Friday, March 20, 2020

வழக்கு நடவடிக்கைகள் முறை குறித்த விசேட சுற்றுநிரூபம் : நீதிச் சேவைகள் ஆணைக்குழு அறிவிப்பு!

கொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதை தவிர்ப்பதற்காக இன்று முதல் ஒரு வாரகாலம் வழக்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் முறை குறித்து விதிமுறைகளை உள்ளடக்கிய விசேட சுற்றுநிரூபம் ஒன்று நீதிச் சேவைகள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது.

வர்த்தக உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்றம், சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், நீதிவான் நீதிமன்றம் மற்றும் தொழில் நிர்ணயச் சபைகள் இன்று முதல் 27 வரையான வழக்கு நடவடிக்கைகளை இலக்காகக் கொண்டு சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டுள்ளது.

அவசர மற்றும் அத்தியாவசியம் என நீதிபதிகளினால் தீர்மானிக்கப்படும் வழக்குகள் தவிர்ந்த வேறு எந்தவொரு வழக்கும் திறந்த நீதிமன்றத்துக்கு அழைக்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எடுத்துக் கொண்ட அனைத்து வழக்குகளும் வேறு தினங்களில் அழைக்கப்படுவதுடன், பிணை பெற்றுக்கொள்வதற்கான பிணை கோரிக்கைகள் மட்டும் வழமையான முறையில் இடம்பெறும். நீதிபதியொருவர் மிகவும் அவசிய தேவையொன்றின் காரணமாக வழக்கொன்றை அழைக்க கோரிக்கை விடுத்தால் மு.ப. 10.00 மணிக்கு முன்னர் மனு ஒன்றின் ஊடாக செய்யப்படும் கோரிக்கை மட்டும் கவனத்திற் கொள்ளப்படும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதேபோன்று சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் சிறைக்காலத்தை நீடித்தல் அவர்களை நீதிமன்றத்திற்கு அழைத்து வராது, வீடியோ தொழிநுட்பத்தின் மூலம் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொலிஸ் பிணை வழங்குதல் தொடர்பாக உள்ள ஏற்பாடுகளை முடியுமானளவு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதுடன், அதற்காக நீதிபதிகள் குறித்த பொலிஸ் அதிகார பிரதேசத்தில் பொலிசுடன் உரிய ஒருங்கிணைப்பை பேண வேண்டும்.

மக்கள் ஒன்றுகூடுவதை முடியுமானளவு குறைத்து கொரோனா வைரஸ் பரவுவதை தவிர்ப்பதை இலக்காகக் கொண்டு நீதிச் சேவைகள் ஆணைக்குழு இந்த சுற்றுநிரூபத்தை வெளியிட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com