Tuesday, December 29, 2009

மருமகனின் ஆயுதக் கொள்வனவு பற்றி விவாதம் நடத்த பொன்சேகாவுக்கு விமல் அறைகூவல்

சரத்பொன்சேகாவின் மருமகன் தாருக்க வெளிநாடுகளில் ஆயுதம் கொள்வனவு செய்து இலங்கைக்கு விற்பனை செய்தமை, இலங்கையிலும் வெளிநாடுகளிலும் அவர் வாங்கிய சொத்துக்கள், அவரது கம்பனி மற்றும் வங்கிக் கணக்கில் உள்ள பணம் ஆகியவை சம்பந்தமாக ஒரு வாரத்துக்குள் சரத்பொன்சேகாவோ அல்லது அவரது பிரநிதிகளோ நேரடி தொலைக்காட்சி விவாதத்துக்கு வருமாறு அழைக்கிறேன்.

அவ்வாறு வராவிட்டால் இவை பற்றிய சகல விபரங்களையும் ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்துவோம். என்று விமல் வீரவன்ச தெரிவித்தார்.

இந்த நாட்டில் வீண்விரயம், லஞ்சம், களவு இடம்பெறுவதாக சொல்லித்திரியும் சரத்பொன்சேகா இராணுவத் தளபதியாக இருந்து கொண்டு ஆயுதக் கொள்வனவில் சேர்த்த சொத்து க்களை பற்றி அரசு மக்களுக்கு வெளிப் படுத்தும். பத்தரமுல்லையில் உள்ள அவரது கட்சி தலைமையகத்தில் நேற்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் அங்கு கருத்துத் தெரிவிக்கையில்,

சரத் பொன்சேகாவை ஜனாதிபதி வேட்பாளர் என பிரேரித்தவர் ஜே.வி.பி. என்றும் இன்னொரு இடத்தில் ரணில் விக்கிரமசிங்க என்றும் கூறுகின்றனர். ஆனால் ரவூப் ஹக்கீம் சரத் பொன்சேகா முஸ்லிம் காங்கிரசின் வேட்பாளர் என்றும் அவரை பிரேரித்தது அவரது கட்சியே என்றும் அட்டாளைச்சேனையில் கடந்த வாரம் கூறியுள்ளார்.

சரத்பொன்சேகா சன்டே லீடர் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் வெள்ளைக் கொடி கொண்டுவரும்போது சுடும்படி பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்தார் எனச் சொல்லியிருந்தார். அடுத்த நாள் நான் அடிப்படிச் சொல்லவில்லை என மறுப்புத் தெரிவித்திருந்தார்.

ஆனால் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு இரத்தினபுரியில் நடைபெற்ற கூட்டத்தில் பாதுகாப்புச் செயலாளரே சுடும்படி உத்தரவு பிறப்பித்துள்ளதாக மீண்டும் தெரிவித்துள்ளார்.

இவரது உரை கடந்த 25 ஆம் திகதி தெரன தொலைக்காட்சியில் செய்தியின்போது ஒளிபரப்பப்பட்டது. இவ்வாறாக நாட்டைக் காட்டிக்கொடுப்பதற்கும் அமெரிக்க மற்றும் மேலைத்தேய நாடுகளுக்கும் நியாயபூர்வமாக யுத்தத்தை காட்டிக்கொடுக்கும் ஒப்பந்தத்துக்கும் மனோ, ஹக்கீம், ரணில், மங்கள, சோமவன்ச ஆகியோரின் நிகழ்ச்சி நிரல்களுக்கும் அவர் சோரம் போகியுள்ளார் என விமல் வீரவன்ச தெரிவித்தார்.

சரத்பொன்சேகா இராணுவத் தளபதியாக இருந்த சமயத்தில் சீன நாட்டுக்குச் சென்று 330 கோடி ரூபாவுக்கு ஆயுதம் கொள்வனவு செய்திருந்தார். பாதுகாப்புச் செயலாளர் யுத்தம் முடிவுற்றதும் பாகிஸ்தான், சீனா நாடுகளுக்கு ஆயுதம் கொள்வனவை நிறுத்தியிருந்தார். இதன் விளைவாகவே இந்தக் கப்பல் திருப்பியனுப்பப்பட்டது. சரத் பொன்சேகா மேற்கொண்ட இந்த ஆயுதக் கொள்வனவில் சீன அரசுக்கு 330 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று வீரவன்ச மேலும் கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com