Wednesday, December 25, 2019

லஷ்மன் கதிர்காமர் பிரதமராவதை தடுத்ததைதயிட்டு நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோருகிறாராம் சம்பிக்க.

2004ம் ஆண்டு லஷ்மன் கதிர்காமர் அவர்களை பிரதமராக நியமிப்பதற்கு அன்றைய ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்க தீர்மானித்திருந்தார். அத்தருணத்தில் தமிழர் ஒருவர் இந்நாட்டின் பிரதமராக வருவது நாட்டின் வரலாற்று தவறாக மாறுமென பௌத்த பிக்குகள் எதிர்த்திருந்தது யாவரும் அறிந்த விடயம்.

மேற்படி விடயத்திற்காக நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்க.

நேற்று விளக்கமறியலிலிருந்து விடுவிக்கப்பட்ட அவர் இன்று தலதா மாளிகைக்குச் சென்று விசேட வழிபாட்டில் கலந்துவிட்டு தலதா மாளிகை வாசலில் நின்று ஊடகங்கள் மத்தியில் பேசியபோது மேற்கண்டவாறு மன்னிப்பு கோரிய அவர் தொடர்ந்து பேசுகையில்:

நாங்கள் இந்நாட்டு மக்களுக்கு மாபெரும் குற்றமொன்றையிழைத்துள்ளோம். அதற்காக நாம் அவர்களிடம் மன்னிப்பு கோரவேண்டும். அதாவது 2004 இடம்பெற்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றிபெற்றிருந்து. ஆனாலும் எமது ஜாதிக்க ஹெல உறுமயவின் ஊடாக பாராளுமன்றுக்கு தெரிவுசெய்யப்பட்ட 9 பௌத்த பிக்குகள் ஊடாகத்தான் அரசமைப்பதற்கான பெரும்பாண்மை கிடைக்கப்பெறவிருந்தது. அச்சந்தர்ப்பத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்குக்கட்சிகள் திரு. லஷ்மன் கதிர்காமர் அவர்களை பிரதமராக நியமிப்பதற்கு தீர்மானம் செய்திருந்தார்கள்.

அச்சந்தர்ப்பத்தில் எமது பிக்குகள் கதிர்காமர் அவர்களை தவிர்த்து மஹிந்த ராஜபக்ச அவர்களை நியமிக்குமாறு ஜனாதிபதி சந்திரிக்கா குமாரணதுங்க அவர்களிடம் வேண்டுதல் விடுத்தனர். அதற்கான அழுத்தத்தையும் நாம் கொடுத்தோம். அதற்காக நாம் மக்களிடம் மன்னிப்பு கோருகின்றோம்.

அவ்வாறே 2005ம் ஆண்டு தேர்தலில் மஹிந்த ராஜபக்சவின் வெற்றிக்கு உழைத்தமைக்காக மக்களிடம் மன்னிப்புக்கோருகின்றோம். எமது கடின உழைப்பு காரணமாகவே மஹிந்த வெற்றி பெற்றார். எமது கட்சியின் சில தேரர்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்காக வேலை செய்ய முடிவெடுத்தபோது, நாம் கட்சியின் சம்மேளனம் ஒன்றை நாடாத்தில் மாபெருமெடுப்பில் மஹிந்தவுக்கான ஆதரவை வெளிப்படுத்தினோம். மஹிந்தவின் வெற்றிக்காக உழைப்பதென்று உறுதிமொழிபூண்டோம். அதற்காகவும் மக்களிடம் மன்னிப்பு கோருகின்றோம்.

இவைதான் நாம் இந்நாட்டில் புரிந்துள்ள குற்றங்கள். நாங்கள் இந்நாட்டினை ஒரு தனிக்குடும்பத்தின் சொத்தாக்குவதற்கு உழைத்துள்ளோம் அதற்காகவும் மன்னிப்பு கோருகின்றோம் என்றார் சம்பிக்க ரணவக்க.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com