவர்கள்காட்டும் மும்மரம் மக்களை பகுத்தறிவாளர்களாகவாவது வளர்த்தெடுப்பதில் தவறிவிட்டன.

அதேபோல மாற்று அரசியல் சக்திகளும் முற்போக்கு சக்திகளுக்கும் மக்களை அரசியல் மயப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் கனிந்திருக்கிறது. நித்தம் நித்தம் கொலைகள் விழுந்த பூமியில் இன்று நன்விதை விதைக்கப்படவேண்டியிருக்கிறது. ஆனாலும் இதற்கான தயார்ப்படுத்தல்கள் எதுவும் நடைபெறுவதாக அறியமுடியவில்லை. இது மீண்டும் தேசியத்தை கொண்டாடுபவர்கள் 'இது முற்போக்கு தேசியம்' என்று கொட்டமடிப்பதற்கு வழிசமைத்துவிடும். இது மீண்டும் மானிடப் பண்புகளின் சீரழிவையும், அறிவுமட்டத்தில் குருட்டுத் தன்மையையும் நோக்கி மக்களை வழிநடத்திச் செல்லும். இதற்கான ஆயத்த நிலைகளிலேயே இன்றும் 'முற்போக்காணவர்கள்' என்று காட்டிக்கொள்ளும் சிலர் என்ஜிஓக்களின் துணையுடன் காத்திருக்கின்றனர்.

எமது தெரிவு இலட்சத்தின் தெரிவுகளல்ல. இலட்சியத்தின் தெரிவு. (வரித்துக்கொண்ட கொள்கைக்காக நாம் இழந்தது உயிர்களும் உடமைகளும் மட்டும்தானா?) அது ஒவ்வொருவரின் கொள்கை கோட்பாடுகளுடன் பொருந்திப்போகக்கூடியதல்ல. சில வேறுபாடுகள் சில ஏற்றத்தாழ்வுகள் இருக்கத்தான் செய்யும். ஆனால் ஒரே நேர்கோட்டுக்கு வரக்கூடியவர்கள். ஒருவரை ஒருவர் அரவணைத்து மக்களை முன்நோக்கித் தள்ளக்கூடியவர்கள். முன்னொரு காலத்தில் மக்களை அரசியல் மயப்படுத்த வேண்டும் என்று துடித்தவர்கள்தானே? இன்று ஏன் ஆளுக்கொரு திசையில் பயணிக்கின்றனர்? ஒருவேளை அரசியலை தனது ஜீவனோபாயமாக (Professional) கொள்வதினாலோ என்னவோ?

'மனிதனுடைய மதிப்பிட முடியாத இனிய உடமைகளில் சிறந்தது அவனது வாழ்வாகும். அவன் ஒரு தடவைதான் வாழ முடியும். காலம் முழவதையும் குறிக்கோள் இல்லாமல் பாழாகிவிட்டேனே என்ற துயரம் வதைப்பதற்கு இடமளிக்காத வகையில் அவன் சீராக வாழவேண்டும். அற்பனாக வாழ்ந்து இழிவு தேடினேன் என்ற அவமான உணர்ச்சி உள்ளத்தை எரிப்பதற்கு இடம் கொடுக்காத வகையில் அவன் நேராக வாழவேண்டும். உலகத்தின் தலைசிறந்த இலட்சியத்துக்காக – மனித குலத்தின் விடுதலைப் போராட்டம் ஒன்றின் பொன்னான மார்க்கத்துக்காக நான் என் வாழ்வு முழுவதையும் அர்ப்பணித்தேன் என்று இறக்கும் பொழுது உரிமை கோரும் வகையில் அவன் வாழ வேண்டும். திடீர் நோயோ – சோகவிபத்தோ வாழ்வுக்கு வெடிவைக்கக்கூடுமாதலால் மனிதன் தன் வாழ்வின் ஒவ்வொரு கணப்பொழுதையும் நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்' – ஆஸ்த்ரோவ்ஸ்கி.

மானிடப் பண்புகளின் சீரழிவைத் தடுக்கவும், அறிவு மட்டத்தில் குருட்டுத் தன்மையை நீக்கவும் நமக்கு ஊடகம் தேவை. அது கட்சி சார்ந்ததாகவோ தனிநபர் சார்ந்ததாகவோ இல்லாமல் நாமனைவரையும் சார்ந்ததாக ஊடகத்தின் தேவை அவசியமாகிறது. செய்திகளை செய்திகளாகவும் பகுத்தறிவுள்ள ஆக்கங்களையும் மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு நம்மிடம் எந்த தொடர்புசாதனமும் இல்லை.

ஏனெனில் அண்மையில் நடந்துமுடிந்த தேர்தல் பிரச்சாரத்தில் பெரும்பாலான தமிழ் ஊடகங்கள் 'சுயநலத்தை தூக்கிப்பிடித்த கூத்தமைப்பை 'தேசியம்' என்ற கோதாவில் தூக்கிப்பிடித்தன. அதுவே வடகிழக்குப் பகுதிகளிலுள்ள குக்கிரமங்கள்வரை சென்றடைந்தன.
'சுடுது மடியைப்பிடி' என்பதுபோல திடீரென பத்திரிகையையோ வானொலியையோ அல்லது தொலைக்காட்சியையோ தொடங்கி அடுத்து நடைபெறும் பொதுத் தேர்தலுக்குள் மக்களை ஓரே அணியின் கீழ் கொண்டுவந்துவிட வேண்டும் என்றால் அது முடியாத காரியம். அது எதிர்வினையையே ஏற்படுத்தும். எனவே தொலைநோக்கும், நீண்ட பயணமும், நேரியபார்வையும் கொண்டு நாம் செயற்படுவோமாயின் அந்த பொன்னான மார்க்கத்தை நாம் அடையமுடியும்.

நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் கூத்தமைப்பு மூன்றில் இரண்டு பெரும்பாண்மையைப் பெற்றுக்கொள்ளத்தான் போகிறது. பாராளுமன்றம் சென்று எமது எதிர்ப்பையும் நமது உரிமையையும் பற்றிப் பேசுவோம், போராடுவோம் என்று கதையளப்பார்கள். இது கதையல்ல நிஜம் என்று பெரும்பாலான தமிழ் ஊடகங்கள் ஊதத்தான் போகின்றன. இவர்கள் வயிறு கிழியக் கத்துவதெல்லாம் வெறும் 'கற்பிதம்' என்ற புரிதலே இல்லாமல் தமிழ் மக்களும் வாக்குகளை அள்ளிக்கொடுக்கத்தான் போகின்றார்கள்.

தற்போதைய நாடாளுமன்ற சபாநாயகர் லொக்குபண்டாராவை அன்று சபாநாயகராக்குவதற்கு கூத்தமைப்பின் 22 உறுப்பினர்களும் உறுதுணையாக இருந்தார்கள். இது தொடர்பாக புரட்சி 'வண்டி'க்காரன் சுரேஸ் பிரேமச்சந்திரனிடம் 'இடதுசாரியான டி. குணசேகராவை விட்டுவிட்டு இனவாதியான லொக்குபண்டாவை ஏன் ஆதரிக்கிறீர்கள்?' என்று கேட்டதற்கு, 'அரசாங்கத்துக்கு கடிவாளம் போடத்தான்' என்றார்.

ஆனால் அரசாங்கம் தங்குதடையின்றி கூத்தமைப்பு குறிப்பிடுகின்ற தமிழர்களுக்கெதிரான சட்டமூலங்கள் உட்பட சகல சட்டமூலங்களையும் நிறைவேற்றியே இதுவரை வந்திருக்கிறது. (இதேநபர் தான் தன்மகளின் மருத்துவ படிப்புக்காக இந்தியாவின் முன்னாள் மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணியின் அழைப்பு மணியை அடித்தார்) இதேநபர்கள்தான் வடகிழக்கிலுள்ள ஒரு தமிழ் குடிமகன் அமைச்சர் டக்கிளசையோ கருணாவையோ அணுகி அரசாங்க வேலையொன்றை பெற்றுவிடக்கூடாது. 'இது மனங்கெட்ட பிழைப்பு. உனக்குத் தேவை சுந்திரம், சுயகௌரவம் இன்னபிற' என்று எரியவிட்டு குளிர்காய்வார்கள்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா முன்வைத்த இனப்பிரச்சினைக்கான 'தீர்வுப் பொதி'யை இனவாத அரசியல் கட்சிகளான ஐ.தே.கட்சி, ஜே.வி.பி, சிங்கள உறுமய ஆகியவற்றுடன் நேர்கோட்டில் நின்று எதிர்தது என்பது வரலாறு. அவ்வாறு செய்தும் அதே மூஞ்சியுடன் தமிழ் மக்களிடம் வாக்குக் கேட்டு பாராளுமன்றம் தெரிவாகியிருக்கிறார்கள். மனச்சாட்சியுள்ள ஒரு சாதாரண மனிதன்கூட அன்று செய்தது தவறு என்றாவது ஒத்துக்கொள்வான். ஆனால் இவர்கள்? அவ்வாறான ஒரு பொன்னான சந்தர்ப்பத்தையே நாத்தியடித்தவர்களுக்கு இனிவரப்போகும் வாய்ப்புக்களை பிறங்காலால் உதைந்துவிட்டு விளக்கம் சொல்வதெல்லாம் 'சப் மேட்டர்'

'தவிட்டைத் தேடிப்போக சம்பா அரிசியை நாய் கொண்டுபோன கதையாக இருந்த அற்ப சுதந்திரமும் பறிபோய்விடுமோ?' இந்த கூத்தமைப்பு கூட்டங்களால் என்பதே எம்முள்ள மிகப்பெரும் சவால்.

'ஒன்றே குலம் ஒருவனே தேவனல்ல அனைவரும் தேவ'னென்று ஒரே குடையின் கீழ் மாற்று அரசியல் தலைமைகளும் முற்போக்கு அரசியல் சக்திகளும் ஒன்றிணைந்து, முன்னொரு காலத்தில் வடகிழக்கில் நிலவிய இடதுசாரி அரசியல் சக்திகளின் எழுச்சியை மீண்டும் துளிர்விட ஒன்றிணைந்து உழைக்கும் காலமிது.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com