Wednesday, October 14, 2009

தமிழகத் தூதுக்குழுவினை கிழக்கு மாகாண முதலமைச்சர் தலைமையிலான குழுவினர் சந்திப்பு

கிழக்கு நிலவரம் குறித்து எடுத்துரைப்பு.
இலங்கையில் தமிழ் மக்களின் மீள்குடியேற்றம் வாழ்வாதாரம் குறித்து ஆராயும் பொருட்டும் உண்மை நிலைகளை கண்டறியும் முகமாகவும் இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் தமிழகத்தை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ரி.ஆர் பாலு தலைமையிலான இந்திய
குழுவினரை கிழக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான குழுவினர் நேற்று மாலை 06 மணியளவில் இந்திய இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினர். இச்சந்திப்பின்போது கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலவரம், அங்குள்ள மக்களின் மீள்குடியேற்ற விடயங்கள், மாகாண சபை உருவாக்கப்பட்டதன் பின்னரான மக்களின் வாழ்வாதார முன்னேற்றங்கள் குறித்து முதலமைச்சரினால் இந்திய தூதுக்குழுவினரிடம் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது.

இக்கலந்துரையாடலில் இந்திய தூதுக்குழுவினரினால் கிழக்கு மாகாணம் பற்றியும், மாகாண சபை எதிர்நோக்கும் நடைமுறை சவால்கள் குறித்தும் முதலமைச்சரிடம் கேட்கப்பட்டது. இதுகுறித்தும் முதலமைச்சரினால் தெழிவாக எடுத்துரைக்கப்பட்டதுடன் எதிர்காலத்தில் மத்திய அரசாங்கத்தின் உதவியுடன் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டம் குறித்தும் விளக்கினர், அத்துடன் இந்திய அரசாங்கம் கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் சில வேலைத்திட்டங்கள் குறித்தும் தனது நன்றியினை தெரிவித்ததுடன் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வான உறுதியான அரசியல் தீர்வொன்றை பெற்றுக் கொடுப்பதற்கும் மாகாண சபை முறைமையை பலப்படுத்துவதற்கும் இந்தியா பாரிய பங்களிப்பு செய்ய வேண்டும் எனவும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.

இச்சந்திப்பின்போது இந்திய தூதுக்குழுவுடன் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்த்தானிகர் ஆலோக் பிரசாத்தும், முதலமைச்சரின் பிரத்தியேக செயலாளர் அஷாத் மௌலானா, மற்றும் முதலமைச்சரின் சிரேஸ்ட ஆலோசகர் டொக்டர் விக்னேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com