Sunday, May 30, 2021

நோயாளர்களை றிமோர்ட் கொன்றோலில் கொலை செய்யும் யாழ் வைத்தியசாலை – பீமன் -

உலகை தலைகீழாக பிரட்டிப் போட்டிருக்கின்றது கொவிட்-19. நாடுகள் நடுக்கம் கொள்ள பெருநகரங்கள் முடங்கிக்கிடக்கின்றது. கோவிட் தொற்றாளர்கள் மூச்சிழுப்பதைப்போன்றே பொருளாதாரமும் மூச்சிழுக்கின்றது. இந்த நிலையிலுருந்து மீள்வதற்காக உலகம் தனது முழுப்பலத்தையும் பிரயோகித்து எதிர்பார்த்ததைவிட சீக்கிரமானதோர் மீட்சிக்கு வழிவிட்டுள்ளது என்று நம்பிக்கை கொள்ளலாம். பல்வேறு வகையான தடுப்பூசிகள் வெளிந்துள்ளது.

இந்த இடைவெளிக்குள் உலகளாவிய ரீதியில் இந்த நிமிடம் வரை கொரோணா தொற்றினால் 3,554,016 பேர் உயிரிழந்துள்ளார்கள். இவர்களில் ஆயிரக்கணக்கானோர் நோயாளிகளின் உயிர்களை காப்பதற்காக போராடிய வைத்தியதுறையைச் சேர்தவர்கள். பிரித்தானியாவில் மாத்திரம் 47 வைத்தியர்கள் உயிரிழந்துள்ளார்கள். இவர்கள் புனிதமான உயர்ந்த மனிதர்கள். சேவை செய்ய பிறந்த இறைதூதர்கள், என்றென்றும் மதிப்புக்குரியவர்கள்.

ஆனால் இலங்கையிலும் வைத்தியசேவை இவ்வாறு செயற்படுகின்றதா என்றால் 'ஆம் எங்களுடைய வைத்தியர்கள் அர்ப்பணிப்புடன் நோயாளிகளை காப்பாற்ற செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்' என அடி மனதை தொட்டு கூறிவிடமுடியாத துர்ப்பாக்கிய நிலையில் நிற்கின்றோம்.

எமது வைத்தியசாலைகளில் கடைமையாற்றுகின்ற வைத்தியர்களின் பொறுப்புணர்வற்ற செயற்பாடுகளை உணர்த்தவும் நோயாளிகள் எவ்வாறு ஈவுஇரக்கமின்றி கொலை செய்யப்படுகின்றார்கள் என்பதை உணர்த்தவும் யாழ் வைத்தியசாலையில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றை உதாரணத்திற்கு குறிப்பிடலாம் என நினைக்கின்றேன்.

யாழ்-வடமராட்சி, உடுப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த வயோதிபர் ஒருவர், வயிற்றோட்டம் மற்றும் காச்சல் கரணமாக ஊறணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மூன்று நாட்கள் கடந்தபோதும் காச்சல் தணியாத நிலையில் அவர் மந்திகை வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மந்திகை வைத்தியசாலையில் இருநாட்கள் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. காச்சல் தணியாத காரணத்தினால் அன்ரிஜன் பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். முடிவு பொசிட்டிவ் (ஆம்) என வந்துள்ளது. பிசிஆர் சோதனை மேற்கொண்டுள்ளனர். பிசிஆர் பரிசோதனையின் முடிவு வருவதற்குள் கொரோண தொற்றுக்குள்ளான நோயாளிகளை தனிமைப்படுத்தும் அறைக்கு நோயாளியை மாற்றம் செய்துள்ளனர். மறு நாள் பிசிஆர் முடிவு 'நெகட்டிவ்' (இல்லை) என வந்துள்ளது. நோயாளி சாதாரண வார்ட்டுக்கு மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளார். இரு நாட்களின் பின்னர் பிசிஆர் பிரசோதனை மேற்கொண்டுள்ளனர். முடிவு 'பொசிட்டிவ்' என வந்துள்ளது.

வயிற்றோட்டம் காச்சலுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபருக்கு வயிற்றோட்டம் காச்சலுக்கான உண்மையான காரணம் என்ன என்பதை கண்டறிவதற்கு பதிலாக, வைத்தியதுறையினராலேயே துல்லியமான முடிவு இல்லை என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள அன்ரிஜன் பரிசோதனையை மேற்கொண்டு கொரோணா தனிமைப்படுத்தல் அறையில் அடைத்து இல்லாத கொரோணைவை பரிசளித்துள்ளனர். மனித உடலில் காணப்படும் பெரும்பாண்மையான வியாதிகளுக்கான அறிகுறி வயிற்றோட்டம் காச்சல் என்ற நிலை இருக்கின்றபோதும் இன்று காச்சல் தடிமல் வயிற்றோட்டம் என்றால் கொரோணா மாத்திரம்தான் என முடிவு செய்கின்ற வினைத்திறனற்ற பொறுப்புணர்வற்ற மந்தபுத்தி நிலை வைத்தியசாலைகளில் காணப்படுகின்றது.

நோயாளி மந்திகையிலிருந்து யாழ் வைத்தியசாலையின் கொரோன வார்ட்டுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். குறித்த வார்ட் யாழ் வைத்தியசாலையின் பின்புறமாக உள்ளதுடன் அது கண்ணாடியினால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. விசேடமாக அமைக்கப்பட்ட துவாரங்களுடாக உணவினையும் மாத்திரைகளையும் வழங்குவது மாத்திரமே தாதியர்களின் செயற்பாடாக இருந்துள்ளது. அங்கு 17 நோயாளிகள் இருந்துள்ளனர். அவர்களில் மூவர் சுயமாக உணவையோ மருந்துகளையோ எடுத்து உட்கொள்ள முடியாத வாயோதிபர்கள். மூவரையும் பாராமரிப்பதற்காக அவர்களின் உறவினர்கள் அந்த வார்ட்டில் வந்து தங்கவேண்டும் என வைத்தியசாலை நிர்பந்தித்திருக்கின்றது. குறித்த நோயாளியை பாரமரிப்பதற்காக வைத்தியசாலை செல்வதற்கு நாட்டில் எவரும் இல்லை. அவரது பிள்ளைகள் புலம்பெயர்ந்து வாழ்கின்றனர். மனைவிக்கு 80 வயது. அவர் தனது நிலையை வைத்தியசாலை நிர்வாகத்தினருக்கு தெரிவித்தபோதும் அவர்கள் அந்த உயிரை காப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறித்த வயோதிபரை 9 நாட்கள் பட்டினிபோட்டு கொலைசெய்துள்ளனர்.

யாழ் போதனா வைத்தியசாலையின் கொரோணா வார்ட்டில் காணப்பட்ட 17 நோயாளிகளில் 14 பேர் சுயமாக தங்களது தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளக்கூடியவர்கள். மூவர் பிறரின் உதவியில் தங்கியிருந்தோர். அவர்களில் இருவருக்கு உறவினர்கள் வைத்தியசாலையில் தங்கியிருந்து உதவியுள்ளனர். தனி ஒரு நோயாளியை உணவூட்டி மாத்திரைகள் வழங்கி பராமரிக்க முடியாத உறைந்த கொடுர மனநிலையிலேயே குறித்த வார்ட்டில் பணிபுரிவோர் காணப்பட்டுள்ளனர்.

யாழ் போதனா வைத்தியசாலையில் தாதியர் சேவை என்பது மாத்திரைகளையும் ஊசி மருந்துகளை கொடுப்பது மாத்திரம்தான் என்ற நிலையாகி தசாப்பதங்களாகிவிட்டது. வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நோயாளர்கட்கு உதவிக்கு ஆட்கள் வரவேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாகவுள்ளது. வைத்தியசாலையை சுற்றி தனியார் பராமரிப்பு நிறுவனங்கள் இயங்குகின்றது. நோயாளிகளுடன் வைத்தியசாலையில் நின்று உதவி புரிவதற்கு ஆள்உதவியற்றவர்கள் இந்த நிறுவனங்களிலிருந்து ஆட்களை பெறுகின்றனர். நாளொன்றுக்கு சுமார் 2400 ரூபா அறவிடப்படுகின்றது. தாதியர்கள் மேலதிக நேர கொடுப்பனவுகளுடன் மாதமொன்றுக்கு சுமார் ஒரு லட்சம் ரூபாவினை மக்களின் வரிப்பணத்திலிருந்து சம்பளமாக பெற்றுக்கொள்ள மக்கள் நோயாளிகளாக வைத்திசாலைக்கு சென்றால் அவர்களை பராமரிப்பதற்கு மேலதிகமா நாளொன்றுக்கு சுமார் 2400 ரூபா செலுத்தவேண்டிய துர்பாக்கிய நிலை. இந்த நிதியினை வசதி படைத்ததோர் வழங்கி தங்களை காத்துக்கொள்கின்றனர், ஆனால் இத்தொகையை வழங்கமுடியாத வசதியற்றறோர் அதற்காக தங்களது உயிரினை விலைகொடுக்கவேண்டிய துர்பாக்கியம்.

மேற்படி தனியார் நிறுவனங்களுக்கு தரகர்களாக வைத்தியசாலையில் welfare service எனப்படுகின்ற பிரிவு செயற்படுகின்றது. இப்பிரிவை தொடர்பு கொண்ட குறித்த நோயாளியின் உறவினர்கள் தனியார் நிறுவனங்களிடமிருந்து பராமரிப்பாளர் ஒருவரை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். அக்கோரிக்கைக்கு பதிலளித்த welfare service ல் பிரிவில் கடமைபுரியும் வைத்தியசாலை ஊழியர்: 'நோயாளி கொரோணா தொற்றுக்குள்ளானவராதலால் பாராமரிப்பாளர் நாளொன்றுக்கு 5000 ரூபா வேண்டுகின்றார்' என தெரிவித்துள்ளார். அவர்கள் வேண்டுகின்ற எந்த தொகையையும் கொடுக்கமுடியும் ஒருவரை ஒழுங்கு செய்து தருமாறு கோரியுள்ளனர். மறுநாள் முடிவினை தெரிவிப்பதாக கூறிய அந்த ஊழியரை தொடர்பு கொண்டபோது, பாராமரிப்பாளர் ஒருவர் தயாராக இருப்பதாகவும் நிறுவனங்களிலிருந்து கொரோணா நோயாளிகளை பராமரிப்பதற்கு தங்களது பிரிவின் இயக்குனர் டாக்டர் ஜெயகிருஷ்னா அனுமதி தருகின்றார் இல்லை என தெரிவித்துள்ளார். இங்கு நாம் எழுப்புகின்ற கேள்வி யாதெனில் 'ஒரு நோயாளியை பராமரிப்பதற்கு நபர் ஒருவர் விருப்பு தெரிவித்திருந்தபோது அந்த நபரை அனுமதிக்க முடியாது என மறுப்பதற்கு டாக்டர் ஜெயகிருஷ்ணாவிற்குள்ள அதிகாரம் என்ன' என்பதாகும். ஒருவர் உணவின்றி உயிருக்காக போராடிக்கொண்டிருக்கும்போது எட்டிநின்று வேடிக்கை பார்த்த வைத்தியசாலை நிர்வாகம் உதவிக்கு வந்த நபரையும் அனுமதிக்காது குறித்த நோயாளியை கொலை செய்துள்ளது தெட்டத்தெளிவாகின்றது.

கொரோணா தொற்றுக்காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் உணவை தாமாக உட்கொள்ள முடியாத நோயாளர்கள் வீணாக உயிரிழக்கும் சந்தர்ப்பங்களும் ஏற்படுகின்றன என கிண்ணியா நகரசபையின் உறுப்பினரும், சமூக ஆர்வலருமான எம்.எம். மஹ்தி தெரிவித்துள்ளார்.

கிண்ணியாவிலுள்ள தனது அலுவலகத்தில் வைத்து கடந்த செவ்வாய்யன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு கூறிய அவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்ற நோயாளர்களில் சிலர் தாமாக உணவை உண்பதற்கோ அல்லது தேநீரை தயாரித்து குடிப்பதற்கோ இயலாது பராமரிப்பின்றி சக்தி இழந்து வீணாக உயிர் இழக்கின்ற வாய்ப்புகளும் ஏற்படுகின்றன.

எனவே இவ்வாறான நோயாளர்களை வைத்தியசாலையில் வைத்து சிகிச்சை வழங்குவதை விட முறையான சுகாதார ஆலோசனை வழிகாட்டலின் பிரகாரம் தங்களது வீட்டில் வைத்து பராமரிக்கப் படுவதற்கான சந்தர்ப்பத்தை அல்லது வைத்தியசாலையில் உதவியாளர் ஒருவர் அனுமதிக்கின்ற சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என சுகாதார திணைக்கள அதிகாரிகளிடமும் வைத்தியர்களிடமும் கேட்டுக்கொள்வதாக கேட்டுக் கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.

ஆனால் வடகிழக்கில் வைத்தியத்துறையினரின் ஒழுங்கீனங்கள் தொடர்பாகவும் அங்குவாழும் மக்கள் எதிர்கொள்ளும் அவலங்கள் தொடர்பாகவும் மக்களின் வரிப்பணத்தில் சுகபோக வாழ்வுவாழும் எந்த அரசியல்வாதியும் கண்டு கொண்டதாக இல்லை.

இந்நிலையில் கொழும்பில் தனியார் வைத்தியசாலையில் கடமைபுரியும் பிரபல சத்திர சிகிச்சை நிபுணர் ஒருவரை தொடர்பு கொண்டு நிலைமை தொடர்பாக உரையாடினேன். அவரிடமிருந்து வந்த வார்த்தைகள்: ' இங்கே டொக்டர்மார் ஒடி ஒழிக்கின்றார்கள். கொரோணா வாட்டுக்களை அமைத்து அதற்காக வைத்தியர்களை நியமித்திருந்தாலும் இவர்கள் எவரும் வார்ட் பக்கம் செல்வதில்லை. தொலைவிலிருந்து வாட்டிலுள்ள ஒரு சில தாதிகளிடம் தொலைபேசியிலேயே நோயாளிகளின் நிலைமைகள் தொடர்பில் கேட்டறிந்து கொள்கின்றார்கள். முன்னணியில் நின்று தலைமைதாங்கவேண்டிய வைத்தியர்கள் இவ்வாறு ஒழிக்கும்போது தாதியர்கள் நோயாளிகளுக்கு கிட்ட நெருங்குவார்கள் என எவ்வாறு எதிர்பார்க்கமுடியும். எழுந்து நடமாடி மருந்தை , உணவை உட்கொள்ளக்கூடிய தொற்றாளர்கள் 10-14 நாட்களில் மீண்டுவருவார்கள். இயலாதவர்களின் நிலைமை அவ்வளவுதான். இதுதான் இங்கு நிலைமை' என்று முடித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com