Monday, December 16, 2019

வவுனியா மேல் நீதிமன்றத்தில் ஶ்ரீ ரங்கா உள்ளிட்ட ஆறுபேருக்கு ஏதிராக குற்றப்பத்திரிகை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே. ஶ்ரீ ரங்கா மற்றும் முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் (DIG) உள்ளிட்ட 6 சந்தேகநபர்களுக்கு வவுனியா மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.குறித்த சந்தேகநபர்கள் 6 பேருக்கும் தனித்தனியாக இவ்வாறு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வவுனியா செட்டிக்குளம் பகுதியில் 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதி இடம்பெற்ற வாகன விபத்தில், ஸ்ரீரங்காவின் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றிய, ஜயமினி புஸ்பகுமார எனும் பொலிஸ் கான்ஸ்டபிள் உயிரிழந்தார்.

உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரே வாகனத்தைச் செலுத்தியதாக பொலிஸ் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், ஸ்ரீ ரங்காவே வாகனத்தைச் செலுத்தியதாகவும் பொலிஸ் உத்தியோகத்தர் வாகனத்தின் முன் ஆசனத்தில் அமர்ந்திருந்தார் எனவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து, இறந்த பொலிஸ் உத்தியோகத்தரின் மனைவியினால் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. பொலிஸ் தலைமையகத்தின் விசேட விசாரணைப் பிரிவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, அதன் மூலம் சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் ஆலோசனைக்கமைய ஶ்ரீ ரங்கா உள்ளிட்டோரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து குறித்த 6 பேரும் நீதிமன்றில் ஆஜராகி பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com