Monday, March 11, 2019

பயங்கரவாத சட்டத்தை சாதாரண சட்ட அந்தஸ்துக்கு மாற்றுவது ஆபத்தானது - எதிர்க்கட்சி தலைவர்

பயங்கரவாத சட்டமொன்றை சாதாரண சட்ட அந்தஸ்துக்கு மாற்றுவது ஆபத்தானது என்று எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ
தெரிவித்துள்ளார். மாத்தறையில் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

1979 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடைச் சட்டம், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தினால் மாற்றீடு செய்யப்படவுள்ளதாக அரசாங்கம்அறிவித்துள்ள நிலையில் அவர் மேற்படி தெரிவித்தார். எந்தவொரு அரசியல் கட்சியும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்துக்கு ஆதரவு வழங்கக் கூடாது. பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமொன்றை நாட்டில் அவசரகாலச் சட்டம் இருக்கின்றபோதே பயன்படுத்த முடியும். இவ்வாறிருக்கையில், இச்சட்டத்தை சாதாரண சட்ட அந்தஸ்துக்கு மாற்றுவது ஆபத்தானது. அதையும் மீறி மாற்றும் சந்தர்ப்பத்தில், தற்போது தான் கலந்துகொள்ளும் ஒரு சாதாரண கூட்டமொன்றைக் கூட நடாத்த விடாமல் தடை செய்வதற்கு ஒரு சாதாரண பொலிஸ் அதிகாரிக்கு இயலுமை காணப்படுகின்றது.

இதனால், ஜனநாயகத்துக்கும் , அரசியல் கட்சிகளின் செயற்பாடுகளுக்கும் ஆபத்தான இந்த சட்டத்தை அங்கீகரிப்பதை தவிர்க்கவேண்டும் என்று எதிரிகட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.

Read more...

நாட்டில் சீரான வானிலை - வளிமண்டலவியல் திணைக்களம்

நாடு முழுவதும் சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் நாட்டின் கிழக்கு கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையில் சிறிதளவான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதுடன் இரத்தினபுரி, காலி, மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டிற்கு தென்மேற்காக உள்ள கடற்பரப்புகளில் சில இடங்களில் இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 15-25 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

Read more...

இன்று கூட்டமைப்பை சந்திக்கும் JVP

20 ஆவது திருத்தச் சட்டமூலம் குறித்து கலந்துரையாடுவதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இன்று பேச்சுவார்த்தை மேற்கொள்ளவுள்ளதாக JVP அறிவித்துள்ளது.

இரண்டு கட்சிகளுக்கிடையிலான சந்திப்பு JVP யின் கட்சித் தலைமையகத்தில் இன்று பிற்பகல் 2.00 மணி அளவில் இடம்பெறவுள்ளதாக அக்கட்சியின் பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கும் உத்தேச 20 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபடப் போவதாக JVP தெரிவித்துள்ளது.

இதனிடையே, கடந்த 6 ஆம் திகதி எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுடன் முதலாவது கட்ட சந்திப்பை நடாத்திய JVP, இன்று தமிழ் தேசிய கூட்டமைப்புடனும், சில நாட்களுக்குள் பிரதமர் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடாத்த எதிர்பார்த்துள்ளதாகவும் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.


Read more...

அரசியல் அமைப்பு பேரவை தொடர்பில் ஜனாதிபதி அநீதியான கருத்துக்களை முன்வைத்துள்ளார் - அரசியலமைப்புப் பேரவை

அரசியலமைப்புப் பேரவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது. கடந்த 21ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின்போது, அரசியலமைப்புப் பேரவையின் நடவடிக்கை தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதத்தின்போது, அரசியலமைப்புப் பேரவையில் காணப்படும் பிரச்சினைகளை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதியால் அரசியல் அமைப்பு பேரவை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையிலேயே குறித்த கடிதம் அமையப்பெற்றுள்ளது. குறித்த கடிதம் சபாநாயகர் கரு ஜயசூரியவை தலைமையாக கொண்டு எழுதப்பட்டது. அதன் சுருக்கம் ஊடகங்களிடம் அனுப்பி வைக்கப்பட்டது.

அரசியல் அமைப்பு பேரவை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த கருத்துக்கள் மிகவும் அநீதி என்பதுடன், மிகவும் பாரதூரமானது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அரசியலமைப்புப் பேரவையில் சிவில் சமூக பிரதிநிதிகளுக்கு பெரும்பான்மை வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டுடன் தாமும் இணங்குவதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியல் அமைப்பு பேரவை, அரசியல் அமைப்பிற்கு அமையவே உயர் நீதிமன்ற நீதியரசர்களை நியமித்தல், சட்டமாஅதிபர், பொலிஸ்மாஅதிபர் ஆகியோரை நியமித்தல் போன்ற பணிகளை செய்து வருவதாக
சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் அரசியலமைப்புப் ​பேரவையின் நடவடிக்கைகள் குறித்து ஏதும் அபிப்பிராயங்கள் தென்படுமாக இருந்தால், குறித்த விடயங்களை பேரவையிடம் முன்வைக்குமாறும் அவற்றை ஜனாதிபதியின் கவனத்திற்கு தயவுடன் கொண்டுவருவதாகவும், பேரவை ஊடகங்களுக்கு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read more...

Sunday, March 10, 2019

கேணல் ரத்தனபிரிய பந்து ஐ.நா நோக்கி புறப்படுகின்றார்.

சிவில் பாதுகாப்பு படையணியின் இயக்குனராகவிருந்து ஓய்வு பெற்றுள்ள கேணல் ரத்னபிரிய பந்து எதிர்வரும் வாரம் ஜெனிவா நோக்கி பயணமாகவுள்ளார் எனத் தெரிவருகின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத் தொடரின் 40 வது அமர்வுகளில் கலந்து கொள்ளும் பொருட்டே அவர் அங்கு செல்கின்றார்.

கிளிநொச்சியில் சிவில் பாதுகாப்பு பிரிவின் இயக்குநராக செயற்பட்டபோது, மக்களின் மனதை கவர்ந்த அதிகாரியாக பணியாற்றிய அவர், இடமாற்றம் பெற்றுச் சென்றபோது பிரதேச மக்கள் அவரை தோளில் சுமந்து ஊர்வலமாக சென்று தமது நன்றிகளை தெரிவித்திருந்தது யாவரும் அறிந்தது.

தற்போது சேவையிலிருந்து ஓய்வு பெற்றுள்ள அவர் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து வன்னி மக்களுக்கு உதவ முன்வந்துள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

ஐ.நா அமர்வுகளில் கலந்து கொள்ளும் கேணல் ரத்னப்பிரிய பந்து வன்னி மக்கள் அனுபவிக்கும் குறைபாடுகள் அவர்களது தேவைகள் தொடர்பில் தனது சேவைக்காலத்தில் இனங்கண்டவற்றை உலகிற்கு அறியப்படுத்துவார் என நம்பப்படுகின்றது.

Read more...

வாக்காளர் பெயர் பட்டியலில் மாற்றங்கள் கொண்டு வரப்படும் - தேர்தல் ஆணைக்குழு

வாக்காளர் பெயர் பட்டியலில் புதுவித மாற்றங்களை கொண்டு வரவுள்ளதாக, தேர்தல் ஆணைக்குழு தகவல் வெளியிட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் மேலதிக செயலாளர் ரசிக பீரிஸ் இதனை குறிப்பிட்டார்.

இந்த புதிய முறைமை அனைத்து மாவட்டங்களுக்குமான பிரதேச செயலாள பிரிவுகளிலும் இணைக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் ஏற்படுத்தப்படவுள்ள புதிய மாற்றம் குறித்த விபரங்களும் விரைவில் வெளியாகும் என, தேர்தல் ஆணைக்குழுவின் மேலதிக செயலாளர் ரசிக பீரிஸ் இதனை குறிப்பிட்டார்.

Read more...

மின்சார பாவனை குறித்து பொதுமக்களுக்கு விசேட அறிவுறுத்தல்

பொதுமக்கள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு, மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. வரலாற்றிலேயே அதிக மின்பாவனை கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர் பதிவாகியிருந்த நிலையில், இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் அதிக வெப்பமான வானிலை காரணமாக பொதுமக்கள் அதிகமாக மின்சாதனங்களை பயன்படுத்துவதாகவும், இதன்காரணமாக நீர் நிலைகளின் நீர் மட்டம் குறைவடைத்துள்ளதாகவும், மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக கொத்மலை, ரன்டெம்பே, போனவத்த முதலான நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் குறைவடைந்துள்ளது. இந்த நிலைமை நீடித்தால், பொதுமக்களுக்கான குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவித்த மேற்படி அமைச்சு, மக்கள் மிகுந்த சிக்கனமாக மின்சாரத்தை உபயோகிக்க வேண்டும் என, அறிவுறுத்தியுள்ளது.

Read more...

பலம் பொருந்திய கூட்டமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் - தயாசிறி ஜயசேகர

அடுத்து இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியை தோற்கடிக்க வேண்டும் என, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஒன்றிணைந்து பலம் பொருந்திய கூட்டமைப்பொன்றை உருவாக்குவதன் முலமே, ஐக்கிய தேசிய கட்சியை தோற்கடிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தமது தரப்பினரால் உருவாக்கப்படவுள்ள புதிய பலமான கூட்டணியை ஒழிப்பதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனினும் அவற்றை வெற்றிகொண்டு நாட்டுக்காக சிறந்த சேவைகளை வழங்க தமது தரப்பு தயாராக உள்ளதாக அவர் கூறினார்.

அங்குனுகொலபெலஸ்ஸ பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர இதனை குறிப்பிட்டுள்ளார்.

Read more...

நாடு இக்கட்டான நிலையில் உள்ளது - அனுர குமார திஸாநாயக்க

நாடு தற்போது இக்கட்டான சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டிருப்பதாக, ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது. ஜே.வி.பி யின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திஸாநாயக்க இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது, அந்த நாட்டின் ஜனநாயகத்திலும், பொருளாதாரத்திலுமே தங்கியுள்ளது. இலங்கையில் தற்போது நிறைவேற்று அதிகாரம் தலைதூக்கியுள்ளமையால், இங்கு ஜனநாயகமோ, பொருளாதார வளர்ச்சியோ சரியான முறையில் இடம்பெறவில்லை. இதன் காரணமாக நாடு தற்போது இக்கட்டான சூழ்நிலையில் இருப்பதாக அனுர குமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே, அவர் இதனை கூறினார்.

Read more...

பாதீடு தோற்கடிக்கப்பட வேண்டும் - அனைத்து நிறுவன ஊழியர் சங்கம்

2019 ஆம் ஆண்டுக்கான பாதீடு தோற்கடிக்கப்பட வேண்டும் என, அனைத்து நிறுவன ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. அத்துடன் இந்த பாதீட்டை தோற்கடிக்க அனைத்து அரசியல் கட்சிகளும் தம்முடன் கைகோர்க்க வேண்டும் என, அந்த சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அனைத்து நிறுவன ஊழியர் சங்கம் இன்று கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து, அச்சங்கத்தின் தலைவர் வசந்த சமரசிங்க இதனை கூறினார்.

2019 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில், தனியார் துறையினருக்கு எந்தவித சலுகைகளும் வழங்கப்படவில்லை என தெரிவித்தே, இந்த எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக வசந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Read more...

திடீரென மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 305 பேர் கைது - காவல்துறை

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புக்களின் போது, சுமார் 305 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். இவர்கள் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் பேரிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சுற்றிவளைப்பு காவல்துறை மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் மது போதையில் வாகனம் செலுத்தி, விபத்துக்களை ஏற்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

இது குறித்து காவல்துறையினருக்கு அதிக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதை அடுத்து, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரையிலான காலப்பகுதிகளில் 305 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதேவேளை கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புக்களின் போது, 527 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்கள் இரண்டே நாட்களில் கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Read more...

ஐக்கிய நாடுகளின் வதிவிட பிரதிநியாக சேனுக செனவிரத்னவின் பெயர் பரிந்துரை

ஐக்கிய நாடுகளின் நியூயோர்க் தலைமையகத்திற்கான இலங்கை வதிவிட பிரதிநிதியாக சேனுக செனவிரட்னவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவம் பெற்ற ஏனைய ஒன்பது நாடுகளுக்குமான இலங்கையின் வதிவிட பிரதிநிதிகளை நியமிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன்படி நாகன்டல – நெதர்லாந்து, குணசேகர – இந்தோனேசியா, ஜெயசூரிய – தாய்லாந்து, சேரம் – பஹ்ரெய்ன், எஸ்.கே.குணசேகர – பிலிப்பைன்ஸ், அமீர்ராஜ்வாட் – ஓமான், ஜெயசிங்க – ஐக்கிய அரபு இராச்சியம், வில்பத்த – இஸ்ரேல் ஆகியோர் இந்த பதவிக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களது தரத்தை பரிசீலித்து, இதற்கான அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்வாறு அனுமதி கிடைத்தவுடன் அவர்கள் தங்களது கடமைகளை பொறுப்பேற்பார்கள் என, ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Read more...

''கிராமத்திற்கு கொண்டு செல்வோம்'' வேலைத்திட்டம் இன்று ஆரம்பம்

சிறிகொத்தவை கிராமத்திற்கு கொண்டு செல்வோம் எனும் வேலைத்திட்டம் இன்று களுத்துறை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கட்சியில் அங்கம் வகிக்கும் சகல அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் இந்த வேலைத்திட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர்.

களுத்துறை மாவட்டத்தில் உள்ள தேர்தல் தொகுதிகளான களுத்துறை, புளத்சிங்கள, பண்டாரகம, மத்துகம, அகலவத்தை, ஹொரண, பாணந்துறை, பேருவளை என்பவற்றில் குறித்த வேலைத்திட்டம் இன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர், வீடு வீடாக சென்று மக்களின் பிரச்சினைகளை கேட்டறியவுள்ளனர்.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ் கிராம மட்டத்திலுள்ள கட்சிக் குழுக்களை வலுப்படுத்துதல், புதிய அங்கத்தவர்களை இணைத்துக் கொள்ளுதல், மக்களின்; பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுத்தல் போன்ற பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. இந்த வேலைத்திட்டத்தை எதிர்வரும் காலங்களில் நாடளாவிய ரீதியில் முன்னெடுப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

Read more...

வரவு செலவு திட்டம் குறித்து வெளியிடப்பட்ட கருத்துக்கள்

பாராளுமன்றத்தில் இடம்பெறும் 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான் விவாதம் நேற்று இடம்பெற்றது. விவாதத்தில் கலந்து கொண்ட அமைச்சர் பழனி திகாம்பரம், நாட்டின் அபிவிருத்திக்கான வரவு செலவுத்திட்டம் இதுவென குறிப்பிட்டார்.

தோட்டத் தொழிலாளர்களின் சுகநலத் தேவைகளுக்காக இந்த முறை வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை நாட்டின் சகல துறையினரையும் உள்ளடக்கும் வகையில் இந்த வரவு செலவுத்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக இராஜாங்க அமைச்சர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்தார். இது அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதனையடுத்து நாட்டின் பிரதான கட்சிகள் இரண்டும் இதுவரை முன்வைத்த சகல வரவு செலவுத்திட்டங்களையும் விட இந்த வரவு செலவுத்தி;ட்டம் சிறந்த பிரதி இலாபங்களைக் கொண்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் நிஹால் கலபத்தி குறிப்பிட்டார்.

பொதுமக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான பல யோசனைகள் இந்த வரவு செலவுத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருப்பதாக பிரதி அமைச்சர் அஜித் மான்னபெரும தெரிவித்தார்.

இந்த முறை சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டம் பொருளாதாரம், கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளை வலுப்படுத்தும் வகையில் காணப்படுவதாக பிரதி அமைச்சர் புத்திக்க பத்திரண தெரிவித்தார்.

இந்த வரவு செலவுத்திட்டம் ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டதாகும் என பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

வங்கிக் கடனை பெறுவதற்காக வினைத்திறனுடன் கூடிய நேரடி தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது வரவேற்கத் தக்க விடயம் என பாராளுமன்ற உறுப்பினர் சுமேதா ஜி ஜயசேன தெரிவித்தார்.

பெண்களை வலுப்படுத்துவதற்கான பல யோசனைகள் இந்த வரவு செலவுத்திட்டத்தின் கீழ் உள்ளடக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் துஷித்தா விஜேமான்ன தெரிவித்தார்.

இதேவேளை நிலையான அபிவிருத்தியும், அதற்கான யோசனைகளும் இந்த வரவு செலவுத்திட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Read more...

வீசா நடைமுறையில் மாற்றத்தை கொண்டு வருவதற்கு, இதுவே காரணம் - ஜனாதிபதி

சுற்றுலா நோக்கத்திற்காகவும் பௌத்த மத விவகாரங்களுக்காகவும் இலங்கை வரும் பல்வேறு நாட்டவர்களுக்கு வீசாவில் நடைமுறையில் இருந்து விலக்களிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கடுவெல - கம்பொடியா சர்வதேச பௌத்த மத்திய நிலையத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள விகாரையை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

நாட்டின் சுற்றுலா கைத்தொழில் அபிவிருத்திக்காகவும் - பௌத்த சமய எழுச்சிக்காகவும் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் இதனை நடைமுறைப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

கம்போட்டியாவில் இருந்து இலங்கைக்கு வருகை தருகின்ற போது வீசா பெற்றுக்கொள்வது தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் பற்றி மகாசங்கத்தினர் முன்வைத்த கோரிக்கையின் பேரில் எதிர்காலத்தில் சுற்றுலா மற்றும் பௌத்த சமய நடவடிக்கைகளுக்காக நாட்டுக்கு வருகை தருகின்றபோது கம்பூச்சியாவிற்கும் வீசா நடைமுறையை நீக்கி நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

இலங்கைக்கும் கம்போடியாவுக்கும் இடையில் இருந்துவரும் நீண்டகால நட்புறவுக்கு முக்கிய காரணம் தேரவாத பௌத்த தத்துவமாகும். தேரவாத பௌத்த தத்துவத்தின் கேந்திர நிலையம் என்ற வகையில் இலங்கை அனைத்து பௌத்த நாடுகளுடனும் உறவுகளை பலப்படுத்தி தேரவாத பௌத்த தத்துவத்தின் மேம்பாட்டிற்காக அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

தேரவாத பௌத்த தத்துவத்தை வெளிப்படுத்தும் கம்போடியாவின் கட்டிடக் கலையை எடுத்துக்காட்டும் வகையில் இந்த புதிய விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கம்போடியாவில் லங்கா விகாரையில் நடுவதற்காக ஸ்ரீ மகாபோதி அரச மரக்கன்று ஒன்றை அவ்விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய ஆரியவங்ச நாயக்க தேரரிடம் ஜனாதிபதி கையளித்தார்.

Read more...

மன்னார் மனித புதைகுழி குறித்து தடயவியல் நிபுணர் வெளியிட்ட கருத்து

அண்மையில் அமெரிக்காவின் புளோரிடாவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட மனித எலும்பு கூடுகள், 600 ஆண்டுகள் பழமையானது என அறிக்கை வெளியிடப்பட்டது. இதனை அடுத்து மன்னார் மனித எலும்புக் கூடுகளின் அகழ்வு பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டன.

அமெரிக்காவின் அறிக்கை வெளியானதை அடுத்து ஒல்லாந்தர்களுக்கும், போர்த்துக்கேயர்களுக்கும் இடையில் இடம்பெற்ற சண்டையின் போது கொல்லப்பட்டவர்களின் உடலங்களே, மன்னாரில் புதைக்கப்பட்டிருக்கலாம் என பல்வேறு தரப்பினரால் சந்தேகம் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் மன்னார் மனித எலும்புக் கூடுகள் குறித்து தடயவியல் நிபுணர் செல்வ சுரேஷ் அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். மன்னார் மனித புதைகுழியில் இருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித எலும்பு கூடுகள், அரை நூற்றாண்டுக்கு உட்பட்டவை என, தடயவியல் நிபுணர் பேராசிரியர் செல்வ சுரேஷ் குறிப்பிட்டுள்ளார்.

மன்னார் மனித புதைக்குழியின் எலும்பு கூடுகள், கி.பி.1400 – கி.பி.1650 வருட காலத்திற்குரியது என கார்பன் பரிசோதனை அறிக்கையில்
குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும் மன்னார் மனித புதைகுழி அரை நூற்றாண்டுக்கு உட்பட்டதே. இது தொடர்பான உண்மைகளை கண்டறிவதற்கு சர்வதேச மனித உரிமைகள் ஆணையம் தலையிட்டு, சர்வதேச தடவியல் மருத்துவர்களை கொண்டு வெளிப்படையான ஆய்வின் மூலமே உண்மையை கண்டறிய வேண்டும்.

மன்னார் மனித எச்சங்கள், அந்த மண்ணின் தரம் மற்றும் தட்ப வெட்ப சூழ்நிலைக்கு ஏற்ப காணப்பட வேண்டும். நான் நேரில் பார்த்த தடவியல் மருத்துவர் என்ற ரீதியில் என்னால் அந்த ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ள விடயங்களை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றும் அது அரை நூற்றாண்டுக்கு உட்பட்டவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இந்த ஆய்வை மேற்கொள்ளும் அளவிற்கு அனுபவமுள்ள தடவியல் ஆய்வாளர்கள் இல்லை. எனவே இந்த கார்பன் அறிக்கையை வைத்துக் கொண்டு எந்தவித முடிவுகளுக்கும் வர முடியாது என, தடயவியல் நிபுணர் செல்வ சுரேஷ் கூறியுள்ளார்.

Read more...

மத்திய வங்கியில் இடம்பெற்ற மோசடியை முடிவுக்கு கொண்டுவந்தது நடப்பு அரசாங்கமே - இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும

மத்திய வங்கியில் இடம்பெற்று வந்த மோசடியை முடிவுக்கு கொண்டு வந்தது ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கமே எனவும், ஆனாலும் எல்லோரது விமர்சனங்களுக்கும் இந்த அரசாங்கமே முகம் கொடுத்து வருவதாக இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும தெரிவித்தார்.

வரவு செலவுத்திட்டம் தொடர்பான இரண்டாம் கட்ட விவாதம் நடைபெற்று வரும் நிலையில் இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும தெரிவித்தார். ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மேற்கொண்ட விசாரணைகள் மூலம் மத்திய வங்கியில் ஊழல் மோசடி இடம்பெற்று வந்துள்ளது என்பதை அறியக்கூடியதாக இருந்தது. மத்திய வங்கியில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் மோசடிகள் நேர்ந்துள்ளதாக விசாரணை அறிக்கைகள் கூறுகின்றன.

குறித்த மோசடிகளை அனைத்தும் மிகவும் சூட்சுமமான முறையில் நடைபெற்றுள்ளன. இந்த ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்ட ஊழல்வாதிகள் விசாரணை நடாத்த முடியாதவாறு சட்டத்திலுள்ள ஓட்டைகளில் நுழைந்து மறைந்துவிடுகின்றனர். எவ்வாறு இருப்பினும் எமது அரசாங்கத்திலும் மத்திய வங்கியில் மோசடி இடம்பெற்றதுதான். அதை நாம் முடிவுக்கு கொண்டு வந்தோம்.

அதன்பின்னர், 2016, 2017 , 2018 எந்தவித மோசடியும் இடம்பெறவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Read more...

சவேந்திர சில்வா எதிர்நோக்கியுள்ள பிரச்சினை - ஐ நாவில் கண்டனம்

சவேந்திர சில்வாவின் நியமனத்திற்கு, ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது. ஐ நாவின் மனித உரிமை ஆணையாளர் பசெலெட் இந்த கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

கடந்த 25 திகதி ஆரம்பிக்கப்பட்ட ஐ.நா கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகின்றது. இதில் இலங்கை தொடர்பான அறிக்கை கடந்த வியாழக்கிழமை பகிரங்கப்படுத்தப்பட்டது. குறித்த அறிக்கையில், மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் நியமனத்துக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடைபெற்று முடிந்த இலங்கையின் இறுதி யுத்தத்தில் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இலங்கை இராணுவத்தின் 58 ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாக செயற்பட்டார்.

அவரது தலமையில் இராணுவம் போர்க்குற்றங்களை இளைத்துள்ளது. இறுதி யுத்தத்தில் அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்களை இராணுவத்தினர் மீறினார்கள் என்று, ஐ.நா. பொதுச்செயலாளர் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கையிலும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கையிலும், குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தநிலையில் எதிர்வரும் 20ஆம் திகதி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் சுமார் 15 பக்கங்களைக் கொண்ட, இலங்கை தொடர்பான அறிக்கையை ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பசெலெட் சமர்ப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

இலங்கை தாதிமாருக்கு அமெரிக்காவில் வேலை

இலங்கை தாதிமாருக்கு அமெரிக்காவிலுள்ள வைத்தியசாலையில் சேவையாற்றுவதற்கான சந்தர்ப்பம் முதன் முறையாக கிடைக்கப்பெற்றுள்ளது.

இலங்கைதாதி ஒருவர் இந்த அரிய சந்தர்ப்பத்தை பெற்றுள்ள சிறப்பிற்குரியவர் ஆவர். இந்த தகவலை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளியிட்டுளள்ளது. இலங்கை தாதியர் சங்கத்தில் பதிவு செய்துள்ள கண்டி பொது வைத்தியசாலையின் பணிபுரியும் றுவனி ரணசிங்ஹ என்பவரே நேற்று முன்தினம் தாதியர் சேவைக்காக அமெரிக்கா சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் தற்போது அமெரிக்காவில் பணியாற்றும் பொருட்டு பயிற்சிகளை மேற்கொண்டு வரும் மேலும் 25 தாதியர்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை பணியாளர்களுக்காக தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஒரு கட்டமாக இது அமைந்துள்ளது.

இந்தநிலையில், American company, Michigan-based Karma Services நிறுவனத்துடன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் சமீபத்தில் கைச்சாத்திட்ட உடன்கடிக்கைக்கு அமைவாக 3 000 பேருக்கு இந்த வேலை வாய்ப்பு கிட்டவுள்ளது. ஆகவே அமெரிக்காவில் தொழிலை பெற்றுக்கொள்ளும் இலங்கை தாதியர்களுக்கு மாதாந்த சம்பளம் 5 ஆயிரம் அமெரிக்க US $ 5000 டொலர்களாகும்.

Read more...

சில நாட்களுக்கு அதிகரித்த வெப்பநிலை தொடரும்

நாட்டில் நிலவும் அதிக வெப்பத்துடனான வானிலை எதிர்வரும் சில நாட்களுக்கு நீடிக்கும் காரணத்தினால், பொது மக்களை அவதானமாக செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இலங்கையில் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட வட மத்திய, வட மேல் மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் வெப்ப நிலை அண்மைய நாட்களில் அதிகரித்து காணப்படுகின்றது. இந்த வெப்பநிலை அதிகரிப்பு எதிர்வரும் மே மாதம் வரையில் நீடிக்கும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அதிகரித்த வெப்ப நிலை காரணாமாக நாட்டின் முக்கிய நீர்த்த தேக்கங்களில் நீர் மட்டம் சடுதியாக குறைவடைந்துள்ளது. அதுமாத்திரமன்றி பயிர் நிலங்கள் மிகவும் சேதமடைந்துள்ளன. பொது மக்கள் பல்வேறுபட்ட அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள். மின்சாரத்தை மிகவும் குறைந்த அளவில் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள். அத்துடன் முடிந்தளவு நீரை அதிகளவில் பருகவேண்டும் என்றும் சுகாதார துறையினர் அறிவுறுத்திவருகின்றார்கள். ஆகவே மக்கள் கிடைக்கின்ற அறிவுறுத்தல்களுக்கு அமைய செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பாடுகின்றார்.

Read more...

மஹிந்தானந்த அளுத்கமகேயுடைய மகனின் வாகன விபத்தில் காயமடைந்த பொலிஸ் பரிசோதகர் பலி

மஹிந்தானந்த அளுத்கமகேயுடைய மகனின் வாகனம் ஏற்படுத்திய விபத்தில் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பொரல்ல பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி உயிரிழந்துள்ளார்.

கடந்த 24ம் திகதி அதிகாலை பம்பலப்பிட்டிய பிரதேசத்தில் இந்த விபத்து நேர்ந்தது. இதன்போதே குறித்த பொலிஸ் பரிசோதகர் படுகாயமடைந்திருந்தார்.

விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் மகன் உள்ளிட்ட குழுவினர், கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்திய நிலையில் வாகனத்தை ஓட்டிச் சென்ற சாரதி மட்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். ஏனையவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

எவ்வாறு இருந்த போதிலும் குறித்த பொலிஸ் பரிசோதகர் படுகாயங்களுக்கு இலக்காகி இருந்த நிலையில், உயிரிழந்துள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளார்கள்.

Read more...

சீனா இலங்கைக்கு கடன் வழங்காது - சரத் அமுனுகம

முன்னர் போன்று நாட்டிற்கு கடன் வழங்க சீனா தயாராக இல்லை என்று முன்னாள் அமைச்சர் சரத் அமுனுகம நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும்போது தெரிவித்துள்ளார்.

முன்னர் சீனாவினால் இலங்கைக்கு கடன்கள் துரிதமாக வழங்கப்பட்டன. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் சீனா கடன்களை வழங்க தாமதிக்கிறது. அப்படி கடன்களை வழங்க வேண்டும் என்றால் மேலதிக நிபந்தனைகளை சீன இலங்கைக்கு விதிக்கின்றது.

சீனா இவ்வாறு நடந்து கொள்வதற்கு முக்கிய காரணம் தற்போதைய அரசாங்கம் சீனாவை விமர்சித்தமையே ஆகும். உண்மையில் தற்போது கடன் பிரச்சினையினை இலங்கை எதிர்நோக்கி இருக்கிறது என்றால், இதற்கு சீனா காரணம் இல்லை. சீனாவை இலங்கை விமரிசித்து இருக்கிறது. ஆனால் சீனாவை விட இலங்கை ஜப்பானிடம்தான் அதிகளவு நிதியை கடனாக பெற்றுள்ளது என்ற சரத் அமுனுகம மேலும் தெரிவித்தார்.

Read more...

Saturday, March 9, 2019

மஹிந்த தரப்பிலுள்ள பலர் நிறைவேற்று ஜனாதிபதி முறையை எதிர்கின்றனர். விஜித ஹேரத்

பொதுஜன பெரமுனவிலுள்ள பெரும்பாலானவர்கள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டும் என்ற கருத்தில் காணப்படுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

பண்டாரவெல தொகுதியில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரித்த அவர் மேலும் தெரிவிக்கையில் :

20 ஐ கொண்டுவந்தால் இந்த நாடு அழிந்து விடும். எனவே மஹிந்த ராஜபக்ச அவர்கள் ஜேவிபி யுடன் பேச்சுவார்த்தைக்கு சென்றால் நாங்கள் கட்சியிலிருந்து விலகுவோம் என்று அச்சுறுத்தினார்கள். அப்போது அந்தக் கூட்டணியிலுள்ள சிலர் கூறினார்கள். அவன் விலகினால் விலகிப்போகட்டும். விலகி அவனால் எங்குதான் போகமுடியும். அவனுக்கு அந்தளவுக்கு அரசியல் பலம் இருந்தால் பார்த்துக்கொள்வோம் என்றார்கள். எதிர்கட்சித் தலைவர் எங்களுடன் பேச வந்தார். அவன் இப்போது தாமரை மொட்டை விட்டு வெளியேறி விட்டானா? இல்லையே.

இவர்கள் நாயிலிருக்கும் உண்ணிகளை போன்று. ஆனாலும் மஹிந்தவுடன் உள்ள பலர் ஜனாதிபதி முறைமையினால் பாதிக்கப்பட்டவர்களே எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


Read more...

சில அரச நிறுவனங்கள் இனி அமைச்சுகளுக்கு கீழே இயங்கும்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவின் பேரில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் சில அரச நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட அமைச்சுகளின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

அந்த வகையில் இதுவரையில் எந்தவித அமைச்சுக்கும் உட்படுத்தப்படாத நிறுவனங்களே இவ்வாறு கொண்டு வரப்பட்டுள்ளன. 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 7 ஆம் திகதி முதல் அமுலுக்கும் வரும் வகையில், இதற்கான வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கை தகவல் தொடர்பான ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு பாதுகாப்பு அமைச்சின் கீழும், ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனம் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட நிறுவனங்களை நிதி அமைச்சின் கீழும் கொண்டுவரப்பட்டுள்ளது.

இலங்கை டெலிகொம் நிறுவனம் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட நிறுவனங்கள் யாவும் தகவல் தொலைத் தொடர்பு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சின் கீழும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளது.

நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சின் கீழ் இதற்கு முன்னர் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட ரன்மினிதென்ன மஹிந்த ராஜபக்ஸ சினிமா கிராமம், புதிய வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

Read more...

வறட்சியால் குறைவடைந்துள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம்

வறட்சியான வானிலையால் நாட்டின் பல பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கடும் வறட்சி காரணமாக மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 40.7 வீதம் வரை குறைவடைந்துள்ளதாக, மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதிகளவிலான வறட்சி காரணமாக மின் உற்பத்தி நிலையங்களினூடாக 20 வீதமான மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்படுவதாக அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்தார். இந்தநிலையில் மேல் கொத்மலை அணைக்கட்டினை பரிசோதனை செய்வதற்காக மார்ச் முதலாம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை, நீர் வெளியேற்றப்பட்டதாக சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் குப்பைகள் சேருவதால் அதனை அகற்றவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதற்காக புதிய வலைகளை பொருத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சுலக்ஷன ஜயவர்தன மேலும் தெரிவித்தார். நிலவும் வறட்சியுடனான வானிலையை பயன்படுத்தி, நீர்த்தேக்கங்களில் திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். எவ்வாறாயினும், மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் நீர் நிரப்பும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்படுவதாக மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு தெரிவித்தது.

Read more...

அட்மிரல் கரண்ணகொட மீதான வழக்கு எல்.ரீ.ரீ.ஈ இனது எச்சங்களை திருப்திப் படுத்துவதற்காக அல்ல. ரங்க ஜயசூரிய

மாறாக சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்துவதற்கே.

நீண்ட பயங்கரவாதப் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு முடிவைக் காண்பதற்கான ஸ்ரீலங்காவின் முயற்சி இரண்டு சித்தாந்த தீவிர கருத்தியல்களால் தடைப்பட்டுள்ளது, இவை ஒவ்வொன்றும் மற்றையதின் நிகழ்ச்சி நிரலுக்கு ஊக்கம் ஊட்டுகிறது. தராசின் ஒரு முனையில் உள்ள சிங்களத் தீவிர தேசியவாதிகள் மற்றும் தென்பகுதி தேர்தல்கள் பற்றிய அரசியல் கணிப்புகள் மிக மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட இராணுவ அதிகாரிகள் மீது கூட வழக்குத் தொடுப்பதற்கு மேற்கொள்ளப்படும் கடந்தகால மற்றும் தற்கால முயற்சிகள் எல்லாவற்றையும் கிட்டத்தட்ட எதிர்க்கின்றன. இதேபோல உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, இராணுவம் ஆக்கிரமித்துள்ள காணிகளை அதன் உரிமையாளர்களுக்கு வழங்குவது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் மற்றும் புதிய அரசியலமைப்பு என்பனவற்றை சில சுயசேவைச் சூழ்ச்சிகள் பின்னுக்குத் தள்ளுகின்றன.

மற்றைய தீவிர முயற்சிகள், எல்.ரீ.ரீ.ஈ இனது எச்சங்கள், அவற்றுடன் இணைந்த குழுக்கள் மற்றும் ஊதியம் பெறும் கூலிப்படைகள் ஆகியவை கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக அவர்கள் நிதியுதவி வழங்கிவந்த மகா மோசமான பயங்கரவாத குழுவைத் தோற்கடித்ததுக்காக ஸ்ரீலங்கா அரசாங்கத்தை இழிவுபடுத்தவேண்டும் என்று பகீரதப் பிரயத்தனம் மேற்கொண்டு வருகின்றன. எல்.ரீ.ரீ.ஈ இனது அழிப்பு ஒரு முடிந்து போன செயல் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் மற்றும் அது தமிழ் பிரிவினைவாதப் பிரச்சாரம் மூலம் கிடைக்கும் பயன்களுக்கு அப்பாற்பட்டது (இருந்தும் கொழும்பில் உள்ள மற்றொரு அரசாங்கம் தனது தலையை மண்ணுக்குள் புதைத்த நிலையில் வடக்கு மற்றும் தெற்கில் மிகவும் குறுகிய சுயாதீன வரலாற்றில் மூன்று முறைகள் இடம்பெற்ற பேருந்து குண்டுத் தாக்குதல்கள் போன்று மற்றொரு தாக்குதல் நடக்கும்போது முரட்டுத்தனமாக உறக்கம் கலைந்து எழுகிறது). ஆகவே சர்வதேச விசாரணைக்கான கோரிக்கை, போரில் தோற்றதுக்காக வேண்டப்படும் ஒரு ஆறுதல் பரிசாக இருக்கும்.

ஸ்ரீலங்கா முன்னோக்கி நகரவேண்டுமானால் அரசாங்கம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் நியாயமான மனக்குறைகளுக்கு தீர்வு வழங்க வேண்டும் மற்றும் குறைந்தபட்சம் மனித உரிமைகள் மீறப்பட்டது தொடர்பாக நன்கு ஆவணப்படுத்தியுள்ள சம்பவங்களை இழைத்த குற்றவாளிகள் மீதாவது வழக்குத் தொடரவேண்டும். அதன் ஐரோப்பிய நண்பர்களின் விருப்பத்திற்காக அப்படிச் செய்யாது, தேசிய நலன்கள் பற்றிய அதன் சொந்த கணக்குக் கூட்டல்களின் கட்டளைப்படி சொந்த விருப்பத்தின் பேரில் அதைச் செய்ய வேண்டும். அல்லது அரசாங்கம், புலிகளை நேசிக்கும் தமிழ் புலம் பெயர்ந்தவர்கள் மற்றும் அவர்களின் உள்நாட்டு பங்காளர்களைச் சமாதானப் படுத்துவதற்காக அதைச் செய்யக்கூடாது.

உண்மையில் நீதியின் சக்கரங்கள் மெதுவாகச் சுழன்றாலும் ஆனால் சீராகச் சுழல்கின்றது. சடடமா அதிபர் திணைக்களம் சொல்வதினபடி, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரண்ணகொட மற்றும் ஏனைய அதிகாரிகள், 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமற்போக்கடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டு வழக்கு விசாரணையை எதிர்நோக்கியுள்ளார்கள். சி.ஐ.டி யினர் குற்றம் சாட்டியுள்ளதின்படி அட்மிரல் கரண்ணகொட, தனது சொந்த பாதுகாப்பு உத்தியோகத்தரான லெப். கமாண்டர் சம்பத் முனசிங்காவின் தலைமையில் செயற்பட்ட ஒரு கடற்படைப் பிரிவினர் 11 இளைஞர்களைக் கடத்தி சட்டவிரோதமாகக் காவலில் வைத்திருப்பதற்கு உடந்தையாக இருந்தார் என்றும் அதேபோல குறைந்தபட்சம் ஐந்து இளைஞர்களைக் காவலில் வைத்திருப்பது பற்றி தகவலை முன்கூட்டியே அறிந்திருந்தும் அதை மறைத்து வைத்தார் எனக் கூறப்பட்டுள்ளது. முன்னாள் கடற்படைத் தலைவர் சரியான நேரத்தில் செயற்பட்டிருந்தால் அந்த உயிர்கள் காப்பாற்றப் பட்டிருக்கும் என சி.ஐ.டி யினர் கண்டறிந்துள்ளனர்.

முன்னதாக, கொழும்பு பிரதம நீதவான் அட்மிரல் கரண்ணகொடவின் கடவுச்சீட்டை பறிமுதல் செய்திருந்தார். அவரைத் தாங்கள் தேடிவருவதாக காவல்துறையினர் தெரிவித்தார்கள். முன்னதாக தன்னைக் கைது செய்வதைத் தடைசெய்யும்படி ஒரு நீதிமன்ற உத்தரவினைக் கோரி அவர் ஒரு அடிப்படை உரிமைகள் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். முன்னாள் கடற்படைத் தளபதியை சி.ஐ.டி யினர் கைது செய்யமாட்டார்கள் என்கிற உத்தரவாதத்தை வழங்க சட்டமா அதிபர் திணைக்களம் மறுத்துவிட்டது. அந்த மனுவை இந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றம் அவரை கைது செய்வதற்கான தடை உத்தரவை பிறப்பித்துள்ளது:

கடற்படைபிரிவு, செல்வந்த தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகளைக் கடத்தி மிரட்டி மிகப் பெருமளவில் கப்பம் பெறும் ஒரு இலாபகரமான கடத்தல் மோசடியில் ஈடுபட்டிருந்ததாக சி.ஐடி யினர் குற்றஞ்சாட்டியிருந்தார்கள்.

எவ்வாறாயினும் ஸ்ரீலங்கா பாதுகாப்பு படைகளின் மூன்று முன்னாள் தளபதிகளான விமானப்படை தளபதி றோசான் குணதிலகா, ஜெனரல் தயா ரட்னாயக்கா மற்றும் அட்மிரல் திஸ்ஸ சமரசிங்க ஆகியோர் முன்னாள் கடற்படைத் தளபதியை பாதுகாக்க வந்துள்ளார்கள். தற்போது நடந்துகொண்டிருக்கும் சட்ட நடவடிக்கைகளை அவர்கள் விமர்சித்தார்கள், அவர்கள் தெரிவித்தது என்னவென்றால், போர் நடந்து கொண்டிருக்கும்போதுதான் இந்த மீறல்கள் இடம்பெற்றுள்ளன மற்றும் அட்மிரல் கரண்ணகொட ஒரு கடற்படை மூலோபவியலாளர் அவர் கடற்புலிகளைத் தோற்கடித்தவர் என்று.

அந்த சத்தங்கள் எதுவும் சட்டத்தையோ அல்லது சாதாரண பொது அறிவையோ சம்மதிக்க வைப்பதாக இல்லை. தவிரவும் முன்னாள் சேவைத் தளபதிகள், கப்பம் பெறுவதற்காக பிள்ளைகளைக் கடத்தியது எவவாறு எல்.ரீ.ரீ.ஈ இனைத் தோற்கடிக்க உதவியது என்பதை; விளக்கவும் இல்லை. போரை வெற்றிகொண்ட முந்தைய ஆட்சி எல்.ரீ.ரீ.ஈ உடனான போரின்போது பாதுகாப்பு படையினருக்கு கிட்டத்தட்ட ஒரு சுதந்திரமான முடிவெடுக்கும் நிலையினை வழங்கியிருந்தது, மற்றும் அதில் குறைபாடுகள், தவறுகள் மற்றும் திட்டமிட்ட அதிகார துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றது பற்றி அது விசாரணை நடத்தவில்லை. இந்த தன்னிச்சையான கடந்தகால செயற்பாடுகளின் ஆவியினால் இப்போது நல்லிணக்கச் செயற்பாடுகள் வேட்டையாடப்பட்டு வருகின்றன.

பின்னர் ஸ்ரீலங்காவிலுள்ள பிரிவினைவாத அரசியல், நல்லிணக்கத்துக்கான அர்த்தமுள்ள எந்த ஒரு முன்முயற்சியையும் தடுத்துவருவது பற்றி ஒரு வரலாறே உள்ளது. பொதுஜன ஐக்கிய முன்னணி, அட்மிரல் கரண்ணகொடவிற்கு எதிரான சட்ட நடவடிககைகளை தமிழர்களின் வாக்குகளைக் கைப்பற்றுவதற்கானதும் மற்றும் சர்வதேச சமூகத்தையும் மற்றும் தமிழ் புலம்பெயர் சமூகத்தையும் திருப்திப் படுத்துவதற்கான அரசாங்கத்தின் தேர்தலுக்கு முந்தைய ஒரு பிரச்சாரம் என விபரித்துள்ளது.

மேலும் ஏராளமான சுயநல சந்தர்ப்பவாதிகள், மதவெறியர்கள், வேலையற்ற கிறுக்கர்கள் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வரும் நல்லிணக்க முயற்சிகளைப்பற்றி குற்றம் சொல்லி வருகிறார்கள். சுவாராஷ்யமான முறையில் இந்தக் குழுக்கள் பழைய காயங்களைக் குணப்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் உள்நாட்டு முயற்சிகளை எதிர்க்கின்றன. உண்மையில் இந்த உள்நாட்டு முன்முயற்சிகள் சர்வதேச விசாரணைக்கான அழைப்புகளை அடக்குவதுடன் மற்றும் ஈழப்போரில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் பற்றிய சர்வதேச விசாரணையைத் தூண்டும் உலகளாவிய அதிகார வரம்புகளையும் தடை செய்கின்றன.

உள்நாட்டு முன்முயற்சிகளை தடுக்கும் இந்தக் குழுக்கள் அவர்களது கருத்தியல் எதிரிகளான தமிழ் புலம்பெயர் தரப்பினருக்கு ஒருவகையில் உதவி செய்கின்றன. இந்தக் குழுக்கள் ருத்திரகுமாரது நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் உள்நாட்டிலும் மற்றும் வெளிநாட்டிலுமுள்ள எல்.ரீ.ரீ.ஈ இனது எச்சங்கள் போன்ற இந்தக் குழுக்கள் ஸ்ரீலங்காவிலுள்ள தமிழர்களின் நலன்களினால் உந்துதல் பெறவில்லை. அல்லாமலும் மிகவும் வெளிப்படையான உள்நாட்டு முன்முயற்சிகளிலும் அவர்கள் திருப்தியடையவில்லை. இந்தக் குழுக்கள் (மற்றும்) ஒரு பயங்கரவாத குழுவின் உதிரிப்பாகங்களும் மற்றும் பங்காளிகளும் ஆவர் அவர்களை அப்படித்தான் நடத்த வேண்டும். சாதகமான ஈடுபாடுகள் மூலம் அவர்களது நடத்தையில் மாற்றத்தை எதிர்பார்ப்பது அப்பாவித்தனமானது. எல்.ரீ.ரீ.ஈ இனது எச்சங்களைத் தேடும் உலகளாவிய வேட்டை கேபி உடன் முடிந்துவிடவில்லை. மேற்கின் தலைநகரங்களில் எல்.ரீ.ரீ.ஈ இனது கொடி காட்சிப் படுத்தப்படுவதைப் பற்றி ஸ்ரீலங்காவில் ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் தமது அதிருப்தியை வெளிக்காட்டுவதில் தோல்வியுற்றது அரசின் அலட்சியத்துக்கான ஒரு சான்றாகும்.

இறுதியாக வெளிநாட்டுக் கொள்கையில் ஒரு கூறு உள்ளது. பிரித்தானியா தலைமையிலான ஏனைய முக்கிய குழுக்கள் கொண்டுவரவுள்ள மற்றுமொரு ஐநா மனித உரிமைகள் சபை (யு.என்.எச்.ஆர்.சி) பிரேரணைக்கு மீண்டும் ஸ்ரீலங்கா இணை அனுசரணை வழங்க எதிர்பார்த்துள்ளது. இது ஐரோப்பிய ஒன்றியம் கொண்டுவந்த முந்தைய யு.என்.எச்.ஆர்.சி தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கியதில் இருந்து விலகுவதாக எடுத்திருந்து முந்தைய திட்டத்துக்கு முற்றிலும் மாறான ஒரு தலைகீழ் திருப்பம் மற்றும் மிகவும் விவேகமானதும் கூட

எனினும் தற்போதைய ஐதேக தலைமையிலான அரசாங்கம் எதற்கும் மற்றும் எல்லாவற்றுக்கும் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவையே சார்ந்துள்ளது, மாறாக டொனால்ட் ட்ரம்ப்பின் கீழுள்ள அமெரிக்கா ஏற்கனவே அதன் முக்கியத்துவம் குறைந்த கூட்டாளிகளை கைவிட்டுவிட்டது, அது நாட்டுக்கு நல்லது இல்லை. நேரத்தைப் பரிசோதிக்கும் சீனாவின் நட்பு நாடுகளில் இருந்து வளர்ந்து வரும் பற்றின்மையில் குறிப்பாக தனிப்பட்ட மற்றும் சித்தாந்த முன்னுரிமைகளால் உந்தப்பட்ட இந்த தெரிவுகள் வர்த்தகத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன.

அளவுக்கு அதிகமாக பீஜிங்;கினைச் சார்ந்திருக்கும் ஸ்ரீலங்காவின் நிலைப்பாடு உகந்த ஒன்றல்ல, எனவே எந்தவொரு வெளியுறவுக் கொள்கைத் தேர்வும் அதன் செலவிலேயே வரும், ஏனென்றால் சீனாவிடம் அளவுக்கு அதிகம் நிதி வசதி உள்ளது. இது எதிரான சர்வதேச அழுத்தங்களில் இருந்து ஸ்ரீலங்காவை பாதுகாக்கும் நல்ல ஒரு திட்டம் மற்றும் சுதந்திரமான செயல்பாட்டிற்கும் உதவுகிறது.

தமிழர்களின் தேசிய பிரச்சினையையும் மற்றும் பிரிவினைவாத பயங்கரவாதத்தின் தாக்கங்களைத் தீர்ப்பதற்கும் ஸ்ரீலங்கா சுயாதீனமான ஒரு நடவடிக்கையைத் திட்டமிட வேண்டும். அவ்வாறு செய்வதினால் தெற்கிலுள்ள மதவாத தேசியவாதிகளின் அல்லது மேற்கிலுள்ள எல்.ரீ.ரீ.ஈ இனது எச்சங்கள் மற்றும் உள்நாட்டிலுள்ள அதன் மிச்சங்கள் தங்களது நிகழ்ச்சித் திட்டத்துக்கு ஏற்ப நடக்கும்படி அதற்கு கட்டளையிட முடியாது.



தேனீ மொழிபெயர்ப்பு: எஸ். குமார்.

Read more...

அனந்தியின் கஞ்சிக்குள் மண்ணை தூவியுள்ள அமெரிக்காவும் முழிபிதுங்கும் ஊடகங்களும்.

மன்னார் மனித புதை குழியில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் தொடர்பான அறிக்கை நேற்றுமுன்தினம் மன்னார் நீதிமன்றுக்கு சமர்பிக்கப்பட்டதுடன், அம் மனிதக் கூடுகள் சுமார் 500 வருட கால பழைமை வாய்ந்தவை என்ற விடயத்தை பத்தோடு ஒன்று பதினோராவது செய்தியாக அறிவித்து விட்டு ஊடகங்கள் மௌனமாகிவிட்டன.

முள்ளிவாய்காலில் மண்கவ்வி, வெள்ளைகொடியை தூக்கிய பின்னர் ஆயுதங்களை மௌனித்துவிட்டோம் என புலிகள் இன்றும் பம்மாத்துவது போன்றே ஊடகங்களின் செயற்பாடுகளும் காணப்படுகின்றது. மேற்படி விடயம் வெளியாகியபோது, மன்னார் புதைகுழி விவகாரத்திற்கு அப்பால் நாட்டில் வேறு விடயங்கள் ஏதும் இல்லை என்றபோக்கில் அதன் ஒவ்வொரு நகர்வுகளையும் பிறேக்கிங் நியூஸ் போட்டுக்கொண்டிருந்த ஊடகங்கள் இன்று நவ துவாரங்களையும் அடைத்துகொண்டுள்ளன.

இலங்கையில் ஊழல் மோசடிகளும் , நீதிமறுப்பும் மேலோங்கி நிற்கின்றது. இவற்றுக்கு காரணமான அரசியல்வாதிகள் குறுந்தேசியவாத போர்வையினுள் மறைந்து நின்று தமது கடமைகளிலிருந்து விலகிச் செல்லும்போது அதற்கான அனுசரணையினை ஊடகங்கள் முண்டியடித்து மேற்கொள்கின்றன.

மன்னார் மனித எலும்புக்கூடுகள் தோண்டப்பட்ட காலப்பகுதியில் வட மாகாண சபையின் முன்னாள் அமைச்சராகவிருந்த அனந்தி சசிதரன் மீது ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு விசாரணைகள் ஆரம்பமாகியிருந்தது. குறித்த மோசடிகள் மற்றும் அது தொடர்பான விசாரணைகள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றது என்பது தொடர்பில் பின்தொடர்ந்து அறிக்கையிடவேண்டிய ஊடகங்கள் அனந்தி சசிதரனை மனித எலும்புக்கூடுகளுள் மறைத்துக் காப்பாற்றினர்.

குறித்த எலும்புக்கூடுகள் படையினரால் கொன்று புதைக்கப்பட்டவர்களினதே என்றும் இவ்வாறான சூழ்நிலையில் தனக்கு இலங்கையில் வாழ்வதற்கு அச்சமாகவுள்ளதாகவும் அனந்தி சசிதரன் புருடா விட அவற்றை அள்ளிக்கொண்டு, ஐயோ அனந்திக்கு சரியான பயமாக இருக்கின்றதாம் என ஊடகங்களும் மக்களை பயமூட்டின.

பிரபாகரன் வன்னியில் சித்திரவதைக் கூடங்களை வைத்து மனித குல விரோத செயற்பாடுகளை மேற்கொண்டபோது அங்கு எவ்வித அஞ்சமும் இன்றி வாழ்ந்த அனந்தி சசிதரனுக்கு புதிதாக தற்போது எங்கிருந்து அச்சம் வந்தது என்றும், எலும்புக்கூட்டினை கண்டு அஞ்சும் உமக்கு எதற்கு அரசியல் என்றும் கேள்விகளை ஊடகங்கள் கேட்க தயங்கின.

சிறுவர்களை படையில் பலவந்தமாக இணைப்பதற்கு அனந்தியின் கணவன் எழிலன் தலைமை தாங்கியபோது என்றோ ஒரு நாள் குறித்த அநியாயத்திற்கு தானும் தனது குழந்தைகளும் பதில்கூற வேண்டிவரும் என்ற அச்சம் அனந்திக்கு ஏற்பட்டதில்லையா என்ற கேள்வியை அனந்தியிடம் இதுவரை எந்த ஊடகமும் கேட்டதாக பதிவுகள் இல்லை.

எனவே இவ்விடயத்திலாவது அனந்தி தெரிவித்துள்ள கருத்துக்கள் தொடர்பாக தற்போதைய நிலைப்பாடு என்ன என்பதை ஊடகங்கள் அறிந்து மக்களுக்கு தெரியப்படுத்தவேண்டிய கடைமையிலிருந்து விடுபடமுடியாது.

எது எவ்வாறாயினும் மண்டையோட்டினுள் ஒழிந்து நின்று அடுத்த மாகாண சபைத் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டு சிம்மாசனம் ஏறலாம் என்றிருந்த அனந்தியின் கஞ்சியினுள் மண் தூவியதாக அமைந்துள்ளது புளோடிராவிலிருந்து வந்த அறிக்கை.

இறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் கொன்று புதைக்கப்பட்டனர் என்றனர். இந்திய இராணுவம் குடிகொண்டிருந்த காலத்தில் அவர்களுடன் சேர்ந்தியங்கிய குழுக்கள் கொன்று புதைத்திருக்கலாம் என்றனர். புலிகளின் வதை முகாம்களிலிருந்தவர்கள் கொன்று புதைக்கப்பட்டிருக்கலாம் என்றனர். இவ்வாறான கருத்துக்களை அரசியல்வாதிகள் சுயவிளம்பரத்திற்காக தெரிவித்தபோது, அந்தந்தக் காலப்பகுதியில் தமது உறவுகளை இழந்த மக்கள் அனுபவித்திருக்கக்கூடிய உளவியல் ரீதியான வேதனைகள் தொடர்பில் அரசியல்வாதிகளோ அவர்களது அடிவருடிகளான ஊடகங்களோ கவலைப்பட்டதில்லை. ஆனால் இன்று இருதரப்பினரும் அம்மணமாகி நிற்கின்றனர்.-பீமன்


Read more...

வாகனங்களுக்கு வரி விதிக்க ரணிலுக்குள்ள தார்மீக உரிமை யாது? கேட்கிறார் அனுர.

அமைச்சர்கள் ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு வயிற்றில் ஈர துணியை கட்டிக்கொள்ளுமாறு நாட்டு மக்களுக்கு அழுத்தம் கொடுக்க எந்த தார்மீக உரிமையும் இல்லை என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்த அவர் வாகனங்களை இறக்குமதி செய்வதை கட்டுப்படுத்த தீர்மானிக்க தார்மீக உரிமை உள்ளதா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இருக்கும் சகல அமைச்சர்களுக்கும் அமைச்சு மூலம் கிடைக்கும் வாகனங்கள் 4 கோடியே 40 லட்சம் ரூபாவுக்கும் மேல் பெறுமதியானவை.

அதிக விலையில் உள்ள வாகனங்களையும் ஆடம்பர வாகனங்களையும் பயன்படுத்தும் அமைச்சர்கள். சிறிய கார்களை கொள்வனவு செய்வதை நிறுத்து என்று மக்களுக்கு கூறும் கதை என்ன.

ஆடம்பர வாகனத்தை இறக்குமதி செய்ய வேண்டாம் என்று கூற பிரதமருக்கு எந்த உரிமையும் இல்லை. ரணில் விக்ரமசிங்க இரண்டு கார்களை இறக்குமதி செய்தார்.

சில தினங்கள் பிரதமர் அலரி மாளிகையில் இருந்து உலங்குவானூர்தியிலேயே நாடாளுமன்றத்திற்கு வருகிறார் எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Read more...

பயங்கரவாதத்தை முற்றாக எதிர்க்கும் பாகிஸ்தான் - இந்தியாவின் நிலைப்பாடு குறித்து எழுந்தது கேள்வி

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு தமது நாட்டில் இடம்கொடுக்கப் போவதில்லை என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். அவ்வாறான செயற்பாடுகள் நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரிய பாதிப்பாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று இடம்பெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இதனைத் தெரிவித்தார்.

இந்த நிலையில் பாகிஸ்தான் குறித்து, இந்தியாவின் நிலைப்பாடு எவ்வாறு அமையப்போகிறது என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.

அண்மைய நாட்களாக பாகிஸ்தான் பிரதமர் முன்னெடுத்து வரும் செயல்பாடுகளுக்கு சர்வதேச நாடுகள் பலத்த வரவேற்பையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றன. இதுவரையிலும் இந்தியாவிற்கு சார்பாக குரல் கொடுத்த நாடுகள் கூட, பாகிஸ்தானின் நடவடிக்கையை வரவேற்று ஆதரவு வழங்கி வருகின்றன.

இதேவேளை தமது நாட்டுக்கு அதிக முதலீடுகளை தாம் எதிர்பார்ப்பதாகவும், பாகிஸ்தான் சிறந்த நாடாக மாற வேண்டும் என்பது தமது இலக்காகும் எனவும் கூறினார்.

நாட்டுக்கு நிலையான சமாதானத்தை பெற்றுக்கொடுக்க தாம் இறுதி வரை போராடுவதாகவும், தமது அரசாங்கம் எந்த சந்தர்ப்பத்திலும் எந்தவொரு ஆயுதக் குழுவுக்கும் உதவி அளிக்காது எனவும் குறிப்பிட்ட அவர்,
சமாதானத்தை விரும்பியே இந்திய விமானி அபிநந்தனை விடுவித்தோம். இது தாம் இந்தியாவுக்கு தெரிவித்த செய்தியாகும் எனவும் குறிப்பிட்டார்.

இதேவேளை புல்வாமா தாக்குதல் தொடர்பில் இந்தியா மேற்கொள்ளும் எந்தவொரு விசாரணைக்கும் தமது நாடு பூரண ஒத்துழைப்பை வழங்கும் எனவும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

முன்னறிவிப்பின்றி தொடரூந்து சாரதிகள் பணிப்புறக்கணிப்பு - அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ள பயணிகள்

தொடரூந்து நிலைய கட்டுப்பாட்டாளர்களும், தொடரூந்து சாரதிகளும் திடீரென பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டமையினால், பயணிகள் பலர் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிப்புறக்கணிப்பு நேற்று நள்ளிரவு முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. விநியோக நடவடிக்கைகளின் போது, தொடரூந்து கட்டுப்பாட்டாளர்களுக்கும், தொடரூந்து நிலைய அதிபர்களுக்கும் இடையில் பல முரண்பாடுகள் ஏற்படுவதாக தெரிவித்து, இந்த பணிபுறக்கணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

எவ்வாறாயினும் முன்னறிவிப்பின்றி தொடரூந்து சாரதிகள் திடீரென பணிப்புறக்கணிப்பினை மேற்கொண்டுள்ளமை, பயணிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Read more...

ஐ.எஸ் அமைப்பில் இணைந்த பிரித்தானிய யுவதி சமீமா பேகம் பிரசவித்த குழந்தை உயிரிழப்பு

ஐ.எஸ் அமைப்பில் இணைந்த பிரித்தானிய யுவதியான சமீமா பேகம் பிரசவித்த குழந்தை உயிரிழந்திருப்பதாக சிரிய நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீமா பேகம் கடந்த 2015 ஆம் ஆண்டு பள்ளி மாணவியாக இருந்த பொழுது பிரித்தானியாவில் இருந்து சிரியாவுக்கு சென்று ஐ.எஸ் அமைப்பில் இணைந்தார். இந்த நிலையில் யுத்தத்தில் ஐ.எஸ் அமைப்பின் உறுப்பினராக தமது கணவரை இழந்த சமீமா பேகம், சிரிய அகதி முகாம் ஒன்றில் இருப்பதாக கடந்த மாதம் தெரிவித்திருந்தார்.

தாம் நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதாகவும் குழந்தை பேற்றுக்காக தமது சொந்த நாடான பிரித்தானியாவுக்கு திரும்ப விரும்புவதாக அவர் தெரிவித்திருந்தார். எனினும் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு கொண்டவர்களை தமது நாடு ஒருபோதும் ஏற்காது என பிரித்தானியா அந்தக் கோரிக்கையை நிராகரித்தது.

இந்நிலையில் கடந்து மூன்று மாதங்களுக்கு முன்னர் சிரிய அகதி முகாமில் சமீமா பேகம் குழந்தை ஒன்றை பிரசவித்தார். மூன்று வாரங்களே ஆன அந்தக் குழந்தை நிமோனியா காய்ச்சல் காரணமாக தற்போது உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

Read more...

இலங்கை மக்களுக்கு, சுகாதார மேம்பாட்டுப் பணியகம் விடுத்த அவசர எச்சரிக்கை

இரத்தினபுரி, காலி, மாத்தறை, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் இன்று பிற்பகல் வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மழையுடான காலநிலையின் போது ஓரளவு காற்றும் வீசக் கூடும் என திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டில் தற்போது நிலவும் உலர் காலநிலை காரணமாக பொதுமக்கள் உடல் நலக்கோளாறுகளுக்கு முகங்கொடுத்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

தற்போதைய நாட்களில் நிலவும் கடுமையான் வெப்பநிலை காரணமாக ஆரோக்கிய சீர்கேடுகள் அதிகமாக ஏற்படலாம் என சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தச் சீர்கேடுகளை தவிர்ப்பதற்கான ஆலோசனைகளை சுகாதார மேம்பாட்டுப் பணியகம் வழங்கியுள்ளது.

இதன் பிரகாரம், உடலை மூடும் வகையில் இளம் நிறங்களுடன் கூடிய இலேசான ஆடைகளை அணிவது சிறப்பானது. குறிப்பாக விவசாய, கட்டுமானப் பணிகளில் ஈடுபடுகையில் சூரியக் கதிர்களின் நேரடித் தாக்கத்தைத் தவிர்ப்பது சிறப்பானதாகும். தினந்தோறும் குளிப்பது பொருத்தமானது என சுகாதார மேம்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது.

அதிக சூரிய வெப்பம் இருக்கும் சந்தர்ப்பத்தில் பிள்ளைகள் திறந்த வெளிகளில் விளையாடுவதைத் தவிர்ப்பது நல்லது. கூடுதலான வெப்பநிலை நிலவும் சந்தர்ப்பங்களில் பிள்ளைகளை தனியே வாகனங்களில் விட்டுச் செல்ல வேண்டாம் என மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிக இனிப்புடனும், மதுசாரத்துடனும் கூடிய பானங்களைத் தவிர்ப்பது ஆரோக்கியமானதாகும்.

Read more...

ஒன்பது மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்டது - போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு

மத்திய அஞ்சல் பரிமாற்றத்திற்கு கிடைக்கப்பெற்ற ஒன்பது மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் தொகையை சுங்க போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு கைப்பற்றியுள்ளது.

இவை ''மெத்தம்பிட்டி மெயின்'' என்ற விஷ போதை மாத்திரை என இனங்காணப்பட்டுள்ளது. நெதர்லாந்தில் இருந்து பொதி செய்து இவை இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பாதணி ராக்கையில் சூட்சுமான முறையில் மறைக்கப்பட்டு பொதி செய்யப்பட்டு இவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த பொதியை பெறுவதற்காக மத்திய அஞ்சல் பரிமாற்றத்திற்கு வந்த 27 வயதான இரத்மலானை பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இந்த நிரையில் தப்பிச்ச சென்ற இளைஞரை கைது செய்வதுடன், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com