Tuesday, January 12, 2021

நான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டு சம்பவங்கள் - ஒரு நேரடி அனுபவம். மணியம்..

யாழ்ப்பாணத்தில 1974 ஜனவரியில் நடைபெற்ற நான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாளான ஜனவரி 10 ஆம் திகதி நடைபெற்ற அசம்பாவிதங்கள் எப்படி தமிழ் தேசியவாத அரசியல்வாதிகள் தமிழ் மக்களைத் தவறான பாதையில் திட்டமிட்டு வழி நடத்துகிறார்கள் என்பதற்கான உதாரணங்களில் ஒன்றாகும். அந்த நேரத்தில் இந்த சம்பவங்களை நேரில் கண்டவன் என்ற வகையில் எனது அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்வதே இப்பதிவின் நோக்கம்.

இதற்கு முதல் நடைபெற்ற மூன்று தமிழராய்ச்சி மாநாடுகளும் அந்தந்த நாட்டு அரசாங்கங்களின் உதவியுடனேயே நடந்தது. எனவே இலங்கையிலும் அந்த மாநாட்டை தலைநகர் கொழும்பில் அரச ஆதரவுடன் நடத்தலாம் என்றும், அதற்கான மண்டப மற்றும் வசதிகளை அரசாங்கம் செய்து தரும் என்றும் தமிழாராய்ச்சி மன்றத்தின் இலங்கைக் குழுவிடம் சொல்லப்பட்டது. ஆனால் அது ஏற்கப்படவில்லை.

அதற்குக் காரணம் 1970 பொதுத் தேர்தலில் தோற்றுப்போன அ.அமிர்தலிங்கம் போன்ற தமிழரசுக் கட்சி அரசியல்வாதிகளுக்கு இந்த மாநாட்டைப் பயன்படுத்தி மக்களை உசுப்பேத்தும் வேறு திட்டங்கள் இருந்தன. எனவே மாநாட்டை யாழ்ப்பாணத்தில்தான் நடத்துவது எனப் பிடிவாதமாக நின்று அவ்வாறே நடத்தினர். அதனால் தமிழாராய்ச்சி மன்ற கிளையில் இருந்த சிலரும், பல சிறந்த கல்விமான்களும் மாநாட்டு நிகழ்ச்சிகளில் இருந்து ஒதுங்கிக் கொண்டனர்.

யாழ்ப்பாணத்தில் மாநாடு நடத்துவதானால் யாழ் பொது நூலகத்துக்கு அருகில் உள்ள திறந்த வெளியரங்கைத் தந்து உதவுவதாக யாழ் மாநகர முதல்வராக இருந்த அல்பிரட் துரையப்பா அறிவித்தார். அதுவும் ஏற்கப்படவில்லை. முதல்வர் என்ற வகையில் அவருக்கு மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்படவும் இல்லை. ஆய்வு மாநாடு யாழ் மத்திய கல்லூரிக்கு அருகில் இருந்த றிம்மர் மண்டபத்தில் ஆரம்பமாகி நடந்து வந்தது. இலங்கையைச் சேர்ந்தவர்களுடன் வெளிநாடுகளில் இருந்து வந்த சிலரும் மாநாட்டில் கலந்து கொண்டனர்.

மாநாடு தொடங்குவதற்கு முதல்நாள் யாழ் நகரப் பகுதிகளில் மாநாட்டுக்கு எதிராக கையால் எழுதப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. றிம்மர் மண்டபச் சுவரில் ஒட்டப்பட்டிருந்த ஒரு சுவரொட்டியில் “இந்த மண்டபத்தில் அமெரிக்க சி.ஐ.ஏ., சோவியத் கே.ஜி.பி., மேற்கு ஜெர்மன் ஈபேர்ட் பவுண்டேசன், இந்தியாவின் றோ போன்ற உளவு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கூடியிருக்கிறார்கள்” என எழுதப்பட்டிருந்தது. ஆனால் அசம்பாவிதம் எதுவுமின்றி மாநாடு அமைதியாக நடந்து வந்தது. பொதுமக்களைப் பொறுத்தவரை இந்த மாநாட்டில் அவர்கள் அதிகம் ஆர்வம் செலுத்தவில்லை.

ஆனால் மாநாடு முடிவடைவதற்கு இரண்டு நாட்கள் இருக்கையில் யாழ் நகரமெங்கும் வாழை மரங்கள், தென்னை மரங்கள், கமுக மரங்கள், மாவிலை தோரணங்களாலும், அலங்கார விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டன. ஆங்காங்கே சிகரங்களும் அமைக்கப்பட்டன. இவற்றைப் பார்வையிட கிராமப்புறங்களில் இருந்தெல்லாம் மக்கள் வந்து கூடத்தொடங்கினர். எங்கு பாரத்தாலும் சனக்கூட்டம். மக்கள் ஒரு களியாட்டத்துக்கு வந்த மனநிலையில் நகரைச் சுற்றிச் சுற்றி வந்தனர். நகரில் உள்ள உணவு விடுதிகளில் ஒரு தேநீர் பெறுவதே சிரமமாகிப்போனது.

ஜனவரி 10 ஆம் திகதி இறுதிநாள் நிகழ்ச்சிகளை வீரசிங்கம் மண்டபத்தில் நடத்துவதற்கு ஏற்பாடாகி இருந்தது. வெளிநாட்டுப் பிரதிநிதிகளைப் பார்க்கும் ஆர்வத்தில் மக்கள் அங்கும் கூடத் தொடங்கினர். மண்டபத்துக்கு வெளியே முற்றவெளியிலும் பெருந்தொகை மக்கள் காணப்பட்டனர்.

நானும் சில தோழர்களும் எமது கிளிநொச்சி மக்கள் கலாச்சாரப் பேரவை வெளியிட்டு வந்த ‘களனி’ என்ற கலை இலக்கிய சஞ்சிகையை (1974 தை – பங்குனி இதழ்) அங்கு வந்திருந்த மக்களுக்கு விற்பனை செய்வதற்காக எடுத்துச் சென்றிருந்தோம். அந்த இதழில் ‘தமிழாராய்ச்சி மாநாடு பின்னணியும் பின்நோக்கும்’ என்ற தலைப்பில் பேராசிரியர் க.கைலாசபதி ‘வாமனன்’ என்ற புனைபெயரில் எழுதிய கட்டுரையொன்று வந்திருந்தது. ஆனால் சனக்கூட்டத்துக்குள் நுழைய முடியாமல் இருந்ததால் எமது விற்பனை முயற்சி கைகூடவில்லை.

இந்த நிலைமையில் வீரசிங்கம் மண்டபத்தின் உள்ளே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி வெளியே மண்டபத்தின் முன்பகுதிக்கு மாற்றப்பட்டது. மேடையைச் சுற்றியும் அதன் முன்னால் உள்ள வீதியிலும் மக்கள் திரண்டு நின்றனர். அந்த நேரம் போக்குவரத்து பொலிஸ் இன்ஸ்பெக்டர் சேனாதிராசா ஒரு மோட்டார் சைக்கிளில் அவ்விடத்துக்கு வந்து வீதியைத் தடை செய்யாமல் விலகி இருக்கும்படி பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார். அவரது மோட்டார் சைக்கிளை சிறிது தூரம் உள்ளே வரவிட்ட கூட்டத்தினர் பின்னர் அவரை முன்னே செல்லவோ பின்னே செல்லவோ முடியாதபடி அடைத்துக்கொண்டனர். அவர் வேறு வழியின்றி மோட்டார் சைக்கிளை அந்த இடத்திலேயே நிறுத்திவிட்டு நடந்து பொலிஸ் நிலையத்தை நோக்கிச் சென்றார். கூட்டம் அவரைக கிண்டலும் கேலியும் செய்து கூச்சலிட்டது.

ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்கப் போகின்றது என உணர்ந்த நாம் அவ்விடத்தை விட்டு அகலத் தீர்மானித்தோம். அப்பொழுது நான் பிரதான வீதியில் சின்னக்கடைக்கு அருகாமையில் இருந்த பேதுருப்பிள்ளை பேக்கரியின் மேல்மாடி அறையொன்றில் தங்கியிருந்ததால், போகும் வழியில் இரண்டாம் குறுக்குத் தெருவில் இருந்த ‘ஜனதா ஹோட்டல்’ சாப்பாட்டுக் கடைக்கு இரவு உணவு அருந்தச் சென்றேன்.

அந்தக் கடைக்கு அடுத்ததாக இருந்த ஒரு வீட்டில்தான் தமிழரசுக் கட்சியின் அலுவலகம் இயங்கி வந்தது. நான் அதைக் கடந்த பொழுது வீட்டின் நடு மண்டபத்தில் அ.அமிர்தலிங்கமும் இந்தியாவிலிருந்து படகில் சட்டவிரோதமாக வந்திருந்த உலகத் தமிழ் இளைஞர் பேரவையின் தலைவர் இரா.ஜனார்த்தனமும் உரையாடிக் கொண்டிருந்தனர். அமிர்தலிங்கத்தின் மனைவி மங்கையர்க்கரசி வாசல் கதவில் நின்றபடி வீதியைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

நான் உணவு அருந்திவிட்டு எனது அறைக்குச் சென்ற சிறிது நேரத்தில் வீரசிங்கம் மண்டபம் பக்கத்திலிருந்து சில துப்பாக்கி வெடிச்சத்தங்கள் கேட்டன. அதைத் தொடர்ந்து கும்பல் ஒன்று பிரதான வீதியால் ஓடி வருவதை மேல்மாடியில் நின்று பார்த்தோம். அவர்கள் வரும்போது வீதியின் அருகே நடப்பட்டிருந்த தென்னை மரங்களை வீழ்த்தி வீதிக்குத் தடைபோட்ட வண்ணம் வந்தனர். அந்தக் கும்பல் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்ப்பாண அமைப்பாளர் அல்பிரட் துரையாப்பா மூன்றாம் குறுக்குத் தெரு சந்தியில் வைத்திருந்த கட்சிக் காரியாலயத்தின் கதவுகளை உடைத்து அங்கிருந்த தளபாடங்களையும் ஆவணங்களையும் எடுத்து வந்து நடு வீதியில் போட்டுத் தீயிட்டுக் கொளுத்தினர். அதன் பின்னர் பொலிசார் வீதிகள் எங்கும் ரோந்து வரத் தொடங்கினர்.

மறுநாள் காலையில் முற்றவெளிப்பக்கம் சென்று பார்த்தேன். முற்றவெளியில் கைவிடப்பட்ட நிலையில் பல சைக்கிள்களும் காலணிகளும் கிடந்தன. அருகிலிருந்த றீகல் தியேட்டருக்கு அருகில் மின்சார வயர்கள் அறுந்து தொங்கின. பொலிசார் கூட்டத்தைக் கலைக்க வானத்தை நோக்கிச் சுட்டபொழுது அந்த மின்சார வயர்கள் அறுந்து பொதுமக்கள் மீது மின்சாரம் பாய்ந்ததால் அவர்களில் சிலர் இறந்ததாக அறிந்தேன். அருகே இருந்த புல்லுக்குளத்தில் பொலிசார் ஒருவரின் தொப்பி ஒன்று மிதந்து கொண்டிருந்தது.

நான் இரண்டாம் குறுக்குத் தெருவில் உள்ள தமிழரசுக் கட்சி காரியாலயத்தில் பார்த்த அமிர்தலிங்கம், இரா.ஜனார்ததனம் ஆகியோர் வீரசிங்கம் மண்டபத்துக்கு அருகே சென்று அங்கே ஜனார்த்தனம் மேடையில் ஏறி பொதுமக்களை ஆவேசப்படுத்தும் உரையை நிகழ்த்தியதாகவும், அங்கே வந்த பொலிசார் கூட்டத்தை நிறுத்தும்படி கோரியபொழுது அதை நிறுத்தாததால் பொலிசார் வானத்தை நோக்கிச் சுட்டதாகவும் சம்பவ இடத்தில் நின்ற சிலரின் மூலம் அறிந்து கொண்டேன்.

ஆனால் இன்று வரையும் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டிலேயே அந்த அப்பாவிப் பொதுமக்கள் இறந்ததாகச் சொல்லப்பட்டு வருகிறது. அத்துடன் அப்படிப் பொலிசார் சுட்டதற்கு அல்பிரட் துரையப்பாதான் காரணம் என்றும், எனவே அவர் ஒரு “துரோகி” என்றும் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. அந்தப் பிரச்சாரப் புயலில் அமிர்தலிங்கம் போன்றவர்களின் பதவி வெறி அடித்துச் செல்லப்பட்டுவிட்டது. துரையப்பா மீதான தமிழரசுக் கட்சியினரின் ‘துரோகி’ என்ற முத்திரை குத்தலே பின்னர் பிரபாகன் குழுவினர் அவரது உயிரைப் பறிப்பதற்குக் காணரமாய் அமைந்தது.

அன்றைய நிகழ்வில் இறந்தவர்களுக்கு யாழ் முற்றவெளியில் நினைவுத்தூபி ஒன்று அமைக்கப்பட்டு வருடாவருடம் நினைவு கூரப்பட்டு வருகிறது. ஆனால் இவர்களைத் தவிர வேறு இரண்டு பேரும் இந்த மாநாட்டு நிகழ்ச்சிகளின் போது உயிரிழந்தனர். அவர்கள் யாழ் ஆஸ்பத்திரிக்கு முன்னால் அலங்கார ஊர்தி ஒன்றைக் கொண்டு வந்தபோது வீதியிலிருந்த மின்சாரக்கம்ப வயரிலிருந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்கள்.

எது எப்படியிருந்தாலும், அரசியல்வாதிகளின் அதிகாரப்பசி காரணமாகப் பலியான இந்த அப்பாவிப் பொதுமக்களை அஞ்சலிப்போமாக!

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com