வழக்குகள் தொடரப்படாதுள்ள கைதிகள் விடுவிக்க விசேட ஏற்பாடுகள். சட்டமாஅதிபர்
வழக்குகள் எதுவுமின்றிச் சிறைகளில் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ்க் கைதிகள் விரைவில் விடுதலை செய்யப்படவுள்ளதாக சட்ட மாஅதிபர் மொகான் பீரிஸ் தெரிவித்தார். இதற்காக விசேட நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார். வழக்குத் தொடரவேண்டிய அவசியம் இல்லாதவர்கள் நேரடியாக விடுதலை செய்யப்படுவார்கள் என்று தெரிவித்த சட்ட மாஅதிபர், இது தொடர்பில் பதினொரு சட்டத்தரணிகள் ஆராய்ந்து வருவதாகக் கூறினார்.
பெரும்பாலும் அடுத்தமாத முற்பகுதியில் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள் என்று சட்ட மாஅதிபர் நம்பிக்கை தெரிவித்தார்.
அவசரகாலச் சட்டம், பயங்கரவாதத் தடைச்சட்டம் என்பவற்றின் கீழ் கைதுசெய்யப்பட்ட வடக்கு, கிழக்கு, மலையகம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 600 தமிழ்க் கைதிகள் வருடக்கணக்காக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை விடுதலை செய்வது தொடர்பாக, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைகளுக்கமைய விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்தக் கைதிகளின் விடுதலை தொடர்பாக முக்கிய அறிவிப்பு இந்த வாரம் வெளியாகுமெனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கமைய இவர்களை விடுதலை செய்ய துரித நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக சட்ட மாஅதிபர் கூறினார்.
இது தொடர்பில் கடந்த வாரம் நீதித்துறை அதிகாரிகள் மட்டத்தில் ஆராயப்பட்டதுடன், விடுதலை செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டதாக நீதி, சட்ட மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் சுகத கம்லத் தெரிவித்தார்.
வழக்குகள் தொடரப்படாத நிலையில் களுத்துறை, மகசின், வெலிக்கடை, பூஸா உள்ளிட்ட சிறைகளில் தமிழ்க் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தம்மை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தியிருந்தனர். அதேநேரம், ஜனாதிபதியிடமும் வேண்டுகோள் விடுத்திருந்தனர். ஜனாதிபதியின் பணிப்பின்பேரிலேயே தமிழ்க் கைதிகளை விடுதலை செய்வதற்குத் தற்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதேவேளை, இறுதி யுத்தத்தின்போது சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 738 பேரை இவ்வாரம் விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இடம்பெயர்ந்தவர்கள் தங்கியிருந்த முகாம்களில் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டவர்களுள் 700 பேரும், குற்றப்புலனாய்வுப் பிரிவினால் விசாரணை செய்யப்படுபவர்களுள் 38 பேரும் இவ்வாரம் விடுதலையாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment