திருப்தியான மனோநிலையில் தாயகம் திரும்புகின்றோம்.
தமிழக எம்.பிக்கள் குழு ஜனாதிபதியிடம் தெரிவிப்பு
வடக்கின் தற்போதைய நிலை குறித்து நேரில் கண்டறிவதற்காக இலங்கை வந்திருக்கும் தமிழக எம்.பிக்கள் குழு நேற்று (13) மாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரிமாளிகையில் சந்தித்து பேச்சு நடத்தியது.
வடமாகாணத்தின் நிலை குறித்து பல்வேறு சிந்தனைகளுடன் வந்த தாம், அப்பகுதிகளுக்கு விஜயம் செய்ததன் மூலம் உண்மை நிலைகளை நேரில் கண்டறிந்து திருப்தியான மனோநிலையுடன் மீண்டும் நாடு திரும்புவதாக இந்த எம்.பிக்கள் ஜனாதிபதியிடம் கூறினர்.
வடக்கின் தற்போதைய நிலைமைகள் குறித்து பார்வையிடுவதற்காக தம்மை இலங்கைக்கு அழைத்தமைக்காக அவர்கள் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தனர்.
உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களை மீளக்குடியமர்த்துவது குறித்து கூடுதல் கவனம் செலுத்திய தமிழக எம்.பிக்கள் குழு அதற்காக அரசாங்கத்தினால் இதுவரை முன்னெடுக்கப்பட்ட விடயங்களுக்கு தமது பாராட்டுக்களையும் தெரிவித்தது.
நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் செயற்திட்டத்துக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.
ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில், நாட்டு மக்களின் ஜனநாயக உரிமையைப் பெற்றுக்கொடுப்பதற்காக தான் நடவடிக்கை எடுத்து வருகிறேன். கொழும்பில் 65 சதவீதமான தமிழ் மக்கள் வாழ்ந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
பருவபெயர்ச்சி மழை ஆரம்பமாகும் போது நிவாரணக் கிராமங்களிலுள்ளவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக தமிழக எம்.பிக்கள் எடுத்துக் கூறினர். இதன்போது அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் சுட்டிக்காட்டப்பட்டதும், தமிழக எம்.பிக்கள் திருப்தி தெரிவித்தனர்.
இங்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ எம்.பி எதிர்வரும் இரு தினங்களுக்குள் நிவாரணக்கிராமங்களிலுள்ள பெரும் எண்ணிக்கையிலானவர்கள் மீளக் குடியமர்த்தப்பட விருப்பதாகத் தெரிவித்தார்.
தமிழக எம்.பிக்கள் குழு இலங்கை வந்து வடக்கின் நிலைமைகளை நேரில் கண்டறிந்தமைக்காக ஜனாதிபதி மகிழ்ச்சி தெரிவித்தார்.
0 comments :
Post a Comment