Sunday, July 4, 2021

எந்த பிரபாகரன் கமியூனிசமும் சேகுவரா கதைகளையும் படித்தவர்? ஸ்ரான்லி ராஜன்

இந்த மேதகு என்றொரு கதை வந்தாலும் வந்தது, ஆளாளுக்கு கிளம்பிவிட்டார்கள். அதில் பிரபாகரன் கம்யூனிசம் படிக்கின்றானாம், சேகுவேரா புத்தகமெல்லாம் வாசிக்கின்றானாம். எந்த பிரபாகரன்? 1970களில் கம்யூனிசம் பேசிய புலிகள் வகுப்புக்குள் புகுந்து ஆண்டன் பாலசிங்கம் முன்னிலையில் "இந்த புத்தகமெல்லாம் படிச்சி என்ன கிழிக்க போறியள்? ஒழுங்கா ஆயுதம் கழட்டி மாட்ட படியுங்கோ" என சொன்ன அந்த பிரபாகரன்

கம்யூனிஸ்ட் பத்மநாபாவினை சென்னையில் கொன்றொழித்த அந்த பிரபாகரன் "சேகுவேரா" புத்தகம் படித்தானாம்?

டைரக்டர் கற்பனையில் எதையும் எடுக்கட்டும், ஆனால் அந்த ஆல்பர்ட் துரையப்பா என்பவர் யார்? அவர் சிங்களன் ஜெயவர்த்தேனவுக்கு பெரியப்பாவா? என்ற அளவில் சிலர் கேள்விகளை எழுப்புவதால் நாம் துரையப்பா பற்றி சொல்கின்றோம்.

தமிழகத்தில் முன்பு தேசியவாதியின் பெயர் ஆரிய அடிவருடி இப்பொழுது சங்கி. அப்படி இலங்கையில் முன்பு இலங்கை தேசியவாதிகளின் பெயர் தமிழின விரோதி, துரோகி. அப்படி முத்திரை குத்தபட்ட நபர் யாழ்பாண முன்னாள் மேயர் ஆல்பர்ட் துரையப்பா.

அந்த‌துரையப்பா எனும் தமிழரை கொன்றதிலிருந்து பிரபாகரனின் அட்டகாசம் தொடங்கியது. துரையப்பா செய்த தவறு யாழ்நகரை முன்னேற்ற முயன்றது அதற்காக சிங்களனுடன் சமரசமாக சென்றது. இது துரையப்பாவின் அரசியல் தமிழ் எதிரிகளுக்கு பிடிக்கவில்லை , இளைஞரை தூண்டிவிட்டார்கள், குறிப்பாக உலக தமிழ்மாநாடும் அதில் நடந்த துப்பாக்கி சூடும் விவகாரமானது. அங்கு நடந்த விவகாரம் வேறு, இப்பொழுது சைமன் போல அப்பொழுது ஜெகநாதன் என்றொரு சவுடால் பார்ட்டி இருந்தது, அவர் மேடை ஏற அரசு தடை விதித்திருந்தது .

ஆனால் மிக தந்திரமாக அவரை தமிழர் தரப்பு மேடை ஏற்ற அவர் சைமன் ஸ்டைலில் தொலைச்சு புடுவேன் தொலைச்சி என கத்த, காவல்துறை கைது செய்ய முயல அந்த களபேரத்திலே துப்பாக்கி சூடு நடந்தது. இதை வாய்ப்பாக வைத்து தமிழரே துரையப்பா தமிழ்துரோகி என சொல்ல தொடங்கினர், அக்கால இளைஞரெல்லாம் இந்த தும்பிகளாக நம்பிகொண்டனர். பலர் துரையப்பாவினை கொல்ல தேடினர், பொன் சிவகுமாரன் அதில் முக்கியமானவர் ஆனால் அதற்குள் சயனைடு கடித்து செத்தார். அதன் பின் பிரபாகரன் கும்பல் குறிவைத்தது, அதுவரை பிரபாகரன் கொலை செய்ததில்லை என்பதால் அவரை யாரும் பொருட்படுத்தவில்லை அந்த கிருஷ்ணன் கோவில் முன்பு நிற்பதும் செல்வதுமாக இருந்தார் பிரபாகரன், யாருக்கும் சந்தேகமில்லை.

துரையப்பா அக்கோவிலுக்கு வருவது வழக்கம், அப்பொழுது பாதுகாவல் இல்லாமல் இருப்பதும் வழக்கம். அந்த கோவிலுக்கு துரையப்பா வந்துவிட்டு செல்லும்பொழுதுதான் பிரபாகரனால் சுடபட்டார், அத்தோடு தப்பினான் பிரபாகரன். அதுவும் சும்மா சுடவில்லையாம், கண்ணனை வணங்கிவிட்டு பகவத் கீதையினை மனதில் நினைத்துவிட்டு அர்ஜூனா கொல்வதும் நானே, கொல்லபடுவதும் நானே, உன் கடமை கொல்வது என கீதை காதில் ஒலிக்க சுட்டானாம். அது பிரபாகரனே சொன்னது,

கண்ணன் என்ன பீமனையும், நகுலனையுமா கொல்ல சொன்னான்? துரையப்பா கொல்லபட்டது ஜூலை 27, ஈழபோராட்டத்தில் புலிகளின் முதல் பலி தமிழரே, அதுவும் யாழ்பாண தமிழரே! அதன் பின் தன்னோடு இருந்தவரை எல்லாம் கொல்ல தொடங்கினார் பிரபாகரன்.

தொடக்கத்தில் 10 பேர்தான் புலி, அதில் ஆயுதம் வாங்க தாமதித்த மைக்கேல் என்பவர் ஒரு நிகழ்ச்சிக்கு பட்டு வேட்டியுடன் மகிழ்ச்சியுடன் செல்வதை கண்ட பிரபாகரன் அன்றே அவரை கொன்றார். அவன் எப்படி குடும்பத்தோடு பேசலாம்?

அக்கும்பலில் பற்குணம் என்றொருவரும் உண்டு, முதலில் புலிகள் ஆயுதம் வாங்க தன் தங்கையின் நகைகளை விற்றுகொடுத்தவர், ஆயுத போராட்டத்தோடு முழு மக்களையும் திரட்ட வேண்டும் என அவர் சொன்ன ஆலோசனையின் முடிவு பிரபாகரனால் இரக்கமில்லாமல் கொல்லபட்டார்.

இந்த இருவரையும் கொன்றுவிட்டு, உருதெரியாயமல் அழிக்க சடலத்தோடு சீனி கலந்து எரிக்கும் முறையினை பிரபாகரன் சோதித்து பார்த்து வெற்றியும் பெற்றான், இறுதிவரை புலிகளின் பாணி இது. அக்காலத்தில் இயக்கத்தில் இணைய வரும் போராளிகளுக்கு பிரபாகரன் சொல்லும் நிபந்தனை என்ன? இதுதான்.

“கொல்லுங்கள், அடிக்கடி உங்களை பிடிக்காதவர்களை சுடுங்கள், கொல்லுங்கள் அப்பொழுதுதான் மனம் இறுகி, கொலை பழக்கபட்டு நாமெல்லாம் போராளிகளாக உருமாற முடியும், மனதில் இரக்கம் கொஞ்சமும் கூடாது” ‍ ‍‍‍‍‍‍( இவை எல்லாம் ஒரு தொடக்கால புலி போராளியின் குறிப்பில் இருந்து மேற்சொன்னது எடுத்தது )

கொஞ்சநாளைக்கு முன் ஒரு கன்னட கொள்ளை கூட்ட கதை தண்டபால்யா எனும் படமாக வந்தது, விருதுகளும் பெற்றது கொஞ்சமும் இரக்கமே இல்லா கொள்ளைகூட்ட உண்மை கதை அது, இப்படியும் மனிதர்கள் உண்டா என பொலீஸ் அதிகாரியே மனம் வெறுத்த கும்பல் அது, அதன் அட்டகாச வெறி அப்படி.

புலிகளிளுக்கும், அந்த தண்டபால்யா கும்பலுக்கும் ஒரு வித்தியாசம் கூட காட்ட முடியாது. அப்படி ஈழ தமிழர் விடுதலைக்காக கொல்லபட்ட முதல் தமிழன் துரையப்பா. தமிழரை கொன்று தொடங்கபட்ட போராட்டம் பின் போராளி இயக்கங்கள், அமிர்தலிங்கம், திருச்செல்வம், லட்சுமன் கதிர்காமர் என தமிழரையே கொன்று பின் சில ஆயிரம் தமிழரோடு முள்ளிவாய்க்காலில் முடிந்தது,

மேதகு கதையின் ஒரு பகுதி துரையப்பா கொலையோடு முடிகின்றதாம் நல்லது

அடுத்த கதை எப்படி தொடங்கும் தெரியுமா? இப்படித்தான் பிரபாகரன் 1975ல் யாழ்பாணத்தில் துரையப்பாவினை சுட்டபொழுது இங்கே தமிழகத்தில் சிவகங்கை பக்கம் கிராமத்தில் கருவாட்டை கடித்து கொண்டிருந்த 5 வயது சிறுவனுக்கு அந்த துப்பாக்கி சத்தம் காதில் கேட்டது, "சுடுங்கண்ணா சுடுங்க...துரோகிய சுடுங்க‌" என சிறுவன் கத்தியது அங்கே பிரபாகரனுக்கும் கேட்டது

"சீக்கிரம் நீயும் சுடவோணும், கருவாட்டுக்கு பதில் ஆமைகறி தருவோம் சரியே.." என பிரபாகரன் சொன்னது கடலை கிழித்து அச்சிறுவன் காதை நோக்கி வந்து கொண்டிருந்தது

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com