Thursday, November 10, 2022

கஜேந்திரனின் கதிரைக்காக தமிழினமே தன் எதிர்காலத்தை இழக்க வேண்டுமா? விஜயதாஸ வை எதிர்த்ததன் இலக்கு என்ன? ஜெகன்

வெற்றியின் முதற்படி நம்பிக்கையாகும். ஆனால் இலங்கை வரலாற்றில் சந்தித்து வந்திருக்கின்ற சகல இடர்களுக்கும் அவநம்பிக்கையே பிரதான காரணமாகின்றது. இந்த அவநம்பிக்கையானது மக்களிடையே உருவாகின்றதா? அன்றில் உருவாக்கப்படுகின்றதா? எதற்காக? என்பது விளங்கிக்கொள்ளப்படவேண்டியதாகும். அர்ப்ப அரசியல் லாபங்களை அடைந்து கொள்வதற்காக செயற்திறனற்ற, தன்னநம்பிக்கையற்ற அரசியல்வாதிகளால் தங்களது அரசியல் இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்காக மக்களிடையே சூட்சுமமாக அவநம்பிக்கை தொடர்ச்சியாக பெரு விலை கொடுத்து விதைக்கப்படுகின்றது என்பது எவராலும் மறுக்கப்படமுடியாத உண்மையாகும்.

அந்த வகையில் மக்களிடையே அவநம்பிக்கையை விதைப்பதற்கு அரச எதிர்ப்பு மற்றும் உணர்ச்சி பொங்கும் கோஷங்களுடன் அலைந்து திரியும் தெருக்கோமாளியாக செல்வராசா கஜேந்திரன் அடையாளம் காணப்படுகின்றார். பிரபாகரனின் ஆசீர்வாதம் பெற்ற புலித்தூதராக இவர் தன்னை முன்னிலைப்படுத்தியிருந்தபோதும், தமிழ் மக்களால் கடந்த 3 தேர்தல்களில் (2010, 2015 மற்றும் 2020) நிராகரிக்கப்பட்டநிலையில், பொன்னம்பலம் கஜேந்திரகுமாரின் அழுக்கு காவுவதற்காக பின்கதவால் பாராளுமன்று கொண்டு செல்லப்பட்டதன் ஊடாக மக்களின் தீர்ப்பு கிழித்தெறியப்பட்டுள்ளது.

மக்களால் நிராகரிக்கப்பட்ட இத்தெருக் காடையன், காணாமலாக்கப்பட்டோர் சங்கம் என்ற பெயரில் இயங்கும் சில டொலர் காடையர்களை, தன் கைப்பாவைகளாக கொண்டு மக்களின் இயல்பு வாழ்வினை சீர்குலைத்து வருவதை அவதானிக்க முடிகின்றது. இலங்கையில் 1983 ஆண்டின் இனக்கலவரத்தினூடாக வீறுகொண்டெழுந்த விடுதலைப் போராட்டத்தின் பெயராலும் அதனை ஒடுக்கும் பெயராலும் ஆயிரக்கணக்கான உயிர்கள் காணாமலாக்கப்பட்டிருக்கின்றன என்பது மறைக்கப்படமுடியாத உண்மையாகும்.

விடுலைப் போராட்ட இயக்கங்களில் இணைந்த இளைஞர்கள் இயங்கங்களின் உள்வீட்டு பிணக்குகள் காரணமாக காணாமலாக்கப்பட்டிருக்கின்றார்கள். இயக்க மோதல்களின்போது ஒவ்வொரு இயக்கங்களாலும் கைது செய்யப்பட்டு, கடத்தப்பட்டு தமிழ் இளைஞர்கள் காணாமலாக்கப்பட்டிருக்கின்றார்கள். புலிகள் சகோதர இயக்கங்களை தடை செய்து அவர்களை சரணடையுமாறு அறிவித்தபோது, பெற்றோர் உறவினர்களால் புலிகளின் முகாம்களில் பாரமளிக்கப்பட்ட தமிழ்ப் போராளிகள் மற்றும் ஆதரவாளர்கள் காணாமலாக்கப்பட்டிருக்கின்றார்கள். புலிகளின் கொள்கையை, செயற்பாட்டை ஏற்காதவர்கள், அதனை விமர்சித்தவர்கள் அவர்களது பெற்றோரால் உறவினர்களால் புலிகளின் முகாம்களில் விசாரணைக்கென பாரமளிக்கப்பட்டு பின்னர் காணாமலாக்கப்பட்டிருக்கின்றார்கள். வன்னியில் யுத்தத்திற்கு தயாரான காலத்திலிருந்து அவர்களின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் வாழ்ந்த பல்வேறு இளைஞர்கள் யுவதிகளை புலிகள் காணாமலாக்கியிருக்கின்றார்கள்.

ஆனால் புலிகளின் கொடுங்கோலாட்சி நடைபெற்ற காலத்தில் புலிகளால் காணாமலாக்கப்பட்டோரின் நீதிக்காக சங்கமமைத்து நீதி கோரக்கூடிய உரிமை எவருக்கும் அந்த கோர ஆட்சியில் வழங்கப்பட்டிருக்கவில்லை. மாறாக அவ்வாறானவர்களுக்கு உரிமைகோருவது தேசத்துரோகமாக சித்தரிக்கப்பட்டது. இவ்வாறான நிலையில்தான் இன்று காணாமலாக்கப்பட்டோருக்கான சங்கம் ஒன்று இயங்குகின்றது. இந்த அமைப்பின் அடிப்படை நோக்கம் என்ன? இந்த அமைப்பினர் உண்மையிலே காணாமலாக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்காக போராடுகின்றனரா? இல்லை, அவர்கள் புலம்பெயர் புலிப்பினாமிகளின் நிகழ்சிநிரலின் கீழ் செயற்படும் பொன்னம்பலம் கம்பனியின் வாக்கு வங்கியை தக்கவைக்க வைத்துக்கொள்வதற்காக கூலிக்கு மாரடிக்கும் வெறும் கூலிகள்.

இந்த கூலிகள் இன்று வடகிழக்கெங்கும் இயல்பு வாழ்வை சீர்குலைப்பதற்கு கங்கணம்கட்டி நிற்கின்றனர். இக்கூலிகளின் விசமத்தனமான செயற்பாடுகள் தொடர்பில் சாமானிய மக்கள் தங்களுக்குள்ளே புழுங்கிக்கொண்டாலும், அதனை வெளிப்படுத்த தயங்குகின்றனர். இந்த தயக்கம் சமூக அபிவிருத்தியை, நீதிக்கான பாதையை முடக்குமேயன்றி அப்பாதையில் தங்குதடையின்றி பயணிப்பதற்கு வழிவிடப்போவதில்லை.

கடந்தவாரம் யாழ்ப்பாணம் சென்றிருந்த நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச அவர்களை எதிர்த்து மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தினை மேற்கொண்ட குழுவினருக்கு அமைச்சர் விஜயதாச ராஜபக்ச அவர்கள் தனது சேவைக்காலத்தில் மேற்கொண்டுள்ள கடின உழைப்பு தொடர்பில் தெரியாமல் இருக்கலாம். எனவே ஒரு அமைச்சராக தனது அறிவை ஆற்றலைக் கொண்டு அவர் மக்களுக்கு என்ன செய்திருக்கின்றார் என்பதை நினைவூட்டுவது பொருத்தமானதாகும்.

அரசியல் யாப்பின் 19 திருத்தச் சட்டத்தை நிறைவேற்றி ஜனநாயகத்தையும் சட்டம்-ஒழுங்கையும் மேம்படுத்த அயராது உழைத்திருக்கின்றார்.

தகவல் உரிமைச் சட்டத்தை நிறைவேற்றி, அந்த உரிமையை மக்களின் அடிப்படை உரிமையாக அரசியல் யாப்பில் இணைத்துக்கொள்ள அயராது உழைத்திருக்கின்றார்.

பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சிகளை பாதுகாக்கும் சட்ட மூலத்தை நிறைவேற்ற அயராது உழைத்திருக்கின்றார்.

ஆட்சியுரிமைச் சட்டத்தில் காணப்படும் 10 வருடங்களுக்கு காணியொன்றை ஆட்சி செய்தால் உடமை கொள்ளக்கூடிய உரிமை தொடர்பில் யுத்ததால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விசேட விடுப்பு அளிக்கப்படும் சட்டமூலத்தில் திருத்தத்தை கொண்டுவந்து விடுப்பு காலத்தை 2015ம் ஆண்டுவரை நீடிக்க அமைச்சர் விஜயதாச ராஜபக்சவால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வடகிழக்கு மக்களின் காணிப் பிணக்குகளைத் தீர்ப்பதற்காக விசேட இணக்க சபை சட்டமூலத்தை நிறைவேற்ற உழைத்திருக்கின்றார். இவ்விணக்க சபைகள் வெற்றிகரமாக செயற்பட்டமையால் அத்திட்டம் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

காணாமலாக்கப்பட்டோருக்கான அலுவலகம் உத்தியோக பூர்வமாக நிறுவப்பட்டிருந்தபோதும், கடந்த நான்கு வருடங்களில் விசாரணை செய்யப்படவேண்டியிருந்த 7500 கோப்புகளில் 65 கோப்புக்களே விசாரணை செய்து முடிக்கப்பட்டிருந்த நிலையில், விஜயதாஸ ராஜபக்ச அமைச்சராக கடமையேற்ற கடந்த நான்கு மாதங்களில் 2000 கோப்புக்கள் முற்றாக விசாரணை செய்து முடிக்கப்பட்டிருக்கின்றது.

வடக்கின் பல்வேறு பிரதேசங்களில் நவீன நீதிமன்ற வளாகங்கள் அமைக்க அமைச்சர் அயராது உழைத்திருக்கின்றார்.

அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச கல்வியமைச்சராக செயற்பட்ட காலத்தில் வவுனியா வளாகத்தினை பல்கலைக்கழக தரத்திற்கு தரமுயர்த்த ஆவன செய்துள்ளார்.

ஆறுக்கு மேற்பட்ட கலாச்சார நிலையங்கள் வடகிழக்கு பிரதேசத்தில் கட்டியெழுப்பப்பட்டுள்ளன.

இலங்கையில் காணப்படும் மிக முக்கியமான சட்டப்புத்தகங்கள் முதற்தடவையாக அமைச்சர் பதவியிலிருந்தபோது தமிழில் வெளியாகியுள்ளது.

பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்ட பெரும் எண்ணிக்கையான சந்தேக நபர்களை விடுதலை செய்வதற்கு ஆவன செய்ததுடன், அவர்கள் சம்பந்தமான வழக்குகளை துரிதமாக விசாரணை செய்து நிறைவு செய்யும்பொருட்டு கொழும்பில் இரு விசேட உயர் நீதிமன்றங்களும் அனுராதபுரத்தில் ஒரு விசேட உயர் நிதிமன்றும் அமைக்க அயராது உழைத்துள்ளார்.

வடகிழக்கில் கடமை புரிகின்ற பொலிஸார் தமிழ் மொழியில் கடமை புரிவதற்கு ஏதுவாக அவர்களுக்கு தமிழ் மொழியை கற்பிக்க பல்வேறு வேலைத்திட்டங்களை அறிமுகம் செய்திருக்கின்றார்.

வடக்கு மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தனது அமைச்சின் செயலாளர் தலைமையில் பணிக்குழு ஒன்றை நிறுவியிருக்கின்றார்.

வடக்கு மக்கள் எதிர்கொள்ளும் பயங்கரமான போதைப்பொருள் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கு வட மாகாண ஆழுநர் தலைமையில் பணிக்குழு ஒன்றை கடந்த 31.10.2022 ம் திகதி நிறுவியிருக்கின்றார்.

நாட்டில் இடம்பெற்ற யுத்த சூழ்நிலைமை காரணமாக இந்தியாவுக்கு அகதிகளாக சென்று நாட்டிருக்கு திருப்பியிருக்கின்ற 11792 மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். அவர்கள் தங்கள் அடையாள அட்டைகள், பிறபத்தாட்சிப் பத்திரங்கள், காணி உறுதிப்பத்திரங்கள் என சகல ஆவணங்களையும் தொலைத்துள்ளனர். அம்மக்கள் அவற்றை பெற்றுக்கொள்வதற்கு அலுவலகங்களுக்கு சென்று அலைந்து கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் அமைச்சரின் ஏற்பாட்டில் இரண்டு நடமாடும் சேவைகள் நடாத்தப்பட்டு, குறித்த மக்களின் 80 வீதமான பிணக்குகள் தீர்க்கப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது.

அத்துடன் இந்தியாவில் கல்வி கற்று இலங்கை திரும்பியுள்ளவர்களின் கல்விச் சான்றிதழ்கள் இலங்கையில் அங்கீகரிக்கப்படாத நிலையில் காணப்பட்டதுடன், அச்சான்றிதழ்களை அங்கீகரிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறான செயற்பாடுகள் விஜயதாஸ ராஜபக்ச அவர்கள் மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதுடன், சட்ட விவகாரங்கள் தொடர்பாக தெளிவான விளக்கம் கொண்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் மற்றும் விக்னேஷ்வரன் போன்றோர், அமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவின் செயற்பாட்டில் பூரண திருப்தி அடைந்துள்ளதாகவும், அவர் யாழ்பாணம் சென்றிருந்தபோது அவர்கள் தங்களது புரண ஆதரவை வழங்கியதாக அவர் பாராளுமன்றில் தெரிவித்ததை அவதானிக்க கூடியதாகவிருந்தது.

மக்கள் தங்களது அதிருப்தியை வெளிக்காட்டும் உரிமையை இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியல் யாப்பு அடிப்படை உரிமையாக அங்கீகரித்திருக்கின்றது. ஆனால் அதிருப்தியை காட்டுகின்றோம் என்ற பெயரில் தனி ஒருவரின் வாக்கு வங்கிக்காக மக்களை அசௌகரியங்களுக்கு உட்படுத்துவது குற்றமாக காணப்படவேண்டும் என்பதுடன் அவ்வாறானவர்களை கடினமான தண்டனைக்குட்படுத்துகின்ற சட்டத்திருத்தத்தின் தேவையை கஜேந்திரன் போன்றோரின் செயற்பாடு மேலும் உறுதி செய்கின்றது.

நீதி கோருகின்றோம் என்ற பெயரில் மக்களுக்கு கிடைக்கவேண்டிய நீதி கிடைப்பதை தடுப்பது எந்த வகையில் நீயாயமாகின்றது? யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் நாட்டை விட்டு அயல் நாடொன்றில் பல தசாப்தங்கள் அகதிகளாக வாழ்ந்துவிட்டு நாடு திரும்பியிருக்கின்றார்கள். அவர்கள் தங்களது அடையாளத்தையே தொலைத்தவர்களாக காணப்படுகின்றார்கள். அவர்களது அடிப்படை தரவுகள் தகமைகள் உறுதி செய்யப்படக்கூடிய நிலைகூட காணப்படாத நிலையில், அரசு அதனை அவர்களது காலடிக்கு சென்று செய்து கொடுக்கும்போது, அக்கருமங்களை நிறைவேற்ற வந்திருப்பவர்களை வெளியேறு என கோஷமிடுவது மக்கள் விரோத செயற்பாடே அன்றி வேறு எதுவாகவும் இருக்க முடியாது.

விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் ஆயிரக்கணக்கான உயிர்களை எவ்வித இலக்குமின்றி காவுகொண்டு பயங்கரவாதமாக மாற்றமடைந்தபோது, கை கட்டி வாய்மூடி நாம் யாவரும் மௌனமாக நின்றதன் விளைவுதான் இன்று ஆகக்குறைந்தது கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் கூட சித்தியடையாதவர்களாலும், முன்னாள் ஆயுததாரிகளாலும் நாம் ஆட்சிசெய்யப்படவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றோம்.

எனவே கஜேந்திரன் போன்ற தெருக்காடையர்கள் தொடர்ந்தும் மக்களின் இயல்பு வாழ்க்கையை சீர்குலைப்பது முடிவுக்கு கொண்டுவரப்படவேண்டும் என்பதுடன் மக்களின் இயல்பு வாழ்வுக்கும் இன நல்லிணக்கத்திற்கும் எதிரான இச் சமூகவிரோதிகளை சட்டத்தின் முன்நிறுத்தி கூண்டில் அடைப்பதை தவிர மாற்றுவழி கிடையாது என்பதே எனது கருத்தாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com