Tuesday, November 15, 2022

இலங்கையின் பொருளாதார நோயை சமாளிக்கும் ரணில் அரசபொருளியல் (Ranil Politinomics) பகுதி – 1 அ. வரதராஜா பெருமாள்

இலங்கையின் பொருளாதாரத்தின் குறைபாடுகளை - பலயீனங்களை தீவிரப்படுத்தி பெரும் நெருக்கடியாக வெடிக்கப்பண்ணியது 2009ம் ஆண்டு ஏப்ரலில் நடந்த பயங்கரவாத மனிதவெடி குண்டு தாக்குதல்களும், துட்டகைமுனுவின் வாரிசு தானே என நினைத்து ஆட்சி பீடத்தில் அமர்ந்த கோத்தாபய ராஜபக்சாவின் அரசியல் பொருளாதார செயற்பாடுகளுமே என்பதில் சந்தேகமில்லை.

அதன் விளைவாக கனன்றெழுந்த 'அறகலய' இயக்கம் ராஜபக்சாக்களை அதிகாரக் கதிரைகளில் தொடர்ந்து அமர்ந்திருக்க முடியாத நிலைமையை ஏற்படுத்தியது. அவர்களால் ஆட்சி பீடத்தில் அமர்த்தப்பட்ட அதி உத்தம ரணில் விக்கிரமசிங்கா அவர்கள், அவரது அமைச்சர்களும் அரசின் அதிகாரிகளும் அவருக்கு ஒத்துழைத்தால் இலங்கையின் பொருளாதாரத்தை நெருக்கடிகளிலிருந்து மீட்டுவிடுவார் என்று கூறப்பட்டது. அவருக்கு மேலைத்தேச நாடுகளின் அனுசரணை உள்ளது, இந்திய அரசாங்கமும் அவருக்கு உதவும், சீனா அவருக்கு தலையிடி கொடுக்காது, எனவே அவர் இலங்கையை பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீட்பதனை சாதித்து விடுவார் என்றே பலரும் கருத்து வெளியிட்டனர்.

ஜனாதிபதியாகப் பதவியேற்ற ரணில் அவர்கள் சில நாட்களுக்குள்ளேயே ஆட்சி அதிகாரத்தை உறுதியாக பற்றிக் கொண்டார். கோத்தாபய அவர்கள் தான் எதேச்சாரியாக ஆள வேண்டும் என்ற விருப்பத்தில் உருவாக்கிய 20வது அரசியல் யாப்புத் திருத்தம் ரணில் அவர்களுக்கு வாய்ப்பாக அமைந்து விட்டது. 21வது அரசியல் யாப்பு திருத்தம் மீண்டும் 'அரசியல் சபை' உருவாக்கப்பட்டதனால் முக்கியமான அரச நிர்வாக ஆணைக்குழுக்களான:
தேர்தல் ஆணைக்குழு,
பொதுச் சேவைகள் ஆணைக்குழு,
நீதிச் சேவை ஆணைக்குழு,
தேசிய பொலிஸ் ஆணைக்குழு,
கணக்காய்வு ஆணைக்குழு,
மனித உரிமைகள் ஆணைக்குழு,
லஞ்சம் மற்றும் ஊழல் மோசடிகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழு,
தேசிய கொள்முதல் ஆணைக்குழு,
நிதி ஆணைக்குழு மற்றும் எல்லைகள் நிர்ணய ஆணைக்குழு
போன்றவற்றை நியமிப்பது தொடர்பிலும், சட்ட மா அதிபர், பொலிஸ் மா அதிபர், கணக்காளர் நாயகம், பாராளுமன்ற செயலாளர் நாயகம் மற்றும் மத்திய வங்கி ஆளுநர் ஆகியோரின் நியமனம் தொடர்பிலும் அரசியல் யாப்பின் 20வது திருத்தத்துடன் ஒப்பிட்டுப்பார்க்கையில் ஜனாதிபதிக்குரியதாக இருந்த தனியுரிமை இங்கு இல்லாதாக்கப்பட்டிருக்கிறது.

இப்பொழுது அந்த நியமனங்களை அரசியல் யாப்பு சபையின் முன்மொழிவின் அடிப்படையிலேயே மேற்கொள்ள வேண்டும். எனினும் அதைத் தவிர ஜனாதிபதி நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்ற வகையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி அவர்களை விட ரணில் அவர்கள் அதிக அதிகாரங்கள் கொண்டவராகவே உள்ளார். இப்போதுள்ள நிலைமையின்படி அவராக விரும்பினாலொளிய 2024ம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கு முதல் யாராலும் வேறுவகையில் அவரை ஜனாதிபதி பதவியிருந்து கீழிறக்க முடியாது.

கடந்த ஜூலை மாதம் 12ந் திகதி அவர் ஜனாதிபதியானார். இப்போது அவரது சாதனைகளைப் பட்டியலிட்டுப் பார்ப்பது பயனுடையதாகும். அது யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே என்பது போல அடுத்து வரும் ஆண்டுகள் எப்படியிருக்கப் போகின்றன என்பதற்கான கட்டியம் கூறுவன.

அறகலயக்காரர்களை அடக்கிவிட்டார்
முப்படைகளை வசியப்படுத்திக் கொண்டார்


1. என்னதான் நிலைமை ஏற்பட்டாலும் மீண்டும் அறகலய எழுச்சி தனது ஆட்சிக்கு எதிராக தலையெடுத்து விடாது செய்வதற்கான ஏற்பாடுகளை அதிரடியாக நிறைவேற்றியது மட்டுமல்லாது, அது தொடர்பாக முப்படைகளும், அனைத்து பொலிஸ் மற்றும் உளவு அமைப்புகளும் விரும்பியபடி செயற்பட தாராளமாக விசேட அதிகாரங்களை வழங்கி, ராஜபக்சாக்களை விடவும் மேலாக தனது சர்வாதிகாரத்தை உறுதிப்படுத்தியிருக்கிறார்.

அறகலய எழுச்சியை ஒழுங்குபடுத்தியவர்கள், அதில் முன்னின்று செயற்பட்டவர்களை, அதில் பெரும்பாலும் குறிப்பாக இளைஞர்களையும் மாணவர்களையும், ஒரு சில நாட்களுக்குள்ளேயே ஆயிரக்கணக்கில் சிறைகளுக்குள் போட்டு விட்டார். அதில் சிலர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் கட்டாக்காலித் தனமாக விரிவடைந்து கொண்டிருக்கும் போதைப் பொருள் கடத்தல்கள் மற்றும் விற்பனைகள், கூலிக்கு கொலைகளையும் வன்முறைத் தாக்குதல்களையும் மேற் கொள்ளும் சமூக விரோதக் குழுக்கள், அரசின் கட்டமைப்பு முழுவதுவும் பரவியிருக்கும் லஞ்சம் மற்றும் ஊழல் மோசடிகள் ஆகியவற்றை கட்டுப்படுத்த முடியாத முப்படைகளும் பொலிஸ் அமைப்புகளும், வன்முறையற்றரீதியில் தங்கள் வெறுப்பையும் விரக்தியையும் வெளிப்படுத்திய அறகலயகாரர்களை தேடி துரத்திப் பிடிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயற்படுகின்றன. அந்த அளவுக்கு முப்படைகளும் பொலிஸ் அமைப்புகளும் தன் மீது விருப்பமும் விசுவாசமும் கொண்டிருக்கும் நிலைமையை ஜனாதிபதி ரணில் நிலைநாட்டியிருக்கிறார். அவர் முக்கிய அரச கட்டமைப்புகள் அனைத்தையும் தனக்கு வசமாக இயக்குவதில் ராஜபக்சாக்களையும் விட கெட்டிக்காரன் என்பதனை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.

வீதிகளில் காத்திருந்த மக்களை
வீடுகளில் காத்திருக்க வைத்து விட்டார்


2. இரவும் பகலும் என பல நாட்களாக பொதுமக்கள் வீதிகளில் நீண்ட வரிசைகளில் சமையல் வாயுவுக்கும், மண்ணெண்ணெய்க்கும், டீசலுக்கும் பெற்றோலுக்கும் என காத்து நிற்க வேண்டிய நிலைமை தொடர்வது தனது ஆட்சிக்கும் ஆபத்து என்பதனால், அதனை மிகத் தந்திரமான முறையில் மடை மாற்றி விட்டார். அதனது அர்த்தம் அந்தப் பொருட்கள் தாராளமாக பொதுமக்களால் வாங்கக் கூடிய நிலைமையை ஏற்படுத்தி விட்டார் என்பதல்ல. நவீன தொழில் நுட்ப முறையான கியூ. ஆர்.குறியீட்டு முறையினைப் பயன்படுத்தி பொது மக்களை மேற்குறிப்பிட்ட பொருட்களை அவர்களுக்கு கிடைக்கும் நாள் வரை அவரவரது வீட்டிலேயே காத்திருக்க வைக்கும் மாற்று ஏற்பாடொன்றினை நடைமுறையாக்கி விட்டார். அவரவருக்கு அந்தப் பண்டங்கள் கிடைக்கும் நாட்களை மட்டுமல்ல, அவரவருக்கு அந்தப் பண்டங்கள் எந்த அளவில் கிடைக்கும் என்பதை அரச அதிகாரமே நிர்ணயிப்பதன் மூலம் பற்றாக்குறையாக இருந்தாலும் பொது மக்கள் பொறுமையாக இருந்து கிடைப்பதை வாங்கிக் கொள்ள வேண்டிய ஒரு பங்கீட்டு முறையை நடைமுறையாக்கி விட்டார்.

கட்சிகளை வசப்படுத்திக் கொண்டார்

3. தனது அதிகார மற்றும் அரசியல் தேவைகளுக்கும், சர்வதேச நாணய நிதியம் கோருவதை நடைமுறையாக்குவதற்கும் வேண்டிய சட்டங்களை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கும், தனது திட்டங்களை எதிர்ப்புகள் பெரிதாக இன்றி நடைமுறைப்படுத்துவதற்கும் ராஜபக்சாக்களின் கட்சிக்காரர்கள் மற்றும் சிறி லங்கா சுதந்திரக் கட்சிக்காரர்களிடம் இருந்து மட்டுமல்லாது, முஸ்லிம்கள், வடக்கு-கிழக்கு தமிழர்கள் மற்றும் மலையகத் தமிழர்களின் கட்சிகளைச் சேர்ந்த பெரும்பான்மையானவர்களிடமிருந்தும் தேவையான ஆதரவை பெற்றுக் கொள்கின்ற கலையில் சாதனைகளை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்.

ராஜபக்சாக்களை குளிரப் பண்ணி விட்டார்

4. அறகலயக் காரர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குமுறைகளை நடைமுறைப்படுத்தியதன் மூலம் தன்னை ஜனாதிபதி ஆக்கிய ராஜபக்சாக்சாக்கள் அறகலயக்காரர்கள் மீது கொண்டிருக்கும் பழி வாங்கும் உணர்வுகளுக்குதீனி போட்டது மட்டுமல்லாது, நாட்டில் அரசியல் உறுதித்தன்மையை நிலைநாட்டி விட்டார் என்ற புகழையும் பெற்றுள்ளார். பேரினவாதிகள், மத மேலாதிக்கவாதிகள், ஊழல் மோசடிக்காரர்கள், அரச அதிகார பிரபுக்கள், கொள்ளைலாபம் அடித்துக் கொண்டிருந்த முதலாளிகள், அரச அதிகாரத்தில் உள்ளவர்களோடு ஒட்டி நின்று சட்ட விரோதமாக திடீர் கோடீஸ்வரர்களாகி பெரும் சொத்துக்களை குவித்துக் கொண்டவர்கள், இயற்கைவள கொள்ளையர்கள் போன்ற வகையினர் அனைவரும், அறகலய எழுச்சியால் தங்களின் அதிகாரமும் சொத்தும் சுகமும் என வசதியாக இருக்கும் அரசியல் பொருளாதாரக் கட்டமைப்பு எங்கே சிதறிப் போய்விடுமோ என அச்சம் கொண்டு ஆடிப் போயிருந்தார்கள்.

ஆனால் அவர்களெல்லாம் நிம்மதியாக மகிழ்ச்சியாக அவரவர் செய்து கொண்டிருந்த தேச விரோத, சமூக விரோத, மக்கள் விரோத செயல்களையெல்லாம் தொடர்ந்து செய்யக் கூடியதான கட்டமைப்பு எந்த வகையிலும் மாற்றமடையா வகையில் மீள உறுதிப்படுத்திய பெருமையும் அவருக்கே உரியது.

பகுதி 2ல் தொடரும்.....

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com