Wednesday, January 13, 2021

வேண்டாம் இந்தக் கல்லறை. விஜய பாஸ்கரன்

1977 பொதுத் தேர்தலின் பின் உள்ளூராட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டது. இதில் யாழ் நகர மாநகர மேயராக ராசா விசுவநாதன் வந்தார். அவர் பதவிக்கு வந்தபின் யாழ் நவீனசந்தையில் துரையப்பாவால் திறக்கப்பட்ட நினைவுக்கல் இரவோடு இரவாக அகற்றப்பட்டது.

இந்த கீழ்த்தரமான செயலை வீரச் செயலாகவும் நகைச் சுவையாகவும் ஊடகங்களும் பொதுமக்களும் வரவேற்றனர். இன்றைய முள்ளி வாய்க்கால் நினைவு சின்னம் அகற்றப்பட்டதற்காக பாதை அன்றே போடப்பட்டது.

செல்வநாயகம் இறந்தபின் அவரது நினைவாக தூபி எழுப்பப்பட்டது. இதைப் பார்த்த ஐ.தே.க அமைச்சர் லட்சக் கணக்கான ரூபா செலவில் நிறுவப்பட்ட இந்த தூபிக்கு பதிலாக மக்களுக்குப் பயன்பட வேறு ஏதாவது செல்வநாயகத்தின் பெயரால் செய்திருக்கலாம் என கூறினார்.

இன்று முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் மீண்டும் எழுப்பப்படுகிறது. அந்த நினைவுச் சின்னத்துக்கும் பல்கலைக் கழகத்துக்கும் என்ன சம்பந்தம்? அத்தனை ஆயிரம் மக்களை வன்னியில் மக்களைப் பலிக்கடாக்கள் ஆக்கியதற்கு புலிகளோடு பல்கலைக் கழகத்துக்கும் சம்பந்தம் உண்டு என்ற காரணமா? அல்லது தமிழர்கள் அடிவாங்கியே செத்த வரலாறு அழியக்கூடாது என்ற காரணமா? இல்லை புலிகளும் பிரபாகரனும் முழந்தாளிட்டு இலங்கை அரசிடம் சரணைடைந்த கதைகளை நினைவு படுத்தவா?

எதற்காக ?

இந்த மாதிரி எல்லாம் யாழ் பல்கலைக் கழக மாணவர்களுக்கோ தமிழர்களுக்கோ யோசிக்கத் தெரியாது. தென்னிலங்கை பல்கலைக் கழகங்களில் ஜே.வி. பி நினைவுச் சின்னங்கள் இருக்கின்றன. அதற்கு நியாயமான காரணங்கள் உண்டு. அந்த அமைப்பு அங்கேதான் வளர்ந்தது. பல்கலைக்கழக மாணவர்களே அதிகம் போராடி மடிந்தார்கள். அது வரலாறு. ஆனால் முள்ளி வாய்க்காலில் செத்த மக்களுக்கும் யாழ் பல்கலைக் கழகத்துக்கும் என்ன சம்பந்தம்?

இந்த நினைவுச் சின்னம் இறந்துபோன மக்களை அடையாளப்படுத்தவில்லை. இறந்து போன புலிகளை வைத்து அரசியல் வியாபாரம் செய்ய நிறுவப்பட்ட சந்தை என்றே சொல்லவேண்டும்.

இங்கே நிறுவப்பட வேண்டியது புலிகளின் அராஜகத்திற்கு பலியான மட்டக்களப்பைச் சேர்ந்த விஜிதரன் நினைவுச் சின்னம். புலிகளுக்குப் பலியான பேராசிரியர் ராஜினி திராணகம அவர்களின் நினைவுச் சின்னம். ஆனால் மாறாக யார் பல்கலைக் கழகத்தை சீரழித்தார்களோ அவர்களின் நினைவாக முள்ளி வாய்க்கால் என்ற பெயரால் புலிகளின் நினைவு சின்னம் எழுப்புவது தவறானது.

முள்ளி வாய்க்காலில் புலிகளின் பிடியில் இருந்த லட்சக் கணக்கான மக்களை ஒரே நாளில் இலங்கை இராணுவம் மீட்டது. தப்பி ஓடிய மக்கள்மீது புலிகள் துப்பாக்கிகளால் சுட்டனர். இது நாங்களே கண் கண்ட காட்சி சாட்சி. அங்கே இறந்த மக்கள் புலிகளால் தமது பாதிகாப்புக்காக பலிக்கடாக்கள் ஆக்கப்பட்டே இறந்தார்கள்.

அங்கே அரசபடைகள் தவறுவிட்டதும் உண்மை. ஆனால் பெரும்பான்மையான மக்கள் படைகளால் காப்பாற்றப்பட்டனர். இன்று எந்த இழப்பும் யாருக்கும் இல்லை. இந்த முள்ளிவாய்க்கால் சின்னத்தை மீள நிறுவுவதன் மூலம் பிரச்சினை உருவாக்கப்படுகிறது. இது யாழ் பல்கலைக் கழகத்துக்கு நல்லதல்ல. இந்தக் கல்லறை வருங்காலத்தில் பல மாணவர்களை கல்லறைக்கு அனுப்பலாம்.

1 comments :

Nallainathan Sarveswaramoorthy January 20, 2021 at 1:47 PM  

LTTE leader’s wife was killed In Mulliwaikal and she was a student of jaffna university when she was kidnapped by ltte , may be remembered her

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com