Monday, August 30, 2021

செல்வியின் நினைவாய் அஷோக்கின் குறிப்பு..

செல்வி 1991ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ம் திகதி புலிகளினால் கடத்தப்பட்டு, படுகொலை செய்ப்பட்டு, இன்று 30 ஆண்டுகள் ஆகின்றன. என் தமிழ்நாட்டு வாழ்வு , நாடோடித்தனம் கொண்டது. புறச்சூழலும் , அகநிலையும் என்னை துன்புறுத்த, அலைதலே என்வாழ்கையாகி இருந்தது.

. செல்வி புலிகளால் கடத்தப்பட்ட செய்தியை, சென்னையில் இருந்த போது, அறிய நேர்ந்தது. வாழ்வின் நம்பிக்கை அனைத்தையும் இழந்துவிட்ட அக்கணத்தை , இப்போது எண்ணிப் பார்க்கின்றேன். செல்வி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு மாணவியாக படித்துக்கொண்டிருந்த வேளையில், புலிகளால் கடத்தப்பட்டதினால், பேராசிரியர் சிவத்தம்பி நினைத்தால் , செல்வியை காப்பாற்ற முடியுமென நண்பர்கள் நம்பியது போல், நானும் நம்பினேன்.

புலிகள், சிவத்தம்பி மீது மரியாதையும்- கௌரவமும் கொண்டிருப்பதாக நாங்கள் நினைத்தோம். சிவத்தம்பியும் புலிகளின் அனுதாபியாகவே பலராலும் பார்க்கப்பட்டார். சிவத்தம்பி அவர்களை இது தொடர்பாய் அணுகிய போது, அவரின் இயலாமை புரிந்தது.

ஆனால் இன்று, முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்திற்குப்பின் "ஜனநாயகவேடம்" தரித்துக் கொண்டு , இன்று உலா வரும் நோர்வே சர்வேந்திராராவும் , "பொங்கு தமிழ் புகழ்" சிதம்பரநாதனும் நினைத்திருந்தால், செல்வியை காப்பாற்றி இருக்க முடியும் என்பது, செல்வியின் மீது அன்பும் கரிசனையும்கொண்ட நண்பர்களின் அபிப்பிராயமாக அன்றும் இருந்தது , இன்றும் இருக்கின்றது. நானும் அவ்வாறே நினைக்கின்றேன்.

நோர்வே சர்வேந்திரா, புகலிடத்தில் தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் அதிகாரம்மிக்க நபராக, புலிகளின் அனைத்து ஊடகங்களையும் கட்டுப்படுத்தும் மேலாண்மை அதிகாரம் கொண்டவராக இருந்தவர். இவரின் அதிகார கண்காணிப்புக் காலத்தி லேதான், பிரான்சில் வைத்து மனித உரிமைவாதியும் - சமூக செயற்பாட்டாளருமான சபாலிங்கம் புலிகளிளால் படுகொலை செய்யப்பட்டார்.

கனடா 'தேடகம்' புலிகளினால் எரிக்கப் பட்டது. பல்கலைக் கழக பேராசிரியர் ராஜினி திராணகம , புலிகளால் கொலை செய்யப் பட்டார். 'புதியதோர் உலகம்' கேசவன் புலிகளால் கொலை செய்யப்பட்டார். இதில் , புலிகளால் படுகொலை செய்யப்பட்ட தில்லைநாதன், சர்வேந்திராவின் முன்னாள் பல்கலைக்கழக நண்பன் என்பதுதான் மிக வேதனையானது.

இப்போதும் கூட "ஜனநாயக வேடம் தரித்துக் கொண்டிருக்கும்" நோர்வே சர்வே, இவைபற்றி வாய் திறக்க தயாரில்லை. செல்வி கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியின் சூத்திரதாரிகளாக இருந்தவர்களில், சிதம்பரநாதனும் ஒருவர் என்பது, செல்வியின் வாழ்வின் மீதும்- அவர்மீதும்- அக்கறையும், அன்பும், நேசிப்பும் கொண்ட நணபர்களின் கணிப்பாக இருந்தது. என் எண்ணமும் இதுவாகவே இருக்கின்றது.

இன்று சிதம்பரநாதன் , சர்வேந்திரா போன்றவர்களின் உன்னத தோழர்களாக இருக்கும் "சனநாயக பேர்வழிகள்" நிச்சயம் தங்களின் வாய் திறந்து, இதற்கு பதிலளிப்பார்கள் என நினைக்கின்றேன்.

சிதம்பரநாதன், சர்வேந்திரா போன்ற இத்தகைய மனிதர்களிடம் ,நாம் வேண்டுவது; இன்றை காலங்களிலாவது, உங்களின் மனச்சாட்சி ஆரோக்கியமாகவும் - நேர்மையாகவும் இயங்கவேண்டும் என்பதே அன்றி, வேறொன்றும் இல்லை...

ஒரு நாள் எமது நாட்டின் அரசியலற்ற அறிவு ஜீவிகள் கவிஞர்கள் எழுத்தாளர்கள் தளபதிகள் என கொலைகளையும் வன்முறைகளையும் புலிகளின் காலத்தில் நியாயப்படுத்திய கொடூரம் செய்த நீங்கள் அனைவரும் எமது மக்களால் விசாரணை செய்யப்படுவீர்கள்.

உங்களால் அப்போது பதில் சொல்ல முடியாது. உங்கள் முழுப் பொய்களும் விசாரணைக்கு உள்ளாகும். மெளனம் என்ற வல்லூறு உங்கள் குடலை தின்னும். உங்கள் அவமான உணர்வே உங்கள் உயிரை குடிக்கும்.

(லத்தீன் அமெரிக்க கவிதை ஒன்றை தழுவி எழுதப்பட்டது.)

செல்வியின் கவிதை ஒன்று.

விடை பெற்ற நண்பனுக்கு மின் குமிழ்கள் ஒளியுமிழ நிலவில்லா வெப்பம் நிறைந்த முன்னிராப் பொழுதில் விரைவில் வருவதாய் உனது நண்பனுடன் விடைபெற்றாய் உன்னிடம் பகிர எனக்குள்ளே நிறைய விடயங்கள் உள்ளன. முகவரி இல்லாது தவிக்கின்றேன் நண்ப. செழித்து வளர்ந்த தேமாவிலிருந்து வசந்தம் பாடிய குயில்களும் நீயும் நானும் பார்த்து இரசித்த கொண்டை கட்டிய குரக்கன்கள் தமது தலையை அசைத்தும் எனது செய்தியை உனக்குச் சொல்லும். பருந்தும், வல்லூறும், வானவெளியை மறைப்பதாக இறக்கையை வலிந்து விரித்தன நண்பா கோழிக்குஞ்சுகள் குதறப்பட்டன: கூடவே சில கோழிகளும்.. இந்தப் பருந்தின் இறக்கையைக் கிழிக்க எஞ்சி நின்ற குஞ்சுகள் வளர்ந்தன. நடந்து நடந்து வலித்துப் போகும் கால்களின் மீது படியும் என் மண்ணின் புழுதியை முகர்ந்து வீதியிலன்றி வீட்டினுள்ளும் முளைத்துக் கிடக்கும் முட்களைப் பிடுங்கி குப்பையைக் கிளறும் குஞ்சுகளோடு….. இறையைத் தேட, இறக்கையைக் கிழிக்க…… வாழ்வதை இங்கு நிச்சயப்படுத்த கொடுமைகட் கெதிராய் கோபம் மிகுந்து குமுறும் உனது குரலுடன் குழந்தைச் சிரிப்புடன் விரைந்து வா நண்பா!

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com