Tuesday, April 7, 2020

தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்தை மூடுவதற்கு வர்த்தக சங்கம் தீர்மானம்

மரக்கறி உள்ளிட்ட பல பொருட்கள் தற்போது பொருளாதார மத்திய நிலையத்தினூடாக நாடு முழுதும் விநியோகிக்கப்படுகின்றது.

கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிப்பதைத் தடுக்கும் நோக்கில், தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்தை மூடுவதற்கு வர்த்தக சங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன, வட மத்திய ஆளுநர் மஹிபால ஹேரத், அனுராதபுரம் மாவட்ட செயலாளர் சட்டத்தரணி று.வன்னிநாயக்க உள்ளிட்ட குழுவினர் இன்று தம்புத்தேகம வதிவிட முகாமைத்துவ அலுவலகத்திற்கு சென்றிருந்தனர்.
இதன்போது, மாவட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய தேவை இருப்பதைப் போன்று, விவசாயிகளையும் பாதுகாக்க வேண்டியிருப்பதாக வட மத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத் குறிப்பிட்டார்.

இதேவேளை, மாலை 2 மணி முதல் இரவு 10 மணி வரை விவசாயிகள் தமது அறுவடைகளை தப்புத்தேகம மத்திய நிலையத்திற்கு கொண்டு வர முடியும் எனவும் மொத்த கொள்வனவாளர்கள் இரவு 10 மணி முதல் கொள்வனவு செய்யக்கூடியதாக உள்ளதாகவும் தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்தின் முகாமையாளர் அசங்க பிரதீப் குறிப்பிட்டார்.

கெப்பட்டிப்பொல பொருளாதார மத்திய நிலையத்தை மூடுவது தொடர்பில் நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தைத் தொடர்ந்து கிருமித்தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை, மரக்கறி வகைகளை விற்பனை செய்ய முடியாமல் கல்பிட்டி - நுரைச்சோலை பொருளாதார மத்திய நிலையத்திற்கு வருகை தந்த விவசாயிகள் பெரும் அசௌகரியத்தை எதிர்நோக்கினர்.

பொருளாதார மத்திய நிலையத்தில் தமது உற்பத்திகளை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com