Sunday, November 3, 2019

ஐ.தே.கட்சிக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துவிட்டு தமிழ் மக்களின் செருப்படியிலிருந்து தப்பியோடிய தலைவர்கள்..

எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தமது ஆதரவினை வழங்கவுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியினர் அறிவித்துள்ளனர். இன்று வவுனியாவில் ஒன்றுகூடிய தமிழரசுக்கட்சியின் உயர்பீடம் இம்முடிவை எடுத்துள்ளதாக ஊடகங்களுக்கு அக்கட்சியின் பிரமுகர் சுமந்திரன் அறிவித்தார்.

13 அம்சக்கோரிக்கைகள் அடங்கிய நகல்ஒன்றை வெளியிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எந்த வேட்பாளர் அக்கோரிக்கைகளை ஏற்றுக்கொள்கின்றாரோ அந்தவேட்பாளருக்கே தமது ஆதரவு என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இலங்கை தமிழரசுக் கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய கட்சிகளின் நிலைப்பாடுகளை நிராகரித்து தனது தனிப்பட்ட நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சியினரின் இம்முடிவுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் உடன்படவில்லை என தெரியவருகின்றது.

எவ்வித நிபந்தனையும் இன்றி கடந்தமுறைபோல் இம்முறையும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இலங்கை தமிழரசுக் கட்சி ஆதரவு வழங்க முன்வந்துள்ளமையை அறிந்த காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அமைப்பைச் சேர்ந்த சில பெண்கள் இலங்கை தமிழரசுக் கட்சியினர் வவுனியாவில் கூடியிருந்த கட்டிடத்தை சுற்றிவளைத்து அவர்களுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியதுடன் அவர்களை வழிமறித்து போராட்டத்தையும் மேற்கொண்டனர்.
இதன்போது தப்பியோடிய இ.த.க பாராளுமன்ற உறுப்பினர்களை நோக்கி பெண்கள் தமது பாதணிகளை கழற்றி வீசினர். வரலாற்றில் இல்லாதாவாறு தமிழ் மக்களின் நேரடி எதிர்ப்பினை தமிழ் தலைமைகள் எதிர்கொண்டுவருகின்றது என்பதனை இந்நிகழ்வு எடுத்துக்காட்டுகின்றது.

தமிழ் தலைவர்களுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த தமிழ் பெண்களை அடக்குவதற்காக பெரும் பொலிஸ் அணி ஒன்று வவுனியாவில் களமிறக்கப்பட்டு அவர்கள் அப்பெண்களை பிடித்து முறித்து அடக்கினர் என்பது வரலாற்றில் பதிவாகியுள்ளது.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com