Wednesday, February 3, 2021

மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு அடங்க மறுக்கும் மக்கள்! ஓசை எழுப்பி போராட்டம்!

மியன்மாரில் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட அந்நாட்டு ஜனாதிபதி Aung San Suu Kyi , பிரபல அரசியல்வாதிகள் மற்றும் அரசிற்கு ஆதரவான முக்கிய அரச அதிகாரிகளை இராணுவத்தினர் கடந்த 01.02.2021 அதிகாலை இரண்டு மணியிலிருந்து நான்கு மணிக்குட்பட்ட இரு மணிநேரத்தில் கைது செய்தனர்.

தொடர்ந்து அமைச்சரவையை கையேற்ற இராணுவ ஆட்சியாளர்கள் அமைச்சரவையை மாற்றியமைத்ததுடன் அவ்விடங்களுக்கு இராணுவத்தினரை நியமித்தனர்.

உள்நாட்டு தொலைக்காட்சி மற்றும் வானொலிகளை இடைநிறுத்தி வைத்து ஆட்சியாளர்கள் சிறைப்பிடிக்கப்பட்டு நிறுப்பட்ட இராணுவ ஆட்சியை தொடர்வதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், மக்கள் இராணுவ ஆட்சியை எதிர்ப்பதுடன் அவ்வாட்சிக்கு அடங்க மறுத்து வருகின்றனர்.

அரச தலைவர் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்படும் காட்சி

மக்கள் தங்களது அடங்க மறுத்தலை வெளிக்காட்டுமுகமாக வித்தியாசமான முறையில் அஹிம்சைப்போராட்டத்தை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளனர். இன்று பிற்பகல் 8 மணியிலிருந்து அனைவரும் தங்கள் வீடுகளிலிருந்தவாறு அரை மணிநேரத்திற்கு (30 நிமிடங்கள்) மணிகளை குலுக்கி தகரங்களில் அடித்து பாரிய ஒலியைக் கிளப்பி வருகின்றனர். இதனால் பிற்பகல் 8 மணியிலிருந்து முழு மியன்மாரும் ஓசையால் அதிர்கின்றது.

அடங்க மறுக்கும் மக்கள் வீடுகளிலிருந்து ஒலி எழுப்பும் வீடியோ

வீட்டிலிருந்து எதிர்ப்பினை மக்கள் தெரிவிக்கும் அதேநேரம் அரசியல் செயற்பாட்டாளர்கள் , வியாபாரிகள் மற்றும் பொது அமைப்புக்கள் வீதியில் இறங்கி போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

அடங்க மறுக்கும் மக்கள் விதியில் ஒலி எழுப்பும் வீடியோ

இவ் அடங்கமறுக்கும் போராட்டமானது கைது செய்யப்பட்டுள்ள தங்களது தலைவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டு ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்திடம் இராணுவம் ஆட்சியை கையளிக்கும் வரை தொடர்வது என மக்கள் உறுதி பூண்டுள்ளனர்.

இதுவரை சுமார் 400 பேர் அளவில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாக உள்ளுர்தகவல்கள் தெரிவிக்கின்றது. இவர்களில் பல எழுத்தாளர்களும் ஊடகவிலளார்களும் அடங்குகின்றனர். சிலர் தொடர்பான தகவல்கள் தெரியவரவில்லை என்றும் காணாமல் போயுள்ளதாகவும் மக்கள் அஞ்சுகின்றனர். அவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்களில் ஜனநாயகத்துக்கான அரசியலில் இணைந்து கொண்ட முன்னாள் பாசாலை அதிபரும் பாராளுமன்ற உறுப்பினரும் அடங்குவதாக தெரியவருகின்றது.

ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட அரசானது 2 மாதங்களில் இராணுவ ஆட்சியாளர்களால் கவிழ்க்கப்பட்டுள்ளது. நடைபெற்று முடிந்த தேர்தலில் என்எல்டி பெற்றுக்கொள்ளக்கூடிய 75 விழுக்காடு ஆசனங்களில் 86 விழுக்காடு ஆசனங்களை பெற்றிருந்தது.

மியன்மார் அரசியல் யாப்பின் பிரகாரம் அரசினால் இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகளை நியமிக்கவோ பதவி நிலைகளில் மாற்றம் செய்யவோ முடியாது. அரசியல் யாப்பில் மாற்றம் கொண்டுவருவதானால் 76 விழுக்காடு உறுப்பினர்களின் இணக்கம் தேவைப்படும். ஆனால் பாராளுமன்றுக்கு 25 விழுக்காடு இராணுவத்தினர் தேர்தல் இன்றி தெரிவாவர். அவ்வாறாயின் இராணுவத்தின் உதவியின்றி அவர்களின் சிறப்புரிமைகளை பறிக்கவோ அரசியல்யாப்பில் மாற்றம் கொண்டுவரவோ முடியாது.

கைதுகளை தொடர்ந்து மியன்மாரின் பெருநகரங்கள் எங்கும் இராணுவ கவச வாகனங்கள் மற்றும் தொடரணிகள் செல்வதை இங்கு காணலாம்.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com