Sunday, November 1, 2009

திரு. ஆனந்தசங்கரி தமிழக முதல்வருக்கு கடிதம்.


மாண்புமிகு டாக்டர் கலைஞர்.மு கருணாநிதி
முதலமைச்சர்
தமிழ்நாடு
சென்னை
30-10-2009

பெருமதிப்புக்குரிய ஐயா,


தலையிடுவதற்கான நேரம் கனிந்துள்ளது.


பேரறிஞர் அண்ணாவென வாஞ்சையோடு அழைக்கப்பட்டும், தங்களையும் தன் அமைச்சரவையில் இணைத்து கொண்டு, தங்களுக்கு முன் முதலமைச்சர் பதவி வகித்த பெரு மதிப்புக்குரிய சீ.என். அண்ணாதுரை அவர்களின் காலம்தொட்டு எமது பிரச்சினையில் தாங்கள் கொண்டிருக்கும் பெரும் அக்கறை பற்றி நான் நன்கறிவேன். எமது பிரச்சனைக்கு எப்போது தீர்வு கிட்டுமென முழு உலகும் ஆவலுடன் எதிர்பார்த்து நிற்கிறது.

ஐயா! துரதிஷ்டவசமாக எமது பிரச்சினை தீர்வுக்காக எற்பட்ட பல வாய்ப்புக்களை நாம் இழந்து நிற்கின்றோம். சில ஆண்டுகளுக்கு முன் தங்களின் நன்மதிப்பை பிரயோகித்து இலங்கை அரசுக்கு பிரச்சினையை தீர்க்க உதவுமாறு வேண்டியிருந்தேன். அத்தகைய கடிதங்களின் பிரதியொன்றையும் இத்துடன் இணைத்துள்ளேன். இனப்பிரச்சினைத் தீர்வு இந்திய அரசியல் சாசனத்தின் முன் மாதிரியாகக் கொண்டு தீர்வு காணப்பட வேண்டுமென்று நான் ஆலோசனை வழங்கியிருந்தேன். சிறிதும் எதிர்பாராத இடங்களில் இருந்தும்கூட அந்த ஆலோசனைக்கு மிகப் பெரும் வரவேற்பு இருந்தது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்தையொத்த அதிகாரப்பகிர்வு இலங்கையின் மாகாணசபைகளுக்கு வழங்கினால் சிறுபான்மை மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதோடு இலங்கைவாழ் மக்களின் பெரும்பாலானோருக்கும் ஏற்புடையதாக இருக்கும். மேலும் தமிழ் நாட்டில் வாழும் தமிழ் மக்களை அமைதிப்படுத்துவதோடு அரை நூற்றாண்டுக்கு மேற்பட்ட பிரச்சினைக்கு தீர்வு காண உதவிய பெருமையும் தமிழகத்திற்கு சேரும். அண்மையில் இலங்கைக்கு விஜயம்செய்த இந்திய நாடாளுமன்றக் குழுவினர் பிரதமர் கௌரவ மன்மோகன் சிங் அவர்களை சந்தித்தபோது விரைவில் இலங்கையிலிருந்து ஒரு உயர்மட்டக்குழு புதுடில்லிக்கு வர இருப்பதாகவும் அவர்களுடன் முக்கிய இரு பிரச்சினைகளான அரசியல் தீர்வு, இடம் பெயர்ந்தோரின் மீள்குடியேற்றம் போன்றவை பற்றி பேசும் சந்தர்ப்பம் உண்டென குறிப்பிட்டதாக அறிகின்றேன். இந்த விடயமே இக் கடிதத்தை எழுத என்னைத் தூண்டியது.

50 ஆண்டுகளுக்கு மேல் நான் அரசியலில் ஈடுபட்டிருக்கின்றேன் என்பது பற்றியும் இனப்பிரச்சினை ஆரம்பிப்பதற்கு முதற் காரணமாக இருந்த பிரஜா உரிமை சட்டம் 1949ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டதும், 1956ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தனிச் சிங்கள சட்டம் ஆகியன மேலும் நிலைமை மோசமடைய காரணமாக இருந்த இக்காலகட்டத்தில் நான் வாழ்ந்தவன் என்பதால் இவை பற்றி நன்கறிந்தவன் என்பதை தாங்கள் அறிவீர்கள் என நினைக்கிறேன். நிரந்தர தீர்வு காண்பதற்கு மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளும் கடும் போக்காளர்களின் செயற்பாட்டால் குழப்பத்திற்குள்ளாகி நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து இந்த ஆண்டின் முற்பகுதியில் உச்சக்கட்டத்தை அடைந்தது. 2009 மே 18ம் திகதி விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்;டதோடு மறுநாள் அதன் தலைவர் இறந்ததுடன் அத்தனையும் திடீரென்று ஒரு முடிவுக்கு வந்தது. மொத்த விளைவு இலங்கையின் 25 மாவட்டங்களில் தமிழ் பேசும் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட 08 மாவட்டங்கள் அழிந்தன. கடந்த கால் நூற்றாண்டு காலமாக சிங்கள, தமிழ், முஸ்லீம் மற்றும் பல்வேறு சமூகத்தினரும் எதுவித வேறுபாடின்றி பல்வேறு கஷ்டங்களை அனுபவித்தனர். கோடிக்கணக்கான பெறுமதியான பொது சொத்துக்களும் அரச சொத்துக்களும் அழிக்கப்பட்டன. ஏனைய சமூகத்தினரோடு ஒப்பிடுகையில் முஸ்லீம், தமிழ் மக்களின் உயிரிழப்புக்களும் சொத்தழிவுகளும் மிகக் கூடுதலானவை எனக் கூறலாம். கிழக்கு மாகாணத்தில் 45,000 பேரும் வட மாகாணத்தில் அதே போன்ற தொகையினர் விதவைகளாக்கப்பட்டுள்ளனர். அத்தோடு அரச தரப்பு போர் வீரர்களின் மனைவியரும் பெருமளவில் விதவையாக்கப்பட்டுள்ளனர். அநாதையாக்கப்பட்டோhரின் எண்ணிக்கையும் குறைந்ததல்ல. இன்றும் கூட 1100 க்கு மேற்பட்ட, முகாம்களில் உள்ள அநாதைகளை பொறுப்பேற்க ஒரு சிறு உறவினர்களைத் தவிர வேறு யாரும் முன்வரவில்லை. பல்லாயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும், பிள்ளைகளும் இறந்துள்ளனர். அனேகர் தம் கால்கள், கைகளையும், கண் பார்வையையும், கேட்கும் சக்தியையும், தம் நெருங்கிய அன்பு உள்ளங்களையும் இழந்துள்ளனர். நம்பிக்கையானதொரு தகவலின்படி முகாம்களில் பத்துக்கு ஒருவர் அங்கவீனர்களாக உள்ளனர். ஆயிரக்கணக்கான வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன. மீன் பிடி, விவசாயம், பல்வேறு தொழில்கள் பெருமளவில் குறைக்கப்பட்டு அல்லது முற்றாக நிறுத்தப்பட்டும் உள்ளன. பல்வேறு கட்டுப்பாடுகளின் மத்தியிலும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட மக்கள் முற்று முழுதாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் இருந்த போதும் யாரும் பட்டினி கிடக்கவில்லை. எந்;தவித பாகுபாடின்றி அரசு அப் பிரதேசத்திற்கு உணவு அனுப்பியது. மக்களும் தம் சொந்த முயற்சியால் கஷ்டமின்றி வாழ்ந்தனர். அநேகர் லொறி, ட்ராக்டர், கார், பல்லாயிரக் கணக்கானோர் மோட்டார் சைக்கிள்களையும் சொந்தமாக வைத்திருந்தனர். கணிசமான தொகையினர் பாற்பண்ணை, கோழிப்பண்ணை நடத்தியதோடு பெருமளவில் விவசாயமும் மேற்கொண்டனர். இன்று இவைகள் அனைத்தும் அற்றுப் போயின.

இடம் பெயர்ந்த மக்கள் இடத்துக்கு இடம் மாறி இறுதியில் உடைமைகள், அத்தனையையும் இழந்தனர். சிலர் தமது மனைவியர், அன்பு பெற்றோர், மக்கள் ஆகியேரை இழந்து அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் வந்ததும், அரசால் முகாம்களுக்கு கொண்டு வரப்பட்டவேளை அவர்கள் எதுவுமற்றவர்களாகவும், உடுத்த உடையுடனும் வந்து சேர்ந்துள்ளனர். இரு மாதத்திற்குள், அவர்கள் மிக மோசமான சூழ்நிலையில் வாழ்ந்ததன் பின், அத்தனை பேரும் பரம ஏழைகளாக்கப்பட்டுள்ளனர். இப்போது அவர்கள் கடந்த சில மாதங்களாக பட்ட துன்பங்களை கூட கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் அனைவரும் பலாத்காரமாக எதுவித தேவையுமின்றி தடுத்து வைக்கப்பட்டு;ள்ளனர். விடுதலைப் புலிகளின் தீவிர உறுப்பினர்கள் ஏறக்குறைய அனைவரும் முகாம்களில் இருந்து தப்பி சென்று விட்டனர். 1,50,000 இற்கு மேற்பட்டவர்கள் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு அவர்களின் அப்பாவி பிள்ளைகள் 10,000 இற்கு மேற்பட்டோர் புலிகளின் சிறுவர் போராளிகளாக முத்திரை குத்தப்பட்டு பெற்றோர்களிடமிருந்து பலாத்காரமாக பிரிக்கப்பட்டு பல்வேறு பயிற்சிகளுக்காக புனர் வாழ்வு முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் இன்று பாடசாலைகளில் கல்வி போதிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் கல்வியில் மிகவும் திறமைசாலிகளாக முன்னேற கூடியவர்கள். அப்பாவிகள் துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்ற வேளையில் உண்மையான குற்றவாளிகள் தப்பியோடிவிட்டனர். வயதில் முதிர்ந்தோர், கர்ப்பிணி தாய்மார்கள், பிள்ளைகள், காயமுற்றோர் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருப்பதை எந்த சந்தர்ப்பத்திலும் நியாயப்படுத்த முடியாததொன்று. அரசாங்கம் தற்போது முகாம்களில் உள்ளவர்களை பகுதி பகுதியாக மீளக்குடியமர்த்துவதற்காக விடுவித்து வருகின்றது. அவர்களுக்கு ஆறுமாத காலத்திற்கு போதுமான உலர் உணவு, விவசாய கருவிகள் சிலவையும், சொற்ப உதவி பணத்தொகையும் மட்டும் வழங்குவது போதுமானதல்ல. சகல இடம் பெயர்ந்தோருக்கும் அவர்களுடைய இழப்புக்களுக்கு ஏற்ப நட்டஈடு வழங்ப்பட வேண்டும். தங்களின் பங்களிப்புடனேயே இவர்கள் நட்டஈடு பெறுவது சாத்தியமாகும்.

நாடும் நாட்டு மக்களும் அதிகளவில் கஷ்டங்களுக்கு உள்ளாகி பலவற்றை இழந்துள்ளமையால் இந்த நாட்டிலோ அல்லது வேறு எங்கே யார் இருந்தாலும் இவ்வாறு மீண்டும் ஏற்படுவதை விரும்பமாட்டார்கள். இத்தகைய சம்பவங்கள் மீண்டும் ஏற்படக் கூடாது, ஏற்படவிடவும் கூடாது. ஒற்றையாட்சியின் கீழ் எத்தகைய தீர்வு வழங்கப்பட்டாலும் கடும் போக்காளர்கள் எதிர்காலத்தில் அநாவசியமாக இதில் தலையிடும் வாய்ப்பைக் கொடுக்கும். ஆகவேதான் இந்திய முறையிலான ஒரு தீர்வை முன் வைக்குமாறு நான் வற்புறுத்தி வருகின்றேன். இந்தியர்கள் வேற்றுமையில் ஒற்றுமை காணும் சிறந்ததொரு கோட்பாட்டுக்கு அமைய தமது அரசிலமைப்பை உருவாக்கியுள்ளமையால் அம் மாதிரியான அமைப்புமுறை 'ஒற்றையாட்சி' 'சமஷ்டி' ஆகிய வார்த்தைகளை விரும்பாதவர்களுக்கு ஏற்புடையதாக இருக்கும்.

ஆகவே ஐயா, சகல அரசியல் வேறுபாடுகளையும், வேற்றுமைகளையும் மறந்து தமிழ் நாட்டவர் அனைவரையும் ஒன்றிணைத்து அரசியல் தீர்வு காண்பதில் தங்களின் பங்களிப்பு இன்றியமையாததாகும். எங்களைப் பொறுத்தவரையில் சிறுபான்மை கட்சிகளை சேர்ந்த நாம் ஒரு பொது வேலைத்திட்டத்தின் கீழ் ஒன்றுபட்ட இலங்கைக்குள் சிறுபான்மை இனங்களின் உரிமைகளை பாதுகாக்க திடசங்கற்பம் பூண்டுள்ளோம். எனது வேண்டுகோளை தாங்கள் ஏற்று இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மத்திய அரசை இலங்கை சிறுபான்மை மக்களுக்கு ஏற்புடையதாகவுள்ள எனது ஆலோசனையை ஏற்றுக்கொள்ள வைக்க வேண்டுமென மிக விநயமாக கேட்டுக் கொள்கிறேன். தங்களை சந்தித்து இது சம்பந்தமாக மேலும் சில கருத்துக்களை தெரிவிக்கும் வாய்ப்பை விரைவில் ஏற்படுத்தித் தருவீர்கள் என கேட்டுக்கொள்கிறேன்.


நன்றி
தங்கள் உண்மையுள்ள

வீ.ஆனந்தசங்கரி
தலைவர்-த.வி.கூ


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com