Wednesday, January 1, 2020

பொதுத்தேர்தலை எதிர்கொள்ள ஐ.தே.க புதிய வியூகத்தை வகுக்கின்றது. பிரதமர் வேட்பாளராக கருவை களமிறக்க திட்டம்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் புதிய வியூகம் அமைத்து போட்டியிடுவது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி ஆராய்ந்து வருகிறது. பிரதமர் வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் தற்போதைய சபாநாயகர் கரு ஜயசூரியவை களமிறக்குவது தொடர்பில் ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கூட்டுக் கட்சிகளின் தலைவர்கள் கலந்துரையாடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று முன்தினம் (30) ஐக்கிய தேசிய முன்னணி தலைவர்களது கூட்டம் இடம்பெற்றுள்ளது.

ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்தில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் சம்பிக்க ரணவக்க, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பிரதித் தலைவர் பி. திகாம்பரம், முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், ஐ.தே.க.வின் செயலாளர் அகில விராஜ் காரியவசம், பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க உட்பட வேறு சிலரும் இதில் பங்கேற்றுள்ளனர்.

இந்தக் கூட்டத்தின்போது ஐ.தே.க.வுக்குள் காணப்படும் முரண்பாடுகளுக்கு தீர்வு காண்பது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. அத்துடன் பொதுத் தேர்தலை சந்திப்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது.

புதிய ஜனாதிபதியும் இடைக்கால அரசாங்கமும் பதவியேற்றுள்ள நிலையில் கைதுகளும் மனித உரிமை மீறல்களும் இடம்பெற்று வருவதனால் இவற்றை எதிர்கொள்ளும் வகையில் ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் மனித உரிமைகள் குழுவொன்றையும் சட்டத்தரணிகள் குழுவொன்றையும் அமைப்பது என்று இங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனைவிட ஜனவரி மாதம் 2ஆம் வாரத்துக்குள் கட்சிக்குள் காணப்படும் முரண்பாட்டு நிலைக்கு தீர்வினைக் காண வேண்டியதன் அவசியம் குறித்தும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் இங்கு வலியுறுத்தியுள்ளனர்.

இதேவேளை எதிர்வரும் பொதுத் தேர்தலை புதிய வியூகம் அமைத்து எதிர்கொள்வது குறித்தும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் ஆராய்ந்துள்ளனர். பாராளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளாக கரு ஜயசூரியவை நியமித்து அவரது தலைமையின் கீழ் போட்டியிடுவது எனறும் இவ்விடயம் குறித்து விரைவில் தீர்மானத்தை எடுப்பது எனவும் இவர்கள் தீர்மானித்துள்ளனர்.

இவ்விடயம் குறித்து பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் சஜித் பிரேமதாசவுடனும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இவ்வாறு கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்றத் தேர்தலை சந்திப்பது என்றும் எதிர்க்கட்சித் தலைவராகவும் ஐக்கிய தேசிய முன்னணி கூட்டின் தலைவராகவும் சஜித் பிரேமதாசவை நியமிப்பது குறித்து பரிசீலிப்பது என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

2025ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் சஜித் பிரேமதாச போட்டியிட வேண்டுமானால் பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவதைத் தவிர்த்து கரு ஜயசூரியவுக்கு இடம் வழங்க வேண்டுமென்று பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிணங்கவே புதிய வியூகம் அமைத்து தேர்தலை சந்திப்பது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேர்தலின்போது பாரிய கூட்டணி அமைத்து போட்டியிடுவது என்றும் அதில் ஜே.வி.பி.யை இணைத்துக்கொள்வது குறித்து கலந்துரையாடுதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் சஜித் பிரேமதாசவிற்கும் இடையில் நேற்று சந்திப்பு இடம்பெற இருந்தபோதிலும் இச் சந்திப்பு இறுதி நேரத்தில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

Read more...

வடக்கிலுள்ள 120 தமிழ் பொலிஸாரை இடமாற்ற அதிரடி நடவடிக்கை! நீலிக்கண்ணீர் வடிக்கும் வல்லூறுகள்

இடமாற்றம் பெற்றுச்செல்லும் வடமாகாணத்திற்கான சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வடமாகாணத்தில் கடமையாற்றும் 120 பொலிஸாரை இடமாற்றம் செய்வதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். இவ்வுத்தரவானது அவரது அதிகார எல்லகை;குட்பட்ட விடயமாகும்.

இவ்வாறானதோர் அதிரடி உத்தரவை அவர் பிறப்பித்திருப்பதன் பின்னணியில் பல்வேறு காரணங்கள் காணப்படுகின்றது. குறிப்பாக வடமாகாணத்தில் பணிபுரியும் பொலிஸ் உத்தியோகித்தர்கள் பல்வேறு வகையான குற்றச்செயல்களுடன் தொடர்புடையயோருடன் தொடர்புகளை பேணிவருவதுடன் அவர்களுக்கு உறுதுணையாக இருந்து வருவதாக மக்களிடமிருந்து கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் பிரகாரமே மேற்படி முடிவுக்கு சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் வந்துள்ளதாக அறியமுடிகின்றது.

இவ்வுத்தியோகித்தர்கள் பிரதேசங்களில் இடம்பெறும் குற்றச்செயல்களுக்கு துணைபுரிவதுடன் விசாரணைகளின்போது பக்கசார்பாக நடந்து கொள்வதாகவும் அதற்காக லஞ்சம் பெறுவதாகவும் மக்கள் தொடர்ச்சியாக முறையிட்டு வருகின்றனர். அத்துடன் குற்றவாளிகளை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொள்ளுகின்றபோது உள்ளிருந்த தகவல் வழங்குதல்போன்ற இரட்டைச் செயற்பாடுகளையும் இவர்கள் மேற்கொண்டுவருவதாக சிரேஸ் பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் இலங்கைநெட்டிடம் தெரிவித்தார்.

பொதுமக்களிடம் குறித்த இடமாற்றம் தொடர்பாக கருத்துகேட்டபோது, தமிழ் பொலிஸ் உத்தியோகித்தர்கள் தொடர்பில் அவர்கள் சார்பான எவ்வித அபிப்பிராயத்தையும் பெற்றுக்கொள்ளமுடியவில்லை என்பதுடன் அவர்கள் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுகின்றனர் என்ற கருத்தே கிடைக்கப்பெற்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

எது எவ்வாறாயினும் மேற்படி இடமாற்றத்திற்கு எதிராக அவர்கள் பல்வேறு தரப்புக்களிடம் முறையிட்டுள்ளனர். அத்துடன் சில பொலிஸ் அதிகாரிகள் தமிழ் பொலிஸ் உத்தியோகித்தர்கள் சிலரின் இடமாற்றத்தை ரத்துச் செய்வதற்கு மேல்முறையீடு செய்துள்ளனர்.

இந்நிலையில் மேற்படி இடமாற்றத்தை இனரீதியான பாகுபாடாக காட்ட சிலர் முற்பட்டு வருகின்றமை கண்டனத்திற்குரியதாகும்.

Read more...

வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வோரை நவீன முறையில் கண்காணிக்கின்றோம்.. யாப்பா

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் உருவாக்கப்படவுள்ள, தேசிய தரவு மையத்தின் ஊடாக வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வோர், திரும்பி வருவோரைக் கண்காணிக்க முடியுமென இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

தேசிய தரவு மையம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். லக்ஷ்மன் யாப்பா மேலும் கூறியுள்ளதாவது, வெளிநாடு செல்பவர்களின் இரண்டாவது பயண இலக்கை இந்த அமைப்பு மூலம் கண்காணிக்க முடியும்.

அத்துடன் நாட்டின் சட்டத்திட்டங்களை மீறி தப்பி ஓடுபவர்களை கண்காணிக்கவும் இது உறுதுணையாக அமையும்.

அந்தவகையில் எந்தவொரு குடிமகனின் இறப்பும் மூன்று மாதங்களுக்குள் இந்த தரவு மையத்தில் பதியப்பட வேண்டும்.

மேலும் தேவை ஏற்படின் இவ்விடயம் தொடர்பாக எதிர்காலத்தில் தரவு பாதுகாப்பு சட்டங்கள் இயற்றப்படும்.

தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதிப் பத்திரம், குடிவரவு மற்றும் குடியகல்வு ஆவணங்கள், பிறப்பு மற்றும் இறப்பு பதிவு மற்றும் ஏனைய அனைத்து தனிப்பட்ட தரவுகளும், தேசிய தரவு மையத்தின் கீழ் கொண்டு வரப்படும் என குறிப்பிட்டார்.

Read more...

பாதுகாப்பு அமைச்சை ஜனாதிபதியின் கீழ் கொண்டுவர அரசியல் யாப்புதிருத்தத்தை கொண்டுவருகின்றார் ராஜபக்ஷ!

19 ம் அரசியல் யாப்பு திருத்தத்தின் ஊடாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்கள் பல பறிக்கப்பட்டிருந்தமை யாவரும் அறிந்தவிடயம். இந்நிலையில் மீண்டும் ஜனாதிபதிக்கு அதிக அதிகாரங்களை கொடுக்கும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ அரசியல் யாப்பு திருந்த முன்மொழிவுகளை கொண்டுவருகின்றார்.

21 , 22 என பெயரிடப்பட்டுள்ள இத்திருத்தங்களுடாக ஜனாதிபதி பாதுகப்பு அமைச்சராக செயற்பட முடிவதுடன் மேலும் அமைச்சுக்களை அவர் விரும்பினால் வைத்துக்கொள்ளவும் யாப்பு இடம்கொடுக்கின்றது.

19 வது திருத்தத்தின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை மீட்டெடுப்பதற்காக இரண்டு அரசியலமைப்பு திருத்த மசோதாக்களை ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ முன்வைத்துள்ளார்.

இந்த இரண்டு மசோதாக்களும் தனிப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரின் பிரேரணையின் பேரில், இருபத்தோராம் மற்றும் இருபத்தி இரண்டாவது அரசியலமைப்பு திருத்த மசோதாக்களாக வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி, ஜனாதிபதி ஜனாதிபதியின் கீழ் பாதுகாப்பு அமைச்சு மற்றும் வேறு சில அமைச்சுப் பதவிகளையும் ஜனாதிபதி வகிக்க முடியும்.

பத்தொன்பதாம் திருத்தத்தின்படி, பிரதி மற்றும் அமைச்சரவை அல்லாத அமைச்சுகளின் எண்ணிக்கை 40 ஐ தாண்டக்கூடாது.

ஆனால், எம்.பி. விஜயதாச ராஜபக்ஷ முன்வைத்த இருபத்து இரண்டாவது திருத்தத்தின்படி, பிரதி மற்றும் அமைச்சரவை அல்லாத அமைச்சர்களின் எண்ணிக்கை 30 ஐ தாண்டக்கூடாது.

பத்தொன்பதாம் திருத்தத்தின்படி, அரசியலமைப்பு சபையின் ஒப்புதலுடன் உச்ச நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகள் நியமிக்கப்பட வேண்டும்.

இருப்பினும், புதிய திருத்தங்களின்படி, அரசியலமைப்பு சபையின் ஒப்புதல் இல்லாமல் ஜனாதிபதி உச்சநீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு நீதிபதிகளை நியமிக்க முடியும். இதற்காக ஜனாதிபதி தலைமை நீதிபதியிடம் கலந்தாலோசிக்க வேண்டும்.

புதிய திருத்தத்தின்படி, சட்டமா அதிபர், கணக்காளர் நாயகம், பொலிஸ் மாஅதிபர், நிர்வாக விவகாரங்களுக்கான பாராளுமன்ற ஆணையாளர் நாயகம் (ஒம்புட்ஸ்மேன்) மற்றும் பாராளுமன்ற பொதுச்செயலாளர் ஆகியோரின் நியமனம் அரசியலமைப்பு சபையிலிருந்து நீக்கப்படும்.

அந்த நியமனங்கள் பிரதமரிடம் கேட்கப்பட்டு, ஜனாதிபதியினால் நியமிக்கப்பட வேண்டும். மேலும், விஜயதாச ராஜபக்ஷ முன்வைத்த 21 ஆவது திருத்தத்தின்படி, ஒவ்வொரு அரசியல் கட்சியும் குறித்த தேர்தல் தொகுதிக்காக பாராளுமன்ற உறுப்பினரைத் தெரிந்துகொள்ள வேண்டியது முழு வாக்குகளில் எட்டில் ஒரு பங்கிற்காகு மேலாகும்.

தற்போதுள்ள அரசியலமைப்பின் படி, மொத்த வாக்குகளில் இருபதில் ஒரு பங்கிற்கும் குறைவான வாக்குகளைப் பெறும் ஒவ்வொரு அரசியல் கட்சியும் அந்தந்த வாக்காளர்களுக்கு ஒரு பிரதிநிதியைத் தேர்ந்தெடுப்பதற்கு தகுதியற்றதாகின்றது.

விஜயதாச ராஜபக்ஷவினால் இந்த 21 ஆவது மற்றும் 22 ஆவது திருத்தச் சட்டம் சென்ற 27 ஆம் திகதி முன்வைக்கப்பட்டது. இவ்விடயம் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியில் சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவரான விஜித்த ஹேரத் ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போது: விஜயதாச ராஜபக்ஷவினால் கொண்டுவரப்படவுள்ள திருத்தச் சட்டங்கள் முழுமையாக கோத்திரவாதத்தை அடிப்படையாகக் கொண்டதாகவே இருக்கின்றது. அவர் சொல்கின்ற 21 ஆம் 22 ஆம் திருத்தச் சட்டங்கள் மீண்டும் 18 ஆவது அரசியல் யாப்பு அதிகாரங்களின்பாலே தள்ளப்படுவதாக உள்ளது. ஜனாதிபதியிடம் தற்போது இல்லாத சில அதிகாரங்களை மீண்டும் அவருக்கு வழங்கவே அவர் முயற்சி செய்கின்றார். பிரதமரும் ஜனாதிபதியும் கலந்தாலோசித்து தமக்குத் தேவையான முறையில் நியமனங்களை எதேச்சையாக வழங்குவதற்கு அவரால் முன்வைக்கப்படவுள்ள திருத்தச்சட்டங்கள் உதவிபுரிகின்றனவே தவிர, அதனால் எந்தவித நன்மையும் ஏற்படப் போவதில்லை. எனவே, அவரால் முன்வைக்கப்படவுள்ள திருத்தச் சட்டங்கள் தொடர்பில் முழுமையாக எதிர்ப்புத் தெரிவிக்கின்றேன் எனவும் குறிப்பிட்டார்.

Read more...

இரு வங்கிகளை மூடிச்செல்ல முனைகின்றனர். வைப்பிலிடுவோர் அவதானம்.. !

'எக்ஸிஸ் பேங்க் லிமிடட்' மற்றும் 'ICICI பேங்க் லிமிடட்' ஆகிய வங்கிகள் இலங்கையில் மேற்கொண்டுவருகின்ற வியாபார நடவடிக்கைகளை நிறுவத்துவதற்கு, அவ் வங்கிகளின் தலைமை நிறுவனங்களின் வேண்டுகோளின் பேரில் குறித்த வங்கி நடவடிக்கைகளை முடக்குவதற்கு இலங்கை மத்திய வங்கியின் நிபந்தனையின் கீழ் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதற்கேற்ப, தற்போது இந்த வங்கிககளில் பொதுமக்கள் வைப்பிலிடுவது உள்ளிட்ட வங்கி வியாபாரத்தில் ஈடுபடுதல் போன்ற நடிவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அனுமதியில்லை என மத்திய வங்கி குறிப்பிடுகின்றது.

இந்த வங்கிக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதிப் பத்திரம், இந்நாட்டில் அவ்வவ் வங்கி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டதும் முழுமையாக இரத்துச் செய்யப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

வவுனியா குளத்திற்குள் வானொன்று நீச்சலடிக்கச் சென்றதில் நால்வர் காயம்!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து திரும்பிய வாகனமொன்று வவுனியா, கல்குண்டாமடுவில் குளத்திற்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் காயமடைந்து வவுனியா பொது வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (01) இடம்பெற்ற குறித்த விபத்து தொடர்பாக தெரிய வருகையில்,

அதிகாலை கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி சென்றுகொண்டிருந்த ஹயஸ் ரக வானொன்று கட்டுப்பாட்டை இழந்து வவுனியா, ஏ9 வீதியில் உள்ள கல்குண்டாமடு குளத்தினுள் பாய்ந்து மூழ்கியுள்ளது.

எனினும் வாகனத்தில் பயணித்தவர்கள் விரைவாக செயற்பட்டு வாகனத்திலிருந்து உடனே வெளியேறியதால் உயிர் தப்பியுள்ளனர்.

குறித்த வானில் நான்கு பேர் பயணித்துள்ளதோடு, அவர்கள் காயங்களுக்குள்ளான நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து தொடர்பாக ஈரப்பெரியகுளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Read more...

காணிப்பிணக்கை தீர்க்க பூநகரியில் லஞ்சம் வாங்கிய உத்தியோகித்தர் தொடர்பில் ஜனாதிபதியிடம் முறைப்பாடு.

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் காணி உத்தியோகத்தர் ஒருவருக்கு இலஞ்சம் கொடுத்த ஒருவர் தனது தனது விடயத்தை காணி உத்தியோகத்தர் தீர்க்கவில்லை எனத் தெரிவித்து ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது

பூநகரி முழங்காவில் பிரதேசத்தில் நாச்சிக்குடா சந்தியில் வியாபார நிலையம் நடாத்திவருகின்ற ஒருவர் தனது காணி விடயம் தொடர்பில் பிரதேச செயலக காணி உத்தியோகத்தரை நாடியுள்ளார். காணி உத்தியோகத்தர் குறித்த காணிப் பிணக்கை தீர்ப்பதாக இருந்தால் தனக்கும், பிரதேச செயலாளருக்கும் பணம் தேவை என தெரிவித்துள்ளதாகவும், அதனடிப்படையில் 35 ஆயிரம் ரூபா காசோலை ஒன்றையும், 15 ஆயிரம் ரூபா பணத்தையும் காணி உத்தியோகத்தருக்கு வழங்கியிருக்கின்றார் ஆனால் காணி உத்தியோகத்தர் பணத்தை பெற்றுவிட்டு ஆறுமாதங்கள் கடந்தும் தனது காணி விடயத்தை தீர்க்கவில்லை எனத் தெரிவித்து குறித்த நபர் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

முறைப்பாட்டுக் கடிதத்தின் பிரதியை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கும், மத்திய மற்றும் மாகாண காணி ஆணையாளருக்கும் கிளிநொச்ச மாவட்ட அரச அதிபருக்கும் பிரதியிட்டுள்ளார்.


இலஞ்சம் கொடுப்பதும் தவறு வாங்கும் தவறு என்று சட்டம் கூறுகின்ற நிலையில் இலஞ்சம் வழங்கியவர் முறைப்பாடு செய்திருப்பது ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்தோடு இம்முறைப்பாட்டின் உண்மைத்தனைமையினை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச செயலாளர் மற்றும் உரிய அதிகாரிகளை பொது மக்கள் கோரியுள்ளனர்.


Read more...

புதுவருடத்தின் அதிகாலையில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் பலி!

புதுவருட தினமான இன்று அதிகாலை 4.00மணியளவில் கிளிநொச்சி கனகபுரம் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

தம்புள்ளையிலிருந்து மரக்கறிகளை ஏற்றிய பாரஊர்தி கிளிநொச்சி கனகபுரம் பொருளாதார மத்திய நிலையத்திற்கு மரக்கறியை விநியோகித்து விட்டு திரும்பி வருகின்ற வேளை எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் குறித்த பாரஊர்தியுடன் மோதியதில் இரு இளைஞர்களும் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர்.

கிளிநொச்சி உதயநகர் மேற்கைச்சேர்ந்த 23வயதுடைய வரதராஜா ஜெமினன் மற்றும் யாழ்ப்பாணம் செட்டியார் மடம் அராலி மேற்கைச்சேர்ந்த 29வயதுடைய செல்வநாயகம் அஜிந்தன் ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.உயிரிழந்தவர்களின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

வீதியில் பட்டாசுகளை கொளுத்தி எறிந்தவாறு அதிக வேகத்தில் பயணித்த போதே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது எனதெரிவிக்கப்படுகிறது.
பாரஊர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து தொடர்பாக கிளிநொச்சி பொலீஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Read more...

சஜித்திற்கெதிராக விசாரணை! ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்திற்கு பாரிய கடன்!

முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாச, அமைச்சராக இருந்த காலத்தில் கம்உதாவ தொடர்பில் விளம்பரங்கைள ஒலி-ஒளிபரப்புச் செய்வதற்காக ஸ்ரீலங்கா ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்திற்கு செலுத்த வேண்டிய கடன் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.

அவ்விடயம் தொடர்பில் விசாரணை நடாத்துமாறு அமைச்சர் பந்துல குணவர்த்தன, ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவருக்குத் தெளிவுறுத்தியுள்ளார்.

நேற்று அக்கூட்டுத்தாபன ஆய்வு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பிரேமதாச அமைச்சராக இருந்த காலத்தில், கம்உதாவ வேலைத்திட்டம் தொடர்பிலான விளம்பரங்களுக்கு ரூபா 103 மில்லியன் ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்திற்கு செலுத்த வேண்டியுள்ளதாக அக்கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Read more...

ரஞ்சித் சொய்சாவின் மனைவி தேர்தலில் கால் பதிக்கிறார்....!

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தான் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் போட்டியிடவுள்ளதாக மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சாவின் மனைவி முதிதா டி சொய்சா தெரிவித்தார்.

பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் ஆசீர்வாதத்துடன் தேர்தலில் போட்டியிடுவேன் என்று கூறிய அவர், இரத்தினபுரி மக்களின் வேண்டுகோளுக்கு தலைசாய்ப்பதாவும் அவர் கூறினார்.

கொடகவிலயில் உள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் வேண்டுகோளின் பேரில் அவருடன் இது குறித்து பேச்சுவார்த்தை நடாத்தியதாகவும், அதற்கேற்ப தான் அரசியலில் களம் இறங்கவுள்ளதாகவும், மகிந்த ராஜபக்ஷவின் அழைப்பு தனக்குப் பலமாக உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Read more...

ஜனாதிபதியின் வாக்குறுதிக்கேற்ப இன்றுடன் வரிகள் சலுகைகக்குட்படுகின்றன!

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் கொள்கைத் திட்டத்திற்கேற்ப, பொதுமக்களுக்கு வழங்கியுள்ள அனைத்து வரிச் சலுகைகளும் இன்றுடன் நடைமுறைக்கு வரும் என, அமைச்சர் பந்துல குணவர்த்தன குறிப்பிடுகின்றார்.

"ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து முன்பே அறிவிக்கப்பட்ட வரி சலுகைகள் மற்றும் வரி விலக்குகள் அனைத்தும் நடைமுறைக்கு வரும். உதாரணத்திற்கு பொருளீட்டும்போது செலுத்த வேண்டிய வரி இல்லை. நிறுத்தி வைக்கும் வரி இல்லை. வட் வரி 8% மட்டுமே. குறிப்பிடப்பட்ட மற்ற அனைத்து வரி சீர்திருத்தங்கள் மற்றும் வரி நிவாரண திட்டங்கள் 1 முதல் தொடர்ந்து செயல்படும்” என்றார்.

அவர் நேற்று (31) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அதன்படி, மாதத்திற்கு ரூ 100,000 க்கு மேல் சம்பாதிக்கும் மக்கள் செலுத்த வேண்டிய வருமான வரி இரத்து செய்யப்படும், மேலும் ரூ. 250,000 மேலதிகமாக உழைப்பவர்கள் வரிக்குள் உள்ளீர்க்கப்படுவர்.

சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி மீதான 5% நிறுத்திவைக்கும் வரி இரத்து செய்யப்பட்டுள்ளது.

வணிகங்களுக்கான வட் வரம்பு காலாண்டில் ரூ .75 மில்லியனாக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, காலாண்டுக்கு ரூ .75 மில்லியனுக்கும் குறைவான பண விநியோகம் செய்யும் வணிகர்களிடமிருந்து வட் நிறுத்தப்படும் என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

Read more...

மருத்துவ மாஃபியாவுக்கு உடந்தையாக இருந்ததனால் ராஜிதவுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட வேண்டும்! - மருத்துவ அதிகாரிகள் சங்கம்

முன்னாள் அமைச்சர் ராஜிதா சேனரத்னவுக்கு எதிராக ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

ரஜிதா சேனரத்ன மருந்து மாஃபியாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சிலர் கூறினாலும், உண்மையில் நடந்தது என்னவென்றால், மருந்து மாஃபியாவுக்குத் தேவையானபடி சுகாதார சேவையை ராஜீதா கையாண்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ராஜிதா சேனரத்ன சுகாதார அமைச்சராக இருந்தபோது, ​​அரசு மருத்துவ அதிகாரிகள் சங்க உறுப்பினர்கள் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணையத்திற்கு வந்து முறைகேடுகள் பல செய்துள்ளனர்.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரிதா அலுத்கே இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

Read more...

நாடு முன்னேற நாட்டு மக்களின் ஒத்துழைப்பு அவசியம்! புத்தாண்டுச் செய்தியில் ரணில்

கடந்த ஆண்டில் தொடங்கியுள்ள ஜனநாயக மற்றும் சிறப்பான பயணம் தொடங்கியுள்ள ஆண்டிலும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட செயற்பட வேண்டியது நாட்டுமக்களின் பொறுப்பாகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, புதுவருட ஆசிச்செய்தியில் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, சமூக, பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாகக் ஒழுங்கற்ற நாட்டையே நாங்கள் பெற்றிருந்தோம்.

கடந்த காலங்களில், மக்களுக்கு சமூக, அரசியல் மற்றும் மனித சுதந்திரத்தை கொண்டுவருவதற்கும், சர்வதேச அளவில் நம்நாடு கரும்புள்ளியாக இருந்த நிலையை மாற்றுவதற்கும், சீரானதொரு சூழ்நிலையை உருவாக்குவதற்கும், ஒரு நிலையான வளர்ச்சி செயல்முறை மூலம் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு அடித்தளம் அமைப்பதற்கும் நாங்கள் பணியாற்றியுள்ளோம்.

அதை முன்னெடுத்துச் செல்ல அனைத்து வலிமை, தைரியம் மற்றும் குடியுரிமை சக்தி ஆகியவற்றை உறுதிப்படுத்துகின்ற புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Read more...

எல்லோரும் ஒன்றாக மகிழ்வுடன் வாழத்தக்க சூழலை உருவாக்குவோம்! - ஜனாதிபதியின் புதுவருட ஆசிச்செய்தி

மலந்துள்ள 2020 ஆம் ஆண்டு இலங்கையர் அனைவரும் மகிழ்வுடன் வாழத்தக்க சூழலை உருவாக்குவோம் எனத் தனது புதுவருட ஆசிச் செய்தியில் தெரிவித்துள்ளார் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ. அவர் அவரது உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் புதுவருட வாழ்த்துச் செய்தியைத் தெரிவித்துள்ளார்.

அந்த ஆசிச் செய்தியில்,

'பொருளாதாரம், அரசியல்,சமூககலாசாரம் மற்றும் தொழிநுட்பம் ஆகிய அனைத்து துறைகளிலும் புதியதோர் யுகம் நமது தாய் நாட்டில் மலர வேண்டும் என சகல இலங்கையர்களும் எதிர்பார்த்திருக்கின்ற ஒரு தருணத்திலேயே ,இந்த புத்தாண்டு பிறந்திருக்கின்றது.

அந்தவகையில் மலர்ந்துள்ள, இப்புத்தாண்டை புதிய அரசாங்கம், 'சுபீட்சத்தின் ஆண்டாக' ஆக்கும் திடவுறுதிப்பாடு மற்றும் அர்ப்பணிப்புடனேயே வரவேற்கின்றது.

எமக்கே உரித்தான தொலைநோக்கினை கொண்டவொரு தேசமாக கடந்த காலத்தில் நாம் அடைந்த வெற்றிகள் ஏராளமானவை. அத்தகைய எமது தனித்துவ அடையாளங்களையும் திறன்களையும் நவீன தொழிநுட்பத்துடன் ஒன்றிணைத்து வெளிப்படுத்துவதனூடாக சுபீட்சத்தை அடையும் அபிலாஷையுடனேயே ஒரு அரசாங்கம் என்ற வகையில் நாம் இப்புத்தாண்டில் தடம் பதிக்கின்றோம். அத்தோடு தேசிய உணர்வுகளுக்கு முன்னுரிமையளிக்கும் பலமானதொரு பொருளாதாரம் நாட்டுக்கு தேவையாகும். அதுவே சுயாதீனத்தை நோக்கிய எமது பயணத்தை மேலும் உறுதிப்படுத்தும்.

அதேபோன்று ஒழுக்கப் பண்பாடான சமூகத்தினால் பலப்படுத்தப்படும் பாதுகாப்பானதொரு தேசமே மக்களின் முதன்மையான எதிர்பார்ப்பாகும் என்பதையும் நான் அறிவேன். அத்தகையதொரு சமூகத்திலேயே தற்கால மற்றும் எதிர்கால தலைமுறையினரின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படும்.

வளர்ந்தவர்கள் என்ற வகையில் நாமும், பிறந்துள்ள இப்புத்தாண்டில் அந்த இலக்கினை நோக்கிப் பயணிப்பதற்கு உறுதியுடன் கைகோர்த்துக் கொள்வோம்.

நாட்டை நேசிக்கும் மக்களின் ஐக்கியத்திற்கு கிடைத்த வெற்றியே ,இந்த புதிய அரசாங்கமாகும்.

மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு எதிரான எந்தவொரு சக்திக்கும் ,இந்த நாட்டில் நாம், இடமளிக்கப்போவதில்லை. அனைத்து மக்களும் ஒற்றுமையாகவும் மகிழ்ச்சியாகவும் வாழக்கூடிய சிறந்த சூழலை நாட்டில் உருவாக்குவதே அதன் நோக்கமாகும். புத்தாண்டு பிறப்புடன் மக்களின் மனங்களில் ஏற்பட்டுள்ள புத்துணர்ச்சியானது ,புதியதோர் தேசத்தைக் கட்டியெழுப்பும் 'சுபீட்சத்தின் நோக்கு' செயற்திட்டத்தை ,இலகுபடுத்தும் என்பது எனது உறுதியான நம்பிக்கையும் பிரார்த்தனையுமாகும்.

மலர்ந்துள்ள ,இந்த புத்தாண்டு அனைத்து ,இலங்கையர்களுக்கும் எனதன்பிற்குரிய பிள்ளைகளுக்கும் வளமான எதிர்காலத்தை உறுதிசெய்யும் ஆண்டாக அமைய எனது உளப்பூர்வமான நல்வாழ்த்துகள்!' எனக் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

Monday, December 30, 2019

மத்திய வங்கி அறிக்கையால் பரபரப்பு: ரணில்,கபிர்,மலிக்கிற்கு விரைவில் ஆப்பு?

இலங்கை மத்திய வங்கியின் கணக்காய்வு அறிக்கை வெளியிடப்பட்டதால் அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடிகளுக்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே பிரதான பொறுப்பாளி என்பது அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதே இந்த பரபரப்பு நிலைக்கு காரணம் என சுட்டிக்காட்டப்படுகின்றது.

முன்னாள் பிரதமர் உட்பட முன்னாள் அமைச்சர்களான கபிர் ஹாஷிம் மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகியோரும் அந்த அறிக்கையில் பொறுப்பு கூறுபவர்களாக பெயரிடப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் உள்ளகத் தகவல் கூறுகின்றது.

2015ஆம் ஆண்டில் 100 கோடி ரூபா பெறுமதியான பிணைமுறிகளை வழங்க இலங்கை மத்திய வங்கி தீர்மானித்திருந்தது.

ஆயினும் அப்போதைய பிரதமர் ரணில், அப்போதைய அமைச்சர்களான மலிக் மற்றும் கபிர் ஆகியோர் இணைந்து 1000 கோடி ரூபாவுக்கு விற்பனை செய்ய ஆலோசனை வழங்கியதாக கோப் குழுவுக்கு மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் சாட்சியமளித்திருப்பதையும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, முன்னாள் நிதியமைச்சராக இருந்த ரவி கருணாநாயக்கவின் பெயர் மத்திய வங்கியின் கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.

பிணைமுறி மோசடி இடம்பெற்ற காலகட்டத்தில் மத்திய வங்கியானது அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கீழே இருந்ததே இதற்கு காரணம் என்றும் கூறப்படுகின்றது.

Read more...

Sunday, December 29, 2019

கருணாவை கொலைசெய்யத் திட்டமிட்ட நால்வர் ஆயுதங்களுடன் கைது.

பிரபாகரனின் முன்னாள் வலதுகரமான கருணான எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனை கொலை செய்யத் திட்டமிட்டிருந்தார்கள் என சந்தேகிக்கப்படும் நால்வரை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இவர்களில் இருவர் முன்னாள் புலிகள் என்பதுடன் அவர்களிடமிருந்து ரி56 ரக ஆயுதம் ஒன்றும் பிற ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த நபர்கள் மலேசியாவிலிருக்கும் கும்பல் ஒன்றினால் இயக்கப்படுவது ஆரம்ப கட்ட விசாரணைகளில் வெளிவந்துள்ளது.

திருமலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள மேற்படி நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத தடுப்பு பிரிவினருடன் கையளிக்கப்பட்டுள்ளனர்.

Read more...

Saturday, December 28, 2019

சானிக்கு இனி இடமில்லை... அவரிடத்தில் நுவன் வெதசிங்க!

பொலிஸ் குற்றவியல் விசாரணைப் பிரிவின் புதிய தலைவராக பிரதிப் பொலிஸ்மா அதிபர் நுவன் வெதசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னர் அந்தப் பதவியை வகித்த சானி அபேசேக்கர தற்போது காலி பிரதிப் பொலிஸ்மா அதிபரின் உதவியாளராக மாற்றப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

அவர் அதற்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

Read more...

ஹிஸ்புல்லாஹ்வின் காத்தான்குடி பல்கலை அரசுடைமையாக்குவதற்கு பிரயத்தனம்!

மட்டக்களப்பு - காத்தான்குடியில் அமைந்துள்ள 'பெட்டிகலோ கெம்பஸ்' நிறுவனத்தை அரசுடைமையாக்குவதற்கு தற்போது நடவடிக்கைககள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் ஏ.எல்.எம். ஹிஸ்புல்லாஹ்வின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பரவாலாகப் பேசப்பட்டு வந்தது.

ஸவுதி அரசாங்கத்தின் 300 கோடி உதவியினால் நிர்மாணிக்கப்பட்டுள்ள போதும் இந்நிறுவனம் தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளது.

இதுதொடர்பில் விசாரணைகளை நடாத்துவதற்கு நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற விசேட செயற்குழு, இந்த நிறுவனத்தை அரசாங்கம் சுவீகரிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.

அதற்கேற்ப, அந்த நிறுவனம் வெகுவிரைவில் அரசுடைமையாக்கப்படும் எனத் தெரிய வருகின்றது.

Read more...

பொதுத்தேர்தலில் போட்டியிடுவேன்.. கோட்டாவுக்கு மூன்றில் இரண்டு பெற்றுக்கொடுப்பேன்! மைத்திரி

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தான் பொலன்னறுவை மாவட்டத்திலிருந்து போட்டியிடவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வார இறுதி 'லங்காதீப' பத்திரிகையில் இடம்பெற்றுள்ள நேர்காணல் ஒன்றிலேயே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.

தான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒன்றிணைந்து அமைக்கவுள்ள பரந்துபட்ட கட்சியிலிருந்தே போட்டியிடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவை மக்களின் ஆசிர்வாதத்துடன் தான் பாராளுமன்றம் செல்லவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையின் கீழ், மிகவும் சிறப்பாக ஆட்சி நடைபெறுகின்றது எனக் குறிப்பிட்டுள்ள அவர், எதிர்வரும் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரத்தை அவருக்குப் பெற்றுக்கொடுப்பதற்காக முழுமையாக தன்னை ஈடுபடுத்தவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

Read more...

ராஜித்த தலைமறைவாகவில்லை... பொலிஸாரினால் கண்டுபிடிக்க முடியவில்லை!

கைதுசெய்வதற்காக வராந்து வழங்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, பொலிஸாரை ஏமாற்றி மறைந்திருக்கவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்த்தன குறிப்பிடுகின்றார்.

ராஜித்த சேனாரத்ன கடும் இருதய நோயினால் பாதிக்கப்பட்டவர் எனவும் அவருக்கு இருதய சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

எந்தவொரு குற்றத்தையும் நீதிமன்றத்தின் முன் நிரூபிக்க முடியும் எனவும், அதற்கேற்ப செயற்பட்டு தண்டனை வழங்குவதே முறை எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஊடகவியலாளர்களின் முன் பேசும்போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Read more...

முன்னாள் இராணுவத்தளபதி மகேஷ் குடும்பத்துடன் டுபாய் பயணம்!

முன்னாள் இராணுவத்தளபதி மகேஷ் சேனாநாயக்க மற்றும் அவரது குடும்பத்தினர் டுபாய்க்குப் பயணித்துள்ளனர்.

டுபாயில் அமெரிக்க கம்பனியுடன் அடிக்கடிக்கடி அவர் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்திருந்தார். மீண்டும் அந்தத் தொழில் அவருக்குக் கிடைத்துள்ளது என டுபாய் செய்திகள் தெரிவிக்கின்றன.

மகேஷ் சேனாநாயக்க அவரது குடும்பத்துடன் டுபாய்ச் சென்றது பற்றி அரசாங்கத்திற்குத் தெரியவரவில்லை.

இதற்கிடையில் சென்ற உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய, இந்திய அரசாங்கம் வெளியிட்டுள்ள அபாய எச்சரிக்கை இராணுவத்திற்கும் கிடைத்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.

Read more...

பாவம் ரஞ்சன்... A/L Fail

முன்னாள் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இம்முறை உயர்தரப் பரீட்சைக்காகத் தோற்றியிருந்தார். தான் வழக்கறிஞராக மாற வேண்டும் என்ற நோக்கத்திலேயே அவர் பரீட்சைக்குத் தோற்றி மூன்று பாடங்களிலும் சித்தியடைய பிரயத்தனம் எடுத்திருந்தார்.

என்றாலும், தற்போது வெளியாகியுள்ள உயர்தரப் பெறுபேறுகளின்படி அவரது பெறுபேறு சித்தியின்மையாகவே உள்ளது. அவரது முகநூலில் அவரது பெறுபேறு பதிவாகியுள்ளது.

அவரது பெறுபேறு வருமாறு:

POLITICAL SCIENCE - S

COMMUNICATION AND MEDIA STUDIES - S

CHRISTIANITY- F

GENERAL ENGLISH - A



Read more...

பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ளோருக்கு சிவப்பு எச்சரிக்கை காட்டுகிறார் மகிந்த தேசப்பிரிய.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் பரிந்துரைக்கும் வேட்பாளர்களுக்கான பிணைப்பணத்தில் அதிகரிப்பு ஏற்பாடுத்தப்படாதுவிட்டால், நெருக்கடி நிலைமை ஏற்படும் அபாயம் இருப்பதாக தேர்தல் ஆணையகத் தலைவர் மகிந்த தேசப்பிரிய எச்சரித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிட்டதாகவும், அதனால் அந்தத் தேர்தலில் கூடுதலான தொகையைச் செலவிட வேண்டியிருந்ததாகவும் தேசப்பிரிய கூறினார். தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்ட 70 கட்சிகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் அக்கட்சிகளிலிருந்து அதிகமாக ஒவ்வொரு தொகுதியிலிருந்தும் போட்டியிட முன்வந்தால் , ஜனாதிபதித் தேர்தலில் கிடைத்த அனுபவம் பொதுத்தேர்தலிலும் கிட்டும் என அவர் குறிப்பிட்டார். அரசியல் கட்சிகள் போன்றே சுயாதீன வேட்பாளர்களும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும், அதற்கேற்ப அதிக எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் போட்டியிடுவது எச்சரிக்கைக்குரியதாக உள்ளது என்றும் அவர் கூறினார்.

தற்போதும் 1981 ஆம் ஆண்டு குறித்த தொகையே அறவிடப்படுகின்றது எனவும், அன்று அரசியல் கட்சிகள் குறைந்த அளவே இருந்தன எனவும் அவர் தெளிவுறுத்தினார்.

அன்றைய காலப்பகுதியுடன் ஒப்பிட்டுப்பார்க்கும்போது தற்போது அதன் 50 மடங்கினால் அதிகரிக்கப்பட வேண்டும் அதாவது, கட்சியாென்றிலிருந்து போட்டியிடுபவர் 30000 ரூபாவும், சுயாதீன வேட்பாளர் 50000 ரூபாவும் செலுத்த வேண்டும் எனவும் தேசப்பிரிய தெரிவித்தார்.

பிணைப்பணத்தை உயர்த்துவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளபோதும், அதனைத் திருத்துவதற்குப் பாராளுமன்ற ஒப்புதலை எதிர்பார்த்திருப்பதாகவும் குறிப்பிடுகின்ற மகிந்த தேசப்பிரிய, பிணைப்பணத்தை அதிகரிக்காதுவிடின் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிவரும் எனவும் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக பெபரல் அமைப்பு வெளியிட்டுள்ள இடைக்கால அறிக்கையின்படி, தேவையற்ற அளவில் வேட்பாளர்கள் போட்டியிடுவதைத் தடுக்க வழிவகை செய்யப்படவேண்டும் எனவும், வேட்பாளர் ஒருவரிடம் பெற வேண்டிய தொகை குறைந்தளவு 10 இலட்சமாகவேனும் இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.

Read more...

Friday, December 27, 2019

ராஜிதவின் நிலைமை மோசமடைகின்றது. வெள்ளைவான் சாராதிகள் அரச சாட்சிகளாக மாறலாம்!

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ணவிற்கு விளக்க மறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தல்காலத்தில் நாடத்தப்பட்ட சர்ச்சைக்குரிய ஊடகவியலாளர் மாநாடு தொடர்பாகவே அவர் மீது விசாரணைகள் பாய்ந்துள்ளது.

மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் வெள்ளைவான் கடத்தல்களை தாமே மேற்கொண்டதாக இருவர் தெரிவித்திருந்தனர். அவ்விருவருடனும் முன்னாள் அமைச்சர் பிரசன்னமாகியிருந்து அவர்கள்தான் வெள்ளைவான் சாரதிகள் என அறிமுகம் செய்துவைத்திருந்தமை யாவரும் அறிந்தது.

ஆட்சிமாற்றத்தை தொடர்ந்து குறித்த நபர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டபோது அவர்கள், தமக்கு ராஜித சேனாரட்ண தலா பத்து லட்சம் ரூபாய்களை கொடுத்து அவ்வாறு கூறச்சொன்னதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

அதைத்தொடர்ந்து ராஜிதவைக் கைது செய்யுமாறு நீதிமன்று உத்தரவு பிறப்பித்தது. முன்னாள் அமைச்சரை கைது செய்வதற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் விசேட அதிரடிப் படையினர் அவரது கொழும்பு மற்றும் களுத்துறையிலுள்ள இரு வீடுகளையும் சுற்றிவளைத்து தேடுதல் நடாத்தினர். ஆனால் பொலிஸாருக்கு கயிறு கொடுத்து கொழும்பு லங்கா தனியார் வைத்தியசாலையில் படுத்திருந்தார் முன்னாள் அமைச்சர்.

வைத்தியசாலைக்குச் சென்ற சிஐடி யினர் ராஜித விடம் வாக்குமூலம் பெற்றதையடுத்து அங்கு விரைந்த நீதிபதி சந்தேக நபரான ராஜிதவை விளக்க மறியலில் வைக்க உத்தரவிட்டதுடன், அவர் தற்போது வைத்தியசாலையில் சிறைச்சாலை அதிகாரிகளின் தடுப்புகாவலில் உள்ளார்.

இந்நிலையில் இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட வெள்ளைவேன் போலிச்சாரதிகள் இருவரும் நீதிமன்றில் விசேட வாக்குமூலமொன்றை வழங்குவதற்கு அனுமதி கோரியுள்ளனர்.

அவ்வாறானதோர் வாக்குமூலத்தை குற்றப்பத்திரிகை தாக்கல்செய்தபின்னரே வழங்கமுடியுமென நீதிமன்று தெரிவித்துள்ளது.

அவர்கள் இருவரும் அரச சாட்சியாக மாறவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றது.

Read more...

தனிச் சிங்கள பௌத்த நாட்டை உருவாக்க நினைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாதாம்! NPP பத்திரிகையாளர் மாநாட்டில் மஷ்ஹூர்

நாட்டைக் கட்டியெழுப்புவதோடு உண்மையாக அபிவிருத்தி செய்ய வேண்டுமாக இருந்தால், இனங்களிடையேயும் சமூகங்களிடையேயும் நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்த வேண்டியது இன்றியமையாததாகும் என்றும் தனிச் சிங்கள பௌத்த நாட்டை உருவாக்க நினைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) தவிசாளர் சிராஜ் மஷ்ஹூர் .

நேற்று வியாழக்கிழமை கோட்டே சோலிஸ் ஹோட்டலில் இடம்பெற்ற, தேசிய மக்கள் சக்தியின் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு கூறினார்

சிராஜ் மஷ்ஹூர் அங்கு மேலும் தெரிவிக்கையில் :

தனிச் சிங்கள பௌத்த நாட்டை உருவாக்க நினைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. எல்லா சமூகங்களும் உள்ளடங்கிய இலங்கை நாட்டையே கட்டியெழுப்ப வேண்டும்.

புதிய அரசாங்கம் அமைத்துள்ள முதலாவது அமைச்சரவையில் எல்லா சமூகத்தினரும் உள்வாங்கப்படவில்லை என்ற ஆதங்கம் உள்ளது.

இப்போது மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை என்று கேட்கிறார்கள். இந்த நாட்டில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்தபோதெல்லாம், அது மக்களது நலனுக்கு எதிராகவே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. 1970, 1977 ஆட்சிகள் இதற்கு சிறந்த உதாரணங்களாகும்.

ஜனவரி 03 ஆம் திகதிக்குப் பிறகு மீண்டும் பாராளுமன்றத்தை ஒத்தி வைப்பததற்கான முன்னெடுப்புகள் நடைபெறுகின்றன. நாட்டு மக்களது விவகாரங்களைப் பேசித் தீர்மானிக்கின்ற உயர் சபையே பாராளுமன்றமாகும். பாராளுமன்றத்தை மீண்டும் மீண்டும் ஒத்திப் போடுவதன் மூலம் மக்களது பிரச்சினைகளைப் பேசுவதற்கான வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. புதிய ஆட்சிக்குப் பின்னர் பேசப்பட வேண்டிய பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. அவற்றை எங்கு போய்ப் பேசுவது?

நாட்டை இராணுவமயமாக்குவது ஆபத்தானது. சிவில் நிர்வாகத்தைக் கையாள்வதற்கு பொலிஸாரும் தகுதி வாய்ந்த அதிகாரிகளும், போதிய ஆற்றலுள்ள சிவில் சமூகமும் உள்ள நிலையில் இது அவசியமற்ற விடயமாகும்.

தென்னாசியாவில் இலங்கைக்கென்று நீண்ட ஜனநாயகப் பாரம்பரியம் உள்ளது. அதைப் பேணிப் பாதுகாக்க வேண்டும். சுதந்திரமும் சமத்துவமும் நிலவும் நாட்டையே நாம் கட்டியெழுப்ப வேண்டும்.

சகல மக்களையும் சமமாக நடத்துவோம் என ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ தனது நத்தார் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருக்கிறார். ஆனால், நடைமுறைச் செயற்பாடுகளில் அது பிரதிபலிக்கவில்லை.

ஒரு மாதம் கடந்துள்ள நிலையில், புதிய அரசாங்கம் திசை மாறிச் சென்றுகொண்டிருக்கிறது.

தேர்தலுக்கு முன்னர் ஏகாதிபத்தியவாதிகளுக்கு எதிரானவர்கள் போல் காட்டிக் கொண்டார்கள். அப்போது MCC ஒப்பந்தத்தைக் கடுமையாக எதிர்த்து விட்டு, இப்போது அதில் கைச்சாத்திட முற்படுகின்றனர். நிலமைகள் தலைகீழாக மாறுகின்றன.

மேலும், நீதித் துறையின் சுயாதீனம் பாதுகாக்கப்படுவதன் மூலமே நாட்டைக் கட்டியெழுப்பலாம்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நாட்டைக் கட்டியெழுப்புவது தொடர்பான ஆலோசனைகள், தேசிய மக்கள் சக்தியின் பிரச்சார மேடைகளில் அதிகம் பேசப்பட்டதை இந்த இடத்தில் ஞாபகப்படுத்துகிறோம்.

புதிய அரசாங்கத்திற்கு அதிக மக்கள் ஆதரவு கிடைத்துள்ளது. ஒருபுறம் மாற்றங்கள் நடப்பது போன்ற ஒரு தோற்றப்பாடு நிலவுகிறது. ஆனால், மக்களது அடிப்படைப் பிரச்சினைகள் தீர்ந்தபாடில்லை.

உதாரணமாக வாழ்க்கைச் செலவு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அரிசி, மரக்கறிகளின் விலை அதிகரிப்பு மக்களுக்கு சவாலாக மாறியுள்ளது. இதில் நல்ல மாற்றம் வேண்டும்.

மணல் அகழ்ந்து, அதைக் கொண்டு செல்வதற்கான போக்குவரத்து அனுமதிப் பத்திரம் தேவையில்லை என்ற அறிவிப்பு மூலம் மக்களுக்கு நன்மை கிடைக்கவில்லை. அரசியல்வாதிகளின் அடிவருடிகளே இதன் மூலம் கொள்ளை இலாபமீட்டுகின்றனர். மண்கொள்ளையடிக்கின்றனர். இதனால் நாட்டின் சுற்றுச் சூழல் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. தேர்தல் காலத்தில் இவர்களுக்கு உதவி செய்தவர்களுக்கு வழங்கப்படும் அரசியல் இலஞ்சமாகவே இது அமைந்துள்ளது.

இவற்றையெல்லாம் சீர்செய்து, மக்களுக்குப் பயனளிக்கக் கூடிய வகையில் புதிய அரசாங்கம் தனது நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இப்பத்திரிகையாளர் மாநாட்டில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க, சட்டத்தரணி லால் விஜேநாயக்க, ஜயதிலக்க கம்மல்லவீர, தேசிய புத்திஜீவிகள் அமைப்பின் தேசிய அமைப்பாளர் கருணாதிலக்க, NFGGயின் தேசிய அமைப்பாளர் நஜா முஹம்மத் ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

(NFGG ஊடகப் பிரிவு)

Read more...

சுகாதார அமைச்சுக்கு புதிய செயலாளர் நியமனம். பிஎஸ்எம் சார்ள்ஸ் எங்கே?

சுகாதார அமைச்சின் புதிய செயலாளராக திருமதி சந்திராணி ஜெயவர்த்தன அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் எதிர்வரும் 01.01.2020 இல் கடமையேற்பார் எனத் தெரியவருகின்றது.

சுகாதார அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டிருந்த திருமதி சார்ள்ஸை வடக்கின் ஆளுநராக நியமிப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளின் நிமிர்த்தமே புதிய செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார் என நம்பப்படுகின்றது.

திருமதி சார்ள்ஸ் வடக்கின் ஆழுநராக நியமிக்கப்படவுள்ளதாக வெளியாகியிருந்த செய்திகள் தொடர்பில் அவரை இலங்கைநெட் தொடர்புகொண்டு கேட்டிருந்தபோது, அச்செய்தியில் எவ்வித உண்மையுமில்லை என அவர் தெரிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்தும் ஊர்ஜிதம் செய்துகொள்வதற்காக அவரை தொடர்புகொள்ள பலமுறை முயற்சித்தபோதும் பலனளிக்கவில்லை.

எது எவ்வாறாயினும் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தலைமையில் நேற்று அமைச்சகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் திருமதி சார்ள்ஸ் கலந்து கொண்டுள்ளார். எனவே அவர் இதுவரை ஆளுநராக நியமனம் பெறவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

Read more...

தேசிய கீதம் தமிழில் பாடமுடியாது என அரசாங்கம் எந்த முடிவையும் எடுக்கவில்லை. டலஸ் அழகப்பெரும

சுதந்திர தின நிகழ்வில் தேசியகீதம் இசைக்கப்படும்போது தமிழ் மொழி புறக்கணிக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்படும் செய்தி முற்றிலும் தவறானது என கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

73வது சுதந்திர நிகழ்வில் சிங்கள மொழியில் மாத்திரம் தேசிய கீதத்தை இசைப்பதற்கும், தமிழ் மொழியை புறக்கணிப்பதற்கும் அரசாங்கம் இதுவரையில் எவ்விதமான உத்தியோகப்பூர்வ தீர்மானங்களையும் எடுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அரசாங்கம் அனைத்து செயற்பாடுகளிலும் அனைத்து இன மக்களையும் இணைத்தே பயணிக்கும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் இடம் பெற்றவுள்ள சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைப்பது புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படும் செய்தியும், அதனை தொடர்ந்து தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ள மாறுப்பட்ட கருத்துக்கள் ஏற்பட்டமை தொடர்பிலும் தெளிவுப்படுத்தலை ஏற்படுத்துவது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அரசாங்கம் இதுவரையில் எவ்விதமான உத்தியோகப்பூர்வமான தீர்மானங்களையும் எடுக்கவில்லை என்றும் குறிப்பிட்ட அமைச்சர் தேசிய நல்லிணக்கத்திற்கு மொழிகளின் முக்கியத்துவம் இன்றியமையாதது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்தம் முடிவடைந்ததை தொடர்ந்து வடக்கு மற்றும் கிழக்கு உட்பட நாட்டில் அனைத்து பிரதேசங்களிலும் வாழும் தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியில் முறையான அந்தஸ்த்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் அனைத்து இன மக்களையும் எவ்வித வெறுப்புக்களும் இன்றி பொதுவாக செயற்பட வேண்டும் என்பதை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

இல்லாத ஒரு விடயத்தை குறிப்பிட்டுக் கொண்டு தமிழ் மக்களின் மத்தியில் வன்மத்தை தூண்டும் செயற்பாடுகளே இடம் பெறுகின்றதாக குறிப்பிட்ட அமைச்சர்,

நாட்டில் இரண்டு மொழி வழக்கில் உள்ள நிலையில் இரண்டு இனத்தவர்களும் இருமொழியிலும் தேர்ச்சிப்பெற்றிருத்தல் அவசியம் எனவும் கூறியுள்ளார்.

மொழி ஆளுமையினை மேம்படுத்தவதற்கு பாடசாலை மட்டத்தில் இருந்து புதிய திட்டங்களம், கடந்த அரசாங்கம் முன்னெடுத்த செயற்பாடுகளும் தொடர்ந்து முன்னெடுத்து செல்லப்படும் எனவும் கூறிய அவர் ,அரசியல் நோக்கங்கள் , மற்றும் பழிவாங்கல்கள் என்பவற்றை கல்வித்துறையில் காண்பிப்பது எதிர்கால தலைமுறையினரின் மீது பாரிய தாக்கத்தை ஏற்படுத்துமெனவும் தெரிவித்துள்ளார்.

எனவே அரசாங்கம் எந்நிலையிலும் இனங்களை அடிப்படையாகக் கொண்டு முன்னுரிமை வழங்காது, தகுதி மற்றும் திறமைகளுக்கு முன்னுரிமை வழங்கி அனைத்து செயற்பாடுகளிலும் தமிழ் மக்களையும் இணைத்துக் கொண்டே பயணிப்போம் எனவும் கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

Read more...

Thursday, December 26, 2019

ஆவாக்குழுவை நாங்கள்தான் இயக்குகின்றோம். லண்டனிலிருந்து புலிகளின் புலனாய்வுத்துறை பொறுப்பேற்றுள்ளது.

வடபுலத்தில் கடந்த சுமார் ஐந்தாண்டுகாலமாக ஆவா என்ற பெயர்கொண்ட குழுவொன்று செயற்பட்டுவருவதும் இதன் பின்னணிகள் தொடர்பில் பல்வேறு ஊகங்கள் வெளிப்படுத்தப்பட்டு வந்தமையும் யாவரும் அறிந்த விடயம். இந்நிலையில் குறித்த ஆவா குழுவினை தாமே இயக்கி வருதாக புலிகளின் புலனாய்வுத்துறை லண்டனிலிருந்து பொறுப்பேற்றுள்ளது.

புலிகளின் புலனாய்வுத் துறையின் மூத்த உறுப்பினர்களில் ஒருவராகவிருந்து கருணாவினால் கொல்லப்பட்ட நீலன் எனப்படும் ஆரையம்பதியைச் சேர்ந்த சின்னத்தம்பி சோமநாதனின் பெயரில் லண்டனில் நீலன் அறக்கட்டளை என்ற அமைப்பை இயக்கிவரும், புலிகளின் புலனாய்வுத்துறையைச் சேர்ந்த அமுதன் என்பவராலேயே இந்த பகிரங்க அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் தமிழ் மக்களின் காணிகளை சூறையாடிவரும் பாயிஸ் எனப்படும் றிசார்ட் பதுயுத்தீனின் நெருங்கிய சகாவிற்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் கிளிநொச்சியை சேர்ந்த நபர் ஒருவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கும்போதே அமுதன் புலிகளின் புலனாய்வுத்துறைதான் ஆவா குழுவை இயக்கிவருகின்றது என்ற உண்மையை வெளியிட்டுள்ளார்.

ஊழலுக்கு எதிராக செயற்பட்டுவரும் இளைஞனுக்கு அமுதன் உயிரச்சுறுத்தல் விடுவதையும் புலிகளின் புலனாய்வுத்துறையே ஆவா குழுவை இயக்கி வருகின்றோம் என்பதையும் கீழுள்ள ஒலிப்பதிவில் கேட்கலாம்.



இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கென புலம்பெயர் தேசங்களில் சேகரிக்கப்படும் பணம் எவ்வாறு செலவிடப்படுகின்றது என்பதற்கு மேற்படி ஒலிப்பதிவு சிறந்த சாட்சியமாக அமைந்துள்ளது. மக்களின் வாழ்வினை மேம்படுத்துவற்கு என அறவிடப்படும் பணம் அதே மக்களை அவலத்தினுள் தள்ளுவதற்கும் அவர்களின் கருத்துச் சுதந்திரத்தை மறுப்பதற்கும் பறிப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றது. இங்கே அமுதன் என்பவனால் குறிப்பிடப்படும் முல்லை ஈசன் என்பவர் மீதான தாக்குதலும் இவ்வாறானதே. முல்லை ஈசன் என்பவர் முகநூலில் சமூகச்சீர்கேடுகள் தொடர்பாக பதிவுகளை இட்டுவந்தபோது, அவ்வாறான சீர்கேடுகளை தாங்களே உருவாக்கியுள்ளதாகவும் அதற்கு எதிராக பதிவிடுவதை நிறுத்தவேண்டும் எனவும் அமுதனால் முல்லை ஈசன் என்பவர் எச்சரிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்தும் முல்லை ஈசன் சீர்கேடுகளுக்கு எதிரான பதிவுகளையிட்டுவந்த நிலையில் இரவு 10.30 மணியளவில் அவரின் கடையினுள் புகுந்த காடையர்கள் மண்டையை உடைத்து பலத்த காயப்படுத்தியுள்ளனர்.

அவ்வாறாயின் தமிழ் மக்களின் விடுதலைக்காக புலிகள் போராடினார்கள் என்பதை தொடர்ந்தும் மக்கள் நம்பவேண்டுமா என்ற கேள்வியை இவ்விடத்தில் இலங்கைநெட் முன்வைக்கின்றது.

கிளிநொச்சியில் மக்களின் காணிகளை அபகரிக்கும் முஸ்லிம் மோசடிக்காரன் ஒருவனுக்கெதிராகவும் அந்த மோசடிக்காரனுக்கு ஒத்தாசையாக செயற்படும் பொலிஸ் உப பரிசோதகருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கக்கூடாது என புலிகளின் புலனாய்வுத்துறை சமூக நலன்விருப்பி ஒருவரை எச்சரிக்கின்றதென்றால் புலிகளின் நோக்கம் என்ன என்பதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும். தமிழ் மக்களை ஒரு பாதுகாப்பற்ற சூறையாடப்படும் சூழலில் வைத்துக்கொள்வதே புலிகளின் வியூகமாக அமைந்துள்ளது என்ற உண்மை ஏற்றுக்கொள்ளப்படவேண்டும். புலிகளுக்கும் சமூகவிரோதிகளுக்குமிடையேன உறவு ஆராயப்படவேண்டும். அத்துடன் தமிழ் மக்களின் வாழ்வினை சீர்குலைத்து சுயலாமடைய நோக்கம் புலிகள் மற்றும் புலிசார் அமைப்புக்களுக்கு தொடர்ந்தும் புலம்பெயர் தமிழர் உதவி புரியத்தான் போகின்றார்களா என்பதை மறுபரிசீலனை செய்யவேண்டும்.

மேலும் புலிகள் தங்களை ஒரு ஒழுக்கமான அமைப்பு எனக்காட்டிக்கொண்டிருந்தனர் என்பது யாவரும் அறிந்தது. ஆனால் புலிகளின் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த அமுதன் நிறைமதுபோதையில் இங்கே பயன்படுத்தும் வார்த்தை பிரயோகங்கள் அவ்வமைப்பின் ஒழுக்கம் தொடர்பான தெளிவானதோர் விளக்கத்தை கொடுத்துள்ளது.

அச்சுறுத்தலக்குள்ளாகியுள்ள இளைஞனின் செயற்பாடு அதன் பின்னணி தொடர்பான செய்தியை வாசிக்க கீழேயுள்ள இணைப்பில் அழுத்தவும்.

அநீதிக்கெதிராக குரல்கொடுத்தால் நானாக இருந்தாலும் உன்னை கொல்வேன் என்ற நீதியின் காவலன் இவர்தான்.

Read more...

சத்தியமா நாங்கள் ஐக்கியத்திற்கு எதிரானவர்கள் அல்லர். சம்பந்தன் சுமந்திரன் பேசும் ஐக்கியம் போலி. மண்டையன் குழுத்தலைவர்.

ஐக்கியத்திற்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல .ஆனால் சம்பந்தன் சுமந்திரன் போன்றோர் பேசச் கூடிய ஐக்கியம் என்பது ஏற்றுக் கொள்ளத்தக்கவை அல்ல என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சமகால அரசியல் தொடர்பில் அவர் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கியத்திற்கு நாங்கள் விரோதிகள் அல்ல. திம்பு காலத்தில் இருந்தே ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஐக்கியத்திற்காக இணைந்து செயற்பட்டு வந்திருக்கிறது. திம்பு காலத்தில் இருந்து இன்றுவரை பல்வேறுபட்ட ஐக்கியங்கள் தமிழ் மக்கள் மத்தியில் உருவாகுவதற்கு நாங்கள் காரணகர்த்தாக்களாகவும் இருந்திருக்கிறோம். ஆகவே நாங்கள் ஐக்கியத்திற்கு எதிரானவர்கள் கிடையாது என்பதை தெளிவாக கூறிக் கொள்கிறோம்.

ஆனால் சுமந்திரன், சம்பந்தன் போன்றோர் பேசக் கூடிய ஐக்கியம் என்பது என்ன அடிப்படையில் என்னத்திற்கானது என்று பார்க்க வேண்டும். அது உண்மையில் தமிழரசுக் கட்சியை வெல்ல வைப்பதற்கான ஐக்கியமா என்பதுதான் முதலாவது கேள்வி, அல்லது ஐக்கிய தேசியக் கட்சியைப் பாதுகாப்பதற்கான ஐக்கியமா என்பதும் கேள்வி. ஆகையினாலே அதெல்லாம் தவறானது என்று நாங்கள் கூறுகிறோம்.

ஆகவேதான் நாங்கள் ஆரம்பத்தில் இருந்து கூறிக் கொண்டிருப்பது என்னவெனில் ஒரு பரந்துபட்ட ஐக்கிய முன்னணி என்று சொன்னால் அந்த ஐக்கிய முன்னணிக்கான கட்டமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டும். அந்த ஐக்கிய முன்னணிக்கான யாப்பு இருக்க வேண்டும். அந்த ஐக்கிய முன்னணி எவ்வாறு செயற்பட வேண்டும். அதனுடைய கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கான வழிகாட்டுதல் இருக்க வேண்டும். அந்தக் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கான வேலைத் திட்டங்கள் இருக்க வேண்டும். இவை எதுவுமே இல்லாமல் வெறுமனே ஐக்கியத்தைப் பற்றிப் பேசி பயனில்லை.

அதிலும் குறிப்பாக நாங்கள் யாரையும் வெளியேற்றவில்லை. விரும்பியோர் வந்து சேரலாம் என்று சொல்வது அது ஒரு ஐக்கியத்துக்கான அறைகூவல் அல்ல. ஐக்கியத்திற்கான கோரிக்கையும் அல்ல. அது உண்மையாகவே மக்களை ஏமாற்றுவதற்கான செயற்பாடாகத் தான் கருதுகின்றேன்.

அந்த அடிப்படையில் தான் மாற்று அணியைப் பற்றி நாங்கள் சிந்திக்கின்றோம். தமிழ் மக்களுடைய கோரிக்கைகளை வென்றெடுக்கக்கூடிய வகையில் இதில் யார் சேர்ந்து செயற்பட விரும்பினாலும் அவர்களையும் இணைத்துக் கொண்டு செல்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.

தமிழ் மக்களுடைய தேசிய இனப்பிரச்சனைக்கு ஒரு நியாயமான தீர்வு ஏற்பட வேண்டும் தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு ஏற்பட வேண்டும். அவர்கள் ஒரு சுயமாக முடிவுகள் எடுத்து நடைமுறைப்படுத்தக் கூடியவர்களாக இருக்க வேண்டுமென்ற பல விடயங்கள் உள்ளன..

அதனை ஏற்றுக் கொள்ளக் கூடியவர்கள் ஒரு சமஸ்டி அமைப்பு முறையை முன்னெடுத்துச் செல்வதை ஏற்றுக் கொள்ளக் கூடியவர்கள் அனைவரையும் நாங்கள் ஒன்றிணைத்து அதற்கான கட்டமைப்புகளையும் அதற்கான யாப்புக்களையும் உருவாக்கி நாங்கள் முன்னெடுத்தச் செல்வோமானால் அதற்குள் பிரச்சனைகள் வருவது நிச்சயமாக குறைவாக இருக்கும்.

ஆகவே சுமந்திரனுடைய அந்தக் கோரிக்கை என்பது ஒரு தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கான கோரிக்கை என்பது ஒன்று. இரண்டாவது விடயம் சுமந்திரன் பேச்சாளர் என்ற அடிப்படையில் கட்சியில் இருக்கின்றார். மாவை சேனாதிராசா கடந்த நாற்பது ஐம்பது வருடமாக சிறுவயதிலிருந்தே அரசியலில் இருக்கக் கூடியவர். அதே போல சம்பந்தரும் மிக நீண்டகாலமாக அரசியலில் இருக்கக் கூடிய ஒருவர். ஆகவே அவர்கள் வந்து இது குறித்து பேசாமல் இருக்கையில் இந்தக் கோரிக்கையை முன்வைப்பது சுமந்திரனாகத் தான் இருக்கின்றார்.

உண்மையில் கட்சியில் இப்படி கோரிக்கையை முன்வைக்குமாறு முடிவெடுக்கப்பட்டதா? அந்தக் கோரிக்கையின் பிரகாரம் அவர் பேசுகிறாரா? அது கூட்டமைப்பின் முடிவா? தமிழரசுக் கட்சியின் முடிவா? அல்லது சுமந்திரன் வாய்க்கு வந்தவாறு தான் பேசுகிறாரா? என்று பார்த்தால் நான் அறிந்த வரையில் சுமந்திரன் தான் விரும்பியவாறு தனது வாய்க்கு வந்தவகையில் பேசுகின்றார். எந்தவொரு முடிவும் எட்டப்படவும் இல்லை எடுக்கப்படவும் இல்லை. அவ்வாறான நிலைமையில் இவர் கூறுகின்ற ஐக்கியம் என்பது சாத்தியமில்லாத ஒன்று.

இப்போது கூட்டமைப்பிற்குள்ளே பிரச்சனைகள் ஏற்பட்டு இருக்கிறது. செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் போன்றோர் அண்மையிலே தமிழரசுக் கட்சியுடன் முரண்பட்டு பிற்பாடு பேச்சுவார்த்தைகளை நடாத்தி அந்த பேச்சுவார்த்தைகள் முடிவிற்கு வராமல் மீண்டும் கூடிப் பேசுவதாகக் கூட சொல்லப்படுகிறது.

ஆகவே அவ்வாறான நிலைமையில் தமிழரசுக் கட்சி விடக்கூடிய தவறுகளால் இன்றும் முரண்பாடுகள் உள்ளுக்குள் இருந்து கொண்டே இருக்கிறது என்பது தான் கூட்டமைப்பிற்குள்ளே இருக்கக்க கூடிய நிலைமையாக இருக்கிறது என்றார்.

Read more...

Wednesday, December 25, 2019

லஷ்மன் கதிர்காமர் பிரதமராவதை தடுத்ததைதயிட்டு நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோருகிறாராம் சம்பிக்க.

2004ம் ஆண்டு லஷ்மன் கதிர்காமர் அவர்களை பிரதமராக நியமிப்பதற்கு அன்றைய ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்க தீர்மானித்திருந்தார். அத்தருணத்தில் தமிழர் ஒருவர் இந்நாட்டின் பிரதமராக வருவது நாட்டின் வரலாற்று தவறாக மாறுமென பௌத்த பிக்குகள் எதிர்த்திருந்தது யாவரும் அறிந்த விடயம்.

மேற்படி விடயத்திற்காக நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்க.

நேற்று விளக்கமறியலிலிருந்து விடுவிக்கப்பட்ட அவர் இன்று தலதா மாளிகைக்குச் சென்று விசேட வழிபாட்டில் கலந்துவிட்டு தலதா மாளிகை வாசலில் நின்று ஊடகங்கள் மத்தியில் பேசியபோது மேற்கண்டவாறு மன்னிப்பு கோரிய அவர் தொடர்ந்து பேசுகையில்:

நாங்கள் இந்நாட்டு மக்களுக்கு மாபெரும் குற்றமொன்றையிழைத்துள்ளோம். அதற்காக நாம் அவர்களிடம் மன்னிப்பு கோரவேண்டும். அதாவது 2004 இடம்பெற்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றிபெற்றிருந்து. ஆனாலும் எமது ஜாதிக்க ஹெல உறுமயவின் ஊடாக பாராளுமன்றுக்கு தெரிவுசெய்யப்பட்ட 9 பௌத்த பிக்குகள் ஊடாகத்தான் அரசமைப்பதற்கான பெரும்பாண்மை கிடைக்கப்பெறவிருந்தது. அச்சந்தர்ப்பத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்குக்கட்சிகள் திரு. லஷ்மன் கதிர்காமர் அவர்களை பிரதமராக நியமிப்பதற்கு தீர்மானம் செய்திருந்தார்கள்.

அச்சந்தர்ப்பத்தில் எமது பிக்குகள் கதிர்காமர் அவர்களை தவிர்த்து மஹிந்த ராஜபக்ச அவர்களை நியமிக்குமாறு ஜனாதிபதி சந்திரிக்கா குமாரணதுங்க அவர்களிடம் வேண்டுதல் விடுத்தனர். அதற்கான அழுத்தத்தையும் நாம் கொடுத்தோம். அதற்காக நாம் மக்களிடம் மன்னிப்பு கோருகின்றோம்.

அவ்வாறே 2005ம் ஆண்டு தேர்தலில் மஹிந்த ராஜபக்சவின் வெற்றிக்கு உழைத்தமைக்காக மக்களிடம் மன்னிப்புக்கோருகின்றோம். எமது கடின உழைப்பு காரணமாகவே மஹிந்த வெற்றி பெற்றார். எமது கட்சியின் சில தேரர்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்காக வேலை செய்ய முடிவெடுத்தபோது, நாம் கட்சியின் சம்மேளனம் ஒன்றை நாடாத்தில் மாபெருமெடுப்பில் மஹிந்தவுக்கான ஆதரவை வெளிப்படுத்தினோம். மஹிந்தவின் வெற்றிக்காக உழைப்பதென்று உறுதிமொழிபூண்டோம். அதற்காகவும் மக்களிடம் மன்னிப்பு கோருகின்றோம்.

இவைதான் நாம் இந்நாட்டில் புரிந்துள்ள குற்றங்கள். நாங்கள் இந்நாட்டினை ஒரு தனிக்குடும்பத்தின் சொத்தாக்குவதற்கு உழைத்துள்ளோம் அதற்காகவும் மன்னிப்பு கோருகின்றோம் என்றார் சம்பிக்க ரணவக்க.

Read more...

பாராளுமன்றைக் கூட்டி, அரசாங்கத்தை அமைப்போம்!

எதிர்வரும் ஜனவரி மாதம் 03 ஆம் திகதி பாராளுமன்றத்தைக் கூட்டி, ஐக்கிய தேசியக் கட்சி பெரும்பான்மையைப் பெற்று, அரசாங்கம் ஒன்றை நிறுவுவதற்கு உள்ளதாக, அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜேபால ஹெட்டியாராச்சி குறிப்பிட்டார்.

தற்போது பாராளுமன்றத்தில் பெரும்பான்மையாக ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்களே உள்ளனர் எனக் குறிப்பிட்ட அவர், அதற்கேற்ப எந்தவொரு சந்தர்ப்பத்தில் பிரதமரை நியமிப்பதற்கு அமைச்சரவையைக் கூட்டுவதற்கான சந்தர்ப்பம் அந்தக் கட்சிக்கு உள்ளது எனவும் தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

Read more...

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அனைத்து சவால்களையும் ஏற்க தயார்! இராஜாங்க அமைச்சர் பிரேமஜெயந்த

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் அமர்வுகளில் இலங்கை எதிர்கொள்ளக்கூடிய அனைத்து சவால்களையும் எதிர்கொள்ள அரசாங்கம் தயாராகி வருவதாக இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

நேற்று (24) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், அடுத்த சில வாரங்களில் சர்வதேசம் மேலும் வலுவான நிலைப்பாட்டை எடுக்கக்கூடும் என்றும் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ‘ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அடுத்த அமர்வு விரைவில் தொடங்க உள்ளது. அமர்வில் விவாதிக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக நாம் கவனத்தில் கொண்டுள்ளோம். வெளியுறவுத்துறை அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் பிற அரச நிறுவனங்களிடையே தொடர்புடைய அனைத்து விடயங்களையும் நாங்கள் விவாதிப்போம்.

இலங்கை தொடர்பான சர்வதேச மற்றும் உள்ளூர் அறிக்கைகளை நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். குறிப்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையிலான நிர்வாகம் குறித்து பல பிரிவுகள் கவலைகளை எழுப்பியுள்ளன. அடுத்த சில மாதங்களில் வெளிநாட்டு நிறுவனங்கள் எங்களுக்கு எதிராக வலுவான நிலைப்பாட்டை எடுக்கக்கூடும்.

மேலும் ஜெனீவில் உள்ள மனித உரிமைகள் பேரவையில் சவால்களை எதிர்கொள்ள வெளியுறவுத்துறை அமைச்சு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அந்தவகையில் இவற்றினை எதிர்கொள்ள அமைச்சர் தினேஷ் குணவர்தன, வெளியுறவுத்துறை அமைச்சு மற்றும் பிற தொடர்புடைய அமைப்புகள் கூட்டாக செயற்படும்.

மேலும் பல்வேறு நாடுகளில் வசிக்கும் இலங்கை வெளிநாட்டினர் மனித உரிமைகள் பேரவை அமர்வில் நாட்டிற்கு ஆதரவாக உண்மைகளை முன்வைத்தனர். நாங்கள் அவர்களுக்கு தொடர்ந்து ஆதரவளிப்போம். மனித உரிமைகள் பேரவையில் நாட்டின் சுதந்திரத்தையும் இறையாண்மையையும் பாதுகாக்க நாங்கள் செயல்படுவோம்’ என இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூறினார்.

Read more...

வன்னியில் இராணுவ வீரர் இனந்தெரியாத கும்பலால் தாக்குதல் - துப்பாக்கியையும் கைப்பற்றியது

வவுனியாவில் உள்ள போகஸ்வெவ இராணுவ முகாமில் பணியாற்றும் இராணுவ வீரர் ஒருவர் தாக்கப்பட்டதால் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என போகஸ்வெவ பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இராணுவ வீரர் கடைமைக் காலம் முடிவடைந்ததும், தனது முகாமை நோக்கி வந்துகொண்டிருந்த வேளையிலேயே, இராணுவ வீரர் ஒரு கும்பலினால் சரமாரியாகத் தாக்கப்பட்டுள்ளார். அவரிடமிருந்த துப்பாக்கியும் பறித்தெடுக்கப்பட்டுள்ளது என விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

இராணுவ சிப்பாயின் கழுத்தில் பலத்த வெட்டுக்கள் ஏற்பட்டதால், இராணுவ வீரரால் உதவிகோரி சத்தமிட முடியவில்லை. மற்றொரு இராணுவ வீரர் சோதனைச் சாவடிக்குச் சென்று கொண்டிருந்தபோது ஆபத்தான நிலையில், இராணுவ வீரர் காணப்பட்டுள்ளார்.

ஆபத்தான நிலையில் இருந்த இராணுவ வீரர் வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுர இராணுவ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில், வவுனியாவில் உள்ள போகஸ்வெவ இராணுவ முகாமில் ஒரு இராணுவ வீரர் தாக்கியவிட்டு, பறித்தெடுத்த துப்பாக்கி கெக்கிராவ பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க கூறுகிறார்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com