386 சிவிலியன் நோயாளர்கள் கப்பல் மூலம் திருமலை வருகை
முல்லைதீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் காயமடைந்த நிலையிலுள்ள 386 சிவிலியன்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக ஐ. சி. ஆர். சி.யின் கப்பல் ஐந்தாவது தடவையாகவும் சிவிலியன்களை திருகோணமலைக்கு அழைத்து வந்திருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
ஐ. சி. ஆர். சியின் கொடியுடன் கூடிய ‘எம். வி. க்ரீன் ஓசன்’ எனும் கப்பலே கடற்படையினரின் பூரண ஒத்துழைப்புடன் சுகயீனம் மற்றும் காயங்களுக்குள்ளாகியுள்ள 386 சிவிலியன்களை நேற்று முன்தினம் (24) திருகோணமலைக்கு அழைத்து வந்திருந்தது.
திருகோணமலைக்கு வந்த சிவிலியன்களுக்கான உடனடி மருத்துவ சிகிச்சைகளை கடற்படையின் மருத்துவ குழுவினர் அளித்தனர். பின்னர் இவர்கள் உடனடியாக திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். வைத்தியக் குழுவினர் இவர்களுக்கான சிகிச்சைகளை முன்னெடுத்து வருகின்றனர். மோதல்கள் காரணமாக பாதிக்கப்பட்டு திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோருக்கு சிகிச்சையளிப்பதற்கு தேவையான அனைத்து மருந்துப் பொருட்களும் அங்கே அனுப்பி வைக்கப்பட்டுள்ள அதேநேரம் மருத்துவர்களும் போதியளவில் இருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஐ. சி. ஆர். சி முதல் தடவையாக கடந்த 10ம் திகதி செவ்வாய்கிக்கிமை 356 சிவிலியன்களையும் இரண்டாவது தடவையாக கடந்த 12ம் திகதி 403 சிவிலியன்களையும் மூன்றாவது தடவையாக கடந்த 16ம் திகதி 440 சிவிலியன்களையும் நான்காவது தடவையாக கடந்த 20ம் திகதி 397 சிவிலியன்களையும் கப்பல் மூலம் திருகோணமலைக்கு அழைத்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment