Wednesday, January 26, 2022

கிழக்கு ஐரோப்பாவிற்கு 50,000 துருப்புக்களை அனுப்பும் திட்டங்களை வெள்ளை மாளிகை விவாதித்தது. By Johannes Stern, Alex Lantier

பைடென் நிர்வாகம் ரஷ்யா மற்றும் உக்ரேனின் எல்லைகளுக்கு ஆயிரக்கணக்கான அல்லது பல்லாயிரக்கணக்கான துருப்புக்களை அனுப்பும் திட்டங்களைப் பற்றி விவாதித்து வருவதாகத் நேற்று மாலை நியூ யோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. ரஷ்யாவிற்கு எதிரான உக்ரேனிய இறையாண்மையை பாதுகாப்பதாக இதை முன்வைக்க பைடென் நிர்வாகத்தின் போலியான முயற்சித்தபோதிலும், வாஷிங்டன் ஒரு பெரிய அணுசக்தி சக்தியான ரஷ்யாவை ஒரு போரில் தூண்டிவிடுவதை நோக்கமாகக் கொண்டு ஒரு இராணுவ விரிவாக்கத்தை தயார் செய்து வருகிறது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

ருமேனியா மற்றும் பால்டிக் குடியரசுகளான எஸ்தோனியா, லாத்வியா மற்றும் லித்துவேனியா ஆகியவற்றிற்கு 1,000 முதல் 5,000 துருப்புக்களை அனுப்பும் திட்டங்களை பென்டகன் மூலோபாயவாதிகளுடன் பைடென் விவாதித்ததாக தெரிகின்றது. இது பத்து மடங்காக, 50,000 துருப்புகளாக அதிகரிக்கப்படலாம். ஒரு சில நிமிடங்களில் மாஸ்கோ மீது தாக்குதல்களை நடத்தக்கூடிய ஏவுகணைகளுக்கான தளங்களை உருவாக்குவதற்கான தளபாடங்களை உக்ரேனிய அரசாங்கத்திற்கு வழங்கும் திட்டங்களை வாஷிங்டன் அறிவித்ததை அடுத்து இது வந்துள்ளது.

அட்லாண்டிக் ரிசோல்வ் இராணுவப் பயிற்சியில் பங்கேற்பதற்காக பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப் நகரில் அமெரிக்க டாங்கிகள் இறக்கப்படுகின்றன (AP Photo/Francisco Seco)


இந்த அறிக்கை பற்றிய நியூ யோர்க் டைம்ஸின் செய்தி, இது 'பைடென் நிர்வாகத்திற்கு ஒரு பாரிய முன்னுரிமையுள்ளதாகவும் ... ஆத்திரமூட்டிவிடாத மூலோபாயத்திலிருந்து விலகிச் செல்வதாக' இருக்கும் என்று ஒப்புக்கொண்டது. முன்னாள் பென்டகன் திட்டமிடல் அதிகாரியான ஜிம் டவுன்சென்ட், ரஷ்யாவுடன் போர் வெடிக்கும் என்ற அனுமானத்தின் அடிப்படையில் ஐரோப்பா முழுவதும் பாரிய இராணுவக் கட்டமைப்பிற்கு அழைப்பு விடுத்ததையும் அது மேற்கோள் காட்டியது.

'புட்டினை பயமுறுத்துவதற்கு இது போதாததும் மற்றும் மிகவும் தாமதமானதும்' என்று டவுன்சென்ட் கூறினார். 'சில வாரங்களில் ரஷ்யர்கள் உக்ரேனை ஆக்கிரமித்தால், அந்த 5,000 அமெரிக்க படையினர் மிகப் பெரிய அமெரிக்க மற்றும் நேச நாட்டுப் படைகளின் பிரசன்னத்திற்கான முதற்கட்டமாக இருக்க வேண்டும். மேற்கு ஐரோப்பா மீண்டும் ஒரு ஆயுத முகாமாக இருக்க வேண்டும்” என்றார்.

நேற்று, வாஷிங்டன் 'ரஷ்ய இராணுவ நடவடிக்கையின் தொடர்ச்சியான அச்சுறுத்தல் காரணமாக' உக்ரேனை விட்டு வெளியேறுமாறு அமெரிக்க இராஜதந்திரிகளின் குடும்பங்களுக்கும் மற்றும் அமெரிக்க குடிமக்களுக்கும் அறிவுறுத்தியது. இவ்வாறான நடவடிக்கையானது ஒரு போர் உடனடியாக ஆரம்பமாகவுள்ள நிலைமையிலேயே வழமையாக மேற்கொள்ளப்படுவதாகும்.

வாஷிங்டனுக்கும் உக்ரேனிய ஆட்சிக்கும் இடையிலான உயர்மட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள அமெரிக்க தளபதி அலெக்சாண்டர் விண்ட்மான், நேற்று அமெரிக்க கணக்கீடுகளை அப்பட்டமாக வெளிப்படுத்தினார். ரஷ்யாவின் எல்லையில் நேரடியாக ஆத்திரமூட்டும் நேட்டோ ஆயுதங்களை உக்ரேனுக்கு வழங்க அழைப்பு விடுத்த விண்ட்மான் MSNBC இடம் பின்வருமாறு கூறினார்: “இந்த விஷயங்கள் ஏற்கனவே நகர்ந்து கொண்டிருக்கின்றன. இது நிகழப் போகிறது என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது, இப்போது அந்த கடைசி நிமிட நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நேரம் இது' என்றார்.

நேட்டோ 'கிட்டத்தட்ட ஒரு நடவடிக்கை திட்டத்தை உறுதிப்படுத்தியுள்ளது' என்று அறிவித்த விண்ட்மான் ரஷ்யாவுடனான போருக்கான திட்டங்களை ஆமோதித்தார். அவர் 'இது ஏன் அமெரிக்க மக்களுக்கு முக்கியமானது? இது முக்கியமானது, ஏனென்றால் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவில் மிகப்பெரிய போரை நாம் சந்திக்கவுள்ளோம் என்று கூறினார். வான் பலம், நீண்ட தூர பீரங்கிகள், கப்பலில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகள் போன்ற 80 ஆண்டுகளுக்கும் மேலாக ஐரோப்பிய நிலப்பரப்பில் வெளிப்படாத விஷயங்கள் நிகழவுள்ளன. இது ஒரு சுத்தமான அல்லது மாசற்ற சூழலாக இருக்கப் போவதில்லை” என்றார்.

நேட்டோ, உக்ரேனிய ஜனநாயகம் மற்றும் தேசிய இறையாண்மையைப் பாதுகாக்கிறது என்று தொடங்கப்பட்ட இந்தப் போருக்கான சாக்குப்போக்கு ஒரு மோசடியாகும். கியேவில் தீவிர வலதுசாரி உக்ரேனிய ஆட்சி பிப்ரவரி 2014 இல் அமெரிக்க மற்றும் ஜேர்மனிய ஆதரவு ஆட்சியினால் நிறுவப்பட்டது. அது ரஷ்ய சார்பு அரசாங்கத்தை வீழ்த்தியது. அப்போதிருந்து, வாஷிங்டனும் மற்ற நேட்டோ சக்திகளும் ரஷ்யாவிற்கு எதிரான நடவடிக்கைகளுக்கான தளமாக உக்ரேனை ஆயுதமயமாக்க திட்டமிட்டு நகர்ந்து வருகின்றன. இந்த திட்டங்கள் இப்போது வியத்தகு முறையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

இன்று, நேட்டோ மத்தியதரைக் கடலில் 'நெப்டியூன் ஸ்ட்ரைக் 22' இல் போர் பயிற்சிகளைத் தொடங்கியுள்ளது. இதில் விமானம் தாங்கி கப்பலான USS ஹாரி ட்ரூமன் ஈடுபட்டடுள்ளதுடன் பெப்ரவரி 4 வரை நீடிக்கும். அமெரிக்க பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பி வெள்ளியன்று, 'உக்ரேனில் நிகழக்கூடியவை தொடர்பான' 'நிலவரங்களுடன்' எந்த தொடர்பும் இல்லை என்று கூறினார். எவ்வாறாயினும், இப்பயிற்சி உக்ரேன் தொடர்பாக மாஸ்கோவை அச்சுறுத்துவதை நோக்கமாகக் கொண்டது என அவர் பின்னர் தெளிவுபடுத்தினார்.

உக்ரேனிய எல்லைக்கு அருகிலுள்ள ரஷ்ய மண்ணில் ரஷ்யாவின் துருப்புக்கள் நிலைநிறுத்தப்படுவதைப் பற்றி, அவர் 'தொடர்ந்து கவலையளிக்கிறது ... எங்கள் நட்பு நாடுகளுக்கு, குறிப்பாக நேட்டோவின் கிழக்குப் பகுதியில் உள்ள எமது நட்புநாடுகளை அமைதிப்படுத்தும் தேர்வுகளை நாங்கள் தயார் செய்யப் போகிறோம். மற்றொரு ஊடுருவல் இருந்து அவர்களுக்கு அந்த உறுதிப்பாடு தேவைப்பட்டால், தங்களுக்கு வலுப்படுத்தப்பட வேண்டிய திறன்கள் தேவைப்பட்டால், நாங்கள் அதைச் செய்யப் போகிறோம்”.

நெப்டியூன் 22 என்பது ரஷ்யாவைச் சுற்றியுள்ள நேட்டோ போர் பயிற்சிகளின் தொடர்களில் ஒன்றாகும். பெப்ரவரி 20 ஆம் தேதி, மத்தியதரைக் கடலில் 'Dynamic Manta 22' நீர்மூழ்கி எதிர்ப்புப் பயிற்சியும், பெப்ரவரி 22 ஆம் திகதி நோர்வேயில் 'Dynamic Guard' பயிற்சியும் தொடங்கும். இது Cold Response 2022 பயிற்சிக்கு மாறும். இது 1980களுக்கு பின்னர் 14,000 இராணுவத்தினர், 13,000 கடற்படையினர், அத்துடன் 8,000 விமானப்படையினர் மற்றும் ஊழியர்கள் உட்பட 26 நாடுகளைச் சேர்ந்த 35,000 துருப்புக்களை ஈடுபடுத்தும் மிகப்பெரிய நோர்வே தலைமையிலான இராணுவ நடவடிக்கையாக இருக்கும். முதல் துருப்புக்கள் ஏற்கனவே தளத்தில் உள்ளதாகவும், பயிற்சிகளை ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த மோதலை ரஷ்யா முன்தள்ளுகின்றது என்று நேட்டோ கூறுவது முற்றிலும் அபத்தமானது. ரஷ்யாவின் எல்லைகளுக்கு துருப்புக்கள் மற்றும் கொடிய ஆயுதங்களை அனுப்பும் அதே வேளையில், அதன் சொந்த மண்ணில் துருப்புக்களை வைத்திருப்பதற்காக ரஷ்யாவை நேட்டோ கண்டிக்கிறது. நேட்டோ நாடுகளில் ஆளும் உயரடுக்கின் கணிசமான கன்னை ரஷ்யாவுடன் போருக்கு அழுத்தம் கொடுக்கிறது. அதே சமயம் போருக்கான காரணங்களை கண்டுபிடிப்பதற்காக குற்றச்சாட்டுகளை இட்டுக்கட்டி ரஷ்யாவின் நோக்கங்களை பற்றி ஊகிக்கின்றன.

கோவிட்-19 தொற்றுநோயைக் கையாண்டது தொடர்பான ஊழலில் சிக்கித் தவிக்கும் பிரதம மந்திரி போரிஸ் ஜோன்சனின் பிரிட்டிஷ் அரசாங்கம் நேற்று மாஸ்கோவிற்கு எதிராக மேலும் ஒரு ஆத்திரமூட்டலைத் தொடங்கியது. சனிக்கிழமையன்று, பிரித்தானிய வெளியுறவு மந்திரி லிஸ் ட்ரஸ் மற்றும் பிரிட்டிஷ் வெளியுறவு அலுவலகம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் கியேவில் ரஷ்ய-சார்பு ஆட்சியை நிறுவுவதற்கு மாஸ்கோ ஒரு சதித்திட்டத்தை தயாரிப்பதாக குற்றம் சாட்டின. லண்டனின் எந்த ஆதாரத்தையும் வெளியிடாத இந்தக் குற்றச்சாட்டு, அதன் சொந்த முரண்பாடுகளின் சுமையினால் கீழே விழுந்து சுக்குநூறாகிப்போன ஒரு ஆத்திரமூட்டலாகும்.

'உக்ரேன் மீது படையெடுத்து ஆக்கிரமிப்பதா என்பதை பற்றி ரஷ்ய அரசாங்கம் கருதும் நிலையில், கியேவில் ரஷ்ய சார்பு தலைவரை நியமிக்க ரஷ்ய அரசாங்கம் விரும்புவதைக் குறிக்கும் தகவல் எங்களிடம் உள்ளது. உக்ரேனின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் யெவன் முராயேவ் ஒரு சாத்தியமான வேட்பாளராகக் கருதப்படுகிறார்” என்று டிரஸ் அறிவித்தார்.

ட்ரஸ்ஸின் அறிக்கை தொடர்ந்தது: “இன்று வெளியிடப்படும் தகவல், உக்ரேனைத் தகர்க்க வடிவமைக்கப்பட்ட ரஷ்ய நடவடிக்கையின் அளவைப் பற்றி வெளிச்சமிட்டு காட்டுவதுடன் மேலும் கிரெம்ளின் சிந்திப்பது பற்றிய ஒரு உட்பார்வையும் ஆகும். … இங்கிலாந்து மற்றும் எங்கள் பங்காளிகள் மீண்டும் மீண்டும் கூறியது போல், உக்ரேனுக்குள் ரஷ்ய இராணுவ ஊடுருவல் கடுமையான இழப்புகளுடன் ஒரு பாரிய மூலோபாய தவறாக இருக்கும்”.

இந்த கூற்று விரைவில் மதிப்பிழந்தது: இலண்டனின் தத்துவார்த்த சதியின் தலைவர் என்று கூறப்படும் முராயேவ், ரஷ்யாவில் அவர் அரச தடையை எதிர்கொள்கிறார் என்றும் அங்குள்ள அவரது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றும் சுட்டிக்காட்டினார். 'நீங்கள் என் மாலைநேரத்தை இனிமையானதாக்கிவிட்டீர்கள். பிரிட்டிஷ் வெளியுறவு அலுவலகம் குழப்பத்தில் இருப்பதாகத் தெரிகிறது,” என்று அவர் பிரிட்டனின் ஒப்சேவர் பத்திரிகையிடம் கூறினார். 'இது மிகவும் தர்க்கரீதியானது அல்ல. நான் ரஷ்யாவிலிருந்து தடை செய்யப்பட்டேன். அதுமட்டுமின்றி அங்குள்ள எனது தந்தையின் நிறுவனத்தில் இருந்த பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது”.

ஆயினும்கூட, அமெரிக்க தேசிய பாதுகாப்பு குழு ரஷ்யாவை மீண்டும் கண்டிக்கும் இந்த கருத்தை ஏற்றுக்கொண்டது. அதன் செய்தித் தொடர்பாளர் எமிலி ஹார்ன், “இந்த வகையான சதி ஆழ்ந்த கவலைக்குரியது. உக்ரேனிய மக்களுக்கு அவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் இறையாண்மை உரிமை உள்ளது. மேலும் உக்ரேனில் ஜனநாயகரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட எங்கள் பங்காளிகளுடன் நாங்கள் ஆதரவாக நிற்கிறோம்”.

ரஷ்ய வெளியுறவு அமைச்சகம், அதன் பங்கிற்கு, இக்கதையை மறுத்தது. 'இது பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சகத்தினால் தவறாக பரப்பப்பட்ட தகவல் மற்றும் ஆங்கிலோ-சாக்சன்கள் தலைமையிலான நேட்டோ நாடுகள் உக்ரேனைச் சுற்றி பதட்டங்களை அதிகரித்து வருகின்றன என்பதற்கு மேலும் ஒரு சான்றாகும்' என்று அது அறிவித்தது. பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் ஆத்திரமூட்டும் செயற்பாடுகளை நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவித்தது.

இப்பிரச்சாரமானது உக்ரேன் மற்றும் சிரியாவில் ரஷ்ய நட்பு நாடுகளுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ தலையீடுகளின் தொடர்ச்சி மட்டுமல்ல. அங்கு நேட்டோ ஒரு தசாப்த கால பினாமிப் போரை அங்கு நடத்தியது. இது உலகம் கோவிட்-19 தொற்றுநோயின் மூன்றாம் ஆண்டில் நுழையும் போது வெடிக்கும் நிலைகளை அடைந்து கொண்டிருக்கும் உள் வர்க்க மற்றும் சமூக அழுத்தங்களைக் கையாள்வதற்கான பொறுப்பற்ற முயற்சியுமாகும். பெரும் முதலாளித்துவ அரசாங்கங்களின் கணப்பீடுகளில் விரக்தி பெருகிய முறையில் ஆதிக்கம் செலுத்துகிறது.

நேட்டோ சக்திகள் மற்றும் ரஷ்யாவில் சோவியத்துக்கு பிந்தைய முதலாளித்துவ கொள்ளைக்காரக்கும்பல்கள் அனைத்தும் தொழிலாள வர்க்கத்தின் மீது 'வைரஸுடன் வாழ்வது' என்ற பேரழிவுகரமான கொள்கையை திணித்துள்ளன. நேட்டோ நாடுகளில் 2 மில்லியனுக்கும் அதிகமான கோவிட்-19 இறப்புகளும் ரஷ்யாவில் 326,000 க்கும் அதிகமானோரும் இறந்துள்ளனர்.

கடந்த வாரம் மட்டும் நேட்டோவில் 13 மில்லியனுக்கும் அதிகமான புதிய தொற்றுக்கள் மற்றும் 28,000 கோவிட்-19 இறப்புகள் மற்றும் ரஷ்யாவில் குறைந்தது 270,000 தொற்றுக்கள் மற்றும் 4,799 இறப்புகள் காணப்பட்டன. இருப்பினும், பிராந்தியம் முழுவதும் உள்ள அரசாங்கங்கள் தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் பொது சுகாதார நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வருவதுடன், அதற்கு பதிலாக வைரஸ் இன்னும் வேகமாக பரவ அனுமதிக்கின்றன.

இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்து, அமெரிக்கா, கிரீஸ், பிரான்ஸ் மற்றும் இத்தாலியில் உத்தியோகபூர்வ தொற்றுநோய் கொள்கைகளுக்கு எதிராக வெகுஜன எதிர்ப்புகளும் வேலைநிறுத்தங்களும் வெடித்துள்ளன. எழுச்சி பெற்றுவரும் தொழிலாள வர்க்க எதிர்ப்பின் மீது பாரிய தொற்று மற்றும் இறப்புக் கொள்கைகளை அவர்கள் திணிக்க முற்படுகையில், பெரும் ஏகாதிபத்திய சக்திகள் இராணுவவாதம், பொலிஸ்-அரசு ஆட்சி மற்றும் மில்லியன் கணக்கான அல்லது பில்லியன் கணக்கான உயிர்களை அச்சுறுத்தக்கூடிய போர்களை நோக்கி ஒரு திருப்பத்தை துரிதப்படுத்துகின்றன என்பது தெளிவாகிறது.

ஆளும் வர்க்கம் பூமியை படுகுழியில் தள்ளுவதைத் தடுக்க, சர்வதேச அளவில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே வளர்ந்து வரும் எதிர்ப்பை போரை எதிர்ப்பதற்கும் மற்றும் கோவிட்-19 தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் ஒரு இயக்கத்தின் ஊடாக சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் அணிதிரட்டப்பட வேண்டும். சமூகத்தின் வளங்கள் மீதான கட்டுப்பாடு ஒரு பொறுப்பற்ற மற்றும் வரலாற்று ரீதியாக இயலுமையற்ற ஆளும் உயரடுக்கின் கைகளில் இருந்து எடுக்கப்பட வேண்டும். இதற்கு முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர அணிதிரட்டல் தேவைப்படுகிறது................................


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com