Thursday, June 25, 2009

கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரி பதவியை அதிகாரம் அளிக்கப்பட்ட பதவியாக்க முடிவு

கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி பதவியை அதிகாரம் அளிக்கப்பட்ட சட்டபூர்வ பதவியாக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதுவரை காலமும் இப்பதவி நிலை சம்பிரதாயபூர்வமாகவே இருந்தது என்று பிரதமர் தெரிவித்ததுடன் இதற்கான சட்டமூலத்தையும் சபையில் சமர்ப்பித்தார்.

கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி பதவிக்கு சட்டபூர்வமான அந்தஸ்து வழங்குவதே இந்த சட்டமூலத்தின் நோக்கமாகும் என பிரதமர் ரத்னசிறி விக்கிரம நாயக்க தெரிவித்தார்.

கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி சட்டமூலத்தை பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க சபையில் நேற்று சமர்ப்பித்துப் பேசும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாராளுமன்றம் நேற்று சபாநாயகர் வி. ஜே. மு. லொக்குபண்டார தலைமையில் கூடியது. சபையின் வழமையான நடவடிக்கையினை அடுத்து பிரதமர் மேற்படி சட்டமூலத்தை சமர்ப்பித்துப் பேசினார்.

இதுவரை காலம் இருந்த கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி என்ற பதவி நிலைக்கு திறைசேரியிலிருந்து செலவுக்காக நிதிகூட பெற முடியாத நிலை இருந்தது.

இச்சட்டமூலத்தினூடாக இப்பதவி நிலைக்கு சட்டரீதியான அந்தஸ்தும் பொறுப்புகளும் எல்லைகளும் வகுக்கப்படுகின்றன.

கடந்த கால அனுபவங்களைக் கொண்டு படையணிகளுக்கிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் முகமாக ஆலோசனைச் சபை ஒன்றும் ஏற்படுத்தப்படவுள்ளது.

கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி பதவிக்கு நியமிக்கப்படுபவர் நான்கு வருடங்களுக்கு பதவியை வகிப்பார். இப்பதவிக்காலம் முதலில் இரண்டு வருடங்களாகவும் அடுத்து இரண்டு வருடங்களாகவும் சட்ட மூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் அநேகரின் வேண்டுகோளுக்கிணங்க பதவிக்காலம் முதலில் இரண்டு வருடங்களாகவும், அதன் பின்னர் தலா ஒவ்வொரு வருடங்களாகவும் வழங்க வேண்டும் என்று திருத்தம் செய்யப்பட்டுள்ளது என பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க தெரிவித்தார்.


ஜோன் அமரதுங்க ஐ.தே.க எம்.பி

கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி என்ற பதவி நிலையை சட்டபூர்வமாக்குவதன் ஊடாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கான அதிகாரங்கள் எல்லைகள் அற்ற விதத்தில் அதிகரிக்கப்படுகிறது.

இந்த எல்லைகள் அற்ற அதிகாரத்தால் ஜனநாயக வரைமுறைக்கு ஏற்படப்போகும் நிலைமை குறித்து சந்தேகம் ஏற்படுகிறது.


விமல் வீரவன்ஸ ஜே.என்.பி எம்.பி


பாதுகாப்பு பணியாளர் தொகுதியினரின் தலைமை அதிகாரி என்ற பதவி நிலை வெறுமனே பெயருக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இனிமேல் அது அதிகாரமளிக்கப்பட்ட பதவி நிலையாக இருக்கும்.

எமது நாட்டில் பயங்கரவாதம் தலை விரித்தாடியது. இன்று முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டது. இனிமேல் எந்த தசாப்தங்களிலும் இவ்வாறான நிலை தலைதூக்காமல் இருப்பதற்கு எல்லா பிரிவுகளிலும் நடவடிக்கைகள் எடுக்கப்படல் வேண்டும்.

இந்தச் சட்டமூலத்தையும் அதன் ஒரு அங்கமாகவே கருதுகிறேன். கடந்த கால மனிதாபிமான நடவடிக்கையின்போது பாதுகாப்பு செயலாளர் என்ற பதவி நிலைக்குரிய அதிகாரங்களையும் விஞ்சி முப்படைகளையும் கூட்டிணைத்து முன்னெடுத்தாலேயே வெற்றி இலக்கை எட்டமுடிந்தது.

நிர்வாகத்திற்குள் மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருந்த பாதுகாப்பு செயலாளர் என்ற பதவியிலிருந்தவர் ஜனாதிபதியின் சகோதரர் என்பதாலேயே நிர்வாகம் என்ற பதவி நிலையையும் விஞ்சிய நிலையில் கூட்டுப்படைகளை ஒன்றிணைக்கக்கூடிய சக்தியை பிரயோகித்தார்.

பாதுகாப்பு செயலாளராக வேறு எவராவது இருந்திருந்தால் இது சாத்தியப்பட்டிருக்காது. இனிவரும் காலங்களில் அதிகாரமளிக்கப்பட்ட பதவி நிலையாக இருக்கலாம். எதிர்காலத்தில் புலிகள் போன்ற பிரிவினைவாத இயக்கங்கள் தலைதூக்க இடமளிக்கக்கூடாது என்பதாலேயே அதிகாரமளிக்கப்பட்ட கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி சட்டமூலம் கொண்டு வரப்படுகிறது.

புலிகள் ஒழிக்கப்பட்டாலும் புலிகளின் நிழல்கள் ஆங்காங்கே விழுந்த வண்ணம் உள்ளன.

வடக்கு, கிழக்கு பகுதிகளில் இராணுவ முகாம்கள் அமைக்க இடமளிக்க வேண்டாம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் இந்தியாவுக்கு சென்று கூறியிருக்கிறார்கள்.

நாட்டின் எந்தப் பகுதியில் எங்கே இராணுவ முகாம் அமைக்கப்போகிறோம் என்று தீர்மானிக்கும் உரிமை இலங்கை அரசுக்கு இருக்கிறது என்பதை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மறந்துவிடக்கூடாது. இவ்வாறான நடவடிக்கைகளையும் அவர்கள் இனியாவது நிறுத்தவேண்டும்.


இரா. சம்பந்தன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி

கூட்டுப்படையணிகளின் தலைமை அதிகாரி என்ற பதவி நிலை ஒன்றும் புதிதல்ல. பழையதுதான். இப்போது அதிகாரமளிக்கப்பட்ட பதவி நிலையாக்கப்படுகிறது.

இந்தச் சட்டமூலத்தை கொண்டு வருவதன் மூலம் அரசாங்கம் இராணுவ மயப்படுத்தலை தொடர்ந்தும் வைத்திருக்க விரும்புவதாகவே கருதுகிறேன்.

புலிகள் இயக்கம் என்ற ஒன்று இப்போது இல்லை. இந்த நிலையில் இராணுவ மயப்படுத்தல் ஒன்று அவசியமில்லை. ஒருவேளை தொடர்ந்தும் இவ்வாறான ஒரு அச்சுறுத்தலிலேயே நாடு இருக்கவேண்டும் என்று அரசாங்கம் நினைக்கிறதா?

தமிழர் பிரச்சினை என்று ஒன்று இன்னமும் இருக்கிறது. இதனை இராணுவ ரீதியில்தான் தீர்க்க நினைக்கிaர்களா? ஒருபோதும் இராணுவ ரீதியாக தீர்க்க முடியாது. அப்படி முயற்சித்தால் வேறு பிரச்சினைகள் தலைதூக்கும். புலிகள் இல்லாத நிலையில் தமிழர் பிரச்சினையை பேச்சுவார்த்தைகள் மூலமே தீர்க்க வேண்டும். இராணுவ ரீதியாக அல்ல என்பதை அரசாங்கம் நினைவில் வைத்திருக்க வேண்டும்.

கடந்த காலத்தில் படைக்கு ஆட்சேர்ப்பு செய்தீர்கள். 98 சதவீதம் பெரும்பான்மையினரிடையே தான் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டது. இன்னும் ஒரு லட்சம் பேர் சேர்க்கப்படவுள்ளதாக அறிவித்துள்Zர்கள். இந்த ஆட்சேர்ப்பின்போதும் விகிதாசார முறை கடைப்பிடிக்கப்படுமா?

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com