Tuesday, August 4, 2020

த.தே.கூ வின் தேர்தல் விஞ்ஞாபனம் ஜனாதிபதி இராஜபக்ஷவுடன் ஏகாதிபத்திய-ஆதரவு உடன்படிக்கையை தயாரிக்கிறது.

By Saman Gunadasa

இலங்கை தமிழ் முதலாளித்துவக் கட்சிகளின் கூட்டணியான தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஆகஸ்ட் 5 தேர்தலுக்காக வெளியிட்டுள்ள விஞ்ஞாபனத்தில், ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷவுடன் "அரசியல் தீர்வுக்காக பேச்சுவார்த்தை நடத்துதல்" என்ற போர்வையின் கீழ் அவருக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதைக் சமிக்ஞை செய்கின்றது. அதே சமயம், சமீபத்திய வர்க்கப் போராட்டங்களில் ஒன்றிணைந்த தமிழ், முஸ்லீம் மற்றும் சிங்கள தொழிலாளர்களைப் பிளவுபடுத்தவும் தமிழ் தேசியவாதத்தை இழிந்த முறையில் ஊக்குவித்து வருகிறது.

"தமிழ் சமூகத்தை ஒரு அர்த்தமுள்ள வகையில் பிரதிநிதித்துவப்படுத்த" அடுத்த பாராளுமன்றத்தில் குறைந்தபட்சம் 20 ஆசணங்கள் தேவை என்று வாக்காளர்களுக்கு தமிழ்த் கூட்டமைப்பு வலியுறுத்துகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், வெகுஜன எதிர்ப்பை எதிர்கொண்டுள்ள தமிழ் கூட்டமைப்பு, கொழும்புடனான பேச்சுவார்த்தையில் தனது நிலையை வலுப்படுத்திக்கொள்ள தீவிரமாக முயல்கிறது.

இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலை அமைப்பு (டெலோ) மற்றும் தமிழீழ மக்கள் விடுதலை அமைப்பு (புளொட்) உள்ளடக்கியதே தமிழ் கூட்டமைப்பு ஆகும். இந்த கூட்டமைப்பு அதன் ஏகாதிபத்திய-சார்பு மற்றும் தொழிலாள வர்க்க-விரோத வகிபாகம் காரணமாக தமிழ் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் மத்தியில் முற்றிலும் மதிப்பிழந்து போயுள்ளது.

இந்த நெருக்கடியின் காரணமாக அது பிளவுகளால் சிதைந்து போயுள்ளது. ஈழம் மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (இ.பி.ஆர்.எல்.எஃப்.) 2017 இல் கூட்டமைப்பில் இருந்து விலகியது. 2018 இல், வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூட்டமைப்பை விட்டு வெளியேறி, தமிழ் உழைக்கும் மக்களுக்கு எதிராக மற்றொரு அரசியல் பொறியை அமைத்தார். அது தமிழ் மக்கள் கூட்டணி (த.ம.கூ.) ஆகும். விக்னேஸ்வரனை ஆதரிப்பதற்காக டெலோவின் ஒரு பிரிவு கட்சியில் இருந்து பிரிந்தது. இருப்பினும் இந்த கட்சிகளுக்கு இடையே அடிப்படை அரசியல் வேறுபாடுகள் எதுவும் கிடையாது.

தமிழ்த் கூட்டமைப்பின் அமெரிக்க-சார்பு, தொழிலாள வர்க்க-விரோத பண்பு 2015 இல் இருந்து அப்பட்டமாக நிரூபிக்கப்பட்டு வந்துள்ளது. அந்த ஆண்டில், கொழும்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வெளியேற்றி அவருக்கு பதிலாக மைத்திரிபால சிறிசேனவை நியமித்த அமெரிக்க-திட்டமிட்ட ஆட்சி மாற்ற நடவடிக்கைக்கு கூட்டமைப்பு நேரடியாக ஆதரவளித்தது. தமிழ் கூட்டமைப்பின் முன்னணி உறுப்பினரான எம்.ஏ. சுமந்திரன், சிறிசேனவைத் தேர்ந்தெடுப்பதை ஆதரித்ததை பற்றி பகிரங்கமாக பெருமை பேசினார்.

ஒபாமா நிர்வாகம் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான ராஜபக்ஷவின் ஈவிரக்கமற்ற இனவாதப் போரை ஆதரித்த போதிலும், பெய்ஜிங்குடனான அவரது நெருங்கிய உறவை எதிர்த்தது. மூலோபாய ரீதியாக அமைந்துள்ள தீவான இலங்கையை, சீனாவிற்கு எதிரான அமெரிக்க இராணுவ தயாரிப்புகளில் ஒருங்கிணைக்கவே குறித்த ஆட்சி மாற்ற நடவடிக்கை திட்டமிடப்பட்டது.

ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, 2019 நவம்பர் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி இராஜபக்ஷ வெற்றி பெறும் வரை, தமிழ்த் கூட்டமைப்பு ஏறத்தாழ கொழும்பு ஆட்சியின் பங்காளியாகவே செயல்பட்டது. அது கொழும்பு அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மையை அப்படியே பாதுகாப்பதற்காக அமெரிக்கா மற்றும் இந்தியாவின் ஆலோசனையைப் பின்பற்றியது. அது அரசாங்கத்தின் இரக்கமற்ற சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனத் திட்டத்தையும், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்பு உள்ளிட்ட ஒவ்வொரு ஜனநாயக-விரோத நடவடிக்கைகளையும் முழுமையாக ஆதரித்தது.

கொழும்பில் அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களுடன் தமிழ் உயரடுக்கிற்கு ஒரு "அரசியல் தீர்வை" அடைவதற்காக தமிழ் கூட்டமைப்பு முன்னெடுத்த பல்வேறு கடந்தகால முயற்சிகளைக் குறிப்பிட்ட பின்னர், “ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமஷ்டிக் கொள்கைகளை உள்ளடக்கிய அரசியலமைப்பு ஏற்பாட்டின் மூலம் மட்டுமே இலங்கைத் தமிழர்கள் மற்றும் தீவின் வடக்கு-கிழக்குப் பகுதிகளில் வசிக்கும் ஏனைய தமிழ்பேசும் மக்களின் நியாயமான அபிலாசைகளை பூர்த்தி செய்ய முடியும்,” என அந்த விஞ்ஞாபனம் கூறுகிறது.

ஒரு அரசியல் தீர்வுக்காக, "அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் ஓர் சமஷ்டி கட்டமைப்பை நோக்கி நகர்ந்துள்ளமை தென்படுகின்றது" என்றும் அந்த விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டுள்ளது. கடந்த காலத்தைப் போலவே, “எதிர்காலத்தில் வரவிருக்கும் எவ்வித சவால்களையும் பொருட்படுத்தாது நாங்கள் இம் முயற்சிகளை தொடர்ந்தும் முன்னெடுப்போம்” என தமிழ் கூட்டமைப்பு மேலும் கூறுகின்றது.

"அரசியல் தீர்வு" என்ற சூத்திரம், கொழும்புடன் தமிழ் கட்சிகளால் ஏற்படுத்திக்கொள்ளப்படும் வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் முதலாளித்துவத்திற்கான ஒரு "அதிகாரப் பகிர்வு" ஏற்பாட்டைக் குறிக்கிறது. சிங்கள உயரடுக்கினருடன் தொழிலாள வர்க்கத்தை கூட்டாக சுரண்டுவதன் மூலம் அவர்கள் தங்கள் நலன்களை முன்னேற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர். இத்தகைய அதிகாரப் பகிர்வுக்கும் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்துவற்கும் அவர்களின் சமூகப் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கும் இடையில் எந்த தொடர்பும் கிடையாது.

தமிழரசுக் கட்சியும் ஏனைய கட்சிகளும் 1956 முதல் நடத்திவந்த இதுபோன்ற "பேச்சுவார்த்தைகள்" மற்றும் ஒப்பந்தங்கள், அடுத்தடுத்து பேரழிவிற்கே வழிவகுத்து வந்துள்ளன. இந்த வரலாறு, உலக சோசலிச வலைத் தள கட்டுரையில் சுருக்கமாக சுருக்கப்பட்டுள்ளது: “தமிழ் தேசிய கூட்டமைப்பு இலங்கை ஜனாதிபதியின் எதேச்சதிகார ஆட்சிக்கு ஆதரவளிக்கிறது.”

இராஜபக்ஷ இராணுவத்தை அடிப்படையாகக் கொண்ட ஜனாதிபதி சர்வாதிகாரத்தை நோக்கி விரைவான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்பதை நன்கு அறிந்தும் தமிழ் கூட்டமைப்பு இப்போது அவருடன் பேச்சுவார்த்தைகளுக்கு தயாராகி வருகிறது. பெரும் வர்த்தகப் பிரிவுகள் ராஜபக்ஷவின் எதேச்சதிகாரத்திற்கான முயற்சியை ஆதரிப்பதற்கு காரணம், அவர் ஒரு "வலுவான மற்றும் நிலையான" ஆட்சிக்கு வாக்குறுதியளித்திருப்பதே ஆகும் -அதாவது, சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள சிக்கன நடவடிக்கைகளால் வாழ்க்கை மற்றும் சமூக நிலைமைகள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களுக்கு விரோதமாக வளர்ச்சி கண்டுவரும் தொழிலாள வர்க்க எதிர்ப்பை நசுக்குவதற்காக, ஒரு சர்வாதிகார ஆட்சியா ஸ்தாபிப்பதாகும. வர்க்கப் போராட்டங்களின் சர்வதேச எழுச்சியின் ஒரு பகுதியாக, 2018 முதல் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்களின் ஐக்கியப்பட்ட எதிர்ப்பும் மற்றும் வேலைநிறுத்தங்களும் தலைதூக்கி வருகின்றன.

ஒவ்வொரு நாட்டிலும் போலவே, உலகளாவிய தொற்றுநோய் தமிழ் ஆளும் உயரடுக்கு உட்பட இலங்கை முதலாளித்துவ வர்க்கம் எதிர்கொள்ளும் பொருளாதார, அரசியல் மற்றும் சமூக நெருக்கடியை தீவிரப்படுத்தியுள்ளது. வேலைகள், ஊதியங்கள் மற்றும் தொழில் நிலைமைகள் மற்றும் வாழ்க்கை நிலைமைகளை வெட்டித்தள்ளுவதற்கு எதிராக தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் மத்தியில் சீற்றம் அதிகரித்துக் காணப்படுகிறது. இந்த அபிவிருத்தியடைந்து வரும் தொழிலாள வர்க்க எதிர்ப்பின் ஒரு அறிகுறியாக, பத்தாயிரம் கொழும்பு துறைமுகத் தொழிலாளர்கள் கடந்த வாரம் மூன்று நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

தமிழ் முதலாளித்துவ உயரடுக்கு, கொழும்பு போலவே, தொழிலாளர்களின் போர்க்குணத்தை கண்டு பீதியடைந்துள்ளது. கொவிட்-19 இலங்கை உட்பட உலகம் முழுவதும் பரவிவரும் நிலையில், தமிழ் கூட்டமைப்பானது தெற்கில் உள்ள ஏனைய ஸ்தாபனக் கட்சிகளுடன் சேர்ந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூட்டிய இரண்டு அனைத்து கட்சி கூட்டங்களில் பங்கேற்று, தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான ஜனாதிபதியின் முயற்சிகளுக்கு ஆதரவளித்தது.

ஏப்ரல் 27 அன்று, தமிழ் கூட்டமைப்பும் ஏனைய எதிர்க் கட்சிகளும் ஜனாதிபதிக்கு ஒரு வேண்டுகோளை அனுப்பி, கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு கேட்டுக் கொண்டதுடன், அவருக்கு “எந்த நிபந்தனையும் இன்றி ஆதரவளிப்பதாக” அறிவித்தன. மே 4 அன்று, தமிழ்த் கூட்டமைப்பு தலைவர்கள், பிரதமரை ரகசியமாக சந்தித்து அரசாங்கத்திற்கு கட்சியின் ஆதரவை உறுதியளித்தனர். இதன் மூலம் தொழிலாள வர்க்கத்தை நசுக்குவதற்கு ஜனாதிபதி சர்வாதிகாரத்தை ஆதரிக்க தமது விருப்பத்தை வெளிப்படுத்தினர்.

“வடக்கு மற்றும் கிழக்கிற்கு சுயநிர்ணய உரிமையை பெருவதற்கான தமிழ் மக்களின் அபிலாஷையை” நிறைவேற்றுவது பற்றிய தமிழ் கூட்டமைப்பின் வாய்ச்சவடால், தமிழ் பேசும் தொழிலாளர்களையும் ஏழைகளையும் தேசியவாதத்தைக் கொண்டு ஏமாற்றுவதற்கு மட்டுமே உதவுகிறது. இத்தகைய சொற்கள் தமிழ் தொழிலாளர்களை தெற்கில் உள்ள அவர்களது வர்க்க சகோதர சகோதரிகளிடமிருந்து பிரிப்பதற்காக கணக்கிடப்பட்டதாகும். இது, ஆளும் கட்சி, அதன் பேரினவாத கூட்டாளிகள் மற்றும் முதலாளித்துவ எதிர்க்கட்சிகளினதும் தமிழர்-விரோத மற்றும் முஸ்லிம்-விரோத பேரினவாத பிரச்சாரத்தின் மறுபக்கமாகும்.

"கடந்த முப்பது ஆண்டுகளில் அடுத்தடுத்த அரசாங்கங்கள் ஒரு அரசியல் தீர்வை நோக்கி நகர்ந்துள்ளன" என்று தமிழ் கூட்டமைப்பு கூறுவது அப்பட்டமான பொய்யாகும். இலங்கையில் வர்க்கப் போராட்டத்தின் வரலாறு லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தர புரட்சிக் கோட்பாட்டை முழுமையாக நிரூபிக்கின்றது. இலங்கை போன்ற முதலாளித்துவ அபிவிருத்தி தாமதமான நாடுகளில், முதலாளித்துவத்தாலும் அதன் கட்சிகளாலும் ஜனநாயகப் பிரச்சினைகளைத் தீர்க்கவோ, அடிப்படை ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்தவோ அல்லது ஏகாதிபத்தியத்தால் சுரண்டிக்கொள்ளப்பட்ட இன மற்றும் குறுங்குழுவாத பிளவுகளை அகற்றவோ முடியாது.

1983-2009 தமிழர்-விரோத உள்நாட்டுப் போரின்போது, இதுபோன்ற பேச்சுவார்த்தைகள் அடுத்த தாக்குதலுக்கான நேரத்தை பெறுவதற்கு கொழும்பு மேற்கொண்ட முயற்சிகளாக இருந்தனவே தவிர வேறில்லை. 1994 இல் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், புலிகளுடன் நடத்தப்பட்டு வந்த பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்பட்டு, 1995 இல் ஒரு புதிய தாக்குதல் தொடங்கியது. 2002 இல், "பயங்கரவாதத்திற்கு எதிரான போரின்" அச்சுறுத்தலைப் பயன்படுத்தி வாஷிங்டன் மற்றும் பிற ஏகாதிபத்திய சக்திகளின் ஆதரவுடன் நடத்தப்பட்டு வந்த சமாதனப் பேச்சுவார்த்தைகள் குமரதுங்கவினதும் இலங்கை இராணுவத்தினதும் எதிர்ப்பின் காரணமாக முறிந்து போயின.

இந்த சுருக்கமான காலத்திற்குப் பின்னர், 2009 இல், மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் பல்லாயிரக்கணக்கான தமிழ் பொதுமக்களை படுகொலை செய்து புலி போராளிகளை நிராயுதபாணிகளாக்கி யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தது.

தமிழ் கூட்டமைப்பின் விஞ்ஞாபனத்தில் “வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவமயமாக்கல்” குறித்து ஒரு பிரிவு உள்ளது. இது "“மக்களின் சுதந்திரம் மற்றும் உரிமைகளில் முறைசாராத, சட்ட முறைக்கப்பாற்பட்ட மற்றும் தன்னிச்சையான இராணுவ அடக்குமுறைகளை கொண்டுவந்ததன் மூலம் தமிழ் பேசும் மக்களின் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது,” எனக் கூறுகிறது. அது “இராணுவம் கலைக்கப்பட வேண்டும்” என அழைப்பு விடுக்கின்றது.

இருப்பினும், இது ஒரு போலி அழைப்பு ஆகும். வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்பை தமிழ்த் கூட்டமைப்பு ஆதரித்துள்ளதுடன், இந்த இரண்டு மாகாணங்களிலிருந்தும் இராணுவத்தை வெளியேற்றக் கோரவில்லை.

"மே 2009 அன்று, முப்பது ஆண்டுகால யுத்தம் முடிவடைந்தபோது, பேரழிவிற்குள்ளான வடகிழக்கில் அளவிட முடியாத இழப்பு மற்றும் அதிர்ச்சியை அனுபவித்த மக்களே எஞ்சியிருந்தனர்,” என விஞ்ஞாபனம் அறிவிக்கிறது. ஈவிரக்கமற்ற தாக்குதல், பொது மக்கள் படுகொலை மற்றும் இலட்சக்கணக்கான மக்களின் இடம்பெயர்வு குறித்து ஒரு கணக்கெடுப்பை அது கொடுக்கிறது.

"நீதி மற்றும் பொறுப்புக்கூறல், உண்மை, இழப்பீடு, நினைவுகூருதல் (இறந்தவர்களை நினைவுகூருதல்), கருத்துச் சுதந்திரம், பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்தல்", இடம்பெயர்ந்த மற்றும் போர் விதவைகளின் உரிமைகளை காத்தல் போன்றவற்றுக்கு தமிழ்த் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இவை சம்பிரதாய கோரிக்கைகள் ஆகும். சிறிசேன அரசாங்கத்தின் எதேச்சதிகாரக் கொள்கைகளுக்கு தமிழ் கூட்டமைப்பு வழங்கிய ஆதரவு இந்த கோரிக்கைகளின் வெற்றுத்தன்மையை வெளிக்காட்டுகின்றன. தமிழ் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் உரிமைகளைப் பாதுகாப்பவராக பாசாங்குத்தனமாக காட்டிக்கொள்ள தமிழ்த் கூட்டமைப்பு தீவிரமாக முயல்கிறது.

இந்த கோரிக்கைகளை தமிழ் மக்கள் அவமதிப்புடன் பார்ப்பார்கள். 2009 மே மாதம் இரத்தக்களரி யுத்தம் முடிவடைந்த பின்னர், போர்க்குற்றங்களை மூடிமறைப்பதற்கு தமிழ் கூட்டமைப்பு வேலை செய்தது. அதன் தலைவர் ஆர். சம்பந்தன் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துடன் 18 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியதாக பெருமை பேசினார். இந்த போலி பேச்சுவார்த்தைகள் போரினால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள், ஏழைகள் மற்றும் இளைஞர்களின் நியாயமான கோரிக்கைகளை அடக்குவதை நோக்கமாகக் கொண்டதாகும்.

அதே சமயம், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் (யு.என்.எச்.ஆர்.சி.) போர்க்குற்ற விசாரணைகளை கோரும் தீர்மானங்களுக்கு அணுசரனை அளித்து, அமெரிக்கா இலங்கை மீது முன்னெடுத்த பாசாங்குத்தனமான பிரச்சாரத்துடன் தமிழ்த் கூட்டமைப்பு அணிவகுத்தது. இந்த தீர்மானங்கள், பெய்ஜிங்கிலிருந்து விலகிச் செல்ல மஹிந்த ராஜபக்ஷவை நெருக்குவதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டன.

2015 செப்டம்பரில் யு.என்.எச்.ஆர்.சி. இல் முன்வைக்கப்பட்ட இலங்கை குறித்த அமெரிக்க வரைவுத் தீர்மானத்தை உருவாக்க, தமிழ் கூட்டமைப்பு தலைவர்கள் சிறிசேன-விக்ரமசிங்க அரசாங்கத்துடன் ஒத்துழைத்தனர். இது இராணுவமும் சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்தின் முன்னணி உறுப்பினர்கள் உட்பட, அடுத்தடுத்த இலங்கை அரசாங்கங்களால் உள்நாட்டுப் போரில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் அட்டூழியங்களை மூடிமறைக்கும் ஒரு இழிந்த முயற்சியாகும்.

எவ்வாறாயினும், அதே நேரம், போரின் போது காணாமல் போன பல்லாயிரக்கணக்கான நபர்களைப் பற்றிய தகவல்களைக் கோரி தமிழ் தாய்மார்கள் மற்றும் ஆதரவாளர்கள் முன்னெடுத்து வரும் பிரச்சாரத்தை தமிழ்த் கூட்டமைப்பு புறக்கணித்தது.

தமிழ் கூட்டமைப்பு விஞ்ஞாபனம், “சர்வதேச சமூகத்தின் பங்கு” என்ற ஒரு பகுதியுடன் முடிவடைகிறது. "தமிழ் கூட்டமைப்பு ஒரு சுயாதீனமான சர்வதேச பொறிமுறைக்காகவும்" "சர்வதேச சமூகத்தின்" ஈடுபாட்டிற்காகவும் தொடர்ந்தும் கவனம்செலுத்தும் என்று உறுதியளிக்கிறது.

"சர்வதேச சமூகத்துடன்" கலந்துரையாடுவதற்கான ஒரு "சர்வதேச பொறிமுறை" எனப்படுவது, தமிழ் கூட்டமைப்பு மூடிய கதவுகளுக்குள் வாஷிங்டனுடன் மேற்கொள்ளும் கொடுக்கல் வாங்கல்களை குறிக்கும் சங்கேத வார்த்தைகளாகும்.

ஒட்டுமொத்தமாக தமிழ் முதலாளித்துவம், கொழும்பில் அதன் சகதரப்பைப் போலவே, உற்பத்தியின் பூகோளமயமாக்கல் மற்றும் 1991 இல் சோவியத் ஒன்றியத்தை ஸ்ராலினிச ஆட்சி கலைத்தது முதலான காலகட்டம் முழுதும் வலதுபுறம் நகர்ந்துள்ளது. அவை ஏகாதிபத்திய சக்திகளுக்கு பின்னால், குறிப்பாக வாஷிங்டனுக்கு பின்னால் அணிதிரண்டுள்ளன.

தனி என்ற அதன் போலியான தேசியவாத முன்னோக்குடன், தீவின் வடக்கு மற்றும் கிழக்கிற்கு ஒரு தமிழ் அரசை உருவாக்குவதற்கு புலிகள் வாஷிங்டனின் ஆதரவை கோரினர். தமிழ் முதலாளித்துவத்தின் ஒவ்வொரு கன்னையையும் போலவே, 1948 சுதந்திரத்தில் இருந்து இலங்கை உயரடுக்கின் இனவெறி கொள்கைகளுக்கு எதிராக இலங்கை, தெற்காசியா மற்றும் சர்வதேச அளவில் உள்ள தொழிலாள வர்க்கத்திடம் ஒரு சர்வதேச வேண்டுகோளை விடுப்பதற்கு புலிகள் கடும் விரோதமாக இருந்தனர். இந்த இனவாதம் தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தவும் கழுத்தை நெரிக்கவும் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு நச்சு ஆயுதம் ஆகும்.

புலிகளின் தோல்வி ஒரு இராணுவ தோல்வி மட்டுமன்றி, ஏகாதிபத்தியத்துடன் அணிசேர்வதை அடிப்படையாகக் கொண்ட அதன் பிரிவினைவாத முன்னோக்கின் திவால்தன்மையைம் விளக்குவதாக இருக்கிறது.

இப்போது, வாஷிங்டன் சீனாவுக்கு எதிரான போரைத் தயாரிக்கும்போது, அமெரிக்க புவிசார் அரசியல் நலன்களுடன் தமிழ் முதலாளித்துவம் அணிவகுத்துள்ளது. ஜனாதிபதி ராஜபக்ஷவை ஆதரிப்பதற்கான தமிழ்த் கூட்டமைப்பின் தயார்நிலை, இந்த பிற்போக்கு அரசியலின் ஒருங்கிணைந்த பகுதியாகும்.

முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு சோசலிச போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை ஒன்றிணைப்பதற்கான அதன் மைய நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இந்த தமிழ் முதலாளித்துவக் கட்சிகளின் திருப்பங்கள் மற்றும் மாற்றங்களுக்கு எதிராகப் போராடுவதில் சோசலிச சமத்துவக் கட்சிக்கு (சோ.ச.க.) ஒரு இடைவிடாத பல தசாப்த கால சரித்திரம் உள்ளது. சோ.ச.க. தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான அனைத்து விதமான பாரபட்சங்களையும், இனவாத யுத்தத்தையும் எதிர்த்ததுடன், வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்றவும் கோருகின்றது. எவ்வாறாயினும், பிற்போக்கு சிங்கள முதலாளித்துவத்தைப் போலவே, தொழிலாளர்களை மற்றும் உழைக்கும் வெகுஜனங்களை ஒடுக்குவதன் பேரில் ஏகாதிபத்தியத்தின் ஏஜன்டுகளாக சேவையாற்றுவதற்கு தமிழ் முதலாளித்துவம் தனது தயார் நிலையை காட்டிவருகின்றது.

சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லீம் தொழிலாளர்கள் சர்வதேச தொழிலாள வர்க்கத்துடன் ஐக்கியப்பட்டு நடத்தும் ஒரு கூட்டுப் போராட்டத்தால், கொழும்பில் ஏகாதிபத்திய சார்பு முதலாளித்துவ ஆட்சியை தூக்கிவீசுவதன் மூலம் மட்டுமே, ஜனநாயக உரிமைகள் மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும். அது, தெற்காசியா மற்றும் சர்வதேச அளவில் சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக, ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசை ஸ்தாபிப்பதற்கான போராட்டம் ஆகும். இந்த புரட்சிகர சோசலிச முன்னோக்கிற்காக போராடும் ஒரே கட்சி சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே.

உலக சோசலிஸ வலைத்தளத்திலிருந்து

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com