Saturday, January 30, 2010

வேதாளம் முருங்கையில் எறியது : மேயர் சிவகீதா மட்டுநகரில் இருந்து தலைமறைவு.

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் மட்டக்களப்பு மாவட்ட முடிவுகள் வெளியாகிய மறுகணமே பிள்ளையானின் காட்டுமிராண்டித்தனம் மட்டுநகரில் கட்டவிழ்க்கப்பட்டுள்ளது. மட்டு மேயர் சிவகீதா இலக்கு வைக்கப்பட்டுள்ளார். மட்டுநகர் மாநகர சபை அலுவலகம், மேயரின் வீடு என்பன பிள்ளையானின் குழுவினரால் பெற்றோல் குண்டுகள் , கிரனேட்டுக்கள் கொண்டு தாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவருக்கு ஏற்பட்டுள்ள உயிரச்சுறுத்தல் காரணமாக அவர் தனது முழுக்குடும்பத்துடனும் மட்டக்களப்பு நகரிலிருந்து தலைமறைவாகி பிறமாவட்டம் ஒன்றில் ஒழிந்துவாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

மேற்படி தாக்குதல் சம்பவங்களானது பிள்ளையானின் நேரடி வழிநடத்தலிலே இடம்பெற்றுள்ளது. மட்டுநகர் மாநகர சபை அலுவலகமும் அவரது வீடும் மட்டக்களப்பு நகரின் மிகவும் பாதுகாப்பான பிரதேசங்களில், சுற்றிவர பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் சோதனைச் சாவடி அமைந்துள்ள பிரதேசத்திலேயே அமைந்துள்ளது. அத்துடன் தாக்குதலுக்குள்ளான மேயர் இல்லத்திற்கு பாதுகாப்பாக பொலிஸ் காவல்தடை போடப்பட்டுள்ளதுடன் 24 மணிநேரமும் அங்கு பொலிஸார் கடமையில் இருப்பர். அங்குவரும் வாகனங்கள் , ஆட்கள் சோதனையிடப்பட்டே உள்ளே அனுமதிப்படுவது வழமை.

தாக்குதல் நடாத்தப்பட்ட விதம் தொடர்பாக தெரியவருவதாவது, தாக்குதலை நடாத்தச் சென்றவர்கள் மேயர் இல்லத்திற்கு முன்னால் உள்ள பாதுகாப்புச் சோதனைச்சாவடிக்குச் சென்று முதலமைச்சர் வந்துள்ளதாக தெரிவித்தபோது, அங்கு வந்திருந்தவர்கள் முதலமைச்சரின் பாதுகாப்பு அதிகாரிகள் என பரிட்சயமானவர்களாகையால் பொலிஸார் பாதுகாப்பு கதவை திறந்து விட்டுள்ளனர். உள்ளே சென்ற வாகனத்திலிருந்து இறங்கிச் சென்ற பிள்ளையானின் சகாக்கள் மேயரின் அலுவலகக் கதவு மற்றும் யன்னல்களை உடைத்து அதனுள் பெற்றோல் குண்டுகளையும் வீசியதுடன் நேரே அவரது இல்லத்திற்கும் சென்று வீட்டினை கிரனேட்டுக்கள் கொண்டு தாக்கி சேதப்படுத்தியுள்ளனர்.

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் மட்டகளப்பு மாவட்டத்தில் ஜனாதிபதி மஹிந்தவிற்கு குறைந்த பட்ச வாக்குகளே அளிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சரான பிள்ளையான் , பிரபாகரனுக்கு அடுத்த தலைவர், கிழக்கு தமிழ் மக்களின் ஏகோபித்த தலைவர் என்றெல்லாம் போற்றப்படுகின்ற கருணா மற்றும் முஸ்லிம்களின் உன்னதமான தலைவர்கள் , அரசியலில் பழம்தின்று கொட்டை போட்டவர்கள் எனக் கூறப்படுகின்ற பலர் மட்டக்களப்பில் இராப்பகலாக மஹிந்த ராஜபக்சவிற்கு வாக்களியுங்கள் என்று தேர்தல் பிரச்சாரம் செய்தும் அங்கு மஹிந்தவிற்கு 55,663 வாக்குகளே கிடைக்கப்பெற்றுள்ளன. இவ்வாக்குகளில் 75 சதவீதமானவை முஸ்லிம் வாக்குகள் என நம்பகரமாக தெரியவருகின்றது. ஆக முதலமைச்சரும் பிரதி அமைச்சரும் இணைந்து தமது மாவட்டத்தில் 10000 வாக்குளையே பெற்றுள்ளனர்.

மக்கள் இவ்வாறு வாக்களித்ததற்கான காரணம் மஹிந்த மீதுள்ள வெறுப்போ அன்றில் சரத் பொன்சேகா மீதுள்ள நம்பிக்கையோ அல்ல. புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டு அவ்வியக்கத்தின் தலைவர் கொல்லப்பட்டபோது மக்கள் ஓர் நிம்மதிப்பெருமூச்சு விட்டிருந்தாலும் ஜனநாயக வழிக்கு திரும்பி விட்டோம் எனக் கூறுகின்ற தமிழ் ஆயுதக்குழுக்கள் மீதுள்ள அதிருப்தியே காரணமாகும். மஹிந்த ராஜபக்ச மேற்படி ஆயுக்குழுக்களை தன்னுடன் வைத்திருக்வரைக்கும் தமிழ் மக்களின் ஆதரவினை பெற்றுக்கொள்ள முடியாது என்பதை நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் எடுத்துக்கூறியுள்ளது. அதற்காக மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தமிழ் தேசியவாத பாசிசக் கொள்கையை ஏற்று , தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேண்டுதலுக்கமைய சரத்திற்கு வாக்களிக்கவில்லை. ஓட்டு மொத்தத்தில் தமிழ் ஆயுதாரிகளை விரட்டியடிப்பதற்காகவே சரத் பொன்சேகாவிற்கு வாக்களித்துள்ளனர்.

தேர்தல் முடிவுகளால் தமக்கு மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கு மஹிந்தவிற்கு தெரிந்துவிட்டது என ஆத்திரம் அடைந்த பிள்ளையான் தனது காட்டு மிராண்டித்தனத்தை காட்ட ஆரம்பித்துள்ளார். மாகாண சபை ஒன்றின் முதலமைச்சர் ஒருவர் தனது மாகாண சபையின் கீழ் உள்ள நகர சபைக்காரியாலயத்தை குண்டு வைத்துத் தகர்த்த சம்பவம் வரலாற்றில் முதற்தடவையாக இடம்பெற்றிருக்கின்றது. இத்தாக்குதலை நடாத்தச் சென்றவர்களை பிள்ளையானே வழிநாடாத்திச் சென்றதாகவும் அவரது வாகனத் தொடரணியுடன் வந்த வாகனங்களில் இரண்டு மேயர் காரியாலயத்திற்கு சென்றதாகவும் பிள்ளையான் வந்திருந்த கறுப்பு நிற வாகனம் தெருஓரத்தில் நின்றதாகவும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர்.

16 வருடங்கள் இயங்காமல் இருந்த மட்டு மாநகர சபை மட்டக்களப்பு வாழ் மக்களின் வரிப்பணத்தில் 40 லட்சம் செலவிடப்பட்டு புனரமைப்புச் செய்யப்பட்டு இயங்கு நிலைக்கு வந்தபோது இவ் அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் , கடந்த மாகாணசபை தேர்தல் முடிவுகளை எடுத்துக் கூறுகின்றது. மக்கள் அன்று எவ்வாறானதோர் அச்சுறுத்தலின் கீழ் வாக்களித்துள்ளார்கள் என்பதையும் அன்று வாக்களிப்பில் எவ்வாறான மோசடிகள் நிகழ்ந்துள்ளதென்பதையும் எடுத்துக் கூறுகின்றது. எனவே இனிமேலும் தாம் மக்களின் பிரதி நிதிகள் என பிதட்ட முடியாத முன்னாள் புலிகள் தமது பாசிப்போக்கை தமது ஜனநாயக மறுப்பு பாரம்பரியத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த முனைகின்றனர்.

தம்மை மக்களின் பிரதிநிதிகள் என கூறிக்கொண்டு அரச சௌகரியங்களை அனுபவித்துவரும் முன்னாள் புலிகள், எதிர்வரும் காலத்தில் தாம் அரசினாலும் மக்களாலும் விரட்டியடிக்கப்படுவோம் என்பதை உணர்ந்தவர்களாக வன்முறைகளை கையாள முற்படுகின்றனர். இவ்விடயத்தினை அரச தரப்பினர் சரியாக புரிந்து கொண்டு மக்கள் தீர்ப்பினை ஏற்று மேயர் சிவகீதாவின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தவேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
3 comments :

Unknown January 31, 2010 at 9:51 AM  

Pillayan meethu sollum aatharaththin nampahath thanmai palaweenamanathu......

iwwaraha orupakkam sarnthawarkalin aakkankalai seithikalaha pirasurikka ILANKAI NET munwarak koodathu....

Unknown January 31, 2010 at 9:56 AM  

Sivakeetha Pirabakaran awarkal katchi vittu katchi thavi thavi ippothu paivathatku KADALTHAN ULLATHU....

Pothuth therthalukku mun kadalil paiwathu nallathu....

Siva keethatha ilakuvil NANRI MARAPPAWAR pol therihirathu...

Unknown February 1, 2010 at 5:51 PM  

How much money get from the goverment???????????????

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com