Friday, November 8, 2019

தமிழர்களின் எதிர்பார்ப்புக்கள் மிகையானதாம்! கூறுகின்றார் ஐக்கிய தேசியக் கட்சியின் தரகர் சுமந்திரன்..

„நாங்கள் எதிர்பார்த்த அனைத்தும் கிடைக்கவில்லை என்பதும் உண்மை, எங்களது எதிர்பார்ப்புக்களும் மிகையானவை என்பதும் உண்மை. முப்படைகளை வைத்துக் கொண்டு, மூன்றில் ஒரு பகுதி நிலப்பரப்பையும், மூன்றில் இரண்டு நீர்ப்பரப்பையும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, கொழும்பையே ஆட்டிப்படைத்த காலத்திலேயே அடையமுடையாதவற்றை, பதினாறு பேரை பாராளுமன்றத்திற்கு அனுப்பி விட்டு அடையலாம் என்று நாங்கள் எதிர்பார்த்து இருந்ததும் பிழை தானே?'

இவ்வாறு தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார் தமிழ் மக்களால் ஜனநாயக தேர்தல் ஒன்றினூடாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி மதியாபரணம் சுமந்திரன்.

எதிர்பார்த்த அனைந்தும் கிடைத்துவிடவில்லை என்பது உண்மைதான், அவ்வாறு அனைத்தும் கிடைக்கவேண்டும் என்றோ அல்லது அனைத்தும் கிடைத்துவிடும் என்றோ மக்களும் எதிர்பார்க்க வில்லை. ஆனால் எங்களது எதிர்பார்ப்புக்களும் மிகையானது என்றால், அது அடையமுடியாதவை என்றால் அவ்வாறான எதிர்பார்ப்புக்களுக்கு அங்கீகாரம் கொடுத்தவர்கள் யார்? அல்லது அதற்கான அங்கீகாரத்தை தமிழ் மக்களிடம் கேட்டவர்கள் யார்?

வட்டுக்கோட்டையில் தமிழீழப் பிரகடனம் செய்து சிங்களவனின் தோலை கொண்டு காலுக்கு செருப்பு தைத்துப்போடப்போகின்றேன் என முழக்கமிட்டவர்கள் யார்? வட்டுக்கோட்டையில் ஆரம்பித்து அத்தனை தேர்தலிலும் எதற்காக ஆணைகேட்டீர்கள்? 2015 இல் ஐக்கிய தேசியக் கட்சியை ஆட்சியேற்றி அதனை அந்த ஆட்சியிலிருந்து இறங்காதவாறு பொதியாக சுமந்த கழுதைகளிடம் இன்று மக்கள் இவ்வாறாதோர் பதிலை எதிர்பார்க்கவில்லை.

தமிழ் மக்களின் விருப்புக்கள் என்ன அவர்களது அரசியல் அபிலாஷைகள் என்ன என்பதை தமிழ் தலைமைகள் மக்களிடம் வினவியுள்ளதா? இல்லை மாறாக தமிழ் மக்களுக்காக என என்றுமே அடைமுடியாத இலக்கொன்றை தயாரித்து அந்த இலக்கை அடைவதற்கு மக்கள் ஆணைவேண்டும் என்றும் அந்த ஆணையை மக்கள் சர்வதேசத்தின் முன்னால் வழங்கினால் மக்களின் விருப்பின் பெயரில் சுயநிர்ணய உரிமையை பெற்றுவிடமுடியும் என்று தமிழ் மக்களுக்கு லாஜிக் படிப்பித்த தலைமைகள் இன்று தாங்கள் சுமந்து செல்லும் எஜமானர்களை காப்பதற்காக தமிழர்களது எதிர்பார்ப்புக்கள் அதிகமானது என்று மக்கள் கைகளில் குற்றப்பத்திரிகையை திணிக்கின்றனர். மிஸ்டர் சுமந்திரன்! தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கள் என்ன என்பதை தாங்கள் எவ்வாறு அறிந்து கொண்டீர்கள் அந்த கணிப்பு எவ்வாறு எங்கு இடம்பெற்றது என்பதை சற்று தெளிவாக கூறமுடியுமா?

ஓவ்வொரு தேர்தல் வரும்போது வட்டுக்கோடையில் ஏந்திய அதே அழிவுப்பத்திரத்தை தூக்கிக்கொண்டு இன்றுவரை தமிழ் மக்களை ஏமாற்றிவரும் வழித்தோன்றல் சுமந்திரனுக்கு இன்று சுடலை ஞானம் பிறந்துள்ளது. ஆம் நாங்கள் எதிர்பார்ப்புக்கள் அதிகமானவை என்று கூறவில்லை. மாறாக தமிழ் மக்களது எதிர்பார்ப்புக்கள் யாது என்று எவருக்கும் தெரியாது. அது இன்றுவரை அறியப்படவில்லை. ஐக்கிய தேசியக் கட்சிக்காக குத்திமுறிவதை விட்டுவிட்டு தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கள் யாது என்பதை இதயசுத்தியுடன் அறித்து கொள்ள முயற்சியுங்கள்.

மேலும் „முப்படைகளை வைத்துக் கொண்டு, மூன்றில் ஒரு பகுதி நிலப்பரப்பையும், மூன்றில் இரண்டு நீர்ப்பரப்பையும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, கொழும்பையே ஆட்டிப்படைத்த காலத்திலேயே அடையமுடையாதவற்றை, பதினாறு பேரை பாராளுமன்றத்திற்கு அனுப்பி விட்டு அடையலாம் என்று நாங்கள் எதிர்பார்த்து இருந்ததும் பிழை தானே?'
இதுவும் ஒரு புதிய லாஜிக் தான். பதினாறு பேரை பாராளுமன்றுக்கு அனுப்பி விட்டு அடையலாம் என்று மக்கள் எதிர்பார்த்து இருந்தது எவ்வாறு பிழையாகும். தேர்தல் ஒன்று வரும்போது, கூட்டமைப்பு என்ற பெயரில் கூட்டே இல்லா நீங்கள் மக்களாகிய எம்மிடம் வந்து யாது கூறினீர்கள்? மக்களே நீங்கள் ஒற்றுமையாக வாக்களித்து எம்மை அதிக எண்ணிக்கையில் பாராளுமன்று அனுப்பினால்தான் எமது இலக்குகளை அடையமுடியும் என்றுதானே கூறுனீர்கள். அதன் பிரகாரம் பெற்றுக்கொள்ளக்கூடிய உச்ச பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் இரண்டைத் தவிர்த்து மக்களாகிய நாம் உங்களுக்கு தந்தபின்பு தற்போது ஏன் இந்த பித்தலாட்டம்.

இவ்விடயத்தை நீங்கள் தேர்தலுக்கு முன்னர் கூறியிருந்தால் மக்கள் இலங்கையின் தேசியக் கட்சிகள் என்று கருதப்படுகின்ற ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு நிபந்தனை அடிப்படையில் வாக்குகளை அளித்து பெற்றுக்கொண்டிருக்க மாட்டார்களா?

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com