Thursday, June 18, 2020

தேர்தல் பிரச்சாரம் எவ்வாறு அமையவேண்டும்? வேட்பாளர்களுக்கு விளக்குகின்றார் மஹிந்தர்.

எதிர்வரும் தேர்தல் பிரச்சாரம் எவ்வாறு அமையவேண்டும் என்பதனை விளக்கும் பொருட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ச வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு விளக்கியுள்ளார். இதன்போது அவர் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட மற்றும் ஜனாதிபதியின் ஆட்சியில் ஏற்பட்ட மாற்றங்களை விரிவாக விளக்கியுள்ளார்.

அவரது பேச்சின் முழுவடிவம் வருமாறு:

சங்கைக்குரிய மகா சங்கத்தினரே, அனைத்து சமயங்களினதும் மதகுருமார்களே, கௌரவ அமைச்சர்களே, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களே, நண்பர்களே,

2019 நவம்பர் 16 ஜனாதிபதித் தேர்தலின் பின்பு எமக்கு 2020 ஆகஸ்ட் மாதமே புதிய பாராளுமன்றத்தைத் தெரிவுசெய்ய வேண்டியுள்ளது. 19ம் திருத்தம் மூலம் நான்கரை வருடங்கள் கழியும் வரை பாராளுமன்றத்தைக் கலைப்பது தடுக்கப்பட்டுள்ளமையினாலும், கோவிட் - 19 தொற்று காரணமாகவும் முழுமையாக ஒன்பது மாதங்களாக நாடு முழுவதும் நிலைமாறு காலத்தினுள் சிக்கியுள்ளது. இவ்வாறானதொன்று எமது அரசியல் வரலாற்றில் ஒருபோதும் இடம்பெற்றதில்லை. கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது இந்த நாட்டு வாக்காளர்கள் ஏற்படுத்திய மாற்றத்தைப் பூர்த்தி செய்ய வேண்டுமாயின் பொதுத் தேர்தல் அத்தியாவசியமானதாகும்.

இந்த பொதுத் தேர்தல் நாம் மிகவும் கஷ்டத்துடன் பெற்றுக்கொண்ட ஒரு ஜனநாயக உரிமையாகும். நல்லாட்சி அரசியல் கட்சிகள் உள்ளுராட்சித் தேர்தலை மூன்று வருடங்கள் தாமதப்படுத்தியது போன்று, மாகாண சபைத் தேர்தல்களை நடாத்த முடியாதவாறு காரியங்களைச் செய்தது போன்று, நீதிமன்றம் சென்று பொதுத் தேர்தலையும் ஒத்திவைக்க முயற்சித்த போதிலும் உயர் நீதிமன்றம் அதற்கு இடமளிக்கவில்லை. அதனால் இப்போதுதான் மக்கள் தமக்கு விருப்பமான அரசாங்கத்தைத் தெரிவுசெய்து கொள்வதற்கான ஜனநாயக உரிமை கிடைத்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலின் பின்பு கழிந்த இந்த நிலைமாறு காலத்தில் ஒன்று மட்டும் உறுதியானது. 2006 – 2014 காலப்பகுதியில் எனது அரசாங்கத்தைப் போன்றே, ஜனாதிபதி கோட்டாபய அவர்களின் கீழ் காணப்படும் இந்த அரசாங்கத்திற்கும் வெற்றிகொள்ள முடியாது எனக் கருதப்படும் சவால்களை வெற்றிகொள்ள முடியும் என்பதே அதுவாகும். கோவிட் - 19 தொற்றினைக் கட்டுப்படுத்திய முறை மூலம் அது நிரூபிக்கப்பட்டது.

எம்மைப் போன்றே வியட்நாம், ஹொங்கொங், தாய்வான் போன்ற ஆசிய நாடுகளும் சிறப்பாக இத்தொற்றினைக் கட்டுப்படுத்தின. இந்த நோய் காரணமாக வியட்நாமில் யாரும் மரணிக்கவில்லை. ஹொங்கொங்கில் நான்கு பேர் மாத்திரமே மரணித்துள்ளனர். தாய்வானில் ஏழு பேர் மரணித்துள்ளனர். எமது நாட்டில் பதினொரு பேர் மரணித்துள்ளனர். நியுசிலாந்தில் கோவிட் காரணமாக 22 பேர் மரணித்துள்ளனர். எனினும், வியட்நாம், ஹொங்கொங், தாய்வான் போன்ற நாடுகள் 2003 இல் ஏற்பட்ட சார்ஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு அதனூடாக கற்றுக்கொண்ட பாடங்களின் மூலமே கோவிட் - 19 னை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதைக் கற்றுக்கொண்டன. சார்ஸ், மர்ஸ் போன்ற வைரஸினால் ஏற்படும் சுவாச நோய்த் தொற்று தொடர்பாக இலங்கையிடம் பெரியதொரு அனுபவம் இல்லாத நிலையிலேயே கோவிட் - 19 இந்தளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

எமது சுகாதாரப் பிரிவினர், முப்படையினர் உட்பட கோவிட் - 19 கட்டுப்படுத்தல் பணியில் இன்று நாடு எந்த நிலைமையில் காணப்படும் என்பதை மக்கள் அறிவார்கள். ஜனாதிபதித் தேர்தலை வெற்றிகொண்ட பின்பு அரசாங்கம் என்ற வகையில் நாம் மிகவும் கடினமானதொரு காலப்பகுதியைக் கழிக்க வேண்டியேற்பட்டது.

19 ஆந் திருத்தம் காரணமாக ஜனாதிபதி அவர்கள் பெற்றுக்கொண்ட மக்கள் ஆணைக்குப் புறம்பாக 2020 மார்ச் ஆரம்பம் வரை தோல்வியடைந்த தரப்பினருக்குப் பாராளுமன்றத்தில் செயற்கையானதொரு பெரும்பான்மை காணப்பட்டது. அந்தப் பெரும்பான்மையைப் பயன்படுத்தி அவர்கள் முடியுமான எல்லா சந்தர்ப்பங்களிலும் புதிய அரசாங்கத்தின் பணிகளை சீர்குலைத்தனர்.

நல்லாட்சி அரசாங்கத்தின் உரம், மருந்துப் பொருள் வழங்குனர்களுக்குப் பணத்தைச் செலுத்த நாம் இடைக்காலக் கணக்கறிக்கையொன்றைப் பாராளுமன்றத்தில் கொண்டு வந்தபோது அதனை நிறைவேற்ற அவர்கள் இடமளிக்கவில்லை. வழங்குனர்களுக்குப் பணம் செலுத்தாவிடின் நாட்டினுள் இயல்பாகவே உரம், மருந்துப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படும். தோல்வியடைந்த நல்லாட்சியாளர்கள் அவ்வாறு தான் புதிதாக ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தினை வீழ்த்த முயற்சித்தனர்.

முழுமையான உள்நாட்டு, வெளிநாட்டுச் சூழ்ச்சிகள் மூலமே 2015 இல் நல்லாட்சி அரசாங்கம் உருவானது. 2019 ஜனாதிபதித் தேர்தலில் அவர்கள் தோல்வியடைந்த போதிலும் சூழ்ச்சிகள் நின்று போகவில்லை. புதிய ஜனாதிபதி அவர்கள் பதவியேற்ற பின் கழிந்த முதல் இரண்டு, மூன்று நாட்களில் ஊடகங்களில் வித்தியாசமான செய்திகள் வெளியாவதை நாம் கண்டோம்.

அடையாளமிடப்பட்ட பாதசாரிக் கடவைகளைத் தவிர்த்து, ஒழுங்கற்ற முறையில் வீதிகளைக் கடக்கும் பாதசாரிகளுக்குப் பொலிசார் தண்டம் விதிப்பதாக ஒரு செய்தி வெளியிடப்பட்டது. கொழும்பிலுள்ள அனைத்துப் பிச்சைக்காரர்களையும் கைது செய்து முகாம்களுக்கு அனுப்புவதாக இன்னொரு செய்தியில் குறிப்பிடப்பட்டது. புகையிரதத்தினுள் பிச்சையெடுப்பவர்கள் கைது செய்யப்படுவதாக இன்னொரு செய்தி வெளிவந்தது. இவையனைத்தும் பொய்யான பிரச்சாரங்களாகும்.

அந்த நேரத்தில் இவ்வாறான முன்னுரிமை குறைந்த விடயங்கள் குறித்து கவனஞ் செலுத்த புதிய ஆட்சியாளர்களுக்கு நேரமிருக்கவில்லை. மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ஆட்சியாளரொருவர் அதிகாரத்திற்கு வந்துள்ளார் என்ற எண்ணத்தை மக்களின் உள்ளங்களில் மிகவும் சூட்சுமமான முறையில் ஏற்படுத்துவதற்கே இவற்றின் மூலம் சூழ்ச்சியாளர்கள் எதிர்பார்த்தனர்.

புதிய ஜனாதிபதி அவர்கள் ஆட்சிக்கு வந்து சில நாட்களினுள் மேற்கத்தேய தூதரகமொன்றில் பணியாற்றும் பெண்ணொருவரைக் கடத்திச் சென்று, துன்புறுத்தி, விசாரணை மேற்கொண்டதாக நாடகமொன்று அரங்கேற்றப்பட்டது. முதலில் வெளிநாட்டிலேயே அது தொடர்பான செய்திகள் வெளியாகின. அதன் பின்னரே இலங்கையிலுள்ள மக்கள் அதனை அறிந்துகொண்டனர்.

இலங்கை மக்கள் மத்தியிலும், உலக சமூகத்தினர் மத்தியிலும் புதிய ஆட்சி தொடர்பாக ஒருவகையான பிரதிபிம்பமொன்றை ஏற்படுத்தும் நோக்கத்திலேயே இவையனைத்தும் செய்யப்பட்டன. எனினும் புதிய ஜனாதிபதி அவர்கள் இந்த அனைத்து சூழ்ச்சிகளையும் மிகவும் திறமையாகத் தோற்கடித்தார். தூதரகத்தில் பணியாற்றும் பெண் கடத்தப்பட்டமை போலியானது என்பதை விசாரணைகள் ஊடாக மக்களுக்கும், உலகிற்கும் அறியப்படுத்தினார்.

முன்னாள் இராணுவ அதிகாரியொருவரி;ன் கீழ் கடுமையானதொரு ஆட்சி ஆரம்பாகியுள்ளது என மேற்கொள்ள முயற்சித்த பிரச்சாரம் போலியானது என்பதை நிரூபிக்கும் வகையில் ஜனாதிபதி அலுவலகத்தை சுற்றிவளைக்க வரும் அனைத்து ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் சுதந்திரமாக வருவதற்கு ஜனாதிபதி இடமளித்தார். அனைவருக்கும் கலந்துரையாடல்களை வழங்கினார். சிலருக்கு சிற்றுண்டி விருந்துகளும் வழங்கப்பட்டன. எந்தவொரு ஆர்ப்பாட்டத்தினையும் கண்ணீர்ப்புகை அடித்து, நீர்த்தாரை விசிறி நிறுத்த முயற்சிக்கவில்லை. கடுமையான ஆட்சியொன்று ஏற்பட்டுள்ளது என மேற்கொள்ள முயற்சித்த பிரச்சாரம் புஸ்வானமாகிப் போனது.

கோவிட் - 19 அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்தி பொது வாழ்வினை ஆரம்பித்தவுடன், சிறியதொரு அரசியல் குழுவொன்று அமெரிக்காவில் நிகழ ;ந்த சம்பவமொன்றை முன்னிலைப்படுத்தி நீதிமன்றத்தின் தடையுத்தரவினையும் கருத்திற்கொள்ளாது அமெரிக்க தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொள்ள முயற்சித்தபோது பொலிசார் அவர்களைப் பிடித்துச் சென்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர். இந்த ஒரு சம்பவத்தை மையப்படுத்தி அன்று, 2015 ஜனாதிபதித் தேர்தலின்போது போலியான பிரச்சாரங்களை மேற்கொண்ட அனைவரும், மீண்டும் அணிதிரண்டு அரச அடக்குமுறை தொடர்பாக ஊடக மாநாடுகளை நடாத்த ஆரம்பித்தனர்.

2014 ஆம் ஆண்டு தாக்குதலுக்கு உட்பட்டு நோய்ப் படுக்கையில் உள்ளதாக போலியான வீடியோ காட்சிகளைத் தயாரித்து கையும் களவுமாகப் பிடிபட்ட நடிகைகளும் ராஜபக்ஷவினர் ஆட்சி செய்யும் நாட்டில் உள்ளனர். அதனை விடவும், தாம் பிறந்தவுடன் ஏன் வடிகானில் வீசவில்லை எனக் கேட்ட கொண்டையுடையவர்கள் அனைவரும் ஐந்து வருடங்களின் பின்பு மீண்டும் வெளியில் வந்துள்ளதை நாம் அவதானித்தோம். எனினும் இவர்கள் 2015 இல் உருவாக்கிய நல்லாட்சி அரசாங்கம் 2019 ஆம் ஆண்டு வரை ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு கண்ணீர்ப்புகை அடித்து, தடியடித் தாக்குதல்களை மேற்கொண்டு வந்தது. அக்காலத்தில் ஜனாதிபதி செயலகம் அருகே லோடஸ் வீதி எப்போதும் ஒரு போர் மைதானம் போன்று காணப்பட்டது. நல்லாட்சி அரசாங்கம் லோடஸ் வீதியில் அங்கவீனமுடைய இராணுவ வீரர்களுக்கு வழங்கிய தடியடித் தாக்குதல் காரணமாக அங்கவீனமுடைய இராணுவ வீரரொருவர் தனது கண்ணை இழந்தமை உங்களது நினைவில் இருக்கும். நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் லோடஸ் வீதியில் எப்போதும் நீர்த் தாரைத் தாக்குதல்கள், கண்ணீர்ப்புகை, தடியடித் தாக்குதல்களுக்கு உட்பட்ட குழுவினரே அண்மையில் பொலிசாரினால் நீதிமன்றத்துக்குப் பிடித்துச் செல்லப்பட்டனர். நல்லாட்சியின் ஐந்து வருட காலத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களை நடாத்திய விதம் தொடர்பாக மௌனம் காத்தவர்கள் இன்று இந்த சிறு சம்பவத்தினைப் பெரிதுபடுத்துகின்றனர். அந்த சம்பவம் தொடர்பாக அரசாங்கம் என்ற வகையில் எமக்குத் திருப்தியடைய முடியாது. நாம் அதனை வெளிப்படையாகத் தெரிவித்துள்ளோம். தொழில்சார் ஆர்ப்பாட்டக்காரர்களே இதற்கு அடிப்படையாக அமைந்தனர். எனவே பொலிசாரை எவ்வாறு உசுப்பேற்ற முடியும் என அவர்கள் நன்கு அறிவர். ஆர்ப்பாட்டத்தைத் தடை செய்து நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவைப் பொலிசார் வாசித்த பின்பும், அவ்வாறான ஒன்றை எமக்குக் காட்டவில்லை என அவர்கள் கூறுகின்றனர்.
எனவே பொலிசார் அவ்வாறான தந்திரோபாயங்களில் சிக்கி விடக் கூடாது. பொலிசாருடன் நடுத்தெருவில் சண்டை பிடிக்கும் காட்சிகளே இவர்களுக்குத் தேவையாகும். அப்போது தான் அவர்களின் வாழ்வாதாரம் உறுதிப்படுத்தப்படும். அந்த சிறு சம்பவத்தினைத் தவிர அடக்குமுறை எனக் காட்டுவதற்கு இவர்களுக்கு வேறு எதுவுமில்லை. கொழும்பு ஆர்ப்பாட்டத்தின்போது ஒரு முறையிலும், தொண்டமான் அவர்களின் மரணத்தின்போது வந்த குழுவினருடன் வேறு முறையிலும் நடந்துகொண்டதாக அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். ஆறுமுகம் தொண்டமான் என்பவர் மலைநாட்டுத் தமிழ் மக்களின் தனித்துவமானதொரு தலைவர் ஆவார். அவ்வாறான ஒருவரின் மரணம் காரணமாக சோகத்தில் ஆழ்ந்திருந்த மக்கள் ஒன்றுசேர்வதைக் கட்டுப்படுத்துவதற்காக நாம் நுவரெலியா மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தியபோது அந்த மக்கள் அதனைப் பின்பற்றினர்.

நீதிமன்ற உத்தரவுகளுக்கு மாற்றமாக இலங்கையுடன் எவ்வித்திலும் தொடர்புபடாத வெளிநாட்டு சம்பவமொன்றை முன்னிலைப்படுத்தி நடாத்தப்படும் ஆர்ப்பாட்டங்கள் என்பது அதற்கு முற்றிலும் மாறுபட்ட ஒன்றாகும். இந்த தேர்தலின்போது நல்லாட்சியாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது தொடர்பாக மக்கள் கவனஞ் செலுத்த வேண்டும்.

கோவிட் - 19 பரவுவதைத் தடுக்க ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்மையினால், தொழில்களுக்குச் செல்ல முடியாதோருக்கு நாம் 5,000 ரூபா கொடுப்பனவொன்றை வழங்கியபோது, அது போதாது, ஒரு குடும்பத்திற்கு 65,000 ரூபாவை வழங்குமாறு நல்லாட்சி ஜனாதிபதி வேட்பாளர் கூறினார். யாரோ ஒருவர் அவரிடம் மடத்தனமான கதைகளைக் கூற வேண்டாம் எனக் கூறிய பின்பு, அத்தொகையை 20,000 ரூபாவாகக் குறைத்தார். இப்போது அனைத்துக் குடும்பங்களுக்கும் 65,000 ரூபா வழங்குமாறு எமக்கு ஆலோசனை வழங்கியோர் அதிகாரத்தில் இருந்தபோது என்ன செய்தனர்? கோவிட் - 19 தொற்று வருவதற்கு முன்னர், நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் போன்றே ஜனாதிபதி செயலகத்தின் அருகாமையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் எப்போதும் வருகை தந்தனர் என்பது உங்களுக்கு நினைவிருக்கும். அதில் அதிகளவானோர் நல்லாட்சி அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட நியமனங்களை நிரந்தரமாக்கிக் கொள்வதற்கே வருகை தந்தனர். அவர்கள் உரத்த குரலில் எம்மைத் திட்டவில்லை. முன்னைய அரசாங்கத்தையே திட்டினர். அவர்களுக்குப் பொய்யான நியமனங்களை வழங்கிய நல்லாட்சி அமைச்சர் மீண்டும் அம்பாந்தோட்டைக்கு வரக்கூடாது என்றே அந்த இளைஞர் குழுவினர் கூறினர். அவ்வாறு கூறியது போன்றே அந்த நல்லாட்சி அமைச்சர் இப்போது அம்பாந்தோட்டையிலிருந்து தப்பிச் சென்று இம்முறை கொழும்பில் போட்டியிடுகிறார். எதிர்வரும் பொதுத் தேர்தலானது நிரூபிக்கப்பட்ட திறமைக்கு முன்னுரிமை வழங்கவும், நல்லாட்சியின் பொய் மற்றும் ஊழலை ஒழிப்பதற்கும் அனைத்து வாக்களர்களுக்கும் கிடைக்கும் அரியதொரு சந்தர்ப்பமாகும் என நம்புகிறேன்.

கோவிட் - 19 தொற்றினைக் கட்டுப்படுத்தியமை மூலம் எமது நாடு பெற்றுக்கொண்ட முன்னேற்றத்தைப் பாதுகாப்பதற்கு சுகாதார அறிவுறுத்தல்களைக் கடைபிடிப்பதுடன், சூழலைப் பாதுகாத்து, முன்மாதிரியான தேர்தல் பிரச்சாரமொன்றில் ஈடுபடுமாறு அனைத்து வேட்பாளர்களிடமும் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.
உங்கள் அனைவருக்கும் மும்மணிகளின் ஆசி கிடைக்கட்டும். இறைவனின் துணை.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com