Saturday, May 30, 2020

பாதுகாப்பு அரண்களை அகற்ற நடவடிக்கை

விவசாய நிலங்களில் யுத்த காலத்தில் அமைக்கப்பட்ட பாதுகாப்பு அரண்கள் இருக்கும் பட்சத்தில் அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கமநல அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.

போர்க்காலத்தில் பல பாதுகாப்பு அரண்கள் விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டன. பல அரச நிறுவனங்கள் கடந்த காலத்தில் அவற்றை அகற்ற நடவடிக்கை எடுத்திருந்தனர்.

வவுனியா கமநல அபிவிருத்தித் திணைக்களம் அவற்றை வவுனியா மாவட்டத்தில் அகற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன் அடிப்படையில் 2019ம் ஆண்டில் வவுனியா மாவட்டத்தில் 24 மில்லியன் ரூபா நிதியில் கிட்டத்தட்ட 45 கி.மீ நீளமுள்ள பல பாதுகாப்பு அரண்கள் இரண்டு கட்டங்களாக மீள்குடியேற்ற அமைச்சின் நிதியின் கீழ் மாவட்ட செயலகத்தின் ஆதரவுடன் வவுனியா கமநல அபிவிருத்தித் திணைக்களத்தினால் அகற்றப்பட்டுள்ளன.

அதன் அடிப்படையில் மூன்றாம் கட்டமாக 2020இல் வவுனியா மாவட்டத்தில் 15 கி.மீ நீளமான பாதுகாப்பு அரண்கள் சமூக அபிவிருத்தி அமைச்சின் 8.4 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மாவட்ட செயலகத்தின் அனுசரணையுடன் பிரதேச செயலகங்களின் ஆதரவோடு கமநல அபிவிருத்தித் திணைக்களத்தினால் அகற்றும் செயற்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
அத்துடன் வவுனியா மாவட்டத்திற்கு 2015ம் ஆண்டிலும் பாதுகாப்பு அரண்களை அகற்ற கமக்காரர் நம்பிக்கை நிதியத்தால் 7.5 மில்லியன் நிதி வழங்கப்பட்டு வேலை முடிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட கள பரிசோதனையின் போது வவுனியாவில் மேலும் சில பாதுகாப்பு அரண்கள் அடையாளம் காணப்படாமல் நில உரிமையாளர்கள் இல்லாத காரணத்தினால் கோரிக்கை விடப்படாமல் உள்ளமை கண்டறியப்பட்டது.

எனவே யாருடைய நிலத்திலாவது இன்னும் பாதுகாப்பு அரண்கள் இருந்தால் விபரங்களை கடிதம் மூலமாக உங்கள் பிரதேச கமநல சேவைகள் நிலையம் அல்லது மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்கள அலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பான மேலதிக தகவலுக்கு மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளரை 0242225511 0778317443 இலக்கங்களில் தொடர்பு கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com