அழுவதுதான் அவமானம், அவதிப்படுவது அவமானமல்ல. - யஹியா வாஸித் -
நிழல் தேடி அலைந்தனர், மரம் வெட்டும் மனிர்கள், ஏன் புன்னகைக்கின்றாய் பூமித்தாயே. நம்மவனுகள் எல்லாம் காட்டுக்குள்ள போய் கள்ள மரம் வெட்டுவார்கள். வெட்டி, வெட்டி மொத்த காட்டையும் அழித்துவிட்டு, இறுதியில், இந்த மண்ணாங்கட்டி காட்டில் ஒதுங்கி நிற்பதற்கு கூட ஒரு நிழல் இல்லையே என வருத்தப்படுவார்கள். வருத்தப்பட்டார்கள், இப்போ வருத்தப்படுகின்றார்கள். ஆம் வருத்தப்படுகின்றார்கள். கொலை செய்யும் மனிதர்கள். கொலை செய்த மனிதர்கள். கொலைக்கு கொலைக்கருவி வாங்கிக் கொடுத்த மனிதர்கள் எல்லாம் வன்னி முகாம் வேதனை பற்றி வருத்தப்படுகின்றார்கள்.
அடியேய் பொண்டாட்டி எனக்கு 15 நாளில் பிள்ளை பெற்றுத்தருவாயா என என்ட பொண்டாட்டியிடம் கேட்டேன். இந்தாளுக்கென்ன லுசோ. பிள்ளை பெற பத்துமாதம் எடுக்கும் புருஷனாரே என்றாள். அதற்கு ஏதாவது மெஷினுகள் இல்லையாடி எனக்கேட்டேன். அடமுட்டாளே அது நியதி. டார்வின் தத்துவம் அல்லது இறைவனின் ஆக்கல் தத்துவம் என்றாள்.
போனமாதம் எனது 5 வயதுப் பிள்ளையை பாடசாலைக்கு அழைத்துச்சென்று, என்பிள்ளை உடனடியாக ஓஎல் எக்ஸாம் எடுக்க வேண்டும் என்றேன். பாடசாலைப் பொறுப்பாளர் என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு, அண்ணே உங்கள் பிள்ளையை திடீரென 10ம் வகுப்பில் கொண்டு போய் இருத்த முடியாது. ஒவ்வொரு வகுப்பாக முதல் வகுப்பில் இருந்து படிக்க வேண்டும் என்றார்.
நேற்று விவசாயத்திணைக்கள அதிகாரியைச் சந்தித்து, நாளைக்கு என்வயலில் நெல் விதைக்கப் போகின்றேன். நாளை மறுதினம் அறுவடை செய்யலாம்தானே என்றேன். அவர் என்ர அடுத்த வீட்டுக்காறனுக்கு போன் பண்ணி, இந்தாளுக்கு மறகளண்டுட்டுது பக்கத்து வீட்டுக்காறர்களெல்லாம் கவனமாக இருங்கோ எனக்கூறியுள்ளார். ஆனால் வன்னியிலிருந்து இடம் பெயர்ந்தவர்களை நாளைக்கே குடியேற்று, குடியேற்ற வேண்டும், குடியேற்றாவிட்டால் மீண்டும் தொடங்கும் 5ம் கட்டப் போராட்டம் என எச்சரிக்கை விடுகின்றனர் கொலை செய்யும் மனிதர்கள்.
உண்ண உணவு, உடுக்க உடை, உறங்க உறைவிடம், பேசுவதற்குச் சுதந்திரம் என சகல சௌபாக்கியங்களுடனும் இருந்து கொண்டு வியாபாரத்தை தொடங்கியுள்ளனர் புலன் பெயர் புண்ணியவான்கள். இது புது வியாபாரம். மங்கையர்க்கரசியக்கா சிங்களனின் தோலை உரித்து செருப்பாக அணிவேன் என 1971ல்தொடங்கி வைத்த வியாபாரம், காசியண்ணா, ஈழவேந்தன் அண்ணா, என கொஞ்சகாலம் தொய்யோ தொய்யென தொங்கி செய்த தொப்பி வியாபாரம், ஈபிஆர்எல்எப், ரெலோ, புளட், ஈரோஸ் என 1977 முதல் 1987 வரை கும்மியடித்து, கூப்பாடு போட்டு, போஸ்ர் ஒட்டி வடம் பிடித்த வியாபாரம், பின்னர் கட் அன்ட் ரைட்டானவர்கள் என சொல்லிக் கொண்டு வந்து ஆளையாள் கொன்று, அண்ணனை தம்பி கொன்று, தம்பியை அண்ணன் கொன்று, இருவரையும் அடுத்த வீட்டுக்காறன் கொன்று, எல்லோரையும் ஒருவர் கொன்று, ஒரு இயக்கம் கொன்று, அவர், அந்த நபர் தான்தோன்றி, அவருக்கு ஆரத்தி எடுத்து, அபிஷேகம் செய்து, குல்லி சூல் ஆடி ( இது தமிழ் பேசும் முஸ்லீம்கள் பாவிக்கும் வார்த்தை. இதன் அர்த்தம். நான்தான், இனி நான்தான், இனி எல்லாமே நான்தான் என்ற ஒரு மஸ்து நிலையில் கூறும் சொல் ) அடம்பிடித்து, ஆர்ப்பரித்து, கட்டுநாயக்கா, அனுராதபுரம். ஆணையிறவு என சிங்களத்தை கொன்று, எங்களுக்கு புள்ளிவிபரங்கள் சொல்லி, புலம் பெயர் நாடெல்லாம் ரொக்கட் லோஞ்சருக்கு, பைபர்கிளாஸ் போட்டுக்கு, ஏகே 47க்கு என பணம் குவித்து, வியாபாரத்தை பெருக்கோ பெருக்கென பெருக்கி, இப்போ மார்கட்டில் விற்பதற்கு எதுவும் இல்லாமல், 3லட்சம் வன்னிப் புனிதர்களை ஏலத்துக்கு கொண்டு வந்துள்ள ஏல வியாபாரம்.
சிங்களவன் மஞ்சல் துண்டுக்கு களுத்தறுப்பான் எனவும், சோனி வியாபாரத்துக்காக என்ன பொய்யும் சொல்வான் எனவும் நம்மவர்கள் சொல்வார்கள். ( நான் இங்கு குறிப்பிட்டது என் போன்ற தில்லுமுல்லுக்காறர்களை.) ஆனால்
வலி படைத்து முறம் எடுத்து புலி அடித்த தமிழினம்
கிலி பிடித்த நிலை படைத்து வெலவெலத்து வாழ்வதோ
மகள் இறக்க முலை அறுக்க முடிவெடுத்த தமிழினம்
புகழ் இறக்க மொழி இறக்க வெலி நகைக்க வாழ்வதோ என புலன்பெயர் புண்ணியவான்களுக்கு வேப்பிலை அடித்தவர்கள், இப்போ தடுக்கி குப்புற விழுந்து, அழுது புலம்புகின்றனர். நெஞ்சை நிமிர்த்தி, இந்த புலம் பெயர் புண்ணாக்குகள் போலில்லாமல், இறுதி வரையும், அந்த மே 17 இறுதிவரையும், அவன் என்ன மண்ணாங்கட்டியைச் செய்தானோ தெரியாது, ஆனால் அந்த இறுதிநாள் வரையும் மக்களோடு மக்களாக நின்று, இறந்தானே அவன் தலைவன். மனிதன், மனிதாபிமானி. அவனுக்கு எப்போதுமே நாம் ஒரு சலாம் போடலாம். அந்த 17ம் திகதி அவர் செய்த அந்த செயலுக்கு மட்டும்தான் இந்த சலாம். அதற்காக மொத்த சூரசம்ஹாரம்களுக்கும் சலாம் போட்டுவிட்டதாக நினைத்து விடாதீர்கள்.
ஆனால் புலத்தில் இருந்து கொண்டு அழுது, அழுது மீண்டும் கண்ணீர் கதைகள் சொல்ல இந்த புண்ணாக்குகளுக்கு என்ன தகுதி இருக்கின்றது. அந்த வன்னி மக்கள் யாரும் இப்போ அழவில்லை. அழ அவர்களிடம் கண்ணீர் இல்லை. அவர்கள் அவதிப்படுகின்றார்கள். அவதிப்படட்டுமே. நமது ஒரு பத்துநிமிட காமவெறிக்காக 10 மாதம் குழந்தையைச் சுமந்து கொண்டு நமது பொண்டாட்டிமார் அவதிப்படவில்லையா. நமது பிள்ளைகள் படித்து ஓஎல், ஏஎல் எடுத்து ஒரு நல்ல தொழிலில் அமர வேண்டுமென நாம் அவனுக்காக சிக்கன் சொப்பிலிலும், பெற்றோள் கராஜுகளிலும், அரபிக்களின் கக்கூசுகளிலும் வருடக்கணக்காக அவதிப்படவில்லையா. வயலில் நெல்லை விதைத்துவிட்டு, உரம் வேண்டவும், கிருமி நாசினி வேண்டவும், காலம்தவறி மழை, வெயில் வந்துவிடுமோ எனவும் தினம், தினம் அவதிப்படவில்லையா. அவதிப்படட்டும். அந்த வன்னிப்புனிதர்கள் அவதிப்படட்டும்.
அவதிப்பட்டுவிட்டு ஆறுதலாக அவர்கள் வெளியே வரட்டும். வந்து நிச்சயமாக இந்த புண்ணாக்குகளிடம் கேள்விகள் கேட்பார்கள். கேட்க வேண்டும் என்பதுதான் மொத்த மனிதாபிமானிகளின் பேரவா. புலத்தில் வரி அறவிட்டாயே அதில் எத்தனை வீதத்தை எங்களுக்கு செலவு செய்தாய். புலத்திலிருந்து ஒபாமா கப்பல் அனுப்புவதாக சொன்னாயே எங்கே அந்த கப்பல் என்பதில் தொடங்கி, எம்குலப் பெண்களுக்கு மஞ்சல் அரைத்துக் கொடுத்தாயா மானங்கெட்டவனே, எதற்காக எங்களை ஏலம் விட்டாய் என்பதுவரை அந்த புண்ணியவான்கள் கேட்க வேண்டும். மனிதாபிமானிகள் என்று சொல்லிக் கொண்டு இப்போது கிளம்பியிருக்கும் முன்னாள், இந்னாள் போராளிகள் பிளஸ் மனிதத்தை நேசிக்கும் புலம் பெயர் இளையோர்கள் வரை பணமறவிட்டவர்களை அழைத்து கேட்க வைக்கவேண்டும்.
தமிழ் அது ஒரு மொழி மட்டுமல்ல. அது ஒரு தெய்வீகம். அது ஒரு சாத்வீகம். தமிழனுக்கு அது ஒரு கம்பீரம், அது ஒரு அபின், அது ஒரு போதை. அதன் இசை, அதன் சொல்லாடல், அதன் பாரம்பரியம், அதன் கவிநயம், அதைப் பேசும் நாம், அதை கரைத்துக் குடித்து, அதை பேணி, அதை மேலெல்லாம் சேறாக பூசி வாழ்ந்து திரிந்த நாம். இன்று மொழி தெரியாத நாட்டில், வேர்வை சிந்தாத மண்களில், வேற்று மதக்காறர்களுக்கு மத்தியில் வக்கற்றுப் போய், வாழ்ந்த மண்ணை வான்அலைகளில் பார்த்துக்கொண்டு, வேதாந்தம் பேசுபவர்களின் வேள்விகளுக்கு இரையாகிக் கொண்டிருக்கின்றோம். எட்டாத தொலைவில் அந்த புனிதர்கள். போர்த்துவதற்கு துணியின்றி, போடுவதற்கு உடையின்றி, வயிறாற குடிப்பதற்கு நீரின்றி. உதவுவார்களா. உதவுவார்களா. மனிதர்கள் யாராவது வந்து உதவுவார்களா என ஏங்கிக் கொண்டு. ஜஸ்ட் போர் சம் வோட்டர் ஓர் பிறட். ( பரமண்டலத்தில் இருக்கும் பிதாவே. என் நாமமும், எங்கள் சந்ததிகள் நாமமும் பரிசுத்தமடைவதாக )
எங்களை விடுங்கள். நாங்கள் காட்டிக் கொடுப்பவர்கள். எட்டப்பர்கள். நீங்கள்தான் புத்தி ஜீவிகளாச்சே அந்த மண்ணாங்கட்டி புத்தியை கொஞ்ச நாளைக்கு அற(ம்)வழியில் செலுத்துங்களேன். செலுத்தி அரசை மிரட்டுங்களேன். எல்லா வன்னி மக்களுக்கும் வங்கிகளில் தனித்தனி எக்கவுண்ட்டுகள் திறக்கச் சொல்லுங்கள். அவர்களின் வங்கிக் கணக்கிலக்கங்களை பத்திரிகைகளிலும், இன்டர்நெட்டிலும் வெளியிடச் சொல்லுங்கள். அதில் ஒவ்வொரு குடும்பத்தையும் இங்கிருந்து ( புலம் பெயர் நாடுகளில் ) தெரிவுசெய்து, அழுதுபுலம்பும் அல்லது ஆர்ப்பரிக்கும் அல்லது சிங்களத்துக்கு மீண்டும் ஆப்பு வைக்கத் துடிக்கும் உறவுகளுக்கு கொடுத்து நேரடியாக அவர்களை பணம் அனுப்பச் சொல்லுங்கள். உண்மையாக நீங்கள் அந்த புனிதர்களை மதிப்பவர்களாக இருந்தால் முதலில் இதை செய்யுங்கள். அகதிக்கு தெய்வம்தான் துணை என்பார்கள். பிளீஸ் சகோதரர்களே. பிளீஸ். கொஞ்சநாட்களுக்காவது தெய்வங்களாக மாறுங்களேன்.
மகின்த சகோதரர்கள் எங்கேயோ, எதற்காகவோ தடுமாறுவது போல் தெரிகின்றது. ஆனால் அங்கு நமது இரத்தங்கள், உடன்பிறப்புக்கள் உவ்வாவுக்காக கஸ்டப்படுகின்றன சகோதரர்களே. நாடு கடந்த தமிழீழத்துக்காக வாக்கெடுப்பு நடாத்த புள்ளி விபரங்கள் சேகரிப்பதாக அறிகின்றோம். அதை ஆறுதலாக செய்யுங்கள். இதை, அவர்களுக்கு பணம் அனுப்புவதை உடனடியாகச் செய்யுங்கள் உடன் பிறப்புகளே. பத்தினிகள் சாபம் பொல்லாதது நண்பர்களே. பல பத்தினிச்சிகள் அங்கே அறம்பாட முன்னர், உங்கள் புகழ்பாட ஏற்பாடு செய்யுங்கள் ரத்தத்தின் ரத்தங்களே.
விட்டுக் கொடுப்பவன் கெட்டுப் போவதில்லை. கெட்டுப் போபவன் விட்டுக் கொடுப்பதில்லை. நீங்கள் இந்த வன்னிப்புனிதர்கள், கொஞ்சம் ஆசுவாசப்படும் வரை, கொஞ்சம் விட்டுத்தான் கொடுங்களேன். நிச்சயமாக கெட்டுப்போக மாட்டோம். தமிழன் கெட்டுப்போக மாட்டான். இல்லை, இல்லை சிறிலங்கா அரசை உண்டு இல்லையென பண்ணி விடுவோம் என முரசறைந்தால், இன்னுமொரு முப்பது வருடத்தில், சிறிலங்காவில் வவுனியா என்ற ஒரு குட்டி பிரதேசம் இருக்கின்றது, அங்கு ஒரு குட்டி தமிழீழம் இருக்கின்றது, அதில் ஒரு மூவாயிரம் தமிழர்கள் இருக்கின்றார்கள், எனக்கூறிக்கொண்டு, அவர்களுக்காக நமது பேரப்பிள்ளைகள் ஒரு இருபது பேர் ஜெனிவாவில் கொடி பிடித்துக் கொண்டிருப்பார்கள்.
கொடி, தமிழுக்கு அமுதென்று பெயர், அந்த தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்று சொல்லிக் கொண்டு 35 லட்சம் தமிழ் பேசுவோரும் சிறிலங்காவில் இருந்து கொண்டு கொடிபிடிக்க வேண்டும். இங்கு வெள்ளைமாளிகையின்ட கோமணத்துக்குள்ளும், வெஸ்ட்மினிஸ்டர்ர கச்சைக்குள்ளும், ஜெனீவாவின்ட குண்டிக்குள்ளும் இருந்து கொண்டு பிடிக்க கூடாது. அப்படி கொடிபிடித்து, அடம் பிடித்ததின் பலனைத்தான் மொத்த தமிழ் பேசுபவனும் மே 17ல் முள்ளி வாய்க்காலில் அறுவடை செய்தான், செய்தோம். அவர்கள் வியாபாரிகள் அப்பர்களே. அவர்களது வியாபாரம் ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் நாறோ நாறென நாறி, ஈரானிலும் நாற்றமெடுக்கத் தொடங்கியுள்ளது. இப்போது வன்னிப்புனிதர்கள் முள்ளுக்கம்பிக்குள்ளே இருக்கின்றார்களாம் என ஒரு புது வியாபாரம். இந்தியா பக்கத்தில் இருக்கும் வரை எந்த வியாபாரமும் வேகாது என்பது பால்குடிமறவா புள்ளைக்கும் தெரியும்.
தமிழ் உங்களுக்கு மட்டும் சொந்தமல்ல. எங்களுக்கும் அதோடு நிறைய கொடுக்கல் வாங்கல் இருக்கின்றது உறவுகளே. அது எங்களுக்கும் சொந்தம். அது உங்களுக்கு வியாபாரப் பொருளாக இருக்கலாம். எங்களுக்கு அது உயிர் மூச்சு. உங்கள் எல்லா வியாபாரத்தையும் நிறுத்திவிட்டு முதலில் வன்னிப் புனிதர்களுக்கு மூச்சு போய் விடாமல் இருக்க உதவி செய்யப் பாருங்கள். அப்புறம் யார் நெல்லுகுத்துவதென வன்னிப் புனிதர்கள் முடிவெடுக்கட்டும். நீங்கள் ஒப்புக்குச் சப்பாணியாக அழுதவர்கள். அழுபவர்கள். ஆனால் அந்தப் புனிதர்கள் உண்மையாகவே அழுது, உண்மையாகவே வாழ்ந்து, உண்மையாகவே அனைத்தையும் இழந்து, உண்மையாகவே அவதிப்பட்டவர்கள். தமிழீழம் வேண்டுமா இல்லையா என்பதை தீர்மானிக்க வேண்டியது அந்த அவதிப்பட்ட, அவதிப்படும் அந்த மனிதப் புனிதர்களே. VIII
1-11-2009
0 comments :
Post a Comment