மகனின் திருமணத்தில் கலந்து கொள்ள அனுமதி கேட்கின்றார் பூஜித.
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற அனர்த்தத்தை தடுப்பதற்கான தகவல்கள் கிடைக்கப்பெற்றிருந்தும் கடமையை சரிவர மேற்கொள்ளாது உயிரிழப்புக்களுக்கும் ஏனைய சேதங்களுக்கும் உடந்தையாக இருந்தார்கள் என்ற குற்றச்சாட்டினை எதிர்கொண்டுள்ளனர் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் கட்டாய விடுமுறை அளிக்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இவர்கள் இன்று கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டபோது அவர்களை இருவரையும் எதிர்வரும் 23ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இன்று அவர்கள் ஆஜர் செய்யப்பட்டபோது, பூஜித சார்பில் ஆஜரான அவரது சட்டத்தரணி அனுர மெதகொட, தனது காட்சிக்காரரின் மகன் எதிர்வரும் 02.01.2020 அன்று திருமணம் செய்யவுள்ளதாகவும் இந்நிகழ்வு காலை 6.30 மணிக்கு கங்காரமை விகாரையிலும் பின்னர் வரவேற்பு நிகழ்வு நீர்கொழும்பு பிரதேசத்தில் இடம்பெறவுள்ளதாகவும், இவ்விரு நிகழ்வுகளிலும் தனது கட்சிக்காரர் கலந்து கொள்வதற்கு நீதிமன்று அனுமதிக்கவேண்டும் என்றும் அதற்கான அறிவுறுத்தலை சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு வழங்குமாறும் வேண்டினார்.
இவ்வேண்டுதலை எதிர்த்த பிரதி சொலிசிட்டர் நாயகம், குறித்த நிதீமன்றுக்கு மேற்படி அனுமதியை வழங்குவதற்கு அதிகாரம் இல்லை என்று வாதாடினார். அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி இவ்வேண்டுதலை தான் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தின் பரிசீலனைக்குட்படுத்துவதாக தெரிவித்துள்ளார். அதன் பிரகாரம் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தின் சிபார்சின் பெயரில் முடிவு எடுக்கப்படுமெனத் தெரியவருகின்றது.
0 comments :
Post a Comment