புலிகளின் அரசியல் முகமூடி தமிழ் தேசிய கூட்டமைப்பு! -முகுந்தன்.
வியப்பான பல விடயங்களை உள்ளடக்கி இன்றைய நவீன யுகத்திலும் தமிழர்களை வெறும் உணர்சியூட்டி மேலும் மேலும் அடிமையாக்க புலி தலைவர் பிரபாகரனால் பலாக்காரமாக உருவாக்கப்பட்ட சில கட்சிகளின் இணைப்பே தமிழ் தேசியக் கூட்டமைப்பு. இக்கூத்தமைப்பு இன்றும் மிகக்குறுகிய நோக்கங்களையும் கொள்ளை அரசியல் இலாபமடையவும் தமிழரின் அபிலாசைகளோடு விளையாடிக்கொண்டிருக்கிறது. இதில் வியப்பென்னவெனில் இக்கூத்தமைப்பில் அங்கம்வகிக்கும் கட்சிகளின் முதுகெலும்பை கடந்தகாலத்தில் புலிகள் உடைத்தெறிந்ததுதான்.
பழம்பெரும் கட்சியாகவும் மக்கள் மத்தியில் பிரபலமானதுமான தமிழர் விடுதலைக் கூட்டணி, பிரதான விடுதலைப்போராட்ட இயக்கங்களான ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் தமிழ் காங்கிரஸ் என்பன இதில் அங்கம் வகிக்கின்றன. இந்த கட்சிகளின் இயக்கங்களின் தலைமைகள் புலிகளினால் நயவஞ்சகமாக அழிக்கப்பட்டன. இருப்பினும் அரசியல் என்ற சாக்கடையில் வாக்குகளைப் பெற்று பல்வேறுபட்ட சுகபோகங்களை அனுபவிக்கவும் கேவலம் புலிகளிடமிருந்து தங்களின் உயிர்களைக் காத்துக்கொள்ளவும் புலிகளின் காலடியில் மண்டியிட்டனர்.
ஆனால் இன்றோ புலிப்பயங்கரவாதம் முற்றாக தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் இக் கூத்தமைப்பின் நிலைப்பாடு என்ன?
பாசிசப் புலித் தலைவரால் இக்கூட்டமைப்பினருக்கு உபதேசிக்கப்பட்ட தமிழ் தேசியம், தமிழ் தேசிய தலைமை, ஏகபிரதிநித்துவம், தமிழீழம், ஆயுதப்போராட்டத்திற்கு ஆதரவு திரட்டுதல், இனவெறிப்பிரச்சாரம், நிதிசேகரித்தல் போன்றவற்றின் நிலை என்ன?
உண்மையில் இக் கூத்தமைப்பினர் புலிகளுக்கு பயந்து சுயத்தை இழந்து நடைபிணமாகவே இருந்தனர். இனிவரும் காலங்களில் தமிழர்களை ஏமாற்ற என்னவித்தை காட்டப்போகிறார்கள் என்பதே இன்றைய கேள்வி.
புலிகளின் அழிவையடுத்து இக்கூத்தமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான சிவநாதன் கிஷோர் பின்வருமாறு கூறிய விடயம் சற்று கவனத்திற்கொள்ளதக்கது. 'தந்தை செல்வவால் உருவாக்கப்பட்ட தமிழரசுக்கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சிகளின் அகிம்சை போராட்டம் இலங்கை தமிழர்களுக்கு எந்த விமோசனத்தையும் பெற்றுக்கொடுக்வில்லை. பிரபாகரனால் இறுதிவரை கொண்டு செல்லப்பட்ட ஆயுதப்போராட்டமும் எதனையும் பெற்றுக்கொடுக்கவில்லை. மாறாக வரலாறுகாணாத மாபெரும் அழிவுகளையே தமிழ் சமூகத்திற்கு சமாப்பணம் செய்துள்ளது'
தமிழ் கட்சிகளின் அகிம்சை வரலாறும் சிங்கள மக்களுடன் சேர்ந்து உரிமையோடு வாழும் வழியை சொல்லவில்லை. பிரிவினை மற்றும் இனவாதத்தை ஊக்குவிக்கும் செயற்பாடாகவே தொடர்ந்தன. ஈற்றில் இதுவே துப்பாக்கி கலாசாரத்திற்கு வித்திட்டது. பிரபாகரன் என்ற விஷ விருட்சத்தை தமிழ் சமூகத்திற்கு காணிக்கையாக்கி அவ்விஷத்துக்கு கட்டுண்டுபோன வரலாறே தமிழ் கூத்தமைப்பினதும் வரலாறு.
அண்மையில் புளொட் தலைவர் த. சித்தாத்தன், தமிழ் கூத்தமைப்பு புலிகளால் பலாத்காரமாக உருவாக்கப்பட்டது என்றும் புலித்தலைமை அழிந்த பின்னர் இக்கூட்டத்தின் யதார்த்தமற்ற, நடைமுறை சாத்தியப்படற்ற கோரிக்கைகளும் துவேஷ கருத்துக்களும் தேவையற்றது எனவும் புதிய சிந்தனை உருவாக கடந்தகாலப் படிப்பினைகளை வைத்து இக்கூத்தமைப்பு கலைக்கப்பட வேண்டும் எனவும் கருத்துத்தெரிவித்தார்.
இக்கருத்து வரவேற்கப்பட வேண்டியதொன்றாகும். இதில் அங்கம் வகித்த கட்சிகள் சுயமாக இயங்கி தங்களை சுயவிமர்சனம் செய்யத்துணிந்தால் நல்ல பல பயனள்ள கருத்தாக்கங்களும் பலாபலன்களும் தமிழ் சமூகத்திற்கு கிட்டும் என்பதில் ஐயமில்லை. புதியபாதை புதிய சிந்தனையே இன்றைய தேவை. இல்லையே தமிழினத்துக்கு மீட்சியில்லை.
தமிழ் நாட்டிலும் திராவிட சிந்தனையை தோற்றுவித்த திராவிட கழகங்களும் பிரிவினை கோரிக்கையை ஒதுக்கிவிட்டு மத்திய கூட்டாட்சி மானிலத்தில் சுயாட்சி என இணைந்து வேற்றுமையில் ஒற்றுமையைக் கண்டு உச்சளவு வளர்ச்சி பெற்றுள்ள வரலாறை நாம் அலட்சியம் செய்துவிடமுடியாது. அதுவே நல்லதோர் முன் உதாரணம்.
நல்ல சந்தர்ப்பங்களை பெறுவதற்கு தனித்துவம் பிரிவினை என வாக்குக்காக இனவாதம் பேசுவதை விடுத்து ஆட்சியாளர்களுடன் நிபந்தனையுடன் ஆட்சியில் பங்கேற்கும் வகையில் தமிழர்களின் பலம் கட்டியெழுப்பப்படவேண்டும். 1977ல் பெறப்பட்ட அரசியல் பலத்தை ஆயுதக்குழுக்களை உருவாக்கி அழிவை தேடவே பயன்படுத்தினார்கள். எதிர்காலத்தில் இப்படியொரு பலத்தை பெற்ற அரசியல் உரிமைகளையும் பொருளாதார சபீட்சத்தையும் வடகிழக்கு பெறகூடியவகையில் புதிய சிந்தனை, புதிய தலைமையே இன்றைய தேவையாகும்.
எந்தவொரு இனத்தையும் பயமுறுத்தி பணியவைத்து காரியம் சாதிக்கமுடியும் என்பது அறிவீனம். இந்த முட்டாள்தனமானதைத்தான் புலிகள் கடைசிவரை கையாண்டார்கள். பிரபாகரனது சண்டித்தனத்திற்கும் கொலை வெறி அச்சுறுத்தலுக்கும் அடிபணிந்து தனிநாட்டையோ அல்லது ஓரங்குல நிலத்தையோ வழங்கும் அளவிற்கு எந்த நாட்டின் ஆட்சியாளனும் முட்டாளாக இருக்கப்போவதில்லை.
இலங்கைத் தமிழர்களுக்கு சமத்துவ உரிமைகள் இல்லை என்பது உண்மையே. கிடைத்த சந்தாப்பங்களனைத்தும் பிரபாகரனின் முட்டாள்தனத்தால் நாசமாக்கப்பட்டன. ஏற்கனவே தமிழருக்கு இருந்த நலன்களும் சிதைக்கப்பட்டன. இணைந்த வடக்கு கிழக்கும் பிரிக்கப்பட்டது. இது நல்ல எடுத்துக்காட்டு.
பிரதேச வேறுபாடுகளையும் தமிழ் இனவாதத்தையும் புலிகள் தாரளமாகவே விதைத்தனர். தீர்வு என்று வந்தபோதும்கூட அதற்கு தீர்வுகான முடியாதபடி யாழ் மேலாதிக்க சிந்தனை வழிவகுத்தது. அனைத்து அரசியல் வழிமுறைகளையும் வன்முறையாலும் கொலைகளாலும் அடைத்துவைத்திருந்த பிரபாகரனின் இறப்பின் பின்னராவது புதிய அரசியல் வெற்றிடத்தை நிரப்பும் வழிவகைகளை காண அனைவரும் உழைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
மேலும் புலிகளுக்கு பயந்த ஊடகத்துறையினரும் பணத்துக்காக தார்மீகத்தை தாரைவார்த்த எழுத்தாளர்களும் சமூகத்தின் நலன் கருதி விழித்துக்கொள்ள வேண்டும். இனிமேல் அச்சமின்றி சிந்தனைகளை விழிப்புணர்வுகளை ஊடகத்துறையினர் மேற்கொள்வது அவசியமனதாகும். இந்தியாவில் ஓரளவுக்கு ஊடகங்கள் அச்சமின்றி இயங்குகின்றன. கடந்த காலங்களில் தமிழ் ஊடகங்கள் புலிகளின் இரும்புப் பிடியிலிந்தவை.
தமிழர்களை நந்திகடலில் பிரபாகரனுடன் சேர்த்துத் தள்ளியவர்களில் முக்கியமானவர்கள் இந்த ஊடகத்துறையினரே. இந்தியக் கோமாளிகளும் புலன் பெயர் குஞ்சுகளும் நாடுகடந்து தமிழீழம் அமைக்கவிருப்பர்களும் இன்னும் தமிழர்களை ஏமாற்றி பிழைப்புநடத்தவே துடிக்கின்றனர்.
புலிகளின் ஒவ்வாத கருத்துக்களையும் அவர்களின் அரசியல் முகமூடியாகிய தமிழ் தேசிய கூத்தமைப்பினர்களையும் சீர்திருத்த உண்மையான பத்திரிகையாளர்களே நேர்மையுடன் முன்வரவேண்டும். தமிழ் சமூகத்திற்கான சமஉரிமை போராட்டம் ஒய்ந்துபோகமுடியாது. உண்மை வழியில் அறிவு ரீதியான சிந்தனைகளுடன் செயற்பாடே அவசியமானது. VIII
0 comments :
Post a Comment