Thursday, July 30, 2020

றிசார்ட் பதுயுதீன் வில்பத்து பிரதேசத்தில் தமிழ் சிங்கள மக்களை மதம்மாற்றுகின்றார். செலஸ் ரீன்

தமிழ் மக்களின் இனவிருத்தி குறைந்து செல்கின்றது.
தமிழ் தேசிய அரசியல்வியாபாரிகள் மக்களை கடந்த 70 வருடங்களாக ஏமாற்றி வருகின்றனர்.
அல்பிரட் துரையப்பாவின் பாதையில் பயணிப்பதையிட்டு மனமகிழ்சி கொள்கின்றேன்
துரோகி என்பது அனைவருக்கும் பொதுவான பட்டமாகிவிட்டது. அதற்கு நான் அஞ்சவில்லை.


முன்னாள் அமைச்சரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான றிசார்ட் பதுயுதீன் தமிழ் சிங்கள மக்களை வில்பத்து பிரதேசத்தில் மதமாற்றி வருவதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட வேட்பாளர் செலஸ் ரீன் குற்றஞ்சுமத்துகின்றார்.

எமது இணையத்தளத்திற்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை தெரிவித்தார். பேட்டி கண்டவர் பீமன்.


பீமன் : உங்களைப் பற்றி சிறிது சொல்லுங்கள்?


செலஸ் ரீன் : என்னுடைய பெயர் ஸ்ரனிஸ்லாஸ் செலஸ்ரீன் நான் யாழ்ப்பாணம் பாஷையூர் என்ற கரையோர கிராமத்தில் பிறந்தேன். ஆரம்ப கல்வியை சென் யோசப் வித்தியாலத்தில் பெற்றுக்கொண்டேன். 1995ம் ஆண்டு இடப்பெயர்வின் பின்னர் கிளிநொச்சி ஜெயபுரத்தில் அமைந்துள்ள கிளிநொச்சி பூநகரி மகா வித்தியாலத்தில் சாதாரண தரம்வரை கற்றேன். உயர் தரத்தினை யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியில் வணிகத்துறையில் கற்று கொழும்பு பல்கழைக்கழகத்திற்கு தெரிவானேன். கொழும்பு பல்கழைக்கழக பட்டதாரியாகி அதன் பின்னர் அப்பட்டத்துடன் UNHCR, Norwegian Refugee Council (NRC) ) போன்ற சர்வதேச நிறுவனங்களுடன் ஓர் மனிதாபிமான பணியாளராக கிழக்கு மாகாணத்தில் பணியாற்றி யுத்த காலத்தில் மக்கள் அடைந்த துன்பங்களையும் வேதனைகளையும் கொடுமைகளையும் இழப்புக்களையும் நேரடியாக பார்த்து அவர்களின் வலி உணர்ந்து செயற்பட்டேன்.

ஜக்கியமக்கள் தமிழ் சட்டப்பேரவை (UTLAC) என்ற சட்ட நிறுவனத்தை எனது சொந்த செலவில் நடாத்தி குறிப்பிடத்தக்க சட்ட உதவிகளையும் வழங்கி வருகின்றேன்.

பீமன்: தங்களுடைய அரசியல் பிரவேசம் சம்மந்தமாக கூறுங்கள்?

செலஸ் ரீன்: 2015ம் ஆண்டு வரை தமிழ்தேசிய மாயையில் சிக்குண்டு த.தே.கூ வின் ஆதரவாளராகத்தான் இருந்தேன். ஆனால் தமிழ்தேசிய கூட்டமைப்பு மக்களினுடைய பிரச்சனைகள் எதனையும் தீர்க்காது தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, யுத்தகுற்ற விசாரணை, காணாமல் போனோருக்கான நியாயம் என்ற வார்த்தை ஜாலங்களால் மக்களினுடைய உணர்ச்சிகளை தூண்டி வாக்கு பெற்று விட்டு பாராளுமன்றம் சென்று மக்களை நட்டாற்றில் விட்டுவிட்டு தாங்கள் சுகபோகங்களை அனுபவிக்கின்றார்கள் என்பதை உணர்ந்ததுடன் சுதாகரித்துக்கொண்டேன்.

முஸ்லீம் அரசியல்வாதிகள் தேசியம் , தாயகம் என்ற போலிக்கோஷங்களை விடுத்து ஆட்சியிலுள்ளவர்களுடன் இணைந்து தமது சமூகத்திற்கு தங்களது சக்திக்கு மேலதிகமாகவே செய்துள்ளார்கள். ஆகையால் தொடர்ந்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் தமிழ் மக்கள் ஏமாற்றப்படுவதை அனுமதிக்க முடியாது என்ற அடிப்படையில் எனது சிங்கள நண்பர்கள் சிறீலங்கா பொதுஜன பிரமுக கட்சியில் இணையுமாறு கோரியதற்கு அமைவாக 2018ம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்திலிருந்து நான் சிறீலங்கா பொதுஜன பிரமுக கட்சியின் அங்கத்தவராக இருக்கின்றேன்.

பீமன் : நீங்கள் தற்போது பொதுஜன ஜக்கிய பிரமுகவுடன் இணைந்திருக்கின்றீர்கள். ஆனால் இலங்கையிலுள்ள தேசியக்கட்சிகளுடன் இணைந்த எம்மவர்கள் பலர் துரோகிகளாக முத்திரை குத்தப்பட்ட வரலாறு உண்டு. எனவே நீங்கள் ஒரு துரோக அரசியலை தேர்ந்தெடுத்திருப்பதாக உணரவில்லையா?

செலஸ் ரீன் : 1940 ஆண்டிலிருந்து ஜி. ஜி. பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் காங்கிரஸ் தமிழ் மக்களுக்கு துரோகமிழைத்து வந்திருக்கின்றது. இலங்கையில் வாழ்ந்த இந்திய வம்சாவளி மக்களை நாடாற்றவர்களாக்கி சில இலட்சம் மக்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவதற்கு துணைநின்று தமிழ் மக்களுக்கு ஜி.ஜி.பொன்னம்பலம் புரிந்த முதலாவது துரோத்தினை வரலாறு என்றும் மறக்காது.

அக்கட்சியிலிருந்து பிரிந்து சென்ற செல்வநாயகம் உட்பட சிலபேர் சேர்ந்து தாங்கள் பாராளுமன்றம் செல்வதற்காக வட்டுக்கோட்டையில் ஓர் தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். அத்தீர்மானத்தினூடாக எமக்கு வாக்களித்தால் வடகிழக்கை தாயகமாக கொண்ட தனிநாட்டை உருவாக்குவோம் என்ற நயவஞ்சக வாக்குறுதியை வழங்கி இலகுவாக பாராளுமன்று சென்றுவிட்டார்கள்.

இவர்களுடைய வார்த்தைகளை நம்பி இளைஞர்கள் பல ஆயுதக்குழுக்களை உருவாக்கினார்கள். அவ்வாயுதக்குழுக்கள் பலவும் அழிக்கப்பட்டு இறுதியில் விடுதலைப்புலிகள் இயக்கம் மிகப்பெரிய இயக்கமாக மாறியது. அவர்கள்கூட 2009ம் ஆண்டு இதே தமிழ் தேசிய அரசியல்வாதிகளின் துரோகத்தனத்தாலும் உதயன் பத்திரிக்கை போன்ற பத்திரிக்கைகளாலும் அழிக்கப்பட்டனர். சர்வதேச ஒழுங்குகள் என்ன? என்ன மாற்றங்கள நிகழ்கிறது? இந்த வழியால் சென்றால் என்ன அழிவு வரும் என்ற விடயங்களை சரியான வழியில் கூறாமல் பொய்க்கு மேல் பொய்களைக்கூறி தமிழ் பத்திரிக்கைகளும் தமிழரசுக்கட்சியும் மக்களுக்கு துரோகம் செய்தது.

வட்டுக்கோட்டை தீர்மானத்தையொட்டி உருவான ஆயுதப்போராட்டம் என்ற சதிவலையில் பாமர மக்கள், படித்த மற்றும் படிக்காத இளைஞர்கள் என பலரும்; சிக்கினார்கள் ஆனால் தந்தை செல்வநாயகத்தினதோ அன்றில் ஏனைய தலைவர்கள் எவரினதோ பிள்ளைகள் இணைந்து கொள்ளவில்லை. இது தழிரசுக்கட்சி செய்த இரண்டாவது துரோகமாகும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அத்தனை பாராளுமன்ற உறுப்பினர்களும் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது இந்தியா, சுவிஸ், நோர்வே என ஓடித் தப்பிவிட்டார்கள். மக்கள் கொன்றொழிக்கப்பட்டார்கள். சம்பந்தன் வாய் திறக்கவில்லை. இது தமிழ்தேசியக் கூட்டமைப்பு செய்த மூன்றாவது துரோகம்.

எனவே தமிழ் தேசியம் பேசிக்கொண்டிருக்கும் அரசியல்வாதிகளே துரோகிகள் நான் அல்ல.

பீமன் : உங்கள் அரசியல் பிரவேசத்தின் நோக்கம்தான் என்ன?

செலஸ் ரீன் : தமிழ் தேசியக் கூட்டமைப்பு மத்திக்கும் மாநிலத்துக்குமான முட்டுக்கட்டையாகவுள்ளது. தமிழ் மக்களுக்கு பெரும்பாண்மை சமூகத்தை சேர்ந்த நண்பர்கள் உதவ எத்தனிக்கின்றபோது அவர்கள் , தமிழ் தேசிய அரசியல்வாதிகளால் தடுக்கப்படுகின்றார்கள். அதன் பிரகாரம் அந்த நண்பர்கள் புதிய இளம் தலைமுறையினர் தமிழ் மக்கள் மத்தியிலிருந்து அரசியல் அங்கீகாரம் பெறவேண்டுமென்று எதிர்பார்கின்றார்கள். எனவே தமிழ் தேசியத்தடையை உடைத்து மக்களுக்கு சரியான பாதையை காட்ட அரசியலில் நுழைந்துள்ளேன்.

பீமன் : தமிழ் தேசியம் பேசும் அரசியல்வாதிகளின் குறைபாடுகள் தொடர்பில் பட்டியலிடுகின்றீர்கள். இருந்தாலும் தேசிய அரசியலில் இணைந்து செயற்பட்ட அல்பிறட் துரையப்பா போன்றோரை தமிழ் மக்கள் இன்றுவரை துரோகியாக காண்கின்றார்கள். அவ்வாறுதான் அவர்களுக்கு கற்பிக்கப்பட்டுள்ளது என்றும் எடுத்துக்கொள்ளலாம். அந்தவரிசையில் தங்களுக்கும் துரோகி முத்திரை குத்தப்படலாம் அல்லவா?

செலஸ் ரீன் : தற்போது துரோகி என்பது அனைவருக்கும் பொதுவான பட்டம்போல் ஆகிவிட்டது. சுமந்திரன் துரோகி, கருணா துரோகி, சம்மந்தன் துரோகி, டக்ளஸ் துரோகி, நான் துரோகி, நீங்கள் துரோகி எல்லோரும் துரோகி. அப்படியானால் யார்தான் துரோகி இல்லை? அந்த துரோகி என்ற வார்த்தைக்கு பயந்து மக்கள் பணி செய்வதை நிறுத்திவிடுமளவுக்கு நான் கோழை அல்ல. இந்த அரசியல் பயணத்தில் இறங்கும்பொழுது இவ்வாறான குற்றச்சாட்டுக்கள், வார்த்தை பிரயோகங்கள் பாவிக்கப்படும் என்பது எனக்கு நன்றாகத்தெரியும்.

ஆனால் நான் இங்கு கற்றுக்கொண்ட விடயம் யாதெனில் அல்பிரட் துரையப்பா காலத்தில்தான் யாழ் நகரம் வளர்ச்சியடைந்துள்ளது. அதனுடைய சாட்சியாக அல்பிரட் துரையப்பா விளையாட்டு மைதானம் இன்றும் கம்பீரமாக உள்ளது. எனவே அவர் துரோகிப்பட்டத்தை பற்றி கவலை கொள்ளவில்லை, அவர் பாதையில் பயணிப்பதையிட்டு மனமகிழ்சி கொள்கின்றேன்.

பீமன் : மக்களுக்கு சேவை செய்வதற்கு தங்கள் வசமுள்ள திட்டங்கள் யாது?

செலஸ் ரீன் : வட்டுக்கோட்டை தீர்மானம் என்ற முட்டாள்தனமான தீர்மானம் 1976ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டபோது மிகப்பாரிய உத்வேகத்துடன் ஆயுதக்குழுக்கள் உருவாக்கப்பட்டது. அக்காலகட்டத்தில் இலங்கை பூராவுமுள்ள அரச பதவிகளை யாழ் தமிழர்களே அலங்கரித்துக்கொண்டிருந்தார்கள். அத்துடன் யாழ்ப்பாணத்தினுடைய கல்வி வளர்ச்சி, கல்வி தராதரம் மிகவும் உயரத்தில் இருந்தது. யாழ்ப்பாணத்தில் ஆங்கிலம் பேசக்கூடியவர்கள் மிக அதிகமாக காணப்பட்டார்கள். அனைத்து அரச நிறுவனங்களிலும் அவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது. 1980ம் ஆண்டு காலப்பகுதியில் கல்வியிலும் விளையாட்டிலும் நாங்கள் சிறந்திருந்தோம். விவசாயத்தில் தன்னிறைவு அடைந்திருந்தோம். கடற்தொழிலில் நாங்கள் கொழும்புக்கு ஏரளமான தொன்கணக்கான கடல் உணவுகளை ஏற்றுமதி செய்து கொண்டிருந்தோம். சர்வதேச நாடுகளுடன் அந்த நேரத்தில் சரியான உறவில் இருந்தோம். யாழ்ப்பாணத் தமிழர்கள் என்றால் ஒரு மரியாதை இருந்தது. இந்த 30 வருட யுத்தத்தின் பின்னர் நாங்கள் இருந்த நிலையில் இருந்து பல மடங்கு கீழே இறங்கி விட்டோம்.

1980 ம் ஆண்டு காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களுடைய விகிதாசாரம் 75 விகிதத்திற்கு அதிகமாகவும் சிங்கள மற்றும் முஸ்லிம்களின் விகிதாசாரம் 25 இற்கு குறைவாகவும் காணப்பட்டது. தற்போது கிழக்கில் தமிழர்களின் விகிதாசாரம் வெறும் 40 ஆக குறைந்துள்ளது. இன்றைய யாழ்பாண சனத்தொகையை 1980ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 30 லட்சம் இருக்கவேண்டும். ஆனால் தற்போது வெறும் 7 லட்சமாகவுள்ளது. எனவே நாம் அன்று வடகிழக்கு எமது தாயகம் என்றதில் நியாயம் ஒன்று இருந்தது.

ஆனால் இன்று நிலைமை வேறு. எமக்குள்ள பிரச்சினைகள் வேறு. அவற்றுக்கு தீர்வினை தேடவேண்டும். எமது சனத்தொகை வளர்ச்சி விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். குறிப்பாக றிசார்ட் பதுயுதீன் என்ற பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய மோசமான அரசியல்வாதி வில்பத்து காடுகளை அழித்து அங்கு சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களை இஸ்லாத்திற்கு மதமாற்றியுள்ளார். இதனால்தான் நாம் மேலும் சிறுபாண்மையாகிக்கொண்டிருக்கின்றோம்.

இவ்விடத்தில் நாம் அறிவாயுதத்தை பயன்படுத்தவேண்டும். மாற்றுவழியைத் தேடவேண்டும். சிங்கள அரசியல்வாதிகள் தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு சேவை செய்யவே தமக்கு நேரம் போதாது என்கின்றனர். எனவே தமிழ் மக்கள் தமக்கு சேவை செய்யக்கூடிய அரசியல்வாதிகளை தெரிவு செய்யவேண்டுமென்கின்றனர். என்போன்ற இளைஞர்கள் மக்கள் ஆணையை பெற்று மக்களுக்கு சேவையை மேற்கொள்ள முன்வரவேண்டுமென்கின்றனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு , விக்னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றோரை பாராளுமன்று அனுப்பினால் வெறுமனே எதிர்கட்சியிலமர்ந்திருந்து தொடர்ந்தும் சுயநிர்ணய உரிமைக்கோஷத்தை முன்வைத்து காலத்தை கடத்துவர். சுயநிர்ணய உரிமை என்றால் நாட்டை பிரித்து தனிநாடு உருவாக்குவதற்கான உரிமை. அது அரசியலமைப்புக்கு விரோமானது. அந்த உரிமையை சிங்களவர்கள் உலகம் அழிந்தாலும் கொடுக்க மாட்டார்கள். முட்டாள் தனமான கருத்துக்களை இந்த தமிழ்தேசியவாதிகள் கூறிக்கொண்டுள்ளார்கள்.

வடக்கு கிழக்கை இணைக்க வேண்டுமென்கின்றனர். அந்த இணைப்பு நிரந்தரமாக பிரிக்கப்பட்டு விட்டது. அதனை இணைக்க முடியாது. அத்தீர்ப்பில் எழுதப்பட்டுள்ள விடயத்தை உங்களை போன்ற ஊடவியலாளர்கள் மக்களுக்கு எடுத்துச் சொல்கின்றீர்கள் இல்லை. ஆகையால் நாம் நடைமுறைச்சாத்தியமான வழியில் எமது விடயங்களை அணுக வேண்டும்.

கல்வி, விளையாட்டு, சுற்றுலாத்துறை, விவசாயம் வேளாண்மை, கடற்தொழில், கட்டட நிர்மாணத்துறை, கைத்தொழில், சிறுகைத்தொழில் இவ்வாறான சகல துறைகளையும் நாங்கள் மேம்படுத்த வேண்டும். அதற்கு அரச அதிகாரம் தேவைப்படுகின்றது. அதனை பெற்றுக்கொள்வதற்காகவே நாம் தேர்தலில் போட்டியிடுகின்றோம். மக்களுடைய ஆணையுடன் நிச்சயம் நாங்கள் பாராளுமன்றம் சென்று மக்களுக்கு சேவை செய்வோம் என எனக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை உண்டு.

பீமன் : பொதுஜன பிரமுக என்ற கட்சியை தலைமையாக கொண்ட கூட்டில்தான் நீங்கள் அங்கம் வகிக்கின்றீர்கள். ஜனாதிபதி கோத்தபாய மீதுள்ள தங்களின் நம்பிக்கை யாது?

செலஸ் ரீன் : இவருடைய அடுத்த நான்கு வருட ஆட்சியில் நாம் மிகப்பெரும் அபிவிருத்தி யுகத்தை எதிர்கொள்ளப் போகிறோம். அந்த அபிவிருத்தி யுகம் வடக்குக்கும் வரவேண்டுமென்றால் நாமும் அரசில் பங்காளிகளாக மாறவேண்டும். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மக்கள் பிரதிநிதிகள் என்ற பொறுப்புணர்வை மறந்து பிச்சைக்காரன் சிரங்கை சொறிவதுபோல் சொறிந்து கொண்டிருக்கின்றனர். இது மக்களின் வயிற்றிலடிக்கும் செயலாகும். கோத்தபாய அவர்களின் ஆட்சியில் அடுத்த நான்கு வருடங்கள் அபிவிருத்தி யுகம் ஜந்தாவது வருடம் அரசியல் தீர்வை சட்டத்திருத்தத்தின் ஊடாக கொண்டு வருவதற்கு நாங்கள் முயற்சி செய்வோம்.

பீமன் : நீங்கள் சட்ட உதவி அமைப்பொன்றை இயக்கி வருவதாக ஆரம்பத்தில் கூறியிருந்தீர்கள். இந்த அமைப்பு எவ்வாறு செயற்படுகின்றது? இதனுடாக நீங்கள் மக்களுக்கு வழங்கி வருகின்ற சேவைகள் என்ன என்பது பற்றி குறிப்பிட முடியுமா?

செலஸ் ரீன் : நான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளராகவிருந்தபோது, வடகிழக்கு மக்களுக்கு சட்ட உதவியை வழங்கும்பொருட்டு குறித்த அமைப்பை உருவாக்கியிருந்தேன். இதன்நோக்கம் சட்ட ஆதரவு அற்ற எம் மக்களுக்கு இலவச சட்ட உதவியை வழங்குவதாகும். ஆனால் இத்திட்டத்திற்கு உதவி வழங்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு மறுத்து விட்டது. அரசியல் மற்றும் பணபலம் இல்லாத காரணத்தினால் பெருமெடுப்பில் எனது திட்டத்தை நிறைவேற்ற முடியாமலுள்ளது. எதிர்காலத்தில் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக நான் வலுப்பெறும்போது எனது கனவு நிறைவேறுமென நினைக்கின்றேன்.

பீமன் : தேர்தலில் உங்களுடைய நம்பிக்கை எவ்வாறு இருக்கிறது?


செலஸ் ரீன் : எனது நண்பர் அங்கஜன் இராமநாதன் தலமையில் சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் கை சின்னத்தில் போட்டிடும் எமது அணிக்கு குறைந்தது 03 ஆசனங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. அதற்காக நாங்கள் இரவு பகல் பாராது உழைத்துக்கொண்டிருக்கின்றோம்.

பீமன் : இறுதியாக நீங்கள் மக்களுக்கு கூற விரும்புகிற செய்தி என்ன?

இங்கு வாழுகின்ற தமிழ் மக்கள் தமிழ் தேசிய அரசியல்வியாபாரிகளால் கடந்த 70 வருடங்களாக ஏமாற்றப்பட்டுள்ளார்கள். புலம்பெயர் தமிழர்கள் தமிழ் தேசிய அரசியல்வியாபாரிகளுக்கு பக்க பலமாக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு , விக்னேஸ்வரன் தலைமையிலான கட்சி மற்றும் கஜேந்திரகுமார் தலைமையிலான கட்சிகளுக்கு நிதி மற்றும் ஆத்ம ரீதியாக உதவி புரிகின்றனர். ஆனால் இந்த உதவிகள் இங்கிருக்கக்கூடிய ஒவ்வொரு ஏழைகளினுடைய வயிற்றிலும் அடிக்கின்றது என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும். இக்கட்சிகள் பலம்பெறும் அளவுக்கு இங்குள்ள தமிழ் மக்களின் துன்பம் பெருகிக்கொண்டு செல்கிறது. ஆகையால் , தயவு செய்து தமிழ் தேசியக் கட்சிகளுக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதை நிறுத்திவிடுங்கள் என்று அன்பாக வேண்டுகின்றேன்.

அத்துடன் தேசிய கட்சிகளில் போட்டியிடும் எங்களை ஒரு எதிரியாக பார்ப்பதை தவிர்த்து எமது எதிர்வரும் 5 வருட நடவடிக்கைகளை அவதானியுங்கள். நிச்சமாக நீங்கள் திருப்தியடையும் விதத்தில் நாம் செயற்படுவோம் என தமிழ் மக்களுக்கு நான் கூற விரும்புகின்றேன்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com