Wednesday, April 15, 2020

ரஞ்சனை ஏமாற்றிய போலி டாக்டர்.

நேற்றைக்கு முந்தைய தினம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தன்னுடைய இயன்மருத்துவரை கைது செய்வதை எதிர்த்து பொலிசாருடன் வாக்குவாதப்பட்டிருந்தார். இறுதியில் பொலிஸ் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு வருகின்ற இருபதாம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கிறார்.

இதனை பல ஊடகங்கள் தலைப்புச் செய்திகளாக்கின.

இயன்மருத்துவரும் தனது அனுமதிப்பத்திரத்தை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைதாகியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தது.

அண்மையில் சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் தங்களுடைய பணியாளர் அட்டையினை உரடங்கு வேளைகளில் பிரதான வீதிகளூடாக பயணிக்கும் ஓர் அனுமதிப்பத்திரமாகவும் பாவிக்லலாம் என்று அரசாங்கம் அறிவித்திருந்தது பின்பு எப்படி தன்னுடைய இயன்மருத்துவரைக் கைது செய்யமுடியும் என்பது தான் ரஞ்சனின் வாதமாகவும் இருந்தது. அப்படி இருக்க எதற்க்காய் இயன்மருத்துவர் கைது செய்யப்பட்டார் என்பதுவும் பொதுமக்களின் கேள்வியாத் தான் இருந்தது.

இதில் ஆச்சர்யப்படத்தக்க உண்மையை இங்கே சுட்டிக்காட்டுகிறோம்.. உண்மையில் ரஞ்சனின் இயன்மருத்துவர் எனும் பெயரில் கைது செய்யப்பட்டவர் ஓர் இயன்மருத்துவர் இல்லை மாறாக இதுவரை காலமும் இயன்மருத்துவர் என ஏமாற்றி வந்த போலி இயன்மருத்துவர் என்பது நிரூபணமாகியிருக்கிறது.

இது தொடர்பான பகுப்பாய்வு கட்டுரைப் பதிவினையும் அதன் மூலத்தினையும் இயன்மருத்துவர் வேலும்மயிலும் துவாரகன் அவர்கள் எமக்கு வழங்கியிருந்தார்.

இயன்மருத்துவர் வேலும்மயிலும் துவாரகன் அவர்களின் பதிவின் சாராம்சம் இது..

'இரண்டு தினங்களுக்கு முன்பு நானும் வவுனியாவில் இருந்து கொழும்பிற்கு பணிக்காக வந்திருந்தேன். வரும் போது பல மாவட்டங்களைக் கடந்து தான் பிரதான வீதிகளால் தான் (A9,A12,A3) நான் இயன்மருத்துவராய் பணிபுரிகிற லேடி ரிஜ்வே சிறுவர் வைத்யிசாலைக்கு வந்து சேர்ந்தேன். இருந்தும் எனக்கு எந்த பிரச்சனைகளோ இடையூறுகளோ காவற்துறையினரால் ஏற்படவில்லை..

அப்படி என்றால் ரஞ்சனின் Physiotherapist விடயத்தில் நடந்தது என்ன..?

விடயத்தை ஆராய்ந்தபோது தான் பல விடயங்கள் வெளிவரத்தொடங்கின. வீடியோவில் பிலியந்தலைக்கு வருகைதந்த நபர் ஒரு போலியான இயன்மருத்துவர் என்பதும் சில மணிநேரத்தில் தெரியவந்தது.

முன்னாள் பிரதி அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினரும் பிரபல நடிகருமான ரஞ்சன் ராமநாயக்கவை இவ்வளவு நாளும் தன்னை ஒரு Physiotherapistஆக சொல்லி அவரின் தலையில் மிளகாய் அரைத்தவர் ஒரு மசாஜ் செய்பவர் ( massure) .

விளையாட்டுத்துறை அமைச்சில் ஏதோ ஒரு 10000 ரூபாவுக்கு certificate course ஒன்றை முடித்துவிட்டு தன்னை ஒரு physiotherapist ஆக சொல்லி ரஞ்சனில் இருந்து பலபேரை ஏமாற்றி வந்திருக்கிறார் என்பதும் இப்போது வெளிவர ஆரம்பித்திருக்கிறது.

அரச இயன்மருத்துவ அதிகாரிகள் சங்கம் ( GPOA) சற்று முன் தன்னுடைய ஊடக அறிக்கையில் இது பற்றிய சகல விடயங்களையும் முக்கியமாக அந்த நபருக்கும் இயன்மருத்துவத்துறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெளிவுபடுத்தியிருக்கின்றது. அறிக்கை கீழே புகைப்பட இணைப்பில் உள்ளது.

ஒரு பாராளுமன்ற உறுப்பினர் , அதுவும் ஊடகங்களில் பல வாரங்களுக்கு தலைப்புச்செய்தியாக வந்தவர் , ஒரு பிரபல நடிகரையே இப்படி ஒரு ஏமாற்றுப்பேர்வழி தன்னை ஒரு Qualified Physiotherapist என வருடக்கணக்கில் ஏமாற்றியிருக்கிறார் என்றால் சாதாரண மக்களிடையே எவ்வாறான அளவில் இயன்மருத்துவம் பற்றிய தெளிவு இருக்கின்றது? மிகமிகக்குறைவாகவேத்தானே இருக்கின்றது.

இவ்வளவு ஏன் சுகாதாரத்துறையில் பணிபுரிகின்ற என் நெருங்கிய நண்பர்கள் பலருக்கே இது தொடர்பான போதிய தெளிவின்மை தான் காணப்படுகின்றது.

இயன்மருத்துவர் என்பவர் யார்?

ஆங்கிலத்தில் Physiotherapist ( சில நாடுகளில் Physical therapist ) என்றும் , சிங்களத்தின் பவுத்த சிக்கித்சக்க என்று அழைக்கப்படுகின்ற சுகாதாரத்துறை உத்தியோகத்தர்கள் இயன்மருத்துவர்கள் .

உடனடி / நாட்பட்ட நோய்நிலைமைகள் , நோவு நிலைமைகள் , உடல்பகுதி செயலிழந்த நிலைகளின் போது நோயறிசெயற்பாடுகளின் பின்பு பௌதீக ரீதியான அசைவுகள் , அலைகள் அதிர்வுகள் , கதிர்வீச்சுக்கள் , வெப்பம் , உடற்பயிற்சிகள் போன்றவைகள் மூலம் நோயாளர்களை பழைய நிலைமைக்கு கொண்டுவருவது உள்ளிட்ட பலதரப்பட்ட வழிமுறைகளில் தொழிற்படுகின்ற சுகாதாரத்துறையின் உத்தியோகத்தர்கள் இயன்மருத்துவர்கள்.

(தமிழில் உடலியக்க மருத்துவர்கள் , உடற்கூற்றியல் மருத்துவர்கள் என்று 2002க்கு முந்தைய பழைய அரச ஆவணங்களில் இருக்கின்றது )

இலங்கையில் பணியாற்றுவதற்கு இயன்மருத்துவர்கள் எப்படியான அடிப்படைத்தகுதிகளை கொண்டிருக்க வேண்டும் ?

இயன்மருத்துவத்தில் முறையான 4 வருட பட்டப்படிப்பு கற்கைநெறியை ( BSc ( Hons) in Physiotherapy / B P T ) அரசபல்கலைக்கழகங்களான கொழும்பு பல்கலக்கழகம் அல்லது பேராதனைப்பல்கலைக்கழகத்தில் அல்லது தேசிய வைத்தியசாலையின் இயன்மருத்துவக்கலாசாலையில் தேசிய உயர் டிப்ளோமா கற்கைநெறியை பூர்த்தி செய்து அதன் பின்பு ஆறு மாதங்கள் இன்ரேன் பயிற்சியை முடித்தவர்களாக இருக்க வேண்டும்.

அது மட்டுமல்லாது இலங்கை மருத்துவச்சபையில் ( Sri Lanka Medical Council ) தங்களை இயன்மருத்துவர்களாக பதிவு செய்தவர்கள் மாத்திரமே இலங்கையில் சிகிச்சையளிக்க தகுதியான இயன்மருத்துவர்கள் ஆவார்கள்.

இவைகள் தவிர அங்கீகரிப்பட்ட வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு முடித்தவர்களாக ( B.Phy.T) இருந்தால் உரிய நியமங்களூடாக இலங்கை மருத்துவச்சபையில் பதிவு செய்து இயன்மருத்துவர்களாக இலங்கையில் செயற்பட முடியும்..'

இவ்வாறு இயன்மருத்துவம் பற்றிய அடிப்படை தெளிவினையும் வழங்கியிருந்தார். மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள விரும்பினால் Thuvaraganphy@gmail.com எனும் தன்னுடைய மின்னஞ்சல் முகவரியினூடாக தொடர்பு கொள்ள முடியும் எனவும் எமக்கு அறிவித்திருந்தார் இயன்மருத்துவர் வேலும்மயிலும் துவாரகன் (லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலை கொழும்பு 08).

அவர் தகவக்களின் மூலங்களினை ஆராய்ந்ததன் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர் ஓர் போலி இயன்மருத்துவர் என்பது உறுதியாகின்ற அதே வேளை நாட்டின் தற்போதைய அசாதாரண சூழ்நிலையைப் பயன்படுத்தி இவ்வாறு போலியான பல்வேறு துறைசார்ந்தவர்கள் மக்களை ஏமாற்றும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறார்கள் எனவே அவர்களிடம் விழிப்பாய் இருக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com