Sunday, July 3, 2022

எமது அபிவிருத்தி திட்டங்களை கோத்தா நிறுத்தியதாலேயே மக்கள் பெருந்தெருக்களில்! சாடுகின்றார் 43 படையணியின் தலைவர்.

தனது அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டுவந்த பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளை கோத்தபாய ராஜபக்ச தனது ஒற்றை கையொப்பத்தினூடாக நிறுத்தியுள்ளதாகவும் அவ்வாறு அந்த அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் நிறுத்தப்படாதிருந்திருந்தால் நாட்டு மக்கள் சிறந்த பேருந்து மற்றும் தொடருந்து சேவையை பெற்றுக்கொண்டிருப்பர் எனவும் எரிபொருளுக்காக வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் எற்பட்டிருக்காது எனவும் தெரிவித்துள்ளார் 43 படையணியின் தலைவர் சம்பிக்க ரணவக்க.

ஊடகவியலாளர் மாநாடொன்றில் மேற்கண்டவாறு கூறிய அவர் அங்கு பேசுகையில்:

வீழ்ந்து கிடக்கின்ற எம் தேசத்தையும் மக்களையும் தூக்கி நிறுத்தும் பொருட்டு நாம் அனைவரும் நான்கு விடயங்கள் தொடர்பில் ஒருமித்த கூட்டணியாக ஒரு தளத்தில் இணைந்து செயற்படவேண்டிய காலத்தின் கட்டாயத்தை நாம் சிபார்சு செய்கின்றோம்.

முதலாவதாக, தற்போது நீதி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 22ம் அரசியல் யாப்பு திருத்தத்தை காலதாமதமின்றி நிறைவேற்றியாக வேண்டும்.

இந்த திருத்தம் நாங்கள் எதிர்பார்த்த திருத்தச்சட்டமாக அற்றதாகவும் கோத்தபாய ராஜபக்சவுக்கு பல்வேறு அதிகாரங்களை வழங்குவதாக அமைகின்ற திருத்தமாகவும் இருந்தாலும் , இது தொடர்பாக பேச்சுவார்த்தைகளை பாராளுமன்றில் நடாத்தி, பொருத்தமான திருத்தங்களை செய்து, ஜனாதிபதிக்கும் பாராளுமன்றுக்கும் இருக்கின்ற அதிகார போட்டிகளை நிவர்த்தி செய்து சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு அதிகாரங்களை வழங்கி, பசில் ராஜபக்ச மேற்கொள்ளுகின்ற சூட்சிகளை தோற்கடித்து நாட்டுமக்களை காக்கின்ற நடவடிக்கைகளுக்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களும் எம்முடன் இணையவேண்டுமென நாம் அழைப்பு விடுக்கின்றோம்.

கோத்தபாய ராஜபக்சவின் ஆட்சி இருக்கும்வரை வெளிநாட்டு முதலீட்டாளர்களின் உதவிகள் எமக்கு கிடைக்கப்போவதில்லை, ஆகக்குறைந்தது வெளிநாடுகளில் தங்கியிருக்கின்ற இலங்கையர்களின் உதவிகூட இந்த நாட்டுக்கு கிடைக்கப்போவதில்லை. சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கிடைக்கப்பெறும் என்று நம்பிய உதவிகளுக்கான நம்பிக்கை இழந்து செல்கின்றது. கடந்த ஜூன் மாதம் 30ம் திகதி கையொப்பமாவதற்கு ஏற்பாடாகியிருந்த உழியர்கள் மட்ட ஒப்பந்தம் பிற்போடப்பட்டுள்ளது. இது தொடர்ந்தும் பிற்போடப்படுவதற்கான அறிகுறிகளே அதிகமாக தென்படுகின்றது. எங்களுக்கு கடன் வழங்கியுள்ளவர்கள் எமக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளனர். மேலும் பலர் எமக்கெதிரான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றனர்.

நந்தசேன கோத்தபாய ராஜபக்சவாகிய நீர் உமது பொறாமை காராணமாக எமது அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்ட பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை ஒற்றைக் கையொப்பத்தினூடாக நிறுத்தியுள்ளீர். அவ்வாறு நீர் செயற்படாது இருந்திருந்தால் இன்று நாட்டு மக்களுக்கு சிறந்ததோர் பேருந்து சேவையும் தொடருந்து சேவையும் கிடைத்திருக்கும், உமது தான்தோன்றித்தனமான தூரநோக்கற்ற சுயநலச் செயற்பாட்டினால் நாம் இன்று எத்தனையோ நட்பு நாடுகளைக்கூட பகைத்து நிற்கின்றோம்.

இரண்டாவது, சர்வ கட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பது இன்றியமையாததாகின்றது. சர்வ கட்சி அரசாங்கம் என்பது சலூன்கடையில் உள்ளவர்களை கொண்டுவந்து அரசமைப்பது அல்ல. பாராளுமன்றில் இருக்கின்ற கட்சிகளின் தலைவர்கள் இணைந்து நாட்டிற்கான கொள்கைளை வகுக்கின்ற சபையொன்று உருவாக்கப்படவேண்டும்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் 224 பேரையும் அமைச்சுக்களுடன் இணைக்கவேண்டும். அவர்களுக்கு அமைச்சின் செயற்பாடுகளில் பொறுப்புகள் வழங்கப்படுவதுடன் அமைச்சு குழுவாக செயற்படும் பொருட்டு அக்குழுவின் தலைவராக அமைச்சர் நியமிக்கப்படவேண்டும்.

இந்த நாட்டிலிருக்கின்ற பல நிறுவனங்களுக்கும் அந்தந்த துறைசார் நிபுணர்களை தலைவர்களாகவும் நிர்வாகிகளாகவும் நியமிக்கவேண்டும். அவ்வாறு அல்லாது அரசியல்வாதிகளின் எடுபிடிகள் நியமிக்கப்படும்போது இந்நாட்டின் ஊழலை ஒருபோதும் நிறுத்த முடியாது. இந்தநிலை தொடருமானால் நாம் சர்தேச சமூகத்தின் நம்பிக்கையையோ அன்றில் நாட்டு மக்களின் நம்பிக்கையையோ வென்றெடுக்க முடியாது.

மூன்றாவதாக, இன்றிருக்கின்ற நிலைமைகளிலிருந்து மீழும்பொருட்டு இடைக்கால பொது வேலைத்திட்டமொன்றை உருவாக்கி கொள்ளவேண்டும். 6 மாத காலத்திற்கோ அன்றில் மகா சங்கத்தினர் சிபார்சு மேற்கொண்டிருப்பதுபோல் 18 மாத காலத்திற்கான பொது வேலைத்திட்டமொன்றை உருவாக்கிக்கொள்ளவேண்டும். இந்த வேலைத்திட்டத்திற்கான அனுமதியை இந்நாட்டிலிருக்கின்ற உழைக்கும் மக்களிடமிருந்தும் வர்த்தகர்களிடமிருந்தும் பாராளுமன்றின் அனுசரணையுடன் 2 வார காலங்களுள் பெற்றுக்கொள்ளவேண்டும்.

நான்காவதும் மிக முக்கியமானதும் யாதெனில் கோத்தபாய ராஜபக்ச நாட்டின் ஜனாதிபதி பதவியை இராஜனாமா செய்யவேண்டும். அவர் அதனை மேற்கொண்டு 24 மணி நேரங்களுள் பொருத்தமான ஒருவரை நியமிக்கும் சந்தர்ப்பத்தை பாராளுமன்றுக்கு வழங்கவேண்டும்.

எனவே
1. 22 அரசியல் யாப்பு திருத்தத்தை நிறைவேற்றுதல்
2. சர்வ கட்சி அரசாங்கம் ஒன்றை நிறுவுதல்
3. பொது வேலைத்திட்டமொன்றை ஏற்படுத்திக்கொள்ளல்
4. கோத்தபாய ராஜபக்ச இராஜனாமா செய்தல்


என்ற நான்கு நிபந்தனைகளும் இன்று நாட்டுக்கு அத்தியாவசியமாகின்றது. இந்த நிபந்தனைகள் நிறைவேற்றப்படாவிடத்து இந்த நாட்டில் அரசியல் மற்றும் சமூகப்பிளவுகள் ஏற்பட்டு நாடு இரத்த வெள்ளத்தில் மூழ்குவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுவதாக எச்சரித்துள்ளார் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் 43 படையணியின் தலைவருமான சம்பிக்க ரணவக்க.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com