Friday, January 3, 2020

அடிப்படைவாதத்தை ஆதரிக்கும் அரசாங்கம் நாட்டுக்குத் தேவையில்லை! - ஜனாதிபதி


தெளிவான முடிவினை எடுக்க முடியாத அடிப்படைவாதத்திற்குச் சோரம் போகின்ற நிலையற்ற பாராளுமன்றம் ஒன்று நாட்டுக்குப் பொருத்தமற்றது என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இன்று (03) பாராளுமன்றில் தெரிவித்தார்.

அதனால் மக்களின் இறையாண்மையை உறுதிப்படுத்தும் ஒரு வலுவான நிர்வாகம், ஒரு சட்டமன்றம் மற்றும் ஒரு சுயாதீன நீதித்துறை என்பவற்றை அரசியலமைப்பு மாற்றத்தின் மூலம் தீர்க்க முடியும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக இனவாதத்தைப் பரப்புவதற்குப் பதிலாக, தேசத்தை மீண்டும் கட்டியெழுப்புவதில் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் ஒன்றுசேருமாறும் அவர் வலியுறுத்தினார்.

தனது ஆட்சிகாலத்திற்குள் தேசிய பாதுகாப்பினை உறுதிசெய்து ஒற்றையாட்சியை பாதுகாத்து பௌத்த சாசனத்திற்கு முன்னுரிமை அளிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தற்போது நடைமுறையிலுள்ள 19ஆவது திருத்தச் சட்டத்தினால் நாட்டில் பலவித பிரச்சினைகள் உருவெடுத்திருப்பதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இனவாத சக்திகளுக்கு அடிபணியாத மற்றும் நாட்டின் கௌரவத்தையும் அபிமானத்தையும் தக்கவைத்துக்கொள்வதற்காக அரசியலமைப்பில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது முதல் அக்கிராசன உரையில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு, தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு உள்ளிட்ட விடயங்கள் குறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த நவம்பர் மாதம் 16ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜளாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டு நவம்பர் 18ஆம் திகதி பதவிப்பிரமாணம் செய்துகொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்த வருடத்திற்கான நாடாளுமன்றக் கூட்டத் தொடரை ஆரம்பித்து வைப்பதற்கான நாடாளுமன்றத்திற்கு இன்றைய தினம் காலை விஜயம் செய்தார்.

ஜனாதிபதியின் நாடாளுமன்ற விஜயத்தை முன்னிட்டு நாடாளுன்ற வளாகத்தில் 21 வேட்டுக்கள் தீர்ப்பதற்கும் பலவித வரவேற்று நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதிலும் அவற்றை நடத்த வேண்டாம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்ததற்கு அமைவாக எந்தவொரு வரவேற்பு நிகழ்வும் இன்றைய தினம் நடத்தப்பட்டிருக்கவில்லை.

இந்த நிலையில், இன்று முற்பகலில் பாதுகாப்புக்கு மத்தியில் நாடாளுன்றத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய விஜயம் செய்தார். தொடர்ந்து அக்கிராசனத்தில் அமர்ந்த ஜனாதிபதி, தனது கன்னி உரையை ஆரம்பித்ததோடு, தனது கொள்கை விளத்தக்தையும் வழங்கினார்.

தனது ஆட்சிக்காலத்தில் தேசிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து பௌத்த சாசனத்திற்கு முதலிடம் வழங்குவதாக தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய, வழமையான இனவாத சிந்தனைகளை விதைத்துவரும் அரசியல்வாதிகள் அவற்றை கைவிட்டு நாட்டை முன்னேற்றமடையச் செய்யும் தனது பணியில் தன்னுடன் இணைந்துகொள்ளுமாறும் அழைப்பு விடுத்தார்.

நாட்டின் இறையான்மையை பாதுகாத்து, சர்வதேச நாடுகளிடம் மண்டியாடாத மற்றும் இனவாத சக்திகளுக்கு அடிபணியாத நாடாளுமன்றத்தை அமைப்பதற்கு அரசியலமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.

19ஆவது திருத்தத்தை இரத்து செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையிலேயே ஜனாதிபதி இதனை நாடாளுமன்றத்தில் வைத்து கூறினார்.

தனது தந்தை முதல் பரம்பரையாக அரசியலில் அடையாளமாக பயன்படுத்திய சிவப்பு நிற சால்வையை தாம் பயன்படுத்தப் போவதில்லை என்று அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com