Saturday, March 28, 2020

கொரானோ தொடர்பில் இலங்கை முஸ்லிம்கள் ஏன் அசிரத்தை? சமூக வலைத்தளங்களில் விமர்சனத்திற்குள்ளாகும் முஸ்லிம்கள்!

சீனாவில் தோற்றம் பெற்ற கொரோனா வைரசு அங்கிருந்து சிறுகச் சிறுக ஒவ்வொரு நாடாகப் பரவி, இன்று முழு உலகையும் மரண பயத்தில் ஆட்டி வருகின்றது. இந்தவகையில் இலங்கையையும் கொரானோ வைரசு ஆட்கொண்டு இலங்கை மக்களின் இயல்பு வாழ்க்கையையும் கேள்விக் குறியாக்கியுள்ளது கொரானோ வைரசு.

இலங்கையில் ஒருவர் இருவர் எனத் தொற்றிய ஆட்கொல்லி வைரசு, இன்று நூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களுக்குள் தன்னுடைய ஆட்டத்தைக் காண்பித்துக் கொண்டிருக்கின்றது.

மதவெறியும், இனவெறியும், குலப்பெருமையும் பேசி சின்னஞ் சிறிய நாடான இலங்கையில் பல்வேறு பிரச்சினைகளைத் தோற்றுவித்த அரசியலாளர்களும், அடிவருடிகளும், துவேசிகளும் கூடவே அடிப்படைவாதிகளும், இயக்கவாதிகளும் இன்று ஒன்றும் பேசாமல் சிப்சப் என்று கூடப் பேசாமல் வாய்பொத்தி மௌனித்து நிற்கின்றார்கள்.

இந்த நிலையில் இலங்கையும் இத்தாலி போன்றாகாமல் நாட்டையும், நாட்டு மக்களையும் காப்பற்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்களைத் துரிதமாக எடுத்துவருவது பாராட்டத்தக்கது. மக்களுக்கு கட்சி வேறுபாடின்றி அரசாங்கம் உதவி வருகின்றது. இலங்கையின் பொருளாதாரம் கேள்விக்குறியாக இருக்கின்ற சந்தர்ப்பத்தில் கூட, மக்கள் நலனில் அக்கறை கொண்டு குறைந்த வருமானம் பெற்றுவரும் குடும்பங்களுக்கு சலுகை அடிப்படையில் உதவித் தொகையாக ரூபா 5000 வழங்கியது. பிரதேச மற்றும் நகர சபைகளினூடாக உலர் உணவுப் பொருட்கள் மற்றும் மரக்கறி வகைகளை மிகக் குறைந்த விலையில் அரசாங்கம் கிராம சேவகர்களினூடாக வழங்கி வருகின்றன.

நாட்டு மக்களை குறித்த கொரோனா எனும் வைரசு தாக்காதிருப்பதற்காக சுய தனிமைப்படுத்தல் மையங்களை ஏற்படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றது. ஒருவருக்குப் பரவிய வைரசு மற்றவரைப் பாதிக்காதிருப்பதற்காக இடைவௌிவிட்டு இருக்குமாறும், வௌிநாடுகளிலிருந்து வந்தவர்கள் தனிமைப்படுத்தலுக்காகத் தன்னைப் பதிவு செய்துகொள்ளுமாறும், தொற்றுக்குள்ளானோர் எனச் சந்தேகம் கொண்டவர்கள் தங்களைப் பதிந்து கொள்ளுமாறும் சுகாதாரத் திணைக்களம் மற்றும் பொலிஸார் அறிவித்திருந்தனர்.

நாளுக்கு நாள் கொரானோவின் தாக்கம் அதிகரித்து வருவதனால் மத ஸ்தலங்களைக்கூட மூடி விடுமாறும், தத்தமது மத அநுட்டானங்களை வீடுகளிலிருந்தே புரியுமாறும் அரசாங்கம் அறிவித்ததோடு இடைக்கால ஊரடங்குச் சட்டத்தையும் அமுல்படுத்தியது.

உதாரணத்திற்கு உலக முஸ்லிம்கள் பரவலாகக் காணப்படும் மத்திய கிழக்கின் சவூதி அரேபியா கூட புனித ஆலயமான மக்காவை மூடி, கடவுச் சீட்டு வழங்கலையும் இடைநிறுத்தியிருக்கின்றது. இத்தாலி மற்றும் பல நாடுகள் 'லொக்டவுன்' ​முடக்கப்பட்டுள்ளது. லொக் டவுன் காலத்தில் எல்லா நிறுவனங்களும் அரச தரப்பினால் அடைத்துக் காணப்படும். அந்நாடுகளில் உள்ள அரச சார்பற்ற அரச சார்புடைய பல நிறுவனங்கள் அடைக்கப்பட்டு பாதையே வெறிச்சோடி வன விலங்குகள்தான் அங்கு ஆட்சி நடாத்துகின்றது போன்று காட்சியளிப்பதை நாங்கள் அறியக்கூடியதாக உள்ளதுடன், ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளபோது எவரேனும் வௌியே வந்தால் அவர் மதகுருவாக, அரச உயர் அதிகாரியாக இருந்தாலும் கூட பொலிசாரினால் சரமாரியாகத் தாக்கப்படுவதைக் காணக்கூடியதாக உள்ளது. இதனை சிலர் அரசியல் மற்றும் மதச் சார்புடன் முலாம் பூச நினைப்பது அவர்களின் குறைந்த அறிவினையே எடுத்துக் காட்டுகின்றது.

பள்ளிவாசல்களில் தொழுகை நடாத்துவது, தேவாலயம் மற்றும் ஏனைய மத ஸ்தபானங்களில்கூட எந்தவொரு ஒன்றுகூடல் நிகழ்வுகளும் நடக்கக் கூடாது என்றும், திருமண நிகழ்வுகள் தடல்புடலாக மக்கள் கூடும் வகையில் நடாத்தப்படக்கூடாது எனவும் அரச தரப்பு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் அரசாங்கத்தின் மற்றும் உலக சுகாதாரப் பிரிவின் கட்டளைப்படி முகமூடி அணிவதும், நோய்க்குள்ளானவர்கள் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுவதும், ஊரடங்கு அறிவிக்கப்பட்டதும் தத்தமது வீடுகளில் முடங்கிக்கிடப்பதும் கட்டாயமானது என்பதை பாமரன் கூட ஏற்றுக் கொள்வான். என்றாலும் அரசாங்கத்தின் எந்தவொரு நடவடிக்கையும் கருத்திற்கொள்ளாது, கடவுள் நினைத்தால் எந்தச் சந்தர்ப்பத்திலும் உயிர் வாங்குவான் என்ற தோரணையில் முகமூடி அணியாமல் இருக்கின்றனர் ஒரு சாரார்.மற்றும் ஒரு முட்டாள் சாராரோ ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட போதும் அதன் தாத்பரியம் அறியாது தெருக்களில் விளையாடுவதும், வம்பளப்பதும், வீதியில் பயணிப்பதும் அவர்கள் தனித்துவமாக இருக்கின்றன.

இலங்கையில் இன்னும் கொரானோ வைரசு முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை என கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனைப் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்திருந்தார். என்றாலும் இந்த விடயத்தையும் கூட கருத்திற் கொள்ளாமல் பேருவளை என்ற ஊரில் நேற்று கந்தூரி நிகழ்வை பாரிய அளவில் கொண்டாடியுள்ளனர். அவர்களின் கந்தூரி நிகழ்வின் பாத யாத்திரையின் போது ஒருவர், 'நாங்கள் வரலாற்றில் ஒரு சாதனை நிகழ்த்தியிருக்கிறோம். யார்தான் ஊரடங்குச் சட்ட நேரத்தில் இப்படிப் போவார்கள்?' என்று கேட்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் முஸ்லிம்கள் தொடர்பில் அரச தரப்பினருக்கும், பொலிஸாருக்கும் மட்டுமன்றி பெரும்பான்மைச் சமூகமான சிங்களவர்களிடையேயும் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

நேற்றைய தினம் இடம்பெற்ற பேருவளை விடயம் தொடர்பில் சிங்கள ஊடகங்களில், சமூக வலைத்தளங்களில் முஸ்லிம்கள் பற்றி காரசாரமாகப் பேசப்பட்டுள்ளன. இதில் எந்தவித உண்மைத்தன்மையும் இல்லையென்பதை தெரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கின்றது. சிங்கள ஊடகங்களில் வௌியிடப்பட்ட அந்தக் காணொளி பல மாதங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட காணொளி என்பது தெரியவந்துள்ளதுடன், இது முஸ்லிம்களுக்குச் சேறு பூசுவதற்காக சோடிக்கப்பட்ட செய்தியாகும். இந்தச் செய்தி இவ்வாறு வௌிவருவதற்கு முக்கிய காரணம் முஸ்லிம்கள் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த காலப்பகுதிகளில் அங்குமிங்குமாகக் கூடியிருந்தமையே. இந்தக் காணொளி ஊடகங்களில் வௌியானதும் முழு முஸ்லிம் சமுதாயத்தையும் இனவாதிகள் இம்சிக்கத் தொடங்கியிருப்பதை அவர்களின் பின்னூட்டங்களினூடாகத் தெரிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது.

மேலும் கிறித்தவ மதகுரு ஒருவர் சுவிஸிலிருந்து வருகைதந்து, பெரும்பாலான மக்களுக்கு கொரானோ வைரசு யாழில் பரவுதற்கு காரணமாக அமைந்தமை பற்றியும் பெரிதாகப் பேசப்படுகின்றது. அந்தவிடயம் தொடர்பில் நாளைய ஞாயிறு லங்காதீப பத்திரிகை தனிக்கட்டுரையே வௌியிட்டுள்ளது. என்றாலும் சிங்கள சமூகத்தினிடையே முஸ்லிம்கள் பற்றிப் பேசிய அளவு இவர்கள் தொடர்பில் பேசப்படாமை சிந்திக்கத்தக்க விடயமாகும்.

அட்டுலுகம, ஹொரவப்பொத்தனை, அக்குரணை போன்ற முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் கொரானோ தொற்றுக்குள்ளானவர்களிடம் பொலிஸார் மற்றும் சுகாதாரப் பரிசோதகர்கள் தங்களைப் பதிவு செய்துகொள்ளுமாறு குறிப்பிட்டும் அவர்கள் ஏனோ தனோ என்றிருந்ததனால் குறித்த ஊர்களில் பெரும்பாலானோர் கொரானோ தொற்றுதலுக்கு உள்ளாகியிருக்கின்றனர் என சந்தேகிப்படுகின்றனர். அட்டுலுகம (லொக்டவுன்) 20 ஆயிரம் பேருடன் முடக்கப்பட்டுள்ளது. அந்தவூருக்கு எந்தவூரிலிருந்தும் யாரும் செல்லவும் முடியாது. அங்கிருந்து யாருக்கும் வௌிச்செல்லவும் முடியாத இக்கட்டான நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

​ஹொரவப்பொத்தானையில் குறித்த பள்ளிவாயல் ஒன்றில் வௌ்ளிக்கிழமை மத அநுட்டானம் கூட்டாக நடாத்தப்பட்டதனால் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனைக் கருத்திற்கொண்டு பொலிஸார் ஊரடங்குச் சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துதற்கு ஆவன செய்துள்ளனர். இக்காலப் பகுதியில் வீடுகளிலிருந்து வெளியேறி பொது இடங்களில், பிரதான வீதிகளில், மற்றும் குறுக்கு வீதிகளில் நடமாடுவோருக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு பொலிஸ் மா அதிபர் சகல பொலிஸ் நிலைய அதிகாரிகளையும் அறிவுறுத்தியுள்ளார்.

எதுஎவ்வாறாயினும் இலங்கையில் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள சந்தர்ப்பங்களில் அதனைக் கருத்திற்கொள்ளாமல் நடந்து கொண்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம்களாகவே இருக்கின்றனர் எனத் தெரியவருகின்றது.

கொரானோ வைரசுக்குள்ளாகி பல நாட்கள் அங்கொடை IDH மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மாரவிலை பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடைய நபர் இன்று உயிரிழந்துள்ளார் (இவர் சில வருடங்களுக்கு முதல் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு மாற்று சிறு நீரகத்துடன், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தத்துடனும் COVID19 தொற்றுக்குள்ளாகியவர்) என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதனையேனும் கருத்திற்கொண்டு, இனிவரும் நாட்களிலேனும் முஸ்லிம்கள் மட்டுமன்றி ஏனையோரும் தத்தமது வீடுகளில் முடங்கி இலங்கை கொரானோ அற்ற நாடாக மாறுவதற்கு அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும், CORONA வை அரசியலாக்க வேண்டாம் எனவும், தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் கொரானோவிலிருந்து பாதுகாக்க ஆவன செய்யுமாறும் தனிப்பட்ட ரீதியாக நான் வேண்டுகின்றேன்.

-கலைமகன் பைரூஸ்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com