Tuesday, February 18, 2020

சித்த வைத்தியத்தின் ஆழ அகலம் தொடர்பில் விளக்குகின்றார் வைத்தியர் சரண்ணியா. நேர்கண்டவர் - பைஷல் இஸ்மாயில்

சித்த மருத்துவம் என்றால் என்ன? அதுபற்றி தெளிவுபடுத்த முடியுமா?

தமிழர்கள் மத்தியில் சித்தமருத்துவம் எனும் பதம் புதியது அல்ல இருப்பினும் அதனை பற்றிய புரிதல் இன்றைய சமூகத்தினரிடம் குறைவு என்பதுதான் உண்மை. சித்த மருத்துவம் என்பது மருத்துவம் என்பதனையும் மீறி வாழ்வியல் முறை என்றால் அது மிகையாகாது. நவீன கண்டுபிடிப்புகள் ஒரு தசாப்த காலத்தையே தாங்கி நிற்க முடியாத நிலையில் உள்ளபோது இற்றைக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக எந்தவித மாற்றமும் இன்றி நிலைத்து நிற்கும் மருத்துவம் சித்த மருத்துவம் என்றால் மிகவும் பெருமைப்படக்கூடிய ஒரு விடயமாகும்.

சித்தமருத்துவம் நோய்களுக்கு பரிகாரங்களை மாத்திரமல்லாது சித்தர்களால் சித்தத்திற்கு சித்தி அடைவதற்காக உலகிற்கு அருளப்பட்ட கலை என்றால் அது மிகையாகாது. அதாவது அகஸ்தியர் முதலான பதினெட்டு சித்தர்கள் சித்தம் எனப்படும் மனத்திற்காக (அல்லது ஆன்மா என்றுகூட ஒரு வகையில் கருதமுடியும்) சித்தி அடைதல் என்பது உடல் ஆரோக்கியத்தில் சித்தி, இறைவனை அடைவதில் சித்தி சமூக வாழ்வியலில் சித்தி என்று பல வகைகளில் பொருள்கொள்ள முடியும். அதாவது தனிமனிதனின் தேவைகளுக்கும் தன்மைக்கும் ஏற்ப வழிநடத்தும் ஒரு வாழ்வியல் முறை சித்த மருத்துவம் ஆகும்.

சித்த மருத்துவம் வாழ்வியல் முறைக்கு எவ்வாறு பங்கு வகிக்கின்றது?


இன்றைய காலத்தில் சராசரி மனிதனின் ஒரு தேவை நோய்களுக்கு பரிகாரம் என்றால் சித்த மருத்துவம் மருந்துகள் மூலம் தீர்வு அளிக்கின்றது. இதிலிருந்து ஒரு படி மேலே சென்று நோய் அணுகாது வாழ்வு வேண்டும் என முனைவருக்கு நோய் அணுகா விதி குறித்து அதிகளவான விடயங்கள் சித்தமருத்துவத்தில் வழங்கப்பட்டுள்ளது.

உதாரணமாக ஒரு குழந்தை வயிற்றில் சனிப்பதில் (உருவாக்கத்தில்) இருந்து இறக்கும்வரை அன்றாட கருமங்கள் வாழும் சூழல் உண்ணும் உணவு அணியும் ஆடை ஆபரணம் முதலிய அனைத்து விடயங்கள் பற்றியும் சித்த மருத்துவம் விளக்கம் தருகின்றது. இதனையும் தாண்டி வாழ்க்கையின் பிறவிப்பயனை அடைய அல்லது சித்தி எய்ய முனைபவருக்கும் சித்த மருத்துவத்தில் ஒரு அங்கமான யோகம், காய கற்பம் என்பன வழிவகுக்கின்றது.

தொற்றா நோய்கள் பற்றியும், இது எவ்வாறு உருவாகின்றது பற்றி தெளிவுபடுத்த முடியுமா?

ஒரு மனிதனிடம் அல்லது உயிரினத்திடம் இருந்து இன்னொரு உயிருக்கு பரவல் அடையக்கூடிய நோய்கள் தொற்றும் நோய்கள் எனவும் அதாவது கிருமிகள் மூலம் பரவும் தடிமன், காய்ச்சல், டெங்கு, கசம், எய்ட்ஸ், கொரோனா வைரஸ் போன்ற வைரஸ் தொற்றுக்கள் என பலவற்றை குறிப்பிடலாம். தொற்றா நோய்கள் என்பது ஒரு உயிரிலிருந்து இன்னொரு உயிருக்கு தோற்று ஏற்படாத நோய்களாகும். உதாரணமாக நீரிழிவு, அதிக கொழுப்பு, உயர் குருதி அமுக்கம், சிறுநீரக நோய், புற்றுநோய், ஆஸ்துமா போன்ற நோய்கள் தொற்றா நோய்களாகும்.

தொற்றா நோய்களுக்கான அடிப்படை காரணிகளை எடுத்து பார்ப்போமேயானால் நமது வாழ்வியல் முறை அங்கு பெரும் பங்கு வகிக்கின்றது உதாரணமாக உணவு உடற்பயிற்சி மனக்கிளர்ச்சி (stress) பழக்கவழக்கங்கள் என்பன பிரதான பங்கு வகிக்கின்றது. இருப்பினும் இவ்வாறான காரணிகள் எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பதில் தெளிவு மக்களிடையே மிகவும் குறைவாகக் காணப்படுகின்றது. மேற்கூறிய காரணங்களிகால் எமது உடலில் இருந்து கழிவுகள் சரியான முறையில் வெளியேற்றப்படுவதில்லை. மலம் கழிப்பதில் பிரச்சனை ஏற்படுகின்றது, வியர்வை மூலம் கழிவுகள் வெளியேறுவது இல்லை. இவ்வாறான ஆரம்பகட்ட அறிகுறிகளை நாம் புறக்கணிப்பதால் உடலில் கழிவுகள் தேங்குகின்றன. இது போன்ற காரணிகளினால் தொற்றா நோய்கள் உருவாகக் காரணமாக அமைந்து விடுகின்றது. சுத்தம் செய்யாத கழிவுகள் சாக்கடையாக உருவெடுப்பதுதானே உண்மை. அதபோலவேதான் எமது உடலிலுள்ள கழிவுகளை நாம் சரியாக வெளியேற்றாவிட்டால் அது தொற்றா நோய்களை உருவாக்குவதற்கு காரணமாக அமைந்து விடுகின்றது.

தொற்றா நோய்களை கையாள்வதில் ஆங்கில மருத்துவத்துக்கும் சித்த மருத்துவத்துக்கும் இடையேயான வேறுபாடு என்ன?

மிகவும் அவசியமான ஒரு சந்தேகம் தீர்வு எனும் விடயம் இரண்டு மருத்துவத்திலும் உண்டு. இருப்பினும் நோய் அணுகும் விதம் மாறுபடுகின்றது உதாரணமாக நீரிழிவு நோயை எடுத்துக்கொள்வோம், ஆரம்பத்தில் இரத்தம் சோதிக்கும்போது இரத்தத்தில் சீனியின் அளவு கூடுதலாக இருப்பின் மருந்துகள் வழங்கப்படுகின்றது சிறிது காலத்தில் நோய் கட்டுப்பட தவறும்பட்சத்தில் மருந்தின் அளவு மீண்டும் அதிகரிக்கப்படுகிறது. சிறிது காலத்தில் புதிதாக ஒரு மருந்து சேர்க்கப்படுகின்றது. இவ்வாறு நோயைக் கட்டுப்படுத்துவதற்கு பல வழிமுறைகளையும் ஆங்கில மருத்துவம் கையாளுகின்றது. இங்கு ஆங்கில மருத்துவத்தின் நோக்கம் நோயை குணப்படுத்துவது என்பதாகும். அதில் பல நோய்களில் வெற்றியும் பெரும்பாலும் தொற்றா நோய்களில் குணப்படுத்தும் எனும் பதம் கட்டுப்படுத்தும் எனும் பதமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஆனால் சித்த மருத்துவம் நோயை அணுகும் முறை இவற்றுக்கு முற்றிலும் வேறுபாடானது. ஒரு மருத்துவர் நோயை அணுகும்போது எவ்வாறு அணுகவேண்டும்
என சித்த மருத்துவம் மிகவும் சிறப்பாக எடுத்துரைக்கின்றது.

“நோய் அறிந்து நோய்முதல் நோக்கறிந்து, நோய்க்கு உதவும் தாய் அறிந்து, நீக்கும் வகையறிந்து,காய நிலை நொந்து அழியாவண்ணம் மருந்து செய்பவரே தந்தை எனும் மருத்துவர்” இங்கு ஒரு மருத்துவர் நோயாளிக்கு மருந்து செய்யும்போது முதலாவதாக நோய் என்ன என்று சரியாக புரிந்து கொண்டு, நோயினை உருவாக்கும் காரணியை அறிந்து அதாவது உடலில் வாதம் பித்தம் கபம் இந்த மூன்றில் எந்த தோஷம் பாதிக்கப்பட்டதால், அத்துடன் எவ்வாறு பாதிக்கப்பட்டது எனும் மூல காரணத்தை அறிந்து நோயினை அதிகரிக்கும் காரணிகளை (நோய் உதவும் தாய்) உதாரணமாக
ஒரு நோயாளி வயிற்று வலியுடன் வருவாரேயானால் சில உணவுகள் பழக்கவழக்கங்கள் வலியினை மேலும் அதிகரிக்க முடியும்.

அவ்வாறான காரணிகளை அறிந்து நோயாளியின் உடல் நொந்து அழியாத வண்ணம் அதாவது ஒரு நோய்க்கு மருந்து கொடுக்கும்போது பிரிதொரு நோய் உருவாகாத வண்ணம் ஒரு மகனை தந்தை எவ்வாறு காப்பாற்றுவாரோ அதேபோல் கரிசனையுடன் மருந்து செய்ய வேண்டும் என்பதே சித்த மருத்துவத்தின் அடிப்படை விதி.

நீரிழிவு நோயினை எடுத்துக்கொள்வோம் சித்த மருத்துவத்தில் நீரிழிவு ஆனது மதுமேகம் எனும் பெயரால் குறிப்பிடப்பட்டு இருக்கும். மதுமேக நோயாளியை அணுகும் விதம், மருந்து செய்யும் முறை என்பன நோயாளிக்கு நோயாளி கண்டிப்பாக மாறுபடும்.

அனைவருக்கும் புரியும் வகையில் கூறுவதாயின் நீரிழிவு வெவ்வேறு காரணங்களினால் ஏற்படக்கூடும் ஒருவருடைய சதயியின் தொழிற்பாட்டில் உள்ள சிக்கலினால் இன்சுலின் ஹோர்மோன் சுரப்பு குறையலாம் அல்லது உடலில் உள்ள கலங்கள், சதயியினால் சுரக்கப்படும் இன்சுலினை பயன்படுத்த முடியாத தன்மை ஏற்படலாம். இவ்வாறான காரணிகளில் சதையி மாத்திரம் பங்கு வகிப்பது இல்லை. ஈரல், தசை நார்கள், கொழுப்பின் அனுசேப செயற்பாடுகள் என பல காரணிகள் பங்கு வகிக்கின்றன. இவ்வாறான வேறுபட்ட காரணிகள் மூலமான நோய்களுக்கு அணுகுமுறையும் மாறுபட்டதாகவே அமைகின்றது.

இதன் படிமுறைகளில் முதலாவதாக, நோயாளி நோய்க்காரணிகளில் இருந்து தனிமைப் படுத்தப்பட வேண்டும் அதாவது சில உணவுப் பழக்கவழக்கமும் வாழ்க்கை நடைமுறையும் நோயின் தன்மையை அதிகரிக்குமாயின் அதிலிருந்து விடுபட வேண்டும். அவ்வாறு இல்லையெனில் ஒரு வெட்டுப் பட்ட காயத்திற்கு மருந்தையும் போட்டு பின்பு வாளினால் கீறிவிடுவதற்கு இது சமமானதாகும்.

இரண்டாவது உடலில் சமநிலை குழம்பிய நிலையையே நோய் என்கின்றோம். இதனை திருவள்ளுவர் மிகவும் சிறப்பாக எடுத்துரைக்கிறார்
“மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் வழிமுதலா எண்ணிய மூன்று” அதாவது வாதம் பித்தம் கபம் என்ற மூன்று தோஷத்தில் மூன்றும் தத்தம் நிலையில் இருப்பின் அது ஓர்சீர்திடநிலை ஆகும். அவ்வாறு இல்லாது தன்னிலை பிறழ்வு ஏற்படுமாயின் அது நோய் எனப்படும். இவ்வாறு தன்னிலை பிறழ்வினால் மாறுபட்டுள்ள தோஷத்தினை சமம் செய்வதற்காக உடலினை பலவழிகளிலும் சுத்திகரிப்பு செய்ய வேண்டும்.

இதற்காக பேதி, வாந்தி போன்ற மருந்துகளும், உடலை வியர்க்க செய்தல், சலம் மூலம் கழிவுகளை அகற்றுதல் போன்ற செயற்பாடுகளின்
மூலம் உடலிலே தங்கியிருந்த கழிவுகள் அகற்றப்படுவதுடன் சமநிலை குழம்பி உள்ள தோஷங்கள் சீர் செய்யப்படுகின்றது. இதன் அடுத்தபடிமுறையாக உடலில் பாதிக்கப்பட்ட தாதுக்களை அதாவது பாதிக்கப்பட்ட கலங்களை சீர் செய்வதற்காக உள் மருந்துகளும் தேவைக்கேற்ப வெளி மருந்துகளும் செய்யப்படுகின்றது. இறுதியாக மீண்டும் பாதிக்கப்பட்ட நோயினாலோ அல்லது வேறு நோயினாலோ பாதிக்கப்படாது இருப்பதற்கு பத்திய முறைகளும் தகுந்த வாழ்வியல் முறைகளும் கடைப்பிடிப்பது அவசியமாகின்றது.

ஆங்கில மருத்துவம் செயற்படும் வேகத்தில் சித்த மருத்துவம் செய்யப்படுவதில்லை என்பது மக்கள் மத்தியிலுள்ள கருத்தாகும், இதனை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

கண்டிப்பாக இந்தக் கேள்விக்கு பதில் வழங்க வேண்டியதும் இதற்கு தெளிவான விளக்கத்தை சொல்லவேண்டியது எமது பொறுப்பாகவும், ஒரு சித்த மருத்துவரான எனது கடமையாக இருக்கின்றது. நோய்க்கான தீர்வு என்பது மருந்தில் மட்டும் தங்கி விடுவதில்லை. இங்கு வழங்கப்படும் மருந்து, மருத்துவர் என்பதை மீறி நோயாளியின் பங்கு பெரும்பங்கு வகிக்கின்றது. உடலில் வாத, பித்த, கப சமநிலை குழம்பிய நிலையில் அவற்றை சமநிலைப்படுத்தும் நோக்குடன் மருந்துகளும் அதற்கான அனுபானமும் பத்தியாபத்தியங்களும் பரிந்துரைக்கப்படுகின்றன. இருப்பினும் எமது மக்களுக்கு மருந்துக்கான அனுபானத்தை பயன்படுத்துவதிலும் பத்தியங்கள் காப்பதிலும் பெரிய சிரமம் என்பதனால் மருந்துகளை மாத்திரம் உட்கொள்கின்றனர். அதுமட்டுமில்லாது பத்தியம் காக்கத் தவறினால் மேலும் மேலும் உடல் சமநிலையை குலைக்கும் பழக்கவழக்கங்களுடன் மருந்து போராட வேண்டிய நிலை உருவாகின்றது.

எமது உடல் ஒரு அற்புதமான படைப்பு, தனக்கு ஏற்படும் நோயை தானே சரி செய்யும் தன்மை உடலுக்கு உண்டு நாம் விஞ்ஞான வளர்ச்சி என்ற பெயரில் எமது உடலின் சுமையை குறைப்பதாக எண்ணி சிறிய சிறிய நோய்களுக்கும் வாழ்வியல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்தாது மருத்துவத்தை நாடியதன் பயன் இன்று பெரிய அளவில் நோய்கள் தாக்கும்போதும் உடல் தானாக செயற்படுவதை தவிர்த்து இரசாயன மருந்திற்காக தங்கி வாழ வேண்டிய சூழ்நிலை. ஆரம்பத்தில் மூட்டுக்களில் வலி ஏற்படும்போது உடனடி தீர்வு என்ற பெயரில் மக்கள் சுலபமான முறையை நாடி தற்காலிக தீர்வு பெற்று, பின் பாரிய பிரச்சினையை எதிர்நோக்கி காத்திருப்பர். நான்கு ஐந்து வருடங்களின் பின்னர் மூட்டுக்களில் தேய்வு கூடிய பின் சித்த மருத்துவத்தை நாடும் பொழுது எவ்வாறு உடனடித் தீர்வு வழங்க முடியும்?

நோயினது காலம் என்பது மருத்துவத்தில் பெரும் பங்கு வகிக்கின்றது. Acute condition எனப்படும் மிக குறுகிய நோய் காலத்தை கொண்ட நோய்கள் மிக வேகமாக சித்த மருத்துவத்தில் தீர்க்கப்படுவதை காண முடியும். உதாரணமாக தடிமன், காச்சல், அலர்ஜி, அழற்சி, செரியாமை போன்ற பல. மாறாக நீண்டகாலமாக உடலின் சமநிலையை சிறிது சிறிதாக குலைத்து உருவான நீண்ட கால நோய்களுக்கு (chronic conditions) உடலின் சமநிலையை மீள பெற சிறிது காலம் தேவை என்பது நியாயமான ஒன்று தானே. சித்த மருத்துவத்தில் தீர்வு என்பது அறிகுறிகளை மட்டும் கட்டு
படுத்துவது அல்ல. நோயினை வேரில் இருந்து சரிசெய்வதே நோக்கம் ஆகையால் நோயின் அறிகுறி குறைவடைந்த பின்பும் நோய் முழுதாக குணமடையும் வரை மருத்துவம் வழங்கப்படுகின்றது.

சித்த மருந்துகளின் மூலம் உடலில் வேறு பாதிப்புக்கள் ஏற்பட வாய்ப்புண்டா?

திருமூலர் மருந்து என்பதனை பின்வருமாறு விளக்கியுள்ளார் “மறுப்பது உடல்நோய் மருந்தென லாகும், மறுப்பது உளநோய் மருந்தென சாலும், மறுப்பது இனி நோய் வராதிருக்க மறுப்பது சாவையு மருந்தென லாமே” அதாவது மருந்து எனப்படுவது உடலினதும், உளத்தினதும் நோயினை குணப்படுத்துவதுடன் இனி ஒரு நோய் மருந்தினால் அல்லது வேறு காரணிகளால் உருவாகாது பாதுகாப்பதுடன் இறப்பைத் தடுக்கும் சக்தியையும் கொண்டதே மருந்தாகும்.

மூலிகை மருந்துகளை எடுப்போமே ஆனால் ஒரு மூலிகையில் பல இரசாயனங்கள் இருக்கின்றன. ஒரு இரசாயனத்தினால் உடலுக்கு ஏற்படும் அசௌகரியத்தை மூலிகையிலுள்ள இன்னொரு இரசாயனம் தடுத்து விடுகின்றது. அவ்வாறு இல்லையெனில் ஒன்றுக்கு மேற்பட்ட மூலிகைகள் சேர்க்கப்பட்டு மருந்து தயாரிக்கப்படுகிறது. சரியான முறையில் தெரிவுசெய்யப்பட்ட, சுத்தி செய்யப்பட்ட, தகுந்த பிரமாணத்தில் சேர்க்கப்பட்ட,
தகுந்த முறையில் தயாரிக்கப்பட்ட எந்த ஒரு மருந்தும் பிரிதொரு உபாதையை உடலுக்கு ஏற்படுத்தாது என்பதை மிகத் தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

ஒருவருடைய உடலில் வாதம், பித்தம், கபம் போன்றவை சமநிலையில் இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டீர்கள் இது பற்றி விளக்கம் தரமுடியுமா?


மிகவும் அவசியமான ஒரு விடயம் இது. கிராமங்களில் வாதம் பித்தம் கபம் எனும் பதம் புதியதல்ல. வாதம் பிடிக்கின்றது, வாத உளைவு, பித்தம் தலைக்கு ஏறி விட்டது, பித்தம் ஆக சத்தி போனது, கண்ணில் கபம் வருகின்றது, நெஞ்சில் கபம் போன்ற வாக்கியங்கள் வழக்கில் உள்ள ஒரு விடயம்தான். அவ்வாறு பார்த்தால் வாதம் பித்தம் கபம் என்பன நோய்க்காரணிகளா? முதலில் மக்களிடையே இதன் புரிதல் அவசியம் உண்மையிலேயே இது ஒரு பெரிய தத்துவம் விளங்கிக்கொள்வது மிகவும் நுட்பமானது அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் தெளிவுபடுத்துகிறேன்.

எமது உடலுக்கும் பிரபஞ்சத்திற்கும் மிகப்பெரிய தொடர்பு உண்டு இதனை சித்தமருத்துவம் சிறப்பாக எடுத்துரைக்கின்றது. அண்டத்தில் உள்ளதே பிண்டம், பிண்டத்தில் உள்ளதே அண்டம், அண்டமும் பிண்டமும் வேறில்லை, அறிந்துதான் பார்க்கின்றபோது அதாவது இந்தப் பிரபஞ்சம் எவ்வாறு பஞ்சபூதங்களினால் ஆக்கப்பட்டதோ அதேபோலவே உயிரினங்களின் உடலும் பஞ்சபூதங்களால் உருவாக்கப்பட்டவை.

மண், நீர், தீ, வாயு, ஆகாயம் எனும் பஞ்ச பூதம் உடலை உருவாக்கியுள்ளது இதன் தத்துவம் மிகவும் ஆழமானது சுருக்கமாகக் கூறுவதாயின் பஞ்ச பூதங்களின் பௌதீக தன்மை உடலில் தாதுக்களாகவும் அதாவது என்பு, மூளை, இரத்தம், தசை, கொழுப்பு, சாரம் சுக்கிலம்/ சுரோணிதம் எனும் ஏழு தாதுக்களாகவும் பஞ்ச பூதங்களின் குணம் வாதம், பித்தம், கபம் எனும் மூன்று தோஷங்களாகவும் உடலில் அமைந்துள்ளது.

வாதம் என்பது ஆகாயம் மற்றும் வாயுவின் சேர்க்கையாகும். வாயுவையும் ஆகாயத்தையும் நாம் கண்களால் பார்க்க முடியாது ஆனால் அதை உணர முடியும். அவ்வாறேதான் வாத தோஷத்தினையும் கண்களால் காண முடியாது. ஆனால் உணர முடியும். நமது உடலில் நடைபெறும் அனைத்து அசைவுகளையும், மன உணர்வுகளையும் உணர மட்டுமே முடியும். இவற்றை உடலில் செயற்படுத்துவதுதான் வாத தோஷத்தின் செயற்பாடாகும். வாதத்தின் சமநிலை குழப்பம் அடையும் போதே உடலில் அசைவு சம்பந்தப்பட்ட நோய்கள் உருவாகின்றன உதாரணமாக நடுக்கம், விறைப்பு, குத்து, வலி, வாந்தி, பேதி போன்றன. உடலின் ஸ்தூல அசைவான கை கால்களின் அசைவில் இருந்து சூக்ஷ்ம அசைவான நரம்புகளின் கணத்தாக்கம் வரை வாதத்தின் தொழிற்பாட்டினால் நடைபெறுகின்றது.

பித்தம் என்பது தீயின் குணமுடையதாகும். இது தீயினால் உருவாக்கப்பட்டது அதாவது தீ என்பது ஒரு சக்தியின் வெளிப்பாடாகும். உடலின் அனைத்து இயக்க சக்திக்குமான சக்தியை பித்தம் தருகின்றது. அதாவது அனுசேப செயற்பாடுகளில் இது பெரும் பங்கு வகிக்கின்றது. உடலின் சமிபாட்டுத் தொகுதியிலும், எமது உடலிலுள்ள ஒவ்வொரு கலங்களிலும் நடைபெறும் அனுசேப செயற்பாடுகள் யாவும் பித்தத்தின் மூலமாகத்தான் செயல்படுத்தப்படுகின்றது.

கபம் என்பது மண் மற்றும் நீரின் தன்மையாகும். கபமானது உடலிலே பித்தத்தின் அதிக வெப்பத்தையும், வாதத்தின் அதிக வறட்சியையும் சமப்படுத்தி உடலின் கட்டமைப்பை பேணுகின்றது. கபத்தின் தன்மையில் ஏற்படும் சமநிலைப் பிறழ்வுதான் நோயாகின்றது. உதாரணமாக சுவாசப் பாதையில் கபம் அதிகரிக்கும்போது, சுவாசப் பாதை தடைப்பட்டு மூச்சுக் கஷ்டம் ஏற்படுகின்றது. மூட்டுக்களில் கபம் குறையும்போது மூட்டுக்கள் வறட்சியடைந்து தேய்வு அடைகின்றது. எனவே வாதம், பித்தம், கபம் என்பது எமது உடலினை ஓர் சீர்த்திட நிலையில் வைத்திருக்க பாரிய பங்கு வகிக்கின்றது.

எமது உணவாதி மாற்றத்தினாலும், தேவையற்ற பழக்க வழக்கங்களிலும், தோஷங்களின் சமநிலையை நாம் குலைபதினாலும், சூழலியல் மாற்றங்களினாலும் எமது உடலிலுள்ள முத்தேஷங்களின் சமநிலை குழம்பி விடுகின்றது. இதனாலேயே எமக்கு நோய்கள் உருவாகக் காரணமாக அமைகின்றது.

உணவு பழக்க வழக்கத்துக்கும் தொற்றா நோய்களுக்கும் இடையே எவ்வாறான தொடர்புகள் ஏற்படுகின்றது?

கண்டிப்பாக தொடர்பு உண்டு. அனேகமான மக்களுக்கு இன்றைய காலகட்டத்தில் உணவு சம்பந்தப்பட்ட விழிப்புணர்வு உண்டு. இருப்பினும் புரிதல்கள் சற்று மாறுபாடாகவே உள்ளது. அதிகமாக உணவு உட்கொள்ளும் எத்தனையோ மக்கள் மிகவும் மெலிந்தவர்களாக இருப்பதையும் எவ்வளவு உணவை கட்டுப் படுத்தினாலும் உடல் பருமனில் குறைவு ஏற்படாமல் சங்கடத்தில் இருப்பவர்களையும் பார்த்து இருக்கின்றோம்.

மெலிவாக இருந்தால் ஆரோக்கியம் என்று உணவை சுருக்கி பின்பு அதுவே நோயாய் உருவெடுத்து இருப்பதையும் நாம் அறிவோம். இந்த
மாறுதல்களுக்கு காரணம் என்ன? இங்கு உடலி எனும் விடயம் பெரும் பங்கு வகிக்கின்றது “உடலி” எனும் விடயம் இங்கு பெரும் பங்கு வகிக்கின்றது. அதாவது எமது உடலிலேயே வாத பித்த கபங்களின் விகிதாசாரத்தை பொறுத்து ஒருவர் வாத தேகியாக, பித்த தேகியாக அல்லது கப தேகியாக இருக்க முடியும். வாதம் மற்றும் பித்த உடலி உடையவர்கள் உடல் பருமனில் குறைவாகவும் கப உடலி உடையவர்கள் சற்று பருமனாகவும் இருப்பது வழக்கம்.

ஒருவருடைய உடலி மாறுபடும் பொழுது அவர்களுடைய அனுசேப தொழிற்பாடும் ஒருவருக்கு ஒருவர் மாறுபடும். இதனால் ஒவ்வொரு மனிதனும்.
தனித்துவமானவர்கள். அவர்கள் தங்கள் உடலின் தன்மையை அறிந்து அதற்கு ஏற்ற உணவை உட்கொள்ள வேண்டும். சிறு உதாரணம் மூலம் விளக்குவோமானால் ஹாபோஹைட்ரேட் எனப்படும் மாச்சத்து (carbohydrates = carbo+ hydrate = C + H2O) காபன் எனப்படும் மண்ணின் கூறும் ஹைட்ரேட் என்பது நீர். எனவே மண்ணினது கூறும் நீரினது கூறும் சேர்ந்த ஒரு உணவுப்பொருள், இது கபத்தை அதிகரிக்கின்றது.

கப உடல் உடைய ஒருவர் காபேஹைதரேற் உணவுகளை அதிகமாக எடுக்கும்போது அவ்வுடல் மேலும் மேலும் கபத்தால் நிறையும் அதாவது உடல் பருமன் அதிகரிக்கும். நோய் வெளிப்படுவதற்கு முன்பு உடல் பருமன் வேண்டிய அளவு அதிகரித்து விடுகின்றது. இதுவே பிற்காலத்தில் மூட்டுவலி, உயர் குருதி அமுக்கம், இருதய நோய்கள் போன்றவை தோன்ற காரணமாக அமைகின்றது. இதேபோன்றே வாதம் மற்றும் பித்த தேகிக்கும் அவரவர் உடலின் தன்மை அறிந்து அதற்கு ஏற்ற உணவை தேவையான அளவு உட்கொள்ளும் பொழுது நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும். திருவள்ளுவர் தனது மருத்துவம் எனும் அதிகாரத்தில் மிகவும் சிறப்பாக இதனை விளக்கியுள்ளார்.

“மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின் ஊறுபாடு இல்லை உயிர்க்கு” அதாவது எமது உடலிற்கு தேவையான உணவை மட்டும் உட்கொண்டு மாறுபாடான என்பது எமது உடலின் தன்மைக்கு புறம்பான உணவு, இவற்றை தவிர்த்து உண்போம் ஆனால் நோய் அணுகாது.

ஒவ்வொரு மனிதனுக்கும் தனது இரத்தத்தின் பிரிவு அதாவது A இரத்தமா B இரத்தமா என்பது எவ்வாறு தெரிந்திருப்பது அவசியமானதோ அதைவிட தனது “உடலி” என்ன என்பதும் உடலின் அக்கினி எனப்படும் பசித் தீயினது (digestive fire) தன்மை என்னவென்பதும் தெரிந்திருக்க வேண்டியது ஆரோக்கியமான வாழ்விற்கு மிக மிக அவசியமான ஒன்றாகும். இவை பற்றிய மேலதிக விளக்கங்களுக்கு அருகிலுள்ள சித்த மருத்துவரை நாடி உங்களின் உடலை பற்றி அறிந்துகொள்ள முடியும்.

அனைத்து தொற்றா நோய்களுக்கும் சித்த மருத்துவத்தில் தீர்வு உண்டா?

சித்தர்களினால் 4448 நோய்களைப் பற்றி விவரம் கொடுக்கப்பட்டுள்ளது அதில் இன்றுவரை கண்டு பிடிக்கப்பட்டவை கணிசமானவையாகும். அவ்வாறு இருக்கும்போது எவ்வாறு மருத்துவம் இல்லாதிருக்க முடியும்? நோயின் தன்மைகளை விளக்கும் போதே சித்தர்களினால் தீரும் நோய்கள் தீராத நோய்கள் என பாகுபடுத்தப் பட்டுவிட்டது. அதாவது complications கூடிய நிலையிலுள்ள நோய்களுக்கு தீர்வு என்பது கடினமாகும்.

எமது உடலின் அனைத்து பாகங்களுக்கும் பரவி கடைசி நிலையில் இருக்கும் ஒரு புற்றுநோயாளிக்கு தீர்வு தரமுடியும் என்று எவ்வாறு உறுதியாக கூறமுடியும்? நோயினை அறிந்துகொண்டு அதற்கான சித்த மருத்துவத்தை எவ்வளவு விரைவாக எடுக்க நாடுகிறார்களோ அவ்வளவு நன்மை சித்த மருத்துவத்தில் உண்டு. இருப்பினும் இலங்கையின் அனைத்து பகுதியிலும் இவற்றுக்கான தீர்வு உண்டா என்றால் பதில் கூறுவது கடினமான விடயமாகும். காரணம் இலங்கையில் சித்த ஆயுர்வேத மருத்துவத்தின் வளர்ச்சி குறைவாகவே உள்ளது. ஏனென்றால் ஆங்கில மருத்துவத்துக்கு கொடுக்கப்படும் வசதிகளில் எத்தனை வீதம் ஆயுர்வேத வைத்தியசாலைகளுக்கு வழங்கப்படுகின்றது என்ற பதிலை நான் சொல்லவேண்டியதில்லை, நீங்களே அறிவீர்கள்.

எத்தனையோ ஆயுர்வேத வைத்தியசாலைகள் அடிப்படையான ஆளணி வசதி, இடவசதி, இயந்திர வசதிகூட இல்லாமல் எமது நாட்டில் இயங்கி வருகின்றது. அதற்கான வசதி வாய்ப்புக்களை வழங்குவதன் மூலமும், மக்கள் மத்தியில் சித்த மருத்துவம் சார்ந்த விழிப்புணர்வுகளை மிக அதிகமாக வழங்குவதற்கான ஏற்பாடுகள் அதிகரிக்குமேயானால் சித்த மருத்துவத்தின் வளர்ச்சியும், அதன்மூலம் மக்களுக்கான நன்மை பல மடங்கு அதிகரிக்கும் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை.

Dr. (Mrs) Saranya sutharsan
(BSMS, PGD in psychology,
Dip in hathayoga instructor and yogi lifestyle counsellor,
PGCC on cupping and leech theraphy)
மருத்துவ பொறுப்பதிகாரி
கிராமிய சித்த வைத்தியசாலை
செட்டிகுளம்
வவுனியா.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com