Showing posts with label YLS Hameed. Show all posts
Showing posts with label YLS Hameed. Show all posts

Friday, February 21, 2020

சாய்ந்தமருது வர்த்தமானி ரத்தின் பின்னால் உள்ள அரசியல் யதார்த்தம்- வை எல் எஸ் ஹமீட்

சாய்ந்தமருது நகரசபைக்கான வர்த்தமானி அறிவித்தலை ரத்துசெய்ய அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. இந்த விடயம் கல்முனைக்கு ஏற்படுத்தியிருந்த ஆபத்து, அதனால் ஏற்படுத்தப்பட்ட மனப்புண்கள், ரணங்கள் என்ற கோணத்தினாலான பார்வை ஒன்று.

இந்தக் கோணத்திலிருந்தே அதிகமான கருத்துப்பதிவுகள் தற்போது இடப்படுகின்றன. அதேநேரம், இது தொடர்பான தேசியப்பார்வை ஒன்று இருக்கின்றது. இது தொடர்பாக நமது கவனத்தைச் செலுத்தத் தவறுகின்றோம்.

சாய்ந்தமருது நகரசபை வர்த்தமானி வெளியானதும் ஐ தே கட்சியைச்சேர்ந்த நளின் பண்டா, மரிக்கார், ஹிருணிக்கா போன்றவர்கள் இனவாதக் கருத்துக்களை முன்வைத்தனர். அதனைப் பலரும் விமர்சித்தனர். அது இயல்பானதுதான்.

அதேபோன்று மொட்டுத் தரப்பைச் சேர்ந்த அதுரலிய ரத்னதேரர் போன்றோரும் விமர்சிக்க, முஸ்லிம்களுக்கெதிராக தொடராக இனவாதக் கருத்துக்களைக் கூறிவரும் ஞானசார தேரர் ஆதரவு கருத்தை முன்வைத்தார். அதேநேரம் மொட்டு அரசியல்வாதிகள் சிலரும் எதிர்த்தனர். இறுதியில் வர்த்தமானியை ரத்துச்செய்ய அமைச்சரவை முடிவெடுத்தது.

இந்தக் கருத்துகள், சம்பவங்களை தனித்தனியாகவே நம்மில் பலரும் பார்க்க முனைகின்றனர். இதுதான் நமது அரசியல் பலகீனமாகும்.

பண்டாரநாயக காட்டிய வழி


அன்று தனது தனிப்பட்ட காரணங்களுக்காக பண்டாரநாயக ஐ தே கட்சியிலிருந்து வெளியேறினார். போட்டிக் கட்சியாக 1951ம் ஆண்டு ஶ்ரீ சு கட்சியை உருவாக்கி 1952 தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தார்.

நாட்டில் உறுதியாக காலூன்றிய ஐ தே கட்சியை கொள்கைரீதியாக தோற்கடிக்க முடியாதென்பதை உணர்ந்தபோது எந்தக் கொள்கைப் பிடிப்பையும் உடைத்துவீசக்கூடிய சக்திவாய்ந்த ஆயுதம் இனவாதம்; என்பதைப் புரிந்துகொண்டு இனவாதத்தைக் கையிலெடுத்தார்.

1956ம் ஆண்டுத் தேர்தலில் சு கட்சியில் போட்டியிடாமல் எப்போதும் இனவாதமுலாம் பூசப்பட்ட மஹாஜன எக்சத் பெரமுன ( MEP) வில் போட்டியிட்டார். தனிச்சிங்கள சட்டக்கோசத்தைக் கையிலெடுத்தார். நாட்டில் ஆழவேர் ஊன்றியிருந்த ஐ தே கட்சியின் செல்வாக்கு தூள் தூளாகப் பறந்தது.

இதைக்கண்ட ஐ தே க தாமும் இனவாதத்தைக் கையிலெடுக்க எண்ணி அதுவும் தனிச்சிங்கள சட்டத்தைப் பிரச்சாரம் செய்தது. ஆனாலும் மக்கள் பண்டாரநாயகாவின் இனவாதத்தையே நம்பினார்கள். பண்டாரநாயக வெற்றிபெற்றார். அதன்பின் பண்டாரநாயக்காவின் கட்சி மீண்டும் சு க வடிவம் எடுத்து SLPP என்ற ஒரு கட்சி உதயமாகும்வரை இந்த நாட்டில் மாற்று அரசாங்கம் அமைக்கக்கூடிய ஒரு கட்சியாக இருந்தது.

இத்தனைக்கும் பண்டாரநாயக இயல்பாக ஓர் இனவாதியாக இருந்திருக்க முடியாது. அவர் ஒக்ஸ்போர்ட்டில் படித்தவர் மட்டுமல்ல, 1925ம் ஆண்டு தமிழருக்காக சமஷ்டியையும் பிரேரித்த ஒருவர். ஆனாலும் குறுகிய அரசியல் ஆதாயத்திற்காக இனவாதத்தைக் கையிலெடுத்து வெற்றிபெற்றபோதும் அதற்குப் பிராயச்சித்தமாக பண்டா-செல்வா ஒப்பந்தம் மூலம் தமிழருக்கு சிலதீர்வினை வழங்க முன்வந்தபோது அவர் தஞ்சம் புகுந்த இனவாதம் அதற்கு இடமளிக்கவில்லை.

இறுதியில் அந்த இனவாதத்திற்கு தன் உயிரையே விலையாகக் கொடுத்தார். இங்கு நாங்கள் புரிந்துகொள்ள வேண்டியது:

அரசியல்வாதிகளில் பலவகையினர் உண்டு
1 இயல்பாகவே இனவாத ரத்தம் ஓடுகின்ற அரசியல்வாதிகள். உ+ம் விஜேதாச
2 இனவாதத்திற்கப்பாற்பட்ட அரசியல்வாதிகள். உ+ம் மங்கள
3 இனவாதியாக இல்லாதபோதும் அரசியலுக்காக இனவாதத்திற்குள் தஞ்சம் புகுகின்ற அரசியல் வாதிகள். உ+ம் பண்டாரநாயக்க
4 இனவாதியுமில்லை. இனவாதத்திற்குள் தஞ்சம் புகவுமில்லை. ஆனாலும் இனவாதத்திற்கு முன்னால் நெஞ்சுயர்த்தி நிற்கத் தயங்கும் அரசியல்வாதிகள். உ+ம் ரணில்

பண்டா காட்டிய வழியில் புதிய பயணம்

2008 ஆண்டு தொடக்கம் நடந்த அனைத்து மாகாணசபைத் தேர்தல்கள், 2010 ஜனாதிபதித் தேர்தல் அதனைத் தொடர்ந்த பொதுத்தேர்தல் அனைத்திலும் யுத்தவெற்றி சந்தைப்படுத்தப்பட்டது.

தொடர்ந்தும் அதனை சந்தைப்படுத்த முடியாது; என்பதால் மீண்டும் இனவாதத்திற்குள் தஞ்சம் புகுதல் அரங்கேற்றப்பட்டது. அன்றைய சூழலில் தமிழருக்கெதிரான இனவாதமே பண்டாரநாயகவுக்கு சாதகமாக இருந்தது. பிந்திய சூழலில் யுத்தத்தால் நொந்துபோன தமிழருக்கெதிரான இனவாதத்தைவிட முஸ்லிம்களுக்கெதிரான இனவாதம், குறிப்பாக சர்வதேச சூழலில் முஸ்லிம்களுக்கெதிரான இனவாதம் கூர்ப்புக்கொண்ட நிலையில் இலகுவாக சந்தைப் படுத்தக்கூடியதாக இருந்தது.

2015ம் ஆண்டு மொத்த சிறுபான்மைகளின் உறுதியான ஒற்றுமையினால் இனவாத உத்தி தோல்வியடைந்தாலும் 2019இல், குறிப்பாக சிறுபான்மைகளின் ஒற்றுமையில் 2015ம் ஆண்டிலிருந்த உறுதியில் சிலதளர்வு 2019 இல் இருந்ததன் காரணமாக வெற்றிபெற்றது.

வர்த்தமானி ரத்து விவகாரம்

வாக்குகளை இலக்காகக்கொண்டு சாய்ந்தமருது வர்த்தமானி வெளியிடப்பட்டது. அன்று பண்டா-செல்வா ஒப்பந்தத்திற்கெதிராக இனவாதத்தை தட்டியெழுப்பும் கண்டி பாதயாத்திரையை ஜே ஆர் மேற்கொண்டார்.

அதே உத்தி சிறிய அளவில் ஐ தே கட்சியால் இதில் அரங்கேற்றப்பட்டது. அதன்விளைவுதான் நளின் பண்டா, மரிக்கார், ஹிருணிக்கா ஆகியோரின் கூற்றுக்களாகும். இவர்கள் இயல்பான இனவாதிகளாக இல்லாமல் இருக்கலாம். குறிப்பாக, மரிக்கார் முஸ்லிம்களுக்கெதிரான இனவாதியாக இருக்கமுடியுமா? ஆனாலும் இனவாதத்தால் ஆட்சிக்கு வந்த அரசை வீழ்த்த ஐ தே க இனிக்கைக்கொள்ளப்போகின்ற ஆயுதம் “இனவாதம்தான்” என்பது தெளிவாகியுள்ளது.

“ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்கள் எந்தப்பக்கம்” என்ற கட்டுரைத் தொடரில் இதனை சுட்டிக்காட்டியிருந்தேன். இத்தேர்தலில் முஸ்லிம்களுக்கெதிரான இனவாதம் வெற்றிபெற்றால் அதை ஆட்சியாளர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தொடரவேண்டியேற்படும். அதேநேரம் எதிர்க்கட்சியும் அதே உத்தியைக் கையாளும். இன்று அதுதான் நடந்துகொண்டிருக்கிறது.

ஐ தே க இனவாதம் பேசும்போது தம்பங்கிற்கு இது அரசு செய்தவிடயமாக இருந்தாலும் தாம் இனவாதம் பேசாமல் இருக்கமுடியுமா? என்பதுதான் ஆளுந்தரப்பில் சிலரின் வர்த்தமானிக்கெதிரான இனவாத நிலைப்பாடாகும்.

இந்தப்பின்னணியில்தான் இனவாதத்தில் நீந்தி ஆட்சிக்குவந்த பண்டா எவ்வாறு அந்த இனவாதத்தைமீறி எதுவும் செய்யமுடியாமல் தோல்வியடைந்தாரோ அதேநிலைதான் இன்றைய ஆட்சியாளருக்கும் ஏற்பட்டிருக்கிறது; என்பதைத்தான் வர்த்தமானி ரத்துச்செய்தி காட்டுகிறது.

பொதுத்தேர்தல்

இந்தப் பின்னணியில்தான் பொதுத்தேர்தல் பார்க்கப்படவேண்டும். குறிப்பாக பங்காளிக்கட்சிகளைத் தனித்து போட்டியிடச் சொல்வதோடு, வடகிழக்கில் பெரமுன போட்டியிடுவதில்லை; என்பதற்குப் பின்னால் பெரிய செய்தி இருக்கின்றது.

சிறுபான்மையின் ஆதரவில்லாமல் ஒருபோதும் ஜனாதிபதித் தேர்தலை வெல்லமுடியாது; என்ற கருத்தை முறியடித்து எவ்வாறு கிட்டத்தட்ட வெற்றிபெற்றார்களோ அதேபோல் சிறுபான்மைகளின் வாக்கு இல்லாமல், குறிப்பாக வட கிழக்கு தமிழ்பேசுவோரின் வாக்குகள் இல்லாமல் இவ்விகிதாசார பிரதிநிதித்துவத்தின் கீழும் தன்னால் பெரும்பான்மை பெறமுடியும்; என்பதை நிரூபிக்க முனைகிறார்கள்.

ஜனாதிபதித் தேர்தலைத் தீர்மானித்த பெரும்பான்மை சமூகத்தின் விருப்பத்தை மீறி தாம் எந்த முடிவையும் எடுக்கமுடியாது; என்று கூறியதுபோல் பொதுத்தேர்தலிலும் பெரும்பான்மை சமூகத்தின் ஆதரவால் மட்டும் வெற்றிபெற்றால் அதன்பின் தாங்கள் ஓர் தனிச்சிங்கள அரசாங்கம். அவர்களின் விருப்பப்படிதான் ஆட்சி செய்யமுடியும்; என்பார்கள்.

தேர்தலில் அறுதிப்பெரும்பான்மை பெற்றுவிட்டால் தேர்தலின்பின் 2/3 ஐ இலகுவாகப் பெற்றுக்கொள்ளலாம். அதன்பின் தேர்தல்முறை மாறும். முஸ்லிம்கள் பிரதிநித்துவம் அற்ற ( மிகக் குறைவான பிரதிநிதித்துவம் உடைய) ஒரு சமூகமாக மாற்றப்படலாம். ஒரு நாடு; ஒரு சட்டம் அமுலுக்கு வரலாம். முஸ்லிம்களும் பொதுச்சட்டத்தின்கீழேயே திருமணம், விவாகரத்து போன்றவற்றை செய்யவேண்டிவரலாம்.

சுருங்கக்கூறின் இன்று இந்தியாவில் முஸ்லிம்களை அடிமைகளாக மாற்றமுற்படுவதுபோன்று இலங்கையிலும் சூழ்நிலை தோன்றலாம்.

இந்தியாவில் பல பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த கட்சிகள், பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் உட்பட முஸ்லிம்களுக்கு நியாயத்திற்காக கைகொடுக்கிறார்கள். இலங்கையில் ஜே வி பி யைத் தவிர வேறு எந்தக் கட்சியும் முன்வரப்போவதில்லை.

இந்தியாவில் பி ஜே பி இனவாதம் பேசும்போது காங்கிரஸ், சமாஜவாதக்கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் கட்சி போன்ற பல கட்சிகள் இனவாதத்திற்கெதிராக, சிறுபான்மைக்காக குரல் கொடுக்கிறார்கள்.

இலங்கையில் ஐ தே க குரல் கொடுக்குமா? கடந்த காலங்களில் கொடுத்தார்களா?

எனவே, எதிர்காலம் மிகவும் கேள்விக்குறியாகியுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரை நமக்கிருந்த தெரிவு “யார் இனவாதத்தில் குறைந்தவர்” என்பதாகும். அதிலும் தோல்வியடைந்தோம்.

பொதுத்தேர்தலைப் பொறுத்தவரை எந்தவொரு தேசியக்கட்சியும் சுயமாக அறுதிப்பெரும்பான்மை பெறக்கூடாது. எந்த ஆட்சியாக இருந்தாலும் அது சிறுபான்மையில் தங்கியிருக்கவேண்டும். அவ்வாறான ஒரு சூழ்நிலை வரும்போது அவர்கள் நினைத்தபடி, தேர்தல்முறை மாற்றுவதோ, ஒரு நாடு; ஒரு சட்டம் கோட்பாடோ, சிரமமாகலாம்.

அதைவிடுத்து, highway யில் சற்றுத் தூரத்தே நிமிர்ந்து வாகனம் வருகின்றதா எனப் பார்த்து வீதியைக் கடக்காமல் அருகே வாகனம் வருகிறதா? எனப்பார்த்து கடக்கப்போய் தூரத்தே இருந்து வேகமாக வரும் வாகனத்தில் மாட்டுவதுபோல் குறுகிய பார்வையால் பொதுத்தேர்தலில் தீர்மானங்களை எடுத்து மொத்த சமூகத்தையும் ஆபத்திற்குள் தள்ளாமல் சிந்தித்து செயற்படவேண்டும்.

Read more...

Friday, January 24, 2020

ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சை வைத்திருக்க முடியுமா? வை எல் எஸ் ஹமீட்

புதிய அரசாங்கத்தில் பாதுகாப்பு அமைச்சராக இதுவரை யாரும் நியமிக்கப்படவில்லை. அதேநேரம் 19வது திருத்தத்தின்கீழ் ஜனாதிபதி எந்தவொரு அமைச்சையும் வைத்திருக்கமுடியாது; என்றொரு கருத்து நிலவிகிறது. இந்நிலையில் பாதுகாப்பு அமைச்சராக யாரையும் நியாமிக்காததது; எதிர்க்கட்சியினரால் கேள்விக்குட்படுத்தப்படுகின்றது.

இது தொடர்பான சட்டநிலைப்பாடு என்ன?

ஜனாதிபதி எந்த அமைச்சையும் வைத்திருக்க முடியாது; என்பவர்களின் வாதம்:

(19இற்கு முன்னும் பின்னும்) ஒரு பாராளுமன்ற உறுப்பினரைத்தான் ஓர் அமைச்சராக நியமிக்கமுடியும்.( சரத்து 44(1)(b) 19 இற்கு முன். 43(2) -19 இற்குப்பின்)

ஜனாதிபதி ஒரு பாராளுமன்ற உறுப்பினர் இல்லை. எனவே, அவர் எந்தவொரு அமைச்சையும் வைத்திருக்க முடியாது. 19 இற்கு முன் அரசியலமைப்பு சரத்து 44(2) இனூடாக ஜனாதிபதிக்கு ஒரு விதிவிலக்கை அளிக்கப்பட்டிருந்தது. அதன்பிராகாரம்;

அவர் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இல்லாதபோதும் அவர் (1) தனக்கு வேண்டிய விடயதானங்களை அவர் வைத்திருக்கலாம் (2) அதேநேரம் எந்தவொரு அமைச்சருக்கும் ஒதுக்கப்படாத விடயதானங்களுக்கும் அவரின்கீழேயே இருக்கும். இந்த இருவகையான விடயதானங்குக்குரிய அமைச்சுக்களின் எண்ணிக்கையையும் அவர் தீர்மானிக்கலாம்.

சுருங்கக்கூறின் தனக்கு வேண்டிய அமைச்சுக்களையும் யாருக்கும் வழங்காத அமைச்சுக்களையும் அவர் வைத்திருக்கலாம். இந்த சரத்து 19இன் மூலம் நீக்கப்பட்டுவிட்டது. எனவே, அந்த விதிவிலக்கு தற்போது இல்லை.

19வது திருத்தத்தில் அதற்குப் பதிலாக முன்னாள் ஜனாதிபதிக்கு ( மைத்ரி) மட்டும் மூன்று அமைச்சுக்களை வைத்திருக்க சலுகை வழங்கப்பட்டது. ( S.51) அவை பாதுகாப்பு, மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடலாகும். தற்போதைய ஜனாதிபதிக்கு அந்த சலுகையும் இல்லை.

எனவே, ஜனாதிபதி ஒரு பாராளுமன்ற உறுப்பினரும் இல்லை. முன்னைய ஜனாதிபதிகளுக்கிருந்த விதிவிலக்கும் இல்லை. எனவே, ஜனாதிபதி எந்தவொரு அமைச்சையும் வைத்திருக்க முடியாது. பாதுகாப்பு அமைச்சு ஏன் இன்னும் ஒருவருக்கும் வழங்கப்படவில்லை; எனக் கேள்வி எழுப்புகிறார்கள்.

இங்கு கவனிக்கவேண்டிய ஒருவிடயம், ஜனாதிபதி ஒரு அமைச்சை தன்னகத்தே வைத்திருக்கும்போது அவ்வமைச்சிற்குரிய அமைச்சர் என்ற கருத்தைப் பலர் கொண்டிருக்கிறார்கள். பொதுவாக ஊடகங்களிலும் நடைமுறையிலும் அவ்வாறே அழைப்பதுண்டு. அந்த எண்ணமும் இந்த குழப்பத்திற்கு ஒரு காரணமாகும். ஆனாலும் சட்டத்தின் பார்வையில் அவர் அமைச்சை வைத்திருந்தாலும் அமைச்சரல்ல. அவர் ஜனாதிபதி மாத்திரம்தான்.

எனவே, ஒருவர் அமைச்சராக இருப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினராக இருக்கவேண்டுமென்பது சரியாகும். ஆனால் ஜனாதிபதி ஒரு போதும் அமைச்சராக இருந்ததில்லை.

ஜனாதிபதி அமைச்சரில்லை என்பதை இன்னுமொரு சரத்து உறுதிப்படுத்துகின்றது. அதாவது சரத்து 42(3) [19 இற்கு முன் 43(2)] இன் பிரகாரம் ஜனாதிபதி அமைச்சரவையின் அங்கத்தவரும் தலைவருமாவார்.

இங்கு கவனிக்க வேண்டியது “ அங்கத்தவர்” என்ற சொல். ஜனாதிபதி அமைச்சராக இருந்திருந்தால் “ அங்கத்தவர்” என்ற சொல் அவசியமில்லை. ஏனெனில் அமைச்சர்கள் எல்லோரும் அமைச்சரவையின் அங்கத்தவர்கள்தான். பிரதமரும் அமைச்சரவையின் அங்கத்தவர் என்று குறிப்பிடப்படவில்லை. ஏனெனில் அவர்தான் பிரதம அமைச்சர். எனவே அவரும் ஒரு அங்கத்தவர்.

அதேபோல் ஜனாதிபதி அமைச்சரவையின் தலைவர் என்றமுறையில் அவரும் அங்கத்தவராகத்தான் இருக்கவேண்டும். அங்கத்தவர் என்று குறிப்பிடப்படவேண்டிய அவசியமில்லை. ஆனாலும் குறிப்பிடப்பட்டுள்ளது; ஏனெனில், அவர் அமைச்சர் இல்லை என்பதனால் அவர் அமைச்சரவையின் அங்கத்தவரா? என்ற கேள்வி, சந்தேகம் எழக்கூடாது; என்பதற்காக.

மட்டுமல்ல, 19 இற்கு முந்திய சரத்து 44(2) இல் “

ஜனாதிபதியின் பொறுப்பில் அவ்வாறு அமைச்சுக்கள் இருக்கும்போது அரசியலமைப்பிலோ அல்லது ஏதாவது எழுதிய ஓர் சட்டத்திலோ “ அந்த விடயதானங்களுக்குப் பொறுப்பான அமைச்சர்” எனக்குறிப்பிடப்பட்டிருந்தால் அதனை “ ஜனாதிபதி “ என வாசிப்பதோடு அவ்வாறே பொருள் கொள்ளவும் வேண்டும்; என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவிதமான குறிப்பே 19வது திருத்தத்தின் S 51 இலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, ஜனாதிபதி ஒரு அமைச்சை வைத்திருந்தாலும் அவர் அதற்குரிய அமைச்சர் என்ற சொற்பதம் பொருந்தாதது. மாறாக ஜனாதிபதி என்ற முறையிலேயே அந்த அமைச்சை அவர் வைத்திருக்கின்றார்; என்றே பொருள் கொள்ளவேண்டும்.

மேலும் சரத்து 35 ( 19இற்கு முன்) ஜனாதிபதிக்கெதிராக, தனிப்பட்டரீதியிலோ, ஜனாதிபதி என்ற ரீதியிலோ வழக்குத் தொடரமுடியாது. ஆனால் ஜனாதிபதி வைத்திருக்கின்ற விடயதானங்கள் ( அமைச்சு) தொடர்பாக வழக்குத் தொடுக்கலாம், சட்டமாஅதிபரை பிரதிவாதியாக குறிப்பிட்டு; எனக் குறிப்பிட்டிருந்தது .

இங்கும் “ ஜனாதிபதி தான் வைத்திருக்கும் விடயதானங்கள்” என்று ‘ ஜனாதிபதி ‘ என்ற சொல்தான் பாவிக்கப்பட்டிருக்கின்றதே தவிர, அவர் அமைச்சரென்ற முறையில் அவருக்கெதிராக வழக்குத் தொடுக்கலாம்; என்று குறிப்பிடப்படவில்லை.

அதேபோன்றுதான் 19 வது திருத்தத்திலும் ( சரத்து 35) ஜனாதிபதிக்கெதிராக தனிப்பட்டமுறையில் வழக்குத் தொடரமுடியாது. உத்தியோக கடமை தொடர்பாக ( official capacity) வழக்குத் தொடரலாம்; எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

இங்கு மிகவும் வலுவான ஒரு விடயம் என்னவென்றால் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வக் கடமைகள் தொடர்பாக வழக்குத் தொடுத்தல் எனும்போது இரு விடயங்கள் உள்ளடக்கப்படுகின்றன.

ஒன்று: நிறைவேற்று ஜனாதிபதி என்றமுறையில் அவரது கடமையுடன் தொடர்புபட்டது. உதாரணமாக, முன்னைய ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைத்தபோது நீதிமன்றம் சென்றமை.

இரண்டு: அவரிற்குகீழ் வருகின்ற அமைச்சு தொடர்பாக நீதிமன்றம் செல்வது.

இந்த இரண்டையும் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கடமை; என்ற பதத்திற்குள்ளேயே உள்ளடக்கப்பட்டிருக்கின்றதே தவிர, முதலாவது ஜனாதிபதி என்றமுறையிலும் இரண்டாவது குறித்த விடயங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் என்றமுறையிலும் என்று குறிப்பிடப்படவில்லை.

எனவே, ஜனாதிபதி அமைச்சுக்களை வைத்திருந்தாலும் அவர் ஜனாதிபதியாகத்தான் அவற்றை வைத்திருக்கிறார். அவ்விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சராக இல்லை. அதன்பின்னாலுள்ள தத்துவம் அவர் ஒரு பாராளுமன்ற உறுப்பினரல்ல. எனவே, அவர் அமைச்சராக முடியாது. வரலாற்றில் எந்தவொரு ஜனாதிபதியும் அமைச்சராக இருந்ததுமில்லை.

அமைச்சராக இல்லாமல் அமைச்சை வைத்திருக்க அரசியலமைப்பின் அனுமதிதேவை. அந்த அனுமதி தற்போது இல்லை; என்ற வாதம் சரியா? என்பதை அடுத்த பாகத்தில் பார்ப்போம்; இன்ஷாஅல்லாஹ்.

Read more...

Monday, September 2, 2019

ஜனாதிபதித் தேர்தலை ஒத்திப்போட முடியுமா? வை எல் எஸ் ஹமீட்

ஜனாதிபதிப் பதவியை இல்லாமல் செய்வதற்கும் அதற்கு வசதியாக ஜனாதிபதித் தேர்தலை ஒத்திப்போடுவதற்கும் ரணில், மஹிந்த, மைத்திரி ஆகியோர் முன்னெடுப்பொன்றைச் செய்வதாக செய்திகள் உலாவருகின்றன.

இம்மூவரைப் பொறுத்தவரையும் ஜனாதிபதிப் பதவி தலையிடியானதொன்று என்பது அனைவரும் அறிந்ததே!

ஜனாதிபதித் தேர்தல்

ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடம் என்பது நமக்குத் தெரியும். ஜனாதிபதித் தேர்தல் ஒரு ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடைவதற்கு இரண்டு மாதங்களுக்கு கூடாத, ஒரு மாதத்திற்குக் குறையாத காலப்பகுதிக்குள் நடாத்தப்படவேண்டும். சரத்து 31(3)

ஜனாதிபதியின் பதவிக்காலம் ஜனவரி எட்டாம் திகதி முடிவடையும். எனவே, தேர்தல் டிசம்பர் எட்டாம் திகதிக்கு முன்னரான அதேநேரம் நவம்பர் எட்டாம் திகதிக்கு முற்படாத ( அதாவது 08/11/2019 இற்கும் 08/12/2019 இற்கும் இடைப்பட்ட) ஒரு திகதியில் நடாத்தப்பட வேண்டும். இதனடிப்படையில்தான் டிசம்பர் 7ம் திகதியை தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் அடிக்கடி குறிப்பிட்டிருக்கின்றார்.

ஒரு சட்டத்தைத் திருத்துதல்

ஒரு சட்டமூலம் (அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டதன்பின்) வர்த்தமானியில் பிரசுரிக்கப்படவேண்டும். (சரத்து 78) அதிலிருந்து இரு வாரங்களின்பின் பாராளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் சேர்க்கப்படவேண்டும். அதிலிருந்து ஒரு வாரத்திற்குள் எந்தவொரு பிரஜையும் அச்சட்டமூலத்தை உயர்நீதிமன்றில் சவாலுக்குட்படுத்தலாம்.

சவாலுக்குட்படுத்தும் அடிப்படைகள்.

எந்தவொரு சட்ட மசோதாவையும் சவாலுக்குட்படுத்தும் ஒரேயொரு அடிப்படை இம்மசோதா அரசியலமைப்பிற்கு முரண் என்பதாகும்.

அரசியலமைப்பைப் பொறுத்தவரை இரு வகையான சரத்துக்கள் இருக்கின்றன. ஒரு வகை: அவற்றை மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் திருத்தலாம். இன்னுமொரு வகை: மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் சர்வஜன வாக்கைடுப்பும் தேவை: சரத்து 83 இன் பிரகாரம் பின்வருவன இவ்வகையான சரத்துக்களாகும்.

சரத்துக்கள்: 1,2,3,6,7,8,9,10, 11,30(2) ( இது ஜனாதிபதியின் பதவிக்காலத்தைக் குறிக்கிறது), 62(2) ( இது பாராளுமன்றப்பதவிக்காலத்தைக் குறிக்கிறது) இந்த இரு பதவிக்காலத்தையும் நீடிக்கின்ற திருத்தம்;

இந்த சர்வஜன வாக்கெடுப்பின் தேவையை கோருகின்ற இச்சரத்துக்கள் சரத்து 83 இல் குறிப்பிடப்பட்டுள்ளதால் அச்சரத்தைத் திருத்துவதற்கும் சர்வஜன வாக்கெடுப்புத் தேவை ( இந்த சரத்து 83ஐ சற்று ஊன்றி வாசியுங்கள்; ஜனாதிபதியின் பதவிக்காலத்தை நீடிக்க முடியுமா? இல்லையா? என்பது இந்த சரத்து 83இல்தான் தங்கியிருக்கின்றது.

ஒரு சாதாரண சட்ட/ சட்டத்திருத்தத்திற்கான மசோதாவை உயர்நீதிமன்றில் சவாலுக்குட்படுத்தும்போது உயர்நீதிமன்றம் அம்மசோதா அரசியலமைப்பிற்கு முரண்படவில்லை; எனக் கூறலாம். அல்லது

சரத்து 83இல் குறிப்பிடப்பட்ட சரத்துக்கள் தவிர்ந்த வேறு ஏதாவது ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சரத்துக்களுடன் குறித்த மசோதா அல்லது அதன் சில பகுதிகள் முரண்படுகின்றது, அல்லது முரண்படுகின்றன; எனக்கூறலாம்.

அவ்வாறு முரண்படுமாயின் இரு வகையான தீர்வை முன்வைக்கலாம்: ஒன்று: குறித்த வசனங்களை நீக்கினால் அல்லது இவ்வாறு திருத்தினால் முரண்படாது. அதன்பின் சாதாரண பெரும்பான்மையால் நிறைவேற்றலாம்; என்பதாகும். இரண்டு: 2/3 பெரும்பான்மையால் நிறைவேற்றவேண்டும்; என்பதாகும்.

அதேநேரம் அம்மசோதா, மேலே சரத்து 83இல் கூறப்பட்ட ஏதாவதொரு சரத்துடன் முரண்பட்டால் சில நேரம் நீதிமன்றம் திருத்தத்தை முன்வைக்கலாம் அல்லது சர்வஜன வாக்கெடுப்பைக் கோரலாம்.

அவதானம் செலுத்துக


இங்கு குறிப்பிடுவது சாதாரண சட்டத் திருத்தமாகும். சாதாரண சட்டத் திருத்தத்திற்குக்கூட சிலவேளை 2/3 உடன் சர்வஜன வாக்கெடுப்பும் தேவை என நீதிமன்றம் கூறலாம்; என மேலே பார்த்தோம். ஆனாலும் அது சாதாரண சட்டமே. 2/3 ஆல் நிறைவேற்றியதால் அல்லது சர்வஜன வாக்கெடுப்பும் நடாத்தியதால் அது அரசியலமைப்புச் சட்டத்தில் சேராது.

எனவே, அவ்வாறு 2/3 பெரும்பான்மையாலும் சர்வஜன வாக்கெடுப்பாலும் நிறைவேற்றப்பட்ட ஒரு சாதாரண சட்டத்தை பின்னர் நீக்குவதாக இருந்தால் சாதாரண பெரும்பான்மை போதும். சரத்து 84(3)

இதற்குப் பின்னால் உள்ள தத்துவம் என்னவென்றால் இச்சட்டம் அமுலுக்கு வரும்போது அரசியலமைப்பின் குறித்த சரத்துக்களில் தாக்கம் செலுத்துகின்றது. அதனை நீக்கும்போது அரசியலமைப்பு பழைய நிலைக்கு வருகிறது. அத்தாக்கம் இல்லாமல் போகிறது. தாக்கத்தை ஏற்படுத்த விசேட அனுமதி தேவை. தாக்கத்தை இல்லாமலாக்க சாதாரண அனுமதி போதும்.

உதாரணமாக, அரசியலமைப்பு தடுத்த ஒரு விடயத்தை இச்சட்டம் அனுமதிக்கலாம். அதற்கு மக்கள் ஆணை தேவைப்படலாம். அதனை நீக்கும்போது அரசியலமைப்புச் சட்டம் பழைய நிலைக்கு வந்துவிடுகிறது. அதனால்தான் “ சாதாரண பெரும்பான்மையால் நீக்கிவிடலாம்” என்று சரத்து 84(3) கூறுகிறது.

இப்பொழுது சிந்தித்துப் பாருங்கள்; புதிய மாகாணசபைச் சட்டத்தை நீக்கிவிட்டு பழைய தேர்தல்முறைக்குச் செல்வதற்கு 2/3 தேவையா? நிச்சயமாகத் தேவையில்லை. சிலர் புரியாமல் தேவை என்கிறார்கள். சிலர் புரிந்தும் மாகாணசபைத் தேர்தலைத் தள்ளிப்போட ஒரு சாட்டாக 2/3 தேவை என்கிறார்கள்.

அரசியலமைப்புத் திருத்தம்

அரசியலமைப்புத் திருத்தமாயின் 2/3 பங்கு சுயமாகத் தேவை. நீதிமன்றில் சவாலுக்குட்படுத்துவது மேலே கூறப்பட்ட சரத்து 83 இல் குறிப்பிடப்பட்ட சரத்துக்களுடன் முரண்படுகின்றது; என்பதாகும். அதனை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டால் சர்வஜன வாக்கெடுப்பைக் கோரும்.

ஜனாதிபதிப் பதவியை ஒழித்தல்


மேற்கூறிய மூவரும் ஜனாதிபதிப் பதவியை ஒழிக்க விரும்புவதாகக் கூறப்படுகிறது. இன்றைய சூழ்நிலையில் அவர்களது சொந்தக்கட்சியில் உள்ளவர்களே அதனை ஏற்றுக்கொள்வார்களா? என்ற கேள்வி ஒரு புறம் இருக்க எப்படியோ 2/3 ஐப் பெறுகிறார்கள்; என வைத்துக்கொண்டால் இம்மூவரும் இணைந்தால் சர்வஜன வாக்கெடுப்பில் வெற்றிபெறுவதும் சிரமமாகாது. ( ஜனாதிபதி பதவியை ஒழிக்க 2/3 உடன் சர்வஜன வாக்கெடுப்பும் தேவை).

அவ்வாறாயின் பிரச்சினை என்ன? பிரச்சினை காலஅவகாசம்.

தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்கள் இருக்கின்றன. சட்டமூலத்தை வரைந்து அமைச்சரவை அனுமதி பெறுவதற்கு ஒரு வாரம், வர்த்தமானியில் பிரசுரித்தபின் ஒழுங்குப்பத்திரத்தில் சேர்ப்பதற்கு இருவாரங்கள், சர்வஜன வாக்கெடுப்பும் நடாத்தப்படுவதால் நீதிமன்றில் சவாலுக்குட்படுத்தும்நிலை எழாது. எனவே ஆகக்கூடியது ஐந்து வாரங்களுக்குள் 2/3 ஆல் நிறைவேற்றலாம்.

அதன்பின் சபாநாயகர் கையொப்பம் வைத்ததும் ஜனாதிபதி சர்வஜன வாக்கெடுப்பிற்கான பிரகடனம் வெளியிட வேண்டும். அதிலிருந்து ஒரு மாதத்தின் பின் சர்வஜன வாக்கெடுப்பை நடாத்த வேண்டும். அதன்பின் ஜனாதிபதி கையொப்பமிடவேண்டும். அத்துடன் ஜனாதிபதிப் பதவி ஒழிந்துவிடும்.

எனவே, சட்டரீதியாக அடுத்த மூன்று மாதங்களுக்குள் தாராளமாக ஜனாதிபதிப் பதவியை ஒழிக்கலாம். சர்வஜன வாக்கெடுப்பு முடிவடைந்து ஜனாதிபதி கையொப்பம் வைக்கும்வரை தேர்தல் ஆணைக்குழு ஜனாதிபதித் தேர்தலுக்கான நடைமுறைகளை செய்தே ஆகவேண்டும்.

சிலவேளை ஜனாதிபதித் தேர்தலுக்கு குறிக்கப்பட்ட திகதிக்குமுன் சர்வஜன வாக்கெடுப்பு முடிவடையாவிட்டால் குறித்த திகதியில் ஜனாதிபதித்தேர்தல் நடைபெறும். ஜனாதிபதிப் பதவியை ஒழிப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பைக் காரணம்காட்டி தேர்தலை ஒத்திப்போடமுடியாது. சர்வஜன வாக்கெடுப்பு நிறைவேறிவிட்டால் தேர்தல் நடவடிக்கை தானாகவே செயலிழந்துவிடும்.

இங்கு கேள்வி, சட்டரீதியாக அடுத்த மூன்று மாதங்களுக்குள் ஜனாதிபதிப்பதவியை ஒழிக்க முடியுமென்றபோதிலும் அரசியல்ரீதியாக அது சாத்தியமா? என்பதாகும்.

ஒரு புறம் ஜனாதிபதியை சம்மதிக்க வைக்கவேண்டும்; என்றால், அடுத்த அரசாங்கத்தில் அவருக்கு ஓர் உயர்பதவி கோருவார். இல்லையெனில் அவரது கட்சி பா உ க்களின் ஆதரவு கிடைக்காமல் போகலாம். மட்டுமல்ல, 2/3 ஆல் நிறைவேற்றினாலும் அதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்; என்று சர்வஜன வாக்கெடுப்பிற்கான பிரகடனத்தை வெளியிட மறுக்கலாம். பாராளுமன்றம் நிறைவேற்றிய நம்பிக்கையில்லாப் பிரேரணையையே ஏற்றுக்கொள்ள மறுத்தவர். அதன்பின் உயர்நீதிமன்றம் சென்றுவர காலஅவகாசம் இருக்காது.

மறுபுறம் சஜித்தையும் கோட்டாவையும் ஆதரிக்கும் பா உ க்கள் சம்மதிப்பார்களா? அவர்களைச் சம்மதிக்கவைக்க காலஅவகாசம் தேவை.

அடுத்தது; எதிர்கால நிறைவேற்று அதிகாரமற்ற ஜனாதிபதியின் அதிகாரங்கள் எவை? முக்கியமாக எதிர்கால ஜனாதிபதியை நியமிப்பது பிரதமரா? பாராளுமன்றமா? ( 72ம் ஆண்டு யாப்பில் பிரதமரே நியமித்தார் - பிரிவு 25) போன்ற விடயங்களைப் பேசித்தீர்மானிக்க அவகாசம் தேவை.

பாராளுமன்றத் தேர்தல்முறையையும் மாற்ற முற்படலாம். தற்போதைய முறையின்கீழ் எந்தக் கட்சியும் இலகுவில் அறுதிப்பெரும்பான்மை பெறமுடியாது. ஜனாதிபதி ஆட்சிமுறை அரசுக்கு ஸ்த்திரத்தன்மையை வழங்குகிறது. அப்பதவி ஒழிக்கப்படும்போது ஒரு கட்சி தனித்து ஆட்சியமைக்கக்கூடிய வகையில் தேர்தல்முறை மாற்றப்பட வேண்டும்; என்ற கருத்து அவர்களிடம் ஏற்கனவே இருக்கிறது. ( இங்குதான் சிறுபான்மைகளுக்கு பிரதான ஆபத்து இருக்கின்றது) எனவே இவைகளைத் தீர்மானிக்க காலஅவகாசம் தேவை. இந்தப்பின்னணியில்தான் தேர்தலை ஒத்திவைக்க முற்படுகிறார்கள்.

தேர்தலை ஒத்திவைக்க முடியுமா?

உயர்நீதிமன்றம் பல தீர்ப்புகளில் கூறியது, பதவிக்காலத்தை நீடிக்க சர்வஜன வாக்கெடுப்புத் தேவை; குறைக்கும்போது மீண்டும் அதே மக்களிடம் செல்வதால் தேவையில்லை; என்பதாகும். ஏனெனில் பதவிக்காலத்தை நீடிப்பதென்பது மக்கள் ஆணைக்கப்பால் செல்கிறது . அது சரத்து மூன்றில் கூறப்பட்ட வாக்குரிமையைப் பாதிக்கின்றது. எனவே, சர்வஜன வாக்கெடுப்பு தேவை.

தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடங்கள். அதனை இன்னுமொரு ஆறு மாதங்கள் நீடிப்பதாயினும் கண்டிப்பாக சர்வஜன வாக்கெடுப்புத் தேவை. தேர்தலை ஆறு மாதம் ஒத்திப்போடுவதற்காக சர்வஜன வாக்கெடுப்பு நடாத்த முடியுமா? அதற்காக பல நூறு கோடி ரூபாய்களை செலவுசெய்ய முடியுமா? அது பாரிய விமர்சனத்தைக் கொண்டுவராதா?

இந்தப்பின்னணியில் சர்வஜன வாக்கெடுப்பின்றி அவசர அவசரமாக 2/3 ஆல் மாத்திரம் தேர்தலை ஒத்திப்போட ஒரு முயற்சி நடைபெறலாம். இதனால்தான் சில சிறுபான்மைக் கட்சிகள் உசாரடைந்திருக்கிறார்கள்.

சாதாரண சூழ்நிலையில் சர்வஜன வாக்கெடுப்பின்றி தேர்தலை ஒத்திப்போடவே முடியாது. ஆனால் 19வது திருத்தத்தில் இன்னுமொரு தவறு நடந்திருக்கின்றது. அது சிலவேளை வேண்டுமென்றே விடப்பட்டதா? என்ற கேள்வியும் எழுகிறது. இந்த தவறு ஒத்திப்போடுவதில் பிரதான பங்குவகிக்கலாம்.

மேலே கூறப்பட்ட சரத்து 83(b), 19 வது திருத்தத்துக்கு முன் பின்வருமாறு கூறியது: அதாவது, சரத்து 30(2)ஐ அல்லது 62(2) ஐ ஜனாதிபதியின் பதவிக்காலத்தை அல்லது பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தை ஆறு வருடங்களுக்குமேல் நீடிப்பதற்காகத் திருத்துவதாயின் சர்வஜன வாக்கெடுப்பு வேண்டும்; எனக் கூறியது.

அப்பொழுது “ஆறு வருடத்திற்குமேல்” எனக் கூறியதற்கான காரணம் அப்போது ஜனாதிபதியின்/ பாராளுமன்றத்தின் பதவிக்காலம் ஆறு வருடமாகும். எனவே, அதற்குமேல் செல்வதற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவை.

இப்பொழுது பதவிக்காலம் ஐந்து வருடமென்பதால் இது ஐந்து வருடங்களுமேல் நீடிப்பதாயின் வாக்கெடுப்புத்தேவை; எனத் திருத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இச்சரத்து திருத்தப்படவில்லை. இப்பொழுதும் “ஆறு வருடத்திற்குமேல்” என்றுதான் இருக்கின்றது.

இதில் 30(2) ஐ பதவியை நீட்டுவதற்கு ( வாக்கெடுப்பின்றி) திருத்தமுடியாது; என்றுதான் இருந்தது. இப்பொழுது 30(2)/62(2) ஐத் திருத்தி ஐந்தாக குறைத்து விட்டார்கள். ஆனால் 83(2) ஆறை ஐந்தாக குறைக்கவில்லை. இது ஒரு தவறாக இருக்கலாம்; அல்லது வேண்டுமென்றே விடப்பட்டிருக்கலாம்.

காரணம், இவற்றைக்கூறுகின்ற 83 ஐத் திருத்துவதற்கும் சர்வஜன வாக்கெடுப்புத் தேவை என்று கூறப்பட்டிருக்கின்றது.

30(2)/62(2) இற்கும் 83 இற்கும் இடையில் உள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். இரண்டையும் பற்றி 83 இல் தான் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் 30(2)/62(2) ஐ பதவியை நீட்டுவதற்காக வாக்கெடுப்பின்றி திருத்தமுடியாது; என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. குறைப்பதற்காக அல்லது அடியோடு திருத்தக்கூடாது; எனக் குறிப்பிடப்படவில்லை.

எனவே, பதவியைக் குறைப்பதற்காக 30(2) ஐயும் 62(2)ஐயும் திருத்திவிட்டார்கள். 83 அப்படியல்ல. அதில் 83 ஐத் திருத்தக்கூடாது; என்று மட்டும்தான் கூறப்பட்டுள்ளது. எனவே, 83 இல் உள்ள “ஆறு” என்ற சொல்லை “ஐந்து” என்று மாற்றினால் 83 ஐத் திருத்தியதாகிவிடும்; சர்வஜன வாக்கெடுப்பின்றி திருத்தமுடியாதே, என நினைத்து அப்படியே விட்டிருக்கலாம்.

இப்பொழுது எழுகின்ற கேள்வி 83(2) இல் ஆறு வருடங்களுக்குமேல் வாக்கெடுப்பின்றி நீடிக்கக்கூடாது; என்றுதான் இருக்கின்றது. எனவே, இன்னுமொரு ஆறு மாதம் நீடிப்பது இச்சரத்திற்கு முரணாகாது; என்ற அர்த்தத்தை எடுக்கமுடியாதா? இது அவர்களால் முன்வைக்கக்கூடிய ஒரு வாதம். ( Literal interpretation).

எதிர்வாதம்

ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடம் எனும்போது “ ஆறு வருடம்” என்பது அந்த இடத்தில் எவ்வாறு பொருத்தும். இங்கு “ ஆறு வருடம்” என்பது “ நீடிக்கப்படுதல்” என்பதற்குரிய அடைமொழி மாத்திரமே”. இங்கு “ ஆறு” என்ற சொல்லிற்கு நேரடியான எண்கணித வியாக்கியானம் பொருந்தாது. இதற்கு இயற்கையான அல்லது சூழ்நிலைக்கேற்ற ( contextual) வியாக்கியானமே வழங்கப்பட வேண்டும்.

அதாவது “ ஆறு வருடங்களுக்குமேல் நீடிக்கப்படக்கூடாது” என்பதில் உள்ள “ ஆறுவருடங்களுக்குமேல்” என்ற அடைமொழியை “ ஜனாதிபதியின் பதவிக்காலம் எதுவோ அதற்குமேல் நீடிக்கக்கூடாது” என்றே வியாக்கியானப்படுத்த வேண்டும். சுருங்கக்கூறின் “ ஆறு” என்பது “ ஐந்து” என்று வாசிக்கப்பட வேண்டும்.

இதற்கு வலுச்சேர்க்கும் இன்னுமொரு வாதம், இவ்வாறான ஒரு திருத்தம் அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்குப்பின் கொண்டுவந்தால் அப்பொழுது மக்கள் ஐந்து வருடங்களுக்களுக்கே ஆணை வழங்கியிருப்பார்கள். அந்நிலையில் மக்கள் ஆணையின்றி இன்னுமொரு ஆறு மாதம் நீடிக்கமுடியுமா? அது மக்கள் ஆணையை மீறியதாகும்.

அவ்வாறு மீறினால் அது சரத்து மூன்றில் கூறப்பட்ட “ வாக்குரிமையைப்” பாதிக்கும். அவ்வாறு பாதிக்குமானால் சர்வஜன வாக்கெடுப்பு தேவை. எனவே, சரத்து 83ம் சரத்து 3 ம் ஒன்றுடன் ஒன்று முரண்பட்டதாக இருக்கமுடியாது. இரண்டும் ஒன்றுக்கொன்று இசைவுடையதாக இருக்கவேண்டுமானால் “ ஆறு வருடம்” என்பது “ஜனாதிபதியின் பதவிக்காலத்திற்கு மேலதிகமாக “ என்பதையே அடையாளப்படுத்துகின்றது; என பொருள் கொள்ளப்படல் வேண்டும்.

நீதிமன்றம் சிலசமயங்களில் “May” என்ற சொல்லை “ Shall “ என்று அந்த இடத்திற்கேற்றாற்போல் வியாக்கியானப்படுத்துவதுபோன்று இங்கு “ ஆறு” என்பது “ ஐந்து” என்றே வியாக்கியானப்படுத்தப்படவேண்டும்.

மறுவார்த்தையில் கூறுவதானால் 83(2) இன் அடிப்படை 30(2)/62(2) ஐ, பதவிக்காலத்தை நீடிப்பதற்காக வாக்கெடுப்பின்றி திருத்த முடியாது; என்பதே! அப்போதைய பதவிக்காலம் ஆறு வருடம் என்பதால் அது அப்போதைய பதவிக்காலத்தைக் குறித்ததேதவிர வெறும் எண்கணித கணக்கைக் குறிக்கவில்லை.

மறுவாதம்


சரி, அவ்வாறு “ஆறை” ஐந்து என எடுத்துக்கொண்டாலும் இந்த ஜனாதிபதிக்கு ஆறு வருடங்கள் மக்கள் ஆணை கிடைத்ததே! எனவே, இந்த ஜனாதிபதியின் பதவியை இன்னும் ஆறுமாதம் நீடிப்பது சரத்து 3 இற்கெதிரானதல்லவே! என மறுவாதத்தை முன்வைக்கலாம். இது வலுவான ஓர் வாதம்.

எதிர்வாதம்

83(2) ஜனாதிபதியின் பதவிக்கால நீடிப்பை மாத்திரம் குறிப்பிடவில்லை. அது 62(2) ஐயும் குறிப்பிடுகின்றது. அதாவது பாராளுமன்ற பதவிக்கால நீடிப்பும் ஆறு வருடங்களுக்குமேல் செய்யமுடியாது; என்றுதான் கூறுகின்றது. தற்போதைய பாராளுமன்றத்திற்கு மக்கள் ஐந்து வருடங்களுக்கே ஆணை வழங்கியிருக்கின்றார்கள். எனவே, அந்த “ஆறு” என்ற சொல்லை “ஆறு” எனக்கொண்டு பாராளுமன்ற பதவிக்காலத்தை இன்னுமொரு ஆறு மாதம் நீடித்தால் அது மக்கள் ஆணையை மீறதா? சரத்து 3 ஐப் பாதிக்காதா?

சரத்து 83(2) இல் வருகின்ற “ ஆறு வருடங்கள் “ எனும் சொற்றொடரை ஒரே சமயத்தில் பாராளுமன்ற ஆயுட்காலத்தை நீடிக்க “ ஐந்து” என்றும் ஜனாதிபதியின் பதவிக்காலத்தை நீடிக்க “ ஆறு” என்றும் வியாக்கியானப்படுத்த முடியுமா?

எனவே, ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடங்கள் மாத்திரமே. அதை ஒரு நாளால் அதிகரிப்பதென்றாலும் 2/3 உடன் சர்வஜன வாக்கெடுப்பும் தேவை.

சிலவேளை

இந்த ஜனாதிபதி ஆறு வருடத்திற்கு மக்களால் தெரிவுசெய்யப்பட்டார். பாராளுமன்றம் அதனை ஐந்து வருடமாக குறைத்தது. இன்று அதே பாராளுமன்றம் அதை இன்னுமொரு ஆறு மாதங்களால் நீட்டுவது மக்கள் ஆணைக்கு முரணல்ல. எனவே, இந்த ஜனாதிபதிக்கு மட்டும் ஒரு இடைக்கால ஏற்பாடாக இப்பதவி நீடிப்பை வழங்கலாம்; என்ற ஒரு நிலைப்பாட்டை நீதிமன்றம் சிலவேளை ஏற்றுக்கொண்டால் தேர்தல் ஒத்திவைக்கப்படலாம்.

அவ்வாறு ஒத்திவைக்கப்பட்டால் அது சிறுபான்மைகளுக்கு, குறிப்பாக முஸ்லிம்களுக்கும் மலையகத் தமிழருக்கும் பாரிய ஆபத்தாக வந்துமுடியும். தற்போது இருக்கின்ற இரு வகைப்பாதுகாப்பும் இழக்கப்படுகின்ற நிலை ஏற்படும்.

அதாவது ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதில் சிறுபான்மைகளுக்கு இருக்கின்ற பலம் இல்லாமலாகிவிடும். ஜனாதிபதி முறைமையில் சிறுபான்மைகளுக்கு சில சாதகங்களும் சில பாதகங்களும் இருக்கின்றன. ( அவற்றை இன்னுமொரு ஆக்கத்தில் பார்ப்போம்).

தற்போதைய பொதுத்தேர்தல் முறைமை சிறுபான்மைகளுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். ஒருபுறம் நமது விகிதாசாரத்திற்கேற்ப அண்ணளவாக ஆசனங்களைப்பெற உதவுகிறது.
மறுபுறம், எந்தவொரு தேசியக்கட்சியும் அதிகமான சந்தர்ப்பங்களில் சுயமாக பெரும்பான்மை பெறமுடியாத நிலையில் பாரியதொரு பேரம்பேசும் சக்தியை அது சிறுபான்மைகளுக்கு வழங்குகிறது.

“ யானையின் பலம் யானைக்குத் தெரிவதில்லையாம் அது இறக்கும் நேரம் வரும்வரை”, என்பதுபோல் நமது கட்சிகளுக்கு இந்தப்பலம் புரியாதது அல்லது புரிந்தும் அதனை தம்சொந்த நலனுக்காக மட்டும் உபயோகிப்பது என்பது நாம் பொருத்தமான தலைமைத்துவத்தை/ பிரதிநிதித்துவத்தை தெரிவுசெய்யத்தவறுவதால் ஏற்படும் துரதிஷ்ட நிலையாகும்.

மறைந்த தலைவரைப்போன்று தகுதியான தலைமைத்துவம் அமையுமானால் இம்முறையின்கீழ் நமது அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்க முடியும். நமது கையாலாகாத்தனம் வேறு. ஆனால் இத்தேர்தல்முறை மாற்றப்படுமானால் இந்தியாவை விடவும் மோசமான நிலைக்கு சிறுபான்மை பொதுவாகவும் முஸ்லிம்கள் குறிப்பாகவும் தள்ளப்படலாம்.

எனவே, இவ்விடயத்தில் சிறுபான்மைகள், குறிப்பாக முஸ்லிம்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும்.

Read more...

Saturday, June 8, 2019

சுயபரிசோதனை- பாகம்-3 ஜனநாயகமும் சிறுபான்மையின் அவலங்களும். வை எல் எஸ் ஹமீட்

உலகின் ஆட்சிமுறையை பிரதானமாக இருவகையாகப் பிரிக்கலாம். ஒன்று ஜனநாயகம், அடுத்தது சர்வாதிகாரம். சர்வாதிகாரம் என்பது மன்னராட்சியாக, கம்யூனிசமாக, சோசலிசமாக எந்தவடிவத்தையும் எடுக்கலாம்.

இரண்டுவகை ஆட்சிக்குமான அடிப்படைவேறுபாடு

ஜனநாயகம் ஒன்றுக்கு மேற்பட்ட கருத்துக்களை அனுமதிக்கும். சர்வாதிகாரம் அனுமதிக்காது. உதாரணமாக கம்யூனிச நாட்டில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஜனநாயகம் liberalism மற்றும் human rights ஆகியவற்றை தன்னுடன் எப்போதும் அரவணைத்துச் செல்லும். அதனால்தான் human rights promote democracy என்று கூறுவார்கள்.

Liberalism


இங்கு liberalism என்பது தனிநபர் சுதந்திரத்தைக் குறிப்பிடுகின்றது. இந்த சுதந்திரம் என்பதை தனது ஆட்சியாளரை தான் தீர்மானிப்பது, தனது வாழ்வுமுறையை தான் தீர்மானிப்பது போன்ற பலவிடயங்களை உள்ளடக்கும். தனது வாழ்வுமுறையைத் தீர்மானிப்பதில் ஆட்சியாளரின் தலையீட்டு எல்லை என்பதைப் பொறுத்து இந்த liberalism த்தின் எல்லை தீர்மானிக்கப்படுகிறது.

இங்கு liberalism, அதனைவிட விரிந்த neo liberalism என்கின்ற விடயங்கள் வருகின்றன. இந்த liberalism த்தைக் கட்டுப்படுத்துவதில் socialism இத்தின் பங்கு- அதாவது welfare state இன் பங்கு போன்றவை இருக்கின்றன.

வாக்குரிமை

உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் இப்பூமியில் எங்கோ ஓர் இடத்தில் சம உரிமையுடன் வாழுகின்ற தகுதி இருக்கின்றது. அத்தகுதி ஒருவருக்கு அதிகமாகவும் ஒருவருக்கு குறைவாகவும் இருக்க முடியாது.

இருவரில் இருந்து பெருகிய மனித இனம் உலகின் பல இடங்களுக்கும் இடம்பெயர்ந்து வாழ்ந்தாலும் எங்கு அவன் சில தலைமுறைகளாக வாழ்கின்றானோ அது அவனது முழு உரிமையுடைய வாழ்விடமாகும்.

நாடுகள் என்ற கோட்பாடு மனித தொடக்கத்தில் உருவானதல்ல. பிற்காலத்தில் உருவானதாகும். காலப்போக்கில் நாட்டின் பிரஜை என்ற கோட்பாடு உருவாகியது. இவைகள் மனிதனால் உருவாக்கப்பட்ட கோட்பாடுகள். இந்த அடிப்படையில் ஒரு நாட்டின் அனைத்துப் பிரஜைகளுக்கும் அங்கு சம உரிமை இருக்கின்றது.

ஜனநாயகத்தில் ஒரு நாட்டுப்பிரஜைகள் தனது ஆட்சியாளரைத் தீர்மானிப்பதற்கு வழங்கப்படுகின்ற அந்த உரிமைதான் வாக்குரிமையாகும். எல்லாரும் சமம் என்பதனால்தான் எல்லோருக்கும் ஒரேவிதமான வாக்குரிமை வழங்கப்படுகிறது.

பெரும்பான்மை தத்துவம்

தனது ஆட்சியாளரைத் தீர்மானிக்கின்ற உரிமை ஒவ்வொரு தனிமனிதனுக்கும் இருக்கின்றது. அதற்காக ஒவ்வொரு தனிமனிதனுக்கும் ஒவ்வொரு ஆட்சியாளன் இருக்கமுடியாது. இந்தக்குழப்பத்தைத் தவிர்க்க உருவான கோட்பாடுதான் பெரும்பான்மைத் தத்துவம் என்பதாகும்.

அதாவது 100 பேரில் 51 பேர் ஒரு முடிவையும் 49 பேர் மாற்றுமுடிவையும் எடுத்தால் 51 பேரின் முடிவு செல்லுபடியாகும். இங்கு 51 பேருக்கும் 49 பேருக்குமிடையில் ஓர் மறைமுக உடன்பாடு ஏற்படுகின்றது. அதாவது உங்கள் 51 பேரின் முடிவை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம்; அடுத்த தடவை நாங்கள் 51 பேராக மாறும்போது அதனை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்; என்பதாகும். இதுதான் பெரும்பான்மைத் தத்துவத்தின் அடிப்படையாகும்.

ஜனநாயகம் செயற்படுவதென்பது இந்த பெரும்பான்மைக் கோட்பாட்டிலேயே தங்கியிருக்கிறது. இக்கோட்பாடுதான் ஜனநாயகத்தின் பலமாகும். அதேநேரம் இக்கோட்பாடுதான் ஜனநாயகத்தின் பலவீனமுமாகும். இன்று ஜனநாயக உலகில் சிறுபான்மைகளின் பிரச்சினைகளுக்கு அடிப்படைக் காரணியே இப்பெரும்பான்மைவாதக் கோட்பாடே!

இந்தப்பெரும்பான்மை என்பது அரசியல் கருத்தின் அடிப்படையிலான பெரும்பான்மையே தவிர இன, மத, மொழி ரீதியான பெரும்பான்மை அல்ல. அதேநேரம் இந்த அரசியல் பெரும்பான்மை அரசியல் சிறுபான்மையை அடக்கியாள முற்படுவதை “ Tyranny of Majoritarianism என்பார்கள். அதனை ஒரு சில அடிப்படை விடயங்களிலாவது தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட கோட்பாடுதான் Doctrine of Constitutionalism. இது ஒரு சட்ட ஆய்வுக் கட்டுரை இல்லையென்பதனால் அதற்குள் செல்ல விரும்பவில்லை.

ஜனநாயகம் என்பதே ஒரு அரசியல் கோட்பாடாகும். இங்கு பேசப்படவேண்டியது அரசியல் பெரும்பான்மை, அரசியல் சிறுபான்மை என்பனவாகும். ஆனால் சிறுபான்மைகள் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்ற நாடுகளிலெல்லாம் அவை இன, மொழி, மத, சாதி போன்ற ரீதியான பிரச்சினைகளாகவே இருக்கின்றன.

இவற்றிற்கு காரணம் என்ன? இவற்றிற்கு தீர்வு என்ன? இவற்றை ஆராய்வதுதான் இக்கட்டுரையின் பிரதான கருப்பொருளாகும்.

ஜனநாயகம் தவறாகப் பயன்படுத்தப்படல்

மேலே பார்த்ததுபோல் ஜனநாயகம் என்பது ஒன்றுக்கு மேற்பட்ட கருத்துக்களை அனுமதிப்பதாகும். எனவே இங்கு முடிவுகள் கருத்தின் அடிப்படையில் அமைய வேண்டும். ஆட்சிக்காக போட்டியிடுபவர்களில் யார் சிறந்தவர் என பெரும்பான்மை நினைக்கிறதோ அவர் ஆட்சியாளராக வேண்டும்.

இங்கு கருத்தின் அடிப்படையிலான பெரும்பான்மை, அதாவது அரசியல் பெரும்பான்மையே மையப்பொருளாகும். அப்பொழுதுதான் இன்று 49 பேராக இருப்பவர்கள் நாளை 51 ஆகவும் 51 பேராக இருப்பவர்கள் 49 ஆகவும் மாறமுடியும். ஆனால் அதிகமான பல்லின சமூகங்கள் வாழுகின்ற நாடுகளில் கருத்தினடிப்படையிலான பெரும்பான்மைக்கு இடமே இல்லை; வெளியில் கருத்தினடிப்படையிலான பெரும்பான்மையாக தோற்றியபோதும்.

இங்குதான் ஜனநாயகம் படுதோல்வி அடைகின்றது.

இங்கு கருத்தினடிப்படையிலான பெரும்பான்மைக்குப் பதிலாக இன, மொழி, மத என்று வேறுவகையான பெரும்பான்மையே இந்த “பெரும்பான்மை” என்ற சொல்லை தனதாக்கிக்கொள்கிறது. கருத்தினடிப்படையிலான “பெரும்பான்மைக்கு” அங்கு இடமில்லை.

இதனாலேயே ஆளும் இனம், ஆளப்படும் இனம் என இரண்டு வகையான நிரந்தர இனங்கள் உருவாக்கப்படுகின்றன. ஆளும் இனம் ஆளப்படும் இனம் என இரு நிரந்தர இனம் இருக்குமாயின் அது அடிப்படை ஜனநாயக கோட்பாட்டிற்கு முரணானது. அது ஜனநாயகமாக இருக்க முடியாது.

இங்குதான் ஜனநாயகம் படுதோல்வி அடைகின்றது. ஆனால் அதனை யாரும் உணர்வதில்லை.

போலிப்பெரும்பான்மை ஜனநாயக் கோட்பாடு

பல்லின சமூகம் வாழுகின்ற பெரும்பாலான ஜனநாயக நாடுகளில் “ கருத்தியல் பெரும்பான்மை” என்பதில் உள்ள “ கருத்தியல் “ என்ற சொல் நீக்கப்பட்டு “ பெரும்பான்மை “ என்ற சொல் மட்டும் தனியாக எடுக்கப்பட்டு துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது.

அதாவது, இன, மத, மொழி போன்ற அடையாளங்களின் அடிப்படையில் பெரும்பான்மையாக இருக்கின்ற ஒரு சமூகக்குழு அந்தப்பெரும்பான்மை என்ற சொல்லை தனது சமூகத்திற்குரியதாக வரித்துக்கொள்கிறது. இதனால் அந்த சமூகம் நிரந்தர ஆளும் சமூகமாக மாறுகிறது. கருத்தியல் பெரும்பான்மையை அந்த சமூகத்திற்குள் மட்டுப்படுத்தப்படுகிறது.

இந்த சமூகக்குழுவின் அடையாளங்களிலிருந்து மாறுபட்ட ஏனைய சிறுபான்மையோர் ஆளப்படும் நிரந்த வர்க்கமாக மாற்றப்படுகிறார்கள்.

உதாரணமாக, ஆளப்படும் இனத்தில் இருந்து ஆட்சிசெய்வதற்கு எல்லாவகையிலும் அதிசிறந்தவராக கருதப்படக்கூடிய ஒருவர் போட்டியிட்டாலும் அவர் ஆட்சியளராக தெரிவுசெய்யப்பட முடியாது; ஏனெனில் கருத்தியல் பெரும்பான்மைக்கு அங்கு இடமில்லை. மாறாக, அவரைவிட பலவகையில் தகைமை அல்லது ஏற்புடைமை குறைந்தவராக இருந்தாலும் அவர் அந்த பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தால் அவர்தான் ஆட்சியாளராக வரமுடியும்.

பெரும்பான்மைக்குள் ஒன்றுக்கு மேற்பட்ட போட்டியாளர் போட்டியிடும்போது அவர்களுக்குள் யார் ஆட்சியாளர் என்பதில்தான் கருத்தியல் பெரும்பான்மைக் கோட்பாடு வேலை செய்கின்றது.

எனவே, இந்த ஜனநாயகத்தின் மிகப்பெரிய பலயீனமே “ ஆளும் இனம், ஆளப்படும் இனம் என இருவகை இனங்களை உருவாக்குவதாகும். ஆனால் அதன் அடிப்படைத் தத்துவம் அதுவல்ல. அது நிரந்தர ஆளும் இனத்தை உருவாக்க முடியாது. ஏனெனில் கருத்து நிரந்தரமானதல்ல.

மறுபுறம், ஒரு ஜனநாயக நாட்டில் சகலரும் சமம் என்றால் சமூகம் என்ற வேறுபாடுகளுக்கப்பால் எந்தவொரு பிரஜைக்கும் ஆட்சியாளராக வரும் உரிமை இருக்கவேண்டும். அவரின் தகமை, கொள்கை, ஏற்புடமை என்பனதான் அவரைத் தீர்மானிக்கும் காரணிகளாக இருக்கவேண்டும். ஆனால் சிறுபான்மையைச் சேர்ந்த ஒருவர் எவ்வளவு தகைமையுடையவராக இருந்தாலும் அவர் சிறுபான்மை என்பதற்காக ஆட்சியாளராகும் தகுதியை இழக்கின்றார் சட்டத்தில் அத்தகுதியீனம் இல்லாதபோதும்கூட.

எல்லோரும் சமம் என்றால் எவ்வாறு நிரந்தரமான ஆளும் இனம், ஆளப்படும் இனமென இருவர்க்கங்கள் உருவாக முடியும். ஜனநாயகத்தின் இப்பலயீனம்தான் சிறுபான்மைகளின் பிரச்சினைகளுக்கு அடிப்படையாகின்றன. அறிஞர்கள் ஜனநாயகம்தான் சிறந்தமுறை என்று கூறவில்லை. இருப்பவற்றுள், குறிப்பாக சர்வாதிகாரத்துடன் ஒப்பிடும்போது ஜனநாயகம் சிறந்தது; என்றே கூறுகிறார்கள்.

எல்லோரினதும் சமத்துவத்தை உறுதிப்படுத்தக்கூடிய ஒரு புதியமுறை ஒன்றை உருவாக்கமுடியுமா? என்பது எதிர்கால ஆராய்ச்சிகளில் தங்கியிருக்கின்றது. ஆனாலும் தற்போதைக்கு சில தீர்வுகளாகத்தான் மனித உரிமைக் கோட்பாடுகள், அரசியலமைப்புச் சட்டம், சட்டத்தின் ஆட்சி, ஐ நா மனித உரிமை ஆணையம் என்றெல்லாம் இருக்கின்றன. ஆனால் இவற்றையும் மீறியதாகவே பெரும்பான்மை வாதத்தின் தாக்கம் பல சந்தர்ப்பங்களில் இருக்கின்றது.

சிறுபான்மை நிலைப்பாடு


ஆளும் இனம், ஆளப்படும் இனம் என்பது ஜனநாயகத்தின் பலயீனத்தில் இருந்து பிறக்கும் கோட்பாடானபோதிலும் சிறுபான்மைகள் பெரும்பான்மை இனத்தை ஆளும் இனமாக ஏற்றுக்கொள்வதில் ஒருபோதும் மறுப்புத் தெரிவிப்பதில்லை.

சிறுபான்மையைச் சேர்ந்தோர் ஒருபோதும் தாம் ஆட்சியாளராக வரவேண்டுமென்று கேட்பதில்லை. மாறாக பெரும்பான்மையை ஆளும் இனமாக தாராளமாக ஏற்றுக்கொள்கிறார்கள். அவர்களில் ஒருவருக்கே ஆட்சியாளராக வர இவர்களும் இணைந்து சந்தர்ப்பம் வழங்குகிறார்கள்.

முரண்பாடு

மனிதன், பிரஜை என்ற அடிப்படையில் சம உரிமை இருந்தும் ஆளும் வர்க்கம் என்ற பெரும்பான்மையின் அந்தஸ்த்தை சிறுபான்மையும் ஏற்பதையே சகவாழ்வின் பெரும்பேறாக பெரும்பான்மை கருதவேண்டும். ஆனால் ஆளும் இனம் தன்னை முதல்தர பிரஜைகளாகவும் நாடு அவர்களுக்குரியதாகவும் கருத முற்படும்போதுதான் பிரச்சினை ஆரம்பிக்கின்றது.

சிறுபான்மைகளை அரவணைக்கக்கூடிய பெரும்பான்மை அரசியல் கட்சிகளை சிறுபான்மைகள் அரவணைக்க முற்படும்போது அடுத்த பெரும்பான்மை அரசியல் கட்சிகள் சிறுபான்மைகளின் தயவின்றி தனிப்பெரும்பான்மை வாக்குகளைப் பெறுவதற்காக பெரும்பான்மையிடம் சிறுபான்மைக்கெதிரான உணர்வுகளை ஊட்டுகின்றனர்.

தம் அடிமனதில் தாம் ஆளும் இனம், சிறுபான்மை ஆளப்படும் இரண்டாம்தர பிரஜை என நினைக்கும்போது சிறுபான்மைக்கெதிராக அடக்குமுறையை அட்டாகாசங்களைக் கட்டவிழ்ப்பது அவர்களுக்கு இலகுவாகின்றது.

சட்டம் எல்லோருக்கும் சமம் என்றபோதிலும் சட்டத்தின் ஆட்சி நடக்கின்றது என்ற போதிலும் பெரும் ஊர்களையே அழித்தவர்களை சாதாரண சட்டத்தின்கீழ் கைது செய்து இலகுவாக பிணையில் விடுவித்ததும் அப்பாவிகளைக் கைதுசெய்து கடுமையான சட்டங்களின்கீழ் சிறையில் வாடவைத்ததும் அதே மனோநிலைதான்.

பெரும்பான்மை வாதம்

இந்தப் பெரும்பான்மை வாதம் பல நாடுகளில் பல சந்தர்ப்பங்களில் சிறுபான்மைகளின் தனித்துவ அடையாளங்களை, வாழ்வியல் அம்சங்களை ஏற்றுக்கொள்ள மறுத்து பெரும்பான்மையோரின் வாழ்வியல் முறைகளைத் திணிக்க ஏதுவாக இருக்கின்றது.

புதிய நாடுகள் உருவாதல்


இரண்டாம் உலகமகா யுத்தின்பின் பல நாடுகள் சுதந்திரம் பெற்றன. அவ்வாறு சுதந்திரம் பெற்ற நாடுகளுக்குள் பல இன, மத, மொழி, காலாச்சார வேறுபாடுகளைக்கொண்ட பிரிவினர் இருந்தார்கள். ஆனாலும் அவர்கள் தங்களை அரசியல் ரீதியாக ஒரு தேசியமாக அடையாளம் கண்டார்கள். அந்நியரிடம் இருந்து சுதந்திரம்பெற்று ஒற்றுமையாக, ஒரு அரசிசயல் கருத்தின் அடிப்படையிலான தேசியமாக தம்மைத் தாமே ஆள முற்பட்டார்கள். அதன் அடிப்படையிலேயே ஒன்றுபட்ட சுதந்திரத்திற்காக போராடினார்கள்.

அதற்கு உடன்பாடில்லாதவர்கள் சுதந்திரத்தின்போதே பிரிந்து சென்றார்கள். உதாரணம் இந்தியா, பாகிஸ்தான். இவ்வாறு சுதந்திரம் பெற்றதன்பின் தம்மை ஒரு அரசியலடிப்படையிலான தேசியமாக கருதுவதற்குப் பதிலாக, கருத்தியல் பெரும்பான்மைக்கு இடம் கொடுப்பதற்கு பதிலாக இன, மத, மொழி ரீதியான பெரும்பான்மை இனக்குழுக்கள் ஜனநாயகத்தின் பலவீனத்தைப் பயன்படுத்தி ஆளும் இனம், ஆளப்படும் இனம் என்ற உத்தியோகபூர்வமாக பிரகடனப்படுத்தப்படாத கோட்பாடுகளை உருவாக்கினார்கள்.

அத்தோடு நின்றுவிடாமல் ஆளப்படும் இனங்கள் மீது நேரடி, மறைமுக அடக்குமுறைகளை கையாண்டார்கள். இதன் விளைவாக புதிய தேசியக்கோட்பாடுகள், சுயநிர்ணய உரிமை போன்ற தத்துவங்கள் முன்னுரிமை பெற்றன. நாடுகள் பிரிந்தன.

இலங்கையின் அனுபவம்

சுதந்திர இலங்கையிலும் இதே நிலைதான் தோன்றியது. தனிச்சிங்கள சட்டம்; தமிழருக்கெதிராக தொடராக அரங்கேற்றப்பட்ட இனப்படுகொலைகள்; இவ்வாறான நிகழ்வுகள்தான் தமிழர்கள் தங்களை ஒரு தேசியமாகவும் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துள்ள ஒரு சமூகமாகவும் வலியுறுத்தும் நிலைக்குத்தள்ளி தனிநாட்டுப் போராட்டத்திற்கும் வித்திட்டது.

முஸ்லிம்கள்

முஸ்லிம்களைப் பொறுத்தவரை அவர்களும் பல பாதிப்புக்களை எதிர்நோக்கியபோதிலும் அவ்வாறான போராட்டங்கள் எதிலும் ஈடுபடவில்லை. முடிந்தளவு பெரும்பான்மை சமூகத்துடன் இணைந்துசெல்லவே முற்பட்டார்கள். ஆனால் யுத்தவெற்றி பெரும்பான்மை வாதத்தின் பிரதான இரையாக முஸ்லிம்கள் மாற்றப்படுமளவுக்கு இட்டுச் சென்றது.

பெரும்பான்மை வாதம் முஸ்லிம்களின் ஹலால் உணவைக் கேள்விக்குறியாக்கியது.

முஸ்லிம்களின் ஆடையைக் கேள்விக்குறியாக்கியது.

அவர்களது தனியார் சட்டங்களைக் கேள்விக்குறியாக்கியது.

அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அவர்களது தனித்துவ கட்சிமுறையைக் கேள்விக்குட்படுத்தியது.

அவர்களது வர்த்தகத்தைக் கேள்விக்குட்படுத்தியது.

இவ்வாறு பட்டியல் நீளும்.

இவ்வளவும் நிகழ்ந்தாலும் முஸ்லிம்கள் தமிழர்களைப்போல் தனிநாடு கோரவில்லை. கோரவும் முடியாது. காரணம் அவ்வாறான புவியியல் சூழல் அவர்களுக்கு இல்லை.

பெரும்பான்மையைப் பகைத்துக்கொண்டு வாழமுடியாது. காரணம் அவர்களது மார்க்கம் அமைதி, சமாதானத்தை அடிப்படையாகக் கொண்டது. ஒருவரைச் சந்திக்கும்போது முகமன் கூறுவதே “ உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக” என்றுதான். மட்டுமல்ல, முஸ்லிம்கள் பெரும்பான்மைக்குள் சிதறிவாழுகின்ற சிறுபான்மை.

இந்நிலையில், ஜனநாயக் கோட்பாட்டின் பலம், பலயீனம் எவ்வாறானபோதிலும் பெரும்பான்மை சமூகத்தின் நிரந்தர ஆட்சியாளர் என்ற அந்தஸ்த்தை அங்கீகரித்து அழகுபார்ப்பதில் ஒருபோதும் எதுவித தயக்கமுமில்லாத ஒரு சிறுபான்மை சமூகத்தின் தனித்துவ அடயளங்கள் ஏன் மறுக்கப்படுகின்றன? அவர்களின் அமைதியான, நிம்மதியான வாழ்வு ஏன் கேள்விக்குறியாக்கப்படுகின்றது?

இவைகளுக்கான தீர்வு எங்கே இருக்கிறது. சபாநாயகர் முஸ்லிம்களின் ஆடைவிடயத்தில் ‘ இலங்கைக் கலாச்சாரம் பின்பற்றப்பட வேண்டுமென்று தெரிவித்திருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர் அராபிய கலாச்சாரம் கைவிடப்பட வேண்டும்; எனத் தெரிவித்திருக்கிறார். இந்த விடயங்களில் இவ்வாறு உயர்மட்டத் தலைவர்களுக்கு மத்தியிலேயே தவறான புரிதல் இருக்கின்றது.

இவ்வாறு பல விடயங்களில் முஸ்லிம்கள் தொடர்பாக தவறான புரிதல்கள் இருக்கின்றன. இவற்றைத் தெளிவுபடுத்த நாம் காத்திரமாக எதையாவது செய்திருக்கின்றோமா? அரசியல்ரீதியாக நமது கடமைகளைச் செய்திருக்கின்றோமா?

இன்று நமது அரசியலில் ஒரு மாற்றம் ஏற்படுத்தப்பட்ட தோற்றப்பாடு இருக்கின்றது. அது சில சாதக விளைவுகளைத் தரக்கூடிய சில அடையாளங்கள் தெரிகின்றன. எனவே, இவ்வாறான தவறான புரிதல்களை நிரந்தரமாக களைவதற்கு அரசியல், சமூக ரீதியாக நாம் எதிர்காலத்தில் செய்யப்போகும் பங்களிப்புக்கள் என்ன?

இவைகள் தொடர்பாக நாம் விரிவாக ஆராயவேண்டும்.

Read more...

Saturday, April 13, 2019

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 4 + 5 வை எல் எஸ் ஹமீட்

சாதாரண சட்டங்களால் கையாளப்படவேண்டிய சிறிய குற்றங்கள்கூட பயங்கரவாதக் குற்றங்கள்

ஐ நா மனித உரிமை உயரதிகாரி ( Special Rapporteur on the promotion and protection of human rights and fundamental freedoms while countering terrorism) அரசுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் “வழமையாக சாதாரண சட்டங்களால் கையாளக்கூடிய சிறிய குற்றங்களைக்கூட ( ஒருவருடைய உயிருக்கு ஆபத்துவிளவிக்கக்கூடிய செயல், சுகாதாரத்திற்கு பாரதூரமான கேடுவிளைவிக்கக்கூடிய செயல், அத்தியாவசிய பொருட்கள், சேவைகளுக்கு இடையூறு விளைவித்தல்) இச்சட்டத்தின் கீழ் பயங்கரவாத குற்றமாக குறிப்பிடப்பட்டுள்ளது; என சுட்டிக்காட்டியுள்ளார்.

உதாரணமாக, ஹர்த்தால்கள் இடம்பெறும்போது வாகனங்களைத் தடைசெய்வதற்காக வாகனங்கள் வரும்போது மரக்கட்டைகளைகளை சிலநேரங்களில் ரோட்டில் உருட்டிவிடப்படுவதைக் காணுகின்றோம். இது குற்றம்தான். ஆனால் பயங்கரவாதமாகுமா? இது சாதாரணசட்டத்தினால் கையாளமுடியாதா?

புதிய சட்டத்தின்கீழ் ‘ வாகனம் வரும்போது அவ்வாறு மரக்கட்டையை உறுட்டிவிட்டது, வாகனத்திற்கு விபத்தை ஏற்படுத்தி உயிராபத்து விளைவிக்கக்கூடியது, என்று இச்சட்டத்தின்கீழ் கைதுசெய்ய முடியும்.

இங்கு பொலிசார் விரும்பினால் இக்குற்றத்திற்கு சாதாரண சட்டத்தின்கீழும் கைதுசெய்ய முடியும், புதிய பயங்கரவாத சட்டத்தின்கீழும் கைதுசெய்யமுடியும். இதுபோன்ற விடயங்களால்தான் திரு G L பீரிஸ் அவர்கள் இச்சட்டம் ஒரு பொலிஸ் ராஜ்ஜியத்திற்கு இட்டுச் செல்லும்; என்று தெரிவித்திருக்கின்றார்.

மட்டுமல்ல, அவ்வாறு மரக்கட்டைகள் போட்டு ரோட்டு தடைசெய்யப்பட்டுள்ளது. இப்பொழுது அத்தியாவசியமான உணவுப்பொருளை ஏற்றிக்கொண்டு ஒரு லொறி வந்து செல்லமுடியாமல் தடைப்பட்டிருக்கின்றது; என வைத்துக் கொள்வோம்.

இவ்வாறான நிகழ்வுகள் ஹர்த்தாலின்போது வழமையாக காணுகின்ற விடயம். அவ்வாறான சூழ்நிலையில் சாதாரணமாக பொலிசார் வந்து கட்டைகளை நீக்கி லொறி போவதற்கு வழிசெய்வார்கள். சில நேரங்களில் அங்கு வேடிக்கை பார்த்து நிற்கும் சிலரைக் கைதுசெய்து கொண்டுசென்று சில மணித்தியாலங்களில் விடுதலை செய்வார்கள்.

இவை நாம் சாதாரணமாக காணுகின்ற விடயம். புதிய சட்டத்தின்கீழ் அவ்வாறு வேடிக்கை பார்த்தவர்களைக்கூட பயங்கரவாத குற்றமிழைத்தவர்களாக கைதுசெய்யமுடியும். அதாவது “ அத்தியாவசிய சேவை விநியோகத்திற்கு இடையூறு விளைவித்தமை” என்ற அடிப்படையில்.

உண்மையில் கட்டை போட்டவர்கள் ஓடிவிடுவார்கள். வேடிக்கை பார்த்தவர்கள் மாட்டுப்படுவார்கள். ஆனால் நாங்கள் கட்டை போடவில்லை, வேடிக்கைதான் பார்த்தோம்; என பின்னர் நீதிமன்ற விசாரணையின் போதுதான் நீங்கள் நிறுவமுடியும். அதற்குமுன் கைது, தடுப்புக்காவல் என்று அனைத்தையும் அனுபவிக்க வேண்டும்.

எனவேதான் இது ஒரு பயங்கர சட்டம்; என்று எல்லோரும் எதிர்க்கிறார்கள்.

கைது செய்யும் அதிகாரம்

தற்போதைய PTA யின் கீழ் ஒரு பொலிஸ் அத்தியட்சகர் அல்லது அவரது எழுத்துமூல அதிகாரத்தின்கீழ் ஒரு S I தரத்திற்கு குறையாத ஒரு பொலிஸ் உத்தியோகத்தரே கைது செய்யமுடியும். புதிய CTA யின்கீழ் பொலிசார், முப்படையினர் மாத்திரமல்ல, கரையோர காவற்படையினரும் பயங்கரவாத குற்றச்சாட்டின்கீழ் கைதுசெய்ய முடியும்.

யுத்த காலத்திலேயே போலீசாருக்கு மட்டும் இருந்த அதிகாரம் யுத்தம் இல்லாதபோது இவ்வளவு பேருக்கும் எதற்காக? நோக்கம் என்ன? இதனை ஆதரிக்க வேண்டுமா? எதிர்க்க வேண்டுமா?

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 5 Counter Terrorism Bill and Its Impact-Part 5

பாகம் 4 இல் பயங்கரவாத குற்றமாக மேற்படி சட்டத்தில் கருதப்படக்கூடிய சில விடயங்களைப் பார்த்தோம்.

அதில் சாதாரண சட்டங்களால் கையாளப்படக்கூடிய சாதாரண அல்லது சிறிய குற்றங்களைக்கூட பயங்கரவாத குற்றமாக இச்சட்டத்தின்கீழ் கருதமுடியுமெனப் பார்த்தோம்.

பிரிவு 13இல் அக்குற்றங்களை இழைப்பதற்கு ஆயத்தம் செய்கிறார், அல்லது உதவுகிறார், என்று ஒருவருக்கு நம்புவதற்கு காரணம் இருந்தும் அந்தத்தகவலை அவர் அருகேயுள்ள பொலிசிற்கு அறிவிக்காவிடின் அதுவும் பயங்கரவாதக்குற்றமே!

அதாவது X என்பவர் ஒரு பயங்கரவாத குற்றத்தைப் புரியப்போகிறார் அல்லது புரியப்போகின்றவருக்கு உதவுகிறார். அவ்வாறு Y நம்புவதற்கு காரணம் இருக்கின்றது; என பொலிசார் நினைக்கின்றனர். ஆனால் Y பொலிசுக்கு தகவல் வழங்கவில்லை. இப்பொழுது அவர் இப்பயங்கரவாத சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்படலாம்.

இங்கு, குற்றவாளியா இல்லையா என முதலில் பொலிசார்தான் தீர்மானிக்கிறார்கள். அதன்பின் தடுப்புக்காவல் போன்ற அனைத்து வேதனைகளையும் அனுபவித்தன்பின் நீதிமன்றத்தில் நியாயங்களை முன்வைத்து விடுதலைபெற முயற்சிக்கலாம்.

சுருங்கக்கூறின் அருவாக்காட்டு குப்பை கொட்டுவதற்கெதிரான ஆர்ப்பாட்டத்தில் சிலவேளை யாராவது பஸ்ஸிற்கு கல்லெறிந்தால் அவரை பயங்கரவாதியாக கருதலாம். அல்லது கல்லெறிய அவர் நினைத்தும் பார்த்திருக்க மாட்டார்; ஆனாலும் அவர் கல்லெறிய ஆயத்தம் செய்தார்; என கைதுசெய்யலாம். மட்டுமல்ல, இவர் கல்லெறியப்போகிறார்; என்பது இன்னொருவருக்குத் தெரிந்தும் அவர் பொலிசாருக்குத் தகவல் தெரிவிக்கவில்லை; என அவரையும் கைதுசெய்யலாம். இவர்கள் எல்லோரும் பயங்கரவாதிகளே!

ஐ நா மனித உரிமை உயரதிகாரி குறிப்பிடும்போது, பொலிசார், கடலோர காவல் படையினர் மற்றும் முப்படையினர் பல தரப்பட்ட செயற்பாடுகளை பயங்கரவாதமாகவும் அவற்றோடு நேரடியாக அல்லது மறைமுகமாக சம்பந்தப்பட்டார்; என ஒருவரை இச்சட்டத்தின்கீழ் கைதுசெய்ய முடியும்; எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், உண்மையான பயங்கரவாதக் குற்றங்களே பயங்கரவாதமாக கருதப்பட வேண்டும். இவ்வாறான சட்டங்கள மூலம் மனித உரிமைகள் கட்டுப்படுத்தப்படும்போது, ஒரு குற்றம் ஏன் பயங்கரவாதமாக கருதப்படவேண்டும், அதற்குரிய சட்டப்பின்னணி என்ன? அந்தக்குற்றம் பயங்கரவாதமாக கருதப்படவேண்டிய அளவு முக்கியமானதா/ பாரதூரமானதா? என்பவை சர்வதேச மனித உரிமை சட்டங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டும்; எனவும் தெரிவித்திருக்கின்றார்.

பிரிவு 14 இன்கீழ் ஒரு பயங்கரவாத குற்றத்தை விசாரிக்கின்ற ஒரு பொலிஸ் அதிகாரி இன்னுமொருவரிடம் அது தொடர்பாக சில தகவல்களைக் கோரும்போது அவர் பிழையான தகவல்களை வழங்கினார்; என சந்தேகித்தால் அவரையும் கைதுசெய்யமுடியும். அவரும் பயங்கரவாதியே!

அதேநேரம் பிரிவுகள் 15 மற்றும் 27 இன்கீழ் பொலிசார், கடலோர காவல் மற்றும் முப்படையினர் பயங்கரவாதக் குற்றம் புரிந்தார்; என்ற குற்றச்சாட்டில் வாறண் இல்லாமல் யாரையும் கைதுசெய்ய முடியும், அவை உண்மையான பயங்கரவாதக்குற்றமாக இல்லாதபோதிலும்கூட.

பிரிவு 17 மேற்படி தரப்பினருக்கு கைதுசெய்வதற்கு அதீத அதிகாரத்தை வழங்குகின்றது.

பிரிவு 27 இன்கீழ் கைதுசெய்யப்பட்ட ஒருவர் 48 மணித்தியாலத்திற்குள் நிதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட வேண்டும். அவருக்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவரால் தடுப்புக்காவல் உத்தரவு வழங்கப்பட்டிருக்குமாயின் அதனை அங்கீகரித்தே ஆகவேண்டும்.

இங்கு நீதிபதிக்கு முடிவெடுக்கும் அதிகாரம் இல்லை. இதேபோன்றதொரு நிலை பிரிவு 39(4) இன் கீழும் காணப்படுகின்றது.

இவ்விடயங்கள் குறித்து ஐ தா மனித உரிமை அதிகாரி குறிப்பிடும்போது, ஒருவர் இச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்படும்போது அவருக்குத் தடுப்புக்காவல் உத்தரவு பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவரால் வழங்கப்பட்டால் அவ்வாறு தடுப்புக்காவல் அவசியமா? அது சட்டத்திற்கு ஏற்புடையதா? அது அவர் செய்த குற்றத்திற்கு பொருத்தமானதா? என்பவற்றைத் தீர்மானிக்கக்கூடிய முழுமையான அதிகாரம் நீதித்
துறைக்கில்லை; எனத் தெரிவித்திருக்கின்றார்.

(தொடரும்)

Read more...

Saturday, April 6, 2019

கொழுந்துவிட்டெரியும் பிரதேசவாதத்தீயை அணைக்க முடியாதா? இப்பிரச்சினையைத் தீர்க்க முடியாதா? வை எல் எஸ் ஹமீட்

சாய்ந்தமருது உள்ளூராட்சி கோரிக்கையினால் எழுந்த சூடான சூழ்நிலையில் சில நியாயங்களைப் புரியவைப்பதற்காக பல ஆக்கங்களை எழுதியிருக்கின்றேன். சில நியாயங்களை எழுதுவதைத் தவிர்ந்துகொண்டேன். ஏனெனில் அவை நியாயங்களாக, யதார்த்தங்களாக இருந்தபோதிலும் இவ்விடயம் உணர்வுகளோடும் சம்பந்தப்பட்டது; உணர்ச்சி வசப்பட்டநிலையில் அங்கு subjective பார்வையே மேலோங்கியிருக்கும். அப்பொழுது நியாயங்களும் சிலவேளை பிழையாகத் தெரியும்.

இந்நிலையில், யாருடைய உள்ளத்தையும் புண்படுத்திவிடக்கூடாது; என்ற ஒரு எண்ணப்பாட்டில் அந்நியாயங்களை எழுதுவதைத் தவிர்ந்துகொண்டேன். ஆனாலும் உள்ளூராட்சி தேர்தலுக்குப்பின் ஓரளவு அமர்ந்திருந்த சூழ்நிலை மீண்டும் உசுப்பிவிடப்பட்ட நிலையில் சில யதார்தங்கள் வெளிப்படையாக எழுதப்பட்டே ஆகவேண்டும்; ஒரு சில, எந்த யதார்த்தங்களையும் ஏற்றுக்கொள்ள மறுக்கும் கடும்போக்காளர்கள் சிலவேளை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் நேர்மையாக சிந்திக்கின்ற படித்த, இரு ஊர்களின் சுமூக உறவை யாசிக்கின்ற சாய்ந்தமருது மக்கள் புரிந்துகொள்வார்கள்; என்ற நம்பிக்கையில் எழுதுகின்றேன்.

இப்பிரச்சினை உருவாக்கப்பட்டது அரசியல்வாதிகளால், அதற்கு மீண்டும் உயிர்கொடுத்திருப்பதும் அதே அரசியல்வாதிகளே, என்பதை கடந்த பதிவில் சுட்டிக்காட்டியிருந்தேன்.

அதேநேரம் அரசியல்வாதிகளுடனான பிரச்சினை சக ஊருக்கெதிரான பிரச்சினையாக மாற்றப்பட்டதையும் அவ்வாக்கத்தில் மேலெழுந்தவாரியாக சுட்டிக்காட்டியிருந்தேன்.

அரசியல்வாதிகளுடனான பிரச்சினை, அவர்களுக்கெதிரான கோபம், போராட்டம் அனைத்தும் நியாயமானதே! ( வன்முறையைத்தவிர), ஆனால் அவை ஊர்களுக்கெதிரான பிரச்சினையாக உருமாறி சிலர் இதயத்தில் சீல் வைக்கப்பட்டவர்களைப்போன்று எந்த நியாயங்களையும் ஏற்றுக்கொள்ள ஆயத்தமில்லாமல் அரைத்த மாவையே அரைத்து துவேசத்தைக் கக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

மறுபுறம், சில நியாயமாக சிந்திக்கக்கூடிய, நிதானமாக முகநூல்களில் எழுதக்கூடிய சகோதரர்கள்கூட, மற்றவர்களைப்போன்று துவேசமாக, வக்கிரமாக எழுதாதபோதும் தங்களது உரிமையை, நியாயமான கோரிக்கையைப் பெற்றுக்கொள்ள அடுத்த ஊர் தடையாக இருக்கிறதே; என்ற ஆதங்கத்தை அவ்வப்பொழுது மிகவும் நாகரீகமாக வெளிப்படுத்துகிறார்கள்.

இவர்கள் இவ்வாறு நினைப்பதற்கு பிரதான காரணம் இந்த சபையைப் பெற்றுக்கொள்வது தங்களது “உரிமை”, அது “நியாயமான கோரிக்கை”, என்று நம்புகிறார்கள். அவ்வாறு பிரச்சாரகாரர்களால் நம்பவைக்கப்பட்டிருக்கின்றார்கள்; எந்த அளவு என்றால் வெளியூரில் உள்ளவர்கள்கூட அது அவர்களது உரிமை, நியாயமான கோரிக்கை; என்று கருத்துத்துத் தெரிவிக்குமளவு செய்யப்பட்டிருக்கின்றது.

ஏன் கல்முனையில் இருந்து எழுதுகின்ற சகோதரர்கள்கூட அது உங்களது உரிமை, நியாயமான கோரிக்கை, ஆனால் எங்களுக்கு இவ்வாறான ஒரு பிரச்சினை இருக்கின்றது; எனவே நான்காகப் பிரிக்கவேண்டும்; என்கிறார்கள்.

இதனைக்கேட்கின்றவர்கள் உங்களுடைய பிரச்சினையை நீங்கள் பாருங்கள்; எங்களை நாங்கள் ஆளவேண்டும்; எனக் கேட்பது எங்கள் உரிமை; உங்களது எல்லைப் பிரச்சினை ஒருபோதும் தீர்க்கமுடியாது; எங்களுக்கு எல்லைப் பிரச்சினை இல்லையே!; அப்படியானால் எங்களது பழைய எல்லையைத் தருவீர்களா?, கல்முனையைப் பாதுகாப்பதற்கு எங்களது உரிமை, எங்களது நியாயமான கோரிக்கையைத் தாமதிக்கவேண்டுமா? சாய்ந்ததருது பிரிந்தாலும் மருதமுனை, நற்பிட்டிமுனை இருக்கிறது; அவர்களின் துணையுடன் கல்முனையைப் பாதுகாக்கலாம்; ( அதாவது தமிழர்களைவிட ஆசன எண்ணிக்கை கூடுகிறது; இந்த ஊர்கள் இணையும்போது); எனவே, எங்களது உரிமையை, எங்களது நியாயமான கோரிக்கையை முதலில் நிறைவேற்றுங்கள்; என்ற வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இளைஞர்களும் இந்தக் கோணத்தில் மூளைச்சலவை செய்யப்படுவதால் இந்த இரண்டு ஊர்களுக்குமிடையில் ஒரு பாரிய நிரந்தர வெடிப்பு வந்துவிடுமோ என்று அச்சமாக இருக்கிறது.

இந்நிலையில் சபை பெறுவது உரிமையா? அது நியாயமான கோரிக்கையா? அல்லது வெறும் அபிலாஷை அல்லது விருப்பம் என்ற சொற்பதங்களுக்குள் உள்ளடக்கப்படவேண்டியதா? என்பதை 21ம் நூற்றாண்டில் வாழுகின்ற நாம் அறிவியல்ரீதியாக சற்று ஆராயவேண்டும்.

இதன் நோக்கம் தனிச்சபைக் கோரிக்கையை மழுங்கடிப்பதல்ல. தனிச்சபைக் கோரிக்கையினால் ஏற்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் பிரதேசவாத வெறியையும் ஆவேசத்தையும் தணிப்பதுடன் ஒருவர் தன்அபிலாஷையை, விருப்பத்தை அடுத்தவருக்குப் பாதிப்பில்லாமல் அடைய ஒரு கூட்டுமுயற்சியில் ஈடுபடத்தூண்டுவதாகும்.

உரிமையா?

தனிச்சபை பெறுவது “ உரிமை” என்றால் அது எந்த அடிப்படையில்? இது முதலில் ஆராயப்பட வேண்டும்.

1987இற்குமுன் தனிச்சபை இருந்தது; எனவே அதை மீண்டும் பெற்றுக்கொள்வது நம் உரிமை என்கிறீர்களா?அப்படியானால் அன்று நாடுபூராகவும் பிரேமதாசவின் திட்டத்தின்கீழ் இணைக்கப்பட்ட அனைத்து சபைகளுக்கும் அந்த உரிமை இருக்கவேண்டும்.

ஒருவருக்கு உரிமை இருந்தால் அந்த உரிமையை வழங்க கடமைப்பட்ட ஒருவர் இருப்பார். உதாரணமாக நாம் நமது வீட்டில் நிம்மதியாக தூங்குவது நமது உரிமை. எனவே, அடுத்த வீட்டுக்காரன் நம்மைத் தொந்தரவு செய்யுமளவு வானொலியின் சத்தத்தையோ, வேறு ஒலிகளையோ எழுப்பாமல் நமது அமைதியை உறுதிப்படுத்துவது அவன் கடமை. அவன் தவறும்போது அவனுக்கெதிராக சட்டநடவடிக்கை எடுக்கலாம்.

அதேபோன்று, சபை பெறுவது நமது உரிமையானால் அதைத் தருகின்ற “ கடமை” அரசுக்கு இருக்கவேண்டும். அவ்வாறாயின் அன்று நாட்டில் இணைக்கப்பட்ட அனைத்து சபைகளையும் வழங்கவேண்டிய கடமை அரசுக்கு இருக்கவேண்டும். அது சரியா? அன்று இணைத்தது; அரசின் கொள்கையோடு சம்பந்தப்பட்டது.

எனவே, அன்று நாம் தனிச்சபையாக இருந்ததனால் இன்று தனிச்சபை கேட்பது உரிமையாகாது. அவ்வாறாயின் அது சகலசபைகளுக்கும் இருக்கவேண்டும்.

தகுதி உரிமையா?

எங்கள் சனத்தொகை, பிரதேச செயலகம், வங்கிகள் போன்ற ஒரு நகரசபையாகத் தேவையான அனைத்து தகுதிகளும் எங்களுக்கு இருக்கின்றது. எனவே சபை பெற்றுக்கொள்வது எங்கள் உரிமையில்லையா? என்பது அடுத்த கேள்வி.

இவை இருந்தால் அது உரிமையல்ல. அது eligibility. உதாரணமாக ஒரு வருடத்தில் பல்லாயிரக்கணக்கான மாணவர் பல்கலைக்கழகம் செல்ல தகுதி பெறுகிறார்கள். ( eligibility) ஆனால் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. Eligibility உரிமையானால் பல்கலைகழகம் கட்டாயம் கிடைக்கவேண்டும். கிடைக்கின்றதா?

ஒரு குறித்த பதவி வெற்றிடத்திற்கு தகைமையுள்ள பலர் விண்ணப்பிக்கின்றனர். அனைவருக்கும் eligibility இருக்கின்றது. எல்லோருக்கும் கிடைப்பது உரிமையா? எனவே, சபைபெற தகமை இருக்கின்றது; என்பதனால் அது உரிமையாகிவிடாது.

சம உரிமை ( equal right)

இதே தன்மையுள்ள எல்லோருக்கும் அந்தத் தகைமை இருக்கின்றது; என்ற ஒரே காரணத்திற்காக வழங்கிவிட்டு நமக்குத் தராவிட்டால் அப்பொழுது சம உரிமை பாதிக்கப்பட்டிருக்கின்றது. எனவே, அதனைப் பெறுவது நம் உரிமை எனலாம். அவ்வாறாயின் கொழும்பு மாநகரசபை எத்தனை சபைகளாக பிரிக்கப்பட வேண்டும். எனவே, இங்கு சம உரிமையும் பாதிக்கப்படவில்லை.

நம்மை நாமே ஆளுவது நமது உரிமை இல்லையா?

இது அடுத்த கேள்வி: உள்ளூர் ‘ஆட்சி’, ஆட்சி என்ற சொல் பாவிக்கப்பட்டாலும் இது Self-Rule என்ற அர்த்தத்தில் வருகின்ற ஆட்சியல்ல. இது சில உள்ளூர் நிர்வாகங்களை செய்வதாகும். அவ்வாறு “ ஆட்சி” என்றுதான் எடுத்துக்கொண்டாலும் அந்த உரிமை ஒவ்வொரு ஊருக்கும் அல்லது குறித்த தகமையுள்ள எல்லா ஊர்களுக்கும் உள்ளதா? என்ற கேள்வியை எழுப்பினால் மேல் கூறப்பட்ட விடைகளுக்குள்ளேயே செல்லவேண்டி ஏற்படும்.

தம்மைத் தாமே ஆளும் உரிமை என்பது “ சுய நிர்ணய உரிமையுடன் சம்பந்தப்பட்டது” ஒவ்வொரு ஊருக்கும் தனித்தனி சுயநிர்ணய உரிமை இருக்கின்றதா? அவ்வாறு இருந்தால் உள்ளூராட்சி சபையல்ல, மாகாணசபையல்ல, ஆகக்குறைந்தது Nation State வரையாவது செல்லலாம்.

எனவே, இங்கு “உரிமை”என்ற சொல் பொருத்தமற்றது; என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இங்கு “ உரிமை, உரிமை” என்கின்ற உணர்வு இளைஞர்களுக்கு ஊட்டப்படுகின்றபோது அது அடுத்த ஊருக்கெதிராக ஒரு பிரதேசவாத வெறியாக மாறுகிறது. அடுத்த ஊர் அந்த உரிமையைத் தடுக்கின்றது; என்ற அடிப்படையில். இதைப்பற்றி சிந்திப்போம் சகோதரர்களே!

நியாயமான கோரிக்கை


“நியாயமான கோரிக்கை” என்ற பதம் பொருத்தமா?

நியாயம் அல்லது நீதி கோருவது பிரதானமாக இரண்டு அடிப்படையில். ஒன்று நடந்த அநீதிக்கு தீர்வு அல்லது நீதி கேட்பது. இரண்டு நடக்கப்போகும் அநீதியைத் தடுக்க தீர்வு கேட்பது.

1987 இல் இணைத்தது அநீதி என்கிறோமா? அவ்வாறாயின் அது முழு நாட்டுக்கும் பொருந்தும் என்பது ஒரு புறமிருக்க, கல்முனையில் இணைத்த அனைத்து சபைகளுக்கும் அது பொருந்தவேண்டுமே! அவ்வாறாயின் கல்முனையும் தனது அன்றைய சபையைக் கேட்பது நியாயமாகத்தானே இருக்கவேண்டும். அவ்வாறு கல்முனைக்கு வழங்காமல் அடுத்த ஊருக்கு வழங்கினால் அது அநியாயமில்லையா? சம உரிமை மீறப்படாதா?

எனவே, எங்கு பாவிக்கப்படவேண்டிய சொற்கள் எங்கு பாவிக்கப்படுகின்றன; என சித்தித்துப்பாருங்கள். கல்முனை, நீங்கள் பிரிக்கும்போது சம உரிமையைப் பேணுங்கள், அது எமது உரிமை, எங்களுக்கு சம உரிமையை மறுத்து அநியாயம் செய்துவிடாதீர்கள்; என்று அரசிடம் விடுக்கும் நியாயமான கோரிக்கையைப் பார்த்து ஏன் கோபப்படுகிறோம்; சகோதரர்களே!

புரிகின்றதா நாம் தவறான பாதையில் செல்கின்றோம்; அர்த்தமில்லாமல் இரு ஊர்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்த முற்படுகிறோம்; என்று.

மதப்பற்று என்பது தன் மதம் சிறக்கவேண்டுமென நினைப்பது, செயற்படுவது. மதவாதம் என்பது அடுத்த மதத்தவர்களை நசுக்கி தன் மதத்தவர்களை வாழவைப்பது.

ஊர்ப்பற்று என்பது தன்னூர் சிறக்கவேண்டுமென நினைப்பது. ஊர்வாதம் என்பது அடுத்த ஊரை நசுக்கி, அதற்கு அநியாயம் செய்து தன் ஊரை வாழவைக்க முயல்வது.

தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள், மேலே கூறியிருப்பவை உங்கள் கோரிக்கை தொடர்பாக அல்ல. மாறாக கோரிக்கையும் உரிமையென்றும் நியாயமென்றும் அடுத்த ஊர் அந்த உரிமையை, நியாயமான கோரிக்கையைத் தடுக்கிறார்கள்; என்றும் இரு ஊர்களுக்குள்ளும் ஏற்படுத்தப்படும் பிளவுகள் தொடர்பானதாகும்.

கோரிக்கை

இப்பொழுது கோரிக்கை தொடர்பாக பார்ப்போம்

குறித்த கோரிக்கைக்குப் பொருத்தமான பதம் ‘ அபிலாஷை, விருப்பம்’ என்பதாகும். உதாரணமாக தம்மைத்தாமே ஆள தமிழர்கள் அதிகாரம் கேட்பது அவர்களது அபிலாஷை, தனிநாடும் அவர்களது அபிலாஷை. சமஷ்டியும் அவர்களது அபிலாஷை. அபிலாஷைகள் எல்லாம் உரிமையல்ல. அபிலாஷைகள் நியாயமாக இருக்கலாம், இல்லாமல் இருக்கலாம்.

அவர்களின் அபிலாஷையான தனிநாட்டை அரசு ஏற்கவில்லை. சமஷ்டியை சிலர் ஏற்கின்றனர். சிலர் மறுக்கின்றனர். அதேபோன்று அதிகாரப்பகிர்வும். அதனால்தான் அதிகாரப்பகிர்வுடன் சேர்த்து தமது சுயநிர்ணய உரிமையையும் அங்கீகரிக்க வேண்டுமென்று தமிழர்கள் கோருகின்றனர். அப்பொழுது அவையனைத்தும் அவர்களது உரிமையாகிவிடும்.

எனவே, உரிமை என்ற சொல்லைப் பாவித்து ஊர்களைப் பிரித்துவிடாமல் இருப்போம். நமது அபிலாஷைக்கு யாரும் எதிர்ப்பில்லை. ஒற்றுமையாக அடைய முயற்சிப்போம். வீண் வாதங்களை ஓரம் கட்டுவோம்.

எங்களது பழைய எல்லையைத் தருவீர்களா?

தமிழர்கள் கேட்கும் எல்லையை வழங்க முடியாது; என்று ஒரு ஊர் சொன்னால் அடுத்த பக்கம் அப்படியானால் எங்களது பழைய எல்லையைத் தருவீர்களா? என்கிறார்கள்.

அவ்வாறாயின் தமிழர் கேட்கின்ற மொத்த town ஐயும் உங்களது சபைக்காக தாரைவார்க்க வேண்டுமென்கிறீர்களா? இவ்வாறு கூறுவதற்கு கலிமாச்சொன்ன ஒரு சகோதர முஸ்லிமுக்கு மனசு வருகின்றதா?

அதேநேரம், உள்ளூராட்சி எல்லையைப் பொறுத்தவரை அவ்வாறு பழைய எல்லையென்ற பிரச்சினை கல்முனை- சாய்நதமருதில் இல்லை; என்பதை அறிவீர்களா? 1987இலும் இன்றும் ஒரே எல்லைதான் என்பது தெரியுமா?

நீங்கள் கூறும் எல்லை குறிச்சியோடு அதாவது பிரதேச செயலகத்தோடு சம்பந்தப்பட்டது. குறிச்சிக்கும் வட்டாரத்திற்கும் வித்தியாசம் புரியாதவர்களா முகநூலில் பிரதேசவாதம் பேசுகிறார்கள்?

இந்த குறிச்சி எல்லைப் பிரச்சினையில் எதுவித பங்குமில்லாமல் பழி சுமந்தவன் நான்; இல்லை, வேண்டுமென்று அரசியலுக்காக வக்கிரத்தனமாக பழி சுமத்தப்பட்டவன் நான். ( இது தொடர்பாக ஏற்கனவே தெளிவுபடுத்தியிருக்கின்றேன்) மாகாணசபையில் மக்களின் வாக்குகளைப் பெற்றவர்கள் உயிருக்கு அஞ்சி நாட்டைவிட்டு வெளியேறிய நிலையில் ஒரு தசாப்தத்திற்குமேல் தலைவரின் செயலாளராக சாய்ந்தமருது மக்களுக்கு தோள்கொடுத்த ஒருவன்.

எனது அரசியல் அனுபங்களை ஒரு தொடராக எழுதவேண்டும்; என்ற எண்ணம் இருக்கின்றது; இன்ஷாஅல்லாஹ், அப்பொழுது பல விடயங்களை இளைய தலைமுறை அறிந்துகொள்ளமுடியும். சாய்ந்தமருது மார்க்கட் குண்டுவெடிப்பின்போது, அல்லது S T F சாய்ந்தமருது கடற்கரையில் நின்றவர்களை கொத்தாக அள்ளிச்சென்றபோது, மாளிகைக்காட்டில் பணம்கொடுக்காமல் மீன் பறித்த பொலிசாருக்கும் மீனவர்களுக்கும் கைகலப்பேற்பட்டபோது, இவ்வாறு இன்னும் எத்தனையோ இக்கட்டான சூழ்நிலைகளில் களத்தில் நின்றது யார்; என்பது புரியும்.

மறைந்த தலைவர் ஒருமுறை அம்பாறை பங்களாவில் வைத்துக் கூறினார், “ சாந்ந்தமருது- கல்முனை பிரதேசவாதத்தை வை எல் எஸ் ஹமீட்டை வைத்தே உடைக்க வேண்டுமென்று சொன்னார்”. அதை அங்கு சிலர் கேட்டுக்கொண்டு நின்றார்கள். அதுதான் வினையானது. பழிசுமத்தியவர்களுக்கு தீர்ப்புக்கொடுக்க அல்லாஹ் போதுமானவன்.

சாய்ந்தமருது பிரிந்தாலும் கல்முனைக்குப் பாதிப்பில்லை.

இது அடுத்த வாதம். அன்புள்ள சகோதரர்களே, எதைவைத்து இதைச் சொல்கிறீர்கள். மருதமுனை, நற்பிட்டிமுனையை வைத்துத்தானே! உண்மையில் மருதமுனை, நற்புட்டிமுனை சகோதரர்கள் கல்முனைமீது எப்போதும் அக்கறைகொண்டவர்கள்; என்பது வேறுவிடயம். ஆனால் அருகேயுள்ள, சுமார் 40% திருமண உறவுகளால் பின்னிப் பிணைந்த ஊரே கல்முனைக்கு என்ன நடந்தால் என்ன, எங்களது கோரிக்கை நிறைவேறினால்போதும்; என்று நினைக்கும்போது மருதமுனையும் நற்பிட்டிமுனையும் தங்கள் அரசியல் நிலைப்பாடுகளை உதறித்தள்ளிவிட்டு ஒவ்வொரு உள்ளூராட்சித் தேர்தலிலும் கல்முனையைப் பாதுகாக்க கல்முனையுடன் இணைந்து அரசியல் நிலைப்பாடுகளை எடுப்பார்கள்; என்று எதிர்பார்ப்பது நியாயமா?

எத்தனை கட்சிகள். எத்தனை நிலைப்பாடுகள். இவைகள் அனைத்தும் உதறித்தள்ளப்படும் என நினைக்கிறீர்களா? கடந்த உள்ளூராட்சிசபைத் தேர்தலில் சாயந்தமருது பிரிந்தாலும் கல்முனைக்குப் பாதிப்பதில்லை; என நிரூபித்ததாக கூறுகிறீர்கள். அனைத்தையும் தலைகீழாக கூறுகிறீர்கள்.

அவ்வாறெனில் ஏன் தமிழ்த்தரப்பின் ஒரு பிரிவுடன் இணைந்து ஆட்சியமைக்கவேண்டியேற்பட்டது, வாக்களிக்காமல் இருந்தவர்கள் எத்தனைபேர்? என்பதையெல்லாம் சிந்தித்தீர்களா? இவர்களை நம்பி பல ஆயிரம் கோடி கல்முனையில் முஸ்லிம்களின் சொத்துக்களை ஆபத்தில் விடவேண்டுமா?

கல்முனை மாநகரைப் பாதுகாக்கும் பொறுப்பு கல்முனையிடமே இருக்க வேண்டும்


ஒன்றில் தற்போதைபோல் ஒன்றாக இருக்க வேண்டும். பிரிவதாயின் ஒரு சிறிய risk ஐக் கூட கல்முனை ஏற்கமுடியாது. அந்தவகையில் பிரிவதாயின் கல்முனை மாநகரைப் பாதுகாக்கும் பொறுப்பு கல்முனையிடமே இருக்க வேண்டும். அப்பொழுது அவர்களது கட்சி அரசியலை, மாகாண, பொதுத்தேர்தலின்போது பார்த்தாலும் மாநகரசபைத் தேர்தலில் கட்சி வேறுபாடுகளுக்கப்பால் ஒன்றுபடுவார்கள்.

கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் அத்தனை கட்சிகள் போட்டியிட்டும் சுமார் 75% ஒற்றுமைப்படவில்லையா? ஒற்றுமைப்பட்டும் தமிழ்தரப்பின் தயவுடன்தானே ஆட்சிபிடிக்க முடிந்தது. மாநகரசபை கல்முனையின் கட்டுப்பாட்டில் இருந்திருந்தால் இந்நிலை வந்திருக்குமா? ஏன் சிந்திக்க மறுக்கின்றோம். ஏன் விதண்டாவாதம் பேசுகின்றோம்

உடனடியாக நிர்வாகம் அமைக்கமுடியுமா?

நாளை சாய்ந்தமருதுக்கு தனிச்சபை பிரகடனப்படுத்தினாலும் நாளைமறுதினம் தேர்தல் நடக்குமா? இல்லை. தேர்தலுக்கு இன்னும் மூன்று அல்லது நான்கு வருடம் போகும். அதுவரை கல்முனை மாதகரசபையுடன்தான் இருக்கவேண்டும். எனவே, இவ்வளவு கசப்பான அதீத அவசரத்தில் அர்த்தமிருக்கின்றதா?

உங்களுக்கு இரண்டு தெரிவுகள் இருக்கின்றன. நீங்கள் தெரிவுசெய்த கையாலாகாத, உங்களை ஏமாற்றிய அரசியல்வாதிகள் TNA ஐயை மீறி இப்பொழுது உங்களுக்கு எதுவும் தரப்போவதில்லை.

எனவே, ஒன்றில் அடுத்த தேர்தல்வரை பொறுத்திருங்கள். தேர்தலில் இந்த கையாலாகாதவர்கள் அனைவரையும் துரத்திவிட்டு ஒரு புதிய நெஞ்சுரமுள்ள அணியை உருவாக்க முயற்சியுங்கள். அதனை நீங்கள் தனியாக செய்யமுடியாது. ஏனைய ஊர்களுடனும் முடிந்தால் மொத்த மாவட்டத்துடனும் பேசுங்கள். அம்பாறை மாவட்ட மொத்தப் பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு முன்மாதிரியாக இருங்கள்.

அல்லது இந்த நான்கு ஊர்களும் அவசரமாக பேசுங்கள். அடுத்த பொதுத்தேர்தலில் ஒரு சுயேட்சைக்குழுவை இறக்க முயற்சி செய்யுங்கள். இப்பொழுதே வேட்பாளர்களைத் தேடுங்கள். அந்த செய்தி இந்த கையாலாகத தலைவர்களுக்குப் போனால்போதும், ரணிலின் காலில் விழுவார்கள் தங்கள் அரசியல் இருப்பைப் பாதுகாத்துக்கொள்வதற்காக.

இந்த ஆலோசனையை உள்ளூராட்சித் தேர்தலுக்குமுன்பும் முன்வைத்திருந்தேன். அன்று இந்த நான்கு ஊர்களும் இணைந்து ஒரு சுயேட்சையை நிறுத்த முற்பட்டிருந்தால் அப்பொழுதே பிரச்சினை தீர்ந்திருக்கும். ஆனால் பிரிந்து ஊர்வாதம் பேசினோம். கர்வம், Ego என்பவற்றிற்குள் முடங்கிக் கிடந்தோம். எதைச் சாதித்தோம். பிரிந்து நிற்கும்வரை இனியும் சாதிக்கப்போவதில்லை. இரண்டு ஊர்களும் கசப்பைத்தான் வளர்க்கும்.

பிரிவினையை நாடுவது சாய்ந்தமருது என்ற அடிப்படையில் இதில் முதல் முன்னெடுப்பை நீங்கள் செய்வது மிகவும் பொருத்தமானது.

அதேநேரம் கல்முனை பொறுப்பில்லாமல் நடந்துகொள்ள முடியாது. குறிப்பாக, அடுத்த ஜனாதிபதித் தேர்தல் நெருங்கும்போதாவது தமிழ் பிரதேச செயலகம் அவர்கள் கேட்கும் எல்லையால் வழங்கப்பட சாத்தியம் இருக்கிறது.

காரணம் TNA ஜனாதிபதித் தேர்தல் நிபந்தனையில் இதையும் முன்வைப்பார்கள். முஸ்லிம் வாக்குகள் இலவசமாக கிடைக்கும்; என அரசுக்குத் தெரியும், வட கிழக்கிற்கு வெளியே அவர்களுக்கு எழுதிவைத்த வாக்குகள். வட கிழக்கில் அருமைக் கட்சிகள் பெற்றுக்கொடுக்கும். எனவே, தமிழ்த்ரப்பைத் திருப்திப்படுத்தவே அரசு முனையும். எல்லாவற்றையும் இழக்கப்போகிறோம்.

எனவே, சாய்ந்தமருதுதான் பேசவேண்டும்; என்று எதிர்பார்க்காமல் நீங்களும் முயற்சி செய்யுங்கள். இன்னும் சொல்லப்போனால் மேலே கூறியதுபோல் இப்பிரச்சினையைத் தீர்ப்பதில் அவசரப்பட வேண்டியது சாயந்தமருதல்ல, கல்முனை.

நிர்வாகங்கள் அரசியல் வாதிகளின் பொக்கட்டிலிருந்து வெளியேறுங்கள். அரசியல்வாதிகளைத் திருப்திப்படுத்துவதை விட்டுவிட்டு ஊரைப்பாருங்கள்.

சகல ஊர் உலமாக்களே!

நீங்கள் தீனைச் சுமந்தவர்கள். மக்களுக்கு வழிகாட்டவேண்டியவர்கள். நீங்களாவது முன்வரமாட்டீர்களா இம்முன்னெடுப்பைச் செய்வதற்கு. இம்முன்னெடுப்பைச் செய்வதற்கு நீங்கள் மிகச்சிறந்தவர்கள் அல்லவா!

மருதமுனை, நற்பிட்டிமுனை நிர்வாகிகளே!

நீங்கள் இப்பிரச்சினையில் நேரடியாக சம்பந்தப்படாதவர்கள். நடுநிலையாய் இதனை முன்னெடுப்பதற்கு உங்களைவிட பொருத்தமானவர்கள் இல்லை. எனவே, முன்வருவீர்களா?

நாம் தகுதியான தலைமைத்துவங்களை, பிரதிநிதித்துவங்களை தெரிவுசெய்திருந்தால் இவ்வாறான ஒரு வேண்டுகோள் விடுக்கவேண்டி ஏற்பட்டிருக்காது. அவர்கள் எப்பொழுதோ இதனைச் சாதித்தருப்பார்கள். என்ன செய்வது நாம் எல்லோரும் அத்தவறை செய்துவிட்டோம்.

இப்பொழுது இவர்களைத் தண்டிப்பதல்ல பிரச்சினை. அதனைத் தேர்தல் வரும்போது பார்க்கலாம். இப்பொழுது நமது காரியத்தைச் சாதிக்கவேண்டும். மேலே கூறியதுபோல் ஜனாதிபதித் தேர்தலுக்குமுன் தமிழ்த்
தரப்பு அனைத்தையும் சாதிக்கும் வாய்ப்பு பலமாக இருக்கின்றது. நாம் அனைத்தையும் இழக்கும் வாய்ப்பிருக்கிறது. கண்கெட்டபின் சூரிய நமஸ்காரத்தால் பிரயோசனம் இல்லை.

இதைச் சாதிப்பதற்கு தற்போதிருக்கும் ஒரே வழி இந்த சுயேச்சை முன்னெடுப்புத்தான். கடந்தகால கசப்புகள் எதைப்பற்றியும் பேசவேண்டாம்.

கல்முனை நான்காகப் பிரிப்பு. தமிழ்ப்பிரதேச செயலகம் மூடல் அல்லது நான்கு பிரிப்பில் தமிழருக்கு தீர்க்கப்பட்ட எல்லைக்குள் ஒரு சபை, ஒரு செயலகம்.

இது உடனடியாக செய்யப்படவேண்டும். இல்லையெனில் சுயேச்சை களமிறக்கப்படும். இதுதான் கோசமாக இருக்க வேண்டும். நீங்கள் ஏற்பாடுகளைச் செய்யுங்கள். வேட்பாளர்களைத் தயார்படுத்துங்கள். ஆனால் பெரும்பாலும் சுயேச்சை இதற்காக நிறுத்தவேண்டி ஏற்படாது. அடிவயிற்றில் கைவைக்கப்போகிறார்கள் எனத் தெரிந்ததும் அனைத்தும் நடக்கும்.

இதை ஒரு பாடமாகவைத்து எதிர்காலத்தில் எல்லா ஊர்களும் தமது பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளலாம். பாம்பிற்கு மண்டையில்தான் அடிக்கவேண்டும். தயாரா?

ஒற்றுமைப்படுவோமா?

அம்பாறை மாவட்ட மொத்த முஸ்லிம்களே! இது கல்முனைத்தொகுதிப் பிரச்சினை எனப்பாராமல் சமூகப் பிரச்சினையாகப் பாருங்கள். உங்களது ஒத்துழைப்பையும் முழுமையாக வழங்குங்கள்..

Read more...

Friday, January 25, 2019

திருமலை சண்முகா ஆசிரியர் இடமாற்ற விவகாரம்- (பாகம்-2) . வை எல் எஸ் ஹமீட்

முந்திய பதிவில் குறித்த பிரச்சினையின் ஆழ, அகலத்தை அளவிட 20 கேள்விகளை அடையாளம் கண்டோம். அவற்றிற்குரிய விடையை ஆராய்வோம்.

(1) குறித்த ஆடைகளை அணிவது அவ்வாசிரியைகளின் உரிமையா?

தனிமனித சுதந்திரம்

1972ம் ஆண்டு யாப்பின் கீழ் இலங்கை ஒரு “ சோசலிச ஜனநாயக குடியரசாகும். தற்போதைய யாப்பின்கீழ் அது ஒரு “ ஜனநாயக சோசலிச குடியரசாகும்”. அதாவது தனிமனித சுதந்திரத்திற்கு கூடுதல் முக்கியத்துவம் தற்போதைய யாப்பில் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

உயிர்வாழும் உரிமை

ICCPR சரத்து 6 மனிதன் “ உயிர்வாழும் உரிமையை” ( right to life) உறுதிப்படுத்தியிருக்கின்றது. இது இலங்கையைக் கட்டுப்படுத்தும் ஒரு ஆவணமாகும்.

UDHR சரத்து 3 உம் உயிர்வாழும் உரிமையை உறுதிப்படுத்தியிருக்கின்றது. இது ஆரம்பத்தில் நாடுகளை கட்டுப்படுத்துகின்ற ஒரு ஆவணமாக இருக்கவில்லை. காரணம் இது ஒரு declaration. ICCPR ஒரு treaty. ஆனால் தற்போது UDHR ஆனது Customary International Law என்ற அந்தஸ்த்தை அடைந்திருப்பதால் அதுவும் இலங்கையைக் கட்டுப்படுத்துகின்றது.

சுருங்கக்கூறின் ஒவ்வொருவரினதும் உயிர்வாழும் உரிமையை உறுதிப்படுத்தும் பொறுப்பை இலங்கை அரசு ஏற்றிருக்கின்றது. அது இலங்கைமீது கடமையாகும். ஆனாலும் 40 வருடங்களுக்குமுன் உருவாக்கப்பட்ட இலங்கை யாப்பு இந்த உரிமை வெளிப்படையாக உறுதிப்படுத்தவில்லை. ஆனால் சட்டப்படியேயல்லாது ஒருவரின் உயிரைப்பறிக்கமுடியாது; என்று யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய யாப்பிலும் உயிர்வாழும் உரிமை வெளிப்படையாக குறிப்பிடப்படவில்லை. ஆனாலும் சட்டப்படியேயல்லாது உயிர் பறிக்கப்படக்கூடாது; என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டு யாப்பிலும் அடிப்படையில் ஒரே விசயம் வெவ்வேறு சொற்பதங்களால் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சொற்பதங்களை வைத்து இந்திய உச்ச நீதிமன்றம் “ உயிர்வாழும் உரிமையை” இந்திய யாப்பு உறுதிப்படுத்தியுள்ளதாக பல வழக்குகளில் வியாக்கியானப்படுத்தி உள்ளது.

உயிர்வாழும் உரிமையென்றால் என்ன?


இந்திய உச்சநீதிமன்றம் இந்த உயிர்வாழும் உரிமையை மிகவும் விரிவாக வியாக்கியானப் படுத்தியுள்ளது. அவ்வாறு வியாக்கியானப்படுத்தும்போது, ஒரு வழக்கில் “ மனித நாகரீகத்தின் அனைத்து சிறப்பம்சங்களையும் அது உள்ளடக்குகின்றது” என்று தெரிவித்திருக்கின்றது. ( P நல்லதம்பி என்பவரது வழக்கில்).

இன்னுமொரு வழக்கில் “ உயிர்வாழும் உரிமை என்பது “ கௌரவமாக வாழுகின்ற உரிமை “ (the right to live with human dignity) என்று தெரிவித்திருக்கின்றது. இதன் அடிப்படையில் வாழ்வின் பல அம்சங்களை பல வழக்குகளில் இந்த உரிமைக்குள் உள்வாங்கியிருக்கின்றது.

அந்த வகையில் தன் உடலை மறைப்பதற்காக மனிதன் அணியும் கண்ணியமான ஆடையும் உயிர்வாழும் உரிமையின் ஓர் அங்கமான “கௌரவமாக வாழ்வது” என்கின்ற வரையறைக்குள் வரும் என்பதில் சந்தேகமில்லை. எனவே, சுருங்கக்கூறின் “ கண்ணியமான ஆடை” என்பது மனிதன் உயிர்வாழும் உரிமையாகும்.

மதசுதந்திரம்


UDHR சரத்து 18, மதசுதந்திரத்தையும் அதனை வெளிப்படுத்துகின்ற, பின்பற்றுகின்ற உரிமையை உறுதிப்படுத்துகின்றது.

இதே சுதந்திரத்தை ICCPR சரத்து 18ம் உறுதிப்படுத்துகின்றது. அதேநேரம் அரசியலமைப்பு சரத்து 10ம் இந்த சுதந்திரத்தை உறுதிப்படுத்துகிறது. ( ஆனால் வெளிப்படுத்துகின்ற, பின்பற்றுகின்ற என்ற வார்த்தைகள் வெளிப்படையாக குறிப்பிடப்படவில்லை).

ஒரு முஸ்லிம் பெண்ணின் ஆடை


ஒரு முஸ்லிம் பெண்ணைப் பொறுத்தவரை முகத்தையும் மணிக்கட்டு வரையான கையையும் விடுத்து ஏனைய பாகங்களை மறைப்பதற்கு இஸ்லாம் கட்டளையிட்டிருக்கின்றது. எவ்வகையான ஆடையக்கொண்டு மறைக்கவேண்டும்; என்பது அவளது தனிமனித சுதந்திரம். மறைப்பது என்பது இஸ்லாம். அவளது மார்க்கம் இட்ட கட்டையின் பிரகாரம் ஆடை அணிவது அவளது மதசுதந்திரத்திற்குட்பட்டது.

அதனை மறுக்கின்ற உரிமை இந்த நாட்டு அரசுக்கே இல்லை. ஒரு பாடசாலைக்கு இருக்கமுடியுமா?

இந்த ஆடையை அணிய தடைவிதிப்பதென்பது இரு வகையான உரிமையில் கைவைக்கின்றது. ஒன்று மதசுதந்திரம். அடுத்தது உயிர்வாழுவதற்கான சுதந்திரம்.

ஐரோப்பிய நாடுகளில் போராட்டம்

இன்று மனித உரிமையின் காவலர்களாக தங்களைக் காட்டிக்கொள்ளும் சில ஐரோப்பிய நாடுகள் இந்த உரிமையில் கைவைக்க முனைந்து அந்நாட்டு நீதிமன்றங்களால் அம்முயற்சிகள் முறியடிக்கப்பட்டிருக்கின்றன. இன்னும் சில நாடுகளில் இஸ்லாமிய சகோதரிகள் எத்தனையோ இழப்புகளுக்கு மத்தியில் இந்த உரிமைக்காக போராடிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு பாடசாலையில் போய் அந்த உரிமையை இழக்கமுடியுமா?

(2) அந்த ஆடை அணிவதில் கல்வியமைச்சின் விதிமுறைகளின்கீழ் தடைகள் ஏதும் உள்ளனவா?


அவ்வாறு தடைகள் ஏதும் இல்லை. தடைகள் இருந்தால் இது சண்முகா பிரச்சினையாக இருந்திருக்காது. மாறாக கல்வியமைச்சின் விதிமுறையை மீறிய பிரச்சினையாக இருந்திருக்கும். ஆனால் நாட்டின் பல பாடசாலைகளில் முஸ்லிம் ஆசிரியைகள் இந்த ஆடையை அணிகிறார்கள். எதுவித பிரச்சினையும் இல்லை.

(3) இல்லையெனில் பாடசாலையின் மரபு, பாரம்பரியம் என்ற அடிப்படையில் தடைவிதிக்க முடியுமா?

இந்த நாட்டின் அரசியலமைப்புச் சட்டமும் இந்நாட்டு அரசாங்கமும் அனுமதித்த ஒரு ஆடையை மறுக்கின்ற உரிமை எவ்வாறு ஒரு பாடசாலைக்கு இருக்கமுடியும்? பாடசாலையிலும் சமஷ்டி ஆட்சி நடைபெறுகின்றதா? ஒரு ஆசிரியையின் அடிப்படை உரிமையை அதிபர் மறுத்தது; எவ்வளவு பெரிய குற்றம். அதற்கு தண்டிக்கபடவேண்டியவர் அந்த அதிபர் இல்லையா?

மாறாக தனது அடிப்படை உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது, தனது மதசுதந்திரத்தில் கைவைக்க அனுமதிக்க முடியாது. தான் உயிர்வாழும் சுதந்திரத்தைத் தட்டிப்பறிக்க இடம்கொடுக்க முடியாது; என்று தனது உரிமையை நிலைநாட்ட முயன்ற ஆசிரியைகளுக்குத் தண்டனை; அவ்வுரிமையைப் பறிக்கமுயன்றவருக்கு அதிகாரிகளே ஆதரவு! இது எந்தவகையில் நியாயம்?

இந்நாட்டில் சண்முகா மாகாவித்தியாலயம் மாத்திரம் ஒரு இந்துப் பாடசாலை அல்ல. இன்னும் எத்தனையோ இந்துப் பாடசாலைகள் இயங்குகின்றன. அவற்றில் பலவற்றில் முஸ்லிம் ஆசிரியைகள் அபாயா அணிந்து கற்பிக்கின்றார்கள். இந்தப் பாடசாலையில் மட்டும் ஏன் பிரச்சினை?

இது ஒரு இனத்துவேசம்கொண்ட அதிபரின் பிரச்சினை. இதற்குத் சில தமிழ் அரசியல் சக்திகள் துணைபோயின. இந்த ஆசிரியைகள் அவர்களது கலாச்சாரத்தைப் பின்பற்ற வேண்டாம்; என்றார்களா? ஒரு கிறிஸ்தவ கன்னியாஸ்த்திரி அபாயாவுக்கு நிகரான ஓர் ஆடையை அணிந்துகொண்டு இதே பாடசாலைக்கு கற்பிக்க சென்றிருந்தால் இதே துவேசத்தை வெளிப்படுத்தியிருப்பார்களா?

எனவே, இது முழுக்க முழுக்க துவேசத்தை அடிப்படையாகக் கொண்டதேதவிர நிய்யப்படுத்தக்கூடியவை அல்ல. இந்த அடிப்படை விசயம்கூட இந்த அதிகாரிகளுக்கு ஏன் புரியாமல் போனது? குற்றவாளிக்குத் தண்டனை வழங்காமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு தண்டனைவழங்கியது ஏன்? ஆகக்குறைந்தது இந்த ஆசிரியர்கள் தற்காலிக இடமாற்றப்பட்டபோது அந்த அதிபரும் தற்காலிகமாக ஏன் இடமாற்றப்படவில்லை. ஏன் அவர்களின் மக்கள் பிரதிநிதிகள் பலம்வாய்நதவர்கள்; என்பதனாலா?

( தொடரும்).

பகுதி 1 தொடர் கட்டுரைகள் பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது

Read more...

Thursday, January 24, 2019

திருமலை சண்முகா ஆசிரியர் இடமாற்ற விவகாரம். வை எல் எஸ் ஹமீட்

இந்த விவகாரம் கடந்த பல மாதங்களாக தீர்க்கமுடியாத ஒரு பிரச்சினையாக நீடிக்கின்றது. இது தற்போது மீண்டும் விசுவரூபம் எடுத்திருக்கின்றது.

தற்போதை இவர்களின் இடமாற்றத்திற்கு யார் பொறுப்பு?

குறித்த பாடசாலை ஒரு தேசிய பாடசாலை. ஒரு மா க பணிப்பாளரைப் பொறுத்தவரை அவருக்கு இரண்டு தொழிற்பாடுகள் இருக்கின்றன.
ஒன்று: மாகாண படசாலைகளைப் பொறுத்தவரை அதிகாரம் பொருந்திய பணிப்பாளர். தேசிய பாடசாலைகளைப் பொறுத்தவரை மத்திய கல்வியமைச்சின் பிரதிநிதி.

இங்கு அவருக்கு சொந்த அதிகாரமில்லை. இசுறுபாயவின் உத்தரவுகளைத்தான் செயற்படுத்த வேண்டும். சில நேரங்களில் தற்காலிக இடமாற்றங்களைச் செய்யலாம். பின்னர் இசுறுபாயவின் அனுமதியைப்பெற வேண்டும்.

மனித உரிமை ஆணைகுழுவினால் ஏற்கனவே செய்யப்பட்ட தற்காலிக இடமாற்றத்தை ரத்துச்செய்து பழைய பாடசாலைக்கு அனுப்பும்படி உத்தரவிடப்பட்டதாக கூறப்படுகிறது. அதை அமுல்படுத்தாமல் இசுறுபாயவின் நிலைப்பாட்டை அறிந்துகொள்ள பணிப்பாளர் கடிதம் எழுதியதாகவும் கூறப்படுகிறது.

அவ்வாறு கடிதம் எழுதுவதில் தவறேதும் இல்லை. ஏனெனில் இசுறுபாயவின் பிரதிநிதி என்றமுறையில் இசுறுபாயவின் தீர்மானத்தையே அவர் அமுல்படுத்த வேண்டும். அவர் வெறுமனே மனித உரிமை ஆணைக்குழுவின் உத்தரவைக் குறிப்பிட்டு அதன்பிரதியுடன் இசுறுப்பாயவின் மேலதிக அறிவுறுத்தலைக் கோரியிருந்தால் பிரச்சினையில்லை. அதற்கு அப்பாலும் அதன் உள்ளடக்கம் இருந்ததால் அவ்வுள்ளடக்கத்தின் பொருத்தத் தன்மை கேள்விக்குறியாகவும் பிரச்சினையாகவும் மாறியிருக்கிறது.

அது வெறுமனே பொருத்தமற்ற உள்ளடக்கம் என்பதற்காக அல்ல. மாறாக அதன் உள்ளடக்கமே பிரச்சினையின் திருப்புமுனையாக மாறியிருக்கின்றது; என்ற கருத்தே இன்றைய பாரிய விமர்சனங்களின் பிரதான அம்சமாக இருக்கின்றது. அதாவது, இசுறுபாயவின் உத்தரவின் பேரிலேயே இடமாற்றம் இடம்பெற்றபோதும் அவ்வகையான உத்தரவுக்கு அக்கடிதத்தின் உள்ளடக்கமே பிரதான காரணம் என்பதே இவ்விமர்சனங்களின் மையப்புள்ளியாகும். அதன் உள்ளடக்கம் மனித உரிமை ஆணைக்குழுவின் உத்தரவையே நலிவுற்றதாக்கிவிட்டது; என்பதும் விமர்கள் வெளியிடும் கவலையாகும். இவற்றிற்கு பின்னர் வருகின்றேன்.

இப்பிரச்சினையின் ஆழ அகலம் என்ன?

இங்கு பல கேள்விகள் எழுகின்றன.

(1) குறித்த ஆடைகளை அணிவது அந்த ஆசிரியர்களின் உரிமையா?

(2) அந்த ஆடைகள் அணிவதில் கல்வியமைச்சின் விதிமுறைகளின்கீழ் ஏதும் தடைகள் உள்ளனவா?

(3) இல்லையெனில், பாடசாலை மரபு, பாரம்பரியம் என்ற அடிப்படையில் அவ்வாடைக்கு பாடசாலை தடைவிதிக்க முடியுமா?

(4) ஆசிரியைகளுக்கு சீருடை உண்டா? ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் மாணவர்களின் சீருடையை தீர்மானிக்கும் அதிகாரம் பாடசாலைக்கு உண்டா?

( 5) இல்லையெனில், அவர்களை கல்வியமைச்சு ஏன் வேறுபாடசாலைகளுக்கு ஆரம்பத்திலேயே தற்காலிக இணைப்பிற்கு உத்தரவிட்டது?

(6) மனித உரிமை ஆணைக்குழு வழங்கிய இடைக்கால உத்தரவை அமுல்படுத்துவது தொடர்பாக மாகாண கல்விப் பணிப்பாளர் இசுறுபாயவுக்கு அனுப்பிய கடிதத்தின் உள்ளடக்கம் பொருத்தமானதா?

(7) அதன் உள்ளடக்கம்தான் தற்போது இந்தப் பிரச்சினை மீண்டும் விசுவரூபம் எடுத்ததற்கு காரணம் என்ற கூற்றில் நியாயம் இருக்கின்றதா?

(8) குறித்த ஆடை அணிவது அந்த ஆசிரியர்களின் உரிமையானால் அதனை நிலை நிறுத்துவதில் உரிமைகளுக்காக போராடவென்று மக்கள் வாக்குகள்பெற்ற அரசியல் அதிகாரவர்க்கம் இத்தனை மாதங்களாக வாழாவிருந்ததேன்?

(9) கல்விப்பணிப்பாளர் அண்மையில் வியூகம் தொலைக்காட்சியில் செய்த சில நியாயப்படுத்தல்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியவையா?

(10) அபாயா முஸ்லிம்களின் கலாச்சார ஆடையா? இதற்காக போராட வேண்டுமா? என்ற வாதங்கள் இந்த இடத்திற்குப் பொருந்துமா?

(11) சமூக நல்லிணக்கம் என்ற பெயரில் இங்கு விட்டுக்கொடுப்புச் செய்யமுடியுமா?

(12) அவ்விட்டுக்கொடுப்புகள் எதிர்காலத்தில் வட கிழக்கில் மாத்திரமல்லாமல் அதற்கு வெளியிலும் முஸ்லிம்களுக்கெதிரான தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புகள் உண்டா?

(13) நாம் பெரும்பான்மையாக இல்லாவிட்டாலும் சிறுபான்மை இல்லை; என்கின்ற கிழக்கிலேயே, ஒரு கௌரவமான ஆடை அணிகின்ற சிறிய உரிமையைக்கூட பல மாதங்களாக போராடியும் இன்னும் உறுதிப்படுத்த முடியாமல் இருப்பதேன்?

(14) கல்விப் பணிப்பாளர் அல்லது உயர் பதவியிலுள்ள முஸ்லிம்கள், சமூகத்திற்கு சாதகமாக நடக்கவேண்டுமா? நடுநிலையாக நடக்க வேண்டுமா?

(15) குறித்த பணிப்பாளரினுடைய இவ்விடயம் தொடர்பான நடவடிக்கைகள், பேச்சுக்கள், முஸ்லிம்களுக்கு சாதகமானவையா? நடுநிலையானவையா? பாதகமானவையா?

(16) பாதகமானவே எனில் ஏன் அவ்வாறு நடந்துகொள்கிறார்கள்?

(17) ஆளுநர், அரச அதிபர் உட்பட நியாமாக முஸ்லிம்கள் நியமிக்கப்படாதபோது அவற்றிற்கெதிராக குரலெழுப்புகின்றோமே! ஏன்?

(18) இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு என்ன?

(19) அத்தீர்வைப் பெற்றுத்தரக்கூடியவர்கள் யார்?

(20) அத்தீர்வு என்பது அவ்வாசிரியைகளுக்குரிய தீர்வா? அல்லது சமூகத்திற்கு தீர்வா? இரண்டாவதெனில் எவ்வாறு?

இப்பிரச்சினையை சரியாக அடையாளம் கண்டு தீர்வுக்காண இக்கேள்விகளுக்கு நாம் விடைகாண வேண்டும்.

அடுத்த பதிவில் இன்ஷாஅல்லாஹ் விடைகளைத் தேடுவோம்.

Read more...

Thursday, January 10, 2019

கிழக்கு முஸ்லிம் ஆளுனரும் தமிழ்த்தரப்பு எதிர்ப்பும். வை எல் எஸ் ஹமீட்

கிழக்கில் அண்ணளவாக 1/3 பங்கு தமிழர்களும் 2/3 தமிழர் அல்லாதவர்களும் வாழுகின்றனர். கிழக்கின் 1/3 பங்கு தமிழர்களுக்காக தமிழரல்லாத 2/3 பங்கும் வட கிழக்கின் இணைப்பின்மூலம் வடக்கின் ஆளுகைக்குள் வரவேண்டும். அதற்கு முஸ்லிம்களும் ஒத்துழைக்க வேண்டும்; என்பது அவர்களது கோரிக்கை, எதிர்பார்ப்பு.

விடுதலைப் போராட்ட ஆரம்பகாலத்தில் வட கிழக்கு சுயாட்சிக்கும்மேல் தமிழீழத்திற்காகவே போராடுவதற்கு முஸ்லிம் வாலிபர்கள் ஆயுத இயக்கங்களில் இணைந்தார்கள். அந்தளவு தமிழர்களை ஒன்றுக்குள் ஒன்றாக பிணைந்த சகோதர சமூகமாக முஸ்லிம்கள் கருதினார்கள்.

இயக்கப்போராளிகளுக்கு பல சந்தர்ப்பங்களில் படைகளிடமிருந்து தப்புவதற்கு அடைக்கலம் கொடுத்தார்கள். ஆகாரமளித்தார்கள். தலைவர் அஷ்ரப் அவர்கள் “அண்ணன் அமிர்தலிங்கம் தமிழீழம் பெற்றுத் தராவிட்டால் தம்பி அஷ்ரப் பெற்றுத் தருவான்”; என்று மேடைகளில் முழங்குமளவு தமிழ்த் தலைமைகள்மீதான நம்பிக்கை இருந்தது.

நடந்தது என்ன? தம்முடன் போராட இணைந்த முஸ்லிம் வாலிபர்களையே சுட்டுத்தள்ளி நீங்கள் வேறு, நாங்கள் வேறு; என்று நிறுவினார்கள். போதாக்குறைக்கு வடக்கு முஸ்லிம்களை ஒரு சில மணித்தியாலங்களுக்குள் வெளியேற்றினார்கள்.

இந்த நாட்டில் யுத்தகாலத்தில் எல்லா சமூகங்களும் பாதிக்கப்பட்டன. ஆனால் யுத்த காலத்திலும் யுத்த நிறுத்த காலத்திலும் தமிழ் ஆயுதப்போராட்டத்தினால் பாதிக்கப்பட்ட, அகோரமாக கொல்லப்பட்ட ஒரு சமூகமென்றால் அது முஸ்லிம் சமூகம். அந்தளவு வெறுப்பு முஸ்லிம்கள் மீது தமிழ் ஆயுதப்போராட்டத்திற்கு.

யுத்த நிறுத்தகாலம். ஆனாலும் முஸ்லிம்கள் மீதான விடுதலைப் புலிகளின் அட்டகாசம் குறையவில்லை. ஆயுதப்படைகளும் முஸ்லிம்களைப் பாதுகாப்பதில் அசட்டையாக இருந்தன. பொதுமக்களின் நெருக்குதலினால் UNP யை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தி முட்டுக்கொடுத்துப் பாதுகாத்த மு கா தலைவர் ஹக்கீமின் வேண்டுகோளின்பேரில் 500 முஸ்லிம் பொலிஸ்காரர்களை முஸ்லிம்களின் பாதுகாப்புக்காக நியமிக்க அன்றைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வந்தார்.

தாங்க முடியவில்லை தமிழ்த்தரப்பிற்கு. தூக்கினார் போர்க்கொடி சம்பந்தன். காற்றில் பறந்துபோனது ரணிலின் வாக்குறுதி. ஆட்சிக்கட்டிலில் ஏற்றி முட்டுக்கொடுத்தும் கையாலாகாத்தனமானவர்களாக விடுதலைப் புலிகளின் கொடுமைகளைக் கண்டு கண்ணீர் விட்டுக்கொண்டு காலத்தைக் கடத்தினோம்.

யுத்தம் முடிந்தது. அமைதியும் திரும்பியது. கடந்த காலத்தை மறப்போம். தமிழர்களும் முஸ்லிம்களும் சகோதர சமூகங்களாக வாழுவோம்; என்றுதான் முஸ்லிம்கள் விரும்பினார்கள்; விரும்புகிறார்கள்.

அவர்களது விடயத்தில் முஸ்லிம்கள் ஒத்துழைக்க வேண்டும்; விட்டுக்கொடுக்க வேண்டும்; என்று எதிர்பார்ப்பவர்கள் முஸ்லிம்களின் விடயங்களில் எவ்வாறு நடந்துகொள்கின்றார்கள்?

கிழக்கில் அம்பாறையும் திருகோணமலையும் தமிழ்பேசும் மக்களைப் பெரும்பான்மையாக கொண்ட மாவட்டங்கள். அதிலும் குறிப்பாக முஸ்லிம்கள் எண்ணிக்கையில் முதலாவது பெரிய சமூகம்.

வட கிழக்கு, பெரும்பான்மை சமூக ஆளுகைக்குள் இருந்து விடுபடவேண்டும்; என்பது அவர்களது போராட்டம். தேவையானபோது தமிழ்பேசும் மக்கள் என்று முஸ்லிம்களையும் தம்முடன் இணைத்துக்கொள்வார்கள். ஆனால் பெரும்பான்மைத் தமிழ்பேசும் மாவட்டங்களான அம்பாறைக்கும் திருகோணமலைக்கும் தமிழ்பேசும் அரச அதிபர்களை நியமிக்கக்கோரமாட்டார்கள், அவர் ஒரு முஸ்லிமாக இருந்துவிடக்கூடாது; என்பதற்காக. ஆனால் தமிழுக்காக போராடுகிறார்கள்.

இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் தொடர்ச்சியாக பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஆனாலும் இவ்விரண்டு மாவட்டங்களிலும் சிறுபான்மையாக வாழும் சிங்களவர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் அவர்களின் கைகளில் இருந்தும் சிங்களவர்களையே அரச அதிபர்களாக நியமிக்கவேண்டும்; என்பது எழுதாத விதி.

இந்நிலையில் கல்முனைக் கரையோர மாவட்டத்தை முஸ்லிம்கள் கோரிநிற்கிறார்கள். ஆனால் தமிழ்த்தரப்பினர் எதிர்க்கின்றார்கள். ஏன்? முஸ்லிம்கள் பெரும்பான்மையாகி விடுவார்கள் என்பதனால். தமிழர்களா? சிங்களவர்களா? என்றால் அது “ தமிழர்களே”; சிங்களவர்கள் பேரினவாதிகள்; என்பது அவர்களது நிலைப்பாடு. அப்பொழுது ‘ தமிழ்பேசும் சமூகம்’ என்ற பதமும் பாவிக்கப்படும். ஆனால் ஒரு அதிகாரி ‘ முஸ்லிமா? சிங்களவரா? என்றால் அவர்களது பதில் ‘ சிங்களவர்தான்’ என்பதாகும்.

அப்பொழுது சிங்களவர்கள் ‘ ரத்தத்தின் ரத்தம்’. முஸ்லிம்கள் விரோதிகள். 1987ம் ஆண்டுவரை எதுவித பிரச்சினையுமில்லாமல் இருந்த கல்முனை பட்டின சபை எல்லைக்குள் ஒரு மாநகரசபையை நிறுவுவதற்கு அவர்கள் உடன்பட மாட்டார்கள். ஆனால் சமஷ்டிக்கு முஸ்லிம்கள் ஆதரவளிக்க வேண்டும்.

ஒரு முஸ்லிம் பிரதேச செயலாளர் இருக்கும் பிரதேச செயலகப்பிரிவை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்; தனியாக பிரதேச செயலகம் வேண்டும். ஆனால் அதி உச்ச அதிகார பகிர்வுக்கு முஸ்லிம்கள் உடன்பட வேண்டும். முஸ்லிம்களையும் சேர்த்து ஆள்வதற்கு இணைப்பிற்கும் உடன்பட வேண்டும்.

ஆளுநர் நியமனம்

வட கிழக்கிற்கு சிங்களவர்தான் ஆளுநராக நியமிக்கப்பட வேண்டும்; என்ற எழுதாத விதி கடந்த 30 ஆண்டுகளாக இருந்து வந்தது. அவ்விதி தகர்க்கப்பட்டு இம்முறை வடக்கிற்கு ஒரு தமிழரும் கிழக்கிற்கு ஒரு முஸ்லிமும் நியமிக்கப்பட்டுள்ளனர். கிழக்கிற்கு ஒரு முஸ்லிம் ஆளுநர் நியமிக்கப்பட்டதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை.

தமிழிக்காகப் போராடும் தமிழ்த்தலைமைகள், பேரினவாதத்தின் பிடியிலிருந்து தமிழ்பேசும் பிரதேசங்களை விடுவிக்கப்போராடும் தமிழ்த்தலைமைகள் கிழக்கிற்கு ஒரு தமிழ்பேசும் மகன் நியமிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை அவன் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக. ஆனால் ஒரு இனவாத சிங்களவரை நியமித்தாலும் அல்லது தமிழ்ப்போராளிகளை அழித்த ஒரு முன்னாள் ராணுவ அதிகாரி அல்லது கடற்படை அதிகாரியை நியமித்தாலும் ஏற்றுக்கொள்வார்கள் அவர் முஸ்லிமாக இல்லாதவரை.

இனவாதம் எங்கே இருக்கின்றது; என்று பாருங்கள். இந்த யதார்த்தத்திற்கு மத்தியில்தான் நம்மவர்களின் நிலை என்னவென்று சொல்லாமல் புதிய யாப்பில் தமிழர்களின் தேவையை நிறைவேற்றிக்கொள்ள முஸ்லிம்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டுமாம்; என்று நம் தலைவர்கள் என்பவர்கள் பேசுகின்றார்கள்.

புதிய யாப்பும் அதிகாரப்பகிர்வும்

அதிகாரப்பகிர்வு முஸ்லிம்களுக்கு சாதகமா? பாதகமா? என்பதிலேயே பலருக்கு குழப்பம். இதில் குழம்ப என்ன இருக்கிறது?

அதிகாரப்பகிர்வு எதற்கு? பதில்: ஆட்சி செய்வதற்கு.

யார் ஆட்சி செய்வதற்கு? பதில்: அந்தப் பிரதேசத்தில் யார் அல்லது எந்த சமூகம் பெரும்பான்மையாக இருக்கின்றதோ அவர்கள் ஆட்சி செய்வதற்கு.

யாரை ஆள்வதற்கு? பதில்: தம்மைத்தாமே ஆள்வதற்கும் அங்குள்ள சிறுபான்மையை ஆள்வதற்கும்.

தமிழர்கள் எதற்காக அதிகாரம் கேட்கிறார்கள்? பதில்: வட கிழக்கில் தம்மைத்தாமே ஆள்வதற்கும் அங்குள்ள சிறுபான்மைகளை ஆள்வதற்கும்.

வடக்கில் மட்டும்தானே தமிழர்கள் பெரும்பான்மை? பதில்: ஆம். கிழக்கில் அவர்கள் சிறுபான்மை. தமிழர் அல்லாதவர் பெரும்பான்மை. ஆனால் தமிழர் கிழக்கிலும் ஆளப்படும் சமூகமாக இருக்கக்கூடாது. எனவே இணைப்பைக் கோருகிறார்கள். அதாவது கிழக்கின் தமிழரல்லாத பெரும்பான்மையினர் இணைப்பின் மூலம் சிறுபான்மையாக மாறி ஆளப்பட வேண்டுமென்கிறார்கள்.

கிழக்கிற்கு வெளியேயுள்ள எட்டு மாகாணங்களில் முஸ்லிம்களின் நிலை என்ன?

பதில்: எட்டு மாகாணங்களிலும் முஸ்லிம்கள் தெளிவான சிறுபான்மை. ஆளப்படப்போகின்ற சமூகம். சமூகம் ஆளப்படுவதற்காக அதிகப்பட்ச ஆதகாரப்பகிர்வைக் கோரிநிற்கின்ற பெரும் தலைவர்களைக்கொண்ட சமூகம்.

ஒரு அரசாங்கத்தின்கீழ் இருந்துகொண்டே எமது பாதுகாப்பிற்கு உத்தரவாதமில்லை. எமது இன்னோரன்ன உரிமைக்ளுக்குப் பாதுகாப்பில்லை; என்று அழுது புலம்பி ஒரு ஆட்சியை மாற்றி வந்த ஆட்சியும் பாதுகாப்புத்தராமல் திகனயில் உயிர், பொருள் இழந்த சமூகம்.

அந்த சமூகம் எட்டு அரசாங்கங்களால், அதுவும் அதிகப்பட்ச அதிகாரம்கொண்ட அரசாங்கங்களால், அதிலும் மத்திய அரசாங்கம் என்னவென்றும் கேட்கமுடியாத சமஷ்டித்தன்மைகொண்ட அரசாங்கங்களால் அதிலும் குறிப்பாக பொலிஸ் அதிகாரமும் சேர்த்து வழங்கப்படுகின்ற அரசாங்கங்களால் மறுபுறம் நாம் அடியோடு பிரதிநிதித்துவப் படுத்தாத ( ஊவா, சப்ரகமுவ, தெற்கு) அல்லது சொல்லும்படியான பிரதிநிதித்துவம் இல்லாத ( வடக்கு, வடமத்தி) மற்றும் ஓரளவு பிரதிதித்துவத்தை மாத்திரம்கொண்ட ( மேற்கு, மத்தி, வடமேற்கு) அரசாங்கங்களால் அதிலும் குறிப்பாக மத்திய அரசின் பிரதிநிதியான அதிகாரம் கொண்ட ஆளுநரின் பல்லுப் பிடுங்கப்பட்ட, அந்த ஆளுநரைக்கொண்டு மத்திய அரசு தலையிட முடியாத அரசாங்கங்களால் நாங்கள் ஆளப்படுவதற்கு அதிகாரப்பகிர்வு கேட்கும் முஸ்லிம் தலைவர்களைக்கொண்ட சமூகம் நாம். இதுதான் எட்டு மாகாணங்களில் நமதுநிலை.

கிழக்கில் நாம் சிறுபான்மை இல்லையே! கிழக்கில் அதிகாரப்பகிர்வு நமக்கு சாதகமில்லையா? நமது காணிகளும் பறிபோகின்றனவே! காணி அதிகாரம் கிடைத்தால் பாதுகாக்க முடியாதா?

பதில்: நாம் சிறுபான்மை இல்லைதான். ஆனால் நாம் தனிப்பெரும்பான்மையும் இல்லையே! ஆளுவதாக இருந்தால் கூட்டாட்சி. கிழக்கிற்கு வெளியே முஸ்லிம்களை ஆக்கிரமிக்கும் சக்தி பேரினவாதமென்றால் கிழக்கில் சிற்றினவாதம்.

முஸ்லிம் முதலமைச்சர் வேண்டுமென்று போராடினோம். கூட்டாட்சியில் பெற்றோம். என்ன செய்யமுடிந்தது. ஒரு சாதாரண வீதிக்கு பெயர் மாற்றம் செய்ய முடியாத முஸ்லிம் முதலமைச்சர் பதவி. ஏன் முடியவில்லை? தமிழ்த்தரப்பினர் விரும்பவில்லை.

இதன்பொருள் முஸ்லிம் முதலமைச்சரைப் பெற்றாலும் அவர் கூட்டாட்சியில் பொம்மை முதலமைச்சர். தமிழ்தரப்பு எதிர்க்காத விடயங்களை மாத்திரம்தான் செய்யலாம். கிழக்கில் எங்கள் பிரச்சினைகளில் பாதிக்குமேல் தமிழர்களுடன் பின்னிப்பிணைந்தவை. தீர்க்க விடுவார்களா? கடற்கரைப்பள்ளி வீதி பெயர்மாற்ற விவகாரம் மத்திய அரசாங்கத்திடம் அதிகாரம் இருந்திருந்தால் சிலவேளை எப்போதோ செய்திருக்கலாம். இது ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போன்றதாகும்.

சிலவேளை முஸ்லிம்கள் இல்லாமல் பேரினவாதமும் சிற்றினவாதமும் இணைந்து கிழக்கில் ஆட்சியமைத்தால் ( அதிகப்பட்ச அதிகாரம், பொலிஸ் அதிகாரம் வழங்குகின்றபோது) நிலைமையைச் சிந்தித்துப்பாருங்கள்.

காணி அதிகாரம் கிடைத்தால் எமது காணிகளைப் பாதுகாக்கலாமா?

எமது காணிப்பிரச்சினை இருபுறமும் இருக்கின்றது. உதாரணம் சம்மாந்துறை கரங்கா காணி. இவை உறுதிக்காணிகள். இவற்றிற்கும் காணி அதிகாரத்திற்கும் என்ன தொடர்பு. இராணுவம் கையகப்படுத்திய காணி. அரசாங்கம் ஒரு உத்தரவிட்டால் நாளையே வெளியேற்றலாம்.

யுத்தம் நடந்த பூமியான வடக்கிலேயே ராணுவம் காணிகளை விடுவிக்கும்போது நாம் கையாலாகதவர்களாக இருக்கின்றோம். காணி அதிகாரம் எங்கே பயன்படும் என்றால் அரசகாணிகள் மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் விடயத்தில். அங்கு சிங்களவர்களைக் குடியேற்றுவதைத் தடுப்பதற்கு. உறுதிக்காணிக்கும் அதற்கும் என்ன தொடர்பு.

அஷ்ரப் நகர். ராணுவ ஆக்கிரமிப்பு. அங்கு இப்பொழுது யுத்தமா நடக்கிறது ராணுவம் நிலைகொள்ள. மாகாணசபைக்கு காணி அதிகாரம் வழங்கினால் ராணுவத்தை வெளியேற உத்தரவிடமுடியுமா? ஒன்பது மாகாணமும் அவ்வாறு உத்தரவிட்டால் ராணுவத்தை வெளிநாட்டிலா கொண்டுபோய் வைப்பது? எனவே, ராணுவ விவகாரங்களில் மாகாணசபை தலையிடமுடியாது. ஆனால் நம்பவர்களின் நாக்கில் பலம் இருந்தால் மத்திய அரசின் ஒரு உத்தரவின் மூலம் வெளியேற்றலாம்.

வட்டமடு காணி: யாருடன் இணைந்த பிரச்சினை - தமிழர்களுடன் இணைந்த பிரச்சினை. கூட்டாட்சியில் தீர்வுகாண விடுவார்களா? மட்டக்களப்பில் 15000 ஏக்கர் முஸ்லிம்களின் காணி- விடுதலைப்புலிகளின் காலத்தில் கையகப்படுத்தப்பட்டு இன்னும் தமிழர்களின் ஆதிக்கத்தில் இருக்கின்றது. தீர்வுகாண விடுவார்களா? இதுவரை தீர்த்திருக்க வேண்டியவை. நமது மேடைப்பேச்சு வீரர்களின் இயலாமை.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 1/4 பங்கு முஸ்லிம். 1/20 பங்கு நிலம்கூட அவர்களுக்கு இல்லை. காணிகள் எல்லாம் தமிழ் பிரதேசங்களில். காணி அதிகாரம் வழங்கப்பட்டால் குடியேற அனுமதிப்பார்களா? இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் ஹிஸ்புல்லாவினால் கட்டப்படும் பல்கலைக் கழகம். கல்வியில் மாத்திரமல்ல மட்டக்களப்பு முஸ்லிம்களின் குடியேற்றப்பரம்பலிலும் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தப்போகின்றது. மாகாணசபையிடம் காணி அதிகாரம் இருந்திருந்தால் அனுமதித்திருப்பார்களா?

எனவே, கிழக்கு மாகாணத்திற்கு அதிகாரத்தைக் கொடுத்தால் இவற்றையெல்லாம் சாதிக்கலாம் என யாராவது பட்டியலிடமுடியுமா?

மாகாண அதிகாரம் மத்திய அரசிடம்

அதிகாரப்பகிர்வு இல்லாமல் மத்திய அரசிடம் அதிகாரம் இருக்குமானால் முஸ்லிம் பிரதேசங்களில் நடைமுறை அதிகாரம் முஸ்லிம் பா உறுப்பினர்களிடம், அமைச்சர்களிடம்தான் இருக்கப்போகின்றது. கிழக்கு உள்ளக நிர்வாகத்தைப் பொறுத்தவரை பேரின அரசு பெரிதாக அக்கறை செலுத்தப்போவதில்லை. எனவே, நமது பிரதிநிதிகள்தான் அங்கு யதார்த்த ஆட்சியாளர்கள். இதுதான் 90இற்கு முதல் இருந்தது.

எனவே, அதிகாரப்பகிர்வினால் கிழக்கில் பாரிய நன்மைகளை நாம் அடையப்போவதில்லை. ஆனால் நிறையப் பிரச்சினைகளைச் சந்திக்கப்போகின்றோம்.

எனவே, ஆளமுடியாத நாம் எதற்காக அதிகாரம் கேட்கின்றோம். சிலர் தனியலகு என்கின்றனர். அது நல்ல விடயம். மறுக்கவில்லை. நம்மை நாம் ஆளும் கோட்பாடு. ஆனால் நடைமுறைச் சாத்தியமா? சாத்தியம் என்பவர்கள் விளக்குங்கள். இது தொடர்பாக நான் ஏற்கனவே விரிவான ஆக்கங்களை எழுதியிருக்கின்றேன்.

மறைந்த தலைவர் தனிஅலகு கேட்டார். அதுதான் தீர்வு என்பதனாலா கேட்டார். அன்று, என்றுமே பிரிக்க முடியாது; என்ற தோற்றத்தில் வட கிழக்கு இருந்தபோது மாற்றுவழியின்றி கேட்டார். Something is better than nothing என்பதுபோல்.

எரிகின்ற வீட்டில் பிடிங்கியவரை லாபம்தான். அதற்காக யாராவது வீட்டை எரித்து எதையாவது பிடுங்குவோம் என்பார்களா? இது புரியாமல் பிரிந்திருக்கும் வட கிழக்கை இணைத்துவிட்டு தனிஅலகு தாருங்கள்; என்கிறார்கள். தனிஅலகு கிடைத்திருந்தால் ஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழகம் அந்த இடத்தில் சாத்தியப்பட்டிருக்குமா? அல்லது எதிர்காலத்தில் அங்கு குடியேற்றம்தான் சாத்தியப்படுமா?

எனவே, வெறுமனே மொட்டையாக அதிகாரப்பகிர்வை ஆதரிப்பவர்கள் கிழக்கிற்கு வெளியே முஸ்லிம்களின் எதிர்காலத்திற்கு வழிசொல்லுங்கள். கிழக்கில் எந்தவகையில் அது முஸ்லிம்களுக்கு பிரயோசனம் என விரிவாக விளக்குங்கள்.

இந்து கலாச்சார அமைச்சராக ஒரு சிங்களவரை ஏற்றுக்கொள்ளும் மனோநிலை உள்ளவர்கள் ஒரு பிரதி அமைச்சர் முஸ்லிம் என்பதனால் ஓரத்தில் இந்து கலாச்சாரம் என்றொருசொல் ஒட்டிக்கொண்டதை பொறுக்கமுடிதவர்கள் ஆளுவதற்கு அதிகாரம் கேட்கின்றார்கள்; என்பதற்காக, ஒரு அரசாங்கத்தால் ஆளப்படுவதற்கு அவர்கள் ஆயத்தமில்லை என்பதற்காக ஒன்பது அரசாங்கங்களால் ஆளப்படுவதற்கு நாம் சம்மதம் என்றால் எம்மை என்னவென்பது? எம்மைவிட சிந்திக்க முடியாத சமூகம் இருக்கமுடியுமா?

அவர்கள் வாழவேண்டும் என்பதற்காக நாங்கள் அழிய வேண்டுமா? அவர்கள் ஆளவேண்டும் என்பதற்காக, நாம் அரசியல் அடிமைச் சமுகமாக மாறவேண்டுமா? பதுளையில் தீவைத்தால், முஸ்லிம்களின் உயிர்களுக்கு உலைவைத்தால் ஜனாதிபதியிடமும் பேசமுடியாது; பிரதமரிடமும் பேசமுடியாது. அதிகாரம்பொருந்திய முதலமைச்சரை தேடிச்செல்லும் நிலைக்காகவா ஆதிகாரப்பகிர்வை ஆதரிக்க வேண்டும். அதிலும் குறிப்பாக அதிகபட்ச அதிகாரப்பகிர்வை ஆதரிக்கமுடியுமா? எனவே சிந்தியுங்கள்.

Read more...

Saturday, December 22, 2018

அமைச்சர், ராஜாங்க அமைச்சர், பிரதியமைச்சர்களின் அதிகாரம். வை எல் எஸ் ஹமீட்

அமைச்சர்கள்

பிரதமரால் முன்மொழியப்படுகின்றவர்களைத்தான் அமைச்சர்களாக ஜனாதிபதி நியமிக்க முடியும். இந்த விடயத்தில் ஜனாதிபதிக்கு சொந்த அதிகாரம் கிடையாது. எனவே, பிரதமர் முன்மொழிகின்ற ஒருவரை நியமிக்க மாட்டேன் என்று ஜனாதிபதி கூறுவது அரசியலமைப்பு மீறலாகும். சரத்து 43(2) ஆனால் 30 பேரையும் நியமிக்க வேண்டும்; என்ற கட்டாயமில்லை. ஜனாதிபதி விரும்பினால் 30ஐ விட குறைவாகவும் நியமிக்கலாம். எத்தனை அமைச்சர்கள் என்பதைத் தீர்மானிக்கின்ற அதிகாரம் ஜனாதிபதிக்குரியது. தேவையெனக்கருதினால் பிரதமரைக் கலந்தாலோசிக்கலாம். ஆனால் அதன்படி நடக்கவேண்டுமென்பதில்லை. சரத்து 43(1)

அதேபோன்று, அந்த அமைச்சர்களுக்குரிய அமைச்சுக்கள், அவற்றின் கீழ்வரும் நிறுவனங்களைத் தீர்மானிப்பது ஜனாதிபதியே. பிரதமரைக் கலந்தாலோசிக்கலாம். ஆனால் அதன்படி நடக்க வேண்டுமென்பதில்லை. 43(1)

தான் விரும்பும் நேரம் இந்த அமைச்சர்களின் அமைச்சுக்களையோ அதன்கீழ் வரும் நிறுவனங்களையோ ஜனாதிபதி மாற்றலாம். அது ஜனாதிபதியின் அதிகாரம். 43(3) ஆனால் பிரதமர் முன்மொழிந்தாலேயொழிய ஜனாதிபதி அவர்களை நீக்கமுடியாது. 46(3)

அமைச்சுக்களின் செயலாளர்களை நியமிக்கும் அதிகாரம் முழுக்க, முழுக்க ஜனாதிபதியினுடையது. 52(1). இந்த செயலாளர்கள் அமைச்சர்களின் அறிவுறுத்தல், கட்டுப்பாட்டின்கீழேயே இயங்க வேண்டும். 52(2) ஜனாதிபதி ஒரு அமைச்சரை புறந்தள்ளி நேரடியாக செயலாளருக்கு உத்தரவு வழங்க முடியாது. அமைச்சின் முழுக்கட்டுப்பாடும் அமைச்சரிடமே இருக்கும். ஆனால் அமைச்சருக்குரிய அதிகாரம் தொடர்பான விடயதானங்கள் அனைத்தும் ஜனாதிபதியினால் வர்த்தமானி மூலம் வழங்கப்படும்.

மொத்த அமைச்சரவையும் பாராளுமன்றத்திற்கு பதில்கூற கடமைப்பட்டது. 42(2)

ராஜாங்க அமைச்சர்கள்

‘ராஜாங்க அமைச்சர்’ என்ற சொல் யாப்பில் இல்லை. ‘அமைச்சரவை அங்கத்தவரல்லாத அமைச்சர்’ என்ற சொல்லே பாவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் ‘ ராஜாங்க அமைச்சர் ‘ என்ற சொல் நடைமுறையில் உள்ளதால் அச்சொல்லே இக்கட்டுரையில் பாவிக்கப்படுகின்றது.

இவர்களை நியமிப்பதா? இல்லையா? என்று தீர்மானிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்குரியது. நியமிப்பதாயின் பிரதமர் முன்மொழிகின்றவர்களையே நியமிக்க வேண்டும். 44(1). நீக்க வேண்டும்.

இவர்களுடைய அதிகாரம்

இவர்களுக்கு தனியாக அதிகாரம் வழங்கலாம், வழங்காமலும் விடலாம். அதிகாரம் வழங்குவதாயின் இருவகையாக வழங்கலாம். ஒன்று ஜனாதிபதி நேரடியாக வர்த்தமானி மூலம் வழங்குவது அல்லது உரிய அமைச்சர் வர்த்தமானி மூலம் வழங்குவது

ஜனாதிபதி அதிகாரம் வழங்குவது

ஜனாதிபதி தேவைப்படின் பிரதமருடன் கலந்தாலோசித்து இவர்களுக்கு அமைச்சர்களுக்கு வழங்குவதுபோன்று தனியான அமைச்சு வழங்கலாம். அல்லது அமைச்சு வழங்காமல் சில விடயதானங்களை மட்டும் வழங்கலாம். 44(2) அவ்வாறு வழங்கினால் அந்த விடயங்களில் அவர்கள் ஒரு முழுமையான அமைச்சரைப்போன்று செயற்படலாம். இவர்கள் பாராளுமன்றத்திற்கும் அமைச்சரவைக்கும் பொறுப்புக்கூறவேண்டியவர்கள். 44(4)

அமைச்சர் அதிகாரம் வழங்குவது

சம்பந்தப்பட்ட அமைச்சர் தனக்குக் கீழ்வரும் அமைச்சு, மற்றும் விடயதானங்கள் தொடர்பாக வர்த்தமானிமூலம் அதிகாரம் வழங்கலாம். 44(5)

இவர்களுக்கு ஜனாதிபதியோ, சம்பந்தப்பட்ட அமைச்சரோ இவ்வாறு அதிகாரம் வழங்கவேண்டுமென எந்தக்கட்டாயமுமில்லை.

பிரதியமைச்சர்கள்

இவர்களும் பிரதமரின் சிபாரிசின்பேரிலேயே நியமிக்கப்பட வேண்டும். நீக்கப்பட வேண்டும்.

இவர்களுக்கு ஜனாதிபதி நேரடியாக அதிகாரம் வழங்குவதில்லை. சம்பந்தப்பட்ட அமைச்சர் வர்த்தமானி மூலம் வழங்கலாம்.

கடந்தகாலங்களில் சில சந்தர்பங்களில் ராஜாங்க அமைச்சர்களுக்கு தனியான அமைச்சுக்களும் அதிகாரங்களும் வழங்கப்பட்ட வரலாறுகள் இருக்கின்றன. அதற்காக எப்போதும் அவ்வாறு இல்லை.

தற்போது இவர்களுக்கு தனியான அமைச்சோ, அதிகாரங்களோ வழங்கப்படுமா? எனப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அவ்வாறு வழங்காவிட்டால் ராஜாங்க அமைச்சர்களுக்கும் பிரதியமைச்சர்களுக்கும் நடைமுறையில் எதுவித வித்தியாசமுமில்லை.

இதனுடைய பொருள் அதிகாரம் வழங்காவிட்டால் எதுவும் செய்யமுடியாதென்பதல்ல. உரிய அமைச்சர்களை அணுகி எவ்வளவோ சாதிக்கலாம். அது அவரவர் திறமையைப் பொறுத்தது.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com