Showing posts with label cont.kadurai. Show all posts
Showing posts with label cont.kadurai. Show all posts

Sunday, July 13, 2025

புலிகளின் வதை முகாம்களில் ஒன்றரை ஆண்டுகள் துன்புற்ற தோழர் மணியம் எழுதும் அனுபவத்தொடர் - 4

மனைவி பிள்ளையிடம் விடை பெற்றேன்!

புலிகளின் புலனாய்வுப் பிரிவினர் என்னைக் கைதுசெய்து கொண்டு செல்வதற்கு முன்னர் எனது புத்தகக் கடையைப் பூட்டித் திறப்பை தம்முடன் எடுத்துக் கொண்டனர். அவர்களில் ஜெயந்தன் என்பவன் சின்னவனைப் பார்த்து 'இவருடைய சைக்கிளை என்ன செய்யிறது?' என வினவினான்.

அவர்களது பேச்சிலிருந்து என்னை அவர்கள், கடைசி முறையாகத்தன்னும் எனது மனைவி, பிள்ளையப் பார்க்கவிடாது நேரடியாக கூட்டிச்செல்லப்போகிறார்கள் என்பது புரிந்தது. நான் எப்படியும் எனது மனைவியையும் பிள்ளையையும் கடைசியாக ஒருமுறை பார்த்துவிட வேண்டும் என ஆசைப்பட்டேன். நான் அவ்வாறு விரும்பியதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று, என்னைக் கைது செய்தவர்கள் புலிகள்தான் என்பதை மனைவியிடம் தெரியப்படுத்துவதற்கு வாய்ப்பாக அமையலாம். மற்றது, நான் இறுதியாக வீட்டிற்கு செல்வதன் மூலம், என்னைக் காணவில்லையென அவர்கள் தேடி அலைவதை தவிர்க்கலாம்.

நான் கடைக்கு வரும்போது ஏற்கனவே வீட்டுத் தேவைக்கென வாங்கி வைத்திருந்த பாண் உட்பட சில பொருட்கள் ஒரு கூடைக்குள் எனது சைக்கிளில் இருந்தது. எனவே நான் அதைச்சாட்டாக வைத்து, அவற்றை வீட்டில் கொடுத்துவிட்டுப் போவோம் என அவர்களிடம் கூறினேன்.

முதலில் அவர்கள் அதை முற்றாக ஏற்கவில்லை. வீட்டுக்குப் போனால், என்னைக் கைதுசெய்த விவரம் அறிந்து மனைவி, பிள்ளை, உறவினர்கள் அழுவார்கள் என சின்னவன் கூறினான். 'நான் அப்படி எதுவும் நடக்காது. நீங்கள் தயங்காமல் என்னுடன் வாருங்கள், இந்தப் பொருட்களையும் சைக்கிளையும் எனது வீட்டில் வைத்துவிட்டுப் போவோம்' எனக் கூறினேன்.

எனது வலியுறுத்தலுக்குப் பின்னர், அவர்கள் ஒருவாறு ஒத்துக்கொண்டு, என்னுடன் எனது வீட்டுக்கு வரச் சம்மதித்தார்கள். ஆனால் எனது சைக்கிளை நான் ஓட்டிவர அவர்கள் அனுமதிக்கவில்லை. அவர்களில் ஒருவன் தனது சைக்கிளில் என்னை ஏற்றிக்கொள்ள, இன்னொருவன் எனது சைக்கிளை ஓட்டி வந்தான்.

அந்த மூவருடனும் நான் வீடு சென்றதும், எனது மனைவியும், மாமனாரும் ஒன்றும் புரியாது சற்று வியப்புடனும் அச்சத்துடனும் அவர்களையும் என்னையும் நோக்கினர். நான் நேராக மனைவியிடம் சென்று, அவர்கள் என்னைக் கைதுசெய்து அழைத்துச்செல்ல வந்திருக்கும் விடயத்தைக் கூறினேன்.

நான் கூறியதைக் கேட்டதும், மனைவி கண்கலங்கி அழத்தொடங்கினார். எனக்கு அவர்களால் பெரிதாக ஒன்றும் நடந்துவிடாது என்று சொல்லி, மனைவியைத் தேற்ற முயன்றேன். உண்மையில் எனக்கு அவர்கள் மீது துளியும் நம்பிக்கை இல்லையென்ற போதிலும், மனைவியைச் சமாதானப்படுத்துவதற்காக அவ்வாறு கூறினேன்.

இதற்கிடையில், சின்னவன் எனது வீட்டைச் சோதனையிடப்போவதாகக் கூறினான். நான் தாராளமாகச் சோதனையிடலாம் எனக் கூறினேன். அவன் எமது வீட்டில் இருந்த இரண்டு அறைகளில், எமது படுக்கை அறைக்குள் மட்டும் நேரடியாகப் புகுந்து, அங்குமிங்கும் நோட்டமிட்டுவிட்டு, அங்கிருந்த மேசையைத் திறந்து அதற்குள் இருந்த எனது நாட்குறிப்பை (டயறி) மட்டும் எடுத்துக்கொண்டான். வேறு ஒன்றும் அவனுக்குத் தேவையான பொருட்கள் அங்கு இருக்கவில்லைப்போலும்!

அந்த நாட்குறிப்பை எடுத்துக்கொண்டதையிட்டு நான் கவலையேதும் படவில்லை. ஏனெனில் எனக்கு தினசரி நாட்குறிப்பு எழுதும் பழக்கம் என்றும் இருந்ததில்லை. பெரும்பாலும் சிலருடைய முகவரிகளையும், சில கொடுக்கல் வாங்கல் கணக்குகளையும் மட்டும்தான், நான் அவற்றில் எழுதி வைப்பது வழக்கம். சின்னவன் எடுத்த அந்த நாட்குறிப்புப் புத்தகத்தில் அதுகூட இருக்கவில்லை. கல்வியங்காட்டிலுள்ள ஒரு நண்பரின் திருமணத்துக்குப் போனது மட்டுமே, அதில் எழுதப்பட்டிருந்த ஒரேயொரு விடயம்!

புலிகள் என்னைக் கைதுசெய்த சம்பவம், எனது மனைவியை பெரிதும் பாதித்ததிற்கு நிறையக் காரணங்கள் இருந்தன. என்னைக் கைதுசெய்வதற்கு சில மாதங்களுக்கு முன்பிருந்தே எமக்கு நன்கு பரிச்சயமான பலர் – தில்லை, செல்வி, அன்ரன், மேனாகரன் எனப் பலர் – புலிகளால் கைதுசெய்யப்பட்டு, அவர்கள் பற்றிய தகவல் ஏதும் தெரியாமல் இருந்தது. செல்வியைப் பற்றிய தகவல் அறிவதற்காக செல்வியின் திருமணமான தங்கை கைக்குழந்தையுடன் சேமமடுவிலிருந்து யாழ்ப்பாணம் வந்து, பல நாட்கள் தங்கியிருந்து, புலிகளின் முகாம்களுக்கும், செல்வி கல்வி கற்று வந்த யாழ்.பல்கைலக்கழகத்துக்கும் அலைந்து திரிந்தும் எவ்வித பயனும் இல்லாமல் வீடு திரும்பியிருந்தார். அவர் எமது வீட்டுக்கும் வந்திருந்தபடியால், எனது மனைவிக்கும் இந்த விடயங்கள் யாவும் நன்கு தெரிந்திருந்தது.

எனவே எனது நிலையும் அதுவாகவே போய்விடுமோ என எனது மனைவி அஞ்சியதில் நியாயமிருந்தது. மனைவி பயப்பட்டதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. நான் புலிகளின் இவ்வாறான கைது நடவடிக்கைகளின் போது அடிக்கடி ஒரு விடயத்தை எனது மனைவிக்குக் கூறுவதுண்டு. அதாவது, 'புலிகள் பெரும்பாலும் என்னைப் பிடிக்கமாட்டாங்கள். அப்படியில்லாமல் அவங்கள் என்னைப் பிடித்தாங்கள் என்றால், பிறகு நான் ஒருக்காலும் திரும்பி வரமாட்டேன்' என நான் கூறுவதுண்டு. எனவே இப்பொழுது அவர்கள் என்னைப் பிடிக்க வந்தபடியால், எனது வாழ்வும் தனது வாழ்வும் அத்துடன் முடிந்துவிடப் போகிறது என மனைவி கவலையடந்தார்.

என்னைக் கைதுசெய்யமாட்டார்கள் என நான் தைரியத்துடன் கூறிவந்ததிற்கு ஒரு காரணம் இருந்தது. அதில் ஒன்று, நான் எனது 17வது வயதில் இருந்து எனது மக்களுக்காக, எனது சொந்த நலன்களை சுகங்கைளத் துறந்து உழைத்து வந்திருக்கிறேன். ஆரம்பத்தில் மாணவர் பிரச்சினைக்கான போராட்டங்களிலும், பின்னர் உயர்சாதி வெறியர்களுக்கெதிரான தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டங்களிலும், பின்னர் வன்னிப் பிரதேசத்தில் விவசாயிகளின் பிரச்சினைகளுக்காக நடைபெற்ற பேராட்டங்களிலும் நான் தீவிர பங்கெடுத்து வந்திருக்கின்றேன்.

பின்னர், 1970களில் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை தீவிரமடைந்து, அரசியல்ரீதியான போராட்டங்கள் ஆரம்பமான போது, அதிலும் பங்குபற்றியுள்ளேன். தமிழ் இளைஞர்களின் ஆயுதப்போராட்ட இயக்கங்கள் ஆரம்பமாவதற்கு முன்னரே எமது கட்சியான இலங்கை மார்க்சிச – லெனினிச கம்யூனிஸ்ட் கட்சி, 'தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி' என்ற வெகுஜன அமைப்பை உருவாக்கிய போது, அதில் முன்னணி நபர்களில் ஒருவராகச் செயல்பட்டுள்ளேன். நான் பங்குபற்றிய இந்தப் போராட்டங்களின் போது, சில தடவைகள் பொலிசாரால் தாக்கப்பட்டதுடன், பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டும் உள்ளேன்.

நான் பின்பற்றிய கொள்கைகள், நடைமுறைகள் காரணமாக, பழமைவாதப் பிடிப்புள்ள எனது உறவினர்கள் சிலரால் நீண்டகாலம் ஒதுக்கி வைக்கட்டும் வந்திருக்கிறேன். இவை தவிர, பெரும்பாலான தமிழ் ஆயுதப்போராட்ட இயக்கங்கள் ஆரம்பம் முதலே என்னுடன் நெருங்கிய உறவுகளைப் பேணிவந்துள்ளன. அந்த நேரத்தில் இந்த இயக்கங்கள், தமது பிரச்சார ஏடுகளை அச்சிடுவதற்கு யாழ்ப்பாணத்திலுள்ள எந்தவொரு அச்சகமும் முன்வரவில்லை. அதற்குக் காரணம், இந்த இயக்கங்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியை எதிர்த்து தமது அரசியலை ஆரம்பித்ததால், அவர்களது எந்தெவாரு பிரசுரத்தையும் அச்சிட்டுக் கொடுக்கக்கூடாது என, கூட்டணியின் செயலாளர் நாயகம் அ.அமிர்தலிங்கம் அச்சகங்கள் (எம்மைத்தவிர) எல்லாவற்றையும் தடுத்திருந்தார்.

எனவே, அமிர்தலிங்கத்தின் வேண்டுகோளுக்கோ மிரட்டலுக்கு அடிபணியாத எமது 'நொதேர்ண் பிறின்ரேர்ஸ்' அச்சகத்தை நாடி, அநேகமான இயக்கங்கள் உதவி கேட்டு வந்தன. பிரபாகரனும் உமா மகேஸ்வரனும் ஒன்றுபட்டு இருந்த காலத்தில் ஆரம்பித்த 'உணர்வு' பத்திரிகை, ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்க மாணவர் அமைப்பின் 'ஈழ மாணவர் குரல்', இப்பொழுது சிறையில் இருக்கும் தேவதாசின் 'பலிபடம்', 'உதயசூரியன்', 'சிம்மக்குரல்', எமது கட்சியின் 'போராளி' என பல பத்திணிகைகைள நான் அச்சிட்டேன். அத்துடன் இயக்கங்களின் பிரசாரப் பிரசுரங்கள், யாழ்.பல்கலைக்கழகத்தில் செயல்பட்ட புலிகளின் மறுமலர்ச்சிக்கழக வெளியீடுகள் எனப் பலவற்றையும் அச்சிட்டேன். இவற்றை அச்சிட்டதால், பல தடவைகள் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைகளுக்கும் உள்படுத்தப்பட்டேன்.

அந்த நேரத்தில் என்னுடன் நல்ல உறவுகளைப் பேணியதில் புலிகளின் இயக்கமும் ஒன்று. அந்த இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரன் தவிர்ந்த ஏனைய முன்னணி உறுப்பினர்களான மாத்தையா, அன்ரன் பாலசிங்கம், திலீபன், கிட்டு, மூர்த்தி (அப்போதைய அரசியல் பொறுப்பாளர் – தமிழ்செல்வனின் அண்ணன்), யோகி, லோறன்ஸ் திலகர், சந்தோசம், புதுவை இரத்தினதுரை, பண்டிதர் என பலரும் என்னுடன் பழகி வந்தனர். இந்திய அமைதிப்படை காலத்தில், யாழ்.பல்கலைக்கழகத்துக்கு முன்னால் அமைந்திருந்த எனது புத்தகக்கடைக்கு அருகாமையில் இருந்த புலிகளின் இரண்டு மாடித் தலைமைக் காரியாலயத்தில், ஒரு கட்டத்தில் மேல்மாடியில் இந்திய இராணுவ அதிகாரியின் காரியாலயமும், கீழ்த்தளத்தில் பலிகளின் காரியாலயமும் செயற்பட்டன. இரு பகுதியினரும் எனது கடையில்தான் கொழும்பு தினசரிகளை வாங்குவது வழமை. பத்திரிகைப் பிரியரான அன்ரன் பாலசிங்கம் (ஆரம்பத்தில் பாலசிங்கம் வீரேகசரி பத்திரிகையில் வேலை செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது), கொழும்பிலிருந்து பத்திரிகைகளைக் கொண்டுவரும் 'யாழ்தேவி' புகையிரதம் யாழ்ப்பாணம் வந்துசேரும் பிற்பகல் 2 மணி அளவில் எனது கடையில் வந்து காவல் இருந்து பத்திரிகைகளை தானே எடுத்துச் செல்வது வழக்கம். அந்த நேரத்தில் அவர் என்னுடன் பொதுவாக உரையாடுவார். அதன்காரணமாக அவருடன் எனக்கு நன்கு அறிமுகம் ஏற்பட்டிருந்தது.

எல்லோருடனும் நான் பழகினாலும், என்னுடைய கொள்கைகள் மிகவும் வெளிப்படையானவை. நான் எப்பொழுதும் மார்க்சிச – லெனினிச நிலைப்பாட்டிலிருந்தோ, கட்சி நிலைப்பாட்டிலிருந்தோ என்னை விலகாமல் பார்த்துக் கொண்டேன். தமிழ் மக்களின் பிரச்சினை தீவிரமடைந்து, ஆயுதப் போராட்டமாக அது வெடித்த பின்பு, எமது கட்சியிலிருந்த பலர் – முன்னணித் தோழர்கள் உட்பட - பல்வேறு இயக்கங்களுடன் இணைந்து வேலைசெய்ய ஆரம்பித்தனர். எமது கட்சியால் உருவாக்கப்பட்ட 'தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி' என்ற அமைப்புக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்ட சிலர், அதன் அடிப்படைக் கொள்கையான 'ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்கள் பகுதிகளுக்கு சுயாட்சி' என்பதைக் கைவிட்டு, பிற்போக்கானதும், அடைய முடியாததுமான 'தமிழ ஈழம்' என்ற கொள்கைக்கு மாறியதுடன், முன்னணியின் பெயரையும் 'தமிழீழ தேசிய விடுதலை முன்னணி' (Nடுகுவு) என மாற்றிக் கொண்டனர்

அதன்காரணமாக அந்த இயக்கத்துடனும் நாம் அரசியல் ரீதியான தொடர்புகளைத் துண்டித்திருந்தோம். ஆனால் தனிப்பட்ட முறையில் அனைத்து இயக்க உறுப்பினர்களுடனும் நட்புடன் உறவாடி வந்தோம். எமது கட்சியிலிருந்த மிகச்சிலரே இவ்வாறு நிலை தளும்பாது எமது கொள்கையில் உறுதியாக நின்றனர். இந்தப் போராட்டம் பிற்போக்கானது, ஒருபோதும் வெற்றி பெறாது என்ற அசையாத நிலைப்பாட்டில் நாம் நின்றோம். வரலாறு அதை இன்று தெளிவாக நிரூபித்துள்ளதையிட்டு, நாம் பெருமையும் மகிழ்ச்சியுமடையாமல் இருக்க முடியாது.

எனவே, புலிகள் எல்லா இயக்கங்களையும் ஒன்றன் பின் ஒன்றாகத் தடைசெய்து, அந்த இயக்கங்களின் உறுப்பினர்களை ஒன்றில் கொன்று குவித்தோ அல்லது கைது செய்தோ அராஜகம் விளைவித்த போது, அவர்கள் தமக்கு போட்டி எனக்கருதிய எந்தெவாரு இயக்கத்திலும் அங்கம் வகிக்காத என் மீது கை வைப்பார்கள் என நான் நினைத்திருக்கவில்லை. அந்தத் துணிச்சலில்தான், அவர்கள் என்னைத்தேடி ஒருபோதும் வரமாட்டார்கள் என எனது மனைவிக்கு நம்பிக்கை ஊட்டி வந்தேன்.

ஆனால் அவர்கள் என்னையே தேடி வந்து கைதுசெய்த போது, ஜேர்மனியில் ஹிட்லர் தலைமையிலான நாஜிகள் எவ்வாறு முதலில் கம்யூனிஸ்ட்டுகளில் ஆரம்பித்து, பின்னர் ஜனநாயகவாதிகள், யூதர்கள் விரிந்து சென்று, கடைசியில் தனது சொந்த ஜேர்மன் மக்கள் மீதே கை வைத்தார்களோ, அதேபோல புலிகள் மாற்று தமிழ் இயக்கங்கள் என்று ஆரம்பித்து, ஆயுதம் ஏந்தாத, அதுவும் அரசியலிலிருந்து சற்று ஒதுங்கியிருந்த என் போன்றவர்கள் மீதும் கையை வைத்தனர்.

அவர்களது கைது எனக்கு ஒன்றைத் தெளிவாக உணர்த்தியது. அதாவது பாசிசவாதிகள் தங்கள் நோக்கங்களை அடைவதற்கு மக்களை இலேசாக ஈர்க்கும் வெவ்வேறு இன, மொழி, மத உணர்வுகளைப் பயன்படுத்துவார்கள். ஆனால் குணாம்சத்தைப் பொறுத்தவரையில் எல்லா நாட்டுப் பாசிஸ்ட்டுகளும் ஒரே இனம்தான் என்பதே அது.

மனைவி அழுது குழற அவர்களுடன் புறப்பட்டேன். புறப்படும்போது, உடுத்திருந்த உடுப்புடன், எனக்கு தொய்வு கடுமையாகும் போது நான் வழக்கமாக அணியும் கம்பளி சுவெற்றரையும், சில மருந்துக் குளிசைகளையும் எடுத்துக் கொண்டேன்.

தொடரும்..



Read more...

Saturday, July 5, 2025

புலிகளின் வதை முகாம்களில் ஒன்றரை ஆண்டுகள் துன்புற்ற தோழர் மணியம் எழுதும் அனுபவத்தொடர் – 3

3. புலிகளின் ஒற்றர்களால் கைதுசெய்யப்பட்டேன்!

நான் எமது புத்தகக்கடையை அண்மித்தேபாது, கடைக்கு முன்னால் சைக்கிளில் காலுன்றி நின்றவரின் உருவத்தை நன்கு அவதானிக்க முடிந்தது. 'சந்தேகத்துக்கு இடமின்றி இந்தப்பொடியன் அவங்கடை ஆள்தான்' என்பதை அனுமானித்துக் கொண்டேன். நான் எனது சைக்கிளைவிட்டு இறங்கியதும் அந்தப்பையன் என்னை நிமிர்ந்து பார்த்துவிட்டு, எனது கடையில் இருந்த தோழர் தவராசாவின் முகத்தையும் பார்த்தான். அதாவது 'இவர்தான் நாங்கள் தேடிவந்த மணியம் என்பவரா?' என்ற கேள்வி அந்தப்பார்வையில் இருந்தது.

பதிலுக்கு தவராசாவும் 'உன்னைத்தேடி வில்லங்கமான ஆட்கள் வந்திருக்கிறாங்கள்' என்ற தகவலைத் தன் கண்களால் எனக்கு உணர்த்தினார். வந்திருப்பவன் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவன் என்பதை ஊகித்தறிய எனக்குச் சிரமமேதும் இருக்கவில்லை. சாதாரணமாகவே, தமிழ் மக்களுக்கு, அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்தவர்களுக்கு, சில அசாத்திய மோப்பக்குணங்கள் உண்டு. தனது இனத்திலுள்ள யாராவது ஒருவரை சந்திக்க நேர்ந்தால், சிறிதுநேர உரையாடலின் பின், அவர் எந்த ஊரவர், என்ன சாதியைச் சேர்ந்தவர் என்பைத ஓரளவு சரியாகச் சொல்லி விடுவர். இந்தப் புலனாய்வுத் திறமை, அவர்களைப் பொறுத்தவரை தமிழ் இயக்கங்கள் பற்றிய அவர்களது கணிப்பீடுகளுக்கும் பொருந்தும். இயக்கப் 'பொடியளைக் கண்டால், அவர்கள் எந்த இயக்கம் என்பதை சரியாக மதிப்பிட்டு விடுவர்.

என்னைப் பொறுத்தவரை, நான் தமிழன், அதிலும் யாழ்ப்பாணத் தமிழன் என்பதற்கும் அப்பால், ஓரளவு மானிடப் பண்புகள் பற்றிப் புரிந்து வைத்திருந்ததாலும், தமிழ் அரசியல் கட்சிகள், இயக்கங்கள் என்பனவற்றின் கொள்கைகளை மட்டுமின்றி, அதன் உறுப்பினர்களின் வளர்ப்புமுறைகள், பழக்க வழக்கங்கள் பற்றி நன்கு அறிந்து வைத்திருந்ததினாலும், வந்திருப்பவனைப் பற்றி தெளிவாக ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன். அன்றைய காலகட்டத்தில், ஆயிரம் பேர் கொண்ட ஒரு கூட்டத்தில், ஐந்து புலிகளை புகுத்திவிட்டால், அவர்களை சுலபமாக இனம்கண்டுவிட முடியும். காரணம், சாதாரண மக்களுக்கும் புலி உறுப்பினர்களுக்கும் இடையில் உள்ள தோற்ற மற்றும் பழக்க வழக்க வித்தியாசங்களாகும். நீண்ட கொடிய யுத்தத்தின் காரணமாக உயிர்களையும் உடைமைகளையும் இழந்து, ஜே.ஆர்.ஜெயவர்த்தன – பிரேமதாச அரசுகளின் நீடித்த பொருளாதாரத் தடைகள் காரணமாக வாடி வதங்கிப் போயிருந்த, சாதாரண தமிழ்ப் பொதுமக்களையும், பிரபாகரனால் 'வேள்விக்கு வளர்த்த ஆட்டுக்கடாய்கள்' போலிருந்த புலி உறுப்பினர்களையும், ஒருவர் சுலபமாக பாகுபடுத்திப் பார்த்துவிட முடியும்.

ஒரு கிராமப்புறச் சிறுவன், புலிகளினால் தமது இயக்கப் பயிற்சிக்காக பிடித்துச் செல்லப்படும்போது நோஞ்சானாகத்தான் இருப்பான். பின்னர் சில மாதங்களோ வருடங்களோ கழித்து அவனை அவனது பெற்றோர்களோ, உறவினர்களோ, ஊரவர்களோ, நண்பர்களோ காணும்போது, அடையாளம் தெரியாத அளவுக்கு அவனது உடலும் உள்ளமும் மாறிவிட்டிருக்கும். அவனுக்கு முகாமில் வழங்கப்படும் பயிற்சிகள், உணவு என்பன காரணமாக அவன் உருண்டு திரண்ட வாட்ட சாட்டமான ஆளாக மாறிவிட்டிருப்பதுடன், அவனது தோற்றத்தில் ஒரு அதிகார ஆணவ மிடுக்கும் உருவேறி இருக்கும். அவனது பெற்றோரே, அவனுடன் கதைக்கும்போது, மிகுந்த அவதானத்துடனும், பயபக்தியுடனும் கதைப்பதைக் காணக்கூடியதாகவிருக்கும். முன்பு அவனை 'தம்பி' என்றழைத்த ஊரவர்கள், 'நீங்கள்' என்றழைப்பதையும், முன்பின் பழக்கமில்லாத ஒரு வயோதிபர் கூட, அந்த 16 -17 வயது சிறுவனை, 'அண்ணை' என விழிக்கும் அவலத்தையும் காணமுடியும்.

தமிழ் இளைஞர்களின் ஆயுதப்போராட்ட இயக்கங்கள் ஆரம்பிக்கப்பட்ட ஆரம்ப காலங்களில், மற்றைய இயக்கங்களை விட, புலிகள் இயக்கம் சற்று வித்தியாசமாக மக்கள் மத்தியில் பார்க்கப்பட்டது. மற்றைய இயக்கத்தவர்கள் போல புலிகள் மக்களுடன் கண்டபடி ஊடாடமாட்டார்கள். அவர்கள் மற்றைய இயக்கத்தவர்களை மட்டுமின்றி, பொதுமக்களையும் சந்தேகக்கண்கொண்டே நோக்குவர். அந்த நோக்கில் பார்ப்பவர்களை மிரளப்பண்ணும் ஒரு பயங்கரப்பார்வை உள்ளுறைந்து இருக்கும்.

அப்பொழுதெல்லாம் புலிகளின் புலனாய்வுப் பிரிவினர், வழமையானைதவிட நீண்ட சேர்ட்டுகளை அணிந்திருப்பவர். சிலரது பின்பக்கத்தில் சேர்ட்டுக்குள்ளே பிஸ்ரல் துருத்திக் கொண்டிருப்பது தெரியும். அவர்களைப் பார்த்துவிட்டு, சில சாதாரண இளைஞர்களும், நீண்ட சேர்ட்டுகளை அணிந்துகொண்டு, சேர்ட்டுக்குள்ளே ஒரு தடியைச் செருகிக்கொண்டு, தம்மையும் 'ஐ'ன்னாவாக (ஐவெநடடபைநnஉந) உருவகித்து மக்கைளத் திகில்பண்ணச் செய்ததும் உண்டு! அப்பொழுது இந்த நீண்ட 'பக்கி' சேர்ட் அவர்களது 'சிம்போலிக்காக'ப் பார்க்கப்பட்டது.

கிட்டு யாழ் மாவட்டத் தளபதியாக இருந்த காலத்தில், 'கொக்கோகோலா' பானம் அவர்களது இன்னொரு 'சிம்போலிக்'காகச் சில காலம் இருந்தது. ஏதாவது ஒரு கடையில் வாட்டசாட்டமான இளைஞர்கள் வந்து கொக்கோகோலா பானம் கேட்டால், கடைக்காரர் அவர்கள் யார் என்பதைப் புரிந்துகொண்டு, அவர்களது தேவையை முதலில் பூர்த்தி செய்து அனுப்பி வைப்பது வழக்கம். பின்னர், அந்த நேரத்தில் புலிகளின் வன்னிப் பொறுப்பாளர் மாத்தையாவுக்கும் கிட்டுவுக்கும் இருந்த முரண்பாடு, முறுகலாக முற்றிய பின்னர், பரந்தனிலிருந்து புதுக்குடியிருப்பு செல்லும் வழியில் பதின்மூன்றாம் கட்டையில் தேராவில் குளத்துக்கு அண்மையில் முகாமிட்டிருந்த மாத்தையா, கிட்டுவின் புலிகளுக்கு சென்ற ஒரு லொறி கொக்கோகோலா போத்தல்களைத் தடுத்து நிறுத்தி, அவர்கைளக் 'காயப்போட்டதும்' நடந்தது.

இந்த இடத்தில், புலிகளின் உறுப்பினர்களுக்கும், மாபெரும் சீன – வியட்நாமிய புரட்சிகளின் போது, தமது தாய்நாட்டின் விடுதலைக்காக அர்ப்பணிப்புடன் போராடிய கம்யூனிஸ்ட் கெரில்லாப் போராளிகளுக்கும் இடையிலான அடிப்படை வித்தியாசத்தை தெரிந்துகொள்வது பயனுள்ளதாகவிருக்கும்.

அந்த நாடுகளில் நடைபெற்றது, முழுக்க முழுக்க பொது எதிரியான அந்நிய ஆக்கிரமிப்பாளனுக்கு எதிரான புரட்சிகர மக்கள் யுத்தமாகையால், மக்கள் யார், போராளிகள் யார் என்பதை எதிரிகளால் சுலபத்தில் அறிந்துகொள்ள இயலாது. இதற்கு உதாரணமாக, இங்கு ஒரு சம்பவத்தைக் குறிப்பிடலாம்.

ஒருமுறை வியட்நாமில் ஒரு கிராமத்தைச் சுற்றிவளைத்த அமெரிக்க ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புப் படைகள், விடுதலைப் போராளிகளான 'வியட்கொங்' கெரில்லாக்கள் 10 பேரை சந்தேகத்தில் கைதுசெய்தனர். அவர்களை வரிசையாக நிறுத்தி வைத்து, அவர்களது குழுவுக்கு தலைவன் யார் எனக் கேட்டனர். எவ்வளவோ மிரட்டிக் கேட்டும், (கழுத்தில் iசைனட் குப்பி அணியாத) அந்தப் போராளிகள் தமது தலைவனைக் காட்டிக்கொடுக்கவில்லை. ':நீங்கள் தலைவன் யாரெனச் சொல்லாவிட்டால், எல்லோரையும் ஒவ்வொருவராகச் சுட்டுவிடுவோம்' என எச்சரித்துவிட்டு, வரிசையில் முதலில் நின்றவைனச் சுட்டுக் கொன்றனர்.

அதன் பின்னர் அந்தப் போராளிகளை நோக்கி, 'இப்பவாவது சொல்லுங்கள். உங்கள் தலைவன் யார்?' என வினவினர்.

அங்கு நிலைகுலையாது எஞ்சி நின்ற 9 பேரின் விரல்களும், அமெரிக்கப்படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட தமது சக தோழனை நோக்கி நீண்டன. உண்மை அதுவல்ல என்ற போதிலும், தாம் சரியான ஆளை இனம்கண்டு ஒழித்துக்கட்டியதாக நம்பிய அமெரிக்கப்படையினர், அத்துடன் சுடுவதை நிறுத்திவிட்டனர்.

இதுதான் மக்களைச் சார்ந்து நின்று போராடும் பாட்டாளிவர்க்கப் போராளிகளுக்கும், புலிகள் போன்ற பாசிசப் பாணியிலான படைகளுக்குமுள்ள அடிப்பைட வித்தியாசம்.

எனவே என்னைத்தேடி வந்திருந்த அந்த இளைஞனை யார் என்று அடையாளம் காண்பதில் எனக்கு எவ்வித சிரமமும் இருக்கவில்லை. எனது தலைக்கு மேலே 'பாசக்கயிறு' வீசப்பட்டுவிட்டதை உணர்ந்தேன்.

தோழர் தவராசா என்னைப் பார்த்து, 'உன்னைத்தான் பார்த்துக்கொண்டு நிற்கிறான்' என மெதுவாகச் சொன்னார்.

அதற்கிடையில், அவனும் தனது சைக்கிளை நிறுத்திவிட்டு, கடை வாசற்படிக்கருகில் வந்து நின்றான்.

நான் அவைனப் பார்த்து, 'தம்பி என்னிட்டையோ வந்திருக்கிறர்கள்?' என வினவினேன்.

'உங்களை வந்தால் ஒரு இடமும் போகாமல் நிக்கச் சொல்லி சின்னவன் அண்ணை சொன்னவர்' என அவன் என்னிடம் கூறினான்.

„சின்னவன் அண்ணை ஆர்?' என நான் அவனிடம் வினவினேன்.

'அவர்தான் எங்கைட ரவுண் (யாழ்.நகர) இன்ரெலியென்ற் (புலனாய்வு) பொறுப்பாளர்' என அவன் மீண்டும் கூறினான்:

'என்ன விடயமாக என்னை சந்திக்க வந்துள்ளார்' இது நான்.

„எனக்குத் தெரியாது வந்தவுடன் பேசுங்கள்.' இது அவன்.

'சரி அவர் வரும்வரைக்கும் நீங்கள் உள்ளே வந்து இருங்கோ' என ஒரு ஆசனத்தை சுட்டிக்காட்டி அவைன அழைத்தேன். ஆனால் அவன் வரவில்லை. நான் எங்கும் தப்பியோடிவிடாதபடி என்னைக் காவல் காப்பது போல கடையின் முன்னால் நின்று கொண்டான்.

சிறிதுநேரம் கழித்து சின்னவன் என அழைக்கப்பட்டவர் கடைக்கு வந்துசேர்ந்தார். அவருடன் இன்னுமொருவரும் வந்தார். அவர் தெங்கு பனம் பொருள் உற்பத்தி விற்பனவுச் சங்ககமொன்றில் வேலை செய்பவர் எனப் பின்னர் அறிந்து கொண்டேன். அவர்கள் இருவரும் யாழ் வீதியிலிருந்த புலிகளின் நகரக் காரியாலயம் சென்று, அங்குள்ள பொறுப்பாளரிடம் என்னைக் கைதுசெய்யப்போவைத அறிவித்துவிட்டு வரவே சென்றனர் என்பதையும், பின்னர்தான் அறிந்து கொண்டேன். எனக்காக முதலில் காத்துநின்ற இளைஞனின் பெயர் ஜெயந்தன் என்பதையும் தெரிந்து கொண்டேன்.

நேராக என்னிடம் வந்த சின்னவன் தனது அடையாள அட்டையை என்னிடம் காண்பித்து, 'நான் சின்னவன், புலனாய்வுத்துறை யாழ் நகரப் பொறுப்பாளர், உங்களை ஒரு விசாரணைக்காக கூட்டிச்செல்ல வந்திருக்கிறேன்' என்றான்.

'என்ன விசாரணை என்று அறியலாமோ?' என நான் அவனிடமும் வினவினேன்.

'அதை விசாரணை நடாத்துபவர்கள் உங்களிடம் சொல்வார்கள்' எனப் பதிலளிக்கப்பட்டது.

அதன்பின்னர் கடையிலிருந்த மேசையின் லாச்சிகளை அவன் திறந்து ஆராய்ந்தான். பின்னர் அதற்குள்ளிருந்த இலங்கையின் வீதி வரைபடம் ஒன்றை மட்டும் எடுத்துக் கொண்டான்.

பின்னர் தோழர் தவராசாவை உற்றுநோக்கிய புலிகளின் ஒற்றன், 'இவர் யார்?' என வினவிவிட்டு, தன்னுடன் வந்தவர்களை நோக்கி 'இவரை என்ன செய்வது? கொண்டுபோகவா?' எனக் கேட்டான். இந்த இடத்தில் நான் குறுக்கிட்டு, 'அவர் மருந்து வாங்குவதற்கு பணம் கேட்டு என்னிடம் வந்தவர். அவரை எதற்காகக் கொண்டு போகுறீர்கள்?' என்று கேட்டேன்.

பின்னர் அவர்கள் கடையைப் பூட்டித் திறப்பைத் தம்முடன் எடுத்துக்கொண்டு புறப்படத் தயாராகினர். இந்தச் சந்தர்ப்பத்தில் தவராசா தனது பழைய சைக்கிளை எடுத்துக்கொண்டு, தனது வீட்டுக்குப் புறப்பட்டுவிட்டார். அவரை அவர்கள் விட்டுவிட்டது எனக்குப் பெரும் ஆறுதலாக இருந்தது. ஏனெனில் அவர்கள் அவரையும் கைதுசெய்து கொண்டு போயிருந்தால், வாய்பேச முடியாத அவரது குமர்ப்பிள்ளை உதவியின்றி தத்தளித்திருப்பார். அத்துடன் நோயாளியான தவராசாவும் புலிகளின் வதை முகாமில் சில நாட்களிலேயே மரணித்திருப்பார்.

நான் உயிருடன் திரும்பி வருவேன் என்ற நம்பிக்கை கிஞ்சித்தும் அற்ற ஒரு நிலையில், தவராசாவின் கண்களும் எனது கண்களும் இறுதியாக ஒருமுறை சந்தித்துக் கொண்டன. அவரது கண்களில் தெரிந்த வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத சோகமும், நிராசையும் இன்றும் எனது மனக்கண்ணில் வந்து போய்க்கொண்டே இருக்கிறது.

இந்த இடத்தில் ஒரு சோகமான விடயத்தைக் குறிப்பிட வேண்டும். நான் புலிகளின் பிடியிலிருந்து ஒன்றரை வருடங்களின் பின்னர் விடுதலையாகி வந்தேபாது, முதல் வேலையாக தோழர் தவராசாவைச் சென்று பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டேன். ஆனால் விடுதலை செய்யப்பட்ட பின்னரும்கூட, புலிகளின் உளவாளிகள் தொடர்ந்தும் என்னைக் கண்காணித்து வந்ததால், எனது கட்சித் தோழர்களைச் சந்திப்பதைத் தவிர்த்து வந்தேன். நான் அவசரப்பட்டு சந்தித்தால், என்னைவிட அவர்களுக்குத்தான் தொல்லைகள் உருவாகும் என்பதால் அவ்வாறு தவிர்த்தேன்.

அந்தச் சூழ்நிலையில் ஒருநாள் தவராசாவின் உரும்பிராய் வீட்டுக்கு அருகில் வசித்து வந்த எனது ஊரைச் சேர்ந்த ஒரு பெண்மணியை எதேச்சையாகச் சந்தித்த போது, 'தவராசா அண்ணர் எப்படி இருக்கிறார்?' என ஆவலுடன் வினவினேன்.

'அவரா, அவர் மோசம் (மரணித்து) போய் ஒரு மாசமாச்சு. நேற்றுத்தான் அந்தியேட்டி நடந்தது' என அவர் சொன்னார். இந்தத் தகவல் எனக்கு பேரதிர்ச்சியையும், பெரும் ஏமாற்றத்தையும் அளித்தது. குறிப்பாக அவர் இல்லாத சூழலில், அவரது மகளின் எதிர்காலம் எப்படி அமையப் போகிறது என நான் மிகவும் கவலைப்பட்டேன். பின்னர் ஒருமுறை தற்செயலாக நல்லூர் கந்தசாமி கோவிலுக்கு அருகாமையில் அவரது மகளைக் கண்டு சுகம் விசாரிக்க முடிந்தது. அதன்பின்னர் 1995 ஒக்ரோபர் 30 மாபெரும் இடப்பெயர்வு, பின்னர் கொழும்புக்கு இடம் பெயர்ந்தமை என்பன காரணமாக தவராசாவின் மகள் பற்றி எதுவும் அறிய முடியவில்லை.

ஆனால் நான் வெளிநாட்டுக்கு வந்தபின்னர், தோழர் தவராசாவின் சொந்த ஊரான உடுப்பிட்டியைச் சேர்ந்தவரும், அவருடன் இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பருத்தித்துறை டிப்போவில் ஒன்றாக வேலை செய்தவருமான இன்னொரு தோழர் சொன்ன தகவல் என்னை அதிர்ச்சியில் உறைய வைத்தது. அதாவது, தவராசாவின் அந்த வாய்பேச முடியாத மகளையும் புலிகள் கொன்றுவிட்டார்கள் என அந்த தோழர் கவலையுடன் தெரிவித்தார்.

ஆக மொத்தமாக தோழர் தவராசாவின் முழுக்குடும்பத்தையும், ஈழப்போராட்டமும் அதன் மூலம் வளர்ந்த பாசிச மாபியாக் கும்பலும் அழித்துவிட்டது. இப்படி எத்தனை குடும்பங்களோ? தோழர் தவராசா புத்தகக்கடையை விட்டு அகன்றபின்னர் புலிகளின் ஒற்றர்களுடன் நான் போகத் தயாரானேன்.

தொடரும்



Read more...

Tuesday, July 1, 2025

புலிகளின் வதை முகாம்களில் ஒன்றரை ஆண்டுகள் துன்புற்ற தோழர் மணியம் எழுதும் அனுபவத்தொடர் (2)

அதேநேரத்தில், இடதுசாரித்துவம் பேசியவர்கள் சிலரும், மாற்றுக்கருத்துக் கைதத்தவர்களும், மனித உரிமைக் கோசம் போட்டவர்களும் சந்தர்ப்பவாதிகளாகவும், பதவி வேட்டைக்காரர்களாகவும், ஓடுகாலிகளாகவும் மாறிப் புலிகளின் காலடியில் சரணாகதி அடைந்துவிட்ட நிலையிலும்கூட, உயிராபத்துகள், பல இடர்ப்பாடுகள் வந்தபோதிலும் நிலை தழும்பாது நின்று, புலிகளின் பாசிசச் செயற்பாடுகளை இறுதிவரை நம்பிக்கையுடன் எதிர்த்துப் போராடிய இன்றும் போராடுகின்ற உண்மையான முற்போக்கு – ஜனநாயக சக்திகளுக்கும் சிரம் தாழ்த்துகின்றேன்

2. எதிர்பாராத அழைப்பு

இங்கு நான் எழுதப்போகும் வரலாறு 1991ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ந் திகதி ஆரம்பிக்கின்றது. அதாவது கிறிஸ்துமசுக்கு அடுத்த நாள். 18 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றை சரியான தகவல்களுடன் தரமுடியுமா எனச் சிலர் கருதக்கூடும்.

உண்மைதான். உலகம் போகிற வேகத்தையும், நடக்கும் சம்பவ வரிசைகளின் அணிவகுப்பையும் பார்த்தால், நேற்று நடந்ததையே நாம் இன்று மறந்துவிடுகிற காலமிது. ஆனால் என்னைப் பொறுத்தவரை எனது வாழ்க்கையில் ஏற்பட்ட மிகவும் துயரமான இந்த வரலாற்றுச் சம்பவங்கள் என்றுமே மறக்கக் கூடியைவ அல்ல. அதுமாத்திரமின்றி தமிழ் சமூகத்தில் எனக்கு மட்டுமின்றி மேலும் பலருக்கு நிகழ்ந்த இந்த அவலங்கள் என்றோ ஒருநாள் வரலாற்றின் பக்கங்களில் நிச்சயமாகப் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதற்காக, முடியுமானவரை அவற்றின் குறிப்புகளை ஏற்கனவே தயாரித்து வைத்திருந்தேன். எனேவ சில வேளைகளில் ஒருசில சம்பவங்கள் மறந்துவிட்டிருந்தாலும், அவற்றக்குப் பதிலாக இட்டுக்கட்டப்பட்ட விடயங்கைள ஒருபோதும் புகுத்தமாட்டேன் என உறுதி கூறுகிறேன்.

அது ஒரு வியாழக்கிழைம. நேரம் பிற்பகல் 3 மணியிருக்கும். யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் ஆரியகுளம் சந்திக்கு சமீபமாக, பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு எதிராக, நான் நிர்வகிக்கும் யாழ் புத்தக நிலையத்திலிருந்து, மிக அருகாமையில் அத்தியடி புது வீதியில் அமைந்திருந்த எனது வீட்டுக்கு மதிய உணவிற்காகச் சென்றேன். இந்த இடத்தில் இந்த யாழ் புத்தக நிலையம் பற்றியும் சிறிது சுருக்கமாகச் சொல்லிவிடுவது அவசியமானது. இந்தப் புத்தகக்கடை 1963ல் உருவானது. இது வெறும் வியாபார நோக்கத்துக்காக தொடங்கப்பட்ட ஒன்றல்ல. 1963ல் சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தில் பிளவு ஏறபட்ட போது, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியிலும் அந்தப்பிளவு தோன்றியது. சோவியத் சார்பு – சீன சார்பு என ஏற்பட்ட அந்தப்பிளவில், சீன சார்பான கட்சி அணியினரின் பிரச்சார வெளியீடுகளை விநியோகிக்கவும், 'கோஸி சூடியன்' என அழைக்கப்படும், சீன சர்வதேச புத்தக வர்த்தக நிறுவனம் அனுப்பும் நூல்களை விநியோகிக்கவுமே இந்தப் புத்தக நிலையம் அமைக்கப்பட்டது.

எமது சீன சார்பு கம்யூனிஸ்ட் கட்சியில் மீண்டும் ஒரு பிளவு ஏற்பட்டு, 1972ல் இலங்கை மார்க்சிச – லெனினிச கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்ட பின்னர், யாழ்ப்பாணத்தில் கட்சி வேலைகளளச் செய்வதற்காக வரும்படி கட்சி என்னை அழைத்தது. எனவே 1966ம் ஆண்டுமுதல் வன்னிப்பிரேதசத்தில் விவசாயிகள் மத்தியில் நான் மேற்கொண்டிருந்த கட்சி – வெகுஜன வேலைகளை ஏனைய தோழர்களிடம் ஒப்டைத்துவிட்டு, யாழ்ப்பாணம் வந்து வேலைகளைப் பொறுப்பெடுத்தேன். அந்த வேலைகளில் ஒன்று இந்த யாழ் புத்தக நிலையத்தை நிர்வகிப்பதாகும்.

பின்னர் நாம் உருவாக்கிய 'நொதேர்ண் பிறின்ரேர்ஸ்' அச்சகத்தையும் நானே நிர்வகித்தேன். இதுதவிர, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 1975ல் நிறுவப்பட்ட பின்னர், பல்கலைக்கழக சமூகத்தினர் மத்தியில் முற்போக்கான அரசியல் - கலாச்சார வேலைகளை முன்னெடுக்க வேண்டியதின் அவசியத்தை உணர்ந்த, அப்பல்கலைக்கழகத்தின் முதலாவது தலைவரான பேராசிரியர் க.கைலாசபதி அவர்கள், அதன் அருகில் ஒரு புத்தகக் கடையை அமைக்கும்படி என்னை வேண்டிக்கொண்டார். அவரது வேண்டுகோளை ஏற்ற நான் தனிப்பட்ட முறையில் பல்கலைக்கழகத்துக்கு எதிரில் சேர்.பொன்.இராமநாதன் வீதியில், குமாரசாமி வீதி தொடங்கும் இடத்துக்கு அண்மையில், 196ம் இலக்கக் கட்டிடத்தில் 'யூனிவேர்சல் றேட்ஸ்' என்ற பெயரில் ஒரு கைடைய ஆரம்பித்தேன். அந்த இடத்தை எனக்கு பெற்று உதவியவர், அப்பொழுது யாழ்.பல்கைலக்கழகத்தில் கணிதபீட விரிவுரையாளராக இருந்த நண்பர் (இவர் பேராதைனப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று, பின்னர் இங்கிலாந்தில் தனது கலாநிதி பட்டப்படிப்பை பூர்த்தி செய்தவர்) ஒருவராவார்.

இந்த இரு புத்தக நிலையங்களைப் பற்றியும் எமது அச்சகத்தைப் பற்றியும் இங்கு பிரஸ்தாபிப்பதின் காரணம், இவை யாழ்ப்பாணத்தின் சமகால அரசியல் வரலாற்றில் வேறு எந்த நிறுவனங்கைளயும் விட அதிக பங்களிப்பு செய்ததுடன், நான் எழுதுகின்ற இந்த வரலாற்றுத் தொடருடன் அவை சம்பந்தங்களையும் கொண்டிருப்பதும் ஆகும். அதுபற்றி பின்னர் பார்த்துக்கொள்ளலாம்.

யாழ்பாணத்தில் டிசம்பர் மாதம் என்பது பருவ மழைக்காலத்துள் உள்ளடங்கிய ஒன்று. சில வேளைகளில் வீசும் காற்றில் சில்லென்ற குளிர் உள்ளுற உறைந்து நிற்கும். ஆனால் இந்த டிசம்பர் பின்மாலைப்பொழுது சற்று உஸ்ணமாக இருந்தது. அது சில வேளைகளில் அன்றைய நிலைமையில் யாழ்ப்பாணத்தில் வீசிய அரசியல் அனல்காற்றின் வெப்பத்தை உள்வாங்கி இருந்தேதா என்னேவா? நான் மதிய உணவு அருந்தச்சென்ற அந்த நேரத்தில் எதிர்பாராதவிதமாக முன்னொருபோதும் என்வீட்டுக்கு வந்திராத இருவர் என்னைக்காண வந்திருந்தனர். ஒருவர் எனது நண்பரான முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி ஆங்கில ஆசிரியராவார். அவர் தமிழ் தேசியவாதத்தின் பால் மிகுந்த பற்றுக் கொண்டவர் என்றேபாதிலும், குருட்டுத்தனமாக அதை ஆதரிப்பவர் அல்ல.

இன்னொருவர் எனது சொந்த ஊரான இயக்கச்சி பகுதியிலுள்ள முகாவில் கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் ரெலோ இயக்கத்தில் ஒரு முக்கிய போராளியாக இருந்தவர். புலிகள் 1986ல் TELO இயக்கத்தை தடைசெய்தபோது, பல இடங்களில் அந்த இயக்கத்தின் போராளிகள் பலரை குற்றுயிரும் குறையுயிருமாக பகிரங்க இடங்களில் டயர் போட்டு எரித்த சம்பவங்கள் நிகழ்ந்தன. அவர்களில் பெரும்பாலானவர்கள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். அவ்வாறான கொடும்செயலுக்கு உள்ளாக்கப்படுவதற்காக எமது ஊரைச்சேர்ந்த அந்த இளைஞனும் மல்லாகத்தில் ஒரு இடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இதை அறிந்த அவரது தகப்பனார் எனது உதவி கோர என்னிடம் வந்து கண்ணீர் வடித்தார். நான் புலிகள் இயக்கத்தில் அப்பொழுது அவர்களது 'நிதர்சனம்' தொலைக்காட்சிக்கு பொறுப்பாக இருந்த யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்விகற்ற ஒருவைர அணுகி அந்த இளைஞனை உயிர்தப்ப வைத்திருந்தேன்.

அந்த இருவருடனும் பல்வேறு விடயங்கள் குறித்து அளவளாவினோம். குறிப்பாக இந்திய அமைதிப்படை 1990ல் அப்போதைய ஜனாதிபதி ஆர்.பிரேமதாசவுக்கும் புலிகளுக்கும் இடையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தால் திருப்பி அனுப்பப்பட்ட பின்னர், புலிகள் தமிழ் பகுதிகளில் நடாத்தி வந்த நரபலி வேட்டை குறித்து விசனத்துடன் உரையாடினோம். அதன்பின்னர் அவர்கள் இருவரும் விடைபெற்றுச் சென்ற பின்னர் மீண்டும் யாழ் புத்தக நிலையம் செல்வதற்குத் தயாரானேன். பிறந்து 16 மாதங்கள் மட்டுமே ஆகியிருந்த எனது மகள், எம்முடன் தங்கியிருந்த எனது மனைவியின் தகப்பனாரின் மடியில் இருந்துகொண்டு எனக்கு கைகளை அசைத்து விடை தந்தாள்.

நான் மதிய உணவிற்கு செல்லும்போது, கடையில் பொறுப்பாக தவராசா என்ற முதிய தோழர் ஒருவரை விட்டுச் சென்றிருந்தேன். இந்தத் தோழர் இலங்கை போக்குவரத்துச்சபை பஸ் நடத்துனராக (கொண்டக்ரர்) இருந்து ஓய்வுபெற்றவர். இவரது குடும்ப வரலாறு மிகவும் சோகம் நிறைந்தது. உடுப்பிட்டியைச் சேர்ந்த இவர் உரும்பிராயில் திருமணம் செய்திருந்தார். மனைவி வாய்பேச முடியாதவர். அவர்களுக்கு இரு மகன்களும் ஒரு மகளும் ஆக மூன்று பிள்ளைகள் பிறந்தனர். பிள்ளைகள் மூவருமே வாய்பேச முடியாதவாகள்.

மகன்களில் ஒருவர் யாழ்.சின்னக்கடைப் பகுதியில் கடச்சல் பட்டறை ஒன்றில் வேலைசெய்து வந்தார். ஒருநாள் அவர் வேலைக்கு செல்லும் வழியில் இராணுவத்துக்கும் புலிகளுக்கும் இடையில் திடீர் மோதல் ஒன்று நிகழ்ந்தது. அதில் அகப்பட்டுக்கொண்ட அவர் துப்பாக்கிச் சூட்டுக்கிலக்காகி அந்த இடத்திலேயே மரணித்தார். இன்னொரு மகன் புலிகளுக்கு எதிரான இயக்கமொன்றுடன் தொடர்புள்ளவர் எனக்கூறி, புலிகள் அவரைத் தேடிவந்தனர். ஒருநாள் அவர் வீட்டுக்கு வந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்த வேளையில், அதை எப்படியோ அறிந்துகொண்ட புலிகள் வீடு தேடி வந்துவிட்டனர். சாப்பிட்டுக்கொண்டு இருந்த அவரை சாப்பாட்டுக் கோப்பையுடன் வீட்டு முற்றத்துக்கு இழுத்துவந்து, பெற்றோர் சகோதரிக்கு முன்னால் சுட்டுப் படுகொலை செய்தனர். மகன்கள் இருவரும் கொலைசெய்யப்பட்ட அதிர்ச்சியில் தோழர் தவராசாவின் மனைவியும் சிறிது நாட்களில் மரணித்துவிட்டார்.

அதன்பின்னர் தவராசாவும் அவரது வாய்பேசமுடியாத மகளும் உரும்பிராயில் மிகவும் கஸ்டமான ஒரு சூழலில் வாழ்ந்துவந்தனர். கடுமையான ஆஸ்த்மா நோய் காரணமாகவும், முதுமை காரணமாகவும் அவரால் எந்தெவாரு தொழிலையும் செய்ய முடியாத நிலையில், அவரது மகள் தான் கற்றிருந்த மணப்பெண் அலங்காரத் தொழிலில் இடையிiடேய கிடைக்கும் வருவாயிலேயே அவர்களது வாழ்க்கை ஒருவாறு ஓடியது. அவர் தனது மன வேதனைகளை ஆற்றுவதற்காகவும், அரசியல் விவகாரங்கைளக் கலந்துரையாடுவதற்காகவும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் எமது புத்தகக்கடைக்கு வந்துவிடுவார். இந்த நிலமையில், அன்றும் அவரை புத்தகக்கடையில் விட்டுவிட்டே வீடு சென்றிருந்தேன்.

திரும்பவும் நான் புத்தகக்கடைக்கு சென்றெபாழுது, எமது கடைக்கு முன்னால் இளைஞன் ஒருவன் சைக்கிளுடன் நிற்பது தெரிந்தது. தூரத்திலிருந்து நான் இதை அவதானித்தாலும், அவன் நின்ற நிலை, எதையோ அவன் எதிர்பார்த்து நின்றது போன்ற ஒரு தோற்றப்பாட்டை, எனது மனதில் உருவாக்கியது.

தொடரும்..



Read more...

Friday, June 27, 2025

புலிகளின் வதை முகாம்களில் ஒன்றரை ஆண்டுகள். தோழர் மணியம் தேனிக்காக எழுதிய அனுபவத்தொடர். பாகம் 1

துணுக்காய் வதை முகாமில் நான்காயிரம் மனித உயிர்கள் புலிகளால் வதைக்கப்பட்டு அவர்களில் பலர் கொலைசெய்யப்பட்டு உடல்கள் வவுனிக்குளக்கரையில் எரிக்கப்பட்டு அக்குளத்திலேயே கரைக்கப்பட்ட வரலாறு புதைக்கப்பட்டுள்ளது. அதே வதை முகாமில் கொலை செய்யப்பட்டதாக நம்பப்படுகின்ற திரு தங்கத்துரை என்பவரது மகள் தனது தந்தையார் புதைக்கப்பட்ட இடம்தேடி துணுக்காய் சென்றபோது பாசிசத்தின் அடிவருடிகள் அவரது நீதிகோரும் உரிமையை மறுக்க முற்படுவதுடன் வரலாற்றையும் புதைக்கப்பட்ட மனிதர்களுடன் புதைக்கவே முற்படுகின்றனர்.

ஆனால் துணுக்காய் வதை முகாம் தொடர்பில் இன்று தயானி பேச முற்படும்போது அதனை தடுக்க முற்படும் தற்குறிகளுக்கு குறித்த வரலாறு இற்றைக்கு ஒன்றரை இரண்டு தசாப்தங்களுக்கு முன்னரே எழுதப்பட்டுள்ளது என்பதை நினைவூட்டவேண்டியுள்ளது.

ஆகையால் இலங்கைநெட், தோழர் மணியம் தேனிக்காக தனது வதை முகாம் அனுபவங்கள் தொடர்பாக எழுதிய தொடரை இத்துடன் மீள்பதிவு செய்கின்றது என்பதுடன் அருள்பேட் ஜூலியன் என்பவரால் தான் அனுபவித்த துயரங்கள் தொடர்பாக எழுதப்பட்ட நூலையும் தொடராக பதிவிட எண்ணியுள்ளது. அத்துடன் இத்தகவல்களுக்கு மேலதிகமாக துணுக்காய் வதைமுகாம் தொடர்பில் அறிந்து கொள்ள விரும்புபவர்கள் துணுக்காய் வதை முகாம் அனுபவங்கள் தொடர்பாக கிறேசியன் என்பவர் எழுதிய தொடர் ஒன்றும் தொடர் கட்டுரைகள் பகுதியில் பதிவிடப்பட்டுள்ளதை வாசித்து அறிந்து கொள்ளலாம் என்பதை அறியத்தருகின்றோம்.

அன்பான 'தேனி' வாசகர்களுக்கு,

நான் ஏன் இந்தத் தொடரை எழுதுகிறேன் என்பதை முதலில் உங்களுக்கு சொல்லி விடுவது அவசியமானது. அதற்கு முன்னதாக எனது புலி வதை முகாம் பற்றிய அனுபவங்களை எழுதுவதற்கு 'தேனி' இணையத்தளத்தை ஏன் தேர்ந்தெடுத்தேன் என்பைத விளக்கி விடுவதும் முக்கியமானது.

ஏறத்தாழ 10 ஆண்டுகளாக நான் தேனி இணையத்தளத்தின் ஓரு வாசகனாக இருந்து வருகின்றேன். அத்துடன் அவ்வப்போது முக்கியமான சில விடயங்களில் எனது கருத்தை அதன் ஊடாக வெளிப்படுத்தியும் வந்திருக்கிறேன். நான் தேனியைத் தேர்ந்தெடுத்ததிற்குக் காரணம், அது எந்தவொரு கட்சியையோ, இயக்கத்தையோ அல்லது குழுவையோ சாராத சுதந்திரமான ஒர் ஊடகம் என்பதனாலாகும்.

அத்துடன் பெரும்பாலான தமிழ் ஊடகங்கள் பின்பற்றும் தமிழ் தேசியவாத சேற்றுக்குள் அமிழ்ந்துவிடாமல், தேனி தமிழ் மக்கள் பயணிக்க வேண்டிய திசைமார்க்கமான ஏகாதிபத்திய எதிர்ப்பு, பிற்போக்கு எதிர்ப்பு, இனவாத எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டில் மிக உறுதியுடன் ஊன்றி நின்றதுமாகும்.

குறிப்பாக பாசிசப் புலிகைள அழித்தொழிப்பதற்கான பொதுப் போராட்டத்தில் தேனி ஆரம்பம் முதல் இறுதிவைர எவ்வித ஊசலாட்டமுமின்றி நிலை தழும்பாது நின்று வந்துள்ளதுமாகும். இதுதவிர இன்று தமிழில் செயற்படுகின்ற இணையத்தளங்களில் தேனி மட்டுமே மிக அதிக எண்ணிக்கையான வாசகர்களால் பார்வையிடப்படுவது என்பதும், இலங்கையில் வெளிவருகின்ற பிரதான தமிழ் தினசரிகளின் வாசகர்களுக்கு இணையான வாசகர்கள் தினசரி தேனியைப் பார்வையிடுகிறார்கள் என்பதும் இன்னொரு காரணமாகும்.

அத்துடன் தேனி எனது இந்தத்தொடரை எவ்வித நிபந்தனைகளுமின்றி வெளியிட வந்ததிற்காக, அதன் நிர்வாகிகளுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சரி, இனி விடயத்துக்கு வருவோம்.

2009 மே 18ம் திகதி முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிப் போருடன் புலிகளுடனான அரசாங்கத்தின் 30 வருட கால யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது. அந்த முடிவுடன் புலிகளால் இலங்கையில் - குறிப்பாக தமிழ் சமூகத்தில் உருவாக்கி வைத்திருந்த மனித நேயம், நாசகாரம் என்பனவற்றுக்கு அப்பால் உருவாக்கி வைத்திருந்த கொடூரமான பாசிச கட்டமைப்பு முற்றுமுழுதாக நொருங்கி விழுந்து மக்களுக்கு ஓரளவு நிம்மதியும் ஏற்பட்டது உண்மைதான்.

ஆனால் அதை அறுதியும் இறுதியுமான வெற்றியாக மக்கள் கருதிவிடக்கூடாது. தமிழ் தேசியவாதத்தின் பெயரால் தமிழ் பிற்போக்கு உருவாக்கி வைத்திருந்த ஒரு கட்டமைப்பு மட்டுமே, புலிகளின் அழிவுடன் அழிக்கப்பட்டுள்ளது என்பதே உண்மையாகும். அந்த கட்டமைப்பை உருவாக்கிய பிற்போக்கு தமிழ் தேசியவாதம் (அதற்குரிய சரியான பதம் 'யாழ்ப்பாணியம்' என்பேத. நாசிசம், பாசிசம், சியோனிசம், பார்ப்பனியம் என்ற சொற்கள் மனித விரோத செயற்பாடுகைள விளிக்க எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றனேவா, அவ்வாறான அர்த்தத்தில் 'யாழ்ப்பாணியம்' என்ற சொல்லையும் நாம் பயன்படுத்த முடியும்) மீண்டும் மீண்டும் தமிழ் சமூகத்தில் பாசிச சக்திகளை உருவாக்க முயன்று வருகிறது. அது தனது இறுதி மூச்சுவரை அதைச் செய்து கொண்டே இருக்கும்.

இதில் இன்னொரு விசேட அம்சம் என்னவெனில், தற்போது தமிழ் பாசிசம் சர்வதேசிய சதியாக நன்கு வேரூன்றியுள்ளதுடன், அது முன்னெப்போதையும்விட நெருக்கமான ஏகாதிபத்தியத் தொடர்புகளையும் கொண்டுமுள்ளது என்பதாகும். எனேவ இன்று இலங்கையில் மட்டுமின்றி, புலம்பெயர் நாடுகளிலும் தமிழ் மேட்டுக்குடி சக்திகளால் உருவாக்கி பாதுகாக்கப்படுகின்ற பிற்போக்கு தமிழ் தேசியவாத பாசிச சக்திகைள முறியடிக்கும் போராட்டம் இன்னமும் முடியவில்லை என்பதைப் புரிந்து கொள்வதுடன், அதை இல்லாதொழிக்காமல் தமிழ் மக்களின் உண்மையான தேசிய ஐக்கியத்தையோ, விடுதலையையோ நாம் அடைய முடியாது என்பதையும், அச்சமூகத்தின் எதிர்காலத்தில் அக்றையுள்ளவர்கள் புரிந்து கொள்வது அவசியமானது. அதுவே நான் இத்தொடரை எழுதுவதற்கு தீர்மானித்ததின் அடிப்படைக் காரணமாகும்.

கடந்த காலங்களில் தமிழ் மக்கள் புலிகளை தமது 'மீட்பர்கள்' என்றும், ;விடுதைல வீரர்கள்' என்றும், ஏன் 'கடவுளர்கள்' என்றும் கருதிய ஒரு காலம் இருந்தது. இன்றும்கூட அவ்வாறான ஒரு பிம்பத்தை மக்கள் மத்தியில் உருவாக்க சில சக்திகள் முயன்று வருகின்றனர். ஆனால் அவர்களது நிஜமுகம் என்ன என்பதை எனது இந்த அனுபவத்தொடர் ஓரளவு தன்னும் மக்களுக்கு விளக்கும் என நான் நம்புகின்றேன். நான் அவர்களது கைதியாக இருந்த காலத்தில் நான் அனுபவித்த உடல் - உள வேதனைகளை மட்டுமின்றி, அவர்களால் அந்தக் காலகட்டத்தில் என்னுடன் வைக்கப்பட்டிருந்த ஏனைய கைதிகள் அனுபவித்த வேதனைகைளயும் இங்கு பதிவு செய்வது அவசியம் என்று கருதுகின்றேன். இதில் அவர்களது இயக்க உறுப்பினர்களாக இருக்க நிர்ப்பந்திக்கப்பட்ட 'சீவன்களின்' துன்பங்கைளயும் உள்ளடக்குவது அவசியமானது.

புலிகளால் மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகள், துன்புறுத்தல்கள் மட்டுமின்றி, அவர்களது சிந்தைனகள், செயற்பாடுகள், பழக்க வழக்கங்கள் என்பன பற்றியும், அவர்கள் தமிழ் சமூகத்தின் மீது கட்டமைத்து வந்த பாசிச நிர்வாக இயந்திரத்தின் தன்மை பற்றியும் நான் அவதானித்தவை, அவர்கள் சிலருடன் மேற்கொண்ட உரையாடல்கள் மூலம் பெறப்பட்டவை என்பனவற்றையும் நான் இங்கு தெரிவிப்பது அவசியமானது என்று கருதுகிறேன்.

புலிகளால் நான் 1991 டிசம்பர் மாதம் 26ம் திகதி கைதுசெய்யப்பட்டு, 1993 ஜூன் 06ம் திகதி வரை சுமார் ஒன்றரை ஆண்டுகள் அவர்களது வதை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டேன். அவர்கள் 'மனமிரங்கி' என்னை விடுதலை செய்திராவிட்டால், இன்று நான் உங்களுடன் எனது கருத்துகைளப் பகிர்வதற்கு வாய்ப்பே இருந்திருக்காது. அவர்கள் என்னை விடுதலை செய்ததை எனது இரண்டாவது பிறப்பு என்றுதான் சொல்ல வேண்டும்.

புலிகள் பற்றிய எனது அனுபவங்கள் அவர்களின் கொடூரமான உருவத்தின் ஒரு வெட்டுமுகம் மட்டுமே. அதாவது 'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்பது போல. அவர்களுடைய உண்மையான தோற்றத்தை வெளிப்படுத்த இது போதுமானதல்ல. அதனை முழுமையாகக் கொண்டுவருவதாக இருந்தால், அவர்களால் சித்திரவதைகளுக்குள்ளாக்கப்பட்டு, ஏதோ சில காரணங்களால் தப்பிப் பிழைத்து வெளியே வந்து, தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் இன்னமும் பயத்துடன் முகம் காட்டாது வாழும் நூற்றுக்கணக்கான முன்னாள் கைதிகள் முன்வர வேண்டும். அது அவர்கள் தமிழ் சமூகத்துக்கும், மனித குலத்திற்கும் செய்யும் வரலாற்றுக் கடைமயாகும்.

எனது புலி வதை முகாம் அனுபவங்கள், அது ஏற்பட்டு 18 வருடங்கள் தாமதமாக வெளிவருவதற்கு காரணங்கள் உண்டு. நான் விடுதலையாகி வெளியே வந்ததும், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாழ்ந்து வந்த எனது ஆத்ம தோழர்களும், நண்பர்களும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும், வேறு பல சமூக ஆர்வலர்களும், நான் புலிகளின் இரும்புப் பிடியின் கீழ் இருந்தபோது பட்ட அவலங்களின் துன்பங்களின் அனுபவங்களை எழுத்தில் கொண்டு வந்து, உலகின் முன் வெளிச்சத்தில் வைக்கும்படி தொடர்ந்து வற்புறுத்தி வந்தனர். ஆனால் 1995ல் புலிகள் யாழ்ப்பாணத்திலிருந்து விரட்டியடிக்கப்படும் வரை, நான் அவர்களது தீவிர கண்காணிப்புக்குள் இருந்ததினால், அந்தச் சூழ்நிலையில் எனது சுண்டு விரலைக்கூட அவர்களுக்குத் தெரியாமல் அசைக்க முடியவில்லை.

1999ல் நான் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறி கொழும்பு சென்ற பின்னரும்கூட, அவர்களது வேவுக்கண்கள் என்னைப் பின்தொடர்ந்த வண்ணமே இருந்தன. மீண்டும் நான் அவர்களது தீவிர கண்காணிப்பு வட்டத்துக்குள் படிப்படியாகக் கொண்டுவரப்படுகிறேன் என்று உணர்ந்த நிலையில், தவிர்க்க முடியாமலும், மனம் விரும்பாத நிலையிலும், எனதும் எனது குடும்பத்தினதும் பாதுகாப்புக் கருதி நான் நாட்டை விட்டு 2004 டிசம்பர் 04ம் திகதி வெளியேறினேன். நான் புலம்பெயர்ந்து குடியேறிய நாட்டிலும்கூட புலிகளின் மரண நிழல் என் போன்றவர்கள் மீது படிந்து கொண்டே இருந்தது. அதனால் வெளிநாட்டுக்குத் தப்பி வந்தும்கூட, கடந்த 6 வருடங்களாக ஓரளவு ஒதுங்கி மறைந்து வாழ வேண்டியே இருந்தது. இப்பொழுது புலிகள் தாயகத்தில் பெரும்பாலும் முற்றுமுழுதாக அழிக்கப்பட்டுவிட்ட நிலையிலும்கூட, இன்றும்கூட அவர்கள் வைத்திருக்கும் பலமான சர்வதேச வைலப்பின்னல் காரணமாக, அந்தப் பாசிஸ்ட்டுகளுக்கு எதிரானவர்களுக்கு உலகின் எந்த மூலையிலாவது பூரண பாதுகாப்பு உள்ளது என்று சொல்ல முடியாது.

இருப்பினும் எமக்குள்ள வரலாற்றுக் கடமையை ஏதாவதொரு சந்தர்ப்பத்திலாவது நாம் நநிறைவேற்றியே தீர வேண்டும். இது வரலாறு எமக்கு இடும் கட்டளையாகும். தவறுவோமாக இருந்தால், அது எமது மக்களுக்கு நாம் செய்யும் துரோகமாகும். அதற்காக சில துன்பங்கள் ஏற்படினினும் தாங்கிக்கொள்ளத்தான் வேண்டும். அந்த உணர்வின் காரணமாகவே நான் இத்தொடரை எழுத எண்ணினேன். நான் இதை எழுதும் போது உண்மையுடனும் சத்தியத்துடனும் அணிவகுத்துச் செல்லவே எப்பொழுதும் விரும்புகின்றேன். புலிகள் என்னைக் கைது செய்ததால்தான் நான் அவர்கள் மீது கோபம் கொண்டு இதை எழுதுகிறேன் என்று சிலர் நினைக்கக்கூடும். ஆனால் மறுபக்கமாகப் பார்த்தால் நான் ஏதோவொரு வகையில் அவர்களது தீய செயற்பாடுகைள எதிர்த்ததாலேயே, அவர்கள் என்னைக் கைதுசெய்து சித்திரவைதக்குட்படுத்தினர் என்பதே உண்மையாகும். அந்த வகையில் பார்த்தால் மனிதகுல விரோதிகளான புலிகள் எனக்கு மாபெரும் கௌரவத்தை வழங்கியுள்ளனர் என்றே கூற வேண்டும். அதற்காக அவர்களுக்கு நான் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.

மனிதர்கள் எல்லோரும் பிறக்கின்றனர் வாழ்கின்றனர். இனப்பெருக்கம் செய்கின்றனர். தமது சந்ததிகளுக்காக சொத்துக்கைளத் தேடி வைத்துவிட்டு மரணிக்கின்றனர். சொத்துத் தேடுவதைத் தவிர ஏனைய அனைத்தையும் மிருகங்ளும் கூடச் செய்கின்றன. எவன் ஒருவன் தான் வாழும் காலத்தில் தனது சக மனிதனுக்கு எதிராகவும், தன்னுடைய இன்றியமையாத சுற்றுச்சூழல் நண்பர்களான விலங்குகள், தாவரங்கள் என்பனவற்றுக்கு எதிராகவும் உருவாகும் அநீதிகளை எதிர்த்துப் போராடுகிறானோ, அவன்தான் உண்மையான மனிதன் ஆவான். இது நமது முன்னோடிகளால் எமக்கு தொடர்ந்து போதிக்கப்பட்டு வரும் பேருண்மையாகும்.

இந்தத் தொடரை எழுத ஆரம்பிக்கும் நேரத்தில், என்னுடன் புலிகளின் வதை முகாம்களில் சக கைதிகளாக இருந்து, எம்மில் சிலருக்கு கிடைத்த மீண்டும் வாழும் சந்தர்ப்பம் கிடைக்காமல், 'புலிகளின் கொலைக்களங்களில் பலியிடப்பட்டவர்களுக்கும், எமக்குத் தெரியாமல் அவர்களால் மரணிக்க வைக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்களுக்கும், எனது கண்ணீராலும், இதயத்தில் கசியும் செந்நீராலும் அஞ்சலி செய்கின்றேன். '

அவர்களது துன்பப்படும் ஆத்மாக்கள் சாந்தி பெற மனதார பிரார்த்திக்கிறேன்.

தொடரும்.....

Read more...

Tuesday, November 22, 2022

ராஜீவ் காந்தி கொலையில் புலிகளின் தொடர்பு : முடிச்சி எவ்வாறு அவிழ்ந்தது? தொடர் 04 - பிறேம்குமார்

ராஜிவ் கொல்லப்படுவதற்க்கு சரியாக 1 ஆண்டுக்கு முன்பு பேரறிவாளனும் இரும்பொறையும் இலங்கைக்கு சென்றனர் . முத்துராஜா அவர்களுக்கு சில மாதம் முன்பே சென்று விட்டான். இரும்பொறை என்னும் நபர் தி.க வை சேர்ந்த நபர். பேரறிவாளனும் தி.க வை சேர்ந்தவர் என்பது மட்டும் அல்ல இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பொரும்பாலான இந்தியர்கள் திராவிட கழத்தை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு எல்லாம் ஆமை கறி தராத பிரபாகரன் சீமானுக்கு மட்டும் ஆமை கறி தந்தது ஒர வஞ்சனை.

சரி நாம் மீண்டும் கொலை வழக்குக்கு வருவோம். இலங்கை சென்ற இந்த இருவரும் முத்துராஜாவுடன் 1990-ம் ஆண்டு அக்டோபரில் இலங்கையிலிருந்து இந்தியா திரும்பினர். இவர்கள் சென்னைக்கு வராமல் கோவைக்கு சென்றனர். பக்கியநாதனையும் கோவைக்கு வர வைத்த முத்துராஜா உளவு பிரிவு நிக்சனுக்கு அறிமுகம் செய்து வைத்தான். கோவையில் உளவு பிரிவு தளம் அமைக்கப்பட்டது.

1991-ம் ஆண்டு பிப்ரவரி மாத தொடக்கத்தில் நிக்சன், மற்றொரு இளைஞரை பாக்கியநாதன் இல்லத்துக்கு அழைத்து வந்தார். அவரும் உளவுத்துறையைச் சேர்ந்தவர் என அறிமுகம் செய்து வைத்தார். அந்த இளைஞர்தான், ராஜிவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டு தற்போது சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள முருகன்!

நிக்சன், பாக்கியநாதனிடம் முருகனை அழைத்து வந்ததற்கு காரணம் இருந்தது. விடுதலைப் புலிகளுடன் தொடர்புகள் வைத்திருந்ததாக கூறப்பட்டு, 1991 ஜனவரியில் தமிழ்நாட்டில் தி.மு.க. அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டது.(பத்மநாபா படுகொலை பற்றி இதில் எழுதும் பொழுது அதை கொஞ்சம் விரிவாக சொல்கிறேன்)

கவர்னர் ஆட்சி ஆரம்பித்தது.

தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டவுடன், தமிழகத்தில் ஏராளமான விடுதலைப்புலிகள் கைது செய்யப்பட்டனர். விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் என அறியப்பட்ட முத்துராஜாவை இந்திய உளவுப்பிரிவு கண்காணித்து வந்தது. இதனால், முருகனை தனது வீட்டில் முத்துராஜாவால் வைத்திருக்க முடியவிலலை. இதனால் முருகனை, இந்தியர் வீட்டில் உறவினர் என்று தங்க வைப்பதே பாதுகாப்பானது என்று நிக்சன் முடிவெடுத்தார். அதற்காகவே பாக்கியநாதன் இல்லத்துக்கு அழைத்துச் சென்றார். விடுதலைப்புலிகள் மீது உச்ச அபிமானத்தில் இருந்த பாக்கியநாதன், மகிழ்ச்சியுடன் சம்மதித்தார்.

முருகன் என்னும் ஸ்ரிதரன் இவன் யாழ்பானத்தை சேர்ந்தவன் 1987 ல் விடுதலை புலியில் இணைந்தான். பொட்டாமான் ஆள்( இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது ராஜிவ் காந்தியை கொல்ல அல்ல வரதராஜ பெருமாள் கதையை முடிக்க, இது பற்றி விரிவாக அடுத்து எழுதுகிறேன் )

பாக்கியநாதனுக்கு மட்டுமே இவன் புலி கூட்டம் என தெரியும். மற்றவர்களிடம் தான் இலங்கையில் இருந்து இங்கிலீஸ் கிளாஸ்க்காவும் வேலை தேடியும் இந்தியா வந்தாக குறிப்பிட்டான். பாக்கியநாதன் குடுப்பத்தில் உள்ளோரிடம் நட்பாக பழகினான். மறுபுறம் பேரறிவாளனுடன் சேர்ந்து தினசரி தூர்தர்சன் செய்திகளை VCR ல் ரெக்கார்டு செய்து இலங்கையில் தன் தலைமைக்கு அனுப்பினான். (ராஜிவ் படுகொலைக்கு பிறகு இந்த கேசட்டுகளை தன் நண்பன் வீட்டில் பேரறிவாளன் ஒழிய வைத்து அது கண்டு பிடித்து எடுக்கப்பட்டது )

மேலும் இயக்கத்துக்கான ஆட்களை ஒருங்கிணைப்பது உளவு தளத்தை பலப்படுத்துவது என பிசியாக இருந்தான். இந்த சூழ்நிலையில் தான் பாக்கியநாதன் அக்கா நளினி வீட்டுல் கோவிச்சி கொண்டு வெளியே இருப்பது தெரிய வந்தது. அவரை சமாதானப்படுத்த அவர் கம்பேனிக்கு சென்றான் அவன் அன்பான பேச்சு நளினிக்கு பிடித்து போனது, அடுத்த அடுத்த சந்திப்பு தொடர்ந்தது காதல் மலர்ந்தது . தான் விடுதலை புலிகள் இயக்கத்தில் செயல் படுவதையும் தெரிவித்தான். ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் பயஸ் ( தற்போது சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டோரில்ஒருவன் ) எல்லோரும்.

விசேஷம் என்னவென்றால் முருகன் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தப் புதிய நண்பர்களும் தனித்தனியே தொடர்ந்து நளினியின் அலுவலகத்துக்கு வர ஆரம்பித்தார்கள். ஒவ்வொருவருடனும் நளினிக்கு நட்பு ஏற்பட்டது. நெருக்கமானார்கள். நளினிக்கு மகிழ்ச்சிதான். முருகன் என்கிற நபர் அவரது வாழ்க்கையில் வந்த பிறகுதான் அவருக்குத் தன் குடும்பத்தாருடன் இருந்த கோபங்கள் குறைய ஆரம்பித்து, பழைய உறவுகள் பலப்படத் தொடங்கியிருந்தன. புதிதாகவும் பல நட்புகள் கிடைத்திருந்தன. அப்படி ஒருநாள் ஒருவரை அறிமுகப்படுத்தி இவர் தனக்கு மேலான இயக்க பொறுப்பாளர் என்றான் . அவன் பெயர் சிவராசன்.

சிவராசன் யாழ்ப்பாணம், உடுப்பிட்டியை சேர்ந்தவன் பாக்கியச்சந்திரன் என்பது தான் இவன் இயற்பெயர் இயக்கத்தில் ரகு எனவும் சிவராசன் எனவும் அழைக்கப்பட்டான். ஆரம்ப நாட்களில் டெலோ இயக்கத்தில் இருந்த இவன் பின் நாட்களில் விடுதலை புலிகள் இயக்கத்தில் தன்னை இனைத்து கொண்டான். எதையும் மிகவும் நுட்ப்பமாக திட்டமிட்டு செயல் படுத்த கூடியவன். உதாரனமாக இவன் தங்கி இருந்த இடத்தை அதிகாரிகள் கைப்பற்றிய பொழுது அதில் ஸ்ரீபெரும் புதூருக்கு ஒரு நாளைக்கு எத்தனை பேருந்து செல்கிறது எந்த எந்த இடத்தில் அவை நிற்க்கும் என்பது முதற்கொண்டு அவன் குறித்து வைத்து இருந்தது தெரிந்தது.


அதே போல அதீத துனிச்சலுக்கு சொந்தகாரனாக இருந்து இருக்கிறான். இவனை ஒட்டு மொத்த இந்திய போலீசும் , ரானுவமும் தேடிய பொழுதும் பொட்டமானை தொடர்பு கொண்டு ராஜிவ் கொலை வழக்கை விசாரிக்கும் மல்லிகை அலுவலகத்தை தாக்க அனுமதி கேட்டு இருக்கான். ராஜிவ் கொலைக்கு முன்பும் பல முறை தமிழ்நாட்டுக்கு இவன் வந்து உள்ளான் . இவன் போரில் கண்பாதிப்புக்கு உள்ளான பொழுது சிகிச்சைக்கு மதுரைக்கு வந்து உள்ளான்.

அதன் பிறகு EPRLF தோழர் பத்மநாபாவை கொலை செய்ய தமிழ்நாட்டுக்கு வந்து உள்ளான் .தோழர் பத்மநாபா பிரபாகரனுக்கு நேர் எதிர் கொள்கையை கொண்டவர் . பிரபாகதரன் சர்வாதிகாரத்தை விரும்புபவர். தோழர் பத்மநாபாவோ அனைத்திலும் ஜனநாயக்கத்தை விரும்புபவர். அதனாலேயே விடுதலை புலிகளோடு முரண்பட வேண்டி இருந்தது. ( தோழர் பத்மநாபா பற்றி தனி தொடரே எழுதலாம் )

விடுதலை புலிகளால் அவர் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் அவரும் அவருக்கு அடுத்த நிலையில் இருந்த தோழர் வரதராஜ பெருமாளும் இந்தியாவில் அடைக்கலம் கோரி தஞ்சம் அடைந்தனர். பத்மநாபாவை கொல்லும் திட்டம் சிவராசனிடமும் , டேவிட்டிடமும் ஒப்படைக்கப்பட்டது. அதற்கு உளவு வேலை பார்க்க 20 வயது இளைஞனை பிடித்தனர். அவன் பெயர் சுதந்திர ராஜா என்னும் சாந்தன் தற்பொழுது சிறையில் இருக்கும் 6 பேரில் இவனும் ஒருவன்.

தொடரும்...

Read more...

Sunday, November 20, 2022

இலங்கையின் பொருளாதார நோயை சமாளிக்கும் ரணில் அரசபொருளியல் (Ranil Politinomics): பகுதி – 2 அ. வரதராஜா பெருமாள்

மக்களை தாமாகவே மூச்சடக்கி வாழ நாசூக்காக பழக்கி விட்டார்.

5. இருப்பதையும் கிடைப்பதையும் வைத்துக் கொண்டு உயிர் வாழ்வதைக் காப்பாற்றிக் கொண்டால் போதும் என பரந்துபட்ட பொதுமக்கள் அவர்களாகவே இதுதான் விதியென ஏற்றுகொண்டு மூச்சுக் காட்டாமல் சீவிக்கும் நிலைமைக்கு பொது மக்களை கொண்டு போய் நிறுத்தியுள்ள சாதனையை ஜனாதிபதி ரணிலின் ஆட்சி படிப்படியாக, வெற்றிகரமாக சாதித்துள்ளது.

கொரோணா காரணமாக அடுத்தடுத்து அமுலாக்கப்பட்ட ஊரடங்குகள், போக்குவரத்துத் தடைகள், கொரோணாப் பரவல் தொடர்பாக மக்களிடையே நிலவிய அச்சங்கள் என்பன காரணமாக 2020ம் ஆண்டே மக்கள் அத்தியாவசியமான பொருட்களை மட்டுமே கொள்வனவு செய்வதற்கு ஏற்கனவே தம்மை பழக்கப்படுத்திக் கொண்டனர், மேலும்,

(1) இந்த ஆண்டின் ஆரம்பத்திலிருந்து ஏற்பட்ட அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடுகள் மற்றும் மக்கள் நாடு முழுவதுவும் இரவு பகலென்றில்லாது நாட்கணக்கணக்கில் கியூ வரிசைகளில் கால் கடுக்க நிற்க வேண்டிய நிலைமை ஏற்பட்டமை, இவற்றால் பொருட்களின் விலைகள் இரண்டு மடங்கு மூன்று மடங்கு என திடீரென உயர்ந்தமை,

(2) உற்பத்திகளின் வீழ்ச்சிகளின் விளைவாக ஏற்பட்ட வேலையின்மைகளால் மக்களின் வருமானத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி,

(3) மக்கள் பொருட்களை வாங்குகின்ற பொருளாதார சக்தி தொடர்பில் மக்களின் வருமானத்தினுடைய மெய்யான பெறுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி என எல்லாம் சேர்ந்து இப்போதைக்கு மிக அத்தியாவசியமான பொருட்களைத் தவிர ஏனையவற்றை வாங்குவதை மக்கள் தாமாகவே குறைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ள போதிலும் மக்கள் இதனை இப்போது தமது வாழ்க்கையின் இயல்பான ஒரு விடயமாக ஏற்றுக் கொண்டு விட்டார்கள்.

அதன் மூலம், 200க்கு மேற்பட்ட வகையான பல்லாயிரக் கணக்கான பொருட்களுக்கு ஜனாதிபதி தடை விதித்த போதிலும், மிக அத்தியாவசியமான பொருட்களின், இறக்குமதியை அரைவாசியாக்கியுள்ள போதிலும், அவற்றின் விளைவாக வேலையில்லாமைகள் அதிகரித்திருக்கின்ற போதிலும், முன்னர் 100 ரூபாவுக்கு வாங்கிய பொருட்களை ,இப்போது 250 அல்லது 300 ரூபா கொடுத்து வாங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ள போதிலும், இதனால் அரசாங்கத்தைக் குறித்து பரந்துபட்ட மக்கள் மத்தியில் உள்ளுர ஆத்திரமும் வெறுப்பும், விரக்தியும் நிலவுகிற போதிலும், இவையெதுவும் அரசுக்கெதிரான எழுச்சியாக மாறி விடாத ஒரு நிலைமையைப் பராமரிப்பதில் ஜனாதிபதி ரணில் ஒரு சாதனையை நிலை நாட்டியுள்ளார்.

– ‘கிடைத்தால் முயல் போனால் எறிந்த கற்கள் தானே’

6. சர்வதேச நாணய நிதியத்திடமிருந்த கடனுதவி கிடைப்பது இந்த ஆண்டுக்குள் சாத்தியமாகாது என ஏற்கனவே நாடுகளின் பொருளாதாரம் தெரிந்தவர்கள் கூறி விட்டார்கள். ஜனாதிபதி அவர்கள் அதில் மிகுந்த அனுபவம் பெற்றவர். அவருக்கும் நிச்சயம் தெரிந்திருக்கும்.

சர்வதேச நாணய நிதியத்தை நாடாதது மிகவும் பிழையானது என கோத்தாபய ஜனாதிபதியாக ,இருந்த போது குற்றம் சாட்டியோர் பலர். இந்தியா, யப்பான் மற்றும் மேலைத் தேச நாடுகளும், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியனவும் தாம் தொடர்ந்து ,இலங்கைக்கு உதவி செய்வதற்கு இலங்கை அரசாங்கம் முதலில் சர்வ தேச நாணய நிதியத்திடம் இருந்து உதவியைப் பெற வேண்டும் என வலியுறுத்தின.

ரணில் அவர்கள் சர்வதேச நாணய நிதியத்திடம் அடிக்கடி கடன் வாங்கும் கொள்கையைக் கடைப்பிடிக்கிற நவதாராளவாதியே. இப்போது அதனிடம் போகவில்லை எல்லாருமாகச் சேர்ந்து தன்னைப் போக வைத்துவிட்டார்கள் என்பது போல அந்த நிதியத்துடன் ஊடாடுகிறார்.

கடன் கிடைத்தால் அது அவரது சாதனையாகும், கிடைக்கவில்லையென்றால் அதற்கு அவர் பொறுப்பாளியாக மாட்டார்.

இந்தா கடன் வரப் போகிறது…. பேச்சுவார்த்தைகள் திருப்திகரமாக முடிந்து விட்டன: அடுத்த மாதத்துக்குள் கிடைக்கும்: இந்த வருடத்துக்குள் கிடைக்கும் என காலத்தை மிகக் கெட்டித் தனமாகவே கடத்தி தனது ஆட்சிக் காலத்தை நகர்த்திக் கொண்டிருக்கிறார்.

சற்றுக் காலம் தாழ்த்தித் தன்னும் அந்த நிதியம் உதவி தந்தாலும் அந்தத் தொகை அரசின் தேவைக்கு ‘யானைப் பசிக்கு சோளப் பொரி’ போட்ட மாதிரியே இருக்கும். ஆனாலும் அவர் உலக நாடுகளிடமிருந்தும், உலக நிறுவனங்களிடமிருந்தும் சளைக்காமல் முயற்சிக்கிறார். நாடுகளெல்லாம் தன்னை அடுத்தடுத்து அழைக்கின்றன என்பது போல நாடு நாடாக தொடர் பயணங்களை மேற் கொள்கிறார். நாட்டின் பொருளாதார நிலைமையை சீர்படுத்த நமது ஜனாதிபதி எவ்வளவு கடுமையாக உழைக்கிறார் என மக்கள் கருதும் வகையாக செயற்பட்டு மக்கள் மத்தியில் ஓர் அனுதாப அலையையும் ஏற்படுத்துகிறார். இது அவருக்கு அடுத்த தேர்தலுக்கு நன்கு பயன்படும்.

காற்றைக் கையால் பிடித்து போத்தலில் அடைத்து விற்கிறார் 7. இந்த ஆண்டு கிடைத்த வெளிநாட்டு உதவிகளெல்லாம் பெரும்பாலும் கோத்தாபய அவர்கள் ஜனாதிபதியாக இருந்த போது கிடைத்தவையும் அவர் காலத்தில் தரப்படுவதாக உறுதி செய்யப்பட்டவையுமே.

ரணில் அவர்கள் ஜனாதிபதி ஆகிய பின்னர் மருந்துக்கும், அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கும், உரத்துக்குமென அவ்வப்போது சில நாடுகள் வழங்கும் சிறுசிறு உதவிகளைத் தவிர குறிப்பிடத்தக்க எந்த உதவியும் இன்னமும் எந்தவொரு நாட்டிடமிருந்தோ அல்லது எந்தவொரு சர்வதேச நிறுவனத்திடமிருந்தோ கிடைக்கவில்லை.

கோத்தாபய அவர்கள் ஜனாதிபதியாக இருந்த போதே வெளிநாடுகளுக்கான கடன்கள் தொடர்பில் இலங்கை தன்னைத் தானே வங்கிரோத்து நாடு என அறிவித்துக் கொண்டது. ஆனால், வெளிநாடுகளுக்கான மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கான கடன்களில் இந்த ஆண்டில் திருப்பிச் செலுத்த வேண்டிய தொகைக்கான அந்நியச் செலாவணி தொடர்பான சுமையிலிருந்து தப்பித்திருக்கும் வாய்ப்பாக ஜனாதிபதி ரணில் அதனை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

இல்லையென்றால் இவர் 2015க்கும் 2019க்கும் இடையில் ஆட்சியில் இருந்த போது அம்பாந்தோட்டையில் பல்லாயிரக் கணக்கான ஏக்கர் நிலப்பரப்பையும், கொழும்பில் கடலை நிரப்பி நிலமாக்கியதில் அரைவாசி நிலப்பரப்பையும் சீனாவுக்கு எழுதிக் கொடுத்த மாதிரி இந்நேரம் இவர் இலங்கையில் இன்னும் பல இடங்களை நாடுகளின் கடனுக்குப் பதிலாக எழுதிக் கொடுத்திருப்பார்.

இப்போதைக்கு ஏற்றுமதி வருமானத்துக்கும் இறக்குமதி செலவுக்கும் இடையில் ஏற்படுகின்ற பாதகமான வர்த்தக நிலுவையை எவ்வளவுக்குக் குறைக்க முடியுமோ அவ்வளவுக்கு குறைக்கும் ஒரு காட்சியைப் படமாக்குவது மட்டுமே தன் வேலை என பதட்டமின்றி செயற்படுகிறார்.

போராட்டங்களில்லாத நாடே முன்னேறுமாம் 8. நாடு பொருளாதார நெருக்கடியில் இருக்கிறது. அதற்காக அரசாங்கம் மிகவும் கடுமையான முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறது என அமைச்சர்களும், அரச உயர் அதிகாரிகளும் அடிக்கடி கூறி வருகின்றனர்.

அதேவேளை எந்தவொரு அபிவிருத்தி நடவடிக்கையையும் மேற்கொள்ளாமலேயே – மேற்கொள்ள நிதி எதுவும் இல்லாமலேயே அவ்வப்போது தங்கள் தங்கள் அமைச்சுக்கு உட்பட்ட விடயங்களில் நாடு முன்னேறிக் கொண்டிருக்கிறது எனவும் அறிக்கை விடுகிறார்கள்.

அறகலய போன்ற போராட்டங்கள் மற்றும் தொழிற் சங்கங்களின் போராட்டங்கள் நாட்டின் பொருளாதார நிலைமையை மேலும் மோசமாக்கும் எனவும் அதன் விளைவாக ஏற்படும் அரசியல் உறுதியின்மையின் காரணமாக நாடுகளோ சர்வதேச நிறுவனங்களோ இலங்கைக்கு உதவமாட்டா எனவும் பிரச்சாரங்கள் செய்து அதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் மேலும் மோசமான நிலையை அடைந்து விடுமோ என ஓர் அச்ச மனோநிலையை மக்கள் மத்தியில் வளர்த்து விடுகின்ற கடமை அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ளமை தெரிகிறது.

ஏதோ அறகலயக்காரர்களினதும் தொழிற் சங்கங்களினதும் போராட்டங்களால்த்தான் நாடு இன்றைய அளவுக்கு குட்டிச் சுவராகப் போனது என அரச பிரச்சாரங்கள் தீவிரமாக நடக்கின்றன.

உண்மையில் அரசாங்க ஊழியர்களின் சம்பளமெதுவும் பொருட்களின் விலையேற்றத்துக்கு உரிய விதமாக உயர்த்தப்படவில்லை. சம்பளங்களின் மெய்யான பெறுமதி 200 சதவீதத்துக்கு மேல் வீழ்ச்சியடைந்து விட்டது. தனியார் நிறுவனங்களிலுள்ள ஊழியர்களின் நிலைமையும் அதுவே.

பெரும் நிறுவனங்கள் அனைத்தும் கொரோணா தொடங்கிய நாள் தொட்டு இன்று வரை முன்னரை விட அதிகமாகவே லாபம் சம்பாதிப்பதை அந்த நிறுவனங்களின் வருடாந்த அறிக்கைகளே குறிப்பிடுகின்றன.

ஆனால் அவ்வாறான தனியார் நிறுவனங்கள் ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்பட வேண்டும் என அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையையும் இதுவரை எடுக்கவில்லை. அதேவேளை ரணில் அவர்களின் ஆட்சியில் இதுவரை எந்தவொரு போராட்டமும் அரச ஊழியர்கள் பக்கத்திலிருந்து எழவில்லை.

அவ்வாறு எதுவும் எழுந்து விடாதபடி ஒரு பயக்கெடுதியான நிலையை அரசாங்கம் தனது அனைத்து யந்திரங்களையும் பயன்படுத்தி பராமரிக்கிறது. தாங்கள் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களை முன்னெடுத்தால் மக்களின் எதிர்ப்பை சம்பாதிக்க நேரிடுமோ என தொழிற்சங்கத் தலைவர்களையும் அச்சமுற ஆக்கிவிட்டது ,இந்த ஆட்சி.

(பகுதி 3ல் தொடரும்)

.

Read more...

Tuesday, November 15, 2022

இலங்கையின் பொருளாதார நோயை சமாளிக்கும் ரணில் அரசபொருளியல் (Ranil Politinomics) பகுதி – 1 அ. வரதராஜா பெருமாள்

இலங்கையின் பொருளாதாரத்தின் குறைபாடுகளை - பலயீனங்களை தீவிரப்படுத்தி பெரும் நெருக்கடியாக வெடிக்கப்பண்ணியது 2009ம் ஆண்டு ஏப்ரலில் நடந்த பயங்கரவாத மனிதவெடி குண்டு தாக்குதல்களும், துட்டகைமுனுவின் வாரிசு தானே என நினைத்து ஆட்சி பீடத்தில் அமர்ந்த கோத்தாபய ராஜபக்சாவின் அரசியல் பொருளாதார செயற்பாடுகளுமே என்பதில் சந்தேகமில்லை.

அதன் விளைவாக கனன்றெழுந்த 'அறகலய' இயக்கம் ராஜபக்சாக்களை அதிகாரக் கதிரைகளில் தொடர்ந்து அமர்ந்திருக்க முடியாத நிலைமையை ஏற்படுத்தியது. அவர்களால் ஆட்சி பீடத்தில் அமர்த்தப்பட்ட அதி உத்தம ரணில் விக்கிரமசிங்கா அவர்கள், அவரது அமைச்சர்களும் அரசின் அதிகாரிகளும் அவருக்கு ஒத்துழைத்தால் இலங்கையின் பொருளாதாரத்தை நெருக்கடிகளிலிருந்து மீட்டுவிடுவார் என்று கூறப்பட்டது. அவருக்கு மேலைத்தேச நாடுகளின் அனுசரணை உள்ளது, இந்திய அரசாங்கமும் அவருக்கு உதவும், சீனா அவருக்கு தலையிடி கொடுக்காது, எனவே அவர் இலங்கையை பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீட்பதனை சாதித்து விடுவார் என்றே பலரும் கருத்து வெளியிட்டனர்.

ஜனாதிபதியாகப் பதவியேற்ற ரணில் அவர்கள் சில நாட்களுக்குள்ளேயே ஆட்சி அதிகாரத்தை உறுதியாக பற்றிக் கொண்டார். கோத்தாபய அவர்கள் தான் எதேச்சாரியாக ஆள வேண்டும் என்ற விருப்பத்தில் உருவாக்கிய 20வது அரசியல் யாப்புத் திருத்தம் ரணில் அவர்களுக்கு வாய்ப்பாக அமைந்து விட்டது. 21வது அரசியல் யாப்பு திருத்தம் மீண்டும் 'அரசியல் சபை' உருவாக்கப்பட்டதனால் முக்கியமான அரச நிர்வாக ஆணைக்குழுக்களான:
தேர்தல் ஆணைக்குழு,
பொதுச் சேவைகள் ஆணைக்குழு,
நீதிச் சேவை ஆணைக்குழு,
தேசிய பொலிஸ் ஆணைக்குழு,
கணக்காய்வு ஆணைக்குழு,
மனித உரிமைகள் ஆணைக்குழு,
லஞ்சம் மற்றும் ஊழல் மோசடிகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழு,
தேசிய கொள்முதல் ஆணைக்குழு,
நிதி ஆணைக்குழு மற்றும் எல்லைகள் நிர்ணய ஆணைக்குழு
போன்றவற்றை நியமிப்பது தொடர்பிலும், சட்ட மா அதிபர், பொலிஸ் மா அதிபர், கணக்காளர் நாயகம், பாராளுமன்ற செயலாளர் நாயகம் மற்றும் மத்திய வங்கி ஆளுநர் ஆகியோரின் நியமனம் தொடர்பிலும் அரசியல் யாப்பின் 20வது திருத்தத்துடன் ஒப்பிட்டுப்பார்க்கையில் ஜனாதிபதிக்குரியதாக இருந்த தனியுரிமை இங்கு இல்லாதாக்கப்பட்டிருக்கிறது.

இப்பொழுது அந்த நியமனங்களை அரசியல் யாப்பு சபையின் முன்மொழிவின் அடிப்படையிலேயே மேற்கொள்ள வேண்டும். எனினும் அதைத் தவிர ஜனாதிபதி நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்ற வகையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி அவர்களை விட ரணில் அவர்கள் அதிக அதிகாரங்கள் கொண்டவராகவே உள்ளார். இப்போதுள்ள நிலைமையின்படி அவராக விரும்பினாலொளிய 2024ம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கு முதல் யாராலும் வேறுவகையில் அவரை ஜனாதிபதி பதவியிருந்து கீழிறக்க முடியாது.

கடந்த ஜூலை மாதம் 12ந் திகதி அவர் ஜனாதிபதியானார். இப்போது அவரது சாதனைகளைப் பட்டியலிட்டுப் பார்ப்பது பயனுடையதாகும். அது யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே என்பது போல அடுத்து வரும் ஆண்டுகள் எப்படியிருக்கப் போகின்றன என்பதற்கான கட்டியம் கூறுவன.

அறகலயக்காரர்களை அடக்கிவிட்டார்
முப்படைகளை வசியப்படுத்திக் கொண்டார்


1. என்னதான் நிலைமை ஏற்பட்டாலும் மீண்டும் அறகலய எழுச்சி தனது ஆட்சிக்கு எதிராக தலையெடுத்து விடாது செய்வதற்கான ஏற்பாடுகளை அதிரடியாக நிறைவேற்றியது மட்டுமல்லாது, அது தொடர்பாக முப்படைகளும், அனைத்து பொலிஸ் மற்றும் உளவு அமைப்புகளும் விரும்பியபடி செயற்பட தாராளமாக விசேட அதிகாரங்களை வழங்கி, ராஜபக்சாக்களை விடவும் மேலாக தனது சர்வாதிகாரத்தை உறுதிப்படுத்தியிருக்கிறார்.

அறகலய எழுச்சியை ஒழுங்குபடுத்தியவர்கள், அதில் முன்னின்று செயற்பட்டவர்களை, அதில் பெரும்பாலும் குறிப்பாக இளைஞர்களையும் மாணவர்களையும், ஒரு சில நாட்களுக்குள்ளேயே ஆயிரக்கணக்கில் சிறைகளுக்குள் போட்டு விட்டார். அதில் சிலர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் கட்டாக்காலித் தனமாக விரிவடைந்து கொண்டிருக்கும் போதைப் பொருள் கடத்தல்கள் மற்றும் விற்பனைகள், கூலிக்கு கொலைகளையும் வன்முறைத் தாக்குதல்களையும் மேற் கொள்ளும் சமூக விரோதக் குழுக்கள், அரசின் கட்டமைப்பு முழுவதுவும் பரவியிருக்கும் லஞ்சம் மற்றும் ஊழல் மோசடிகள் ஆகியவற்றை கட்டுப்படுத்த முடியாத முப்படைகளும் பொலிஸ் அமைப்புகளும், வன்முறையற்றரீதியில் தங்கள் வெறுப்பையும் விரக்தியையும் வெளிப்படுத்திய அறகலயகாரர்களை தேடி துரத்திப் பிடிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயற்படுகின்றன. அந்த அளவுக்கு முப்படைகளும் பொலிஸ் அமைப்புகளும் தன் மீது விருப்பமும் விசுவாசமும் கொண்டிருக்கும் நிலைமையை ஜனாதிபதி ரணில் நிலைநாட்டியிருக்கிறார். அவர் முக்கிய அரச கட்டமைப்புகள் அனைத்தையும் தனக்கு வசமாக இயக்குவதில் ராஜபக்சாக்களையும் விட கெட்டிக்காரன் என்பதனை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.

வீதிகளில் காத்திருந்த மக்களை
வீடுகளில் காத்திருக்க வைத்து விட்டார்


2. இரவும் பகலும் என பல நாட்களாக பொதுமக்கள் வீதிகளில் நீண்ட வரிசைகளில் சமையல் வாயுவுக்கும், மண்ணெண்ணெய்க்கும், டீசலுக்கும் பெற்றோலுக்கும் என காத்து நிற்க வேண்டிய நிலைமை தொடர்வது தனது ஆட்சிக்கும் ஆபத்து என்பதனால், அதனை மிகத் தந்திரமான முறையில் மடை மாற்றி விட்டார். அதனது அர்த்தம் அந்தப் பொருட்கள் தாராளமாக பொதுமக்களால் வாங்கக் கூடிய நிலைமையை ஏற்படுத்தி விட்டார் என்பதல்ல. நவீன தொழில் நுட்ப முறையான கியூ. ஆர்.குறியீட்டு முறையினைப் பயன்படுத்தி பொது மக்களை மேற்குறிப்பிட்ட பொருட்களை அவர்களுக்கு கிடைக்கும் நாள் வரை அவரவரது வீட்டிலேயே காத்திருக்க வைக்கும் மாற்று ஏற்பாடொன்றினை நடைமுறையாக்கி விட்டார். அவரவருக்கு அந்தப் பண்டங்கள் கிடைக்கும் நாட்களை மட்டுமல்ல, அவரவருக்கு அந்தப் பண்டங்கள் எந்த அளவில் கிடைக்கும் என்பதை அரச அதிகாரமே நிர்ணயிப்பதன் மூலம் பற்றாக்குறையாக இருந்தாலும் பொது மக்கள் பொறுமையாக இருந்து கிடைப்பதை வாங்கிக் கொள்ள வேண்டிய ஒரு பங்கீட்டு முறையை நடைமுறையாக்கி விட்டார்.

கட்சிகளை வசப்படுத்திக் கொண்டார்

3. தனது அதிகார மற்றும் அரசியல் தேவைகளுக்கும், சர்வதேச நாணய நிதியம் கோருவதை நடைமுறையாக்குவதற்கும் வேண்டிய சட்டங்களை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கும், தனது திட்டங்களை எதிர்ப்புகள் பெரிதாக இன்றி நடைமுறைப்படுத்துவதற்கும் ராஜபக்சாக்களின் கட்சிக்காரர்கள் மற்றும் சிறி லங்கா சுதந்திரக் கட்சிக்காரர்களிடம் இருந்து மட்டுமல்லாது, முஸ்லிம்கள், வடக்கு-கிழக்கு தமிழர்கள் மற்றும் மலையகத் தமிழர்களின் கட்சிகளைச் சேர்ந்த பெரும்பான்மையானவர்களிடமிருந்தும் தேவையான ஆதரவை பெற்றுக் கொள்கின்ற கலையில் சாதனைகளை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்.

ராஜபக்சாக்களை குளிரப் பண்ணி விட்டார்

4. அறகலயக் காரர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குமுறைகளை நடைமுறைப்படுத்தியதன் மூலம் தன்னை ஜனாதிபதி ஆக்கிய ராஜபக்சாக்சாக்கள் அறகலயக்காரர்கள் மீது கொண்டிருக்கும் பழி வாங்கும் உணர்வுகளுக்குதீனி போட்டது மட்டுமல்லாது, நாட்டில் அரசியல் உறுதித்தன்மையை நிலைநாட்டி விட்டார் என்ற புகழையும் பெற்றுள்ளார். பேரினவாதிகள், மத மேலாதிக்கவாதிகள், ஊழல் மோசடிக்காரர்கள், அரச அதிகார பிரபுக்கள், கொள்ளைலாபம் அடித்துக் கொண்டிருந்த முதலாளிகள், அரச அதிகாரத்தில் உள்ளவர்களோடு ஒட்டி நின்று சட்ட விரோதமாக திடீர் கோடீஸ்வரர்களாகி பெரும் சொத்துக்களை குவித்துக் கொண்டவர்கள், இயற்கைவள கொள்ளையர்கள் போன்ற வகையினர் அனைவரும், அறகலய எழுச்சியால் தங்களின் அதிகாரமும் சொத்தும் சுகமும் என வசதியாக இருக்கும் அரசியல் பொருளாதாரக் கட்டமைப்பு எங்கே சிதறிப் போய்விடுமோ என அச்சம் கொண்டு ஆடிப் போயிருந்தார்கள்.

ஆனால் அவர்களெல்லாம் நிம்மதியாக மகிழ்ச்சியாக அவரவர் செய்து கொண்டிருந்த தேச விரோத, சமூக விரோத, மக்கள் விரோத செயல்களையெல்லாம் தொடர்ந்து செய்யக் கூடியதான கட்டமைப்பு எந்த வகையிலும் மாற்றமடையா வகையில் மீள உறுதிப்படுத்திய பெருமையும் அவருக்கே உரியது.

பகுதி 2ல் தொடரும்.....

Read more...

Monday, November 14, 2022

ராஜீவ் காந்தி கொலையில் புலிகளின் தொடர்பு : முடிச்சி எவ்வாறு அவிழ்ந்தது? தொடர் 03 - பிறேம்குமார்

ராஜிவ் குண்டு வெடித்து தான் சாக போகிறார் என தெரிந்த ஹரிபாபு எப்படி அந்த குண்டு வெடிப்பில் சிக்கினான்? இதற்கு விடைக்கான 7/5/1991 க்கு போவோம் அந்த தேதியில் முன்னாள் பிரதமர் வி.பி சிங் தேர்தல் பிரச்சாரத்தில் சென்னையில் கலந்து கொண்டார். முன்னாள் பிரதமருக்கு எந்த அளவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது என சோதிக்க விரும்பிய சிவராசன் தனுவிடம் ஒரு டம்மி குண்டை கட்டி வி.பி சிங்கிடம் தனு மாலையிட்டு காலில் விழுந்து பட்டனை அழுத்தி ஒத்திகை பார்ப்பதாக முடிவு செய்தனர்.

விடுதலை புலிகள் தங்களின் முக்கிய தாக்குதல் எல்லாவற்றையும் புகைப்படம் எடுத்து ஆவனப்படுத்தும் வழக்கம் வைத்து இருந்தனர் அதன்படி நம்பிக்கையான நபராக ஹரிபாபுவையும் தங்கள் குழுவில் இனைத்து கொண்டனர்.

வி.பி சிங்க் காலில் கெடுபிடியை மீறி தனு விழுந்து டம்மி குண்டு பட்டனையும் சரியாக அழுத்தினார் அப்பொழுது ஏற்பட்ட தடுமாற்றதால் ஹரிபாபுவால் புகைப்படம் எடுக்க இயலவில்லை. இதனால் ஹரிபாபுவை சிவராசன் கடுமையாக கடிந்து கொண்டான்.

ராஜிவ் படுகொலையில் அது போல தவறு நடந்துவிட கூடாது என்ற உந்துததாலும். வெடிகுண்டின் வலிமை தெரியாமலும் கொஞ்சம் நெருங்கி சென்றதே ஹரிபாபு உயிரை பறித்தது.

இரண்டாம் கடித்ததில் பாக்கியநாதன் , தாஸ் ( முருகன் ) , அறிவு ( பேரறிவாளன் ) என புதிய பெயர்கள் கிடைத்தது இவர்கள் யார் ? எப்படி ஒருங்கினைந்தனர் ? என்ற கேள்வி தோன்றியது.
இதற்கு பதில் தேடிய பொழுது அதீத எச்சரிக்கை உனர்வின் காரனமாக வந்து சிக்கி பதில் தந்தார் ஒருவர், அவர் ஹரிபாபுவின் முதலாளி சுபா சுந்திரம் !!

இதற்கிடையே ஹரிபாபு அப்பா தன் மகன் ஹரிபாபுவுக்கும் விடுதலை புலிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், சிறப்பு புலனாய்வு குழு திட்டமிட்டு இதில் தன் மகனை சிக்க வைக்க பார்ப்பதாகவும் பிரஸ் மீட் ஏற்பாடு செய்து தெரிவித்தார்.

இதன் பிறகு அவரை சந்தித்து சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் பேசியபொழுது தான் அப்படி பிரஸ் மீட் கொடுக்க விரும்ப வில்லை என்றும், ஹரிபாபுவின் முதலாளி சுபா சுந்தரம் தான் அப்படி பிரஸ் மீட் கொடுக்க சொல்லி நெருக்குதல் தந்ததாக சொன்னார்.

மேலும் தன் மகன் இறந்த பிறகு வீட்டில் கட்டுகாடாய் இருந்த விடுதலை புலிகள் நோட்டீஸ் புத்தம் எல்லாவற்றையும் வேறு எங்காவது கொண்டு போயி வைக்கும் படி அவர் சொன்னதாலேயே பின்னாடி வீட்டில் கொண்டு போயி வைத்தாகவும் சொன்னார்.

சுபா சுந்தரம் பிரபலமான போட்டோ சாப் முதலாளி பல்வேறு அரசியல் தலைவர்களுடன் தொடர்பில் உள்ளவர்.
இதனிடையே ராஜிவ் கொலை செய்யப்பட்ட பொழுது வந்த பத்திரிக்கையாளர் அனைவரையும் தனி தனியாக விசாரித்தனர்.
அப்போழுது ஒரு நிருபர் தான் ஹரிபாபுவை பார்த்து பேசி கொண்டு இருந்ததாகவும் அப்பொழுது உடன் நின்ற குர்தா கண்ணாடி அனிந்த நபர் ( சிவராசன் ) யார் என்று கேட்ட பொழுது, சுபா ஸ்டுடியோ பார்ட்னர் என ஹரிபாபு சொன்னதாகவும், ஆனால் அந்த நபர் எதுவும் பேச வில்லை என்று குறிப்பிட்டார்.

ஹரிபாபு இறந்த பொழுது அவர் பையை போலீஸ் துளாவிய பொழுது அதில் போட்டோகிராப்பர் ஐ.டி கார்டும் , சுபா ஸ்டுடியோ விசிட்டிங் கார்டும் இருந்துள்ளது. அதை பார்த்துவிட்டு சுந்தரத்துக்கு போன் செய்து ஹரிபாபு இறப்பு பற்றி பேசிய பொழுது, அப்படி யாரையும் தனக்கு தெரியாது என்று சொல்லி உள்ளார். இதை அந்த போலீஸ்காரரும் குறிப்பிட்டு உள்ளார்.

தேள்கடி ராம மூர்த்தி என்ற பத்திரிக்கையாளர் ஒரு அதிர்ச்சிகரமான தகவல் சொன்னார்.
அதில் ஹரிபாபு சுபா சுந்தரத்திடம் வேலை பார்க்கும் நபர் என்று தனக்கு தெரியும் என்றும் அன்று தனும் ஸ்ரீபெரும்புதூர் கூட்டத்து சென்றதகவும் ஹரிபாபு இறந்தவுடன் சுபா சுந்தரத்துக்கு போன் செய்ததாகவும், அப்பொழுது அவன் செத்தால் சாகட்டும் அந்த கேமிராவை எடுத்து வந்தால் எத்தனை கோடி வேண்டுமானாலும் தருவதாக சொன்னார் என்றும், ஆனால் தான் மறுத்து விட்டதாகவும் போலிஸ் ஸ்டேசனில் வந்து சொல்லி உள்ளார்.


அவர் இதை சொன்ன கொஞ்சம் நேரத்திலேயே தனக்கு இருந்த போலீஸ் நட்பு மூலம் தெரிந்து கொண்ட சுபா சுந்தரம் தேள்கடி ராமமூர்த்திக்கு கொலை மிரட்டல் விடுத்து உள்ளார். பயந்துபோன அவர் சிறப்பு விசாரணை அதிகாரிகளை சந்தித்து உண்மையை சொன்னார். இதனை அடுத்து சுபா சுந்தரம் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரனையில் புலிகள் பங்கு மேலும் தெரிந்தது.

சுபா சுந்தரத்திடம் நடத்திய விசாரனையில் தனக்கு எதுவும் தெரியாது என்றவர், ஒரு கட்டத்தில் ஹரிபாபு வீட்டில் கைப்பற்றபட்ட பிரசுரம் அச்சடிக்கப்பட்ட இடம் மட்டும் தெரியும் என்றார். அந்த அச்சகம் bbl alrounder என்ற பெயரில் செயல்பட்டது. அதன் உரிமையாளர் பாக்கியநாதன் (நளியின் தம்பி). ஹரிபாபு வீட்டில் கிடைத்த கடித்ததில் பாக்கியநாதன் பெயர் குறிப்பிடப்பட்டு இருந்தது இவரை விசாரனை அதிகாரி நேரில் வீட்டுக்கு சென்று விசாரித்தனர். ஹரிபாபுவை தெரியும் என்பதை தாண்டி எந்த விபரமும் பாக்கியநாதனிடம் இருந்து பெற இயலவில்லை.

மேலும் குடும்பத்தை பற்றி விசாரித்த பொழுது தனக்கு ஒரு தங்கை கல்யானி, தாய் பத்மா மட்டுமே இருப்பதாகவும் அப்பா இறந்து விட்டதாக குறிப்பிட்டு இருந்தார். (அக்கா நளினியை மறைத்து உள்ளார் ) மேலும் நோட்டிஸ் அச்சடித்து கொடுத்தது அவ்வளவு பெரிய குற்றம் இல்லை என்பதால் அதிகாரி திரும்பி வந்தார்.

இதற்கிடையே தஞ்சையில் சந்தேகத்துக்கு இடமாக சுற்றிய ஒரு இலங்கை தமிழரை கைது செய்தனர். அவன் பெயர் சங்கர் என்னும் விக்னேஸ்வரன் என்னும் ரூசோ. அவனிடம் சோதனை செய்ததில் துண்டுச் சீட்டில் இரண்டு டெலிபோன் நம்பர்கள் இருந்தன.

‘நளினி தாஸ் – 2419493’ என்று ஓர் எண். இன்னொன்று, ‘சிவராசா – 2343402.’ அதன் அடிப்படையில் அந்த இரு எண்களுக்கும் போன் செய்து விசாரித்ததில் முதல் எண், அடையாறில் இருந்த அனபான் சிலிக்கான்ஸ் என்னும் நிறுவனத்தின் டெலிபோன் நம்பர் என்று தெரிந்தது. இரண்டாம் நம்பர் போரூரில் உள்ள மளிகை கடை எண் என தெரிந்தது.

இதற்கிடையே விசாரணையின்போது ரூசோ, தன்னை விடுதலைப் புலிகளின் உறுப்பினர் என்பதை ஒப்புக் கொண்டார். அவர் தஞ்சாவூர் பக்கத்தில் நடமாடிய காரணத்தால், அந்தப் பகுதியில் வேறு யாருக்காவது விடுதலைப் புலிகளுடன் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் அவரை விசாரித்தார்கள். அந்த விசாரணையில் ரூசோ, மற்றொருவரைக் காட்டிக் கொடுத்தார்.

இந்த நபர், தஞ்சாவூரில் இருந்து அதிக தொலைவில் இல்லாத கடலோர கிராமமான திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்தவர். தொழில் ரீதியாக கடத்தல்காரர். விடுதலைப் புலிகளுக்கு தேவையான பொருட்களை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைப்பதில் இவர் உதவுவதாக ரூசோ தெரிவித்தார். தமிழக போலீஸார் இந்த திருத்துறைப்பூண்டி கடத்தல்காரரைக் கைது செய்தனர். அவரை விசாரித்தபோது, புலிகளுக்கு தேவையான பொருட்களை யாழ்ப்பாணம் அனுப்பி வைப்பதற்கு உதவி செய்வதை அவர் ஒப்புக் கொண்டார். அதில் புலனாய்வுக்குழு அதிகம் அக்கறை காட்டவில்லை. காரணம் அந்தக் காலப் பகுதியில், தமிழகத்தின் கடலோரப் பகுதியில் வசித்த பலரது முழுநேர தொழிலே, புலிகளுக்கு பொருட்கள் அனுப்புவதுதான். மத்திய, மாநில அரசுகள் அதை கண்டும் காணாமலுமாக இருந்து வந்தன.

இதனால், புலிகளுக்காக பொருட்கள் கடத்துவதை பெரிய தண்டனைக்குரிய குற்றமாக கருதி அவரை விசாரிக்கவில்லை புலனாய்வுக்குழு. அவர்களது விசாரணை முழுவதும் ராஜிவ் கொலையை மையமாக வைத்தே இருந்தது. ராஜிவ் கொலையுடன் புலிகளுக்கு ஏதாவது தொடர்புகள் இருந்தனவா என்ற விபரங்களை அறியும் விதத்திலேயே கேள்விகள் கேட்கப்பட்டன.

இந்த திருத்துறைப்பூண்டி கடத்தல்காரருக்கு விடுதலைப்புலிகளுடன் நல்ல பரிச்சயம் இருந்தது. ஆனால், புலிகள் ஸ்ரீலங்காவில் இருந்து இந்தியாவுக்கு வரும்போது மட்டுமே இவரைக் கடந்து செல்வார்கள். கடற்கரையில் இருந்து தமிழகத்துக்குள் சென்று சென்றுவிட்டால், அவர்கள் என்ன நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என்பது இவருக்கு தெரியாது. தமிழகத்தின் எந்த நகரத்துக்கு செல்கிறார்கள் என்றுகூட இவருக்கு தெரியாது.

இதனால் இந்தக் கடத்தல்காரரிடம் இருந்து உபயோகமான தகவல் ஏதும் புலனாய்வுக் குழுவுக்கு கிடைக்கவில்லை. விசாரணையை முடித்துக்கொண்டு அவரை அனுப்பிவிடலாம் என இவர்கள் முடிவு செய்த நேரத்தில், என்ன தோன்றியதோ, புலனாய்வு அதிகாரி ஒருவர் தமது ஜீப்புக்குச் சென்று அதன் கிளவ் கம்பார்ட்மென்ட்டில் வைக்கப்பட்டிருந்த கவர் ஒன்றை எடுத்து வந்தார். அதனுள் சில போட்டோக்கள் இருந்தன. ராஜிவ் காந்தி கொல்லப்படுவதற்கு முன், ஹரிபாபுவால் எடுக்கப்பட்ட போட்டோக்கள் அவை. அந்த போட்டோக்களை கடத்தல்காரரிடம் காட்டிய புலனாய்வு அதிகாரி, “இந்த போட்டோவில் இருப்பவர்களில் யாரையாவது உங்களுக்கு தெரியுமா?” என்று கேட்டார்.

போட்டோக்களைப் பார்த்துவிட்டு கடத்தல்காரர், “இதோ இவரைத் தெரியும்” என்று காட்டிய நபரைக் கண்டதும் அதிகாரிகளுக்கு தூக்கிவாரிப் போட்டது. காரணம் இவர்கள் ‘அடையாளம் தெரியாத மர்ம நபர்’ என ‘எக்ஸ்’ போட்டு வைத்திருந்த நபர் அவர். போட்டோவில் குர்தா-பைஜாமா அணிந்து கொண்டிருந்த அந்த நபர் யார் என்று அறிவதற்குதான் இவர்கள் பத்திரிகை விளம்பரம் எல்லாம் கொடுத்து தலைகீழாக முயற்சி செய்து கொண்டிருந்தார்கள்!

“சரியாகப் பார்த்துச் சொல்லுங்கள். போட்டோவில் உள்ள இந்த நபரையா தெரியும் என்கிறீர்கள்?”
“ஆம். இவரேதான். இவர் கடல் வழியாக தமிழகத்துக்கு வரும்போது சில தடவைகள் சந்தித்திருக்கிறேன். இவரும் விடுதலைப்புலிதான்”
“இவருடைய பெயர் தெரியுமா?”
“சிவராசன் என்று அழைப்பார்கள். இவருக்கு ஒரு கண் மட்டும்தான் உண்டு. மற்றைய கண் ராணுவத்துடன் யுத்தம் புரிந்தபோது பறிபோனதாக சொன்னார்”
இந்தக் கட்டத்தில்தான், ராஜிவ் கொலையின் மாஸ்டர்மைன்ட் நபரின் பெயர் சிவராசன் என்பது புலனாய்வுக் குழுவுக்கு முதல் தடவையாக தெரியவந்தது.

தஞ்சையில் ரூசோவிடம் இருந்த நளினியின் கம்பேனி போன் நம்பர் ராஜிவ் கொலையில் பங்கேற்றவர்கள் தொடர்பானது என போலிஸ் நினைக்கவில்லை. எனவே அந்த நம்பருக்கு போன் செய்து நளினியை கேட்டதும் அவர் வேலைக்கு வரவில்லை என்ற பதில் கிடைத்ததும் சரி என்று விட்டு விட்டனர்.
இதற்கிடையே ராஜிவ் கொலையில் ஹரிபாபு எடுத்த போட்டாவை மேசையில் வைத்து அதிகாரிகள் பேசி கொண்டு இருந்த பொழுது அதில் சுபா, நளினி இருக்கும் புகைப்படத்தை வைத்து இது யாராக இருக்கும் என்று பேசி கொண்டு இருந்து உள்ளனர் . அப்பொழுது பாக்கியநாதன் வீட்டுக்கு விசாரனைக்கு சென்று வந்த அதிகாரி நான் இந்த பெண்னை பார்த்து இருக்கேன்.
எங்கே ?
பாக்கியநாதன் வீட்டு பேமிலி போட்டாவில்..

உடனடியா அனைவரும் பாக்கியநாதன் வீட்டுக்கு சென்றனர். இவர்களை பார்த்த பாக்கியநாதன் தப்பிக்க முயற்சி செய்தான். விடாமல் பிடித்து பாக்கியநாதன், அவன் அம்மா பத்மா இருவரையும் கைது செய்தனர். நளினி எங்கே என விசாரித்த பொழுது அவர் காதலன் தாஸ் என்னும் முருகனோடு தலைமறைவாகி விட்டதாக தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டோரிடம் நடத்திய விசாரனையில் சில உண்மைகள் புலப்பட்டது
பேபி சுப்ரமனியம் : விடுதலை புலியின் முக்கிய தலைவர்களிள் ஒருவன். 83 க்கு பிறகு தமிழ்நாட்டில் தங்கிய பேபி சுப்ரமனியம் 89 வரை தமிழ்நாட்டில் விடுதலை புலிகளுக்கான தளத்தை உருவாக்கும் வேலை பார்த்தார் பின் 89 க்கு பிறகு இலங்கை சென்ற பேபி 2009 இறுதி போரில் மே மாதம் உயிர் இழந்தார்.

இவரை பற்றி எதுக்கு இப்ப சம்பந்தம் இல்லாமல் என்று எண்ண வேண்டாம், பேபி சுப்ரமனியம் தமிழ்நாட்டில் தங்கிய காலத்தில் பல அரசியல் தலைவர்களுடன் நெருக்கம் பேணினான் , இயக்கத்துக்காக பல இளைஞர்களை தயார் செய்யும் பணியிலும் இருந்தான். அப்படி தான் சுபா சுந்தரத்துடன் நெருக்கமாகி உள்ளான். சுபா சுந்தரத்திடம் வேலைக்கு சேர்ந்த ஹரிபாபு, பாக்கியநாதன் , பேரறிவாளனும் பேபி சுப்ரனியத்துடன் நெருக்கமாகி உள்ளனர்.

இதில் இன்னொரு பெயரும் முக்கியம் அது முத்துராஜா.
முத்துராஜா இந்தியராக இருந்தபோதிலும், ஈழ விடுதலை லட்சியத்துக்காகத் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொண்டவர். முத்துராஜாவின் தாயும், தங்கையும் சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்தனர். அந்த வீட்டை விடுதலைப்புலிகள்தான் வாடகைக்கு எடுத்திருந்தனர். அதில் ஓர் அறை மட்டும் பேபி சுப்பிரமணியத்துக்காக ஒதுக்கப்பட்டிருந்தது.

ஒரு கட்டத்தில் விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவினர் முத்துராஜா இல்லாமல் தமிழகத்தில் எதுவும் செய்வதில்லை என்ற நிலைமை இருந்துள்ளது.
இந்திய அமைதிப் படையுடன் புலிகள் யுத்தம் புரிந்தபின், தமிழகத்தில் இருந்து விடுதலைப்புலிகள் அமைப்பு கொஞ்சம் கொஞ்சமாக வாபஸ் வாங்கிக் கொண்டிருந்த காலப்பகுதி அது. யாழ்ப்பாணத்திற்குச் செல்வதற்கு முன் புலிகளின் பிரசுரங்களை அச்சிடுவதற்கு பேபி சுப்பிரமணியத்தால் பயன்படுத்தப்பட்டு வந்த விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குச் சொந்தமான அச்சகம், மிகச் சொற்ப விலைக்கு பாக்கியநாதனுக்குத் தரப்பட்டது. அப்படி தான் bbl alrounder அச்சகம் பாக்கியநாதனுக்கு சொந்தமானது அந்த அச்சகத்தை அவரது தொழிலுக்காகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றபோதிலும், போராளிகள் தொடர்பான அச்சுப்பணிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பாக்கியநாதனிடம் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, இந்தியாவில் பாக்கியநாதனின் அக்கா நளினி, அவரது தாயாருடன் சண்டையிட்டுக் கொண்டு வேறு இடத்தில் தனியாகத் தங்கப் போய்விட்டார். அவருக்கு விருப்பமென்றால், சில நாட்களுக்கு விடுதலைப்புலிகள் வாடகைக்கு எடுத்த வீட்டில் தனது தாயார் மற்றும் சகோதரியுடன் தங்கியிருக்குமாறு நளினியை முத்துராஜா கேட்டுக் கொண்டார்.

சில நாட்கள் முத்துராஜா வீட்டில் தங்கியபின், நளினி அங்கிருந்து வெளியேறி மகளிர் விடுதி ஒன்றில் சேர்ந்தார். அதையடுத்து, வில்லிவாக்கம் ஹைகோர்ட் காலனியில் ஒரு வீட்டைப் பிடித்து வாடகைக்குக் குடியேறினார் நளினி.

இந்த வீட்டில்தான் ராஜிவ் கொலைக்கான பூர்வாங்க வேலைகள் தொடங்கின என்கிறார்கள்!

தொடரும்… முந்திய பகுதிகள் தொடர் கட்டுரைப் பகுதியில்..

Read more...

Sunday, June 19, 2022

ராஜீவ் காந்தி கொலையில் புலிகளின் தொடர்பு : முடிச்சி எவ்வாறு அவிழ்ந்தது? தொடர் 02 - பிறேம்குமார்

ஹரிபாபு : இவன் ஒரு ப்ரி லாஞ்சர் கேமிராமேன் யாராவது பத்திரிக்கையில் கேமிராமேன் கிடைக்கவில்லை என்றால் கூலிக்கு ஹரிபாபுவை கூட்டி செல்வது உண்டு. அதனால் பல பத்திரிகையாளருக்கு ஹரிபாபு அறிமுகம் உண்டு . ராஜிவ் படுகொலை நடந்த அந்த பொதுகூட்டத்தில் பலர் சிவராசனோடு ஹரிபாபுவை பார்த்து உள்ளனர். அப்படி பார்த்த பத்திரிகையாளர் சாட்சியம் பற்றி பின்னர் சொல்கிறேன்.

சி.பி.ஐ ஹரிபாபு வீட்டில் சோதனை செய்கிறார்கள். ஆனால் எந்த தடயமும் அந்த சின்ன கூரை வீட்டில் கிடைக்க வில்லை. ஹரிபாபு புகைப்படமோ கேமிரா ஸ்டாண்ட் என அவர் சம்பந்தப்பட்ட எதுவும் அங்கே இல்லை. அவர் அம்மா அப்பாவிடமும் எந்த உருப்படியான தகவலும் கிடைக்கவில்லை அங்கிருந்து வெளியேறினாலும் அந்த வீட்டை கண்கானிக்க ரகசியமாக காவலரை நியமித்தனர். கண்கானித்த காவலர்கள் அந்த வீட்டின் பின்னே வேறு ஒரு வீடு அவர்களுக்கு இருப்பதையும் அது பூட்டி இருப்பதை கண்டுபிடித்தனர். இது பற்றி அவர்கள் துப்பு தந்ததும் உடனடியாக அந்த வீட்டை சோதனயிட்டனர் . அங்கே கட்டு கட்டாக விடுதலை புலிகளுக்கு ஆதரவான நோட்டீஸ், புத்தகம் கிடைத்தது அத்துடன் முக்கியனாமன இரண்டு கடிதமும் கிடைத்தது.


ஹரிபாபு வீட்டில் புலிகளின் புத்தகம் நோட்டிஸ் கைப்பற்றும் வரை உளவுதுறை இதில் விடுதலை புலிகளுக்கு தொடர் இல்லை என்றே உறுதியாக நம்பியது அதற்கு காரணம். கிட்டு ராஜிவ் காந்தி கொலை நடைபெற்ற தினத்துக்கு மறுநாள், லண்டனில் இருந்த விடுதலைப் புலிகள் சர்வதேசச் செயலகத் தலைவர் சதாசிவம் கிருஷ்ணகுமார் (கிட்டு), ”இதில் தங்கள் இயக்கத்துக்குத் தொடர்பு இல்லை” என்று அறிவித்தார்.

கிட்டு கூறிய தகவல் ஊடகங்களில் வெளியாகும் முன்னர், இந்திய உளவுத்துறை றோவுக்கு, கிட்டுவால் நேரில் கூறப்பட்டிருந்தது. அதை றோவும் நம்பியது. கிட்டுவின் கூற்றை றோ நம்புவதற்கு ஒரு முக்கிய காரணமும் இருந்தது. அதுதான், வில்லங்கமானது!

இந்த இடத்தில் மற்றொரு உண்மையையும் கூறிவிடலாம். இந்திய உளவுத்துறைக்கு ஏற்பட்ட மகத்தான சறுக்கல் என்பதால், நாம் கூறப்போகும் விஷயம் பல வருடங்களாகவே அடக்கி வாசிக்கப்பட்டது. ராஜிவ் கொல்லப்படுவதற்கு முன்பே, விடுதலைப் புலிகள் அமைப்பில் யாழ்ப்பாணத்தில் மிகப் பிரபலமாக இருந்த தளபதி கிட்டு, அவரது பிரபல்யம் உச்சத்தில் இருந்தபோது, அவர்மீது, யாழ்ப்பாணத்தில் வைத்து குண்டுவீச்சு ஒன்று நடைபெற்றது. (ராணுவமோ, வெளி ஆட்களோ செய்யவில்லை. புலிகள் இயக்கத்தின் உள் விவகாரம் அது. அதைப்பற்றி இங்கே வேண்டாம்)

அதில் காயமடைந்த கிட்டு தனது ஒரு காலை இழக்கும் நிலை ஏற்பட்டது. அதன்பின் மருத்துவச் சிகிச்சைக்காக அவர் சென்ற இடம், தமிழகம்! தமிழகத்தில் கிட்டு தங்கியிருந்த காலத்தில், அவருடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டது இந்திய உளவு அமைப்பு றோ. ஒரு கட்டத்தில், கிட்டுவை தமது ஆளாகவே நினைத்துக் கொண்டது றோ. இதில்தான் ஏற்பட்டது இந்திய உளவுத்துறையின் மகத்தான சறுக்கல். கிட்டுவை தமது நிரந்தர இன்போர்மராக வேலையில் சேர்த்துக் கொண்ட றோ, அவருக்கு மாதா மாதம் சம்பளமும் வழங்கியது.


கிட்டுவை லண்டனுக்கு அனுப்புவதற்கு விடுதலைப் புலிகள் இயக்கம் முடிவு செய்தபோது, றோவுக்கும் அதில் சந்தோஷமே. புலிகளின் வெளிநாட்டு டீலிங்குகள் பற்றிய முழு விபரங்களும் கிட்டு மூலமாகத் தமக்கு தெரியவரும் என்று நினைத்துக் கொண்டது இந்திய உளவுத்துறை. கிட்டு லண்டனில் இருந்தபோதும், றோவினால் மாதாமாதம் வழங்கப்பட்ட சம்பளம் அவருக்கு போய்க் கொண்டு இருந்தது. இப்படியான நிலையில்தான், ராஜீவ் காந்தி கொலை நடைபெற்றது!

இந்திய உளவுத்துறை றோ உடனடியாகவே, தமது இன்போர்மர் கிட்டுவைத் தொடர்பு கொண்டது. ராஜிவ் காந்தி கொலையில் புலிகள் தொடர்பு இருக்கிறதா என்று கேட்டார் றோவில் கிட்டுவுக்கான ஹான்டிலர். தான் தகவல் அறிந்து சொல்வதாக கூறிய கிட்டு, அடுத்த சில மணி நேரத்தின் பின், றோவின் அதிகாரியை போனில் தொடர்பு கொண்டார். “நான் விசாரித்து விட்டேன். இதில் புலிகளுக்கு எந்த தொடர்பும் கிடையாது” என்றார் கிட்டு. “இது மிகவும் முக்கியமான விஷயம். மீண்டும் ஒருமுறை உங்கள் தொடர்புகளிடம் நன்றாக விசாரியுங்கள். ராஜிவ் கொலையை, இந்தியாவில் தங்கியுள்ள புலிகளின் உறுப்பினர்கள் யாராவது செய்திருப்பார்களா என்று கேட்டுப் பாருங்கள்” என்று வற்புறுத்தினார் றோ அதிகாரி. அதற்கு கிட்டு கூறிய பதில்தான் கிளாசிக்!

“நான் விசாரித்ததே புலிகளின் தலைமையிடம்தான் (பிரபாகரன்). அவரது அனுமதி இல்லாமல் இப்படியான பெரிய காரியம் ஏதும் புலிகள் இயக்கத்தில் நடக்க முடியாது. இதில் புலிகளின் தொடர்பு இல்லை என்று தலைவர் அடித்துக் கூறுகின்றார் . உண்மையைச் சொல்லப் போனால், ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட விஷயம் கேள்விப்பட்டு அவரே அதிர்ந்து போய் இருக்கிறார்” என்பதே கிட்டு கூறிய பதில்!

கிட்டுவின் பதிலுடன், ராஜிவ் கொலையை புலிகள் செய்யவில்லை என்று கன்வின்ஸ் ஆகியது றோ. சி.பி.ஐ.யின் விசேட புலனாய்வுக்குழு விசாரணையைத் தொடங்கியபோது, இந்தியாவின் வெளிநாட்டு விவகாரங்களைக் கவனிக்கும் உளவுத்துறை என்ற வகையில் றோவிடமும் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு றோ கூறிய பதில், “இந்தக் கொலையை புலிகள் செய்யவில்லை” என்பதே!

கிட்டு தம்மை ஏமாற்றிய வடுவை நீண்ட காலம் மனதில் வைத்திருந்த றோ, பின்னாட்களில் என்ன செய்தது? கிட்டு கப்பல் மூலம் வன்னி செல்கையில் இந்து சமுத்திரத்தில் வைத்து இந்திய கடற்படையால் தடுக்கப்பட்டார். நடுக்கடலில் நடைபெற்ற சில பேச்சுவார்த்தைகளின்பின், கிட்டு சக்தி வாய்ந்த குண்டை வெடிக்க வைத்து, கப்பலையும் அழித்து, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், றோவும் முக்கிய பங்கு வகித்தது.

நாம் மீண்டும் ஹரிபாபு விடயத்துக்கு வருவோம்
ஹரிபாபு வீட்டில் கைபற்றபட்ட கடிதத்தில் ஒன்று அவர் காதலி சுந்தரி எழுதியது. அதில் அவர் ஹரிபாபு தவறான நபர்களுடன் பழகுவதாகவும் , கொஞ்சம் நாட்களில் முக்கிய காரியம் ஒன்று முடித்ததும் யாழ்பானத்தில் போயி தங்கிடலாம் என ஹரிபாபு கூப்பிடுவதாகவும் இதில் தனக்கு உடன்பாடு இல்லை என எழுதி உள்ளார்.

இரண்டாம் கடிதம் தாஸ் என்னும் முருகன் எழுதியது அதில் தான் கொடுத்து அனுப்பும் பனத்தை பாக்கியநாதனிடம் ( நளினியின் தம்பி) கொடுத்து விடும்படியும் அறிவு ( பேரரிவாளன் ) வந்து வாங்கி கொள்வார் எனவும் எழுதி இருந்தது. முதல் கடித்ததின்படி ஹரிபாபுக்கு ராஜிவ் கொலை நடக்க போவது தெரிந்தே தான் ஸ்ரீ பெரும்புதூர் கூட்டதில் கலந்து கொண்டு இருக்கிறார் என யூகத்துக்கு வர இயலும்.

அப்படி இருக்க அவர் எப்படி குண்டு வெடிப்பில் இறந்தார்? என்ற கேள்வி எழும்.

இதற்க்கான விடையை அடுத்த பதிவில் பார்ப்போம்..

தொடரும் ......

Read more...

Saturday, June 11, 2022

ராஜீவ் காந்தி கொலையில் புலிகளின் தொடர்பு : முடிச்சி எவ்வாறு அவிழ்ந்தது? தொடர் 01 - பிறேம்குமார்

சரியாக 31 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீ பெரும் புதூரில் இனவாதிகளால் கொல்லப்பட்ட தன் தாய் இந்திராவின் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு வரும் வழியில் இடைமறித்து மாலையிட்ட கூட்டத்தின் நடுவில் இருந்த தற்கொலை படை பெண் தனுவால் கொல்லப்பட்டார் ராஜிவ். அவருடன் 10 பொது மக்களும் 6 காவலர்களும் உயிர் இழந்தனர், பலர் காயமுற்று உறுப்புகளை இழந்து கதறினர், ராஜிவ் உடல் பிரதே பரிசோதனைக்காக அனுப்பபட்டது.

காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பிய பின்னர் இறந்தவர்கள் உடல்களும் உடமைகளும் சேகரிக்கப்பட்டது. அப்பொழுது கேமிராமேன் ஹரிபாபு உடலும் அவனுடன் cannon camera வும் கிடைத்தது குண்டு வெடிப்பு நடைபெற்ற பகுதியில், பல பொருட்கள் சிதறிக் கிடந்தன. அங்கிருந்து ஓடியவர்கள் விட்டுச் சென்ற ஏராளமான செருப்புகள், ஹேன்ட்-பேக்கள், பைகள் என்று தரையெங்கும் பல பொருட்கள் சிதறிக் கிடந்தன.

அந்தப் பொருட்களைப் போல ஒரு பொருளாகவே, இந்த கெனான் காமெராவும், பத்தோடு பதினொன்றாக சேகரிக்கப்பட்டது. எவ்வித உயர் பதவியிலுமில்லாத சாதாரண பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரால் இந்த காமெரா பத்திரப்படுத்தப் பட்டது. இந்த காமெராவுக்கு உள்ளேயுள்ள பிலிம் ரோலில்தான், மனித வெடிகுண்டாக வந்து ராஜிவ் காந்தியைக் கொன்ற பெண்ணின் உருவமும், அவருக்கு துணையாக வந்திருந்த மற்றையவர்களின் உருவங்களும், குண்டு வெடிப்பைத் திட்டமிட்டுக் கொடுத்தவரின் உருவமும், வெவ்வேறு பிரேம்களில் பதிவாகியிருந்தன. இந்த ஒற்றைக் காமெரா மாத்திரம் புலனாய்வாளர்களின் கைகளில் கிடைக்காதிருந்தால், ராஜிவ் காந்தியை கொன்றது யார் என்பது, இன்றுவரை கேள்விக் குறியாகவே இருந்திருக்கும்!

கேமிராமேன் ஹரிபாபு எடுத்த புகைப்படத்தை பற்றிய முக்கியதுவத்தை தமிழக காவல்துறை அறியும் முன்பே ஹிந்து பத்திரிக்கை அறிந்து இருந்தது. பிரிண்ட் போட கொடுத்த இடத்தில் இருந்து கைப்பற்றி அதை மே 23 ல் வெளியிட்டது. தமிழக காவல்துறையினரிடமிருந்த 10 போட்டோக்களின் நெகட்டிவ் பிலிம் ரோல்களையும், போட்டோ எடுக்க உபயோகிக்கப்பட்ட கேமராவையும் பெற்றுக் கொண்டது சி.பி.ஐ. தமக்குக் கிடைத்த போட்டோக்களை சி.பி.ஐ. ஒவ்வொன்றாக ஆராயத் தொடங்கியது.

முதலாவது போட்டோவில், லதா கண்ணன் மற்றும் அவரது மகள் கோகில வாணி( ராஜிவ்வை சந்திக்க வந்து உயிர் விட்டவர்கள் ) ஆகியோருக்கு நடுவே, யார் என்று அடையாளம் காணப்படாத பெண், நின்றிருந்தார். மனித வெடிகுண்டு என்று ஹிந்து பத்திரிகையால் சந்தேகம் கிளப்பி விடப்பட்ட அந்தப் பெண்ணுக்கு சற்று தொலைவில், பைஜாமா-குர்தா அணிந்த மற்றொரு நபர் நின்றிருந்தார். போட்டோவில் இருந்த மூன்று பெண்களும் இறந்துவிட்டனர். ஆனால், அதில் நின்றிருந்த நான்காவது நபரான ஆண், சம்பவம் நடந்த இடத்தில் இறந்து போனவர்கள் பட்டியலில் இல்லை. காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் பட்டியலிலும் அவர் காணப்படவில்லை. யார் அந்த நபர்?

பிலிம் ரோலில் இருந்த முதலாவது போட்டோவே, இரு முக்கிய மர்மங்களை ஏற்படுத்தி விட்டது. லதா கண்ணன் மற்றும் அவரது மகள் கோகில வாணி ஆகியோருக்கு நடுவே நின்றிருந்த பெண், மற்றும் அதே போட்டோவில் இருந்த ஆண் ஆகிய இருவரின் அடையாளமும் தெரியவில்லை என்பது முதலாவது மர்மம். அந்த ஆண், கொல்லப்பட்ட மர்மப் பெண்ணுடன் தொடர்புடைய நபரா? இது, இரண்டாவது மர்மம்.


கேள்விகளுக்கு விடை தெரியாத நிலையில், இந்த முதலாவது போட்டோவை ஹோல்டில் வைத்துக்கொண்டு, மற்றைய ஒன்பது போட்டோக்களையும் ஆராய்ந்தது சி.பி.ஐ.
இரண்டாவது போட்டோவில், பொதுக்கூட்டத்தில் பெண்கள் பகுதியில் இருந்தவர்கள் காட்சியளித்தனர்.
மூன்றாவது போட்டோவில் சினிமா இசை அமைப்பாளர் (சங்கர்) கணேஷ், காங்கிரஸ் ஆதரவாளரும், காண்ட்ராக்டருமான ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தார்.
இந்த மூன்று போட்டோக்களும், பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்துக்கு ராஜிவ் காந்தி வருவதற்கு முன் எடுக்கப்பட்டிருந்தன.
நான்காவது போட்டோவிலிருந்து எட்டாவது போட்டோ வரையில், ராஜிவ் காந்தி வருகை, பொதுமக்களைப் பார்த்து அவர் கையசைத்தது, காங்கிரஸ் தொண்டர்கள் பலர் ராஜிவ் காந்திக்கு சால்வைகள், மாலைகள் அணிவித்தது ஆகியவை காணப்பட்டன.
ஒன்பதாவது போட்டோவில், ராஜிவ் காந்தியிடம் கோகிலவாணி (கோகிலா) கவிதை வாசித்துக் காண்பிப்பது பதிவாகியிருந்தது. அது நடைபெற்ற ஓரிரு நிமிடங்களிலேயே குண்டு வெடித்திருந்தது. ராஜிவ் காந்தி கொல்லப்பட்டார்.
அந்த வகையில், ராஜிவ் காந்தியை கடைசியாக உயிருடன் எடுக்கப்பட்ட போட்டோ, அந்த ஒன்பதாவது போட்டோதான்! இந்த போட்டோவில், பச்சை, ஆரஞ்சு நிற சல்வார் கமீஸ் பெண், ராஜிவ் காந்தியை நோக்கி நகர்ந்து வந்தது தெரிந்தது.
பத்தாவது போட்டோ, குண்டுவெடிப்பையே காட்டியது.

ராஜிவ் காந்தியும், மற்றையவர்களும் உயிரிழந்த அந்த விநாடி, ஹரிபாபுவின் கேமராவில் பத்தாவது போட்டோவாகப் பதிவாகியிருந்தது. அந்த விநாடியில், போட்டோ எடுத்துக் கொண்டிருந்த ஹரிபாபுவும், அவரது கேமரா பதிவு செய்த அதே குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டிருந்தார்.

மறுபுறம் உயிர் இழந்த ஹரிபாபு வீட்டில் விசாரித்தால் எதாவது உண்மை கிடைக்குதா என விசாரிக்க சி.பி.ஐ அதிகாரிகள் சென்றனர். இந்த வழக்கின் முதல் முடிச்சு ஹரிபாபு வீட்டில் அவிழும் என அப்பொழுது அவர்களுக்கு தெரியாது.

ராஜிவ் படுகொலையின் பொழுது பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட சப்.இன்ஸ்பெக்டர் அனுசியா பேட்டி இணைக்கப்பட்டுள்ளது. இது இந்த படுகொலை பற்றிய புரிதல் ஏற்பட உதவும்


தொடரும்...

Read more...

Wednesday, February 16, 2022

இலங்கையின் மாகாணசபைகளை ஆற்றலுள்ளவைகளாக ஆக்குவதற்கு ஏதாவது வழியுண்டா!(கடிதம் – 1)

வடகிழக்கின் அரசியல் நிலைமை தொடர்பாக பேசுகின்ற அனைவரும் உச்சரிக்கின்ற எண்ணாக 13 டும் அதனூடாக கிடைக்கக்கூடிய அதிகராப்பரவலாக்கலும் அமைந்துள்ளது. குறித்த 13ம் திருத்தச் சட்டத்தினூடாக மாகாணங்களுக்கு எவ்வாறான அதிகாரங்கள் உள்ளது? அவற்றை நடைமுறைப்படுத்துவற்கான சாத்திப்பாடுகள் என்ன? தடைகற்களை தூக்கியெறியும் வழிமுறைகள் உண்டா? என இணைந்த வடகிழக்கும் முதலும் இறுதியுமான முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் அவர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தொடர் கடிதம் ஒன்றை மக்களுக்கு எழுதியிருந்தார்.

13ம் திருத்தச்சட்டத்தினூடாக நிறுவப்பட்டுள்ள மாகாண சபைகளின் அதிகார ஆழ-அகலம் தொடர்பான அலசலை கொண்டுள்ள அவரது மக்களுடனான தொடர் உரையாடல் கடிதத்தை காலத்தின் தேவை கருதி மீள்பதிவு செய்கின்றோம்..

வடக்கு மாகாண சபை ஒன்றே இப்போதைக்கு அனைத்துமாகாண சபைகளுக்குமான அதிகாரப் பகிர்வு விடயத்தை காத்திரமாக நகர்த்திச் செல்லக் கூடிய ஒரு அமைப்பாக இருக்கும்.

நாங்கள் பெருந்தொகையான தமிழர்களால் மாகாண சபையை ஏற்றதற்காக துரோகிகளாக பார்க்கப்பட்டோம்.

எங்களை பொதுமக்களில் எவர் ஆதரித்தாலும் அவர்கள் கொலை செய்யப்பட்டார்கள் – நாங்கள் யாரையும் தேடிப் போய்ச் சந்தித்தாலும் அவர்களும்கொல்லப்பட்டார்கள்.

கொழும்பு அரசாங்கம் மாகாண சபைகளுக்கு அதிகாரங்களைப் பகிரத் தயாராக இல்லாமல் பிடிவாதமாக இருக்கின்றது என்பதிலும்; மாகாண சபைகளுக்கு போதிய அளவு அதிகாரங்களை வழங்கவில்லை என்பதிலும் எனக்கு மறுப்புக் கருத்துக்கள் எதுவுமில்லை. இருப்பினும், கொழும்பு அரசாங்கத்தின் தயவில் தங்கி இருக்காமல், நடைமுறையில் இருக்கின்ற அரசியல் யாப்பின் அடிப்படையில் சட்டபூர்வமாக இப்போதுள்ள மாகாணசபை பயனுடையதாக அமைவதற்கு ஏதாவது முயற்சித்துப் பார்க்க வாய்ப்பு உள்ளதா? அல்லது இல்லவே இல்லையா? 13வது திருத்தத்தின் மூலம் மாகாண சபைகளுக்கு மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களால் மக்களுக்கும் அவர்கள் வாழும் பிரதேசங்களுக்கும் பயனுள்ளவற்றை சுயமாகச் செய்வதற்கு ஏதாவது அதிகாரங்கள் மற்றும் வாய்ப்புக்கள் உள்ளனவா இல்லையா? என்பனவற்றை கேள்விக்கு உள்ளாக்கி விடை காண முற்படுவதே இங்கு எனது நோக்கமாகும்.

அன்பார்ந்த நண்பர்களே!
ஆற்றல் மிகு தோழர்களே!

1987ல் இந்திய சமாதான சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இலங்கையின் நாடாளுமன்றத்தால் ஏற்பாடுசெய்யப்பட்ட 13வது திருத்த அரசியல் யாப்பின் காரணமாக 1988 ல் மாகாண சபைகள் நடைமுறைக்கு வந்து 2013ம் ஆண்டோடு இருபத்தியய்ந்து ஆண்டுகள் ஆகிவிட்டன என்பதை நீங்கள் அறிவீர்கள்.

இது சம்பந்தமாக பல கருத்துக்கள் தமிழர்கள் மத்தியில் உள்ளன. வடக்கு மாகாண சபைக்கு தேர்தல் நடாத்தப்பட்டு மக்களால்தெரிவு செய்யப்பட்டவர்கள் ஆட்சிக்கு வந்து 6 மாதங்கள் ஆகின்றன. 2009ம் ஆண்டு புலிகளுடனான யுத்தம் முடிவடைந்த நாள் தொடக்கம் எப்போது வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் வரும்என்ற கேள்வியோடு அதனை எதிர்பார்த்திருந்தோம். வடக்கு மாகாண சபைக்கான தேர்தலை நடத்துவதற்கான கோரிக்கைகளைமுன்வைக்க வேண்டுமென 2010ம் ஆண்டின் ஆரம்பம் தொடக்கம் 2012ம் ஆண்டுக்கிடையில் இலங்கையில் நான் சந்தித்ததமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கியத்தவர்கள் மற்றும் தமிழ்த் தலைவர்களிடம் அதன் முக்கியத்துவத்தைவலியுறுத்தினேன். இந்தியாவிலும் அதே கருத்தை பல்வேறு மட்டத்திலும் வலியுறுத்தி வந்தேன்.

தெற்கில் எப்போதும் மத்தியில் ஆட்சியில் இருப்பவர்களின் கட்சியே மாகாணங்களிலும் ஆட்சிக்கு வருவது இதுவரைவழமையாக உள்ளது. 2007ம் ஆண்டு கிழக்கில் மாகாணசபைத் தேர்தல் நடைபெற்று திரு பிள்ளையான் அவர்களின்தலைமையில் ஆட்சி அமைந்த போதும் அது அரசியல் யாப்பு ரீதியில் அதற்குரிய அதிகாரங்களோடு செயற்படமுடியாமற் போன காரணங்களும் நெருக்கடிகளும் அங்கு இருந்தன. எனவே வடக்கு மாகாண சபை ஒன்றே இப்போதைக்கு அனைத்துமாகாண சபைகளுக்குமான அதிகாரப் பகிர்வு விடயத்தை காத்திரமாக நகர்த்திச் செல்லக் கூடிய ஒரு அமைப்பாக இருக்கும் என நம்பியதே அதற்குக் காரணம்.

வடக்கில் மாகாணசபைத் தேர்தல் நடக்கும் நிலைமை ஆரம்பித்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் அறிக்கைகள் தேர்தல்விஞ்ஞாபனம் ஆகியவற்றைப் பார்த்த போது இலங்கைத் தமிழர்களின் அரசியல் வரலாற்றில் வேதாளம் மீண்டும்முருங்கை மரத்தில் ஏறப் போகிறதோ எதிர்ப்பு அரசியல் மட்டும்தான் இங்கே எப்போதும் முன்னணி வகிக்கப் போகிறதோ ஆளும் அரசியலிலும் தமிழர்களுக்கு உரித்தான பங்குண்டு என்பது எக்காலத்தும் நிறுவப் படாதுபோகுமோ என்ற சந்தேகமே எழுந்தது. அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தேர்தலின் போது தமது வாக்குவேட்டைக்கான அரசியலை நடத்தினாலும்கூட அது மாகாண ஆட்சிக்கு வந்ததும் நடைமுறை யதார்த்தங்களைப் புரிந்து கொண்டு செயற்பட முடியும் – செயற்படமுயற்சிக்கும் என்ற எதிர்பார்க்கையும் என்னிடம் பல்வேறு சந்தேகங்கள் மத்திலும் இருந்தது. அதிலும் குறிப்பாக நாற்பது ஆண்டுகளுக்கு மேல் சட்டத்துறையில் ஆழ்ந்த அறிவும் அனுபவங்களும் கொண்ட திரு விக்கினேஸ்வரன் அவர்கள் யாழ்ப்பாணத்தில் ஒரு லட்சத்து முப்பதாயிரத்துக்கு மேற்பட்டவர்களின் வாக்குகளைப் பெற்றவர். உட்கட்சி எதிர்ப்புக்களையும் மீறி அவர் ஜனாதிபதி முன்னிலையில் முதலமைச்சராக பதவியேற்ற போது தனக்கு சரியெனப்பட்டதை செய்வார் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் உள் முரண்பாடுகள், வெளிநாட்டுப் புலி ஆதரவாளர்களின் நெருக்குதல்கள் யாழ்ப்பாண மையத் தளங்களில் நிலவும் சிங்கள விரோத மற்றும் அரச விரோத அரசியலின் செல்வாக்கு போன்றனவற்றின் காரணமாக அவர் பல சிக்கலை எதிர்நோக்குவார் என்ற கணிப்புகளின் மத்தியிலும் சம்பந்தர், சுமந்திரன் போன்றோரின் ஆதரவுடன் திரு விக்கினேஸ்வரன் அதிகாரப் பகிர்வு விடயங்களை யதார்த்தபூர்வமாக நகர்த்துவார் என்ற எதிர்பார்க்கையும் அதைச் செய்யக் கூடிய அறிவும் ஆற்றலும் உடையவர் என்றநம்பிக்கையும் எனக்குள் இருந்தன.

அவர் தனக்குத் துணையாக தமிழர்கள் மத்தியில் இருக்கும் அனுபவங்கள் நிறைந்த நிர்வாகிகளின் துணையைத் திரட்டிக்கொள்வார் – இலங்கையில் அதிகாரப் பகிர்வுக்கு ஆதரவான அனைத்து இன சட்ட வல்லுனர்களினதும் துணையைப் பெற்றுக்கொள்வார் – இலங்கையின் அனைத்துக் கட்சிகளிலும்; உள்ள அதிகாரப் பகிர்வுக்கு ஆதரவானவர்களின் அணைவைத்திரட்டிக் கொள்வார் – தமது கூட்டமைப்புக்காரர்களின் மத்தியில் அதிகாரப் பகிர்வு மற்றும் அபிவிருத்திவேலைத்திட்டங்கள் தொடர்பான யதார்த்த அணுகுமுறைகளைப் புரிய வைத்து தம்மோடு முன்கொண்டு செல்வார் என்றநம்பிக்கைகளும்; என்னுள் பல வகைப்பட்ட சந்தேகங்களுக்கு இடையேயும் நடமாடிக்கொண்டிருந்தன.

1988ல் நாங்கள் வடக்கு கிழக்கு மாகாண சபைப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட வேளையில் அந்தக் காலத்தில் எங்களுக்கு இருந்த தற்றுணிபுகளையும், சாதித்தே ஆக வேண்டும் என்ற ஓர்மத்தையும் தவிர வேறெதுவும் எங்களிடம் இருக்கவில்லை.

அன்றைக்கு நாங்கள் பெருந்தொகையான தமிழர்களால் மாகாண சபையை ஏற்றதற்காக துரோகிகளாக பார்க்கப்பட்டோம்.

நாங்கள் எதிர்நோக்கிய பயங்கரவாத எதிர்ப்புகள் உயிர் ஆபத்துக்கள் இவர்களுக்கு இல்லை. எங்களுக்கு உள்நாட்டிலும்தமிழ்நாடு உட்பட வெளிநாடுகளிலும் தமிழர்கள் மத்தியில் எதிர்ப்புக்கள் இருந்த அளவுக்கு ஆதரவுகள் இருக்கவில்லை.

சோவியத் யூனியன் அன்றைக்கு உயிரோடு இருந்த உலக சூழ்நிலையில் இந்தியாவின் ஆதரவுடன் நாம் மாகாணசபையை நடத்தியதால் வெள்ளைக்கார மேலைத்தேச நாடுகளின் ஊடகங்களும் அவற்றின் பல நிறுவனங்களும் எங்களுக்கு எதிராகவே செயற்பட்டன. எங்களைவிட மிகப் பல மடங்கு அதிகமான இந்திய ஆதரவு இவர்களுக்கு உண்டு. மேலும் பொருளாதார பலம் வாய்ந்த மேலைத்தேச நாடுகளின் ஆதரவும் இவர்களுக்கு உண்டு.

மொத்தத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் இன்றைய நிலைமையை எமது அன்றைய நிலைமைகளோடு பொருத்திப்பார்த்தால் திரு விக்கினேஸ்வரன் அவர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் பல பத்து மடங்கு ஆதரவுத்தளங்களை எங்கும் கொண்டவர்கள் ஒப்பீட்டளவில் மிக மிகச்சிறிய அளவு நெருக்கடிகளே சிரமங்களே இவர்களுக்கு உண்டு.

எங்களுடைய நிலைமையோ முற்றமுழுதாக வேறாக இருந்தது. அன்று எங்களை பொதுமக்களில் எவர் ஆதரித்தாலும் அவர்கள் கொலை செய்யப்பட்டார்கள் – நாங்கள் யாரையும் தேடிப் போய்ச் சந்தித்தாலும் அவர்களும்கொல்லப்பட்டார்கள்.

அவ்வப்போது இவர்களின் பொதுக் கூட்டங்களில் புகுந்து குழப்பம் விளைவித்தல், இருட்டில் வீட்டு யன்னல்களுக்கு கல்எறிதல், சாணியடித்தல், எஞ்சின் ஒயில் அடித்தல் ஆக மிஞ்சிப் போனால் இரண்டு நாட்கள் ஆஸ்ப்பத்திரியில் படுத்தால் சரியாகிவிடும் கணக்கில் புறமுதுகில் தடியடி நடத்திவிட்டு ஓடிவிடுதல் என நடத்தும்நாடகங்களைத் தவிர சரீரரீதியான ஆபத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களுக்கு கிடையாது.

அதேவேளை இவர்களுக்கு அரச படையினரே உத்தியோக பூர்வமான பாதுகாப்பையும் வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.

அரசபடைகளின் குழப்ப நாடகங்கள் உண்மையில் இவர்களுக்கு சர்வதேச புகழையும் தமிழ் மக்கள் மத்தியில் மேலும் அரசியற் செல்வாக்கையும் குவித்துக் கொடுப்பதை நோக்கமாகக் கொண்டவையோ என்று சந்தேகம் கொள்ளும் வகையாகவே சம்பவங்கள் உள்ளன. இவ்வாறாக பல சாதகமான வாய்ப்புகளைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அதுவும் திரு விக்கினேஸ்வரன் அவர்களை முதலமைச்சராகக் கொண்டுள்ள நிலையில் அதிகாரப் பகிர்வு தொடர்பாக சாதனைகளை நகர்த்துவார்கள் அதற்கான அரசியலை ஆக்கபூர்வமாக முன்னோக்கி உருட்டுவார்கள் என நான் எதிர்பார்த்ததில் தவறேதும் இருக்க முடியாது.

வடக்கு மாகாண சபை செயற்படத் தொடங்கி ஆறு மாதங்கள் ஆகி விட்டன. எங்களுக்குக் கிடைத்ததோ ஆறு மாதங்கள் மட்டும்தான். அதற்குப் பிறகு பிரபாகரனுக்கும் பிரேமதாசாவுக்கம் இடையே அரசியற் தந்திரோபாய தேன்நிலவு தொடங்கியதால் அதற்கு மேல் எல்லாமே தடைப்படத் தொடங்கி விட்டன. அந்த ஓராண்டுகளில் நாம் செய்தவைகள் இன்றும் பேசப்படும் பொருளாக உள்ளன.

நல்ல சந்தர்ப்பத்தை தவறவிட்டு விட்டதாக கவலைப்பட்டோரை இருபத்தைந்து ஆண்டுகளின் பின்னரும் கண்டிருக்கின்றேன் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இங்கே ஆறு மாதங்களில் இவ்வளவு தூரம் சமாதானமான பாதுகாப்பான சூழல் இருந்தும் வடக்கு மாகாண சபை இதுவரை நிறைவேற்றியிருப்பவை என்னென்ன என்ற கேள்வி எழுகின்றது. மாகாணசபையின் அதிகாரம் மற்றும் நிர்வாகத்துக்கு நேரடியாகச் சம்பந்தமில்லாத சில தீர்மானங்கள் மற்றும் 2013ம் ஆண்டுக்காக அரசு வழங்கிய நிதியை ஆளுநர் செலவழிப்பதற்கான சட்ட அங்கீகாரம் வழங்கியது என்பவற்றைத் தவிர வேறெதனையும் செய்ததாக என்னால் அறிய முடியவில்லை.

அரசாங்கம் நிதி எதுவும் தரவில்லை அதனால் எதுவும் செய்ய முடியவில்லை என்று கூறப்படுகின்றது. கொழும்பு அரசாங்கம் ஒதுக்கிய 1700 கோடி ரூபாயில் 500 கோடி ரூபா மூலதன செலவுகளுக்கு உரியது. ஒதுக்கி மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. எந்தெந்த திட்டங்களுக்காக அவை ஒதுக்கப்பட்டுள்ளன. அந்தத் திட்டங்களின் நிறைவேற்று நிலைகள் இப்போது என்ன நிலையில் உள்ளன என்பதற்கான திட்ட நிறைவேற்று மதிப்பு அறிக்கையை யாரும் பார்த்ததாகவும் என்னால் அறிய முடியவில்லை. நான் தூரத்திலே உள்ளவன் என்பதால் என்னால் அறிய முடியாமல் இருக்கவும் கூடும். மாகாண சபையின் இணையத் தளமாவது அனைத்து தகவல்களையும் தாங்க வேண்டும்.

மாகாண அமைச்சர்கள் பதவியேற்றிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அதிகாரபூர்வமாக என்னசெய்கிறார்கள். ஒரு சாதாரண அரசசார்பற்ற தொண்டு நிறுவன அளவுக்காயினும் அவர்களால் ஏதாவது செய்யப்படுகின்றனவா?

இவற்றிற்கு விடையாக ஆளுநர் எந்த அதிகாரங்களையும் அமைச்சர்களுக்குத் தரவில்லை எனவும் அரசாங்கம் அமைச்சுக்களுக்கு போதிய அளவு நிதி எதுவும் தரவில்லை எனவும் மாகாணசபையின் செயலாளர்களும் மற்றும் அதிகாரிகளும் ஆளுநரின் சொற்படி மட்டுமே நடக்கிறார்கள். அவர்கள் அமைச்சர்களின் கட்டளைகளுக்கு உட்பட்டவர்களாக செயற்படுகிறார்கள் இல்லை எனவும் கூறுவதோடு வாளாவிருந்து விடலாமா?

மாகாண சபையின் ஐந்து வருடங்கள் முடிந்த பின்பும் இதைத்தான் மக்களுக்குச் சொல்லப் போகின்றார்களா? இங்கு நான் யாரையும் விமர்சிக்கவோ அல்லது யாருக்கும் வழிகாட்டவோ அல்லது புத்தி சொல்லவோ முயலவில்லை. மாறாக இலங்கையில் மாகாண சபைகள், அதிகாரப் பகிர்வு மற்றும் 13வது திருத்த அரசியல் யாப்பு ஆகியன தொடர்பாக எனக்குள் எழுந்துள்ள சில கேள்விகளையே இங்கு முன் வைக்கிறேன். அவற்றிற்கு விடை கிடைத்தால் அவை தமிழர்களின் அரசியல் முன்னெடுப்புகளுக்கு பயன்படும் என்று கருதியே இக்கேள்விகளை எழுப்புகிறேன்.

நான் தமிழர்களின் அரசியற் தலைவன் அல்ல. தமிழர்களின் அரசியலில் ஒரு சிறிய தலைவனாக இருப்பதற்கு வேண்டிய தகுதியோ திறமையோ கூட எனக்குக் கிடையாது. அதிலும் இப்போது தமிழர்களின் அரசியலில் பங்காளனாக இருக்கும் வாய்ப்பற்றவனாக என்னை நானே ஆக்கிக் கொண்டுள்ளேன். இது என்னுடைய நிலை மட்டுமல்ல வெளிநாடுகளில் இருக்கிற பல லட்சக்கணக்கானவர்களின் நிலையும் அப்படித்தான் இருக்கிறது. எவ்வாறாயினும் தமிழ் மக்களின் பொதுநலனில் எனக்குள்ள அக்கறையில் சந்தேகம் கொள்ள மாட்டீர்கள் என நம்புகிறேன். மேலும் மாகாண சபைகள், அதிகாரப் பகிர்வு தொடர்பாக சில அனுபவங்களைப் பெறும் வாய்ப்பை அதிஷ்டவசமாக எனக்கு வரலாறு தந்தது. அந்த அக்கறையிலும் அனுபவத்திலுமிருந்தே இதனை எழுதுகிறேன்.

கொழும்பு அரசாங்கம் மாகாண சபைகளுக்கு அதிகாரங்களைப் பகிரத் தயாராக இல்லாமல் பிடிவாதமாக இருக்கின்றது என்பதிலும்; மாகாண சபைகளுக்கு போதிய அளவு அதிகாரங்களை வழங்கவில்லை என்பதிலும் எனக்கு மறுப்புக் கருத்துக்கள் எதுவுமில்லை. இருப்பினும், கொழும்பு அரசாங்கத்தின் தயவில் தங்கி இருக்காமல், நடைமுறையில் இருக்கின்ற அரசியல் யாப்பின் அடிப்படையில் சட்டபூர்வமாக இப்போதுள்ள மாகாணசபை பயனுடையதாக அமைவதற்கு ஏதாவது முயற்சித்துப் பார்க்க வாய்ப்பு உள்ளதா? அல்லது இல்லவே இல்லையா? 13வது திருத்தத்தின் மூலம் மாகாண சபைகளுக்கு மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களால் மக்களுக்கும் அவர்கள் வாழும் பிரதேசங்களுக்கும் பயனுள்ளவற்றை சுயமாகச் செய்வதற்கு ஏதாவது அதிகாரங்கள் மற்றும் வாய்ப்புக்கள் உள்ளனவா இல்லையா? என்பனவற்றை கேள்விக்கு உள்ளாக்கி விடை காண முற்படுவதே இங்கு எனது நோக்கமாகும்.

ஒரு லட்சத்து முப்பதாயிரம் தமிழர்களின் விருப்பு வாக்குகளைப் பெற்று முதலமைச்சராகியுள்ள திரு விக்கினேஸ்வரனின் அறிவாற்றல் பற்றியோ அனுபவ ஆழம் பற்றியோ கேள்வி எழுப்பும் அளவுக்கு நான் அறிவோ அனுபவமோ உடையவன் அல்ல.

ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் 13வது அரசியல் யாப்பை நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கு அவசியமான அவர்களது பாத்திரத்தை – சரியாக முழுமையாக – கடமை தவறாமல் -பொறுப்போடும் அக்கறையோடும் – ஆற்றுகிறார்களா? என்ற கேள்விகளின் அடிப்படையிலான ஆதங்கமே என்னை ஆண்டு கொண்டிருக்கின்றது. அதன் விளைவாகவே இங்கு 13து திருத்தம் மற்றும் மாகாண சபை பற்றிய பல கேள்விகள் எழுகின்றன அவற்றிற்கான பதில்களைத் தேடுகின்றன.

அவை அடுத்த கடிதத்தில் தொடரும்

இப்படிக்கு
உங்கள் அன்பிற்குரிய தோழமைக்குரிய
அ. வரதராஜப்பெருமாள்

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com