Thursday, May 14, 2020

சுமந்திரனின் சர்ச்சைக்குரிய செவ்வியின் தமிழாக்கம் இதோ !

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் சிங்கள் ஊடகவியலாளர் ஒருவரின் யுரியூப் சனல் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்பட்ட விடயம் தொடர்பாக பல்வேறு விமர்சனங்களும் வியாக்கியானங்களும் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் எந்த வகையில் தமிழினத்துரோகமாகின்றது என்பதனை கீழுள்ள மொழிபெயர்ப்பை கொண்டு வாசகர்கள் தீர்மானிக்க முடியும். மொழி பெயர்த்தவர் அஜீவன்

சமுதித்த : இன்றைய அரசியல் களத்தில் சர்ச்சைக்குரிய ஒரு முக்கிய புள்ளியாக இருக்கும் ஒருவரைத் தேடி வந்திருக்கிறோம். அவர் யாழ்ப்பாண நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் அவர்கள். வணக்கம்

சுமந்திரன்: வணக்கம்

சமுதித்த : தமிழ்த் தேசிய கூட்டமைப்பை உருவாக்க முக்கியக் காரணம் என்ன?

சுமந்திரன்: உண்மையான காரணம் தான், இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு சுதந்திரம் கிடைத்த நாளிலிருந்து நியாயமான உரிமை கிடைக்கவில்லை எனும் எண்ணம் உள்ளது. அதைச் சரி செய்வதற்காக 1949 இல் தமிழரசுக் கட்சி உருவானது. அதன் பின்னர் அதுவே வெவ்வேறு பெயர்களில் மாறி வந்து இப்போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என ஆகியுள்ளது.

சமுதித்த : தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்பது விடுதலைப் புலிகளின் அரசியல் பகுதியா?

சுமந்திரன்: இல்லை விடுதலைப் புலிகள் உருவானது 1970 களில், எங்கள் கட்சி உருவானது 1949இல்.

சமுதித்த : தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முதலாவது கூட்டத்தைக் கூட்டியவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்?

சுமந்திரன்: இல்லை

சமுதித்த : பிரபாகரன்தான் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை உருவாக்குகிறார். அதில் சம்பந்தன் அவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

சுமந்திரன்: இல்லை

சமுதித்த : நீங்கள் சொல்ல வருவது விடுதலைப் புலிகளின் தேவைகளுக்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உருவாகவில்லை என்றா?

சுமந்திரன்: அப்படி உருவானதாகச் சொல்ல முடியாது. 2001ஆம் ஆண்டு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உருவானபோது போர் நிறுத்தம் ஒன்று இருந்தது. அந்தக் காலத்தில் தான் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உருவானது. அப்போது விடுதலைப் புலிகளோடு தொடர்பு இருந்தது. அரசும் அப்போது விடுதலைப் புலிகளோடு பேசிக் கொண்டிருந்த காலமாக அது இருந்தது.

சமுதித்த : தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உருவானபோது 7 கட்சிகள் இருந்தன . இப்போது இருப்பது மூன்று மட்டுமே புளொட் – டெலோ மற்றும் தமிழரசுக் கட்சி மட்டுமே இப்போது இருக்கிறார்கள்?

சுமந்திரன்: இப்போது மூன்று கட்சிகள் இருந்தாலும் ஆரம்பத்தில் நான்கு கட்சிகள் இருந்தன. அந்த நான்கு கட்சிகளில் ஒன்றாக தான் இப்போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இருக்கிறது. காலத்துக்குக் காலம் சில கட்சிகள் உள்ளே வருகின்றன. சில கட்சிகள் வெளியே போகின்றன.

சமுதித்த : ஆனந்த சங்கரி அவர்களும் இந்தக் கட்சியில் இருந்தார்கள். பாசிசவாதிகளோடு என்னால் தொடர்ந்து இருக்க முடியாது என்றே அவர் வெளியே சென்றார்?

சுமந்திரன்: ஆனந்த சங்கரி அவர்கள் இருந்தது தமிழர் விடுதலைக் கூட்டணியில். அந்தக் கட்சி தான் தமிழ்த் தேசிய கூட்டமைக்குள் இருந்தது. சமஷ்டிக் கட்சி அப்போது இருக்கவில்லை. ஆனந்த சங்கரி அவர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியோடு ஒரு வழக்கை தொடுத்து செயற்பட்ட போதுதான் தமிழர் விடுதலைக் கூட்டணியையும் அவரையும் வெளியேற்றப்பட்டு சமஷ்டிக் கட்சி உள்ளே வந்தது

சமுதித்த : விக்னேஸ்வரன் அவர்கள் வெளியேறி இருக்கிறார்கள். அனந்தி சசிதரன் அவர்கள் வெளியேறி இருக்கிறார்கள். அப்படி வெளியேறிய அனைவரும் உங்கள் மேல்தான் குற்றம் சுமத்துகிறார்கள்.

சுமந்திரன்: ஆம்! இரு சாராரும் என் மேல் குற்றம் சுமத்துகிறார்கள். இன வாதிகளாக தன்னை காட்டிக் கொள்ளும் விக்னேஸ்வரன் அவர்களும், ஆனந்தி சசிதரன் அவர்களும் என் மேல் குற்றம் சுமத்துகிறார்கள். அதேபோல தேசிய நீரோட்டத்தில் இருக்க வேண்டுமெனும் டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களும் என் மேல் குற்றம் சுமத்துகிறார்கள்

சமுதித்த : அவர்கள் , உங்கள் கட்சியை ஐக்கிய தேசிய கட்சியின் வாலில் தொங்க வைக்க முயற்சிக்கிறீர்கள் என்று சொல்கிறார்கள்.

சுமந்திரன்: அப்படி எதுவும் இல்லை. 2015 இல் நாங்கள்தான் ஐக்கிய தேசிய கட்சியின் ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு ஜனாதிபதி தேர்தலில் நிற்க வேண்டாம் என்று சொல்லி, சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளரான மைத்திரிபால சிறிசேன அவர்களை கொண்டுவந்து ஜனாதிபதி தேர்தலில் நிற்க வைத்து, தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்க உதவினோம். அது ஐக்கிய தேசிய கட்சிக்கு நாம் கொடுத்த ஆதரவாக ஒருபோதும் கருதமுடியாது

சமுதித்த : தெளிவாகச் சொல்லுங்கள்… தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உண்மையான தலைவர் எம் ஏ சுமந்திரனா? அல்லது சம்பந்தனா?

சுமந்திரன்: சம்பந்தன்தான்

சமுதித்த : அது வெளியில் தெரியும் பார்வை. உண்மையான தலைவர் யார்?

சுமந்திரன்: உண்மையான தலைவரும் சம்பந்தன் அவர்கள்தான்

சமுதித்த : தமிழ்த் தேசிய கூட்டமைப்பை செயல்படுத்துவது சுமந்திரன்தான் என்று நான் நேரடியாக சொன்னால்!

சுமந்திரன்: இல்லை அதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். அதை மறுதலிக்கிறேன். எனது செல்வாக்கு அதற்குள் இருக்கிறது. அதை நான் கொடுக்கும் அழுத்தம் என்று சொல்ல முடியாது.

சமுதித்த : அதாவது நீங்கள் தலைமைக்கு அழுத்தங்களை கொடுக்கிறீர்கள்

சுமந்திரன்: சம்பந்தன் அவர்கள் எல்லா விடயத்திலும் என்னிடம் ஆலோசனை பெற்றுத்தான் சில வேலைகளை செய்கிறார்.

சமுதித்த : அப்படியென்றால், நீங்கள் உத்தியோகபூர்வமற்ற தலைவர் என்கிறேன்.

சுமந்திரன்: அப்படி இல்லை . நான் சொல்லும் அனைத்து ஆலோசனைகளையும் அவர் ஏற்பது இல்லை. அவர்தான் இறுதி முடிவை எடுக்கிறார்.

சமுதித்த : அப்போதிருந்த இந்தத் தலைவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகளுக்கு பயந்து இருந்தார்கள். பிரபாகரனுக்கு பயந்து இருந்தார்கள். அதனால்தானே விடுதலைப் புலிகளுக்காக இந்த அரசியல் கட்சிகள் செயற்பட்டன.

சுமந்திரன்: அப்படி சொல்ல முடியாது. 2001இலிருந்து 2004 வரையிலான காலப் பகுதியில் விடுதலைப் புலிகளோடு இணைந்து செயற்பட்டார்கள். அந்த நேரம் இலங்கை அரசும் விடுதலைப் புலிகளோடு பேசிக் கொண்டிருந்த காலமாக அது இருந்தது.

சமுதித்த : எம். ஏ. சுமந்திரன் இனவாதியா?

சுமந்திரன்: இல்லை! இனவாதி இல்லை

சமுதித்த : நீங்கள் சிங்கள, தமிழ், முஸ்லிம் இனக்குழுக்கள் ஒன்றாக வாழ வேண்டும் என்று விரும்புகிறீர்களா?

சுமந்திரன்: ஆம்! அப்படியான அனைவரும் ஒன்றாக வாழ வேண்டும் எனும் கடும் நிலைப்பாட்டில்தான் இருக்கிறேன்.

சமுதித்த : உங்களுடைய சில கருத்துக்களை பார்க்கும்போது நீங்கள் ஓர் இனவாத கருத்தியல்வாதி போல எங்களுக்கு தெரிகிறது

சுமந்திரன்: அப்படியான எந்த ஓர் அறிக்கையையும் உங்களால் காண்பிக்க முடியாது.

சமுதித்த : உங்களுடைய உண்மையான அரசியல் தலைவர் யார்?

சுமந்திரன்: இன்றைக்கு என்னுடைய அரசியல் தலைவர் சம்பந்தன் அவர்கள்

சமுதித்த : நீங்கள் 2010இல் ஒரு வழக்கறிஞராக அரசியலுக்குள் தேசியப்பட்டியலின் ஊடாக பிரவேசிக்கிறீர்கள். நீங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த புலிகளுக்காக வாதாடி , காணாமல் போனவர்களுக்காக வாதாடி , இப்படி புலிகள் சார்பான ஒரு ஈர்ப்பை எடுத்துக் கொண்டுதான் நீங்கள் அரசியலுக்குள் வருகிறீர்கள்.

சுமந்திரன்: அது விடுதலைப் புலிகளுக்காக என்று யாரும் சொல்ல முடியாது. நான் சிவில் வழக்குகளை வழக்காடும் ஒரு வழக்கறிஞர். அதனால் நான் கிரிமினல் வழக்குகளை வாதாடவில்லை. ஒன்றிரண்டு வழக்குகளில் வாதாடி இருக்கிறேன். 90களில் நான் இந்த தொழிலில் ஈடுபட்டேன். அந்தக் காலத்தில் நான் PTA வழக்குகளுக்காக ஜேவிபி தொடர்பாக வழக்காடியுள்ளேன். அதனால் விடுதலைப் புலிகளுக்காக நான் வழக்காடி நின்றதாக யாரும் சொல்ல முடியாது.

சமுதித்த : 2015இல் 58,000 வாக்குகளை பொதுத் தேர்தலில் பெறுகிறீர்கள். அதாவது நீங்கள் ஒரு பிரபல்யமான ஒரு மனிதர். ஜேவிபிகாக மட்டும் வாதாடி நீங்கள் 58,000 வாக்குகளை யாழ்ப்பாணத்தில் பெற முடியாதுதானே?

சுமந்திரன்: பெறமுடியும். அந்தக் காலத்தில் நான் ஜேவிபியுடன் இணைந்து யாழ்ப்பாணத்தில் சிவப்பு சட்டை அணிந்து மேதின ஊர்வலத்தில் கலந்து கொண்டேன். எங்கள் மக்கள் அப்படிப் பார்ப்பவர்கள் அல்ல.

சமுதித்த : உங்களுடைய சித்தாந்தம் அதாவது அரசியல் இருப்பது ஜேவிபி உடனா? அப்படியானால் நீங்கள் தவறான இடத்தில் இருக்கிறீர்கள்?

சுமந்திரன்: ஜேவிபியோடு கருத்தியலாக அல்ல. அப்போதைய அரசுக்கு எதிராக ஜனநாயகப் போராட்டமொன்றை நடத்தினோம். அதற்கு ஜேவிபியும் இணைந்தனர். அதுவும் எம்மோடு கைகோர்த்து செயற்பட்ட ஓர் அமைப்பு.

சமுதித்த : அப்படியானால் அநுரகுமார திசாநாயக்க தானே உங்கள் அரசியல் தலைவராக முடியும்?

சுமந்திரன்: அப்படி ஒன்றும் இல்லை . நான் எல்லா கட்சிகளுடன் இணைந்து வேலை செய்ய விருப்பமாக இருக்கும் ஒருவன்.

சமுதித்த : யாழ்ப்பாண மக்கள் சொல்கிறார்கள் வாக்குகளைப் பெற்றதற்கு பிறகு சுமந்திரன் அந்தப் பக்கமே வரவில்லை என்கிறார்கள்?

சுமந்திரன்: அப்படி யாரும் சொல்லவில்லை

சமுதித்த : சுமந்திரன் இப்போது எங்கே அரசியல் கைதிகளை பற்றிப் பேசுகிறார்?காணிகளை பற்றி பேசுகிறார்? காணாமல் போனவர்களை பற்றி பேசுகிறார்? தேர்தல் குறித்தும் அவசரகாலச் சட்டம் குறித்தும் பேசிக்கொண்டிருக்கிறார் என்கின்றனர்.

சுமந்திரன்: இவை குறித்து பேசியது நான் என்று அவர்களுக்கு தெரியும். அதேபோல பல அரசியல் கைதிகள் வெளியே வரவும் நான் வேலை செய்திருக்கிறேன். காணிகளை விடுவிக்கவும் நான் வேலை செய்திருக்கிறேன். அவை அவர்களுக்கு தெரியும்.

சமுதித்த : இன்னும் விடுவிக்க வேண்டிய அரசியல் கைதிகள் இருக்கிறார்களா?

சுமந்திரன்: ஆம்… 70 பேர் அளவு இருக்கிறார்கள்

சமுதித்த : காணி விடுவிப்பு குறித்து மகிழ்ச்சி அடைகிறீர்களா?

சுமந்திரன்: மகிழ்ச்சி அடையவில்லை. ஆனால் 80% ஆன காணிகள் விடுவிக்கப்பட்டு இருக்கின்றன.

நேர்காணலின் முழுவடிவம்




0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com