Saturday, July 25, 2009

இன ஒற்றுமையும் இடம் பெயர்ந்தோர்களின் குடியேற்றமும். (புரட்சிதாசன் அஹமட்)

போரியலுக்கு பிரியாவிடை கொடுத்து சமூக, இன ஒற்றுமைக்கு கை கொடுக்கும் இந்த வரலாற்று நினைவு தினத்தில் நாம் எவ்வாறு எமக்குள் இன ஒற்றுமையை வலுப்படுத்தப் போகிறோம் என்பதுதான் அடுத்த பிரதான கேள்விக்கணையாக எம் அனைவரின் உள்ளக்கிடக்கையிலிருந்து வரும் பாரிய ஒரு பெரு மூச்சாக இருக்கிறது. இதற்கு ஒரு சிறந்த விடை காண வேண்டியது எமது நாட்டில் வாழ்கின்ற அனைத்துச் சமூகத்தினரதும் பிரதான கடமையாகும்.

எமது திரு நாட்டில் வாழ்கின்ற அனைத்து இன சமூகங்களும் தங்களது மதங்களையும், வரட்டு சுபாவத்தையும் மறந்து நாம் எல்லோரும் ஒரு தாய் மக்கள் ஒரு நாட்டுப்பிள்ளைகள் எனும் இந்த உயரிய சிந்தனையில் ஒன்றுபட வேண்டும். இதற்கென பல தியாகங்கள் செய்வதற்குத் துணிவுடன் செயற்பட வேண்டும். அப்போதுதான் உண்மையான போரியல் வெற்றியை நாம் சுவாசிக்க முடியும். இதுவே யதார்த்தமுமாகும்.

1956 ம் ஆண்டிற்குப் பின்னர்தான் இலங்கையில் இனவாதம் பிறந்தது என்று கூறலாம். திரு. எஸ்.டபிள். யூ பண்ணடாரநாயக்கா தனது சுய நலத்திற்க்காகவும், தான் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்ற அந்த குறுகிய நோக்கத்திற்காகவும் முழு நாட்டையும் இரத்தக் களரியாக்கிவிட்டு கேவலம் ஈற்றில் தன்னினத்தால் தான் சுட்டுக் கொல்லப்படடார். என்பது யாவரும் அறிந்த வரலாறு ஆகும்.

இவ்வாறான தூர நோக்கற்ற அரசியல் வாதிகளின் சுய நல அரசியல் நாடகங்களால் தொடர்ந்து இனவாதம் வளர்க்கப்பட்டு வந்ததன் காரணமாகவே நமது திருநாட்டில் இந்தப் பயங்கரவாதம் பூதாகரமாக உருவெடுத்து பெரும்பான்மைச் சமூகத்தில் பல சமத்துவவாதப் பிரதிநிதிகள் இவ்வாறான குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி தொடர்கூட்ங்களையும், கருத்தரங்குகளையும், விழிப்புணர்வுக் கூட்டங்களையும், அறிக்கைகளையும், விடுத்தும் கூட ஈற்றில் இவர்களது போராட்டம் வெற்றி பெற்ற வரலாறு முயற்கொம்பாகவே இருந்தது என்பதனை இவ்வையகமே அறியும்.

சமூகச்சீர்திருத்தவாதிகளின் நற்சிந்தனாசக்தி பாழடைந்த நிலையில் தோற்றமடைந்தமைக்குப் பிரதான காரணங்கள் பெரும்பான்மை இனத்தவர்களின் இனவாதக்கட்சியின் தோற்றமேயாகும். இரண்டு மொழிகள் பேசப்படுகின்ற இந்த திருநாட்டில் இனத்துவேசமும், பிரிவினைவாதமுமே மேலோங்கித் தாண்டவமாடி நிற்பதற்கு இந்த இனத்துவேசக் குழுக்களின் செயற்பாடே காரணமாகும்.

ஒரு நாடு பிற்போக்கான நினைக்குத் தள்ளப்படுவதற்கு பிரதான காரணம் பிரிவினை வாதமும், இனவாதமும்தான் முன்னிலை வகிக்கிறது எனலாம். அந்த வகையில் உலகில் இலங்கை 22 இடத்தினைப் பிடித்துள்ளது. இதனை அறியாதவர்கள் மிகவும் அரிது.

தற்போது யுத்தத்தின் ஓய்வு எல்லோரையும் ஒரு கனம் சிந்திக்க வைக்கின்றது. இச்சிந்தனையை நாம் முப்பத்திரெண்டு ஆண்டுகளுக்கு முன் சிந்தித்து இருந்தால் எவ்வளவு விபரீதங்களையும், நட்டங்களையும், உயிரழிவையும், பொருளாதார பின்னடைவுகளையும், அபிவிருத்தியின்மைகளையும் தடுத்திருக்க முடியும் என்பதனை நாம் அனைவரும் நமக்குள் கேள்வி கேட்டு அதற்குரிய பதிலையும் பெற்றுக் கொள்ளலாம்.

உலகில் உள்ள அனைத்தும் அழிந்து விடும், அன்பு ம்டடும் உயிர் வாழும் எனும் உயரிய தத்துவத்திற்கேற்ப நாம் அனைவரும் செயற்பட வேண்டும். அப்போதுதான் நாம் எமது இழய சந்ததியினருக்காவது ஒரு விடிவினையும், நல் வழியினையும் காட்டியவர்களாக மரணிக்க முடியும். இதற்காக நாம் அனைவரும் இன, மத, நிற, குல பேதங்களை மறந்து ஒரு தாய் பெற்ற சகோதரர்கள் போல கைகோர்த்து ஒற்றுமையுடன் வாழப் புரிந்து கொள்ள வேண்டும். இனிமேலாவது இன ஐக்கியத்தைக் கூறுபோடுவதற்கு முனைகின்றவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு சாவு மணி அடிக்க முற்படல் வேண்டும். அப்போதுதான் நமது ஒற்றுமை எனும் அந்த பசுமை புத்தெழுச்சி பெறும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

பௌத்த தர்மம் கூறுகின்ற அந்த மனிதாபிமான காருண்யம் காத்திரமாகப் பாதுகாக்கப்படல் வேண்டும். இனிமேல் எந்தச் சந்சர்ப்பத்திலும் அடாவடித்தனம், அட்டூழியம், இனவாதம், பிரிவினைவாதம். மொழிவாதம் போன்றவைகளைச் சிறுபான்மையினருக்கு எதிராகச் செயற்படுத்த அனுமதியளிக்கப்படக்கூடாது. இதற்குச் சிறந்த உதாரணமாக விட்டுக்கொடுக்கும் தன்மையினையும். புரிந்துணர்வுத் தன்மையினையும் நாம் உதாரனமாகக் கூறலாம்.

தற்போது யுத்தத்தின் தோல்வியில் துவண்டு கிடக்கும் தமிழ் பயங்கரவாதிகளும், அப்பாவித் தமிழ் மக்களும் இனிமேலும் தங்கள் பிரிவினைவாதப் போக்கினைக் கடைப்பிடிக்காத வகையில் அவர்களை நாம் வழிநடாத்த முற்படல் வேண்டும். தற்போது இவர்கள் துன்பித்தும், குற்ற உணர்வாலும் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நாம் இரு அன்புக் கரங்களையும் நீட்டி அவர்களுக்கு உதவி செய்ய முற்பட வேண்டும். அப்போதுதான் அவர்கள் தங்களது பகைமைத் தன்மையினையும் குற்ற உணர்வினையும் தன்னகத்திருந்து விலக்களிப்பார்கள் என்பது திண்ணம்.

ஒரு இனம் துன்பப்படும் போது மற்ற இனம் குதூகலமாக இருப்பது பெளத்த தர்மத்திற்கே பொருந்தாத ஈனச் செயலாகும் என்று பௌத்த தர்மம் எச்சரிக்கை செய்கின்றமையினை பெரும் பான்மைச் சமூகம் நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும். மானிடம் வாழ்கின்ற இந்த வையகத்தில் மக்கள் வாழ வழிவகை சமைக்க முற்படக் கூடாது.

இன்று ஒரு வேளைச் சோற்றுக்கே நீண்ட வரிசையில் வயது வித்தியாசமின்றி பாத்திரமேந்தி கொட்டும் வெயிலில் கொட்டாவி விட்டுக் கொண்டிருக்கும் கொடுமையினை நாம் நாளாந்தம் நேரிலும், ஊடகங்களிலும் பார்த்த வண்ணமிருக்கிறோம். இந்தக் கதியில் வாழ்கின்ற இந்த மககளுக்கு நாம் என்ன செய்ய முடியும்? அவர்களது பசியினை எவ்வாறு போக்கலாம்? அவர்களை எப்படி பழைய நிலைக்குக் கொண்டு போகலாம்? என்ற சிந்தனையில் நாம் வாழ வேண்டும். இனிமேலாவது நாம் ஒற்றுமை எனும் அந்தக் கயிற்றைப் பலமாகப் பற்றிப் பிடிக்க முற்படுவோம், ககோதரர்கள் போல் வாழப் பழகிக் கொள்வோம்.

இன்று சுமார் மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட அப்பாவிப் பொது மக்கள் மிகவும் கொடிய யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு திறந்த வெளிச் சிறைகளில் சிதறி வாழ்கின்றனர். இவர்களது சொந்த இடங்களுக்கு மீண்டும் மீளவும் குடியமர்த்துவதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். வடக்கின் வசந்தம் எனும் அந்த ஆறு மாத காலத்திற்குள் குறிப்பிட்டவர்கள் குறிப்பிட்ட இடங்களில் வாழ்வதற்குரிய வாழ்வாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள முனைப்புக் காட்ட வேண்டும். நொந்து போன உள்ளங்களுக்கும் ஊனமுற்ற உடல்களுக்கும் சிறந்த மருந்தினை நாம் வழங்க வேண்டும்.

இன்று இலங்கையில் சேவை புரிகின்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்குரிய கட்டுப்பாடுகளைத் தளர்த்தி அவர்களின் உதவிகளை நாம் பெற்றுக் கொள்ள முற்படல் வேண்டும். அதிகாரத் திணிப்பினை அகற்றி அன்பு வலையினை வீசி அவசரமாக அவர்களுக்கு இருப்பிடங்களையும் நிரந்தரமாக நிம்மதியுடன் வாழ்வதற்குரிய தொழில்படிப்பினையும் பெற்றுக்கொடுக்க முற்பட வேண்டும்.

யுத்தத்தில் வெற்றி பெற்ற இறுமாப்பினைத் தவிர்த்து இருண்டு போன அந்த அப்பாவித் தமிழ் மக்களுக்கு நல்ல வழியினையும், உபதேசத்தினையும் வழங்கி அவர்களின் வாழ்க்கைக்கு ஒளியூட்ட வேண்டும். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இந்த தமிழ் மக்களைப் பற்றி விமர்சனம் செய்வதினைத் தவிர்த்து எதிர்காலத்தில் அவர்கள் எவ்வாறு வாழ வேண்டும்? அவர்களுக்குரிய அடிப்படை உரிமை மறுக்கப்படுகிறதா? அதனை எவ்வாறு சரி செய்வது? போன்ற விடயங்களில் அரசு மிகவும் ஆழ்ந்த கவனம் செலுத்த வேண்டும்.

இனிமேலாவது இந்நாட்டில் தமிழ் மக்கள் இரண்டாம் தர மக்களாகவும் முஸ்லிம்கள் மூன்றாம் தர மக்களாகவும் கிறிஸ்தவர்கள் நான்காம் தர மக்களாகவும் நடத்தப்படக்கூடாது. எல்லோரும் முதலாம் தர மக்களே எனும் அந்த உயரிய அந்தஸ்தால் மதிக்கப்பட வேண்டும். இதனை அரசியலமைப்புச் சட்டத்தால் மாற்றம் செய்ய வேண்டும். இலங்கைத் திருநாட்டில் பிறந்த எல்ரோரும் முதலாம் தரப் பிரஜையே என்ற அந்த கோட்பாடு முதன்மைப்படுத்தப்பட வேண்டும்.

இடம் பெயர்ந்து அல்லலுறும் இந்த அநாதை ஜீவன்கள் மேலும் துன்பத்தாலும், இடரினாலும் சிக்கித் தவிக்காமல் அவர்களைத் தங்களது சொந்த இடங்களுக்கு மீளக்குடியமர்த்த அரசு துரித நடவடிக்கையினை மேற்கொள்வதுமே காலத்தின் தேவையாக இருக்கிறது.

1977 முற்பகுதியில் இருந்த அந்த தொலைந்து போன ஒற்றுமை 2009 திலிருந்து புதிய பரிணாமப்படுத்தப்படல் வேண்டும். அப்போதுதான் நாம் இழந்து போன அந்த ஒற்றுமையினையும், ஐக்கியத்தினையும் மீளப் புதுப்பித்துக் கொள்ள முடியும்.

வட கிழக்கு மாகாணத்தில் புலிப் பயங்கரவாதிகளின் கட்டுப்பாடடின் கீழ் நிர்வகிக்கப்பட்ட சகல பிரதேசங்களும் தற்போது அரசாங்கத்தின் கட்டமைப்புக்குள் வந்துள்ளது. இவைகள் தற்போது பாழடைந்த, பசுமையற்ற, பாலை வனங்களாகவே காட்சி தருகிறது. இச் சோபனையிழந்த பிரதேசத்தை மீழவும் புணரமைத்து இதிலிருந்து இடம் பெயர்ந்த மக்களைக் குடியமர்த்தி பசுமைப் புரட்சியினை ஏற்படுத்த அரசாங்கம் தன்னால் முடியுமான சகல வழங்களையும் பாவிக்க வேண்டும்.

மீள் குடியேற்றம் இடம் பெறுகின்ற இப்பிரதேசம் ஒரு ஊழலற்ற பொது நலம் பேணக்கூடிய குறிப்பிட்டவர்களின் நிர்வாகத்தில் நடை முறைப்படுத்தப் படுமாயின் வீண் விரயத்தையும், ஊழல் மோசடிகளையும் கட்டுப்படுத்த முடியும். எல்லோரும் இப்போது விரும்புவது அமைதியான வாழ்க்கையில் சமாதானமான சுவாசக்காற்றைச் சுவாசித்து நிம்மதியாகவும் ஒற்றுமையாகவும் வாழ்வதையுமேயாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com