Monday, May 11, 2020

இயல்பு வாழ்வுக்கு நாடு திருப்பியதன் அடுத்த கட்டப் பாதுகாப்புச் செயற்பாடுகள் குறித்த உயர்மட்ட ஆராய்வு

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றபோதும், தற்போது நாட்டில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு, மக்கள் சுமுகமாக வாழும் வகையில் ஊரடங்கினை அமுலுக்குக் கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதேவேளை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அவர்களது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பின்வரும் செய்தி வெளியாகியுள்ளமை கருத்திற்கொள்ளத்தக்கது.

அவரது முகநூல் பக்கத்தில் உள்ளதாவது:

எம் முன்னால் உள்ள அபாயநிலைமைகளுக்கு ஏற்ப எதிர்காலத்தைத் திட்டமிட்டு, அவற்றை விளங்கிப் பின்வாங்காது செயற்படுமாறு ஜனாதிபதி செயலணியிடம்நான் இன்று தெரிவித்தேன்.

மக்களின் இயல்பு வாழ்க்கையையும் பொருளாதாரத்தையும் செயற்திறமாகப் பேணி கொவிட் 19 ஒழிப்புக்காகச் சளைக்காத தைரியத்துடன் செயற்பட வேண்டியுள்ளது என்பதனையும் நான் தெரிவித்தேன்.

முழு நாட்டிலும் பொருளாதாரச் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நோய்த்தொற்று வந்த போதும் அதனுடன் பஞ்சம் ஏற்பட இடமளிக்கக்கூடாது. திட்டங்களை முன்னெடுக்கும் போது முன்னர் ஏற்பட்ட தவறுகளைப் பாடமாகக் கொண்டு அத்தகைய தவறுகள் மீண்டும் இடம்பெறாதிருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் நான் அறிவுறுத்தினேன்.

கடற்படை மற்றும் வாழைத்தோட்ட பகுதியில் அதிக எண்ணிக்கையில் கொரோனா நோய்த்தொற்று உடையவர்கள் உருவாக என்ன காரணம் என்பதைக் கண்டறிந்து பரிசோதனைகளை தொடர்ந்தும் மேற்கொள்ள வேண்டிய அவசியம் குறித்தும் நான் வலியுறுத்தினேன்.

கொவிட் 19 ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியுடன் இன்று பிற்பகல் இடம்பெற்ற மேற்படி கலந்துரையாடலின் போது -

பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, மேல் மாகாண ஆளுநர் மார்ஷல் ஒப் த எயார் போர்ஸ் ரொஷான் குணதிலக, எனது செயலாளர் பி. பீ. ஜயசுந்தர, எனது தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, சுகாதார அமைச்சின் செயலாளர், விசேட மருத்துவ நிபுணர் சஞ்சீவ முனசிங்க ஆகியோரும் பங்குபற்றினர்.

பேரூந்துகள், முச்சக்கர வண்டிகள் மற்றும் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்படும் தளங்கள், மெனிங் சந்தை போன்ற - மக்கள் அதிகம் ஒன்றுகூடும் இடங்களில் உள்ளவர்களை அடிக்கடி எழுமாறாக கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் நான் சுட்டிக்காட்டினேன்.

நோய்த்தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கு இத்தகைய இடங்களில் ஒன்றுகூடுபவர்களுக்கு அறிவூட்ட வேண்டியதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

பாடசாலைப் பிள்ளைகள் நடந்துகொள்ள வேண்டிய விதம் குறித்த வழிகாட்டல் சுகாதார அமைச்சினால் கல்வி அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த பரிந்துரைகளின் படி பாடசாலைகளைத் திறக்கக்கூடிய வாய்ப்புகள் குறித்தும் இன்று ஆராயப்பட்டது.

பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் ஊடகங்களின் வாயிலாக பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் விரிவாக அறிவூட்ட வேண்டும் என்றும் நான் குறிப்பிட்டேன்.

வெளிநாடுகளில் கல்வி கற்றுக்கொண்டிருந்த மாணவர்கள் மற்றும் தற்காலிக அனுமதிகளோடு வெளிநாடுகளில் தங்கியிருந்த 3297 பேர் தற்போது அழைத்து வரப்பட்டு நோய்த்தடுப்பு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் உள்ளவர்களை நாட்டுக்கு அழைத்து வரும் போது நாட்டுக்குப் பாதிப்பு இல்லாத வகையில் கட்டுப்பாட்டுடன் அதனைச் செய்ய வேண்டும் என்பதனையும் நான் அறிவுறுத்தினேன்.

சட்ட விரோத மதுபான பாவனை காரணமாக ஏற்படுகின்ற சுகாதாரப் பிரச்சினைகளுடன், கிராமிய மக்களின் வாழ்க்கையிலும் பல்வேறு பிரச்சினைகள் உருவாகியுள்ளன என்பது இன்று ஆராயப்பட்டது.

அதிக விலையில் சட்டவிரோத மதுபானம் விற்பனை செய்யப்படுவதும் தெரியவந்துள்ளதாகப் பாதுகாப்புத் துறையினர் சுட்டிக்காட்டினர். இதன் மூலம் ஏற்பட்டுவரும் அபாய நிலைமை குறித்து சுகாதார அதிகாரிகளினால் இன்று விரிவாக கலந்துரையாடப்பட்டது.

வீடுகளிலேயே இருக்கவேண்டியிருப்பதால் நகரப்புற மக்களின் வாழ்க்கையிலும் பெரும் அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளன. இது போன்ற நிலைமைகளைத் தவிர்ப்பதற்குச் சுகாதாரப் பரிந்துரைகளின் படி வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் இன்று கலந்துரையாடப்பட்டது.

உடல் ஆரோக்கியத்திற்காக உடற்பயிற்சிகள் மற்றும் ஏனைய உள ஆரோக்கியச் செயற்பாடுகளை மக்களிடத்தில் மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என்பதும் ஆராயப்பட்டது.

தரவுகளை ஒரு முறைமைக்குள் கோவைப்படுத்தி, கடவுச் சீட்டுகள் மற்றும் அடையாள அட்டைகளை மாவட்ட மட்டத்தில் வழங்குவதற்கு வழிமுறைகளைக் கண்டறியுமாறும் நான் அறிவுறுத்தினேன்.

விவசாய அறுவடைகளை நீண்ட நாள்களுக்குச் சேமித்து வைத்திருப்பதற்கான தொழிநுட்பம் மற்றும் முகாமைத்துவ முறைமைகளை மீண்டும் ஆராய்ந்து தேவைக்கு ஏற்ப பயன்படுத்துமாறும் செயலணியிடம் நான் வேண்டினேன்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com