Thursday, July 8, 2021

அலுக்கோசுகளின் சினிமா தான் "மேதகு"! - பி.இரயாகரன்

தூக்குமேடையில் தூக்கு போடும் அலுக்கோசுகள் போன்றே, பிழைப்புவாத ஈழ ஆதரவு தமிழக கும்பல்களின் செயற்பாடுகளும், சிந்தனைகளும் குறுகிய வழிபாட்டை ஊக்குவிக்கின்றனர். இதன் மூலம் புலிப் பாசிசத்தின் கீழ் உருவான ஈழத்து தற்குறிகளிடம் இருந்து பணத்தைக் கறக்கவும், அதேநேரம் சொந்த மக்களை ஏமாற்றிப் பிழைக்கவும் – தமிழகத்தில் புலி ஆதரவு கும்பல்கள் இயங்குகின்றது. "மேதகு" என்ற புரட்டு, இப்படித்தான் புளுத்து வெளிவந்திருக்கின்றது.

"திருப்பி அடித்தால்" அது விடுதலைப் போராட்டமாகிவிடும், "துரோகி"யாக்கி கொன்றால் மானிட விடுதலை கிடைத்துவிடுமா? இப்படி நம்புகின்ற, நம்பக் கோருகின்ற பகுத்தறிவற்ற அலுக்கோசுகளே, "மேதகு" மூலம், தம்மைத் தாம் முன்னிறுத்திக் கொள்கின்றனர்.

கடத்தல்காரர்கள், குற்றவாளிகளுடன் சேர்ந்து செய்த தனிநபர் பயங்கரவாதம் மூலம், ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்தை நடத்த முடியும் என்று, அலுக்கோசுகளால் மட்டுமே சொல்ல முடியும். அப்படி சொல்லப்பட்டது தான் "மேதகு". தோற்றுப் போன அரசியல் வழிமுறையை சரியென்று புனைய, சம்பவங்களையும் – வரலாறுகளையும் திரிக்கின்றனர்.

"மேதகு"வின் நடவடிக்கைகளை நியாயமானதாகக் காட்ட, அதைக் காட்சியாக்க முடியாது. அதனால் பிரபாகரனைச் சுற்றி வரலாறு புனையப்பட்டு - திரிக்கப்படுகின்றது.

இனவொடுக்குமுறை என்பது "மேதகு" புரிந்து கொண்டது போலோ, இந்தப் படம் கூறுவது போலோ இருக்கவில்லை. இலங்கையில் இனவாதம் என்பதும் இனம் கடந்தது. இனவொடுக்குமுறை என்பது ஒரு இனம் சார்ந்த நிகழ்ச்சிநிரலுமல்ல.

இனவாதம் என்பது பரஸ்பரம் தேர்தல் அரசியலில் வாக்கு பெறும் நிகழ்ச்சிநிரலாக இருந்து வந்தது. அதேநேரம் அரசின் இனவொடுக்குமுறைக்கு எதிரான ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான அரசியல் வழியில் இருந்து, "மேதகு" போன்றோரின் தனிநபர் பயங்கரவாதம் உருவானதல்ல. மாறாக தமிழ் இனவாத தேர்தல் கட்சியின் வெற்றிக்காக எதிரணி மீதான வன்முறைகளைத் தான், "மேதகு"கள் செய்தனர். இந்த தனிநபர் பயங்கரவாதத்திற்கு, பிரபாகரன் முன்னோடி கிடையாது. தமிழரசுக் கட்சியின் அரசியல் எடுபிடிகளாக இருந்த பலர், இது போன்ற வன்முறைகளில் ஈடுபட்டதும் - தொடர்ச்சியான அக்காலக் கைதுகள் மட்டுமின்றி, சிறை வரலாறுகளும் எடுத்துக் காட்டுகின்றது.

இனவாத தேர்தல் கட்சியான தமிழரசுக்கட்சி தேர்தல் வெற்றியே, விடுதலைக்கான பாதை என்று நம்பி அதற்காகவே வன்முறைகளில் ஈடுபட்டனர். தமிழரசுக்கட்சி அல்லாத அனைவரையும் துரோகி என்றனர். அவர்களைக்; கொல்வதன் மூலம் அல்லது தேர்தல் ஜனநாயகத்தில் போட்டியாளரை ஒழித்துக் கட்டுவதன் மூலம், தமிழ் மக்கள் வெற்றியையும் - விடுதலையையும் பெற முடியும் என்று நம்பியே, வன்முறை பிரயோகிக்கப்பட்டது. இதை தமிழரசுக்கட்சி உணர்ச்சி வடிவில் முன்வைக்க, உணர்ச்சிவசப்பட்டவர்களின் வன்முறை வடிவம் தான், தனிநபர் பயங்கரவாதம். அதில் ஒருவர் தான் "மேதகு". இந்த "மேதகு" தானல்லாத அனைத்தையும் ஈவிரக்கமின்றி கொல்லுகின்ற சுய வக்கிரம் மூலம், தனக்கான லும்பன் குழுவாக உருவாக்கியது தான் புலிகள் என்ற அமைப்பு. ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான அமைப்பல்ல.

"மேதகு" சினிமா கூறுவது போல் சேகுவேராவையோ, பகத்சிங்கையோ பிரபாகரன் கற்றது கிடையாது, அவர்களைப் பின்பற்றியதும் கிடையாது. தான் படித்ததில்லை. மற்றவர்கள் படிப்பதையே வெறுத்த, அதை மீறிப் படிப்பவர்களை கொன்று, தன்னையும் - தன்னைப் போன்ற மூடர்களையும் உருவாக்கி – அதையே விடுதலைப் போராட்டமாக முன்னிறுத்தியவரே "மேதகு". இதற்காகவே சொந்த இனத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்களை கொன்று குவித்தனர். 1983 இற்கு முன்பே மூன்று இயக்க தலைவர்களை கொன்றவர்கள். 30 மேற்பட்ட இயங்கங்களில் சில தானாக வரலாற்றில் காணாமல் போக, சில இயக்கங்களையும், அதன் உறுப்பினர்களையும் ஈவிரக்கமின்றி கொன்று குவித்தனர். அரசியலைக் கைவிட்டவர்களைக் கூட வேட்டையாடினர்.

இந்த புலிப் பாசிச கொலைகாரர்களிடம் இருந்து தப்பிப் பிழைக்க சிலர் இந்திய - இலங்கை அரசுகளிடம் சரணடைந்தனர். இதில் சிலர் அவர்களின் கூலிக் குழுக்களாக மாறினர். புலிகளின் கொலைவெறியில் இருந்து தப்பிப் பிழைக்கவே, ஒரு சில இயக்கங்கள் வெளிப்படையான இந்திய - இலங்கை கூலிக்குழுக்களாக மாறின. புலிகளின் சர்வாதிகார பாசிசமானது, சொந்த மக்களைக் குதறி, ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்தையே காயடித்தது. இது தான் "மேதகு" வரலாறு.

தமிழக இனவெறி மூடர்களின் பிழைப்புவாதம்

புலிகளையும், பிரபாகரனையும், (ஈழத்)இலங்கைத் தமிழரையும் முன்னிறுத்தி பிழைப்புவாத அரசியல் செய்யும் தமிழக அரசியல்வாதிகளின் அரசியல் பிதற்றல்களின் தொடர்ச்சியாகவே "மேதகு" என்ற படத்தைக் காண முடியும்.

இந்தப் படம் மூலம் கடந்த வரலாறுகள் திரிக்கப்பட்டு இருக்கின்றது. இலங்கை காட்சிப் படிமங்கள் சிதைக்கப்பட்டு, இந்திய மேலாதிக்கத்தை காட்சியாக்கி இருக்கின்றது. ஒடுக்கப்பட்ட மக்களின் ஒடுக்குமுறையை மறுக்கும் வண்ணம், அரசியலை வக்கிரமாக்கி - அவை காட்சிப்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இந்தப் படம் மூலம் "மேதகு" என்று அடையாளப்படுத்தப்படும் பிரபாகரனின் வரலாற்றை எடுத்தால், ஒடுக்கப்பட்ட மக்களின் பொதுநலனில் இருந்து அணுகினால் எதுவுமில்லை. 30 வருட யுத்தம் சமூகத்தை வளர்ச்சிக்கு இட்டுச் செல்லவில்லை. சமூக வளர்ச்சிக்குரிய எல்லாக் கூறுகளையும் அழித்துள்ளது. இதை பேரினவாதம் அழிக்கவில்லை, மாறாக "மேதகு" முன்வைத்த பிரபாகரனிசமே அழித்தது.

தனது, தனிப்பட்ட அதிகார நலனின் இருந்து சிந்திப்பதிலேயே "மேதகு"வாக இருந்தவரே பிரபாகரன். ஒட்டுமொத்த ஜனநாயகத்தை மறுப்பதில் "மேதகு"வாகத் திகழ்ந்தவர். தனது, தனது இயக்க அதிகாரத்துக்காக மற்றவர்களைக் கொல்வதில் "மேதகு"வாக இருந்ததால், அவரும் அவர் இயக்கமும் வரலாறாகியது. மற்றவர்களை கொல்லுவதன் மூலம், தமக்கான வரலாற்றை உருவாக்கியவர்கள். தங்கள் தியாகத்தைக் காட்டி, பிறரைக் கொன்று குவிக்கும் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொண்டனர்.

இப்படிப்பட்ட "மேதகு"வின் பண்புகள் மூலம் தான், தான் மற்றும் தனது இயக்கம் அல்லாத அனைத்தையும் அழித்தனர். அதையே போராட்டமாகவும் காட்டினர். இதன் மூலம் "மேதகு" தனக்குத் தானே முடி சூடிக்கொண்டவர். இதற்காக தன் இனத்தைப் பலிகொடுத்தவர்;. இந்த அரசியலைக் கொண்டாடுவதற்கு, "மேதகு" என்று குதர்க்கமான செயல்களுக்கு மகுடம் சூட்ட, திரிக்கப்பட்ட சினிமா காட்சிகள், வரலாறுகள்.

"ஏன் திருப்பி அடிக்கவில்லை" என்ற பிரபாகரன் மூலம் கேட்கின்ற அரசியல், திருப்பி அடித்துவிட்டால் பிரச்சனை தீர்ந்து விடுமா? சரி திருப்பி அடித்ததன் மூலம் பிரச்சனைகள் முடிவுக்கு வந்ததா எனின் இல்லை. "மேதகு" போன்ற ஒருவனும், அவனைப் போல் 1000 பேர் மக்களில் இருந்து அன்னியப்பட்டு, திருப்பி அடித்துவிட்டால், மக்களின் பிரச்சனை தீர்ந்து விடுமா? இப்படி உலகில் வரலாறு தான் உண்டா? இப்படிபட்டவர்கள் தூக்கில் போடும் அலுக்கோசுகளுக்கு சமமானவர்கள்.

வரலாற்று திரிபுகளும் - புரட்டல்களும்

1.தமிழாராய்ச்சி மாநாடு : தமிழாராய்ச்சி மாநாட்டு சம்பவத்துக்கும், துரையப்பவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. துரையப்பா ஏன் "துரோகி" என்று விளக்க, அறிவுபூர்வமான எந்த அரசியல் விளக்கமும் இன்று வரை யாரிடமும் கிடையாது.

தமிழாராய்ச்சி மாநாடு இலங்கை அரசின் அனுமதியுடன் நடத்தப்பட்டது. தமிழாராய்ச்சி மாநாடு, அரசால் திட்டமிட்டு குழப்பப்பட்டது என்பதே அப்பட்டமான திரிபு. திட்டமிட்ட "தமிழாராய்ச்சி" மாநாடு, 3ம் திகதி முதல் 9ம் திகதி வரை, எந்தக் குழப்பமுமின்றி நடந்து முடிந்திருந்தது. இது தான் உண்மை வரலாறு.

மாநாடு முடிந்த பின் தமிழினவாத நிகழ்ச்சிநிரல் ஒன்று தமிழரசுக்கட்சியால், "தமிழாராய்ச்சி" மாநாட்டு பெயரில் அரங்கேற்றப்பட்டது. 1974 தை 10 திகதி "தமிழாராய்ச்சி" பெயரில் தமிரசுக்கட்சியைச் சேர்ந்த அமிர்தலிங்கம் நடத்திய தமிழ் இனவாத நிகழ்ச்சியிலேயே, ஒன்பது பேர் மின்சாரம் தாக்கி மரணித்த நிகழ்வு நடந்தேறியது.

தமிழாராய்ச்சி மாநாட்டு பெயரில் அமைக்கப்பட்ட மேடையில் தமிழினவாதத்தை அரசியலாக்கிய அமிர்தலிங்கம் இருந்ததுடன், சட்டவிரோதமாக இந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட்ட ஜனார்த்தனனை மேடையில் ஏற்றிய போது, பொலிசார் அவரை கைது செய்ய முயன்ற போது இந்த வன்முறைச் சம்பவம் நிகழ்ந்தது. ஜனார்த்தனனை கைது செய்வதைத் தடுக்க முன்கூட்டியே திட்டமிட்ட வகையில் தயாராக இருந்த சிவகுமாரன் போன்ற இளைஞர்களின் செயலால் - பொலிசார் வானத்தை நோக்கிச் சுட்டனர். இதன் போது துப்பாக்கி குண்டு மின்சாரக் கம்பியில் பட்டு அறுத்து விழுந்த போது, இந்த மரணங்கள் ஏற்பட்டது. (இவை அனைத்துக்கும், மாநாட்டை நடத்தியவர்கள் முன்வைத்த, நீதிமன்ற சாட்சிகள் ஆதாரமாக உள்ளது.)

10ம் திகதி மண்டபத்தில் கூட்டத்தை நடத்த அனுமதி பெற்ற போது, அதற்கான நிபந்தனையில் சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட ஜனார்த்தனன், அங்கு இருக்கவோ பேசவோ கூடாது என்ற நிபந்தனையுடனேயே அனுமதி கொடுக்கப்பட்டது. அதை மீறியவர்கள், அவரை மேடையில் திடீரென ஏற்றியவர்களே இந்த வன்முறைக்கு காரணமானவர்கள். அதேநேரம் மண்டபத்துக்கு வெளியில் சட்டவிரோதமாக திட்டமிட்டு கூட்டத்தை நடத்தியதுடன், பொலிசார் உள்ளே வரவிடாமல் தடுக்கும் வண்ணம் - வீதிகளை முடக்கும் வண்ணம் - மக்களை வீதிகளில் இருத்தினர். மண்டபத்திற்கு வெளியில் அமைக்கப்பட்ட சட்டவிரோத மின்சாரக் கம்பிகள் மீது துப்பாக்கி குண்டு பட்டுத்தான், அன்று மரணங்கள் நிகழக் காரணமானது. உண்மைக் குற்றவாளிகள் தமிழினவாதிகளே. இது தொடர்பான விரிவான தரவுகள், சாட்சியங்கள் தொகுக்கப்பட்டுள்ளது. விரைவில்.

சிவகுமாரனின் மரணம்

"மேதகு"களின் பிழைப்புவாத வாரிசுகள் சிவகுமாரனின் வரலாற்றைத் திரிக்கின்றனர். 05.06.1974 திகதி கோப்பாய் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டோரை பொலிசார் துரத்திச் சென்ற போது, சிவகுமாரன் தற்கொலை செய்து கொள்கின்றான். மரணம் வைத்தியசாலையில் நடக்கின்றது.

இப்படி நிகழ்ந்த மரணத்தை, தமிழாராய்ச்சி மாநாட்டு சம்பவத்தின் போது பொலிஸ் அதிகாரியாக இருந்தவரை கொல்ல முயன்ற போது நடந்ததாக திரிக்க முடிகின்றது. தமிழாராய்ச்சி மாநாட்டு சம்பவத்தை வைத்து சிவகுமாரனின் மரணத்தை திரிப்பது போல், தமிழாராய்ச்சி மாநாட்டு சம்பவத்துடன் தொடர்பற்ற துரையப்பாவை, அதற்காகவே "துரோகியாக்கி" "மேதகு" கொன்றதாக வரலாறு புனைகின்றது.

தமிழாராய்ச்சி மாநாட்டு குழப்பத்தை ஏற்படுத்துவதில் சிவகுமாரனின் முக்கிய பங்கு உண்டு. (இவைகளை ஆதாரமாக கொண்ட சுய வாக்குமூலங்கள், தங்கள் நடத்தையை வீரமாக கூறி முன்வைக்கப்பட்டு இருக்கின்றன.) இப்படி அன்று தமிழரசுக்கட்சி ஏற்படுத்திய குழப்பத்தில் நடந்தேறிய வன்முறைக்கு பழி தீர்ப்பதாகக் கூறிக்கொண்டு, 11ம் திகதி (விடிவதற்கு முன்பாகவே) அதாவது அடுத்தநாள் நல்லூர் பாராளுமன்ற உறுப்பினர் வீட்டிற்கு காவலாக நின்ற பொலிசார் மீது வெடிகுண்டை வீசியவன் தான் சிவகுமாரன். தனிநபர் பயங்கரவாதத்தின் பிதாமகன். மக்களை நிராகரிக்கும் வன்முறை அரசியல் கேடுகளுக்கு எல்லாம், அரசியல் முன்னோடி. 13.07.1970 அன்று சிறிமா அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த சோமவீர சந்திரசிறீயின் வாகனத்துக்கு குண்டு வைத்தவன். 13.03.1971 துரையப்பாவின் காருக்கு குண்டு வைத்தவன். துரையப்பாவை 27.07.1975 பிரபாகரன் கொல்ல முன்பே, அதிலும் தமிழாராய்ச்சி மாநாட்டுக்கு முன்பே "துரோகி"யாக்கிய வரலாறு உண்டு.

தேர்தல் ஜனநாயக அரசியலில் மக்களை ஆதரவைப் பெற்றவராக, துரையப்பா இருந்தார் என்பது தான், அவரின் "துரோகம்". தமிழ் இனவாதம் மூலம், தேர்தலில் வெல்ல முடியாத அனைவரையும் "துரோகியாகி", அவர்களை கொல்ல தமிழரசுக்கட்சியால் உருவாக்கப்பட்ட அலுக்கோசுகளே சிவகுமாரன், "மேதகு" போன்றவர்கள். இது தான் வரலாறு. இது தொடர்பான விரிவான தரவுகள், சாட்சியங்கள் தொகுக்கப்பட்டுள்ளது. விரைவில்

பண்டாரநாயக்காவின் கொலை

தமிழரின் உரிமையைக் கொடுக்க முனைந்ததற்காக, பண்டாரநாயக்கா சிங்கள இனவாதிகளால் கொல்லப்பட்டார் என்பது அரசியல் புரட்டு. இந்தக் கொலையைச் செய்த சோமராம தேரர் 1962 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 6 ஆம் திகதி தூக்கிலிடப்பட்டார். அதற்கு முன் சோமராம தேரர் பௌத்த மதத்தைத் துறந்து, ஞானஸ்நானம் பெற்று கிறிஸ்தவராகினார். இந்தக் கொலை அரிசி "இறக்குமதிக்கான" அனுமதி சம்மந்தமானதாகவும், சில அரசியல்வாதிகள் சம்மந்தப்பட்டு இருந்ததுடன், பல அரசியல்வாதிகள் முதல் சொந்த கட்சியில் இருந்தவர்களும் கூட கைது செய்யப்பட்டனர். பாவிக்கப்பட்ட துப்பாக்கிக்கு கூட பிற அரசியல்வாதிகளின் பின்னணி இருந்ததுடன் - கொலைக்கான துப்பாக்கிப் பயிற்சி அரசியல்வாதிகள் தொடர்புபட்டு இருந்தது அன்றைய விசாரணைகளில் - தண்டனைகளில் காணமுடியும். சிங்கள இனவாதமே அவரைக் கொன்றது என்பது புனைவு. இதை தொடர்ந்து, அவரின் மனைவி சிறிமாவோ உடனடியாக ஆட்சிக்கு வந்தார் என்பதும் புனைவு.

பண்டா – செல்வா ஒப்பந்தம்

பண்டா - செல்வா ஒப்பந்தத்தை மட்டும் முன்வைத்து காட்டப்படும் கண்ணோட்டம், டட்லி - செல்வா ஒப்பந்தத்தை பேச மறுப்பதன் மர்மம், வலதுசாரி அரசியலே. இரண்டு ஒப்பந்தமும் கிழிக்கப்பட்ட போதும், டட்லி - செல்வா ஒப்பந்தம் கிழிக்கப்பட்ட பின்னும், தமிழரசுக்கட்சி அரசாங்கத்தில் மந்திரி பதவி பெற்று இருந்தனர். இங்கு ஒப்பந்தங்கள் வலதுசாரிய வர்க்க அரசியல் அடிப்படையில், தமிழ் இனவாதக் கண்ணோட்டங்களை அடிப்படையாக கொண்டு திரிக்கப்பட்டு – அதை வரலாறாக்கி காட்டுகின்றனர்.

சிறி எதிர்ப்பு குறித்த திரிபு

1958 "சிறி" எழுத்தை அழிக்கின்ற போராட்டத்தை தமிழ் இனவாதிகள் தமிழர்கள் பெயரில் நடந்தினர். தமிழ் எழுத்தை அழிக்கும் சிங்களவர் போராட்டம் நடக்கவில்லை. சிறி அழிப்பு போராட்டத்தின் எதிர்வினைகளாக, அங்கொன்றும் இங்கொன்றுமாக சிங்கள இனவாதிகளும் வன்முறைகளில் ஈடுபட்டனர்.

'மேதகு" வரலாற்றை மூடிமறைத்து, அதை தலைகீழாக்கி காட்சிப்படுத்தும் இனவாத அரசியல் காலத்தில், பிரபாகரனின் வயதோ நான்கு தான். திருஞானசம்பந்தர் போல் ஞானம் பெற்றார் "மேதகு" என்று கதைவிடும் தமிழ் சங்கிகளின் கதையைக் கேட்டு, தமிழகம் பொங்கிப் பூரித்து போய் நிற்கின்றது.

குட்டிமணி, தங்கத்துரை

குட்டிமணி, தங்கத்துரை கடத்தல்காரர்கள். 1973 இல் கடத்தலுக்காக இந்தியாவில் கைது செய்யப்பட்டு, இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டவர்கள். இத்தகைய கடத்தல்காரர்கள் மூலம் வெடிமருத்துகளைப் பெறவும், பொலிசாரிடம் இருந்து தப்பி இந்தியா செல்லவும் பயன்படுத்தப்பட்டனர். இந்தத் தொடர்புகள் அரசியலுடன் தொடர்புபடுத்தி பொலிசார் தேடும் சூழல்களை உருவாக்குகின்றது. இந்தச் சூழலே அவர்களையும் தமிழீழ வீரர்களாக, தியாகிகளாக முன்னிறுத்துகின்றது. உண்மையில் அன்று தனிநபர் பயங்கரவாதம் என்பது, குற்றக் கும்பலுடன் தொடர்புபட்டதாகவே வளர்ந்தது.

பிரபாகரனின் முதல் தலைவர் குற்றக் கும்பலைச் சேர்ந்த செட்டியே. குற்றவாளியாக சிறை சென்று வந்த செட்டி, எப்படி அரசியல் வன்முறையைச் செய்வது என்று தனது குற்றப்பாணியில் பிரபாகரனுக்கு வழிகாட்டியவர். தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் என்ற இயக்கப் பெயரை உருவாக்க முன்பாக, "புதிய தமிழ் புலிகள்" என்ற இயக்கத்தை செட்டி உருவாக்கியதுடன் - அதன் தலைவரும் செட்டிதான். பிரபாகரன் அதன் கீழ் இயங்கியதுடன், தன்னுடன் சேர்ந்து பயணித்தவனை செட்டி கொன்றது போல், அதே வழிமுறையைப் பின்பற்றி பிரபாகரனும் கொல்லத் தொடங்கியது தான் "மேதகு" வரலாறு. இப்படி தான் உண்மை வரலாறுகள் உண்டு. இது தொடர்பான விரிவான தரவுகள், சாட்சியங்கள் தொகுக்கப்பட்டுள்ளது. விரைவில்.

தரப்படுத்தல் குறித்த திரிபுகளும் உண்மைகளும்

தரப்படுத்தலுக்காக போராட்டத்தை முன்னிறுத்திய யாழ்ப்பாண வெள்ளாளியம், காலாகாலமாக ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு கல்வியை மறுத்த தலைமுறை தான். ஒடுக்கப்பட்ட மக்களை முன்னிறுத்தி போராடவில்லை.

உண்மையில் முதல் தரப்படுத்தல் 1967 இல் கொண்டுவரப்பட்ட போது, தமிழரசுக்கட்சி இலங்கை அரசாங்கத்தில் மந்திரிப் பதவியைப் பெற்று இருந்தது. அப்போது தமிழரசுக்கட்சி அதை எதிர்க்கவில்லை, ஆதரித்தது. இதன் பின்பான தரப்படுத்தல் முறையொன்று 1970-1971 இல் கொண்டுவரப்பட்ட போது எதிர்க்கின்றனர். இதைத் தொடர்ந்து 1973 முதல் 1979 வரை பலமுறை திருத்தப்பட்ட தரப்படுத்தல் முறை குறித்து, எதையும் எந்த உண்மைகளையும் தமிழினவாதம் பேசவில்லை.

1970 – 1971 தரப்படுத்தல் மூலம் அண்ணளவாக 50 வைத்திய – பொறியியல் துறை சார்ந்த தமிழ் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். அண்ணளவான இத் துறைகள் சார்ந்த 500 பல்கலைக்கழக இடங்கள் யாருக்கானது என்ற அடிப்படையில் கல்வியில் இனவாதம் கட்டமைக்கப்பட்டது. 50 சதவீதத்துக்கு அதிகமான இடத்தை யாழ்பாணத்தைச் சேர்ந்த ஒடுக்கும் சாதிகளும், யாழ் பின்னணியைக் கொண்ட கொழும்பு தமிழ் மாணவர்களும் கைப்பற்றி வைத்திருந்தனர். யாழ்ப்பாணத்தில் 40 சதவீதமான ஒடுக்கப்பட்ட சாதிகள் பாடசாலைகளில் கற்கவே முடியாத வகையில் சாதிய ஒடுக்குமுறை கொண்ட சமூகப் பின்னணியில், வெள்ளாள வெள்ளாளியக் கல்விமுறையே அதிகளவில் பாதிப்புக்குள்ளானது. தமிழ் மொழி மீதான தரப்படுத்தல் என்ற வகையில், அங்கொன்றும் இங்கொன்றுமாக திறமை மூலம் மேலே வந்த வன்னி முதல் கிழக்கு வரையிலான பின்தங்கிய மாணவர்களுக்கும், யாழ்ப்பாணத்தில் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்களுக்கும் இது விதிவிலக்காக இருக்கவில்லை. அவர்களையும் இது பாதித்தது.

வைத்திய – பொறியியல் துறையில் அண்ணளவாக 50 இடங்கள் குறைந்தபோது அதை முன்னிறுத்தியவர்கள், கலைத்துறையில் தமிழர் எண்ணிக்கையில் ஏற்பட்ட அதிகரிப்பை கண்டு கொள்ளவேயில்லை.

1970-1971க்குப் பிந்தைய 1973 தரப்படுத்தல் முறையானது யாழ் மாவட்டத்தைக் கடந்து, பிற தமிழ் மாவட்டங்களுக்கு சாதகமான சூழலை உருவாக்கியது. எண்ணிக்கையில் அண்ணளவாக பத்து மாணவர்களுக்கு கல்வி வாய்ப்பு கிடைத்ததை, யாழ் வெள்ளாளிய சமூகம் கண்டு கொள்ளவேயில்லை. இப்படி அதிகரித்த இந்த பத்து மாணவர்களின் கல்வியைக் காட்டியே, கிழக்கு பிரிவினைவாதம் இன்று நியாயப்படுத்தப்படுகின்றது.

யாழ் வெள்ளாளிய மையவாதம் தாங்கள் இழந்தது 50 வாய்ப்பை பற்றி பேச, கிழக்கு மையவாதம் 50 இடங்களில் இழந்ததை மூடிமறைத்து, பிந்தைய தரப்படுத்தலில் மேலதிகமாக கிடைத்த 10 இடங்களை பற்றி பேசுகின்றது. இது தொடர்பான விரிவான தரவுகள், சாட்சியங்கள் தொகுக்கப்பட்டுள்ளது. விரைவில்.

தரப்படுதல் குறித்த எந்த புரிதலுமின்றி "மேதகு" மூலம் பேசுவது, காட்டுவது, ஒட்டுமொத்த மாணவ சமூகத்துக்கே எதிரானது.

முடிவாக

இன்னும் இது போன்ற பல்வேறு திரிபுகள் கொண்ட இந்த "மேதகு" என்ற சினிமா, வரலாற்றைத் திரிக்கின்றது. புலிப் பாசிசத்தை மூடிமறைத்து அதை ஜனநாயக இயக்கமாக, இடதுசாரிய இயக்கமாக கட்டமைத்துக் காட்டுவதன் மூலம், ஒடுக்கப்பட்ட இந்திய தேசிய இனங்களையும் - ஈழத்து ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களையும் மீள முடியாத அடிமைத்தனத்தில் இருக்குமாறு வழிகாட்டுகின்றனர். தனிநபர் பயங்கரவாதத்தை போராட்ட வழிமுறையாக முன்னிறுத்துகின்றனர்.

இதன் மூலம் இனவாத சங்கிகளையும் அவர்களின் வழிபாட்டுவாதத்தையும் முன்னிறுத்தி, பிழைப்புவாதமே நக்கிப் பிழைக்கின்றது.

. நன்றி Tamilcircle.net

2 comments :

Anonymous ,  July 17, 2021 at 8:21 PM  

He was a methagu of mad persons and a great killer of human

Nallainathan Sarveswaramoorthy August 27, 2021 at 10:20 PM  

Everything is fabricated stories suitable for fooling Tamils and future elections propaganda not worried about the national unity,instead inducing the future generations to take revenge

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com