Tuesday, December 17, 2019

பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதிக்கு முஷாரப்புக்கு மரணத்தண்டனை

தேசத்துரோக வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப்புக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்திலுள்ள விசேட நீதிமன்றத்தினால் இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.பாகிஸ்தானில் இராணுவ தளபதியாக இருந்து, கடந்த 1999ஆம் ஆண்டில் இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றியதோடு, பின்னர் 2001-2008 வரை நாட்டின் ஜனாதிபதியாக பர்வேஸ் முஷாரப்ஆட்சி செய்தார்.

இவர் தனது ஆட்சியின்போது 2007ஆம் ஆண்டு, நாட்டில் அவசரகாலநிலையை அறிவித்து, அரசியலமைப்புச் சட்டத்தை தற்காலிகமாக முடக்கியதுடன், சிரேஷ்டநீதிபதிகளை சிறையில் அடைத்ததோடு, 100க்கும் மேற்பட்ட நீதிபதிகளை பதவியில் இருந்து நீக்கினார் என இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக, 2013இல் முஷாரப் மீது தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டு, கடந்த 2014ஆம் ஆண்டு பெஷாவர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. அதன்பின்னர் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது.

இவ்வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில் இன்று (17) தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது முஷாரப்புக்கு மரணதண்டனை விதித்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

தேசத்துரோக வழக்கு விசாரணை தொடரப்பட்ட நிலையில், மருத்துவ சிகிச்சைக்காக அரசின் அனுமதியுடன் கடந்த 2016ஆம் ஆண்டு துபாய் சென்ற முஷாரப், அங்கேயே தங்கிவிட்டார். அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்நிலையில், மூவரடங்கிய நீதிபதிகள் குழாமின் பெரும்பான்மையின் (2-1) அடிப்படையில் அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com