Monday, June 20, 2022

மருந்துதட்டுப்பாட்டுக்கு அரசியல்வாதிகள் மாத்திரமல்ல அரச அதிகாரிகளும் காரணம். டாக்டர் ஐ.எல்.எம். றிபாஸ்

இப்போதைய நாட்டின் நிலையில் மருந்துத்தட்டுப்பாடு அரச வைத்தியசாலைகளுக்கு மட்டுமல்ல பாமசிகளுக்கும் இருக்கிறது. பாமசிகளில் இல்லாத நிறைய மருந்துகள் அரச வைத்தியசாலைகளிலும், களஞ்சியசாலைகளிலும் இருக்கிறது. எல்லா விடயங்களுக்கும் நாம் அரசியல்வாதிகளை குற்றம் சாட்டுகிறோம். ஆனால் அரச அதிகாரிகளே இந்த விடயங்களுக்கு பெரும்பாலும் பொறுப்பானவர்கள் என்பது எனது கருத்து. அண்மையில் வெளியான அறிக்கையின் படி 6692 மில்லியன் ரூபாய் பெறுமதியான மருந்துகள் களஞ்சியங்களில் பாவனைக்கு தகுதியற்றதாக அடையாளம் கண்டு எப்படி அவற்றை அழித்துவிடுவது என்பது பற்றி தெரியாமல் இருக்கிறது. எமது பகுதியில் (கல்முனை பிராந்தியத்தில்) மட்டும் தகுதி இழந்த 12.8 மில்லியன் பெறுமதியான மருந்துகள் இருப்பதுடன் காலாவதியான மருந்துகளும் 40 மில்லியன் ரூபாய் அளவில் இருக்கிறது. யார் இதற்கு பொறுப்பு கூறுவது. அரசாங்கத்தை மட்டும் குறைகூறிக்கொண்டிருந்தால் இதற்கு வகை சொல்வது யார்? இது யாரின் வரிப்பணம்? இந்த வீண்விரயத்திற்கு யார் பொறுப்பு கூறுவது என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம். றிபாஸ் கேள்வியெழுப்பினார்.

பாமசி உரிமையாளர்களுக்கு கல்முனை சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்ற செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவிக்கையில், இந்த மருந்து வீண்விரயங்களும், காலாவதி பிரச்சினைகளும், தர நிர்ணய பிரச்சினைகளுக்கு தனியார் பாமசிகளுக்கு அதிகமாக ஏன் வருவதில்லை? ஏனென்றால் அது சொந்தப்பணம் பாதுகாக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வு இருப்பதே காரணம். இந்த நாட்டில் உள்ள பிரச்சினைகளுக்கு காரணம் அரசியல்வாதிகள் மட்டுமல்ல. அரசாங்கம் என்பது அரசியல்வாதிகள் கிடையாது. அதிகாரிகள் தான் அரசாங்கம். இந்த நாட்டின் சீரழிவுக்கு நாமும் பொறுப்பு என்பதை நாம் உணர வேண்டும்.

நாம் பொறுப்புணர்வில்லாமல் செய்த ஒவ்வொரு செயலும் இந்த நாட்டின் சீரழிவுக்கு காரணமாக அமைந்துள்ளது. மாற்றம் நம்மிலிருந்து, நமது வீட்டிலிருந்து வர வேண்டும். நாம் இங்கு வீணாக்கும் ஒவ்வொரு சொட்டு தண்ணீரும் உலகில் எங்கோ ஒரு மூலையில் யாரோ தாகத்துடன் இருப்பதை உறுதிப்படுத்துகிறோம் என்பதை மறந்து விட முடியாது. இவற்றையெல்லாம் சீரமைத்தல் தொடர்பில் சிந்திக்க எமது விஞ்ஞானிகளோ, பல்கலைக்கழகங்களோ, புத்திஜீவிகளோ தயாரில்லை. நாம் மாற்றுவழிகள் தொடர்பில் சிந்திப்பதில்லை. நமது நிலைப்பாடு இவைகள் பற்றி யாரோ கூறும்வரை காத்திருக்க வேண்டியிருக்கிறது.

உலகில் ஆயுர்வேதம் பெரியளவில் பொருளாதாரத்தை குவிக்கும் துறையாக மாறியிருக்கிறது. நமது நாட்டில் கிழக்கில் சாதாரணமாக விளையும் ஆமணக்கு போன்ற எத்தனையோ வகையான மூலிகைகளை இந்தியாவிலிருந்து கிழங்கு மட்டுமே 500 மில்லியன் செலவழித்து இறக்குமதி செய்துகொண்டிருக்கிறோம். நிலவேம்பு இலை கிலோ 35000 ருபாய். ஆமணக்கு கிலோ 2500 ரூபாய், நெருஞ்சி கிலோ 690 ரூபாய்க்கு எமது அரசாங்கம் வாங்கிக்கொண்டிருக்கிறது. இப்படி முறையான திட்டமிடல்கள் இல்லாதமையினால் நாடு முழுவதிலும் பல ஆயிரம் கோடி ரூபாய்களை நாம் வீணடித்து கொண்டிருக்கிறோம். இவ்வளவு வீணடிப்புக்களை தாங்கிக்கொண்டும் எமது நாடு எப்படி செல்வசெழிப்பாக இருந்தது என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

வாளியில் பெரிய ஓட்டையை போட்டுவிட்டு தண்ணி நிறைக்கும் விடயமாகவே நாட்டின் இன்றைய நிலை தெரிகிறது. மக்களின் கடின உழைப்பினால் இந்த நாடு கடந்த காலங்களில் தலைநிமிர்ந்து நின்றது. பாலைவனத்திலும், குளிரிலும் கஷ்டப்பட்ட ஒவ்வொரு இலங்கையரின் உழைப்பே எமது நாட்டின் கௌரவத்திற்கு காரணம். எமது பொறுப்பை நாம் உணர்ந்து நடக்க வேண்டும். சுகாதாரத்துறையில் மக்களுக்கு கிடைக்கவேண்டிய அதியுச்ச பயனை மக்களுக்கு வழங்கவே நாங்கள் அரச சம்பளம் பெற்ற அதிகாரிகளாக இருக்கிறோம். பல்வேறு தரப்புக்களுடனும் ஆரோக்கியமான கருத்தாடல்களை மேற்கொண்டு பொதுமக்களுக்கு அன்னியோன்னியமாக சேவையை வழங்கவே நாங்கள் தயாராக இருக்கிறோம். வீதி சமிக்கைகள் அமைக்கப்பட்டிருப்பது பயணத்திற்கு இடையூறு செய்வதற்கல்ல. மாறாக எல்லா பயணிகளும் பாதுகாப்பாகவும், சௌகரியமாகவும் வீதியில் பயணிக்கவே. வாகனப்போக்குவரத்து இல்லாத நள்ளிரவில் கூட நான் வீதி விளக்குகளை மீறி செல்வதில்லை. சட்டத்திட்டம் தொடர்பில் எனது தந்தை எனக்கு சரியாக வழிகாட்டியுள்ளார். தந்தை சொல்லை மதிப்பதில் நான் பெருமையடைகிறேன். நாம் செய்யும் தவறுகள், அதிகார தோரணைகள் இன்னுமொருவரை பாதித்துவிடக்கூடாது. நாம் செய்யும் தவறுகளுக்கு வேறு யாரோவெல்லாம் பாதிப்பை அனுபவிப்பது, மரணிப்பது தர்மமல்ல.

சட்டம் எல்லோருக்கும் பொதுவானது. எமது நாட்டின் சட்டங்கள் காலனித்துவ காலத்தில் உருவாக்கப்பட்டவை. அந்த சட்டங்கள் தற்காலத்திற்கு ஏற்றாற்போல மாற்றப்படாமையினால் காலாவதியான சட்டங்கள் கூட எம்மை கட்டுப்படுத்துகின்றன. அந்த சட்டங்கள் மாற்றப்பட வேண்டிய தேவை இருக்கிறது. நீதிமன்றத்திலும், பொலிஸிலும், அதிகாரத்திலும் அந்த சட்டங்கள் வழமையாக இருந்துவருகிறது. அதனால் அதனை மீறுகின்றவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்கவேண்டிய கடமை அதிகாரிகளுக்கு இருக்கிறது. அதனால் தான் சில நேரங்களில் அதிகாரிகள் கடினமாக நடந்துகொள்ளவேண்டி இருக்கிறது.- என்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com