Saturday, March 21, 2020

ரத்ன மற்றும் ஞானசார தேரர்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு எதிராக நாலக தேரர் போர்க்கொடி!

இலங்கையில் பௌத்த தேரர்களின் அரசியல் செயற்பாடுகளுக்கு பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது. அந்த வகையில் பௌத்த மாகா சங்கத்தின் பிரதான 3 பீடங்களும் தேரர்கள் பாராளுமன்று செல்வதை தவிர்த்துக்கொள்ளவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

மகா சங்கத்தினரின் வேண்டுதலுக்கு செவிசாய்க்காது அத்துரலிய ரத்ன தேரர் மற்றும் பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் ஆகியோர் தேர்தலில் குதித்துள்ளனர்.

இச்செயற்பாட்டினை வன்மையாக கண்டித்துள்ளார் தேசப்பற்றுள்ள பிக்குகள் முன்னணியின் தலைவர் சங்கைக்குரிய நாலக்க தேரர். இது தொடர்பாக அவர் சிங்கள நாளேடு ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில்:

பௌத்த தேரர்களதும் பௌத்த சாசனத்தினதும் நோக்கம் மனிதர்களின் மனதுகளை சுத்தப்படுத்தி யாவரையும் சமமாக மதித்து மக்களை ஒருமைப்படுத்துவதாகும். ஆனால் தேரர்கள் கட்சி அரசியல் மேற்கொள்ளும்போது மக்களை பிளவுபடுத்தி மக்களிடைய பகையையும் குரோதத்தையும் உண்டுபண்ணும். பிக்குகள் அரசியலில் ஈடுபட்டு பாரபட்சமாக நடந்து கொள்ளுகின்றபோது அது ஒட்டுமொத்த பிக்குகளதும் நற்பெயருக்கு தீங்கினை ஏற்படுத்தும்.

அத்துரலிய ரத்தின தேரர் வரலாறு பூராகவும் ஓர் நிலையற்ற சந்தர்ப்பவாத அரசியலை செய்துவந்திருக்கின்றார். காலத்திற்கு காலம் சமூகத்திலுள்ள ஏதாவதோர் குறையை பேசுபொருளாக்கி தனது இருப்பினை தக்கவைத்துக்கொண்டு வந்துள்ளார்.

பேராதனிய பல்கலைக்கழகத்தில் பயின்று கொண்டிருந்த காலத்தில் களனிக்கு வந்து வித்தியலங்காரவில் ஜேவிபிக்காக வகுப்புக்களை நடாத்தினார். அதனூடாக வன்செயலுக்கு துணை புரிந்தார். பின்னர் மக்களின் நண்பர்கள் என்ற கட்சியை உருவாக்கி மங்கள சமரவீரவின் அரசியல் பிரவேசத்திற்கு உதவினார். சந்திரிகாவினால் கொண்டுவரப்பட்ட தீர்வு திட்டத்திற்கு எதிராக செயற்பட்டார்.

அதேநேரம் பத்தேகம சமித்த தேரருக்கு லங்கா சம சமாஜ கட்சி ஆசனத்தை வழங்கியுள்ளது. பொறுப்பு மிக்க அரசியல் கட்சியொன்று இவ்வாறு நடந்து கொள்ளாது.

மாகாநாயக்க தேரர்களின் முடிவுக்கு எதிராக தொடர்ந்தும் அரசியலில் ஈடுபடும் தேரர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளவேண்டியது மகா சங்கத்தினரது கடமையாகும் என்றும் பெங்கமுவே நாலக்க தேரர் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com