ஜெனரல் சரத்பொன்சேகா அரசியலில் குதிக்கின்றாரா?
இலங்கை இராணுவத்தின் 60 வது ஆண்டு நிறைவை ஒட்டி இடம்பெற்ற இராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு ஜெனரல் பொன்சேகா நிகழ்த்திய பேச்சு, அவர் அரசியலினுள் நுழைவற்கான சாத்தியத்தை எதிர்வு கூறுவதாக த இந்து பத்திரிகை தெரிவிக்கின்றது.
வன்னியில் யுத்தம் முடிந்த கையுடன் இராணுத் தளபதியாக செயற்பட்டுவந்த ஜெனரல் சரத் பொன்சேகா அவர்கள் அப்பதவியில் இருந்து விலத்தப்பட்டு புதிய தளபதியாக லெப்.ஜென்ரல் ஜகத் ஜெயசூரியா நியமிக்கப்பட்டிருந்தார். அக்கால கட்டங்களில் ஜெனரல் சரத்பொன்சேகா அரசியலில் குதிக்கும் சாத்தியம் இருப்பதாக உள்ளுர் ஊடகங்கள் தெரிவித்திருந்தன.
இந்நிலையில் இராணுவத்தின் 60 ஆண்டு நிறைவை ஒட்டி 40 இராணுவ அதிகாரிகள், 1700 படை வீரர்கள் ஒன்றிணைந்து நடத்திய அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்டு கூட்டுப்படைகளின் பிரதான அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகா அவர்கள் பேசுகையில், இந்நாட்டை ஆட்கொண்டிருந்த பயங்கரவாதம், இராணுவ ரீதியில் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டுள்ளது. அதற்காக பல்வேறு உயர் மட்டத்திலான அடைவுகளை சந்தித்தவனாக இராணுவ சேவைக்கான அர்ப்பணிப்புமிக்க எனது கடமையினை சரிவர நிறைவு செய்துள்ளேன் எனவும் இத்தகையதொரு நிகழ்வில் உரையாற்றுவது இதுவே எனது இறுதி சந்தர்ப்பமாகவும் இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
அத்துடன் பயங்கரவாதம் இராணுவரீதியில் தோற்கடிக்கப்பட்டுள்ள இந்நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதூக்காத வகையில் நீங்கள் எதிர்காலத்தில் செயற்படுவதுடன் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கும் பொறுப்புணர்வுடன் ஒத்துழைப்பு நல்க வேண்டியது அவசியம் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்நிலையில் எதிர்க்கட்சிகளினால் உருவாக்க முயற்சிக்கப்படுவதாக கூறப்படும் கூட்டணியின் ஜனாதிபதி பொது வேட்பாளராக நிறுத்த சரத் பொன்சேகாவை இழுப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இலங்கை அரசிற்கு ஜெனரல் சரத் பொன்சேகா அவர்களுக்குமான இடைவெளி அதிகரித்துவருவதாக பேசப்படுகின்ற இத்தருணத்தில் அவருடைய மேற்படி பேச்சு அவர் அரசியலினுள் நுழைவதாக வெளிவந்த செய்திகளில் உண்மை உள்ளதாக தோன்றுகின்றது.
அதே நேரம் சரத் பொன்சேகாவுக்கு அரசு வழங்கிய விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் பதவியை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுடன் கூட்டுப்படைத் தளபதியாக அவருக்கு வழங்கப்பட்டுள்ள பதவியிலும் அவர் நீடிக்க விரும்பவில்லை என தெரியவருகின்றது. ஜெனரல் சரத்பொன்சேகாவில் பதவி நீடிப்புத் தொடர்பாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கா அவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும், பேச்சுவார்த்தைகளின் போது தான் பதவி நீடிப்பு ஒன்றினை எதிர்பார்க்க வில்லை என்ற செய்தி சரத் பொன்சேகாவினால் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் நம்பகமாக தெரியவருகின்றது.
இந்நிலமையில் ஜெனரல் சரத் பொன்சேகா மாற்றம் ஒன்றின் பொருட்டு அமெரிக்கா செல்லாம் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவரது இரு மகள் மாரும் அமெரிக்காவில் வாழ்ந்து வருவதுடன் சரத்பொன்சேகாவிற்கு அமெரிக்க நிரந்தர வதிவிட அனுமதி உண்டு என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment